Friday, April 08, 2005

தமிழ்க் கட்டுரைக்கு ரூ 2 லட்சம்

இந்திய அரசமைப்பு என்பது மூன்று தளங்கள் கொண்டது. மத்திய அரசு, மாநில அரசு, ஊராட்சி. இதில் முதலிரண்டு அமைப்புக்கள் பற்றி ஊடகங்கள் பெருமளவில் செய்திகள் வெளியிடுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் பஞ்சாயத்தில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருப்பதால் அந்தத் தளத்தில் அவர்களின் ஈடுபாடும் செயல்பாடும் அதிகம்.

அச்சு ஊடகங்களில் அதைக் குறித்த விவாதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன், The Hunger Project என்ற சர்வதேச அமைப்பு, ஆண்டு தோறும் ஆங்கிலம், இந்தி, ஏனைய இந்திய மொழிகள் இவற்றில் பிரசுரமான கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ 2 லட்சம் பரிசு அளிக்கிறது. ஒவ்வொரு மொழிக் கட்டுரைக்கும் ரூ. இரண்டு லட்சம் பரிசு. ஜூலை 15க்கு முன் பிரசுரமான கட்டுரைகள் பரிசீனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்கான நடுவர்கள் குழுவில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒருவர் இடம் பெறுகிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நடுவர் குழு:

திருமதி அபர்ணா சென்: கல்கத்தா: பிரபல திரைப்பட இயக்குநர். திருமதி சுஷ்மா அய்யங்கார் - குஜராத் ( கார்னைல் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பி, இவர் கட்ச் பகுதியில் சமூகப் பணி ஆற்றிவரும் பெண்மணி. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அண்மையில் வெளியான இந்தியா டுடே இதழ் இந்தியாவின் 30 சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளது. திருமதி. மிருணாள் பாண்டே, தில்லி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர். மற்றும் மாலன் சென்னை.

கடந்த ஆண்டு தமிழ் இந்தியா டுடேயில் வெளியான ' நிஜமான புரட்சித் தலைவிகள்' என்ற அருண்ராமின் கட்டுரை ஏனைய மொழிகளுக்கான பரிசைப் பெற்றது.

சென்ற ஆண்டு, அஜீத் பட்டாசார்யா, என்.எஸ்.ஜகன்நாதன், கல்பனா ஷர்மா, ஜார்ஜ் மாத்யூ ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

இன்னும் மூன்று மாத அவகாசம் இருக்கிறது. வலைப்பதிவர்கள் இந்தப் பரிசுக்கு முயன்று பார்க்கலாமே?

Sunday, March 27, 2005

ஜேகே என்றொரு நீராவி என்ஜின்

இன்று வெளிவந்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இடம் பெற்றுள்ள என் ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு இது.
http://www.newindpress.com/sunday/sundayitems.asp?id=SEB20050324092747&eTitle=Books+%26+Literature&rLink=0கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது. ஆங்கிலக் கட்டுரை என்பதால் அதை இங்கே அப்படியே மறு பிரசுரம் செய்யவில்லை. வாசிக்கவும் யோசிக்கவும் விரும்பவர்களுக்காக அந்தக் கட்டுரையின் URLஐத் தந்துள்ளேன்.

மாலன்

Saturday, March 19, 2005

கிறித்துவமும் பெண்களும்

ஆலயங்களில் பெண்கள் பூசை முதலிய சடங்குகளை நடத்துவதை இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்துவமும் உற்சாகமாக வரவேற்கவில்லை என்பதை என் முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைக் குறித்து எழுதுமாறு மூர்த்தி போன்ற நண்பர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்

அருட்தந்தை திஸ்ஸா பாலசூரியா என்ற இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் 1990ம் ஆண்டு Mary and Human Liberation (மேரியும் மனிதகுல விடுதலையும்) என்று ஒரு நூல் எழுதினார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடும் மன உறுதி வாய்ந்த ஒரு பெண்ணாக அதில் மேரி சித்தரிக்கப்பட்டிருந்தார்.இதற்கு மாறாக, திருச்சபை, மேரியை ஒரு சாதுவான, அடங்கிப் போன பெண்ணாக சித்தரிக்கிறது என்று அவர் குறைப்பட்டுக் கொண்டார். " புதிய ஏற்பாட்டின் முதல் பெண் பூசாரி" (""the first priest of the New Testament along with Jesus.") என்றும் அவர் மேரியைக் குறிப்பிட்டிருந்தார். பெண்களுக்கு தேவாலயங்களில் பூசை செய்யும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறை கூவல் விடுத்திருந்தார்.

1994ம் ஆண்டு, வாடிகன் அவரது நூல் குறித்து ஓர் ஆய்வைத் துவக்கியது. அவரது கருத்துக்கள் பிழையானவை என்று அது அறிவித்தது. கிறிஸ்துவத்தில் நம்பிக்கை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் பிரமாணம் ஒன்றில் கையெழுத்திட்டு அனுப்புமாறு அவரைக் கோரியது. வீடு பேறு அடைய ஞானஸ்நானம் அவசியம், மேரி கன்னியாக இருந்து இயேசுவைப் பிறப்பித்தார், (immaculate conception of Mary), அவர் தன் உடம்போடு சொர்க்கம் போனார், ஆதமும் ஏவாளும் முதற்பாவம் புரிந்தார்கள் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு என்று உறுதி அளிக்கமாறு அவர் கோரப்பட்டார். அந்தப் பிரமாணப்பத்திரத்தில், "பெண்களுக்கு தேவாலயங்களில் பூசை செய்ய உரிமை அளிக்கத் திருச்சபை எந்த விதத்திலும் அதிகாரம் கொண்டலதல்ல " ( "The Church has no authority whatsoever to confer priestly ordination on women.") என்று ஒரு வாக்கியமும் இடம் பெற்றிருந்ததாக அப்போது வெளியான பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

பாலசூரியா பிரமாணத்தில் கையெழுத்துவிட மறுத்துவிட்டார். பிரமாணப் பத்திரத்தில் சில மாற்றங்களைச் செய்தால் கையெழுத்திடத் தயார் என்றும் தெரிவித்தார். வாடிகன் அதை ஏற்க மறுத்தது. அவர் அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும் என்று மறுபடியும் வலியுறுத்தியது. அவர் மீண்டும் மறுத்தார். வாடிகனில் இருந்த மதகுருமார்களின் உயர்நிலை அமைப்பு அவரை கிறித்துவத்திலிருந்து விலக்கி வைத்தது. அவர் அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் ஜான் பாலிடம் மேல் முறையீடு செய்தார். இதெல்லாம் 1996ம் ஆண்டு நடைபெற்றது. 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் போப்பாண்டவர் அவரை கிறித்துவத்திலிருந்து நீக்கியது சரிதான் என்று தீர்ப்பளித்தார்.

தேவாலயங்களில் சடங்குகளையும் பூசைகளையும் நடத்த பெண்களை நியமிப்பது குறித்த சர்ச்சை 70களிலேயே துவங்கிவிட்டது. இங்கிலாந்திலுள்ள திருச்சபை பெண்களை பூசாரிகளை நியமனம் செய்வது குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, அதைக் குறித்து கவலை தெரிவித்து, போப்பாண்டவர் ஆறாம் பால், கான்டபரித் திருச்சபையின் பேராயருக்கு (Archbishop of Canterbury) 1975ம் ஆண்டு ஒரு கடிதம் அனுப்பினார். " பெண்களை பூசாரிகளாக நியமிப்பது சில அடிப்படையான காரணங்களினால் ஏற்புடையது அல்ல எனத் திருச்சபை, கருதுகிறது. அந்தக் காரணங்களாவன:
ஏசு தன்னுடைய சீடர்களை ஆண்களிலிருந்தே தேர்ந்தெடுத்தார் என்று நமது புனித நூல்களில் குறிப்பிட்டுள்ள முன்னுதாரணம்; ஏசுவைப் பின்பற்றி திருச்சபையும் இதையே தொடர்ந்து வருகிறது. தேவாலாயங்களில் பூசை செய்வதிலிருந்து பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவது என்பது கடவுள் திருச்சபைக்கு வகுத்தளித்த திட்டம் என திருச்சபை உறுதியாக நம்புகிறது."

பால் தொடர்பான பிரசினைகளில் ( பெண்களுக்கு பூசை உரிமை, மணமான பூசாரிகள், செயற்கை முறைக் கருத்தடை, கருக்கலைப்பு, திருமணத்திற்கு முன் பாலுறவு, தன் பால் விழைவு (homosex) ) ஒரு முற்போக்கான பார்வை வேண்டும் என்ற குரல்கள் கிறித்துவத்தில் 90களுக்குப் பின் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இவற்றில் பல பெண்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவை. வாடிகன் இந்த விஷயங்களில் முற்போக்கான பார்வையை மேற்கொள்ள முன் வந்தால் கிறித்துவத்தின் முகம் மாறும்.

Thursday, March 17, 2005

வினாக்களும் விளக்கங்களும்

கருப்பை அரசியல் பற்றிக் கருத்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களில் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விடைகளைக் கீழே கொடுத்திருக்கிறேன்: விளக்கங்கள் நீண்டு விட்டதனால் தனிப் பதிவாக எழுத வேண்டியதாயிற்று.

