Wednesday, September 26, 2007

சேது: 'பந்த்'தும் பாலமும்

சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காக திமுக பந்த் அறிவித்திருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத் துறையிடம் உள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.பாலு. தனது கட்சி அமைச்சர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றவில்லை என திமுகவே போராட்டம் நடத்துகிறதா? திட்டம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதில் வேறு மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஜனவரிக்கு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக திமுக கருதுமானால், அதற்கு மத்திய அரசு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் இந்தப் போராட்டம் மத்திய அரசை எதிர்த்தா? மத்திய அரசில் திமுகவும் அங்கம் வகிக்கிறதே? ஒருவேளை உச்சநீதி மன்றத்தின்
இடைக்காலத் தடையை எதிர்த்தா? இடைக்காலத்தடை ராமர் பாலம் பகுதிக்குத்தான், மற்றப் பகுதிகளில் பணியைத் தொடர தடை இல்லை எனத்தடை வழங்கப்பட்ட அன்று பாலு சொன்னாரே, அப்படியானால் மற்றப் பகுதிகளில் வேலையைத் தொடர்ந்து நடத்தித் தாமதத்தை தவிர்க்கலாமே? அல்லது இந்தப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தை நிர்பந்த்திப்பதற்கா? அல்லது அதை அச்சுறுத்துவதற்காகவா? வழக்கு நிலுவையில் இருக்கையில் இது போல் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

எப்படிப் பார்த்தாலும் திமுகவின் பந்த் சிரிப்பை வரவழைக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்கான அல்லது திசை திருப்புவதற்கான முயற்சி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி, என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றுண்டு.ராமன் போன்ற 'கற்பனைப் பாத்திரங்களுக்கு' அது போன்ற சிறப்பியல்புகள் இருக்கலாம். ஆனால் நம்மை ஆளும், வரலாற்று நாயகர்களான தலைவர்களிடம் அத்தகைய குணங்களை எதிர்பார்ப்பதற்கில்லை.

மத்திய அரசு, ராமன் என்றொரு நபர் வாழ்ந்ததாக வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று உச்ச நீதி மன்றத்தில் சொன்ன இரு நாள்களுக்குள், அந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதே தினம், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ், ராமன் இந்திய வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம் எனச் சொன்னார்.

'ராமர் பாலத்தை இடித்தே தீர வேண்டும் என வற்புறுத்தவில்லை, எந்தப் பாதை என்பது முக்கியமில்லை, வேறு பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை' என முதல்வர் கருணாநிதி சொல்லி 24 மணி நேரத்திற்குள், அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை வேறு பாதையில் நிறைவேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேட்டியளிக்கிறார். முதல்வர் மாற்றுப் பாதை குறித்து ஆட்சேபம் இல்லை எனச் சொல்லியிருக்கிறாரே எனச் செய்தியாளர்கள் கேட்ட போது, ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகிறீர்களா எனத் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டதால் கடுப்படைந்து அப்படிச் சொல்லியிருக்கிறார் (Asked about DMK president and Tamil Nadu Chief Minister M
Karunanidhi's remark that he was not averse to an alternative RPT alternative alignment, the Minister said his leader had made that remark "out
of anguish" when he was repeatedly asked whether he was bent upon "destroying" the Ram Sethu.-PTI sept 22)

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதே பாதையில் திட்டம் அமைய அனுமதி அளித்த பாஜக இப்போது பாதை மாற்றத்தை வற்புறுத்துகிறது

அரசியல் பாலம்

நம்முடைய தலைவர்கள் ஒரே நிலையை எடுத்துக் கொள்ள இயலாமல் போனதற்கு சேது சமுத்திரத் திட்டம் 'அரசியலாகி' விட்டதுதான் முக்கியக் காரணம்.பாக் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு, நம் அரசியல் தலைவர்களின் அடி மனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக் கொணர்ந்து விட்டது.

எந்த நேரத்திலும் நாடளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் என்ற சூழ்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலும் இன்னும் சில மாதங்களில் வர இருக்கிற நிலையில், ராமனிடம் தோற்றுப் போகக் காங்கிரஸ் தயாராக இல்லை. எதுக்கு ரிஸ்க் என்ற அச்சம் அதனை இயக்குகிறது.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கும் கட்சியை ஒருங்கிணைக்கவும், ஆர்.எஸ்.எஸ்.சுடன், நேர்து விட்ட விரிசலைச் சீர் செய்யவும் ராமர்பாலம் உதவாதா என பாஜக எண்ணுகிறது. மூன்றாவது அணி என்ற ஒன்று முளையிலேயே கருகிவிட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட்டணி அமைக்க இந்த ராமர் பாலம் உனர்வு ரீதியாகக் கை கொடுக்கலாம் என ஜெயலலிதா கருதுகிறார்.

திராவிட இயக்க பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற போது ராமன் மீது ஏற்பட்ட கசப்புணர்வை இத்தனை நாளைக்குப் பின் வெளியே கொட்டுகிறார் கலைஞர். ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர், என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்குத் தயாரா என்ற சவால்களும் அவரது ஆரம்ப திராவிடக் கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால் இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை.

மன்னராட்சியா?

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது சொந்த நம்பிக்கைகளை அரசு இயந்திரத்தின் மூலம் திணிப்பது என்பது மன்னராட்சிக்கால நடைமுறை. அதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை.மக்கள் ஆதாரமற்ற மூடத்தனமான நம்பிக்கைகளில் உழன்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் முன்னேற வேண்டுமானால் அவர்கள் அதை உதறிவிட்டு வரவேண்டும் எனக் கருதக் கருணாநிதிக்கு உரிமை உண்டு. அவர் அப்படிக் கருதும் பட்சத்தில் அது குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அவர் அதை அரசுப் பணத்தில் செய்ய இயலாது. தனது கட்சியின் மூலம் எந்தத் தடையுமில்லை. இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி என்பது போல் கட்சியில் ஒரு பகுத்தறிவாளர் அணியை அமைத்து அவர் பிரசாரம் செய்யலாம். பெரியார் போல் இன்று அவர் ஊர் ஊராகப் பயணம் செய்யக்கூட வேண்டியதில்லை. தனது கலைஞர் தொநலக்காட்சியில் தினம் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி நடத்தலாம். தனது வாக்கு வங்கி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை மக்கள் மூட நம்பிக்கையி
லிருந்து விடுபடுவதுதான் முக்கியம் என அவர் கருதுவாரேயானால் அவர் இதைச் செய்ய முன்வருவார். ஆனால் செய்ய முன் வருவாரா?

நம்பிக்கைகள்- நிரூபணங்கள்

ஒரு சமூகத்தில் நிலவுகிற நம்பிக்கைகள் முற்றிலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைவதில்லை. வரலாறு, தொன்மம், இலக்கியம்,அரசியல் நிலைப்பாடுகள், அறிவியல் காரணமாக அமையும் மனோபாவம் இவை எல்லாம் சேர்ந்துதான் ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அதிலும் எல்லா சமூகங்களிலும் கடவுள் நம்பிக்கை என்பது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலோ, அறிவியல் நிரூபணங்களின் அடிப்படையிலோ உருவாவதில்லை. அடுத்து என்னாகும் எனத் தெரியாத அநிச்சியமான நிலையில் வாழ்க்கை ஏற்படுத்தும் அச்சத்தை, எதிர்கொள்ளும் தைரியத்தை இறை நம்பிக்கை தருகிறது. Faith Heals Fear என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவம் உண்டு. அதனால்தான் இறைவன் மீது நம்பிக்கை கொள்பவர், வேறு எந்தச் சான்றுகளையும் தேடிச் செல்வதில்லை. மதம் ஒரு அபின் என்று கருத்துக்கு நம்மை இட்டும் செல்லும் முன் அதை விளக்கும் முகமாக, 'மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜந்துகளின் பெருமூச்சு, இதயம் இல்லாத உலகின் இதயம் (Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people.) என்று சொல்கிறார் மார்க்ஸ் (ஹெகலின் உரிமையின் தத்துவம் Philosophy of right என்ற நூல் பற்றிய முன்னுரை) வலியில் இருப்பவர் அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து கிடைத்தால் போதும் என எண்ணுவதைப் போல, அல்லது பழக்கத்தின் காரணமாக அதை நாடிப் போவது போலத்தான் பெரும்பாலானவர்களின் இறை நம்பிக்கைகள் துவங்குகின்றன.

