Monday, November 10, 2008

நடுவர்கள்

வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி.
‘வாக்கிங்' போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக் கிடந்த பேப்பரைத் திரட்டி எடுத்துக் கொண்டு படிக்கத் திறந்தபோது அந்த பயங்கரம் அதில் விரிந்து கிடந்தது. ‘அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி: குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்ட இந்திய இளைஞர்' என முதல் பக்கத்தில் வீறிட்ட அந்தச் செய்தி, அந்த கோர சம்பவத்தை கற்பனைக்கு இடம் வைக்காத ஒரு கிரைம் நாவலைப்போல் விவரித்திருந்தது.
வாசற்கதவிலேயே சாய்ந்து கொண்டு அதை வாசிக்கத் தொடங்கினான் மாதவன்.
*சுரேஷ் ஜெயராமனை ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்திருக்கும். பதினைந்து வருடத்திற்கு முன் அதிகாலையிலிருந்து அமெரிக்கத் தூதரகத்தின் முன் காத்திருந்த வரிசையில் அவரை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அவரை உங்களுக்கு அறிமுகம் இல்லையென்றாலும் அவரது வாழக்கை உங்களுக்குப் பரிச்சயமானதுதான். இந்தியாவின் படித்த, நகர்புற நடுத்தர வர்க்கத்திற்குப் பரிச்சயமான வாழ்க்கை.
அப்பா ஜெயராமன் பொதுத்துறை நிறுவனத்தில் பெரிய அதிகாரி. அம்மா நிர்மலா ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு பேரும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் ஓய்வு பெற்றார்கள். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகில் எழுந்து நிற்கும் அடுக்குமாடி வீடு ஒன்றில் 1200 சதுர அடி வாங்கிக் கொண்டு ஓய்வுக்குப் பின் குடியேறினார்கள்
பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே அமெரிக்கக் கனவுகளை சுவாசித்து வளர்ந்த பையன் சுரேஷ். அவன் ‘வெட்டி அரசியல்' பேசுவதில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள் எவர் மீதும் உயர்ந்த அபிப்பிராயங்கள் கிடையாது. இடம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் பற்றி எழுதும் ஜும்பா லஹரியின் நாவல்கள் பிடிக்கும். ஆனால் அது இலக்கியமா என்ற சர்சைகளுக்குள் இறங்குவதில்லை. கல்லுரி வந்ததும் கதை படிப்பது குறைந்து விட்டது. சினிமாக் கிசுகிசுக்கள் தெரியும். ஆனால் அவற்றை அறிந்து கொள்ள அதிகம் மெனக்கெட்டதில்லை. கணினியில் மேயும் போது, இணையத்திலிருந்து இலவசமாக இறக்கி வைத்த இசைக்கீற்றுக்களை கேட்பதுண்டு. ஆனால் காதுதான் அதைக் கேட்டுக்கொண்டிருக்குமே தவிர கவனம் எல்லாம் கணினியின் மீதுதான் இருக்கும் தொலைக்காட்சிகளில் ‘பிசினஸ்' சானல்கள் அவனுக்குப் பிடித்திருந்தன. பதின்ம வயதில் எழும் ஹார்மோன் கிளர்ச்சிகள் கூட அவனைக் ‘கவிழ்த்து' விடவில்லை. பெண் சிநேகிதர்கள் உண்டு. ஆனால் அவர்களில் எவரும் காதலிகள் இல்லை.. பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் ஏழாவதாகவோ எட்டாவதாகவோ ராங்க். பெங்களூர் ஐ ஐ எம் ல் எம்.பி.ஏ. அப்புறம் அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பனியில் கணினி முன் அமர்ந்து ஆபீஸ் வேலையும் பார்த்துக் கொண்டு அவ்வப்போது ‘பிளாக்' எழுதிக் கொண்டு ஒரு இரண்டு வருடம் போயிற்று. அதற்குப்பின் ஸ்காலர்ஷிப் கிடைத்து அமெரிக்காவிற்குப் படிக்கப் போனான். அறையை நான்கு பேருடன் பகிர்ந்து கொண்டு, முறை வைத்து சமைத்து, கட்டில் கிடைக்காத குளிர் நாட்களில் ஸ்லீப்பிங் பைக்குள் பொதிந்து கொண்டு தூங்கி, ஸ்காலர்ஷிப் பணத்தை மிச்சம் செய்து பழைய கார் வாங்கி, அங்கேயும் ஒரு எம்.பி.ஏ முடித்தான்.. அசத்தலான புராஜக்ட். அதனால் கேம்பஸ் இண்டர்வியூவில் மெரில் லிஞ்சில் வேலை கிடைத்தது. அம்மா தன் கூட வேலை பார்த்தவரின் பெண்ணையே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்து வைத்தாள் அவனுக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆட்சேபிக்கிற அளவிற்குக் கனகாவும் அப்படி ஒன்றும் சோடை போனவள் அல்ல. அவனது கனவின் இந்திய பிரதியாகவே அவள் இருந்தாள்..
அமெரிக்கப் பொருளாதாரத்தையும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் வால் ஸ்ட்ரீட் வேலையில் அழுத்தம் அதிகம் இருந்தது. ஆனால் அது வாரிக் கொடுத்தது. ‘அப்பா, மாதச் சமபளத்தில் நாள்களை நகர்த்தும் மத்திய தர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகிவிட்டோம்' என்று உற்சாகமாகக் கடிதம் எழுதினான் சுரேஷ். ”சந்தோஷம். காசு வருகிறபோதே அதில் கொஞ்சத்தைச் சேர்த்து வை. நான் வேண்டுமானால் இங்கே இடம் பார்க்கட்டுமா?” என்று பதில் எழுதினார் ஜெயராமன்..”வேண்டாம். இங்கேயே மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். ஆறை நூறாக்க அதுதான் சிறந்த வழி” என்று சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பினான்..
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடி எடுத்து வைத்ததும் அதன் பொருளாதாரம் அதிர்வுகள் எழுப்பியது. சுரேஷ் வேலை மாற்றிக் கொண்டான். இராக் யுத்தத்தை அடுத்துப் பொருளாதாரத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.
“ இந்தியாவிற்கே திரும்பிப் போய்விடலாமா?” என்றாள் கனகா.“ எப்படிப் போக முடியும்? போனால் நம் கெளரவம் என்னாகும்? அவர்கள் நம்மை ஏதோ சாதனையாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்தில் மண் அள்ளிப் போட வேண்டுமா?”
“பெற்றவர்கள்தானே புரிந்து கொள்ள மாட்டார்களா?”
“எப்படி முடியும் கனகா? இத்தனை நாள் இங்கே இருந்துவிட்டு அங்கே திரும்பிப் போனால் மூச்சு முட்டும். அவ்வப்போது லீவிற்குப் போகும் போது பார்க்கத்தானே செய்கிறாய்? ஏர்போர்டில் இறங்கி இமிகிரேஷன் க்யூவில் நிற்கும் போதே எரிச்சல் ஆரம்பித்து விடும். ஏதாவது அரசியல்வாதி அல்லது அவரது குடும்பத்தினர் க்யூவை உடைத்துக் கொண்டு முன்னால் போய் நிற்பார்கள். யாரும் கேட்க முடியாது.அதிகாரம் இருந்தால், பணம் இருந்தால், இந்தியாவில் ஒரு முன்னுரிமை, ஒரு அறிவிக்கப்படாத சலுகை. இல்லாவிட்டால் வேற மாதிரி மரியாதை. எந்த வேலையும் நேரத்தில் முடிக்க முடியாது. மெஜஸ்டிக் சர்க்கிளிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு டிராபிக்கில் நீத்திப் போக மூன்று மணி நேரம் ஆகும். முழி பிதுங்கி விடும் திட்டமிட்டு எதையும் ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிக்கும் போது திடீரென்று பவர் கட். இரயில்வே ரிசர்வேஷனிலிருந்து எலெக்ட்ரிசிட்டி வரை எதுவும் நிச்சியம் கிடையாது.”
“ 22 வயது வரைக்கும் நாம் அங்கேதான் வளர்ந்தோம் சுரேஷ்”
“நாம் வளர்ந்தோம். இவர்களால் வளர முடியுமா? என்று குழந்தைகள் நிதினையும் நித்தியாவையும் காட்டினான் சுரேஷ். பனிரெண்டு வருஷம் இங்கே படித்த பிறகு அவர்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போகமுடியுமா? போனாலும் அங்கு ஒட்டுமா? “
“பாட்டி தாத்தா பக்கத்திலிருந்து பார்த்து அரவணைத்துக் கொள்ள மாட்டார்களா?”
“பாட்டி பஜ்ஜி வேண்டுமானல் போட்டுத் தருவார். பர்கர் பண்ணத் தெரியுமா அவருக்கு?”
ஏதோ வெறியில் இந்தியாவை விட்டுக் கிளம்பி வந்த மாதிரி அமெரிக்காவை உதறிவிட்டுப் போவது அத்தனை சுலபமல்ல எனப் புரிந்த போது கனகாவிற்குக் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.
ஆனால் சுரேஷ் கலங்கியது அடுத்தடுத்து அமெரிக்க வங்கிகள் திவாலான போதுதான். கலங்கினான் என்று சொல்வதைவிட இடிந்து போனான் என்றுதான் சொல்ல வேண்டும். எவரிடமும் பேசாமல் எப்போதும் யோசனையிலேயே இருந்தான். சில நேரம் கண்ணை மூடிக் கொண்டு காற்றில் விரல்களால் கணக்குப் போட்டான். இரவில் இருட்டில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இணையத்தின் பக்கம் கூடப் போகவில்லை இரண்டொருமுறை காரை எடுத்துக் கொண்டு முப்பது மைல் தள்ளி இருக்கும் ராமர் கோவிலுக்குப் போய் வந்தான். அப்போது அவன் காரை ஓட்டுகிற வேகத்தைப் பார்த்தால் பயமாக இருந்தது.. கனகா சற்றுக் குழம்பி, நிறையத் தயங்கி, மாமனாரைக் கூப்பிட்டு அவராக போனில் கூப்பிடுவது போல கூப்பிடச் சொன்னாள். போன் மணி அடித்த போது அவன் எடுக்கவில்லை. அவள் எடுத்து போன் வந்திருப்பதாகப் போய்ச் சொன்ன போது “ செத்துப் போயிட்டேன்னு சொல்லு” என்று சீறினான்.