>>தங்களது கட்டுரையின்படி - பெண்கள் தங்களது மேலாதிக்கம்... குறைந்தபட்சமாக சமநிலையை இழந்தது, இந்த கட்டத்தில்தான் என்று புரிகிறது. ஆனால் அந்த மாற்றம் நடந்தது எப்போது? அதை பெண்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? தனது பெண்டு, பிள்ளைகளிடமே, அதுவரையில்லாத ஒரு அரசியல் பண்ணத் தொடங்கிய அந்த தந்தை வம்சம் யார்? அதற்கான நெருக்கடி என்ன? எப்படி இதை மற்ற பகுதிகளுக்கும் அவர்கள் பரப்பினர்? இந்த கட்டுரையைப் படிக்கும்போதே... இப்படி பல கேள்விகள் என்னுள் எழுகிறது. தௌதவான, ஒரு argument வைக்கும் நீங்கள் - அந்த மாற்றம் பற்றி மேல்
தகவல்களையும் தந்தால் மகிழ்வோம்<< -
சந்திரன்

சந்திரன், மாற்றங்கள் திடீரென்று ஒரு நாளில் நடந்துவிடவில்லை. இவை ஒரு தனி
நபரால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அல்ல. இது எப்படி நேர்ந்தது என்பது ஒரு நீண்ட கதை. சுருக்கமாக, என்னால் முடிந்தவரை தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன்:

ஆதி சமூகத்தில் உணவு தேடுவது ஒன்றுதான் முக்கிய வேலை. இதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று மற்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது.மற்றொன்று இயற்கைதரும் காய் கனி கிழகங்குகளை உண்பது. வேட்டையாடுவது, குறிப்பாக ஈட்டி போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ஆண்களின் முதன்மைத் தொழிலாகவும், உணவு சேகரிப்பது பெண்களின் வேலையாகவும் இருந்தது. வேட்டையாடுவது பின்னாளில் விலங்குகளை வளர்ப்புக்குக் கொண்டு சென்றது. உணவு சேகரிப்பது விவசாயத்திற்கு இட்டுச் சென்றது.

வேட்டை முக்கியத்துவம் பெற்றிருந்த நாள்களில் ஆணுக்கு முக்கியத்துவம் இருந்தது. வேட்டையாடுவது போன்ற கடினமான முயற்சிகளில்லாமல், விவசாயத்தின் மூலம் பசியாறலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, பெண்ணின் கை ஓங்கியது. ஏனெனில் விவசாயம் பெண்ணின் கண்டுபிடிப்பு.

ஆண்கடவுள்களின் கையில் ஆயுதங்களையும்- அதிலும் வேட்டையாடுவதற்கான ஆயுதங்களான வில், வேல், போன்றவற்றையும்- பெண் தெய்வங்களின் கையில் பூ,தான்யக் கதிர் போன்றவற்றைப் பார்க்கலாம். ( சூலம் ஏந்திய காளி பிற்காலப் படைப்பு) கடவுள்கள் மனிதர்களின் பிரதிபலிப்புத்தானே?

விவசாயத்தை விட விலங்குகளை மேய்த்துப் பராமரித்து வாழ்வது உழைப்பு ரீதியாக
எளிதாக இருப்பதைக் கண்டு சமூகம் அந்த திசையில் வளர்ச்சி கண்டது. மேய்ச்சல்
சமூகத்தில் மிண்டும் ஆண்களின் கை ஓங்கிற்று. இதுதான் ரிக் வேத காலம். ரிக்
வேதர்களுக்கு மேய்ச்சல் முதன்மையாகவும், விவசாயம் இரண்டாம் பட்சமும் ஆயிற்று.

அவர்கள் விவசாயத்தை வெறுக்கவும் செய்தனர். இனக் குழ சண்டையில் தோற்றவர்களே விவசாயத்தை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். இதனால் விவசாயம் 'தாழ்ந்த' தொழிலாயிற்று. விவசாயத்தை கண்டுபிடித்த பெண்களும் இரண்டாம் நிலையினர் ஆயினர். விலங்குகள் பராமரிப்பு, அதற்குத் தேவையான மேய்ச்சல் நிலம், அதன் மீதான உரிமை இவை ஆண்கள் கையில் பொருளாதார பலத்தைச் சேர்த்தன. அந்த பலம் ஆணதிக்க சமூகத்தை நிலைநிறுத்த உதவியது.

>>அது சரி, புத்தர் ஏன் பெண்களுக்கு துறவறம் வேண்டாமென்றார் ? அவர் காலம்
வரும்போது ஏற்கனவே ஆண்கள் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டதா? பெண்கள் துறவறம்
மேற்கொள்ள லாயக்கில்லை என்று அவர் நினைத்தாரா?மனிதர்களிடையே வித்தியாசம் பாராட்டாதவர் என்றுதான் அவரை பற்றி நினைத்திருந்தேன்
.<< - அருணா

வேத காலத்து சமூகத்தின் சாதிய, பால் ஒடுக்குமுறையின் விளைவாக எழுந்த மாற்றுக் கோட்பாடு பெளத்தம். புத்தரின் காலம் கிமு 5-6 நூற்றாண்டுகள்.

ரிக்வேதத்தின் ஒரு பகுதியாக புருஷ சூக்கத்திலேயே சாதி பேதங்களும், மனு ஸ்மிருதியின் மூலம் பால் பேதங்களும் நிறுவப்பட்டுவிடுகின்றன.

வேதங்கள் ஏற்படுத்திய பேதங்களின் விளைவாக, வேதத்திற்கு மாற்றாகத் தோன்றியது தந்திரம். வேதம் ஆண் தத்துவத்தை முன்நிறுத்துகிறது ( புருஷார்த்தம்) தந்திரம் பெண்தத்துவத்தை முன் வைக்கிறது (பிரகிருதி) வைதீகம் தூய ஆன்மாவைத் தேடியது. தந்திரம் உடலை முன்நிறுத்தியது.( தேக தத்துவம்) உடலில் உள்ளதே உலகில் உள்ளது, உலகில் உள்ளதே உடலில் உள்ளது, மனிதர் உடலின் மர்மத்தை அறிந்தால் இயற்கையின் ரகசியத்தை அறியலாம், மனிதர் பிறக்கும் முறையிலேயே இயற்கையும் பிறந்தது என்பவை தேக தத்துவத்தின் ஆதார கருதுகோள்கள். வேதியல் (ரசவாதம்), வேளாண்மை, இயற்கை மருத்துவம், யோகா இவையெல்லாம் தந்திர மரபிலிருந்து கிளைத்தவை.

வருணப் பிரிவுகளையும், பிராமணர்கள் மேலானவர்கள் என்பதையும் ஏற்க மறுத்தது தந்திரம். வேள்வியை ஏற்க மறுத்தது. விதவை என்ற கருத்தாக்கத்தை நிராகரித்தது.திருமணம் என்பது கற்பனை என்றது. ஆண் பெண்தான் நிஜம், அவர்கள் உறவிலோ, விலக்கிலோ தவறில்லை; இன்னாருக்கு இன்னார் கணவன் மனைவி என்ற வரம்பில்லை என்றெல்லாம் வாதிட்டது.

நாளடைவில் அது உடலின்பத்தை முதன்மைப்படுத்துகிற சடங்குகள் கொண்டதாக மாறிப் போயிற்று.

பின் வந்த பெளத்தம் வைதீகம் தந்திரம் என்ற இரண்டையுமே மறுத்தது.வேதமரபின் வேள்வி முறையை நிராகரித்தது; தந்திரம் முன்வைத்த உடலின்பத்தை மறுத்து துறவறத்தை வலியுறுத்தியது. பெளத்தத்தின் பெரிய கவர்ச்சி அதில் காணப்பட்ட சமத்துவம். ஆரம்பத்தில் புத்தர் பெண்களின் துறவை முழு மனதோடு ஏற்கவில்லையென்றாலும் ( அது ஏன் என்று பின்னர் சொல்கிறேன்) அவர் அவர்களை மறுக்கவவில்லை. அதே போல ஜாதி பேதம் பார்க்கவில்லை. புத்தருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் உபாலி. இவர் நாவிதர் வகுப்பை சேர்ந்தவர். சத்தி என்று ஒரு சீடர் இருந்தார் அவர் மீனவர். நந்தா என்பவர் இடையர். ஆனந்தர், ராகுலர், அநிருத்தர், ஆகிய மன்னர்களும், சாரிபுத்தா, கச்னா ஆகிய பிராமணர்களும் கூட அவரது சங்கத்தில் இருந்தனர். சுனிதா என்ற நகரசுத்தித் தொழிலாளியின் பெண்ணும், சுபா என்ற கொல்லன் மகளும் கூட அவரது சங்கத்தில் இருந்தனர்.

பெளத்தம் சங்க வாழ்வை அடிப்படையாகக் கொண்டது சங்கம் என்பது Congregation அல்லது commune மாதிரி. அதற்குள் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. ஆனால் புத்தர் சங்கத்திற்கு வெளியே, சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முயற்சிக்கவில்லை என்பது அவர் மீது சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு.

மன்னன் பிம்பிசாரன் வேலுவனம் என்ற பூங்காவை புத்தருக்கு பரிசாகத் தந்தான். அதுதான் புத்தர் ஏற்றுக் கொண்ட முதல் கொடை. அதற்குப் பின் பலர் அதே போலக் கொடைகளை அளிக்க முன் வந்தார்கள். அந்த பிந்தகன் என்ற ஒரு வணிகன் ஜேதவனம் என்ற இடத்தை புத்தருக்குக் காணிக்கையாகத் தரவிரும்பினான். அது ஜேதகுமாரன் என்பவனுக்கு சொந்தமானது. வணிகனின் ஆர்வத்தைக் கண்ட ஜேதன், அந்த இடம் முழுவதையும் பணத்தால் நிரப்ப வேண்டும். அதுதான் அந்த இடத்திற்கு விலை என்று சொன்னதாகவும், வணிகன் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் அந்த நிலத்தில் பரப்பி அடுக்கி அந்த நிலத்தை வாங்கி புத்தருக்குக் கொடுத்தான் என்றும் ஒரு கதை உண்டு.

இது போன்ற பரிசுகள் காரணமாக புத்தர் அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் சாதகமாக நடந்து கொண்டார் என்று அவரைக் குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, போரில் ஈடுபடுவதன் மூலம் பலரைக் கொல்கிறோம், பல தீமைகளை செய்கிறோம், அவற்றுகெல்லாம் பிராசியத்தம் சங்கத்தில் சேர்ந்து நல்ல காரியம் செய்வதுதான் என்று பல போர்வீரர்கள் பிக்குகளை நாடி வந்தார்கள். இப்படிப் பலர் படையை விட்டுப் போய்விட்டதால், தளபதிகள் அரசனிடம் போய் முறையிட்டார்கள். அரசு ஊழியத்தில் இருப்பவர்களைத் தடுத்தால் அவர்களுக்கு என்ன தண்டனை என்று நீதிபதிகளிடம் கேட்டான் அரசன். தடுத்தவனின் தலையை வாங்குவதுதான் தண்டனை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசன் பிம்பிசாரனுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. அவன் புத்தரிடம் போய் அரசு ஊழியத்தில் உள்ளவர்களுக்கு தீட்சை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.பின் வந்த ஒரு பிரசங்கத்தில் புத்தர் பிக்குகளிடம் அரசு ஊழியர்களுக்கு தீட்சை தர வேண்டாம், மீறினால் குற்றம் செய்தவர் ஆவீர்கள் என்று பிக்குகளை எச்சரித்தார்.