எதையும் வரலாற்றின் வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகையில் மேற்குலகிலிருந்து நாம் கற்றுக் கொண்ட வழக்கம். கீழ்த் திசை நாடுகளில் வாழ்வை வரலாற்றை விட இலக்கியத்தில் பதிவு செய்வது என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது. வரலாறு என்பது ஆள்வோரைப் பற்றியும், அரசு நடவடிக்கைகளைப் பற்றியதுமாக இருந்திருக்கிறது என்பதையும், இலக்கியம் என்பது மக்களைப் பற்றியதாகவும், வாழ்க்கையைப் பற்றியதாகவும் இருந்திருக்கிறது என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

கருணாநிதி கண்ணகி மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு அடிப்படை வரலாறு அல்ல, இலக்கியம்தான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கண்ணகிக் கோட்டத்திற்குக் கல் கொண்டு வநத கனக விசயன், அதியமான், ஓளவை, பாரி, குமரிக் கண்டம், போன்ற பலநம்பிக்கைகளுக்கு ஆதாரம் இலக்கியம்தான், வரலாறு அல்ல.

இன்று சிறு தெய்வங்களாக வழிபடப்படும் பல கடவுளார்களை, சுடலைமாடன், மதுரை வீரன் போன்றவர்களை, வரலாற்றில் காணமுடியாது. ஆனால் அவர்களை நாட்டார் கதைப்பாடல்களில் காணலாம். இன்னும் சொல்லப்போனால், அண்மைக்காலமாக உலகெங்கும் வரலாறுகள், இந்த நாட்டார் இலக்கியங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. உதாரணம்:மருதநாயகம்.'ஆராய்ச்சி' வானமாமலை மக்களிடையே வழங்கி வந்த பாடல்
களைத் திரட்டி, தொகுத்து மதுரைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட கான்சாகிப் பாடல்கள்தான் மருதநாயக வரலாற்றின் ஆதாரம்.

ராமாயணம் வரலாறா?

ராமனின் கதையும் நாட்டார் வழக்கிலிருந்து பெறப்பட்டதுதான். இதைக் குறித்து பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் போன்றோர் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். (கம்பன் ஒரு புதிய பார்வை, வானதிப்பதிப்பக வெளியீடு) இந்திய மொழிகள் பலவற்றில் இராமாயணம் சிற்சில மாற்றங்களுடன் எழுதப்பட்டிருப்பது இன்னொரு ஆதாரம். பல்வேறு வகையான ராமாயணங்களைப் பற்றி ரிச்மேன் என்பவர் ஒரு நூலே எழுதியிருக்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பக வெளியீடாக அது வந்துள்ளது((Many Ramayanas, Richman, Oxford University Publications)

இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினரிடமும் இராமாயணம் காணப்படுகிறது. பெளத்தர்களின் ஜாதகக் கதையாக விவரிக்கப்படும் ராமாயணத்தில் தசரதர் அயோத்தியின் அரசர் அல்ல. வாரணசியின் அரசர். அதில் சீதை ராமனின் மனைவி மட்டுமல்ல, சகோதரியும் கூட. சத்திரியர்கள் தங்கள் இனத் தூய்மையைக் காக்க சகோதரிளை மணம் செய்து கொள்ளும் வழக்கம் சில சத்திரிய இனக்க்குழுக்களிடம் இருந்ததாக இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. இந்தக் கதையில் ராமர் ஒரு பெளத்தர். சமணர்களிடமும் ஒரு ராமாயணம் இருக்கிறது. அதில் ராமர் பிராமணீயத்திற்கு எதிரான சமணக்கருத்துக்களைப் பேசுகிறார். தெலுங்கு பிராமணப் பெண்களிடம் வழங்கும் ஒரு சீதாயணத்தை ரங்கநாயகியம்மா என்பவர் திரட்டித் தொகுத்திருக்கிறார். அது பெண்கள் பார்வையில் ராமாயணத்தை விவரிக்கிறது. அதில் இறுதி வெற்றி சீதைக்குத்தான்.

இப்படிப் பல வகையான ராமாயணங்கள் இருப்பதே, அவை நாட்டார் வழக்கிலிருந்து கிளைத்தவை என்பதைத்தான் சுட்டுகிறது. எங்கோ, எப்போதோ இருந்த ஒரு 'ஹீரோ'வின் கதைதான் பல மாற்றங்களுடன், பல கை மாறி இராமாயணமாக உருவாகியிருக்க வேண்டும். இனக்குழு சமூகங்கள் அரசுடமைச் சமூகங்களாக ஆன தருணத்தில், வாரிசுரிமையின் அடிப்படையில் அரசுரிமை தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கருத்தாக்கத்தையும், அதை ஒட்டிப் பெண் ஆண் ஒருவனது உடமை என்ற கருத்தையும், பரப்பவும், வற்புறுத்தவும் தோன்றிய கதையாக இராமாயணம் தோன்றி இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். தசரதனுக்குப் பல்லாயிரம் மனைவிகள் எனத் துவங்கும் கதை இராமனுக்கு ஒரு மனைவி எனத் தொடர்கிறது. இராமாயணத்தில் தண்டிக்கப்படுபவர்கள் மூவர். வாலி, சூர்ப்பனகை, இராவணன். மூவரும் அடுத்தவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஆசைப்பட்டவர்கள். ராவணன் மற்றப்படி உயர்வாகவே பேசப்படுகிறான். 'வாரணம் புகுந்த மார்பன், வரையினை எடுத்த தோளன், நாரத முனிக்கு நயம்பட உரைத்த நாவன், வீரமும் சங்கரன் கொடுத்த வாளும்' களத்திலே போட்டுவிட்டுத் தோற்றுத் திரும்பியதாக கம்பன் வர்ணிக்கிறான். அநேகமாக எல்லா ராமாயணங்களும் ராவணனை அறிவுத் தாகமும் தேடலும் கொண்டவனாகவே சித்தரிக்கின்றன. நாட்டார் வழக்கில் இருந்த ராமாயணங்கள் பின் அவரவர் தேவைக்கேற்ப, காலத்திற்கு ஏற்ப ஆங்காங்கு மாற்றம் கண்டிருக்கின்றன.

ராமன் பாலம் கட்டினானா?

ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினான் என்ற கலைஞரின் கேள்வி, இந்தியப் பாரம்பரிய அறிவாற்றல் மீது வீசப்பட்ட எள்ளல், ஏளனம். கல்லூரிகள் என்ற அமைப்பு ரீதியாகக் கல்வி பயிற்றுவிக்கிற முறை ஐரோப்பியர் வருகையை அடுத்து இந்தியாவில் அறிமுகமானது. அப்படி ஒரு முறை அறிமுகமாகும் முன் இந்தியர்கள் 'காட்டுமிராண்டி'களாக வாழ்ந்தார்கள் என்பது ஆங்கிலேயர்களின் எண்ணம். (உதாரணம் மெக்காலே). ஆனால் தமிழகம் எங்கும் நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரங்கள், வட இந்தியாவில் காணப்படும் மொகலாயர்களின் அரண்மனைகள், மராட்டியர்களின் கோட்டைகள், நாயக்கர்களின் மாளிகைகள், காவிரியின் குறுக்கே கல்லணை, யமுனையின் அருகே தாஜ்மகால், எல்லாம் ஆங்கிலேயர்கள்
வரும்முன்னரே கட்டப்பட்டுவிட்டன. பூம்புகாரின் நகரமைப்பை சிலப்பதிகாரம் விவரிக்கிறது (சிலப்பதிகாரம் கதைதான், வரலாறு அல்ல எனக் கலைஞர் வாதிட முற்படமாட்டார் என நம்புகிறேன்) கப்பல் கட்டுவது பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையில் காணப்படுகின்றன. இதைக் கட்டியவர்கள் எல்லாம் எந்தப் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து, சிவில் என்ஜினியரிங், டவுன் பிளானிங், ஷிப் பில்டிங் போன்ற படிப்புக்களைப் படித்தார்கள்? ஐரோப்பியர் வருகைக்கு முன் சிறிதும் பெரிதுமாக ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் வாள் போன்ற ஆயுதங்கள் உருக்கில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் மெட்டலர்ஜி படித்தவர்களால் தயாரிக்கப்பட்டதல்ல. ஐரோப்பியர் வருகைக்கு முன்னால் இந்தியாவில்
நடைமுறையில் இருந்து வந்த தொழில்நுட்பங்கள் குறித்து தர்மபால் என்பவர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