அதன் மறுநாளுக்கு மறுநாள் எல்லோருமே செத்துப் போனார்கள், அவனால் சுடப்பட்டு
*“பேப்பர் படிப்பதை வாக் போய்ட்டு வந்து வைச்சுக்கலாமா? ஏற்கனவே உனக்கு கொழுப்பேறிக் கிடக்குனு ஊர்ல பேச்சு இருக்கு. கொஞ்சம் நடந்தாலாவது அது குறையுதானு பார்க்கலாம்” குரல் வந்த திசையைப் பார்த்தான் மாதவன். தினமும் அவனுடன் கடற்கரையோரம் நடைபழகும் நண்பர்கள் நின்றிருந்தார்கள்.
“கொழுப்பு கிழுப்பு ஏன் சொல்ற? அவன் உள்ளத்தாலும் உடலாலும் இனிமையானவன். அதனால் நடந்தால் நல்லது” என்றான் நம்பி., மறைமுகமாக அவனது டயாபடீசைச் சுட்டிக் காண்பித்து. எல்லாவிஷயத்திலும் பாசிடிவ்வான பக்கத்தைப் பார்க்கிறவன் என்று அவன் தன்னை அறிவித்துக் கொள்வது வழக்கம்.
“காலங்கார்த்தால அவரோட தலையை உருட்ட அவரோட ஹெல்த் ரிப்போர்ட்தான் அகப்பட்டதா உங்களுக்கு?” என்று கடிந்து கொண்டாள் அனுராதா
மாதவன் நண்பர்களோடு கடற்கரையை நோக்கி நகர்ந்தான். மார்கழி மாத பஜனை கோஷ்டி மாதிரி தெருவை அடைத்துக் கொண்டு நடந்தார்கள். மப்ளர் அணிந்திருக்கவில்லை. அரைடிராயரும் நடப்பதற்கேற்ற காலணியும் அணிந்திருந்தார்கள். நாற்பதைத் தாண்டியவர்கள் என்றாலும் டி ஷர்ட் அணிந்திருந்தார்கள். அதையும் மீறி பீர் ஊற்றி வளர்த்த அவர்கலது தொப்பை வயதை அறிவித்துக் கொண்டு முன்னே நின்றது.
அந்தக் காலனிவாசிகள் அந்த அரைடிராயர்களுக்கு ‘அறிவுஜீவி கிளப்' என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களில் பலர் அறிவு சார்ந்த தொழில்களில் - ‘நாலட்ஜ் இண்டஸ்ட்ரியில்' - உழைக்கும் வெள்ளைக் காலர் வித்தகர்கள். மாதவன் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளன்.நம்பி மென்பொருள் நிறுவனத்தில் குழுத்தலைவன். அனுராதா ஐ ஏ எஸ் அதிகாரி. கிறிஸ்டோபர் டெலிவிஷன் செய்தியாளன். சபாபதி வங்கி அதிகாரி.
“ இத்தனை இடிக்கறோம் சார் வாயைத் திறக்கிறாரா பாரு?” என்றார் கிறிஸ்டாபர். மாதவன் மனம் முழுக்க சுரேஷ் ஜெயராமனின் கதை நிறைந்து கிடந்தது.
“யாரும் பேப்பர் பார்க்கலையா?” என்றான் மெதுவாக.“ஏன் என்ன விஷயம்? அரசாங்கம் இருக்கில்ல? இல்லை கவுந்திருச்சா?” “அதற்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு. ஆனால் பாவம் அமெரிக்காவில்தான் ஒரு சின்னப் பையன், பையன் இல்லை நம்பளை மாதிரி ஒரு நடுவயசுக்காரன்.... . “மாதவன் பேப்பரை விரித்துக் காட்டினான்.“ என்னய்யா கொடுமை இது?” என்றான் நம்பி“என்னவாக இருக்கும்?' என்றாள் அனுராதா“டிப்ரஷன்”“அது புரிகிறது. ஆனால் ஏன்? இத்தனை படித்தும், அந்தப் படிப்பு தன்னம்பிக்கையைத் தரவில்லையே? மன உறுதியைத் தரவில்லையே”“ அப்படிச் சொல்லிவிடமுடியாது. அமெரிக்காவில், ஏன் எந்த வெளி தேசத்திலும், முற்றாத இளம் வயதில் படிக்கப் போகிறவர்களுடைய மன உறுதியை அத்தனை எளிதாக சந்தேகப்பட்டுவிட முடியாது. அங்கே சின்னதும் பெரிதுமாக எத்தனையோ ஏமாற்றங்கள், அவமானங்கள். அதைக் கண்ணில் தண்ணீர் வராமல் ஜீரணித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வலிக்கும் அந்த நிமிடங்களில் தாங்கிப் பிடிக்க அருகில் குடும்பம் என்ற ‘சேப்டி நெட்' கிடையாது. கிழக்கு மேற்கு தெரியாத ஊர். தாய்மொழியில்லாத பாஷையின் புதிய உச்சரிப்புக்களைப் பழகிக் கொள்ள வேண்டும். புதிய நண்பர்களை சேகரிக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகத் துவங்க வேண்டும். அந்த அனுபவங்கள் எந்த மனிதனையும் புடம்போடும். மன உறுதியைத் தரும்”.“ பணம் போய்விட்டதே என்ற பதற்றமாக இருந்திருக்கும்.இது ஒரு ஆரம்பம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இது போல இன்னும் சில எதிர்பார்க்கலாம்.”“ வெறும் பணம் போன ஏமாற்றம் மட்டும் இல்லை என நினைக்கிறேன். அவனுடைய அமெரிக்கக் கனவு முறிந்து விழுந்த துக்கமாகக் கூட இருக்கலாம்”“ இருக்கலாம். இருக்கலாம். ஆனால் ஒரு கோணத்தில் பார்த்தால் இது ஈகோ பிரசினையாகக் கூட இருக்கலாம் எனத் தோன்றுகிறது. வால் ஸ்ட்ரீட் அனலிஸ்ட். ஆனால் அவனால் அவனது பணத்தையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்னும் போது அவனது ஈகோ விழுந்து நொறுங்கியிருக்கும். ஈகோ இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. ஈகோ இஸ் தி பவுண்டன் ஹெட் ஆப் ஹுயூமன் ரேஸ். அயன்ராண்ட் சொன்னது” “ எனக்கு அந்த அயர்லாந்துப் பொம்பளையைப் பிடிக்காது. ஆனால் ஈகோ இஸ் தி டிரைவிங் ஃபோர்ஸ் ஆஃப் இந்தியன் மிடில் கிளாஸ் என்று நிச்சியமாகச் சொல்லமுடியும். ஈகோதான் நம்மை செலுத்திச் செல்கிறது”
“ உன்னை வைத்துச் சொல்கிறாயா?”
“ மிடில் கிளாசிற்கு ஈகோவே இருக்க முடியாது. அதைச் செலுத்தும் சக்தி சுயநலம்தான். நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன என்னை விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பதுதான் அவர்களது தத்துவம். எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அவர்களது லட்சியம்.தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்”
“நான் ஆட்சேபிக்கிறேன். உலகில் ஏற்பட்ட பல மாறுதல்களுக்கு மிடில்கிளாஸ்தான் காரணம்'
“இருக்கலாம். ஆனால் அந்த மாற்றங்களால் அதிகம் பலனடைந்ததும் அவர்களாகத்தானிருக்கும்”
“நான் சொன்னதைத்தான் நீயும் சொல்கிறாய். தன்னை மையமாகக் கொண்ட சிந்தனைதான் ஈகோவிற்கும் அடிப்படை'
“நான் தத்துவ விசாரனைக்குள் போக விரும்பவில்லை. சுரேஷ் ஜெயராமன் தன்னை மட்டும் மாய்த்துக் கொள்ளவில்லை. குடும்பத்தையும் சாய்த்திருக்கிறான். என்ன காரணம்?”
“ என்ன காரணம்?”
“அமெரிக்கப் பொருளாதார சுனாமி தன்னுடைய சேமிப்பையெல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. கடன்கள் மிஞ்சி இருக்கின்றன. தான் போன பின் அந்தக் கடன் சுமை தன் மனைவி மீதோ குழந்தைகள் மீதோ விழுந்து அவர்கள் துன்பப்பட வேண்டாம் எனக் கூட அவன் நினைத்திருக்கலாம். நான் அவனை ஒரு வில்லனாக அல்ல, பாசம் மிகுந்த குடும்பத் தலைவனாகத்தான் பார்க்கிறேன்.”
“ அது உண்மையாக இருக்கும் என்றால் அந்த அன்பும் தன்னை மையமாகக் கொண்டதுதான்”
‘ ஆலை விடுங்கப்பா. ஆபீஸ் சாவி என்னிடம் இருக்கிறது. நேரத்திற்குப் போய் கல்லாவைத் திறக்கவில்லை என்றால் எனக்கு வேலை போய்விடும். என்னைச் சுட்டுக் கொள்ள என்னிடம் துப்பாக்கி கூட கிடையாது” என்றான் சபாபதி.
ஏனே தெரியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள்.
*மாதவன் வீட்டிற்குத் திரும்பி பேப்பரை இன்னொரு முறை மேய்ந்தான். எட்டாம் பக்கத்தில் ஒரு ஓரமாய் ஆந்திரப் பிரதேசத்தில் இன்னொரு விவசாயி தற்கொலை எனச் செய்தி வந்திருந்தது. கடன் சுமை தாளாமல் இந்தியாவில் 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்லியது செய்தி.
இந்தத் தற்கொலைகள் பற்றி என்றைக்காவது அறிவுஜீவிகள் கிளப் பேசியிருக்கிறதா என்ற கேள்வி மாதவன் மனதில் ஓடி மறைந்தது. இல்லை. ஏன்? எட்டாம் பக்கத்தில் வந்த செய்தி என்பதால் கவனத்திற்கே வராமல் போய்விட்டதா? அந்த மரணங்கள் முகமற்று, 32 நிமிடத்திற்கு ஒருவர் எனப் புள்ளிவிவரமாகச் சுருங்கிப் போனதால் மனதில் தைக்கத் தவறியதா? ஏன் இந்தச் செய்தி முதல் பக்கத்தில் இடம் பிடிக்கவில்லை? ஏன், ஏன் என்று நாள் முழுதும் கேள்வி குடைந்து கொண்டிருந்தது.
இரவில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, காலையில் கிறிஸ்டோபர் சொன்னது ஞாபகம் வந்தது: “மிடில் கிளாசைச் செலுத்தும் சக்தி சுயநலம்தான்..தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்.”
உண்மைதானோ?
(இந்த வார கல்கியில் வெளியாகியுள்ள என் சிறுகதை)

