Tuesday, May 19, 2009

தேர்தல் தீர்ப்பு: வென்றதும் வீழ்ந்ததும்

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பாராத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.

அம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.

மறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே!

அதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.

பதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்

திடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.

இரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது

*
இது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.

இந்த முறை வேறு ஒரு நண்பர் தேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:

“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன

தேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.

இந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்க ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆகியவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.

எதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்வார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.

இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.

இந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.

12 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.//
வேறு வழி?
இப்படி எதையாவது சொல்லித் தானே, மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்!

Anonymous said...

Mr. Malan, after seeing you in Jaya TV. I think you have lost the crediblilty to criticize other politicians.

மாலன் said...

அனானி,
நான் ஜெயா டிவியில் மட்டுமா தோன்றினேன்? தேர்தல் முடிவுகள் வந்த மாலை பொதிகையில் தேர்தல் முடிவுகள் ஒரு கண்ணோட்டம் என நிகழ்ச்சி நடத்தினேன். முன்னர் ஜீ தமிழில் தேர்தல் குறித்து விவாதித்திருக்கிறேன்.மக்கள் தொ.கா.வில் இலங்கைப் பிரசினை குறித்து உரையாடியிருக்கிறேன். அவ்வப்போது சிங்கப்பூர் வானொலி/தொலைக்காட்சிகளுக்கு போன் மூலம் பேட்டியளித்து வருகிறேன். இதையெல்லாம் நீங்கள் பார்க்க/ கேட்கவில்லை என்றால் அதற்கு நானா பொறுப்பு?

சரி தமிழ்நாட்டில் அரசியல் சார்பில்லாத தொலைக்காட்சி எது?

சரி, என் பதிவில் எங்கே எந்த அரசியல்வாதியை விமர்சித்திருக்கிறேன்?

குப்பன்.யாஹூ said...

ங்கள் சொன்னது போலவே எதிர்மறை பிரசாரந்கலை ரசிக்க வில்லை நாங்கள்.

கரூரிலும் , ஈரோடிலும் நாங்கள் பணம் வாங்கி இருந்தால் முடிவு வேறு மாதிரி அல்லவா இருந்து இருக்கும்.

அதே போல பா ஜ கா ஆளும் மாநிலங்களில் கூட எங்கு எல்லாம் ஆட்சி நல்ல முறையில் நடக்கிறதோ (கர்நாடகா, குஜராத், சட்டீஸ்கர்) அங்கு எல்லாம் ஆதரவு வாக்குகள்.

மொத்தத்தில் தொலைக்காட்சி, பத்திரிக்கைகளின் கணிப்புக்களான தொங்கு பாராளுமன்றம், மூன்றாம் அணிக்கு நூறு இடம் என்பதை எல்லாம் வழக்கம் போலவே பொய்யாக்கி விட்டோம்.

கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை தென் சென்னையில் தான் பிரபலம், அங்கே திமுக் கூட்டணி வெற்றி பெற வில்லையே.


குப்பன்_யாஹூ


But still we consider caste, religion while voting, thats too bad, to be changed ASAP.

KARTHIK said...

// சரி தமிழ்நாட்டில் அரசியல் சார்பில்லாத தொலைக்காட்சி எது? //

ஜீடிவி நல்லாதாங்க இருக்கு.

அடுத்த எலக்சன்ல நான் ஓட்டுப்போடுரமாதிரி இல்லைங்க.விருதுநகர் மற்றும் சிவகங்கை தொகுதில நடந்தத பாத்தா நாம ஏன் போய் ஓட்டு போடனும்னு தோனுதுங்க.

Ukathi said...

தேர்தலில் பணம் விளையாடுவது பற்றி என்க்கும் உங்களைப் போன்றே கவலைகள் உண்டு, மாலன்! யோசித்துப் பார்த்தால், நம் தேர்தல் முறையிலேயே தவறு இருப்பாதாக உணர்கிறேன். ஒரு நாடாளுமன்ற/சட்டமன்ற தொகுதிக்கு அதிகப் பட்சம் இவ்வளவு செலவு செய்யலாம் (உண்மையில் அதைவிட பல மடங்கு அதிகம் செலவளிக்கப் பட்டாலும், தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறபடியே கட்சிகள்/வேட்பாளர்கள் செலவு செய்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்) என்கிற போதே தவறு நுழைந்து விடுகிறது. அந்தச் செலவைச் செய்யும் கட்சி/வேட்பாளருக்கு, அந்த நிதி எப்படி வருகிறது. அந்த நிதியைத் தேர்தல் இல்லாத காலத்தில் என்ன செய்கிறார்கள் என்பதற்கு நம் தேர்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் உண்டா? இதனை தீவிரமாக கண்காணிக்க முடியாத பட்சத்தில் செலவினங்களைக் கட்டுப் படுத்தச் சொல்வதின் அவசியம் என்ன?