ராமன் பாலம் கட்டினான் என்று சொற்றொடருக்கு அவனே ஒவ்வொரு கல்லாக எடுத்துப் போட்டுக் கட்டினான் என்பதா பொருள்? ஸ்டாலின் மாநகாரட்சி மேயராக இருந்த போது மேம்பாலங்கள் கட்டினார் என்றால் அவர் பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டா கட்டினார்? ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினான் என்றால், ஷாஜஹானா கல்லை அடுக்கிச் சாந்து பூசினான்? திருமலை நாயக்கர் மதுரையில் மகால் கட்டினார் என்றால் அவரா ஒவ்வொரு தூணையும் அமைத்து அதைப் பளிங்கு போல் பூசினார்? நான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன். அடுத்த வாரம் புதுமனை புகு விழா என்று நாம் ஒருவரை அழைத்தால் அதற்கு நாமே செங்கல் அடுக்கிக் கட்டினோம் என்றா பொருள்? இங்கெல்லாம் கட்டுவித்தார்கள், கட்டுவித்தோம் எ
ன்பதுதான் கட்டினார்களாக கட்டினோமாக வழங்கப்படுகிறது.

ராமனும் பாலம் கட்டுவித்தான் என்றுதான் கம்பன் எழுதுகிறான். கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில், சேதுபந்தனப் படலம் என்று ஒரு பகுதியே இருக்கிறது. அதில் 'குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதீர்' என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்துவிடுகிறான் ('சென்றனன் இருக்கை நோக்கி') என்கிறார் கம்பன். (கம்ப ராமாயணம் -கம்பன் கழக வெளியீடு பக்கம் 1044)ராமனின் ஆணையை நிறைவேற்றி வைத்த பொறியாளர் ('வானரத் தச்சன்') நளன் என்பவர். பாலம் கட்டி முடித்தபின், சுக்ரீவனும் மற்றவர்களும் ராமனிடம் சென்று பாலம் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறார்கள்.பாலத்தின் அளவும் அப்போது ராமனிடம் சொல்லப்படுகிறது (யோசனை ஈண்டு ஒரு நூறு இவை ஐ இரண்டின் அகலம் அமைந்திடச் செய்
ததால் அணை' - கம்ப ராமாயணம் கம்பன் கழக வெளியீடு பக்கம் 1045) இப்படித்தான் ராமன் பாலம் கட்டினான், ஸ்டாலின் பாலம் கட்டியதைப் போல, கருணாநிதி சமத்துவபுரங்கள் கட்டியது போல.

ராமர் பாலம் எனப்படும் ஆடம் பாலம் ஏழு மணல்திட்டுக்களால் அமைந்த முப்பது கிலோமீட்டர் நீளமுள்ள பகுதி.இந்தத் திட்டுக்களின் கீழ் சுண்ணாம்புக் கற்களின் படுகை இருக்கிறது என நிலவியல் சர்வே (geologigal survey) ஆய்வுகள் சொல்கின்றன. அவை மியோசின் யுகத்தை (miocene era) சேர்ந்தவை என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தெரியகலா என்பவர் எழுதியுள்ள வரலாற்றுக்கு முந்திய இலங்கை ( The pre-history of Sri
Lanka by S.U.Deraniyagala) என்ற நூலிலும் இந்தத் தகவல் காணப்படுகிறது. மியோசின் யுகம் என்பது 1லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது..மியோ சின் என்ற கிரேக்கச் சொற்களுக்கு அருகில் அல்லாதது எனப் பொருள்.ராமர் திரேதா யுகத்தில், அதாவது லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதே காலகட்டத்தில்தான், (மியோசின்) இலங்கையில் மனிதர்கள் குடியேறியதன்
அடையாளங்கள் காணப்படுவதாக மானுடவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

ஆடம் பாலம் என்னும் ராமர் பாலம் ராமர் கட்டியதோ இல்லையோ, அது புராதனமானது என்பதை நிராகரிக்க இயலாது.

சுற்றுச் சூழல் ?

சேது சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கு மதவாதிகளிடமிருந்து மட்டுமல்ல சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. அப்போது இந்தத் திட்டத்தினால் சுற்றுச் சூழலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றி நாக்பூரில் உள்ள நீரி (National Environmental
Engineering Research Institute - NEERI) ஆய்ந்து ஓர் அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின்படி, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் போது, ஆடம் பாலம் எனப்படும் ராமர் பாலத்தில் ஆறு சதுர கி.மீ பரப்பு நிரந்திரமாகச் சேதமுறும் என்கிறது. அந்த அறிக்கையில் நடைமுறை சாத்தியமில்லாத பல யோசனைகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஒன்று: சேதுக்கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்கள் அங்கு வாழும் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு சேதம் விளைத்திடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சூழலியலில் பயிற்சி பெற்ற ஒரு நபர் கப்பலில் செல்ல வேண்டும், அவர் கடலைக்
கண்காணித்து வரவேண்டும் என்கிறது நீரி அறிக்கை. இது நடைமுறையில் சாத்தியமா? சரி இரவில் அல்லது மேகமூட்டம் மிகுந்த அவர் எப்படிக் கடலைக் கண்காணிப்பார்? எண்ணைக் கப்பல்கள் செல்லும் போது கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது. சரி தற்செயலாகவோ,ஒரு விபத்துப் போலோ எண்ணைக் கசிவு ஏற்பட்டால் என்ன தீர்வு என்பதை நீரி சொல்லவில்லை. ஓரிடத்தில், (பத்தி 6.1) கடலில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் 84.5 மில்லியன் கனமீட்டர் மண்ணில் ஒரு 'சிறு பகுதி' பாம்பன் தீவிலும் மற்றவை வங்கக் கடலிலுமாகக் கொட்டப்படும் என்று சொல்கிறது (கடலில் எவ்வளவு, தீவில் எவ்வளவு என்று சொல்லப்படவில்லை) ஆனால் இன்னொரு பகுதி ( பத்தி 6.2) அந்த மண் களிமண், மற்றும்
தூர் ஆக இருக்கும் என்பதால் கடலில் கொட்டப்படாது என்றும் சொல்கிறது. என்ன முரண்பாடு!

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

பாக் நிரிணைப் பகுதியை அகழ்ந்து கால்வாய் அமைப்பதனால் ஏற்படும் அரசியல், சூழலியல் பிரசினைகளைப் பார்க்கும் போது அந்தத் திட்டம் குறித்த மாற்றுச் சிந்தனைகள் அவசியமாகிறது. சேதுக்கால்வாய் திட்டம் அமைந்தாலும் அதன் வழியே பெரிய கப்பல்கள் செல்ல இயலாது. சிறிய கப்பல்களும் மெதுவாகச் செல்ல வேண்டியிருக்குமாதலால், ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் செல்ல இயலாது. எனவே அதனால் கிடைக்கும் பொருளாதார ஆதாயங்கள் பெரிதாக இராது.

எனவே கால்வாய்க்குப் பதில் பாரதியார் சொன்ன சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கிற யோசனையைப் பரிசீலிக்கலாம். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதி மீது ஓர் பாலம் அமைத்து இலங்கையை ஓர் சாலை மூலம் இணைக்கலாம். அந்த முயற்சிக்கு இத்தனை செலவும் ஆகாது. தக்க உயரத்தில் அமைத்தால் கீழே படகுகள் செல்லத் தடையிராது. மீன் பிடித் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது. ராமர் பாலத்தைக் காப்பாற்ற முடியும். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக் குறைவாகவே இருக்கும். கடல் மீது ஒரு பாலம் அமைப்பது சவாலான காரியமாக இருக்கலாம். ஆனால் இன்றுள்ள தொழில்நுட்பங்களைப் பார்க்கும் போது இது சாத்தியமற்ற காரியம் அல்ல.