Wednesday, November 05, 2008

பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்...

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வ்ரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிகாவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க் விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் 'தூய்மைப்படுத்தல்' போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான். அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம். இந்தப் பின்ன்ணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜன்நாயகக் கட்சி வேட்பாளரை அம்ர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

"உலகம்யமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது" ("While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans -- as well as those working hard to become middle class -- are seeing the American dream slip further and further away,") இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் ப்ல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்: இந்த "முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை." ("We're not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn't just tell people what they want to hear but tells everyone what they need to know.")

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ' முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு'க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் 'கார்ப்போரேட்'களை எதிர்த்து - எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், 'கை நழுவிப் போன கனவை' மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். 'இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்' என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

'தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்' என்று சொல்லும் அவர் அதே மூச்சில், 'எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்' (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை 'பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக' விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை- குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும். .பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

Tuesday, March 11, 2008

பத்ரியின் எதிர்வினையை முன் வைத்து....

என்னுடைய தினமணிக் கட்டுரை குறித்து பத்ரி தனது பதிவில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவரது சில கருத்துக்கள் தொடர்பான எனது விளக்கங்களை அவரது பதிவில் எனது பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன்.

பின்னூட்ட்ங்களில் விரிவாக எழுத இயலாது என்பதால் விரிவான விளக்கங்களை இங்கு தனிப்பதிவாக எழுதுகிறேன்.

மாநாட்டுப் பேச்சை மட்டும் பார்த்தாலும் கூட...

>>கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும்.<< என்று பத்ரி சொல்கிறார்.