என்னைப் பொறுத்தவரை, நான் ஐந்து காசு செலவளித்தாலும் அதனால் எனக்குப் பயன் என்ன என்று யோசிப்பேன் - எல்லாருமே அப்படித்தான் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கையில், தன் காசைச் செலவு செய்யும் வேட்பாளர்/கட்சி பதவிக்கு வந்தால் அதனைத் திரும்ப எப்படி சம்பாதிப்பது என்று அவர்கள் யோசிப்பதிலும் என்ன தவறு இருக்கமுடியும்.

நம்முடைய இன்றைய தேர்தல் முறையில் ஒருவர்/ஒரு கட்சி அதிகம் சம்பாதிப்பதாக உணர்ந்து வெறுத்தால் எதிர்க்கட்சிக்கு வாக்களித்து திருப்தி அடையலாம். இரு கட்சிகளின் மீதும் வெறுப்புற்றவர்களும் இருக்கிறார்கள்; விஜயகாந்த் போன்றவர்கள் அந்த வாக்குகளைக் குறி வைத்து அரசியலில் குதிக்கலாம்.

நம் மீதே நமக்கு பரிதாபம் தான் தோன்றுகிறது.

தேர்தல் ஆணையத்தில் / தேர்தலில் ஏதேனும் புரட்சி கரமான மாற்றம் வர சாத்தியமுள்ளதா? ஓ போட்டால் என்ன (49 ஓ) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Ragztar said...

பணம் தாரளமாகப் புழங்கியது நிச்சயமாகத் தெரியும். முடிவுகளைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது என்பது தெரியவில்லை. ஆனால் நம் தேர்தல் அமைப்பு முற்றிலுமாகப் புரையோடியிருப்பதுப் போயிருப்பது உண்மை.

முன்பெல்லாம் பீகார் ஓர் உதாரணமாக இருந்த்து. இப்போதுதான் தெரிகிறது, பீகார், ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறது.

Muthu said...

விகிதாச்சார பிரதிநிதித்துவம் மூலம் நமது தேர்தல் கால அநாகரீகங்களை, தேர்தல் முறையில் உள்ள அபத்தங்களை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என்பது என் எண்ணம்.

அன்புள்ள மாலன், இதன் சாதக பாதக அம்சங்கள் குறித்தும், இது நடைமுறைக்கு வருவதன் சிக்கல்கள் குறித்தும் சற்று விரிவாக ஒரு பதிவிடுங்களேன்.

அன்புடன்
பொன்.முத்துக்குமார்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் சார்.. நீங்கள் சொல்வது போல் எதிர்மறையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதேபோல் மதம் சார்ந்த கலவரத்தையும் மக்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகின்றது..

லக்கிலுக் said...

//இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை//

நன்றி. இதை தொடர்ந்து உங்கள் ஊடக நண்பர்களிடம் வற்புறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெற எனக்குத் தெரிந்து ஒன்றே ஒன்றுதான் காரணம். கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுகிறார்கள். இதன்மூலமாக வாக்காளர்களின் நம்பகத்தன்மையை திமுக பெற்றிருக்கிறது.

அதிமுக தொடர்ந்து தோற்கும் நான்காவது தோல்வி இது. தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளை தவிர வேறு யாரும் இதுபோல தொடர்தோல்விகளை சந்தித்ததில்லை :-)

Anonymous said...

மக்கள் deciding அளவுக்காவது விலை போகிறார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. மற்றபடி உண்மையில் மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற நம்பிக்கை கட்சிகளுக்கு இல்லை என்பது தான் உண்மை. கடைசி வரையில் பயந்து பயந்து வென்றவுடன் நான் எதிர் பாத்தேன் என்று சொல்வது இயல் பானது தானே. அதற்கு ஏற்றார் போல தங்களது திட்டங்களை மக்கள் ஏற்று கொள்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ள வேண்டியது தான்.
-Swami

ஜோதிஜி, said...

நலமா? ஒன்பது வருடங்களுக்கு பிறகு மறுபடியும் உங்களிடம் வருகின்றேன். வழி தவறி வண்ணத்துப் பூச்சியாய் திருப்பூர் இலக்கிய விழாவில் பேசியது இப்போது நினைவில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.


எந்த சர்வே / ம் தெரியவில்லை. மறுபடியும் பார்க்க வாய்ப்பு உண்டா? ஆர்வமாய் உள்ளேன்.


தாமதமான விசாரிப்பு என்ற போதிலும் பத்திரிக்கை துறைக்கு திருப்பூரில் இருந்தே என்றால் தாரளமாய்? வாய்ப்பு உள்ளதா?


தகுதிக்கு உங்கள் பார்வைக்கு http://texlords.wordpress.com



நட்புடன் ஜோதிஜி

http://texlords.wordpress.com