இலங்கையும் இந்தியாவும் சாலை வழி இணைக்கப்படும் போது, தென்மாவட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரிக்கும். ஏற்கனவே அவர்கள் அண்மைக்காலம் வரை வள்ளம் எனப்படும் தோணிகள் மூலம் சரக்குகள் அனுப்பி இலங்கையோடு வாணிகம் செய்து கொண்டிருந்தவர்கள்தான்.இலங்கை வணிகர்களுக்கும் வாய்ப்புக்கள் பெருகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், அதற்குப் பின்னும் 15 -20 ஆண்டுகள் வரை, இலங்கைக்கு ரயில் மூலம் செல்லும் வசதியிருந்தது. அதாவது ராமேஸ்வரம் வரை ரயில். அங்கிருந்து தோணி. இரண்டுக்கும் சேர்த்து எழும்பூரிலேயே டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். சென்னையிலிருந்து செல்லும் அந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்க்கு 'போட் மெயில்' என்று கூட ஒரு பெயர் உண்டு.

ஆனால், அப்படி ஒரு பாலம் அமைந்தால், இன்றுள்ள சூழ்நிலையில், பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுமா எனக் கேள்வி எழலாம்.ஆனால் நம்மோடு பிறந்த நாளிலிருந்தே பகமை பாராட்டிவரும் பாகிஸ்தானுக்கே சாலை வழி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். வாகா போல இங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அத்தனை கடினமான விஷயம் அல்ல. இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை
வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?

புதிய சிந்தனைகள், புதிய பார்வைகள் தேவை.

Friday, September 21, 2007

இன்னும் ஒரு நூறாண்டு இரும்


சில மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் உள்ள சில உள்ளடங்கிய கிராமங்களுக்குப் போயிருந்தேன். முன்னாள் அமைச்சர் மாதவராவ் சிந்திய஡வின் தொகுதியான குணாவிலிருந்து இரண்டு மணி நேரம் போனால் தொட்டுவிடக்கூடிய கிராமங்கள். வறுமை கவ்விய கிராமங்கள். நான் போன ஒரு கிராமத்தில், ஊரிலிருந்த பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள், வயோதிகர்களைத் தவிர அத்தனை பேரும் கிராமத்தை விட்டு வெளியேறி, பக்கத்தூர்களில் வேலை தேடிப் போயிருந்தார்கள். வறுமை காரணமாக இடம் பெயர்வதைக் குறித்துத் தகவல் சேகரித்து அரசின் கவனத்திற்குக் ஦காண்டு போகும் நோக்கத்தோடுதான் அங்கு போயிருந்தோம்.


எங்கள் குழுவைப் பார்த்ததும் ஒரு கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து போட்டார்கள். மேலே ஒரு கம்பளியை விரித்தார்கள். கை குவித்து வணக்கம் சொன்னார்கள். அவர்களுக்குக் கால்சட்டை, முழுக்கைச் சட்டை அணிந்தவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகள், அல்லது போலீஸ்காரர்கள். ஒரு சிறுவன் என்னருகில் பச்சையாக ஒரு தாவரத்தை ஒரு கட்டு கொண்டு வந்து வைத்தான். என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அதைக் கட்டிலின் ஓரமாக வைத்து விட்டு நான் அவர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். ஓர் ஆட்டுக் குட்டி அந்தக் கட்டை முகர்ந்து பார்த்துக் ஦காண்டிருந்தது. சிறுவன் வந்து அதைச் செல்லமாக ஒரு தட்டுத் தட்டி விட்டு மறுபடியும் என் முன் அந்தத் தாவரக் கட்டை எடுத்து வைத்தான். " எதற்கு? என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அந்தச் சிறுவனுக்கு நான் கேட்டது புரியவில்லையோ அல்லது 'சர்க்கார்' ஆசாமிகளிடம் பேசக் கூடாது என்று வாயைக் கட்டி வைத்திருந்தார்களோ என்னவோ, அவன் பேசாமல் நகர்ந்து விட்டான்.


நான் திரு திருவென்று விழிப்பதைக் கண்ட, ஒரு இளம் பெண் வந்து அந்தச் செடிகளில் இருந்த துவரைக் காய்களைப் பிரித்து, அந்த மணிகளை வாயில் போட்டு மென்று காட்டினாள். ஏதோ சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. ஆனால் ஒருவித பச்சை மணத்தோடு இருந்த அந்த மணிகளை என்னால் ரசித்துச் சாப்பிடமுடியவில்லை. அதை என் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்ட இன்னொரு பெண்மணி அந்தத் தாவரக் கட்டை எடுத்துக் கொண்டு போனார். சற்று நேரம் கழித்துப் பார்க்கிறேன். சிறிது தொலைவில் அவர் உலர்ந்த சருகுகளையும் 'செத்தை'களையும் குவித்துக் கொண்டு அவற்றில் நெருப்பு மூட்டி அந்த மணிகளை வறுத்துக் கொண்டிருந்தார். நான் கிளம்பும் முன் பச்சை வாசனை நீக்கப்பட்டிருந்த மணிகளை ஒரு 'சொளகி'ல் வைத்து என்னிடம் நீட்டினார். செம்மண்ணோ, சாணியோ கொண்டு மெழுகப்பட்டிருந்த அந்த சிறிய முறம் கோலங்கள் வரையப்பட்டு அழகு செய்யப்பட்டிருந்தது.தாவரங்களிலிருந்து கிடைத்த வண்ணங்களைக் கொண்டு ஒரு கிளியும் அந்த முறத்தில் அமர்ந்திருந்தது.


அந்தக் கிராமத்திலிருந்து விடைபெறும் போது மனம் கரைந்து விட்டிருந்தது. என்ன மாதிரியான மனிதர்கள்! சோற்றுக்கு வழியில்லாமல் ஊரை விட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள்! முறத்தில் வந்தமர்ந்திருந்த அந்தப் பச்சைக் கிளி! அந்தக் கோலம்! வாழ்க்கை ஈரலைப் பிய்த்துத் தின்னும் தருணத்தில் கூட கைகள் கலை பேசுமா?


கி.ரா.வின் கதவு ஞாபகம் வந்தது. அப்பா வேலை தேடி மணிமுத்தாறு பக்கம் போயிருக்கிறார். வறுமைக்குப் பிறந்த குழந்தைகள் லட்சுமியும் சீனுவாசனும் எந்தக் கவலையுமின்றி கதவை பஸ்ஸாக பாவித்து விளையாடுகிறார்கள். அதைத் தீப்பெட்டிப் படம் கொண்டு அழகு படுத்துகிறார்கள். தீர்வை பாக்கிக்க்காக அந்தக் கதவு ஓர் நாள் 'ஜப்தி' செய்யப்படுகிறது, திறந்து கிடக்கும் வீட்டில் இருந்த கைக் குழந்தை குளிர்காற்றைத் தாங்கமுடியாமல் ஜுரம் கண்டு இறந்து போகிறது. ஒருநாள் லட்சுமியும் சீனிவாசனும் கதவை ஒருநாள் சாவடி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் கதவைக் 'கண்டெடுக்கிறார்கள்'. லட்சுமி தன் பாவடையால் அதில் படர்ந்திருந்த கரையான்களைத் துடைக்கிறாள். அவர்களின் கரங்கள் கதவை இறுகப் பற்றிக் கெ஡ண்டிருந்தன எனக் கதை முடிகிறது.


வாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுத்த கதை. இந்தக் கதையைப் படித்து நெகிழ்ந்த தருணத்தில் வாய்விட்டு விசும்பி அழுதிருக்கிறேன். மறுபடியும் மனதில் அந்தக் கதவு மத்தியப்பிரதேசத்தில் திறந்து மூடியது.


கி.ரா 1958ல் தனது 'மாயமானுடன்'தமிழ்ச் சிறுகதை உலகில் அடியெடுத்து வைத்த போது, அதை ஒர் பொற்காலம் கடந்து போயிருந்தது. எனினும் அந்தப் பொற்காலத்தின் நிழல்கள் அங்கு படிந்து கிடந்தன. அவர் முன் ஏராளாமான முன்னுதாரணங்கள் இறைந்து கிடந்தன. புதுமைப்பித்தன், கல்கி என்ற இரண்டு பிரம்மராக்ஷசன்கள் அழுத்தமாகத் தங்கள் தடங்களைப் பதித்துக் கடந்து போயிருந்தார்கள்.


