Friday, February 17, 2006

இரு சந்தேகங்கள்

இன்னும் 70, 80 நாள்கள் இருக்கின்றன.ஆனால் பணக்கார வீட்டுக் கல்யாணம் போல, இப்போதே களை கட்டத் துவங்கி விட்டது. தமிழகத்தில் நடக்கவிருக்கிற சட்ட மன்றத் தேர்தலைச் சொல்கிறேன்.

தேர்தலை ஆட்சியைத் தீர்மானிக்கிற ஓரு பரபரப்பான நிகழ்வாக, வெறும் வாக்குப் பதிவு செய்கிற ஓர் சடங்காக, இல்லாமல் அரசியலை இனம் கண்டு கொள்வதற்கான ஓர் வாய்ப்பாக அணுகிப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படும்.'செய்தி'ப் பத்திரிகைகள் தின்னத் தருகிற அவலை மட்டும் மென்று கொண்டிராமல், உள்நீரோட்டங்களை உற்றுப் பார்க்கிற ஒரு பயிற்சியாக மாற்றிக் கொண்டால் ஜனநாயகத்திற்கு நல்லது.

ஒருவகையில் இது சென்ற தேர்தலின் மறு பிரதி. (Action replay).

அந்தத் தேர்தலில் திமுக எழுப்பிய கேள்விகளில் முக்கியமான ஒரு கேள்வி: அதிமுக அணி வென்றால் யார் முதல்வர்? காரணம், ஜெயலலிதா மீதிருந்த ஊழல் வழக்குகள் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட இயலவில்லை. அவர் மூன்று தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் அவை, நிராகரிக்கப்பட்டன. அந்தச் சூழ்நிலையில் அந்தக் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக விளங்கியது.

இந்தத் தேர்தலிலும் மீண்டும் அந்தக் கேள்வி எழுகிறது.ஆனால் அந்தக் கேள்வி இப்போது திமுகவை நோக்கி வீசப்படுகிறது.திமுக அணி வெற்றி பெற்றால் யார் முதல்வர்? திமுக அணி வெற்றி பெற்றால் அமையப் போவது கூட்டணி ஆட்சியா, அல்லது திமுகவின் தனித்த ஆட்சியா என்ற கேள்வி சிலகாலம் உலவி வந்தது. கூட்டணி ஆட்சி இல்லை, தனித்த ஆட்சிதான் என்று திமுக திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.அதை உறுதி செய்து பா.ம.கவும், மதிமுகவும் அறிக்கைகள் வெளியிட்டு இருக்கின்றன.

திமுகவின் தனித்த ஆட்சிதான் என்றால், அதற்குத் தலைமை ஏற்கப் போவது யார்? கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதிமுகவும், அதன் ஆதரவாளர்களும் பிரசார மேடைகளிலும், சில இதழ்கள் மூலமாகவும் சந்தேக விதைகளைத் தூவி வருகின்றனர். முதல்வர் பொறுப்பின் சுமையைத் தாங்க அவரது வயது இடம் கொடுக்குமா?, உடல்நலம் இடமளிக்குமா என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தாலும் கருணாநிதி முதல் சில மாதங்கள்தான் முதல்வராக இருப்பார், பின் உடல்நிலையைக் காரணம் காட்டி, பொறுப்பை ஸ்டாலின் வசம் ஒப்படைத்து விடுவார் என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பி வருகிறார்கள். பொங்கலன்று நடந்த துக்ளக் இதழின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் சோ, இதை வெளிப்படையாகவே பேசினார். தங்களது இந்த வாதத்திற்குத் ஆதாரமாக, கடந்த சில ஆண்டுகளாகவே கருணாநிதி அஹிகம் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளாததையும், அவருக்குப் பதில் ஸ்டாலின் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து, கூட்டங்களில் பேசி வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. கடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது 'இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்' என்று கருணாநிதி சொல்லியதை அதிமுக அணி இப்போது நினைவுபடுத்துகிறது.

கட்சி சார்பு இல்லாத மக்களிடம் இந்த பிரசாரம் எடுபடும் என்று அதிமுக நம்புகிறது.அடுத்த முதல்வர் யார், ஜெயலலிதாவா? ஸ்டாலினா? என்பது தேர்தலில் விடைகாணப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாக அமையுமானால், அது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அதிமுக எண்ணுகிறது.