அதே போல கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த முடியாது போனால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்பட்க் கடனை செலுத்த முடியாதவர்கள் சங்கத்தில் சேர்ந்தார்கள். அவர்களைக் கைது செய்ய வந்தால், சங்கத்தில் இருப்பவர்களைத் துன்புறுத்தக்கூடாது என்பது அரசன் பிம்பிசாரனின் கட்டளை என்பதைச் சுட்டிக் காட்டி, காவலர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள். இதனால் வணிகர்கள் புத்தரிடம் முறையிட்டார்கள். புத்தர் கடனாளிகளை சங்கத்தில் சேர்க்கக் கூடாது என்று உத்தரவிட்டார் ( ராகுல சாங்கிருத்தியாயன்)

இந்த சங்கம் என்ற அமைப்பு காரணமாகத்தான் புத்தர் பெண்களுக்கு துறவறம் தர தயங்கி இருக்க வேண்டும். துறவற ஒழுங்கு கெட்டுவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். அல்லது நாளடைவில் தந்திரா மரபைப்போல மூல நோக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியிருக்கலாம்.

>> ஸ்ரீவசனபூஷணம் எனும் புத்தகத்தில் கண்ணன் பாஞ்சாலிக்கு சரணம் கொடுத்த பொழுதில் அவள் மாதவிடாயாக இருந்தாள் என வரும். எனவே இறை ஒழுக்கத்திற்கு இது தடையல்ல என்று வைணவம் சொல்கிறது<< - கண்ணன்

பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது அவள் தனது மாதவிடாய்க் காலத்தில் இருந்தாள் என்றுதான் பாரதியும் சொல்கிறார். சூதில் பாண்டவர்கள் தோற்றதும், பாகன் ஒருவனை அந்தப்புரத்திற்கு அனுப்பி பாஞ்சாலியை அழைத்து வரச் சொல்கிறான் துரியோதனன். பாஞ்சாலி வர மறுத்து விடுகிறாள். இனி பாரதி:

நன்று மனத்திடைக் கொண்டவன்- சபை
நண்ணி நிகழ்ந்தது கூறினான்

மாதவிடாயிலிருக்கிறாள் அந்த
மாதரசென்பதுங் கூறினான் - கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் -

என்று போகிறது பாஞ்சாலி சபதம்.

>>ஆசாரம் என்பதை யார் அதிகம் கடைபிடிக்கிறார்கள்..? << - மூர்த்தி

பெண்கள் பூசாரிகள் ஆவதற்கு இந்து/ பிராமணீய மரபில் மட்டுமல்ல, கிறிஸ்துவத்திலும் எதிர்ப்பு எழுந்த்து. போப்பாண்டவர் ஒரு அறிக்கையே வெளியிட்டார். இஸ்லாமிலும் அனுமதி இல்லை என நினைக்கிறேன். அவசியம் என்றால் அதைப் பற்றி அவகாசம் கிடைக்கும் போது இரண்டொரு நாளில் எழுதுகிறேன்.

Wednesday, March 16, 2005

கருப்பை அரசியல்

மாமியா இது?

புத்தர் தன்னெதிரே வந்து வணங்கி நின்ற உருவத்தைப் பார்த்தார். நெடுநெடுவென்று நீண்டு முதுகை மறைந்தபடிக் கிடக்கும் கருங்கூந்தல் மழித்தெறியப்பட்டிருந்தது. ஆபரணங்கள் எதையும் காணோம். பிறந்ததிலிருந்தே பட்டு தவிர வேறெதுவும் உடுத்திய அறியாத உடம்பு கனத்த காவித் துணியைத் தரித்திருந்தது.

மாமியா இது?

மாமிதான். அவர் சித்தார்த்தனாக, அரண்மனையில் இளவரசனாக வளர்ந்த போது அவரை சீராட்டிக் கொஞ்சி உணவளித்துப் பேணி வளர்த்த மாமி கோதமிதான். முடியை மழிக்கலாம். துணியை மாற்றலாம். முகத்தை மாற்ற முடியுமா?

" என்ன மாமி இது?"

"எனக்கும் சந்நியாசம் கொடுத்துவிடு. நானும் ஒரு பிக்குணியாக மாறி உன் உபதேசங்களை ஊருக்கு எடுத்துச்

சொல்கிறேன்"

"மாமி நீங்கள் எத்தனையோ முறை கேட்டுவிட்டீர்கள். நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். எங்கள் புதிய மதத்தில், குடும்பப் பெண்களுக்குத் துறவறம் கொடுப்பதில்லை"

" அதுதான் ஏன்?"

புத்தர் பேசவில்லை. கல் போல் அங்கு ஓர் மெளனம் இறுகிக் கிடந்தது.

"சரி நீ எனக்கு பதில் சொல்ல வேண்டாம்.ஆனால் நீ எனக்கு சந்நியாசம் கொடுக்கும் வரை இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டேன்."

" இப்படியே நீங்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தால் நான் உங்களை சந்திப்பதையே தவிர்க்க நேரிடும். எனக்கு வேறு வழியில்லை"

அருகில் இருந்த ஆனந்தர் பதறிப்போனார்.

" சுவாமி அவசரப்பட்டு அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள். நீங்கள் இங்கு வைசாலியில் உள்ள மகாவனத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டு நெடுந்தூரம் நடந்தே வந்திருக்கிறார்கள். அவர்களது கால்கள் வீங்கிக் கிடப்பதைப் பாருங்கள். உங்களைப் போலவே அவர்களும் அரண்மனையை, அதன் வசதிகளை, செல்வத்தைத் துறந்து காவி அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு சில நாள்கள் இருக்கட்டும். யோசித்து முடிவு
சொல்லலாம் சுவாமி"

புத்தர் அப்போது ஏதும் பேசவில்லை. ஆனால் பிறகு தனியாக ஆனந்தரிடம் சொன்னார்: " ஆனந்தரே, பெண்கள் இல்லற வாழ்வை விட்டு, நாம் விதித்த விதிமுறைகள், ஒழுக்கங்களுக்கேற்ப, வீடற்ற நிலையை எய்த வேண்டும் என்பதற்கு இசைவு அளிக்காமலிருந்திருந்தால், இந்த மதம் பலகாலம் நிலை பெற்றிருந்திருக்கும். இந்த நல்ல
விதிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக நிலை பெற்றிருந்திருக்கும். ஆனால் இப்போது பெண்கள் துறவு பூணுவதற்கு இசைவு பெற்று விட்டமையால் இந்தத் தூய்மையான மதம் நீண்ட நாள் நிலைத்திருக்காது. இந்த மதம் ஐநூறு ஆண்டுகள்தான் உறுதியாக நிலை பெற்றிருக்கும்."

புத்தரின் இந்தக் கூற்று, மாக்ஸ்முல்லர் ஆசிரியராக இருந்து பதிப்பித்த ' Sacred book of the East (vol xx) என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது.

பெண்கள் துறவறம் மேற்கொள்வதை புத்தர் அனுமதித்தார் என்றாலும் அதை அவர் முழு மனதாக ஏற்கவில்லை என்று கருத இது ஒரு சான்று. தமிழிலிலேயே கூட தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை, பெண்களில் மணிமேகலை ஒருவரையே பெளத்த துறவியாகவும், கவுந்தி அடிகள் ஒருவரையே சமணத் துறவியாகவும்
இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.

பெண்கள் துறவிகளாவதை மட்டுமல்ல, அவர்கள் பூசாரிகள் ஆவதைக் கூடப் பெருமபாலான மதங்கள் அனுமதிப்பதில்லை, ஊக்குவிப்பதில்லை. சந்நியாசியாகி புற உலகச் செயல்களிலிருந்து விலகி, உள்முகமாகத் திரும்பி, ஆன்மீகத் தேடலில் ஈடுபடுவது என்பது ஒன்று; பூசாரிகளாகி, மதங்கள் விதித்துள்ள நெறிகளின்படி சடங்குகளை நடத்தி வைப்பது, கோவில்களில் பூஜை செய்வது என்பது வேறு. ஆனால் இந்த சடங்குகளை நடத்தி வைக்கக் கூடப் பெண்களைப் பெரும்பாலான மதங்கள் அனுமதிப்பதில்லை.

இந்தப் பின்னணியில், அண்மையில் வந்தவொரு செய்தி, ஆச்சரியமும் மகிழ்வும் அளிப்பதாக அமைந்திருந்தது.

தமிழகச் சட்டமன்றத்தில் கோவில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்களா என்று ஓர் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். ஆகம விதிகள் படித்தறிந்த, தகுதியான, பெண்கள் இருந்தால் அவர்களை அரசு நியமிக்கும் என்று அமைச்சர் பதிலளித்தார். இது ஆகம விதிகளுக்கு எதிரான செயல் என்று விஸ்வ இந்து பரிஷத் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

ஆனால் ஆதிகாலத்தில் சமயச் சடங்குகளைப் பெண்களே நிறைவேற்றி வந்திருக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள ஆதிகுடிகளிடையே இதை இப்போதும் பார்க்கலாம். விளைநிலம் சார்ந்த சடங்குகளை- தானியம் விதைப்பது, இயற்கையைத் தொழுது பாடுவது, விளைச்சலுக்கான வண்மை சேர்ப்பது இவற்றையெல்லாம் பெண்கள்தான் செய்து

வந்திருக்கிறார்கள். இப்போதும் சில வேளாண் சமூகங்களில் செய்கிறார்கள். கோவை மாவட்டம் பேரூருக்கு அருகில் வேளாண் வகுப்பினர், பயிர்த் தொழிலைத் துவக்கும் முன் பத்து நாட்களுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவில் சடங்குகளைப் பெண்களே செய்கிறார்கள். இந்தியா முழுவதும் மழை வேண்டி நடக்கும் சடங்குகளைப் பெண்களே செய்கின்றனர். ஊருக்கு ஊர் இந்த சடங்கு முறையிலே மாற்றம் இருந்தாலும், சடங்குகளைப் பெண்கள் செய்வது என்பதிலே மாற்றம் இல்லை.