ஆனால் திருமாவளவனுக்கு ஆதரவாகக் கருணாநிதி சுட்டும் பொடா சட்டம் பற்றிய உச்சநீதி மன்றத் தீர்ப்பு, குற்றச் செயலை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது குற்றம் செய்யும் மனோபாவம் இருந்ததா என்பதையும் பார்க்க வேண்டும் என்ற ரீதியில் பேசுகிறது. இது குறித்துப் பேசும் போது mens rea என்ற குற்றவியல் நீதி முறையை அது சுட்டுகிறது. திருமாவளவனுக்கு சட்டத்தை மீறும் மனோபாவம் இருந்தது என நான் அவரது
ஜீனியர் விகடன் பேட்டியின் அடிப்படையில் கருதுகிறேன். (திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த போது விடுதலைப் புலி என்ற பெயரில் பத்திரிகை நடத்தியவர். அப்போது வைகோவுடன் ஊர் ஊராகச் சென்று விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கூட்டங்கள் பேசியவர். Dalit Panthers of India என்ற அகில இந்திய அமைப்பின் தமிழக அமைப்பாளராக இருந்த போது அந்த அமைப்பின் பெயரை தமிழில் எழுதும் போது இந்திய தலித் சிறுத்தகள் என்று எழுதாமல் விடுதலைப் புலிகள் பாணியில் விடுதலைச் சிறுத்தைகள் என்று விளம்பரம் செய்தவர். ஆனால் நான் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மாநாடு நேரத்தில் அவரது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதற்கான ஆதாரத்தை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்)

பத்ரி சொல்வது போல் அவரது கருத்துரிமை மாநாட்டுப் பேச்சை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்பது என்றாலும், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம். அந்த இயக்கம் தடை செய்யப்பட்டபோது வெலியிடப்பட்ட அரசாணை " Persons and organisations derive inspiration and encouragement from LTTE for their unlawful activities as well as activities punishable under section 153B of the Indian Penal Code" என்று குறிப்பிடுகிறது. LTTEனால் மன எழுட்சி (inspiration) பெற்றவர் நிகழ்த்திய உரை அது என்பது அப்பட்டமாகத் தெரியும் விஷயம்.

விடுதலைப் புலிகளைத் தடை செய்த போது வெளியான அந்த அரசாணையின் நகல் கீழே:

Ministry of Home Affairs Notification New Delhi
under Unlawful Activities (Prevention) Act, 1967 (37 of 1967)

S.O.330(E)

Whereas the Liberation Tigers of Tamil Eelam (hereinafter referred to as the LTTE) is an association actually based in Sri Lanka and having sympathisers, supporters and agents on Indian soil and whereas -

(i) LTTE's objective for a homeland for all Tamils disrupts the sovereignty and territorial integrity of India and thus appears to fall within the ambit of an unlawful activity;

(ii) LTTE has created the Tamil National Retrieval Troops (TNRT) and encouraged and aided its members to undertake unlawful activities in India;

(iii) LTTE encourages and aids United Liberation Front of Assam (ULFA) which is an unlawful association;

(iv) Persons and organisations derive inspiration and encouragement from LTTE for their unlawful activities as well as activities punishable under section 153B of the Indian Penal Code;

And whereas the Central Government is of the opinion that because the activities of the LTTE, it is necessary to declare the LTTE to be unlawful with immediate effect;

Now, therefore, in the exercise of the powers conferred by sub-section (1) of Section 3 of the Unlawful Activities (Prevention) Act, 1967 (37 of 1967), the Central Government hereby declares the Liberation Tigers of Tamil eelam to be an unlawful association and directs in exercise of the powers conferred by the proviso to sub section (3) of that section that this Notification shall, subject to any order that may be made under section 4 of the said Act, have effect from the date of its publication in the Official Gazette.

தடை விவாதிக்கப்பட்டதா?

விடுதலைப் புலிகள் மீதான தடை பற்றி வேறு ஒரு பதிவில் பத்ரி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
>>முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும்<<

நியாயமான கருத்து. முதலில் ஒரு இயக்கம் எப்படித் தடை செய்யப்படுகிறது என்ற நடைமுறையைப் பார்க்கலாம்:

அரசின் உளவு அமைப்புக்கள், நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகள் அவை சார்ந்த அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஆபத்து விளைக்கும் வண்ணம் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, ஆபத்து ஏற்படுத்தக் கூடிய அமைப்புக்கள் எனக் கருதுபவை குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுக்கும். அதைப் பரிசீலீக்கும் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவையின் குழுவிற்கு (CCSA- Cabinet Committee on security affairs) தனது கருத்தைத் தெரிவிக்கும். அந்தக் குழு- அதாவது மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு தடை விதிக்க வேண்டுமா வேண்டாமா என முடிவெடுத்து, அதை மத்திய அமைச்சரவைக்குத் தெரிவிக்கும். மத்திய அமைச்சரவை முடிவெடுத்த பின் அது நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும். அப்படி விதிக்க்ப்படும் தடையும் நிரந்தமானதல்ல. இரண்டாண்டுகளுக்குத்தான். பின்னர் அது ஆய்வு செய்யப்பட்டு தடை
நீட்டிக்கவோ கைவிடவோ படும்.

எனவே ஒரு இயக்கத்தின் மீதான தடை என்பது ஏதோ தன்னிச்சையாக ஒரு தனிநபரின் விருப்பத்தின் பேரில் விதிக்கப்படுவதல்ல. பல நிலைகளில் விவாதம் நடத்தப்பட்டு அதன் பின்னர்தான் முடிவு எடுக்கப்படுகிறது.

அரசாணை வெளியான பிறகு அதைக் குறித்து வழக்குத் தொடுக்கும் உரிமையும் குடிமக்களுக்கு உண்டு.


மக்கள் அனைவரிடமும் கருத்துக் கேட்க வேண்டும் என்கிறார் பத்ரி. எப்படிக் கேட்பது? மக்கள் தொகைக் கணக்கெடுப்பது போன்று வீடு வீடாகச் சென்று சர்வே செய்ய வேண்டுமா? அதற்கு எத்தனை காலம் ஆகும்? அதுவரை நாட்டின் பாதுகாப்பு எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா? இல்லை பொதுத் தேர்தல் மாதிரி ஒரு குறிப்பிட்ட நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா? ஒவ்வொரு பிரசினைக்கும் இப்படி வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருந்தால் அதுவே அரசின் முழு நேர வேலையாகிவிடாதா? ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் கேட்டு முடிவெடுக்க முடியாது என்பதால்தான்
நாம் நமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம். அந்த மக்கள் பிரதிநிதிகளில்
பெரும்பான்மையானவர்களது நம்பிக்கையைப் பெற்றவர்தான் பிரதமர்.அவரது தலைமையில்தான் CCSA இயங்குகிறது.

விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்படும் முன் அது குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடந்தன.

வி.புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற ஓர் தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடு ஒன்றில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அலுவாலியா முன் வைத்தார். அதற்கு (அப்போது) போதிய ஆதாரங்கள் இல்லை என அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் தயக்கம் காட்டினார். எஸ்.பி.சவானின் இந்தப் போக்கை வாழப்பாடி ராமமூர்த்தி கடுமையாகச் சாடினார். பின்னர் மே 14 1992 அன்று காங்கிரஸ் கமிட்டி இந்தத் தீர்மானத்தை (சில திருத்தங்களோடு) ஏற்றது. இது அரசியல் அரங்கில் ஆளும் கட்சிக்குள் நடந்த விவாதம்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தடையை வற்புறுத்தினார்.ஜெயலலிதாவின் நிலையை பா.ம.க சாடியது. சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் மரணத்தின் விளைவாக பலத்த அடி வாங்கியிருந்த திமுக அதிகம் பேசாமல் இருந்தது. (நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு, அமைந்த தேசிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைமையில் அமைந்த அரசுகளில் திமுக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது.தடை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படட போது, அதைக் குறித்து ஆட்சேபணைகள் எழுப்ப்ப அதற்கு
வாய்ப்பிருந்தது. ஆனால் அது ஆட்சேபித்தாகத் தெரியவில்லை.)

தடைக்கு முன், அதிகாரிகள் அளவில் வேறு சில ஆட்சேபணைகள் முன் வைக்கப்பட்டன. வி.புலிகள் இயக்கம் வெளிநாட்டிலிருந்து செயல்படும் இயக்கம். நாம் எப்படி அதற்குத் தடை விதிக்க முடியும், அப்படி விதித்தால் அது செல்லுபடியாகுமா? என்பது அவர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்வி.