மணிக்கொடிக்காரர்கள் தாங்கிப் பிடித்த ஐரோப்பியப் பாணியில் அமைந்த நவீன வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளையே 'இலக்கியத் தரம்' வாய்ந்ததாக அப்போதும் விமர்சகர்கள் மெச்சிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இந்தியச் சுதந்திர அரசின் முதல் பத்தாண்டுகளில், விடுதலை நாள்களில் பீறிட்டுப் பெருகிய லட்சியங்கள் வற்றிப் போக, இடதுசாரிகளின் சோஷலிச யதார்த்தம் கவனமும் வரவேற்பும் பெறத்துவங்கியிருந்தன.
ஆனால், பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்ற, நகர்மயமான, நடுத்தர வர்க்க, பிராமண, இளைஞர்களினால் உந்தப்பட்ட மணிக்கொடியினருக்கு, கிராமங்களின் ஆன்மாவை, அதிலும் ஏழைமக்களின் மன உணர்வுகள், பரிச்யசமாகியிருக்கவில்லை. அதை, அவர்கள் தங்கள் கற்பனைக் குதிரைகளில் அமர்ந்து, தங்களது பொருளாதாரக் கோணத்தில் மட்டுமே பார்த்து, தங்கள் இஷ்டம் போல் புரிந்து கொண்டு, கதை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பிரசவத்திற்கு மனைவி அவளது தாய் வீடு சென்றிருக்கும் வேளையில், விரக உணர்வில் தவிக்கும் ஒருவன் கீரை விற்க வந்த இளம் பெண்ணை இரவில் உறவுக்கு வருமாறு அழைப்பதைக் கருவாகக் கொண்ட பிச்சமூர்த்தியின் கதை ஒன்றை அவரது பதினெட்டாம் பெருக்குக் கதைத் தொகுதியில் பார்க்கலாம். காய்கறி விற்பவளாக இருந்தால், அவள் காசு கொடுத்தால் வந்துவிடுவாளா? ஏழைகளாக இருந்தால் என்ன, அவர்களுக்கு ஒழுக்க நெறிகள், அற உணர்வுகள் இருக்காதா? கணவனையும் குழந்தைகளையும், குடும்பத்தாரையும் காப்பாற்ற நாலைந்து வீடுகளில் உடல் நோக உழைக்கிற பெண்கள் இப்போதும் சென்னை நகரச் சேரிகளில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொன்னகரம் படைக்கப் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்த பெண் வேறு மாதிரி.


இன்னொரு புறம், மார்க்க்சீயர்களின் முற்போக்கு இலக்கியம், கட்சியின் manifestoவிற்கு எழுதப்பட்ட உரைகளாகவும் உதாரணங்களாகவும் அமைந்திருந்ததன. அவற்றில் நாம் சந்திக்க நேர்ந்த ஏழைகள் வர்க்கச் சுரண்டலுக்கு உள்ளான மனிதர்களாக மட்டும், ஓர் ஒற்றைப் பரிணாமத்தில் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் வாழ்க்கை எப்போதும் அத்தனை எளிமையானதாக இருந்ததில்லை. காலம் காலமாக அந்த எளிய மக்கள் சுரண்டல்களையும், வறுமையையும் மீறி, தங்கள் படைப்பூக்கத்தால், நாட்டார் இலக்கியத்தையும், கலையையும், செழுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் தங்கள் பேச்சினிடையே வழங்கி வரும் சொலவடைகளே அவர்களது கற்பனைத் திறனுக்கும், சொல்லாட்சிக்கும் ஓர் சான்று.


இந்த இரண்டு தரப்பின் சாரங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டவராக எழுத வருகிறார் கி.ரா. வடிவ அமைதியை வற்புறுத்தும் கட்சி முன் நவக்கும் ஐரோப்பிய வடிவத்தை முற்றிலும் நிராகரித்துவிடாமல், அதை வாய்மொழி வழக்கில் உள்ள, கதை 'சொல்லும்' மரபோடு இணக்கமாகப் பிநணைத்துத் தனக்கென ஒரு வடிவத்தைத் தேர்தெடுத்துக் கொள்கிறார். அந்த வடிவத்திற்குள், அவர் அறிந்த வாழ்க்கையை, அதைச் சுமக்கும் மனிதர்களை முன்நிறுத்தி அவர்கள் வழியே நமக்கு அளிக்கிறார். அதனால் அவை வெறும் கலைப்படைப்பாகவோ அல்லது பிரச்சாரமாகவோ இல்லாமல், ஒரு வாழ்க்கைச் சித்திரமாக மலர்கிறது.


கி.ராவின் கதை மாந்தர்கள் கடுமையான சுரண்டலுக்கும், வறுமைக்கும் உள்ளானவர்கள். ஆனாலும் அவர் கதைகளில் புலம்பலைப் பார்க்க முடியாது. கதவு ஓர் உதாரணம். அவரது அப்புராணி நாயக்கர் ஓர் உதாரணம். 'கனிவு' கெண்டையா ஒரு உதாரணம். மாயமானின் நாயக்கர் ஒரு உதாரணம்.
உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல், தில்லியில் மழைக்கு முந்திய புழுக்கம் நிறைந்த இரவில், நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகங்களைப் புரட்டினால் இன்னும் நூறு சொல்வேன்.


அவரது மொழியைப் பற்றி, அவரது உவமைகளைப் பற்றியும் நூறு சொல்லலாம்(பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரையின் மீது பீச்சியது போன்ற குறட்டை ஒலி, வெண்டைப் பிஞ்சின் மேற்புறம் போல மினுமினுக்கும் விடலைப்பருவத்து இளைஞனின் மீசை) ஆனால் அவரது மனிதர்கள் எனக்கு முக்கியமானவர்கள். அவர்கள் சொல்லும் வாழ்க்கை முக்கியமானது. இன்று எழுதவருகிறவன் இந்த மனிதர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது,


85 வயதா?


இன்னும் ஒரு நூறாண்டு இரும்.
கி.ராவின் 85ம் பிறந்தநாளை ஒட்டி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள காலத்தை வென்ற கதை சொல்லி என்ற நூலுக்காக எழுதியது

Thursday, September 20, 2007

வாழ்க வசவாளர்கள்!

வசவாளர்களுக்கு நன்றி.

கடந்த பதிவில் நான் என் கருத்தாக எஅதையும் எழுதியிருக்கவில்லை.(பின்னூட்ட templateஆக எழுதப்பட்டிருந்த 'மொக்கை'யைத் தவிர.) நான் செய்திருந்ததெல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருந்த செய்தியை மொழி பெயர்த்திருந்தது மட்டுமே. அதை சரிபார்த்துக்கொள்ள உதவியாக செய்தியின் மூலத்தின் URLஐயும் வெளியிட்டிருந்தேன்.செய்தியின் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தேன்.

அப்படியிருந்தும் அநேகமாக அத்தனை கணைகளும் என்னை நோக்கி எய்யப்பட்டிருக்கின்றன. செய்தி பொய்யானது என்றோ, மிகையானது என்றோ, கருதுகிறவர்கள் அதை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியாவை நோக்கி அல்லவா தங்களது சினத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மொழிபெயர்த்தவனைத் தாக்க முற்படுவதேன்?

ஒருவேளை இந்தச் செய்தியே கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கக் கூடாது எனக் கருதுகிறார்களோ? . டைம்ஸ் ஆப் இந்தியா இந்தியாவில், விற்பனையில், ஆங்கில தினசரிகளில் முதலிடத்தில் இருக்கும் நாளிதழ்,(7.9 மில்லியன் பிரதிகள்) உலகில் உள்ள பெரிய தினசரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய இதழ் (24 வது இடம்) கருத்துலகில், கொள்கை வகுப்பவர்களிடத்தில், படித்த நகர்ப்புற மத்திய தர வர்க்கத்திடையே (குறிப்பாக வட இந்தியாவில்) தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட இதழ். என்றாலும் இந்தப் பத்திரிகை தமிழ்நாட்டில் அதிகம் படிக்கப்படுவதில்லை. இந்தச் செய்தி தமிழ்ப் பதிவர்களில் பலருக்குக் கவலையும், சிலருக்கு சிந்தனையையும் தரக்கூடும், எனவே அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என நான் கருதி மொழி பெயர்த்து வெளியிட்டேன். அதற்கு இத்தனை மொத்தா?