இந்த கணிப்பு சரியாக இருக்கலாம். அண்மையில் லயோலாக் கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், அடுத்த முதல்வராவதற்குத் தகுதி உள்ளவர் யார் என்ற கேள்விக்கு 87 சதவீதம் பேர் கருணாநிதிக்கும், 83 சதவீதம் பேர் ஜெயலலிதாவிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே உள்ள வித்தியாசமே மிகக் குறைவாக உள்ள நிலையில், ஸ்டாலினா ஜெயலலிதாவா என்ற கேள்விக்கு விடை எப்படி இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல.

இது போன்ற ஒரு சந்தேகம் கூட்டணிக் கட்சிகளின் அடி மனதிலும் இருக்கக் கூடும் என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. எல்லாக் கட்சிகளும் அதிக இடம் கேட்போம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றன. இது வழக்கமான கோரிக்கைதான் என்றாலும் இந்த முறை அவற்றின் தொனியில் மாற்றம் தெரிகிறது. 'எங்கள் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க இயலாது' என்று காங்கிரஸ், பா.ம.க போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.ஆட்சியில் அவை நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும், கர்நாடகத்தைப் போல பாதியில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது கடிவாளம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று அவை கருதலாம். கூட்டணி ஆட்சி என்பது ஓர் யதார்த்தமாக ஆகிவிட்ட சூழ்நிலையில், அவை இது போன்ற கனவுகளைக் கொண்டிருப்பது அசாதாரணமானது அல்ல.எல்லாக் கட்சிகளுக்குள்ளும், 'கருணாநிதிக்குப் பின்?' என்ற கிசுகிசுப்பு இருப்பதென்னவோ உண்மை.

கடந்த தேர்தலில் கிடைத்த அனுபவம், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கிடைத்த அனுபவமும் கூட அவற்றின் சிந்தனைப் போக்கை மாற்றியிருக்கின்றன.கடந்த தேர்தலின் போது, காங்கிரஸ், பா.ம.க, இடதுசாரிகள் ஆகியவை அதிமுக அணியில் இருந்தன.மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவதில் அவை பெரும் பங்காற்றின. ஆனால் ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களால் ஜெயலலிதாவை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டமன்றத்தில் பேசுவது கூட பெரிய காரியமாகிவிட்டது.அதைப் போன்ற ஒரு நிலை திமுகவை ஆட்சியில் அமர்த்திய பின்னும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவை கருதியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா தனது காய்களை மிக நுட்பமாகவே நகர்த்தி வருகிறார். ஆளுங்கட்சியைச் சாடிப் பேசுவது என்பது எதிர்கட்சிகளுக்கு உரிய ஓர் வாய்ப்பு. அதுவும் தேர்தல் நேரத்தில் இந்தத் தாக்குதல் வேகமானதாக இருக்கும். ஆனால் கடந்த இரு மாதங்களாக எதிர்கட்சிகளை, குறிப்பாக திமுகவை, தற்காத்துக் கொள்ளும் (defensive) நிலையில் வைத்து வருகிறார்.ஆளும் கட்சியைச் சாடுவதை விட அவை தங்கள் நிலை குறித்த விளக்கங்களைத் தரும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கூட்டணிக் கட்சியிலிருந்து இந்தக் கட்சி வெளியேறிவிடும், அந்தக் கட்சி வெளியேறிவிடும் என்று 'செய்திகள்' கசிந்து கொண்டே இருந்தன.'கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்', 'இவையெல்லாம் உளவுத் துறை பரப்பும் வதந்தி' 'அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது' 'கூட்டணியைக் காப்பாற்ரும் பொறுப்புக் கூட்டணிக் கட்சிகளுக்கும் உண்டு' என்றெல்லாம் பல்வேறு சுருதிகளில் அறிக்கைகள் விட வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டது. என்றாலும் இப்போதும் அதைப் பதற்றத்தில் வைத்திருக்க, காளிமுத்துவை கட்சியின் அவைத் தலைவராக்கி, மதிமுகவை கூட்டணியிலிருந்து பிரித்துக் கொண்டு வரும் பணியை அவர் வசம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