மிக அபூர்வமாக ராணுவ அதிகாரிகளிடமும் இது குறித்து விவாதங்கள் எழுந்தன.வி.புலிகளைத் தடை செய்வது அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியங்களைக் குறைத்துவிடும் என அவர்களில் சிலர் -ஜெனரல், மேஜர் போன்ற உயர் ராங்கில் இருந்தவர்கள்- கருதினார்கள்.

எனவே விவாதங்கள் ஏதும் இல்லாமல் தடை விதிக்கப்படவில்லை. ராஜீவ் இறந்தது மே 1991. தடை அறிவிக்கப்பட்டது மே1992க்குப் பிறகு. இடையில் ஒரு ஆண்டுக் காலம் இடைவெளி ஏற்பட்டதற்குக் காரணமே விவாதங்கள் பல தளங்களில் நடந்ததுதான்.

ஒவ்வொருவரையும் கருத்துக் கேட்பது என்று வைத்துக் கொண்டாலும், விடுதலைப் புலிகளின் தடை விஷயத்தில் பெரும் மாற்றம் ஏதும் இராது. ஏனெனில் நான் அறிந்த வரையில், தமிழ்நாட்டுக்கு வெளியே, அரசியல் அரங்கிலாகட்டும், ஊடகங்களிலாகட்டும் விடுதலைப் புலிகள் மீது பெரிய அளவில் அனுதாபம் கிடையாது. எந்த தேசியக் கட்சியும் அதனை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, அதன் பின் வந்த ஒவ்வொரு அரசாங்கமும் (வெவ்வேறு தேசியக் கட்சிகளின் தலைமையில் அமைந்தவை) தடையை நீட்டித்து வந்திருப்பதே அதற்குச் சான்று.
இந்தப் 16 ஆண்டுக் காலத்தில் தடையை எதிர்த்து வழக்காடப்படவில்லை. தடையை நீக்கச் சொல்லி ஊடகங்கள் எழுதவில்லை. பல தேர்தல்கள் நடந்தன. எந்தக் கட்சியும் இதை ஒரு தேர்தல் பிரசினையாக முன் வைக்கவில்லை.

இவையெல்லாமே மக்களின் சம்மதம் இதற்கு இருக்கிறது என்பதைத்தான் மறைமுகமாகக் காட்டுகிறது.

அரசின் ஒரு நடவடிக்கை தவறானது என்றால் இந்தியாவில் அதைத் திரும்பப் பெற வைக்க முடியும். பொடா சட்டம் அது காலாவதியாவதற்கு முன்பே திரும்பப் பெறப்பட்டது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுப் போட ராஜீவ் கொண்டு வந்த கறுப்புச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது எனப் பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் தடை விதிக்க எந்த நடைமுறைகள் பின்பற்ற்ப்பட்டனவோ அதைவிடவும் ஜனநாயகபூர்வமான நடைமுறைகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டிருக்கின்றன.


முஷரஃபும் தமிழ்ச் செல்வனும்

>>பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் பர்வீஸ் முஷரஃப் பாகிஸ்தான் ராணுவத்தில் பலகாலம் பணிபுரிந்து, பல இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றவர். கடைசியாக கார்கில் யுத்தத்தின்போது பல இந்திய ராணுவ வீரர்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். ஆனால் அவர் பாகிஸ்தானின் அதிபராக (இத்தனைக்கும் மக்களால் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கூடக் கிடையாது) இந்தியா வருகிறார். இந்தியாவின் டிப்ளோமேட்டிக் மரியாதை அத்தனையையும் வாங்கிக்கொள்கிறார். கட்டியணைத்து அவரை வரவேற்கிறார்கள்<<

இந்த ஒப்பீடு சரியானதல்ல. இறையாண்மை கொண்ட ஓர் நாட்டினுடைய ராணுவத்தின் அதிகாரியாக இருந்த முஷரஃப் அந்த ராணுவம் இட்ட கட்டளையை ஏற்றுச் செயல்பட்டதையும் ஒரு பயங்கரவாத இயக்கம் மேற்கொள்ளும் செயல்களையும் எப்படி ஒன்றெனக் கொள்ள முடியும். இறையாண்மை கொண்ட அரசு அதன் அதிகாரத்தை மக்களிடமிருந்து தேர்தல்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் பெறுகிறது. அதன் ராணுவம் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டது. [ஓர் உதாரணத்திற்குச் சொல்வதானால், இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் செயல்கள் குறித்து இந்த நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. (நவம்பர் 9 1987 -மக்களவை) அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியே அதில் கலந்து கொண்டு விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.] அந்த அரசு மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டது. ஆனால் பிரபாகரனின் பயங்கரவாத அமைப்பு அவரைத்தவிர வேறு யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதல்ல.

இந்தியா-பாகிஸ்தானிடையே நடைபெற்றது அறிவிக்கப்பட்ட யுத்தம். ஆனால் இந்தியா இலங்கைக்கு போர் தொடுக்கச் செல்லவில்லை. அந்த நாட்டிலிருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றது. எனவே யுத்த்த்தின் போது முஷ்ரஃப் ஒரு ராணுவ அதிகாரியாக நடந்து கொண்டதை, மறைந்திருந்து தாக்கும் கெரில்லா இயக்கத் தலைவரின் நடவடிக்கையோடு ஒப்பிட முடியாது.

முஷரஃப் பாகிஸ்தானின் அதிபராக இந்தியா வந்தார். அயல்நாடு ஒன்றின் அரசுத் தலைவர் ஒருவர் இந்தியா வந்தால் எப்படி வரவேற்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன (protocol) அவை பின்பற்றப்பட்டன. ஒரு நாட்டின் தலைவராக ஒருவர் எப்படி ஆகிறார் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா, புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப் பற்றுகிறாரா, ஒற்றைக் கட்சி ஜனநாயகத்தின் மூலம் பதவிக்கு வருகிறாரா, வெளிநாட்டு சக்திகளால் பொம்மையாக் நியமிக்கப்படுகிறாரா என்பது அந்த நாட்டின் உள்நாட்டு அரசியல். அதில்
இந்தியா எதுவும் சொல்வதற்கில்லை.

>>அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச்
சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது<<

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போது தமிழ்ச் செல்வன் கொல்லப்படவில்லை. அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வந்த எவரையும் இந்தியாவோ, இலங்கை அரசோ கொன்றதில்லை.

தமிழ் அபாஸ்?

>> (தமிழ்ச் செல்வனது பணி) இன்றைய பி.எல்.ஓவின் அப்பாஸ்போல<<

நானறிந்தவரையில் அபாஸ் ஆயுதம் ஏந்திப் போரிட்டவர் அல்ல. சிரியாவில் ஆரம்பப்பள்ளி ஆசிர்யராகவும், பின்னர் கத்தாரில் சிவில் அதிகாரியாகவும் (IASபோல) பணியாற்றியவர். PLO வின் அரசியலமைப்பான ஃபதா கட்சியின் நிறுவனவர்களில் ஒருவர். PLOவை கடுமையாக விமர்சிக்கும் யூதப் பத்த்ரிகைகள் கூட அவரை மிதவாதி என்றுதான் விமர்சிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவர் பாலஸ்தீன பிரதமர் பதவியை இழந்ததற்கும் இந்த மிதவாதத் தோற்றம்தான் காரணம். விடுதலைப் புலிகளின் அபாஸ் என யாரையாவது சொல்ல முடியுமானால் அது பாலசிங்கமாகத்தான் இருக்க முடியும். தமிழ்ச் செல்வன் அல்ல.