யாரும் பத்திரிகைகளில் படிக்கும் எந்த செய்தியையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.(ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்பது என் கருத்து) அதை அவரவர்களிடம் இருக்கும் முன் கூட்டிய தீர்மானங்களோடுதான் அணுகுகிறார்கள். இந்தச் செய்தியையே எத்தனை விதமான கோணத்தில் அணுகலாம் எனச் சூசகமாகக் கோடி காட்ட இடப்பட்டதுதான் அந்த 'மொக்கை'ப் பின்னூட்ட டெம்பிளேட்.

இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுகள் அதை மெய்ப்பித்து வருகின்றன. அங்கு காந்தியை அடி முட்டாள் என்று எழுதலாம். இங்கிருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால்தான் அண்ணா(துரை) திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார் என்னும் பொருள்பட (மூலநூலைக் குறிப்பிடாமல்) மேற்கோளிடலாம். பாரதியை, வள்ளலாரை, இன்றுள்ள அரசியல் தலைவர்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளை மலத்தோடு ஒப்பிடும் மேற்கோளைப் பதிவு செய்யலாம்.எவரையும் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டலாம். பெண்களை மலினப்படுத்தும் பாலுறவுச் சொற்களை இறைக்கலாம். என் தாயைப் புணருவேன் என்று சொன்னது கூட எனக்கு வருத்தமில்லை, ஆனால் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டானே என்று அங்கலாய்க்கலாம். விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். வதந்தியின் அடிப்படையில் ஊகத்தின் பேரில் இன்னார் இந்தப் பட்டறையில் கலந்து கொள்கிறார் எனத் தனிமனிதத் தாக்குதல் நடத்தலாம். பெண்பதிவர்கள் படத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் பின்னூட்டம் போடலாம். ஆனால்-

ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!

வாழ்க பதிவுலகின் கட்டற்ற சுதந்திரம்!

Wednesday, September 19, 2007

விடுதலைப் புலிகளிடையே பிளவு?


இவை என்னுடைய கற்பனை அல்ல. இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்திருக்கும் செய்தியின் தமிழ் வடிவம் இது.


தமிழ் நாட்டுத் திராவிடத் தலைவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அழியாத தாக்கம் ஏற்படுத்தியிருப்பது போல் தெரிகிறது. அதனால் விடுதலைப் புலிகளிடமும் வாரிசு அரசியல் தொற்றிக் கொள்வது ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை.தனது மகனும், ஏரோநாட்டிகல் பொறியாளருமான சார்ல்ஸ் அந்தோனி சீலன் வசம் தனது பயங்கரவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க பிரபாகரன் ஆர்வமாயிருக்கிறார்.
ஆனால் தனது வாரிசாக தன்னுடைய 22 வயது மகனுக்கு முடிசூட்டும் பிரபகரனது திட்டம் குறித்து விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களிடம் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
ஏரோநாடிகல் பொறியியலில் பட்டம் பெற்று, அயர்லாந்திலிருந்து 2006ம் ஆண்டு திரும்பிய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி, வான் படை, கணினித்துறை இரண்டிற்கும் தலைமை வகிக்கிறார்.மூன்று மாதங்களுக்கு முன் கொழும்பின் மீது இரவில் சென்று தாக்கி, இலங்கை இராணுவத்திற்குத் திகைப்பை ஏற்படுத்திய வான்படையை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது.
சார்லஸ் அந்தோனி தவிர, 21 வயது மகள் துவாரகா, 11 வயது மகன் பாலச்சந்திரன் என பிரபாகரனுக்கு இன்னும் இரு குழந்தைகள் உண்டு. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
விடுதலைப் புலி இயக்கம் கண்டுவரும் மோசமான அதிகாரப் போட்டி, இதுநாள் வரை சர்ச்சைக்கு இடமில்லாது இருந்த பிரபாகரனின் தலைமையை, பலவீனப்படுத்தத் துவங்கியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கபூரில் உள்ள பயங்கரவாதத்திற்கெதிரான சிந்தனை அரங்கான, அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் குறித்த ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச மையம், அண்மையில் வெளியிட்டுள்ள அதன் ஆய்வறிக்கையில், விடுதலைப்புலிகள் பெரிய அளிவில் பிளவுபடுவதற்குத் தெளிவான சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
"பிரபாகரன் அடுத்த தலைமுறைப் புலிகளை வளர்த்தெடுப்பதில் முனைந்துள்ளார் என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. அவரது இந்தச் செயல், மூத்த படைவீரர்களிடம் மனத்தாங்கலை ஏற்படுத்தக் கூடும்" என்கிறது அந்த அறிக்கை. இதுநாள் வரை பெரும் பிளவுகளையும் மீறித் தாக்குப் பிடித்த ஒரே தமிழ் பயங்கரவாத அமைப்பு விடுதலைப் புலிகள்தான்.ஆனால் இப்போது பிரபாகரனின் வசீகரம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் குன்றி வருவதாகத் தெரிகிறது.
கிளிநொச்சியில் உள்ள வட்டக்காச்சியில், விடுதலைப்புலிகளின் எட்டு வரி வசூலிப்பாளர்கள், அதன் தலைமையால் தூக்கிலிடப்பட்டதாக கடந்த மாதம், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது.புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் தலைவரும், அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் அதிகாரம் மிக்கவருமான பொட்டு அம்மன் அவர்கள் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இயக்கத்தின் பணத்தை விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தங்கள் சொந்தக் கரியங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக சிவிலியன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமைச்சகம் எழுதியிருந்தது. பொட்டு அம்மனுக்கும், எஸ்.பி.தமிழ்ச் செல்வனுக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும், விடுதலைப் புலிகளின் கடற்படைத் தலைவர் கர்னல். சூசை, " அகற்றப்பட்டதை"யும் அமைச்சகம் வெளிப்படுத்தியிருந்தது.
பிரபாகரன் தன் மகனை வான்படைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தது குறித்து சில படைத்தலைவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்பது விடுதலைப்புளிகளிடம் காணப்படும் அதிருப்திக்குக் காரணமாக இருக்கலாம் என சிங்கப்பூர் சிந்தனை அரங்கு கருதுகிறது. 52 வயதாகும் பிரபாகரன், தனது மகனை மேலே கொண்டுவருவதில் ஆர்வம் காட்ட, இரத்த அழுத்தம், சக்கரை வியாதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள், அவரது உடலின் ஆரொக்கியம் மிகச் சிறப்பாக இல்லாத காரணமாக இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.செய்தி மூலம்: http://timesofindia.indiatimes.com/World/Struggle_in_LTTE_over_successor/articleshow/2381716.cms

பின்னூட்டம் போடுபவர்களுக்கு வசதியாக கீழே சில templateகள் தரப்பட்டிருக்கின்றன. அவரவர் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்:


, இதெல்லாம் 'ரா' விடும் சரடு

ஆங்! இது சிங்களப் பேரின வாத அரசு பரப்பிவரும் பொய்


து அண்மைக்காலமாக அடி வாங்கி வரும் விடுதலைப் புலிகள் கவனத்தைத் திசைதிருப்ப மேற்கொண்டிருக்கும் உத்தி


ஈஈ ஜோக்கு நல்லா இருந்திச்சு


னக்கு எத்தனைவாட்டி சொன்னாலும் புரியாதா? அடங்குய்யா!


கூம், நம்பறமாதிரி இல்லை


ங்கட தலைவர் ஒரு நுளம்பைக் காட்டி இதுதான் இனி உங்கட தல எண்டு சொன்னாலும் கேட்டுக்குவம்தானே.நாங்க என்ன செய்ய வேண்டுமெண்டு யாரும் இங்கனெ கதைக்க வேண்டா


ய்! பொத்திக்கிட்டுப் போடா!