ஆதி மரபுகளை விட்டுவிட்டு வேதமரபுகளை எடுத்துக் கொண்டால் வழிபாடுகளில் முதனமையான பாத்திரம் வகிப்பவை மந்திரங்கள். ரிக்வேதம் 'வாக்' என்று ஒரு பெண்ணைத்தான் ஒலிக்குரிய தேவதையாகக் குறிப்பிடுகிறது. 'பிரபஞ்சம்
முழுமையும் தன் ஆணையால் ஒன்றுபடுத்தும் தெய்வம்' என்று அது அவளின் இயல்புகளைக் குறிப்பிடுகிறது.

ஞானம் தருபவையாக, ரிக் வேதம், மூன்று தெய்வங்களைக் குறிப்பிடுகிறது இலா, சரஸ்வதி, பாரதி ஆகிய அந்த மூவரும் பெண்கள். அதில் இலா வேள்வி செய்யும் முறையை மனிதர்களுக்கு போதித்த ஆசான். பாரதி நாவன்மையின் தேவதை. கவிதைகள் பிறக்க இவள் அருள் வேண்டும்.அறிவு, விவேகம், சாதுரியம், கற்பனை வளம்,
படைப்பாற்றல், புதிய கண்டு பிடிப்புகள், நுண்கலைகள் அனைத்தையும் பாதுகாக்கும் ஞான தேவதை சரஸ்வதி.

ஆனால் இந்த சரஸ்வதி பூஜையைக் கூட இன்று பெண்கள் செய்யமுடியாது. வேள்விகளை செய்வதற்குரிய முறைகளைக் கற்பித்த ஆசான் பெண். பூஜையின் ஆதாரமாக உள்ள மந்திரங்கள் பெண். அதற்கான நாவன்மையும், படைப்பாற்றலும் தருபவள் பெண்.ஆனால் அவள் பூசை செய்ய முடியாது!

ஆண்களை விடப் பெண்களுக்கு பக்தி அதிகம். நான் ஆண்களில் நாஸ்திகர்களை சந்தித்த அளவு பெண்களில் சந்தித்ததில்லை. சுயக்கட்டுப்பாடுகள் பெண்களிடத்தில் அதிகம். விரதம் இருக்கும் காலங்களில் தேநீர் கூடப் பருகாமல் பணியாற்றுகிற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அதே போல 'மாலை போட்டுக்கொண்ட' நாட்களில் கூட புகைப்பதை விட முடியாத ஆண்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும் ஆண்கள் பூசாரிகளாகப் பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அது மறுக்கப்படுகிறது.

ஏன்?

'கருப்பை அரசியல்'தான் காரணம்.

பெணகள் தங்கள் உடலியல் அமைப்புக் காரணமாக மாதததில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாதவிலக்கை சந்திக்கிறார்கள். அந்த நாட்களில் அவர்கள் தூய்மை குறைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பூஜை செய்வதற்கு அருகதை அற்றவர்களாகி விடுகிறார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள்.

ஆனால் இதற்குப் பின் ஒரு அரசியல் இருக்கிறது என நான் சந்தேகிக்கிறேன். ஒருகாலத்தில் சமூகத்தலைமை, அரசியல் தலைமை ஆகியவை பெண்களிடம் இருந்தன. நாடு சார்ந்த அரசுரிமையைக் குறிக்கும் சொல் 'தாயம்' ( திருவாங்கூர் அரசு மருமக்கள் தாயம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்) தாய் என்ற அடிச் சொல்லில் இருந்து பிறந்த சொல் தாயம்.

புறநானூற்றில் ஒக்கூர் மாசாத்தியாரின் கவிதையாக ஒரு பாடல் இருக்கிறது. 'கெடுக சிந்தை, கடிதிவள் துணிவே' என்று துவங்கும் அந்தப் பாடல் நமக்கு ஒரு கதை சொல்கிறது. முதல் நாள் போருக்குத் தன் தந்தையையும் சகோதரனையும் போருக்கு அனுப்புகிறாள் ஒரு பெண். அவர்கள் போரில் இறந்து விட இரண்டாம் நாள் தன் கணவனை அனுப்புகிறாள். அவனும் பெரும்படையை எதிர்த்துப் போரிட்டு மாய்ந்து போகிறான். இத்தனைக்கும் பின்,
போர்ப்பறை கேட்டவுடன் தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைக்கிறாள். இவள் துணிவு வலுவானது.இவளுக்கு புத்தி கெட்டுப் போக என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறாள் ஒக்கூர் மாசாத்தி.

இதில் நான் முன்று செய்திகளைப் பார்க்கிறேன்.
1. யார், என்று போருக்குப் போக வேண்டும் என்று முடிவெடுக்கிற அதிகாரம் பெண்ணிடம் இருந்தது.
2. போருக்கு ஆண்கள் அனுப்பப்பட்ட வரிசை.
3. அந்தக் காலக் குடும்ப அமைப்பு. ஒரு பெண்ணுடன் அவளது தந்தை, உடன் பிறந்தவர்கள், கணவன், அவளது குழந்தைகள் என்று குடும்பம் அமைந்திருந்தது ( இன்று இதற்கு நேர் மாறாக கணவன், அவனது பெற்றோர்கள், அவனது உடன் பிறந்தோர்,
மனைவி, குழந்தைகள் என்று ஆணை மையப்படுத்தி அமைந்திருப்பதைக் கவனித்தால் குடும்பத்தில் பெண்ணிற்கு இருந்த முக்கியத்துவம் புரியும்)

குழந்தை என்பது ஆண் பெண் கலப்பினால் உருவாகிறது என்ற உண்மை புலப்படாமல், ஆதி சமூக மனிதன், இறந்து போனவர்கள் பெண்களின் மூலமாக மறு பிறப்பு எடுக்கிறார்கள் என்று கருதிய போது பெண்களுக்கு தெய்வத் தன்மைகள் கொடுக்கப்பட்டன. அவர்களைக் குறித்து ஓர் அச்ச உணர்வு இருந்து வந்தது.

வேட்டை சமூகம்- வேளாண் சமூகம்- நிலவுடமை சமூகம் என்ற பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, சொத்து என்ற கருத்தாக்கம் வலுப்பட்டபோது 'அரசியல்' துவங்கியது. வேள்வி செய்பவருக்கே சொத்துரிமை என்பது ஏற்பட்டபோது, சொத்துரிமையைக் கைப்பற்றிக் கொள்வதற்காகப் பெண்களுக்கு வேள்வி செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. பின் அதற்கு ஆதராமான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பின் சொத்துக்கள் அவள் தேர்ந்தெடுக்கும்
ஆணின் வசம் போய்விடக் கூடாதென்பதற்காக அவளே தன் துணையை வரித்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.

இது எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும், இதைக் குறித்துக் கேள்விகள் எழாமல் தடுக்கவும், ஆணிடம் இல்லாத பெண்ணிடம் மட்டுமே உள்ள கர்ப்பப்பை முன்னிறுத்தப்பட்டது. பெண்ணினுடைய பிறப்பின் பயனே குழந்தை பெற்றுக் கொடுப்பதுதான் என்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. சிறுவயதிலிருந்தே பெண்கள் தங்கள் உடமபைப் பற்றிய உணர்வு (பிரஞ்கை) ஊட்டப்பட்டே வளர்க்கப்பட்டார்கள்.

அதில் ஒன்று மாதவிலக்கு என்பது 'தீட்டு' என்ற கருத்தாக்கம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ்நாட்டில், குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொள்ளாத பிராமண சமூகங்களில். அந்த அசெளகரியமான நாட்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்களைப் போலவே நடத்தப்பட்டு வந்தார்கள். படித்து வேலைக்குப் போகும் நிலை ஏற்பட்டு, அதிக இடம் இல்லாத அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுவிட்ட பிறகும்
கூட இது ஏற்படுத்தியுள்ள மனத் தடுப்புக்களைத் தாண்டி வரமுடியாத பெண்கள் பலர் இப்போதும் இருக்கிறார்கள்.

பிறரிடம் இல்லாத செல்வம் தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத கல்வி தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத படைப்பாற்றல் தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத தொழில் நுடப அல்லது வணிக அறிவு தன்னிடம் இருந்தால்,பிறரிடம் இல்லாத அழகு தன்னிடம் இருந்தால் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள்.ஆனால் ஆண்களிடம் இல்லாத மனித உயிரைப் பிறப்பிக்கும் ஆற்றல் தங்களிடம் இருப்பது குறித்துப் பெண்கள் கர்வம்
கொள்வதற்குப் பதில் கூச்சம் கொண்டதால் அடிமைப்பட்டுப்பட்டுப் போனார்கள்!

பெண்களைப் பூசாரிகளாக நியமிக்கிற காலம் வந்தால் அவளது மனத் தடைகள் கரையும்.பல விலங்குகள் உடைபடும். சமூகம் ஒரு முறை குலுங்கித் தன்னை சமன் செய்து கொள்ளும். அப்படி ஒரு நாள் வருமா?அல்லது

அரசின் எத்தனையோ அறிவிப்புக்களைப் போல இதுவும் இன்னுமொரு அறிவிப்பாகவே நின்றுவிடுமா?

Monday, March 07, 2005

பெண்களில் ஒரு பெரியார்!