பாலஸ்தீனத்தை ஓரளவிற்கு மேல் இலங்கை இனப் பிரசினையோடு ஒப்பிடமுடியாது. பாலஸ்தீனம் தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்ட பிறகு உலகில் 100 நாடுகள் அதனைத் தனிநாடாக அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளை பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்திருக்கின்றன.

எனக்கு மட்டுமல்ல

>>கருணாநிதி தனது நிலையை விளக்கியாகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவோ, பத்திரிகையாளராக மாலனோ கேட்பது நியாயம்தான் முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.<<

எனக்கும் ஜெயலலிதாவிற்கும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளனுக்கும் அந்த உரிமை உணடு.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் திமுக தனது நிலையை வெளிப்படையாக (ஜெயலலிதாவைப் போல்) விளக்க வேண்டியது இந்தியா முழுக்க உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமை

கருத்துரிமைக் காவலரா திருமா?

தனது மாநாட்டைக் கருத்துரிமை மீட்பு மாநாடு என்று அழைத்துக் கொள்கிறார் திருமாவளவன். அதாவது முன்பு கருத்துரிமை இருந்தது இப்போது அது இல்லை என அந்தத் தலைப்பு குறிப்பால் உணர்த்துகிறது. கருத்துரிமை இல்லை என்றால் அவரால் இது போன்ற ஒரு மாநாட்டை நடத்தவே முடியாது என்கிற உண்மையே அவரது வாதத்தில் சாரம் இல்லை என்பதைக் காட்டுகிறது. அவரால் கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலோ கருத்துரிமை
மீட்பு மாநாடு நடத்த முடியுமா? முடியாது.ஏனென்றால் அங்கு அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை வெளியிட முடியாது. வெளியிட்டால் அமிர்தலிங்கத்தின் கதிதான் ஏற்படும்.

ஆனால் இந்தியாவில் இதெல்லாம் முடியும். என்ன விசித்திரம், எங்கு உரிமை உள்ளதோ அங்கு உரிமை கோரி மாநாடு நடத்துகிறார். ஆனால் எங்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டிருக்கிறதோ அதைப் பற்றி மெளனம் காக்கிறார்.

ஏனெனில் அவரது நோக்கம் கருத்துரிமை அல்ல.

விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்துக்களை வெளியிடும் தன்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக திருமாவளவன் கருதினால், அவர் செய்ய வேண்டியது உச்சநீதி மன்றத்தில் அரசமைபுச் சட்டம் உறுதி செய்த அடிப்படை உரிமைகள் (பிரிவு 19) பறிக்கப்படுவதாக வழக்குப் போடுவது. அதை விடுத்து, அவர் போடும் முச்சந்திக் கூட்டங்கள் அவருக்குக் கருத்துரிமையை மீட்டுத் தராது. அவர் தமிழ்ச் செல்வனின் நினைவை நிஜமாகவே போற்ற விரும்பியிருந்தால் ஊருக்கு ஊர் டிஜிட்டல் பானர் வைப்பதை விட ஊருக்கு ஊர் மரம் நடலாம். அது சுற்றுச் சூழல் பிரசினைகளைக் குறைக்க உதவுவதோடு, தலைமுறை தலைமுறையாக தமிழ்ச் செல்வனைப் பற்றி தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால் அவர் தமிழ்ச் செல்வன் கொலையை முகாந்திரமாகக் கொண்டு தனக்கு விளம்பரமும் அரசியல் ஆதாயமும் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார். எவ்வளவு மலிவான அரசியல் இது!

இன்னொரு புறம் கருத்துரிமை பற்றித் திருமாவளவன் பேசுவதைப் போல ஒரு வேடிக்கை இருக்க முடியாது.

குஷ்பு வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக அவரது இயக்கம் எப்படி நடந்து கொண்டது என்பதை யாரும் இன்னும் மறந்து விடவில்லை.திருமாவளவன் மட்டுமல்ல, பொதுவாக மனித உரிமைக்குக் குரல் எழுப்புபவர்கள், விடுதலைப் புலிகளது குழந்தைப் படைவீரர்கள் குறித்து முணுமுணுப்பது கூட இல்லை. ஆட்கடத்தல் பற்றி பேசுவதில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது பற்றி வாய் திறப்பதில்லை.

விடுதலைப் புலிகள் தமிழர்களது உரிமைக்குப் போராடுவதாக ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையிலேயே அதற்குத்தான் போராடியவர்கள் என்றால், அவர்கள் இந்தியாவால் முன் மொழியப்பட்ட பிரதேசக் கவுன்சில் யோசனையை ஒதுக்கித் தள்ளியிருந்திருக்க மாட்டார்கள். அதை ஒரு ஆரம்பமாகப் பிடித்துக் கொண்டு ஒரு சிவிலியன் அரசை ஏற்படுத்தி, மெல்ல மெல்ல மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோருகிற நிலையை மேற்கொண்டிருப்பார்கள். 25 ஆண்டுகாலத்திற்கும் மேல் யாருக்கும் வெற்றிகாண முடியாத ஒரு
யுத்தத்தை, வெற்றிகாண முடியாது எனத் தெரிந்த பின்னும், விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். யுத்தம் இருக்கும் வரைதான் அவர்களிடம் அதிகாரம் இருக்கும். யுத்தம் இருக்கும் வரைதான் அவர்களுக்குப் பணம் வரும். யுத்தம் இருக்கும் வரைதான்
அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத எதேச்சதிகாரிகளாக இருக்க முடியும்.

ஜனநாயகம் கேள்விகளைக் கொண்டு வரும் உரிமைகளைக் கோரும். துப்பாக்கிகளை விட மக்கள் வலிமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்

மக்களை பலி கொடுத்தாவது தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள நினைப்பவர்கள் எப்படி மனித உரிமைக் காவலர்களாக இருக்க முடியும்?
.
விடுதலைப் புலிகள், கருணா பிரிவு, சிங்கள அரசு எல்லோருமே பெருமளவில் மனித உரிமைகளை மீறித்தான் அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் தரப்பு அதிகம் பாதிபுக்குள்ளாகும் போது அவர்கள் மனித உரிமைக் குரல் எழுப்புவார்கள். அவர்களுக்கு அதில் மெய்யான அக்கறை கிடையாது.விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இடையே நடக்கும் போர் தமிழர்கள் உரிமைக்கான போர் அல்ல. அது அவர்கள் தத்தம் அதிகார எல்லைகளை
விரிவுபடுத்திக் கொள்வதற்கான போர்.

இந்த உள்நாட்டு அரசியலில் இந்தியா சிக்கிக் கொள்ளாமல் விலகி நிற்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்தியா தனது எல்லைகளையும் இறையாண்மையையும் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே போதுமானது.

Tuesday, March 04, 2008

தடுமாறுகிறார் முதல்வர். ஏன்?

‘தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்சநீதி மன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலையாளர்கள் மனதில் ‘தீர்ப்பில் என்னதான் சொல்லியிருக்கிறது' என்ற கேள்வி எழுந்திருக்கும்.

கருணாநிதி அளித்திருக்கும் விளக்கங்கள், அவர் இந்த விஷயத்தில் சற்றுக் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. முதலில் ‘தடை செய்யப்பட்ட இயக்கம்', ‘பயங்கரவாத இயக்கம்' என்ற இரண்டும் ஒன்றெனக் கொள்ளும் மயக்கம் அவரிடம் காணப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனியொரு சட்டம் (Unlawful activities (Prevention) Act 1967) ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. பொடா சட்டம் என்பது பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம். இன்று காலாவதியாகிவிட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே அதன் ஆதரவாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பொடா சட்டம் தேவையில்லை. அதை இன்று பயன்படுத்தவும் இயலாது. காலவதியான சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? ஆனால் இந்தப் பிரசினையில் கருணாநிதி பொடா சட்டம் குறித்துப் பேசியிருப்பது அவரது குழப்பத்தையோ அல்லது பிரசினையைத் திசை திருப்பும் அவரது விருப்பத்தையோ காட்டுகிறது.