யமில்லை, இது பாப்பானுங்க சதி


ன்றும் சொல்வதற்கு இல்லை, உண்மையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்


கோ! அப்படியா சேதி


ஓளவியம் பேசேல்

Tuesday, September 11, 2007

சந்தை தின்னும் ஊடகங்கள்

திடீரென்று அந்த அரசுப் பள்ளியின் முன் மக்கள் குவிந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. யாரோ ஒருவன் பள்ளியின் மீது கல் ஒன்றை வீசினான். அவ்வளவுதான் கட்டவிழத்துக் கொண்ட வன்முறை, தீப்பிடித்தாற்போல் மளமளவென்று அந்தப் பகுதி முழுதும் பரவியது. ஒரு மாருதி ஜிப்சி எரிக்கப்பட்டது. பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தத் திடீர் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன?
அன்று மதியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி. அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்து அவர்களை நிர்வாணமாகப் படமெடுக்கிறார். பின் அந்தப் படத்தை அவர்களிடம் காண்பித்து, அவர்களை பிளாக்மெயில் செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார் என்றது செய்தி. சாபரி சூட் அணிந்து ஒரு வர்த்தகர் போல் தோற்றம் தரும் ஒரு நடுவயதுக்காரருடன் ஒரு இளம் பெண்ணை அந்த ஆசிரியை அனுப்பிவைப்பது போலவும், அந்தப் பெண்ணிடம் அவர் 4000 ரூபாய் பணம் கொடுப்பது போலவும் காட்சிகள் திரையில் ஓடின. இந்தக் காட்சிகள் சம்பந்தப்பட்டவர்கள் அறியாமல் மறைவாகப் பதிவு செய்யப்பட்டவை (Sting operation) என்று பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது அந்த தொலைக்காட்சி. ஆனால்-
அத்தனையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம்!
பொது அமைதிக்குக் குந்தகமும், பொதுச் சொத்துக்களுக்கு இத்தனை நாசமும் விளைவித்த, இரண்டு பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராத அவமானத்தையும் ஏற்படுத்தித் தந்த இந்தக் காட்சிகள் 'செட்-அப்' செய்யப்பட்டவை. அதில் விலை பேசப்பட்டவராகத் தோன்றிய இளம் பெண் மாணவி அல்ல. அந்த ஆசிரியையும் இது போன்ற செயல்களைச் செய்பவர் அல்ல. இப்படி போலியாக ஒரு செய்தியை உருவாக்கி, ஒளிபரப்பக் காரணம், அந்த இரு பெண்களில் ஒருவரோடு இருந்த தனிப்பட்ட விரோதம்தான்.
உமா குரானா,அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை. பள்ளி வேலை போக, செயற்கைக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். அவருக்கும் வீரேந்திர அரோரா என்பவருக்கும் இடையே, கொடுக்கல் வாங்கலில் ஏதோ தகராறு. வீரேந்திர அரோரா நடத்தி வந்த சிட்பண்ட் நிறுவனத்தில் சீட்டு எடுத்த வகையில் உமா அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.(இதை உமா மறுக்கிறார். அரோரா வேறு ஒருவருக்குப் பணம் கொடுக்கும் போது தான் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்ததாகச் சொல்கிறார்) இதன் காரணமாக இருவருக்குமிடையே விரோதம் இருந்து வந்தது. ஆகஸ்ட் இறுதி நாள்களில் வீரேந்தர் தன்னுடைய நண்பரான பிரகாஷ் சிங்கைத் தொடர்பு கொண்டார்
பிரகாஷ் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த இளம் பத்திரிகையாளர். இருவரும் சேர்ந்து உமா குரானவை 'மாட்டி விட' ஒரு திட்டம் தீட்டினர். சிங் உமாவிடம் கை பேசியில், வேறு ஒரு பெயரில், ஒரு வர்த்தகர் பேசுவது போல பேசினார். அவரது நகைக்கடைக்குத் தன்னால் நிறைய ஆர்டர்கள் வாங்கித் தரமுடியும் என்றும் அது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். பெரிய அளவில் ஆர்டர் கொடுக்கிற பிசினஸ்மேன்கள், பெண்களை அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள் என்றும், அதற்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சொன்னார். ஆனால் உமா அது தன்னால் முடியாது எனத் தெரிவித்து விட்டார். "நீங்கள் ஒரு பெண்கள் பள்ளியில்தானே பணியாற்றுகிறீர்கள், அங்கு யாரையாவது 'கன்வின்ஸ்' செய்து பாருங்கள் என்றும் சிங் யோசனை கொடுத்திருக்கிறார். ஆனால் உமா அநதப் பேச்சே வேண்டாம் என மறுத்து விட்டார்.ஏமாற்றமடைந்த சிங் தன்னுடைய நாடகத்திற்கு ஆள் தேட ஆரம்பித்தார். பத்திரிகையாளராக வேண்டும் என்ற தாகத்தோடு, ஆனால் சரியான வேலை கிடைக்காமல், ஒரு சிறு பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஷ்மியின் ஞாபகம் வந்தது. சக பத்திரிகையாளர் என்ற முறையில் அவருக்கு ராஷ்மியோடு அறிமுகம் ஏற்பட்டிருந்தது. ராஷ்மியை சந்தித்துப் பேசினார். ராஷ்மியிடம் தனது sting operationக்கு உதவ வேண்டும் என்றும், அது முடிந்தவுடன், தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சியிலேயே உதவிக் குற்றவியல் செய்தியாளராக வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். ஆனால் ராஷ்மியிடம், உமாவிற்கும், வீரேந்தருக்கும் இருந்து வரும் பகை பற்றி ஏதும் சொல்லவில்லை. ஒரு ஆசிரியையே மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் அக்ரமம் நடந்து வருவதாகவும், அதை அம்பலப்படுத்த தான் மேற்கொள்ளும் நல்ல காரியத்திற்கு உதவ வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
பின் உமாவைத் தொடர்பு கொண்டார். ஆர்டர்கள் பிடித்துத் தருவதில் 'திறமையுள்ள' ஒரு பெண்ணைத் தான் தேடிக் கண்டிருப்பதாகவும் அவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என்று உமா சொன்னபோது நீங்கள் எதற்கும் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுங்களேன் என்று யோச்னை கொடுத்திருக்கிறார். ஜூலை 19ம் தேதி, தன்னை ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் அந்தப் பெண்ணை தன்னை சந்திக்க அழைத்து வருமாறு சொன்னார் உமா. ராஷ்மியையும் அழைத்துக் கொண்டு அந்த வணிக வளாகத்திற்குச் சென்றார் சிங். முதலி ராஷ்மி மட்டும் தனியாகச் சென்று உமாவை சந்த்தித்தார், அவர்கள் இருவரும் உரையாடுவது போன்ற காட்சி உமாவிற்குத் தெரியாமல் பதிவு செய்யபட்டது. பின் சிங் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என சிங்கிடம் சொன்னார் உமா.பின் ராஷ்மி சிங்குடன் காரில் ஏறிக் கொண்டார். அந்தக் காட்சியும் பதிவு செய்யப்பட்டது. பின் சிங் ராஷ்மியிடம் 4000 ரூபாய் கொடுக்கப்படுவது போல் ஒரு காட்சி பதிவு செய்யப்பட்டது. அவ்வளவுதான், இந்தக் காட்சிகளையும், ' பிசினசிற்கு ஏற்பாடு செய்யுங்கள்' 'நீங்கள் இந்த இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்' என்பது போன்ற பொதுவான வாக்கியங்கள் கொண்ட தொலைபேசி உரையாடல்களையும் வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான 'செய்தி' தயாரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சிங் வேலை பார்த்து வந்த தொலைக்காட்சி இதனை ஒளிபரப்ப மறுத்துவிட்டது. செய்தியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக அது கருதியது. அந்த நிறுவனத்தில் ஒரு பயிற்சி செய்தியாளராகத்தான் (intern) இருந்தார் சிங். சில நாட்களில் வேறு ஒரு தொலைக்காட்சியில் வேலை தேடிக் கொண்டு நகர்ந்த சிங், இந்த ஒளிநாடாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். (இது தொலைக்காட்சி உலகில் பெரும் குற்றம்.) அந்த புதிய தொலைக்காட்சியில் தன்னுடைய 'நாடகத்தை' ஒளிபர்ப்பினார். அவ்வளவுதான் ஊர் தீப்பிடித்துக் கொண்டது.