சமத்துவமும் உரிமையும் கோரிப் பெண்களிடமிருந்து கலகக் குரல் எழுந்த நாளைத்தான் பெண்கள் தினமாக உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நாளில் உத்தரநல்லூர் நங்கையை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாய்ச்சலூர் என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எங்கிருக்கிறது என்பதைக் குறித்து பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.திருச்சிக்கருகில் இருக்கிறது, திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது, ஒட்டன்சத்திரத்திற்குப் பக்கத்தில் இருக்கிறதது என்றெல்லாம் சொல்கிறார்கள். எங்கிருக்கிறது என்பது முக்கியமல்ல. ஆனால் அந்த ஊரின் பெயரைக் கொண்ட ஓர் இலக்கியம் இருக்கிறது. புரட்சிகரமான இலக்கியம்!

15ம் நூற்றாண்டில் வெளியான நூல் பாய்ச்சலூர் பதிகம். பதிகம் என்றால் பத்துப் பாட்டுக்கள் கொண்ட நூல். கடவுள் வாழ்த்து அல்லது காப்புச் செய்யுள் என்றும் கூடுதலாக ஒன்று இருக்கும்.

ஆனால் இந்தப் பாய்ச்சலூர் பதிகத்தில் கடவுள் வாழ்த்து இல்லை! சாதாரணமக்களின் பேச்சுத்தமிழில் அமைந்த இந்தப் பாடல் எந்த சாமியின் மீதும் பாடப்பட்டதல்ல. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து- குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து- பாடப்பட்டது. இதைப் பாடியவர் ஒரு பெண்.

உத்திர நல்லூர் நங்கை எனபது அவர் பெயர்.

உத்திரநல்லூர் நங்கையைப் பற்றி இலக்கிய வரலாற்றாசிரியர்கள் அதிகம் எழுதி
வைத்திருக்கவில்லை. 'இவள் ஒரு பெண்கவி. பிராமணரை வசை பாடினாள்' என்று
அபிதான சிந்தாமணி குறிப்புத் தருகிறது. 1916ல் வெளியிடப்பட்ட தமிழ் நாவலர் சரிதை ' உத்தரநல்லூர் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்குக் காரணம் இன்னதென்றேனும் விளங்கவில்லை' என்கிறது.

சாதி பேதங்களை எதிர்த்துக் குரல் கொடுத்தவர், சாதிகள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்பதை பிராமண ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்திலேயே மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அதன் காரணமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துக் கலகக் குரல் கொடுத்தவர், சடங்குகள் சாதி பேதங்களை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பதையெல்லாம் அவர் பாட்டுக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

சாதியும் ஒன்றே யாகும்

சகலமும் வேறே தாமோ

வேதியன் படைத்த தல்லால்

என்று ஒரு பாடல் கேட்கிறது.

வெவ்வேறு மரங்கள் நெருப்பில் விழுந்தால் வேறு வேறு மணம் எழும். ஆனால் மனிதரின் பிணங்கள் நெருப்பில் எரியும் போது வேறு வேறு மணம் எழுவதுண்டா? என்று கேட்கிறது ஒரு பாடல்:

சந்தனம் அகிலும் வேம்பும்

தனித் தனி வாசம் வீசம்

அந்தணர் தீயில் வீழ்ந்தால்

அதன்மணம் வேற தாமோ

செந்தலைப் புலையன் வீழ்ந்தால்

தீமணம் வேற தாமோ

பந்தமும் தீயும் வேறோ

பாய்ச்சலூர்க் கிராமத்தாரே

15ம் நூற்றாண்டுகாலத் தமிழகச் சூழலை மனதில் கொண்டு பார்த்தால் இது ஒரு சிறந்த எதிர்ப்புக் குரல்.

மனிதர்களுக்குள் சாதியின் பெயரால் வித்தியாசம் கற்பிக்கப்படுவதற்கு எதிராக மட்டுமல்ல, சமத்துவம் கோரியும் குரல் எழுப்புகிறார் உத்தரநல்லூர் நங்கை.

ஒரு பனை இரண்டு பாளை

ஒன்று நுங்கு ஒன்று கள்ளு

அறிவினில் அறிந்தவர்க்கு

அதுவுங்கள் இதுவுங் கள்ளே

ஒருகுலை உயர்ந்ததேனோ

ஒரு குலை தாழ்ந்ததேனோ

பறையனைப் பழிப்பதேனோ

பாய்ச்சலூர்க் கிராமத்தாரே

சாதி வித்தியாசத்தை சடங்குகள் மூலம் பார்ப்பனர்கள் வலுப்ப்டுத்தி நிலை பெறச்செய்தார்கள் என்பதால் சடங்குகளையும் வேதத்தையும் சாடுகிறது ஒரு பாடல்.

ஊருடன் பார்ப்பார் கூடி

உயர்ந்ததோர் சாலை கட்டி

நீரிலே மூழ்கி வந்து

நெருப்பின் நெய்யைத் தூவிக்

கார்வயல் தவளை போலக்

கலங்கிய உங்கள் வேதம்

பாரை விட்டகன்றதேனோ

பாய்ச்சலூர்க் கிராமத்தாரே

இந்தப் பாடல்கள் இப்போதும் பாடப்படுகின்றன.ஆனால் தமிழ் நாட்டில் இல்லை.

கேரளத்தில்!

திருவனந்தபுரம் நாகர்கோவில் சாலையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி பாய்ச்சலூர் என்றொரு கிராமம் இருக்கிறது.
அந்த கிராமத்தின் மயானத்தில் ஒரு காளி கோவில் இருக்கிறது. அந்தக்கோவிலில் ஒரு சிலம்பை மக்கள் அம்மனாக வழிபடுகின்றனர். கேரளத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்ட ஈழவ மக்களின் கோயில் அது. அங்கு மாசி மாதம் நடை பெறும் திருவிழாவின் போது ஊர் மக்கள் கோயிலில் கூடி பாய்ச்சலூர் பதிகத்தை மலையாளத்தில் எழுதி வைத்துப்பாடுகின்றனர் என்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பேராசிரியர் தெரிவிக்கிறார்.

தமிழ்கத்துப் பெண் பெரியார் எப்படி கேரளத்திற்குப் போனார்?

யாருக்காவது தெரியுமா?

தோழியருக்கு என் பெண்கள்தின வணக்கங்கள்!

Thursday, March 03, 2005

திருவாளர் பந்தா பளு தூக்கலாமா?

திருவாளர் பந்தா பளு தூக்கலாமா?

வடிவேலுவா, கவுண்டமணியா என்று ஞாபகம் இல்லை. தன்னை ஒரு பெரிய பலசாலி, பயில்வான், வஸ்தாது என ஊரில் பந்தாப் பண்ணிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் அவரே இரண்டு புறமும் எடைகள் பூட்டப்பட்ட பளுவைத் தூக்கிக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த சூழ்நிலையும் அவரே ஏற்படுத்திக் கொண்டதுதான். தனது மாணவர்கள் பயிற்சி செய்து கொண்டிருக்கும் இடத்திற்குப் போய் 'என்னடா பளு தூக்குறீங்க நான் தூக்குகிறேன் பார்' என்று கெத்தாக பளுவின் கீழ் படுத்து தூக்க முயல்வார். தூக்கமுடியாமல், பளு நச்சென்று அவர் மூக்கின் மேலேயே உட்கார்ந்துவிடும். முகத்தில் ரத்தக்காயம். தொலைக்காட்சியில் இந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து நீங்களும் சிரித்திருப்பீர்கள்.

இந்தக் காட்சியில் வரும் காமெடியனைப் போல சிரிப்பூட்டுகிறது காங்கிரஸ்.

சுதந்திரப் போராட்டம் போன்ற நாடு தழுவிய லட்சியங்கள் இல்லாத சூழ்நிலையில் இந்தியா போன்ற நாட்டில் ஏகப்பெரும் (Monolithic) கட்சி என்பது இருக்கப் போதுமான இடம் அரசியலில் இல்லை. இதனால்தான் இன்று இந்தியாவில் தேசியக் கட்சி என்று உண்மையில் எதுவும் இல்லை. ஒரு தேசியக் கட்சி என்று வர்ணிக்கப்படும் காங்கிரஸ் இந்தியாவின் முன்றாவது பெரிய மாநிலமான பீகாரில், இப்போது முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 11இடங்களை மட்டுமே பிடித்தது.(அங்கு உள்ள மொத்த இடங்கள் 243) தமிழ்நாட்டிலிருந்தோ, கேரளத்திலிருந்தோ ஒரு பாரதிய ஜனதா எம்.பி கூடக் கிடையாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வங்கம் கேரளம் தவிர அவற்றின் அண்டைமாநிலங்களில் கூட செல்வாக்குக் கிடையாது. ஒரு தேசியக் கட்சி என்ற தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அளவிற்குக் கூட இடங்களைப் பெறாத உங்களது அங்கீரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷனால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி. இன்று தேசியக் கட்சிகள் என்று தங்களை வர்ணித்துக் கொள்ளும் கட்சிகள் எல்லாம் திட்டுத் திட்டாக சிற்சில பகுதிகளில் செல்வாக்குக் கொண்டவையே அன்றி நாடு முழுக்க ஒரே மாதிரியான செல்வாக்குப் பெற்றவை அல்ல.

எப்படி மாநிலக் கட்சிகளால் தனித்து இந்தியா போன்ற நாட்டை ஆளமுடியாதோ அதே போல தேசியக் கட்சிகளாலும் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. அதனால்தான் கூட்டணிகள் தேவைப்படுகின்றன.

இதே நிலைதான் மாநிலங்களில் நிலவுகிறதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் மாநிலங்களில் மக்கள் கட்சி அடிப்படையில் வாக்களிப்பதில்லை. அவர்கள் தலைமையின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள். அதாவது ஒரு தலைவரிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது அல்லது அவரிடமுள்ள அதிகாரத்தைப் பறிப்பது என்ற அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று எண்ண இடமிருக்கிறது. மாநில அளவில் ஒரு வலுவான தலைமை இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள நிலைகளுக்கு ஏற்ப மாநிலத்தில் உள்ள கட்சிகளில் ஒன்றிற்கு வாக்களிக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் ஆந்திரம். இன்னொரு உதாரணம் கர்நாடகம். ஒரே மாநிலத்தில் செல்வாக்குள்ள தலைவர்கள் பலர் இருந்தால் மக்கள் தீர்ப்பு பல கூறுகளாகப் பிளவுபடுகிறது. பீகாரும், உத்திரபிரதேசமும் இதற்கு உதாரணங்கள். இந்த நிலை இல்லாத போது மக்கள் ஒரு தலைவரிடம் அதிகாரத்தை ஒப்படைக்க அல்லது பறிக்க வாக்களிக்கிறார்கள். நரேந்திரமோடியின் குஜாராத் வெற்றி, ஷீலா தீட்சத்தின் தில்லி வெற்றி, நவீன் பட்நாயக்கின் ஒரிசா வெற்றி இவை சில உதாரணங்கள்.