சரி, பொடா சட்டம் குறித்த வழக்கின் தீர்ப்பு என்னதான் சொல்கிறது?((AIR2004SC 456) குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று mens rea. ‘Mens rea' என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘குற்ற மனப்பான்மை' என்று பொருள். வெறும் செயலின் அடிப்படையில் மாத்திரமே ஒருவரைக் குற்றம் செய்தவராகக் கருதக் கூடாது, குற்றம் செய்யும் மனப்பானமையோடு அந்தச் செயல் செய்யப்பட்டதா என்பதே ஒருவரை குற்றம் புரிந்தவரா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற லத்தீன் வாசகத்தின் அடிப்படையில் உருவானதுதான் குற்றவியல் நீதி பரிபாலன முறை.

பொடா சட்டத்தின் 20,21,22 ஆகிய பிரிவுகள் செயலைக் கணக்கில் கொள்கின்றனவே அன்றி குற்ற மனத்தைக் கருதிப் பார்க்கவில்லை எனவே அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது, அந்தச் சட்டபிரிவுகள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கக் கோரி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரு பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமோ, திட்டமோ இல்லாமல், ஒருவர் கூட்டத்தில் பேசவே, அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாலோ அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை எனத் தாங்கள் எண்ணுவதாகத் தெரிவித்தார்கள். (AIR 2004 SC 456) சட்ட வார்த்தைகளையும், அலங்கார நடையையும் உரித்து விட்டுப் பார்த்தால், அவர்கள் சொல்வதன் பொருள், ‘வேண்டும் என்று செய்யாமல் தெரியாமல் செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டாம்' என்பதுதான்

திருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல், (அதாவது ‘தெரியாமல்' )அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா? கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துக்களின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்து விட்டதாக எண்ண இயலவில்லை. “விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அலிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா? ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா?

எனவே கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ள உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் வரிகள் திருமாவளவனின் பேச்சுக்களுக்குப் பொருந்துவதாக இல்லை. அந்த வரிகளை சொல்லப்பட்ட சூழலில் இருந்து தனியே பிய்த்தெடுத்து (quoting out of context) திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காத தனது அரசின் செயலை நியாப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார் கருணாநிதி.

இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. முதலில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பைச் சுட்டி நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை எனப் பேசியவர், பின்னர் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, தேவையானால், ஒரு சட்டம் கொண்டு வரவும் தயார் என்கிறார். அதாவது பொடா சட்டத்தை விடவும் கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவும் அவர் தயார். ஒருகாலத்தில் பொடா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த அவர் இப்படித் தலைகீழான மாற்றத்திற்கும் தயாரானது எதன் பொருட்டு? விடை எல்லோரும் அறிந்தது. காங்கிரசை எப்படியாவது குளிர்வித்து கூட்டணியையும் அரசையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்.

இதில் இன்னொரு வேடிக்கை, திருமாவளவனது கூட்டத்திற்கு சில நாட்கள் முன்னதாக காவல் துறைத் தலைவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஆனால் முதல்வர், அப்படி நடவடிக்கை எடுக்கச் சட்டமே இல்லை என்பது போலப் பேசுகிறார். சட்டமே இல்லை என்றால் காவல்துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்வது எப்படி? சட்டம் இருக்கிறது என்றால், முதல்வர் அதைப் பயன்படுத்தத் தயங்குவது ஏன்?

நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் எனத் தவறாகப் பிரசாரம் செய்யப்படுகிறது என்றும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால் தமிழ்ச் செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியது எந்த அடிப்படையில்? அவர் ஒரு தமிழர் என்ற அடிப்படையிலா? அப்படியானால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட எத்தனையோ ஆயிரம் தமிழர்களுக்காக இரங்கல் தெரிவித்து கருணாநிதி இரங்கல் கவிதைகள் எழுதியிருக்கிறாரா? இந்திய அமைதிப்படையில் பணியாற்றி விடுதலைப்புலிகளுக்கு பலியான மேஜர் பரமேஸ்வரனுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? கதிர்காமர் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? மனிதாபிமான அடிப்படையில் என்றால் போரில் இறந்த எல்லா மனிதர்களுக்கும் அல்லவா அவர் இரங்கல் தெரிவித்திருந்திருக்க வேண்டும்?. தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம்

தமிழ்ச் செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப் படையில் இருந்த பலர் போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர். இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணின் இந்திய நாட்டைப் பிரதிநித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது..

தமிழ்ச் செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு. அவரது மரணம் விடுதலைப் புலிக்களுக்கு இழப்பு. அந்த இழப்புக்குக் கருணாநிதி அனுதாபப்படுகிறார் என்றால் அவர் யார் பக்கம்?

விடுதலைப் புலிகளை அவர் ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை. ஜெயலலிதா எதிர்க்கிறார். தான் எதிர்க்கிறேன் என்பதை, வாக்கு வங்கியை இழக்க நேரிடலாம் என்ற ‘ரிஸ்கை'யும் பொருட்படுத்தாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார். கருணாநிதியோ திமுகவோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?

20.2.2008 அன்று எழுதி, 3.3.2008ல் தினமணியில் வெளியான கட்டுரை

Sunday, January 13, 2008

திராவிடத்தின் எதிர்காலம்:

திராவிடம் என்பது இன்று மொழிகளை, இனத்தை, கட்சிகளைக் குறிக்கும் ஓர் பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது. ஆனால் அதை ஓர் பண்புத் தொகையாகவே நான் பார்க்கிறேன். இந்திய அரசியலில் அது சில பண்புகளை, இலட்சியங்களைக் குறித்த சொல்.

மையப்படுததப்பட்ட அரசியல் அதிகாரம், சுய அடையாளங்களைத் துறந்து ஓர் பொது அடையாளத்தை மேற்கொள்ள வற்புறுத்தும் கலாசார ஆதிக்கம் (hegemony), பிறப்பின் அடிப்படையில் ஒருவருக்கு சிறப்புகள் ஏற்படுகிறது, அதனால் அவர் அரசு, கல்வி, வழிபாடு ஆகியவற்றில் முன்னுரிமை பெற்றவராகிறார் என்ற கருத்தாக்கம் ஆகியவற்றை நிராகரித்து, அனைவருக்கும் சம உரிமை, சமநீதி கோரும் சமத்துவம், ஆகிய சிந்தனைகளின் அடையாளமாக உருவானது திராவிடம் என்ற கருத்தியல். சுருக்கமாச் சொன்னால் அது மேட்டுக்குடி மனோபாவத்திற்கு எதிரான, நிறுவனமயமான அதிகாரத்திற்கு எதிரான, சமூகத்தில் நிலவிவரும் மரபுகளுக்கெதிரான (anti-elite, anti establishment, anti status quo) ஓர் முற்போக்குச் சிந்தனை

தமிழர்களுக்கான தனி அடையாளம், அந்த அடையாளத்தின் பேரில் மரியாதை ஆகியவற்றிற்கான விழைவு, இவற்றால் உருவான சித்தாந்தம் அது

தமிழ், தமிழ்ச் சமூகம் என்பதைக் குறிக்க அரசியல் இயக்கங்களால் திராவிடம் என்ற சொல் நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், அது தமிழ்ச் சொல் அல்ல. ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத நூலில் (தந்திரவார்த்திகா) தமிழைக் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொல்லை பயனுக்குக் கொண்டு வந்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார். திருநெல்வேலி பிஷப்பாகப் பணியாற்றியவர். திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் என கமில் ஸ்வலபில் போனறவர்கள் கருதுகிறார்கள் என்றாலும், கால்டுவெல் தனது ஆராய்ச்சியின் மூலம் ஆணித்தரமாக நிறுவிய ஒரு கருத்துத் (தமிழ் என்ற திராவிடமொழி, பல இந்திய மொழிகளைப் போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது அல்ல, சம்ஸ்கிருதத்தைச் சார்ந்திராமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டது, மிகத் தொன்மையானது)தான் திராவிடம் என்ற அரசியல் கருத்தாக்கத்திற்கு ஆணிவேராகத் திகழ்ந்து வருகிறது.