வெள்ள நிவாரணம், கடல்நீரைக் குடி நீராக்க்கும் திட்டம், இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு விவாதப் பொருளாக்கப்பட்டது தன்னைப் பழிவாங்குவதற்காக தனக்கு வேண்டியவர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக ஜெயலலிதா முழங்கினார். கேபிள் டி.வியை அரசுடமையாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் மீது ஒரு விவாதத்தைக் கிளப்பினார்.அதிமுக மட்டுமன்றி விஜயகாந்தும் திமுகவை சாடி வருவதால் அவ்ருக்குப் பதில் சொல்லும் கட்டாயமும் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

திமுக இந்தத் தற்காப்பு வேலைகளில் கவனம் செலுத்தி வந்த போது, இன்னொரு புறம், எல்லாத் தரப்பினருக்கும் ஏராளமாக சலுகைகளை வாரி வழங்கி அறிவிப்புக்கள் வெளிவந்தன.எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து, எந்ததெந்தத் தரப்பினரை தங்கள் வசம் ஈர்க்க முயற்சிக்குமோ, அந்தத் தரப்பினரையெல்லாம் தன் வசம் கொண்டுவர அரசு முயன்றுவருகிறது. அரசு ஊழியர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், சிறுபான்மை மக்கள் இவர்களது கோபத்தை சம்பாதித்துக் கொண்டதால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி காண முடியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இன்று அந்த அதிருப்தியை நீக்கும் விதத்தில் அறிவிப்புகள் வருகின்றன. இதைக் குறித்து எதிர்கட்சியினரால் ஏதும் சொல்லமுடியவில்லை. 'தேர்தலுக்காக செய்யப்படும் அறிவிப்பு' என்றுதான் விமர்சிக்கப்படுகிறது. அது ஊரறிந்த உண்மை. 'சரி அப்படியே இருக்கட்டும், அதனால் என்ன?' என்பதுதான் பரவலான எதிர்வினையாக இருக்கிறது. இது ஒருவகையான லஞ்சம் என்பதை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.அப்படி உணர்ந்தவர்களும், 'யார்தான் லஞ்சம் வாங்கல?. லஞ்சத்தை ஒழிக்க முடியாது' என்ற தத்துவம் பேசுகிறார்கள். 1996 தேர்தலில், ஜெயலலிதாவின் தோல்விக்கான காரணங்களில் லஞ்சத்திற்கு எதிரான மனோபாவம் ஒரு முக்கியக் காரண்மாக இருந்தது. இந்தப் பத்தாண்டுகளில் லஞ்சம் என்பது ஒரு விஷயமே அல்ல, என்ற நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்திருக்கிறது!

ஆனால் மக்களிடம் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் குறித்த ஒரு சந்தேகம் இருக்கிறது. அவரது அறிவிப்புக்கள் நடைமுறைக்கு வருமா, வந்தாலும் நீடித்து நிற்குமா, ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்த சலுகைகளை மீண்டும் பறித்துக் கொண்டுவிடமாட்டார் என்பது என்ன நிச்சியம்? என்பதுதான் அந்த சந்தேகம்.

ஸ்டாலின் மீது ஆளும் கட்சி சந்தேகம் கிளப்பி வருவதைப் போல, இந்த சந்தேகம் பிரசாரத்தின் போது எதிர்கட்சிகளால் பெரிதுபடுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த சந்தேகத்தைப் போலவே இதுவும் நியாயமானது. அந்த சந்தேகம் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தோடு சம்பந்தம் கொண்டது என்றால், இந்த சந்தேகம், பல லட்சக்கணக்கான வாழ்க்கையோடு தொடர்புடையது.

இந்த இரு சந்தேகங்களுக்கு விடை அளிக்க இரண்டு கட்சிகளுமே கடமைப்பட்டுள்ளன. வெறும் விளக்கமாக இல்லாமல் தெளிவான உறுதி மொழியாக இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அமைய வேண்டும். இரண்டு அணிகளின் வெற்றி தோல்விகள் அதைப் பொறுத்தே அமையும்.

இந்தத் தேர்தலின் முடிவை நம்பிக்கை வெளிப்படுத்தப்போவதில்லை. சந்தேகங்களே தீர்மானிக்க இருக்கின்றன.