தமிழ்நாட்டில் தலைமையைப் பற்றி மக்களிடம் குழப்பங்கள் இல்லை. எம்.ஜி.ஆர் இருந்தவரை மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள். அவர் உடல் நலம் குன்றிவிட்ட சூழ்நிலையிலும் கூட அவரைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள். அவர் மறைந்தபின்பு, தனியொரு தலைவர் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் காலங்கள் முடிந்துவிட்டன என்று அரசியல் தலைவர்களில் சிலரே கூட எண்ணினார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989ல் நடந்த தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் தனித் தனியாகப் போட்டியிட்டன. மக்கள் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்போது களத்தில் இருந்த கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ஜானகி ஆகிய தலைவர்களில், மக்கள் பார்வையில் கருணாநிதி பெரும் தலைவர். (Tall leader) அரசியலுக்குப் புதியவர் என்ற போதிலும், ஜெயலலிதாவிற்கு, எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகியைவிட, இரண்டாம் இடம் அளித்தார்கள். கருணாநிதிக்கு மாற்று என்று அவரைக் கருதுவதை சூசகமாகத் தெரிவித்தார்கள். ஜானகி அரசியலைவிட்டு விலக நேர்ந்தது. ராஜீவ் காந்தி 12 முறை வந்து பிரசாரம் செய்த போதும்கூட மூப்பனாருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது.

தமிழ்நாட்டு மக்கள் தலைமையின் அடிப்படையில்தான் தங்கள் தீர்ப்புக்களை எழுதுகிறார்கள் என்பதை பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். மாநில ஆட்சியைக் கூட்டணிகளிடம் ஒப்படைப்பதை அவர்கள் விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல அந்த யோசனைகளை நிராகரித்தும் வந்திருக்கிறார்கள். 1980ல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 இடம்தான் எம்.ஜி.ஆரின் அதிமுகவிற்குக் கிடைத்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி மற்ற 38 இடங்களைக் கைப்பற்றியது. சில மாதங்களில் சட்டமன்றத்திற்குத் தேர்தல் வந்தது. ஒரே கூட்டணியாக காங்கிரசும் திமுகவும் தலா 110 இடங்களில் போட்டியிட்டதாக ஞாபகம். தேர்தலின் போதே அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த முதல்வர் யார் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. கூட்டணி ஆட்சி என்று மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் சொன்னார்கள். அப்போதைய தமிழகக் காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்ரமணியம் 7 பேர் கொண்ட தூதுக்குழுவை தில்லிக்கு அனுப்பி விளக்கம் கேட்டார். இந்திரா காந்தி, கலைஞர் அல்லது கலைஞர் சுட்டிக் காட்டும் ஒருவர் முதல்வராவார் என்று சொல்லி அனுப்பினார்.ஆறுமாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏறத்தாழ அனைத்து இடங்களையும் வென்ற திமுக காங்கிரஸ் கூட்டணி அந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி கண்டது.

தமிழக மக்கள் தலைமையைப் பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள் என்றால் பெரிய கட்சிகள் தனித்தே போட்டியிடலாமே, ஏன் கூட்டணி அமைக்க வேண்டும்? நியாயமான கேள்வி. ஓர் உதாரணம் பார்க்கலாம். ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருக்கிறார்கள், அவர்களில் 55 பேர் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 20 பேர் திமுகவிற்கு வாக்களிக்கிறார்கள். 18 பேர் அதிமுகவிற்கு வாக்களிக்கிறார்கள். 7 பேர் பா.ம.கவிற் கு வாக்களிக்கிறார்கள். 6 பேர் காங்கிரசிற்கு வாக்களிக்கிறார்கள். 4 பேர் கம்யூனிஸ்ட்களுக்கோ, மதிமுகவிற்கோ வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஐந்து பேரும் தனித்தனியாகப் போட்டியிட்டால் திமுக ஜெயித்துவிடும். அது மற்றவர்களுக்கும் தெரியும். அதே போல தங்களது 7 வாக்குகளை வைத்துக் கொண்டோ , 6 வாக்குகளை வைத்துக் கொண்டே தாங்கள் ஜெயிக்க முடியாது என்றும் தெரியும். பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தாலும் ஜெயிக்க முடியாது என்றும் தெரியும் அதே போல தாங்கள் ஜெயலலிதா கருணாநிதி இவர்களில் யாரேனும் ஒருவர் பக்கம் சேர்ந்துவிட்டால் அவர்களை அமோக வெற்றி பெறச் செய்துவிடலாம் என்றும் தெரியும். எனவே யாரிடம் அதிகம் பலன் பெறலாம் என்று அரசியல் கட்சிகள் யோசிக்க ஆரம்பிக்கின்றன. பெரிய கட்சிகளும் அவர்கள் மற்றவர்கள் பக்கம் போய் விடாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றன. அதனால் தங்களைவிடப் பலம் குறைந்த கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. கான்கிரீட் வீடு மழையில் கரைந்து விடாது என்றாலும் ஜன்னல் வழியாக மழைச்சாரலடித்து துணியோ புத்தகமோ படுக்கையோ நனைந்து விடக்கூடாது என்று ஜன்னக் கதவை சாத்தி வைப்பதில்லையா அது போல்தான் இது. ஒரு தற்காப்பு நடவடிக்கை (Preventive measure)

மத்தியில் நீங்கள் ஆட்சி அமைக்க நாங்கள் உதவுகிறோம், மாநிலத்தில் எங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள் என திமுகவும் காங்கிரசும் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அதில் முதல் பகுதி நிறைவேறிவிடுகிறது. இரண்டாம் பகுதி நிறைவேறும் முன் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறுக்கு சால் ஓட்டினால் அது முறையா?

சோனியா பிரதமராக வேண்டும் என்ற கோஷத்தை முதலில் எழுப்பியது திமுக. தேர்தலிலும், தேர்தலுக்குப் பின்னும் அதை வற்புறுத்தியது. இப்போது திமுக ஆட்சிக்குக் குரல் கொடுக்க வேண்டியது காங்கிரசின் முறை. ஆனால் அங்கு சில தலைவர்கள் வேறு கனவுகள் காண்கிறார்கள்.

தற்போது தமிழகத்தில் அதிமுகவிற்கு சாதகமான உணர்வுகள் இருப்பதாக உறுதியாக சொல்ல முடியாது. ஜெயேந்திரர் கைது போன்ற சம்பவங்களால் அது அதற்கிருந்த சில ஆதரவுத் தளங்களை இழந்திருக்கிறது. சுனாமி நிவாரணம், ரேஷன் கார்டு புதுப்பித்தல் இவற்றில் ஏற்பட்ட குழப்பங்கள் அதற்கு பின்னடைவைத் தந்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவை பதிபக்தி இல்லாதவர் என்கிற அளவிற்குத் தரம் தாழ்ந்து பேசியாற்று. அண்மையில் சட்ட மன்றத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை காலி டப்பா என்றெல்லாம் பேசியாயிற்று. இதற்கப்புறமும் காங்கிரஸ் அதிமுக உறவு ஏற்பட வாய்ப்பில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றிருப்பதால் பாமகவும் அதிமுகவுடன் அணி சேர வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் திமுகவை விட்டு விலகிச் சென்றால் யாருக்கு லாபம்?

நிச்சியம் காங்கிரசிற்கு இல்லை. மத்தியில் அதன் ஆட்சி நிலைக்காது. மாநிலத்தில் அது தனித்தோ, மூன்றாவது அணி அமைத்தோ ஆட்சியைப் பிடிக்க முடியாது. மற்ற கட்சிகள் மத்தியில் உள்ள கூட்டணியை விட்டு விலகி வராத நிலையில் அது தமிழகத்தில் தனிமைப்பட்டு போகும். அதிகம் போனால் அது திமுக வெற்றி பெறக் கூடிய இடங்களின் எண்ணிக்கையை சிறிதளவு குறைக்கலாம். ஆனால் திமுக இதற்கெல்லாம் அஞ்சுகிற கட்சி அல்ல. பலமுறை ஆட்சிக் கலைப்பை எதிர் கொண்டவர்கள். பனிரெண்டு ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருக்க நேர்ந்த போதும் குலையாத கட்சி அது. பதவியிலிருந்து பலன் பெறாவிட்டாலும் அவர்கள் கட்சிக்கு செய்கிறார்கள் என்று அண்மையில் ஜெயலலிதாவே திமுகவினரின் விசுவாசம் பற்றிப் பேசியிருக்கிறார். கட்சிக்கு எதுவும் நடந்து விடாது. அதிமுகவிற்கு மாற்று திமுக என்ற நிலை தமிழகத்தில் இருப்பதால் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் அனுபவத்தின் அடிப்படையில் மக்கள் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளும் போது தங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அது நம்பிக்கை கொள்ள இடமிருக்கிறது. வரலாற்றைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஆட்சியில் இருக்கிற கட்சியை தொடர்ந்து ஆளும் விதமாக மக்கள் வாக்களிப்பதில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

காங்கிரசிற்கு உதவாது, அது தனிமைப்பட்டு போகும் அபாயம் இருக்கிறது என்று தெரிந்திருந்தும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள்? மத்தியில் தங்கள் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதைவிட மாநிலத்தில் தங்களுக்கு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசலை சமாளிக்க அது உதவும் னைக்கிறார்கள்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசின் உளவுத் துறை அமைச்சர்களின் செயல்பாடு பற்றி புலனாய்ந்து பிரதமருக்கு ஓர் ரகசிய அறிக்கை கொடுக்கும். அண்மையில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை இளங்கோவனுக்கு சாதகமாக இல்லை. அதுவும் தவிர இப்போது வாசன் கோஷ்டியைச் சேர்ந்த எவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அவரது எதிர் கோஷ்டியினரில் பலருக்கு ஏதோ ஒரு பதவி கிடைத்து விட்டது. சிதம்பரம், மணி சங்கர், இளங்கோவன் அமைச்சர்கள், சுதர்சன நாச்சியப்பன் பொதுச் செயலாளர். ஜெயந்தி நடராஜன் செய்தித் தொடர்பாளர். இதனால் வாசன் கோஷ்டிக்கு பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இளங்கோவனை நீக்கிவிட்டு வாசனை அமைச்சரவையில் சேர்க்கலாமா என்று பிரதமர் யோசித்து வருவதாக தில்ல்லி வட்டாரத்தில் தகவல்கள் கசிகின்றன. இதனால் கூட்டணி ஆட்சி பற்றிப் பேசினால் பதவி போனாலும், பழியை கருணாநிதி மீது போட்டு முகத்தைக் காப்பாற்ற்றிக் கொள்ளலாம் ( Face Saving technique) என்று இளங்கோவன் முயற்சிக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அது வடிவேலு பளு தூக்கிய கதையாக ஆகிவிட்டது.