வட இந்திய மொழிகள் சம்ஸ்கிருத்தின் வேரொற்றிக் கிளைத்தவை என்பதால் அந்த மொழி பேசும் வட இந்தியர்களின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்ப்பது, இந்திய தேசியம் என்ற கருத்தியல் சுய அடையாளங்களுக்கு மாற்றாக ஓர் பொது அடையாளத்தை வற்புறுத்துவதால் அந்தக் கருத்தியலை எதிர்ப்பது, வேதங்கள் சமஸ்கிருதத்தைக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதிக மரபை எதிர்ப்பது, வேதத்தையும் சமஸ்கிருத்தையும் ஆராதிக்கும் பிராமணர்களை எதிர்ப்பது, வேதத்தின் ஒரு அங்கமான புருஷ சுக்தம் (ரிக் வேதத்தின் 10 மண்டலத்தில் 90வது சுக்தம்) பிறப்பின் அடிப்படையில் ஜாதி பேதங்களை நியாயப்படுத்துவதால் வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பவை திராவிடம் என்ற கருத்தியலின் அடிப்படைகளாக இருந்தன. இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு ஆகியவை அதன் சாரம்.

காங்கிரஸ் கட்சி வட இந்தியத் தலைவர்களின் செல்வாக்கிலும், தமிழ்நாட்டில் அது ராஜாஜி என்ற பிராமணரின் பிடியிலும் சிக்குண்ட காலத்தில், காங்கிரசிலிருந்து வெளியேறி அதை எதிர்க்க முற்பட்ட பெரியாருக்கு இந்தக் கருத்தியல் ஏதுவாக இருந்தது. ஆனால் வாக்குகளைச் சார்ந்தியங்கும் அரசியலில் இந்தக் கருத்தியலைக் கொண்டு அவரால் பெரும் தாக்கததை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் இதைக் கொண்டு சமூகத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் கணிசமானவையும், முக்கியமானவையும் மட்டுமல்ல, நிலைத்த தன்மையைக் கொண்டவையும் கூட. அவை தமிழர்களின் அடையாளத்தையும் (identity) சுயமரியாதையையும் நிறுவின.

ஆனால் வாக்குகளைக் கோரி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பெறும் நாடாளுமன்ற அரசியல் முறையை ஏற்று, சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து மாறி அரசியல் கட்சிகளாகத் திராவிட இயக்கங்கள் செயல்படத் துவங்கியபோது, திராவிடம் என்ற சித்தாந்தம் நலிவடையத் தொடங்கியது..

மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் என்பதற்கு மாற்றாகத் தோன்றிய தனிநாடுக் கொள்கை கைவிடப்பட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற கோஷமாக மாறி இன்று மத்தியில் கூட்டணி அரசில் பங்கேற்பதுதான் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை என்றாகிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்த போது இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு இருந்த் அதிகாரங்களில் சில (உதாரணம் கல்வி) மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசும் அதிகாரம் செலுத்த வகைசெய்யும் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதுதான் நிகழ்ந்தது. இது வரை மாநிலங்களின் கையில் இருந்த விற்பனை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரியாக(VAT) மாறியதும் திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில்தான். குறைந்தபட்சம் கட்சிக்குள் கூட அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லை என்பதை திமுக அதிமுக ஆகிய கட்சிகளில் பார்க்கலாம். பரவலாக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல், ஒரு தனி நபரையோ, அல்லது அவரது குடும்பத்தினரையோ அச்சாகக் கொண்டு அவை மையப்படுத்தப்பட்டிருக்கின்றன.

வடவர் எதிர்ப்பு என்பது நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா என்று வட இந்தியர் ஒருவரின் தலைமைக்கு பகிரங்க அழைப்பு விடுத்த அரசியல் முழக்கத்தின் மூலம் சமரசத்திற்குள்ளானது. டால்மியா புரம் என ஒரு வட இந்தியரின் பெயரை தமிழ்நாட்டிலுள்ள கிராமம் ஒன்றிற்குச் சூட்டுவதை எதிர்த்துத் தண்டவாளத்தில் தலைவைக்கத் துணிந்த காலங்கள் பழங்கதையாகி, இன்று மகேந்திராசிட்டிகள் உருவாகிவிட்டன. நெய்வேலியில், தமிழ் மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்படும் நிலக்கரிக்கு மத்திய அரசு ராயல்டி வழங்க வேண்டும் எனப் போராடிப் பெற்றது ஒரு காலம். டாடாக்கள் டைடானியம் ஆக்சைட் ஆலை நிறுவ அரசே முன்னின்று நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதுதான் இன்றைய நிஜம்.

இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக ஆங்கில மோகத்திற்க இட்டுச் சென்றுவிட்டதையும் பார்க்கிறோம். பம்பாயும், கல்கத்தாவும், டிரிவாண்ட்ரமும், பெங்களூரும் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பே மதறாஸ் சென்னை ஆகிவிட்டது.ஆனால் திமுக தலைவரின் குடும்பத்தினர் அவரையும் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு தொலைக்காட்சி நிறுவனம் துவங்கியபோது அது சண்டிவியாகத்தான் மலர்ந்தது.

பிராமணப் பெண்ணாகப் பிறந்த ஒருவரை, நான் பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்த ஒருவரைத் தலைவியாக ஏற்றுக் கொண்டுவிட்டது ஒரு திராவிடக் கட்சி. இன்னொரு புறம், பிறப்பினால் ஒருவருக்குச் சிறப்புக்கள் சேர்வதில்லை என்று வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள், அரசியல் அனுபவம் இல்லாத் போதும் தங்கள் மகளையும், பேரனையும், மகனையும் கொல்லைப்புற வழியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ற சித்தாந்தம் அது தோன்றிய போதிருந்த வீரியத்தை காலப்போக்கில் வாக்கு வாங்கும் அரசியலின் நிர்பந்தங்களுக்குப் பணிந்து நீர்த்துவிட்டது.காந்தியம், மார்க்சியம் போன்ற சித்தாந்தங்கள் அரசு செய்ய அதிகாரம் பெற்ற போது சந்தித்த திரிபுகளையும், சமரசங்களையும் திராவிடமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

உலகமயமாக்கல் என்பது நம் தோள்களில் ஏறிக் குந்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் முன்னெப்போதையும் விட அதிகாரப் பரவாலாக்கல், சுய அடையாளங்களைப் பேணுதல், புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் உரிமைகளை மீட்டுத் தருதல் ஆகியவற்றிற்கு அதிகம் தேவை இருக்கிறது அதாவது திராவிடம் தன் வேர்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் திராவிடத்தின் எதிர்காலம் அது தன் கடந்த காலத்திற்குத் திரும்புவதைப் பொறுத்திருக்கிறது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை குடும்பத்தார் வசம் ஒப்படைப்பதன் பொருட்டு, ‘எப்படியாவது’ தக்கவைத்துக் கொள்வது என்ற ஆசைகள் அதனை ஓர் வீர்யமிக்க சமுக இயக்கமாகச் செயல்பட அனுமதிக்குமா என்பது பெரிய கேள்விக் குறி. இதற்கு விடைகாண்பதிலேயே அதன் எதிர்காலம் ம்றைந்திருக்கிறது.

தி சண்டே இந்தியன் பொங்கல் சிறப்பிதழுக்காக எழுதியது