சட்டம் ஒழுங்குப் பிரசினை ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை உமாவைக் கைது செய்தது. அவர்மீது விபசாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அரசு அவரை வேலையிலிருந்து நீக்கியது. உமா காவலில் இருந்த போது அவரது வீட்டுக் கதவை உடைத்து காவல் துறை சோதனையிட்டது. டிவிடிகளும், ஆவணங்களும் கிடைத்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த டிவிடிகளைப் போட்டுப் பார்த்த போது அவை சினிமாப்படங்களும், கார்ட்டூன் படங்கலும் எனத் தெரிந்தது. விலைமாதுவாகத் தோன்றியவர் மாணவிதானா என உறுதி செய்து கொள்ள பள்ளிக்குச் சென்றது காவல்துறை. அவர் மாணவி அல்ல எனத் தெரியவந்ததும் அதன் புருவங்கள் உயர்ந்தன. சிங்கை அந்தப் பெண், ராஷ்மியை விசாரணைக்கு அழைத்து வருமாறு கோரியது. அவள் விலைமாது. இப்போது எங்கிருக்கிறாள் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சிங். காவல்துறை தேட ஆரம்பித்தது. தான் தேடப்படுவது தெரிந்ததும் ராஷ்மி நீதிமன்றத்தி சரணடைந்தார். அவர் தனக்கும் சிங்கிற்குமிடையே நடந்த உரையாடலைத் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். காவல்துறை சிங்கை 'எடிட்' செய்யப்படாத ஒரிஜினல் ஒளிநாடாக்களைத் தரும்படி கோரியது. அவர் தயங்கினார். காவல்துறை அவற்றைக் கைப்ப்பற்றிப் போட்டுப் பார்த்த போது உண்மைகள் தெரிய வந்தன. சிங் கைது செய்ய்ப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரனையின் போது கண்ணீர் விட்டுக் கலங்கிய சிங், தான் செய்வது தவறு என்று தெரிந்தும், இதன் மூலம் தனது செய்தியாளர் தொழிலில் ஒரு உயர்ந்த இடத்தை அடையலாம் என எண்ணி அதைச் செய்ய முனைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் போலி நாடகம், தில்லி ஊடக உலகில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒரு ஊடகத்தைத் தனது சொந்தப் பகைகளைக் கணக்குத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்வது சரிதானா என்பது ஒரு கேள்வி. தொலைக்காட்சி உலகில் ஏற்பட்டுள்ள போட்டி தொலைக்காட்சிகளை எங்கு இட்டுச் செல்கின்றன? என்ற கவலை தோய்ந்த கேள்வி மற்றொன்று. ஊடகத் துறையில் உள்ள இளம் பத்திரிகையாளர்களது நிலையை, ஊடகத் துறையில் வேலை கிடைப்பதற்கும், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதில் முன்னேறுவதற்கும் இளைஞர்களுக்குள்ள நெருக்கடிகளை, சிங், ராஷ்மி இருவரது நிலையும் உதாரணிக்கின்றன. 'சாதனை' புரியவில்லையெனில் இங்கு காணாமல் போய்விடுவோம் என்ற பதற்றம் அவர்களைப் பற்றியிருப்பதையும், அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நெருக்கடிக்கு அவர்கள் உள்ளாகியிருப்பதைப் பற்றியும் சிலர் பேசுகிறார்கள்.
காயங்களும் நியாயங்களும் எப்படி இருந்தாலும் சந்தை ஊடகங்களைத் மெல்ல மெல்லத் தின்னத் துவங்கியிருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்,
* எதையும் தாங்கும் இதயம் இருந்தால் சந்தையின் நிர்பந்தத்திற்குத் தன்னை விற்க வேண்டிய அவசியமில்லை என்பதை மக்கள் தொலைக்காட்சி நிரூபித்து வருகிறது. அண்மையில் அது தனது முதலாண்டை நிறைவு செய்தது. இந்த ஓராண்டும், திரைப்பட நறுக்குகளையும் திரை நட்சத்திரங்களையும் கொண்டு நிகழ்ச்சிகளை நிரப்பாமல், சுருக்கமாகச் சொன்னால், TRP ratingஐப் பொருட்படுத்தாமல், TAM அறிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அது நடைபோட்டிருக்கிறது. திரை நட்சத்திரங்களுக்குப் பதில், தமிழறிஞர் நன்னன், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர்.சுப.வீரபாண்டியன், சமூகப் போராளி தியாகு போன்ற நட்சத்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தனித்தமிழார்வம், சமூக சிந்தனைகள், நாட்டார் கலைமரபு, ஆகியவைகள் கவனம் பெறுகின்றன. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத மருத்துவர்கள் (quakery), அதிர்ஷ்டக்கல், நியூமராலாஜி, போன்ற தாயத்து விற்பவர்களைப் புறக்கணித்து வந்திருக்கிறது. அதன் முதலாண்டு விழாவில் பேசும் போது மருத்துவர். ராமதாஸ், விளம்பரங்களைக் கூட சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்கப் போவதில்லை என்று சொன்னார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சுருக்கமாகச் சொன்னால் இலக்கியச் சிற்றேடுகளுக்குரிய தனித் தன்மையோடும், அந்தத் தனித்தன்மையின் காரணமாக ஏற்படும் பெருமித்த்தோடும், பிடிவாதத்துடனும், மக்கள் தொலைக்காட்சி இயங்கி வருகிறது. தமிழின் முதல் niche channel! DTH போன்ற தொழில்நுட்பங்கள் சாத்தியமாகிவிட்ட இன்று, போதுமான சந்தாதாரர்கள் கிடைத்துவிட்டால் அது தொடர்ந்து இந்த சிறுபத்திரிகை குணங்களோடு நீடிக்க முடியும். ஆனால் சிறுபத்திரிகைகள் அரசியல் இலக்குகளை எட்ட உதவாது. அவை அரசியல் கருவிகள் இல்லை (It is not a political instrument) பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த முரண்பாட்டில் உடன்பாடு உண்டா என்பது பொறுத்திருந்துதான் காண வேண்டிய ஒன்று.
உண்ணாநிலை (உண்ணா விரதம்) பரப்புரை (பிரசாரம்), தொடர்வண்டி (ரயில்) தானி (ஆட்டோ ) எனப் பல தமிழ்ச் சொற்களை அதன் செய்திகளில் கேட்டேன்.நல்ல முயற்சி. ஆனால் மக்கள் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக் கொண்டுவிட்ட, மக்கள் மொழியில் உள்ளவற்றை மாற்றும் முன் இருமுறை சிந்திக்கலாம் என்பது கருத்து. சிமிண்ட் என்பதை சிமிட்டி என்று மக்கள் செய்திகளில் சொல்கிறார்கள். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஏனெனில், கட்டடத் தொழிலாளர்கள் மத்தியில் வழக்கில் இருந்த சொல்தான் அது. ஆனால், தானி? உண்ணாவிரதம் உண்ணாநிலை ஆவதில் சில குழப்பங்கள் ஏற்படக் கூடும். 'விரதம்' என்ற சொல்லுக்குப் பின்னுள்ள உணர்வுகள் 'நிலை'யில் வெளிப்படவில்லை. ஒர் இலக்கினை அடைய வேண்டித் தன் சுகங்களைப் புற்ந்தள்ளித் தன்னை வருத்திக் கொள்வது என்பது விரதம் என்ற சொல் பொதிந்து வைத்திருக்கும் பொருள். நிலை என்பது ஒரு நிலைமையை (Status)ஐக் குறிப்பது. ஒருவர் சாப்பிடாமல் இருப்பதற்கு, அதாவது உண்ணாத நிலையில் இருப்பதற்கு, நிறையக் காரணங்கள் இருக்கலாம். வறுமை காரணமாக இருக்கலாம். வயிற்று வலி காரணமாக இருக்கலாம். உணவு கிடைக்காதது காரணமாக இருக்கலாம். கிடைத்த உணவு தரமற்றதாக, ருசியற்றதாக, தனக்குப் பிடித்தமானதாக இல்லாது இருக்கலாம். இவையெல்லாம் 'விரதங்களாக' அதாவத் தற்காலிகத் தவங்களாகிவிடாது. நமது பெண்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஏதோ வேண்டுதல்களுக்காக விரதம் இருக்கிறார்கள். அவை உண்ணாநிலைகளாக ஆகி விடாது. ஏனெனில் அதில் 'போராட்டம்' ஏதுமில்லை.
ஆனால் இவையெல்லாம் சின்ன சின்ன குறைகள். சரிப்படுத்திக் கொள்ளக் கூடிய குறைகள். நோக்கம் பெரிது. அது பாராட்டிற்குரியது.. மக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

புதிய்பார்வை இதழில் நான் எழுதிவரும் பத்தி- நனைக்க மறந்த நதி-க்காக எழுதியது