Tuesday, March 01, 2005

பெரியண்ணன் கண்காணிக்கிறார்

என்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னதையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன.நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்நாளில் கணினியைக் கண்ணால் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். எழுத்துலகில் நோபல் பரிசு புக்கர் பரிசு, புலிட்சர் பரிசு ஆகிய சர்வதேச பரிசுகளை வென்றவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருக்கிறார்கள். தன்னுடைய பெயரையைக் கூட எழுதத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். ஒரு கப் காபிக்கு 40 ரூபாய் கொடுக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். 40 ரூபாய் சம்பாதிக்க ஒருநாள் முழுக்க உழைக்க வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஒரு தலைவலிக்கு உடல் முழுக்க ஸ்கேன் செய்து பார்த்துவிடும் வசதிகள் நகர்புறத்தில் உண்டு. உயிர் போகும் நிலையில் கூட மருத்துவ வசதிகள் இல்லாத கிராமங்களும் உண்டு.

இந்த இரண்டாவது இந்தியாவைப் பற்றி படித்தவர்கள் கவலைப்படுவதில்லை. பட்ஜெட் என்று வந்தால் வருமானவரி குறையுமா? வங்கி டெபாசிட்டிற்கு வட்டி கூடுமா? டெலிவிஷன் பெட்டிக்கு விலை குறையுமா என்றுதான் நடுத்தர வர்க்கம் கவலைப்படுகிறது.
இந்த பட்ஜெட் கிராமப்புற வளர்ச்சிக்கு உந்துதல் தர முனைகிறது. வெறும் வளர்ச்சி என்று பொத்தாம் பொதுவில் பேசாமல், இத்தனை வீடுகள், இத்தனை டெலிபோன்கள், இத்தனை ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம், இத்தனை பேர் குடியிருக்கும் கிராமங்களுக்கு சாலைகள் என்று பேசுகிறது. அதை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது. ஒரு திட்டத்தை (Project) வணிக நிறுவனங்கள் அணுகுவதைப் போல அணுகுகிறது.ஆனால்-இந்தத் திட்டங்களை மாநில அரசின் வழியாகத்தான் நிறைவேற்ற முடியும். நம் அரசமைப்பு அப்படி. மாநில அரசுகள் இதை அரசியலாக்கினால் இது குட்டிச்சுவராக வாய்ப்புண்டு. இதில் பஞ்சாயத்துக்களை ஈடுபடுத்தப்போவதாக சொல்லியிருக்கிறார். நல்ல எண்ணம். நேரடியாகவே பஞ்சாயத்துக்கள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கலாம். ஆனால் அதை அரசியல் கட்சிகள் அனுமதிக்காது.

இந்தியாவின் பிரசினை delivery at the last mile. கடைசிக் கைக்கு எப்படி ரொட்டியை கடத்துவது என்பதைக் குறித்து பேசுகிறோம், பேசுகிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோம். போன பட்ஜெட்டில் நி.அ இதைப் பற்றி பேசினார். இந்த முறையும் சில வார்த்தைகள் சொன்னார். civil society அரசுக்கு இதைப்பற்றி ஆலோசனை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். ("Civil society should also engage Government in a healthy debate on the efficiency of the delivery mechanism."-FM Budget speech para 100)பிரதமர் தரமான நடைமுறைப்படுத்தல் (Quality implementation) பற்றி மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். சிலமாதங்களுக்கு முன் இந்தியா முழுவதிலும் உள்ள IAS அதிகாரிகளை அழைத்துப் பேசினார். இப்போது நி.அ "At the same time, I must caution that outlays do not necessarily mean outcomes. The people of the country are concerned with outcomes." என்கிறார். எல்லோருக்கும் பிரசினை என்னவென்ரு தெரிந்திருக்கிறது. தீர்வு என்னவென்றுதான் தெரியவில்லை.

இந்த பட்ஜெட்டின் இன்னொரு ஆக்கபூர்வமான அம்சம் நுண்கடனுக்கு அரசு அளிக்க முன் வந்திருக்கும் ஊக்கம். வங்கிகளோடு நுண்கடன் அமைப்புகளுக்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவை வெளிநாட்டில் நிதி திரட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பற்றி மேலும் அறிந்து கொள்ள அருணா ஸ்ரீநிவாசனின் இம்மாத திசைகள் கட்டுரையைப் பார்க்கவும்.

அருணா, நீங்கள் சொல்வது போல 50000 செலவுக்கு 50050 எடுக்க வேண்டியதில்லை. அந்த 50 ரூபாயை உங்கள் கணக்கிலிருந்து எடுத்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியது வங்கிகளின் பொறுப்பு. அவர்கள் வேலைப் பளுதான் கூடும்.

இதைக் கொண்டு கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்பது அபத்தம். இது கறுப்புப் பணம் அதிகரிக்கத்தான் உதவும். என்னைப் போன்ற மாதக் கூலிகளின் (salaried class ஐத்தான் சொல்கிறேன்) சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துப்படுகிறது. நான் செலவிற்கு அங்கிருந்தான் பணம் எடுக்கமுடியும். ஆனால் வணிகர்கள் பணத்தை வங்கியில் செலுத்தாமல், கல்லாவிலிருந்தே செலவுக்கு எடுத்துத் தரமுடியும். எனவே அவர்கள் கையில் ரொக்கமாகவே பணம் வைத்துக் கொள்ளத் தலைப்படுவார்கள். ரொக்கமாகவே பரிவர்த்தனை நடக்கும். இதுதான் கறுப்புப் பணம் உருவாவதன் ஆரம்பம். வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமல்ல, உங்களது Fixed Deposit முதிர்வடைந்து அதைப் பணமாகப் பெறுவது என்றால் கூட இந்த வரியை செலுத்த வேண்டும்.

அறிவியல் புனகதைகளில் வருவது போல அரசாங்கம் முதுகிற்குப் பின் நின்று கண்காணிக்க முற்படுகிறது என்று நான் சந்தேகப்படுகிறேன்.Yes! the big brother is watching! அண்மையில் பங்குகள் வாங்குவதற்கு ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பங்குகள் வாங்குபவரின் விரல் ரேகைகள் பதிந்து கொள்ளப்பட்டு, புகைப்படத்துடன் ஒரு அட்டையும் எண்ணும் வழங்கப்பட்டது.((MAPIN) இந்த அட்டை இருந்தால்தான் பங்குகள் வாங்கவோ விற்கவோ முடியும். இப்போது வங்கிகளில் 10000 ரூக்கு மேல் dd வாங்க வேண்டுமானால் முகவரி, PAN எண் எல்லாம் கொடுக்க வேண்டும்.இவற்றின் தொடர்ச்சிதான் இந்த வரி விதிப்பு முறை என நான் சந்தேகப்படுகிறேன்.
ஏற்கனவே செல்போன் மூலம் நம் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் நம் அந்தரங்களைப் பறித்துக் கொள்கிறதோ? கண்ணாடிச் சுவர்களால் ஆன அறைக்குள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கிறோமோ?

Tuesday, February 08, 2005

கருத்தைக் கவர்ந்த காரைக்குடி கோயில்

அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

நான் கலந்து கொள்ளும் விழா நடக்க இருந்த இடத்தின் பின்னே ஓர் உயர்ந்த கோபுரம் தென்பட்டது. ஐம்பது அறுபதடி இருக்கும். அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். என்ன கோயில் என்று பார்க்கலாம் என்று போனேன். ஓர் இனிய அதிர்ச்சி.

அது தமிழ்த்தாய்க் கோயில்! ஆம் தமிழ்நாட்டில் தமிழ்த் தாய்க்கு கோயில் இருக்கிறது. காரைக்குடியில் மட்டுமே இருக்கிறது. அண்மைக்காலத்தில் கட்டப்பட்டதுதான். தன்னைக் கம்பன் அடிப்பொடி என்றழைத்துக் கொண்ட திரு.சா.கணேசன் முயற்சியில் கட்டப்பட்ட கோயில். சிறிய கோயில்தான். ஆனால் அதைக் கட்டவே 18 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 1975ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட கோயில் 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அடிக்கல் நாட்டியதும் கலைஞர், திறந்து வைத்ததும் அவர்தான் (அவர் ஆட்சியில் இல்லாத போதும் அவரையே திறந்து வைக்க அழைத்திருப்பது துணிச்சலான செயல்தான்!)

மூன்று படிகள் ஏறிப்போனதுமே கருவறை வந்து விடுகிறது. அறுகோணமாக அமைந்த கருவறை. அதில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறாள் தமிழன்னை. நான்கு கைகள். மேலிருக்கும் வலக்கையில் அறிவுச் சுடர். கீழிருக்கும் வலக்கையில் ருத்திராட்சம் போல ஒரு மணியாரம். மேல் இடக்கையில் ஒரு யாழ். கீழ் இடக்கையில் சுவடிகள். கிரீடம் இருக்கிறது. கீரிடத்தின் உச்சியில் பாண்டியர் சின்னமான இரு மீன்கள். பின்னுள்ள திருவாச்சியின் இடப்புறமும், வலப்புறமும் சோழ சேரர்களது சின்னங்களான புலி-வில். ஆறடிக்கும் மேலிருக்கும் கருங்கல் சிலை. கோயில் சிலைகளைப் போல எண்ணை தடவிக் கறுக்க வைத்திருக்கிறார்கள்.அந்த மினுமினுப்பு இப்போதும் இருக்கிறது. பூசை எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. மாலையோ, பூக்களையோ, தீபங்களையோ நான் பார்க்கவில்லை.


அன்னையின் காலடியில் வலப்புறத்தில் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நிற்கிறார்கள். தனித்தனி சிலைகள். இரண்டு அடி இருக்கலாம். அகத்தியர் குள்ளமாக, முன் தள்ளிய தொந்தியும், அடர்ந்து நீண்ட தாடியுமாக இருக்கிறார். தொல்காப்பியர் சற்று உயரமாக, தாடியில்லாமல், உச்சியில் கொண்டையாக முடிந்த முடியோடு இருக்கிறார்கள். இருவருமே நம்மைக் கைகூப்பித் தொழுகிறார்கள். கருவறைக்கு வெளியே வரித்தாய், ஒலித்தாய் என இரு மங்கையர் காவற் பெண்டுகளாக இருக்கிறார்கள்.

தமிழ்க் கோயிலில் இன்னும் மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. அன்னையின் வலப்புறமாக இருப்பது வள்ளுவன் சந்நிதி. இதுவும் அறுகோணம்தான். ஆனால் அன்னையின் சந்நிதியைவிட சிறியது. சென்னைவாசிகள், எழுபதுகளில் நகரப் பேருந்துகளில் பார்த்திருக்கும் அதே சாயலில் இருக்கிறார் வள்ளுவர். கன்னியாகுமரி போலில்லாமல் உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். இடப்புறம் இருக்கும் சந்நிதி கம்பனுடையது. மேல்துண்டை நெஞ்சுக்குக் குறுக்கே வீசிப்போட்டு, சப்பணம் இட்டு கையில் எழுத்தாணியுடன் இருக்கிறார். மூன்றாவது சந்நிதி கருவறையின் பின்னே உள்ளது. அது இளங்கோவின் சந்நிதி. எல்லாச் சிலைகளுமே லட்சணமாக இருக்கின்றன.ஆனால் இருப்பனவற்றிலேயே மிக அழகான சிலை இளங்கோவினுடயதுதான். மொட்டைத் தலையோடு முகத்தில் முறுவல் தவழ வலக்காலை குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கிறார். முகத்தில் இளமை பொலிகிறது.

பேசுகிற மொழியைக் கும்பிடுகிற தெய்வமாகப் பார்ப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத உணர்ச்சித் தீவிரம் - சென்டிமென்ட்- என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்தக் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது. அந்த சிலைகளுக்குப் பின்னுள்ள கற்பனை எனக்குப் பிடித்திருந்தது. அவற்றை வடிக்க உந்திய அழகுணர்ச்சி எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் கற்பனையை கல்லில் வடிக்கக் காசு கொடுக்க முன்வந்த வள்ளல் தன்மை எனக்குப் பிடித்திருந்தது.

செட்டி நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காசில் கெட்டி என்று தமிழ்நாட்டில் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் தமிழ்க்கல்விக்கு, தமிழ் இசைக்கு, தமிழ் இறையியலுக்கு, தமிழ் இதழியலுக்கு, தமிழ்பதிப்புலகிற்கு, தமிழர் வணிகத்திற்கு, தமிழர் தொழில் வளர்ச்சிக்கு, ஏன் தமிழ் சினிமாவிற்குக்கூட அளித்திருக்கிற கொடைகள் ஏராளம். 1948ல் 10 லட்சரூபாய் பனமும், 300 ஏக்கர் நிலமும் அரசுக்குக் கொடையாகக் கொடுத்து காரைக்குடிக்கு மத்திய மின் வேதியல் ஆய்வு நிறுவனத்தைக் கொண்டு வந்தார் அழகப்பர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேணிய தமிழறிஞர்களின் பட்டியல் பெரியது. ஒரு அண்ணாமலை அரசர், அழகப்பர், ஆர்.கே.சண்முகம், ஏ.எம். முருகப்பர், சக்தி கோவிந்தன், சின்ன அண்ணாமலை, சா.கணேசன், குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ஏ.வி.மெய்யப்பன், கண்ணதாசன், மனோரமா இல்லாமல் இருந்திருந்தால் தமிழர் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதன் அர்த்தம் புரியும்.

நகரத்தார்கள் சிங்கப்பூருக்கு எப்போது வந்து குடியேறினார்கள் எனத் தெரியவில்லை. சிங்கப்பூரின் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1824ல் நடந்ததாகத் தெரிகிறது. அப்போதிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 756.'இவர்களில் பெரும்பாலனோர் கண்ணியமான வணிகர்கள்' என்று பக்லி என்ற நூலாசிரியர் எழுதுகிறார். இந்த கண்ணியமான வணிகர்களில் பலர் நகரத்தாராக இருந்திருக்கலாம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு செட்டியார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற ஒரு வர்த்தக சபை உருவாக்கப்படுகிறது. இந்த வணிகர்கள் சிங்கப்பூர் ஆற்றின் அருகே உள்ள கடைத் தெருவில் கிட்டங்கிகள் எனப்படும் சேமிப்புக் கிடங்குகள் வைத்திருந்ததாகவும் பின்னால் நகர் சீரமைப்பின் போது அவை கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் படித்திருக்கிறேன்.


சிங்கை செட்டியார்களின் வரலாற்றைப் பற்றி யாரேனும் ஆய்வுகள் செய்திருக்கிறார்களா?


இது நான் சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதியது. அதற்குப் பின் கிடைத்த சில தகவல்கள் நாளை

Monday, February 07, 2005

கவனிப்பாரற்றுக் கிடக்குது கண்ணதாசன் மணி மண்டபம்

"பாட்டெழுதுகிறேன், பாட்டு எழுதுகிறேன் "என்று நிர்வாகிகளிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்தான். அந்தப் பாட்டுத்தான் மிஞ்சியதே தவிர சினிமாப்பாட்டுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவனுக்கு எழுதத் தெரியும் என்று கூட யாரும் நம்பவில்லை"

இதை எழுதியது யாராக இருக்கக் கூடும் என்று ஊகிக்க முடிகிறதா?

கண்ணதாசன். ஆமாம் யாருடைய திரைப்படப் பாடøகளில் ஒரு தலைமுறை மனதைப் பறி கொடுத்துக் கிறங்கிக் கிடந்ததோ அந்தக் கவியரசுக் கண்ணதாசன் தனது ஆரம்ப நாட்கள் குறித்து தனது சுயசரிதை வனவாசத்தில் எழுதிய வரிகள் இவை.

அந்த சுயசரிதை பாசாங்கற்ற ஒரு வாழ்க்கைச் சரிதம். அவன் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டு தன்னுடைய வறுமை, திருட்டு, காமம், ஆசைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், தன் தந்தையின் சீட்டாட்டப் பிரியம், தான் சந்தித்தப் பெண்கள், அரசியல் தந்த எழுட்சி, அங்கு சந்தித்த வஞ்சகம் எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இன்றி எழுதியிருப்பார். 'சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன். சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்' என்று அவரே குறிப்பிட்டிருப்பார்.

அந்த சுயசரிதத்தில், மீசை அரும்பத் துவங்கிய பருவத்து இளைஞனாக, திருச்சி, சென்னை, சேலம், கோவை என்று எல்லா நகரங்களிலும் வயிற்றில் பசியோடு, மனதில் கனவோடு சுற்றிய நாள்களை அவர் விவரிப்பதைக் படிப்பவர் நெஞ்சில் இரக்கம் கசியும்.

ஆனால் அதைவிட மனம் அனுதாபத்தில் கசிந்த அனுபவம் எனக்கு வாய்த்தது. காரைக்குடியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்க என்னை அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சிக்குப் பின் ஓய்விருந்ததால் ஊரைச் சுற்றக் கிளம்பினேன்.

நகரின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கிறது கண்ணதாசன் மணி மண்டபம். நெடிதுயர்ந்த தூண்கள் மீது விரிந்த ஓர் விதானம் முகப்பாக அமைந்திருக்கிறது. அரண்மனை போன்ற ஒரு கம்பீரம். ஆனால் கம்பீரம் அந்த முகப்போடு முடிந்து விடுகிறது. நுழைந்தவுடன் இடப்புறம் ஒரு குறுகிய ஆனால் நீண்ட அறை. அங்கே நான்கைந்து அலமாரிகள். எல்லாவற்றிலுமாகச் சேர்த்து ஒரு 300 அல்லது நானுறு புத்தகங்கள் இருக்கலாம். அரிய புத்தகம் என்றோ, கண்ணதாசனைப் பற்றிய புத்தகம் என்றோ ஒன்றும் என் கண்ணில் படவில்லை. 1962ல் நான்கு ரூபாய் விலையில் துவங்கி பற்பல பதிப்புகள் கண்ட வனவாசம் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. சுடச்சுட விற்றுத் தீர்ந்த அவரது அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கூடக் காணவில்லை.

நூல்கள் மட்டுமல்ல, நூலகரைக் கூடக் காணோம்!. நான் போன நேரம் அந்தக் கட்டிடத்தில் துப்புரவுப் பணிகள் செய்யும் ஒரு நடுத்தரவயதுப் பெண்மணியும் அவருக்குப் 'பேச்சுத் துணையாக' இன்னொரு மூதாட்டியும் மட்டும் அங்கு இருந்தார்கள்.

கண்ணதாசனின் நூல்கள் மட்டுமல்ல, கண்ணதாசனைப் பற்றிய எந்த செய்தியையும் அங்கு வருகிறவர்கள் அறிந்து கொள்ள முடியாது. சில கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதைத் தவிர கண்ணதாசன் யார், எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார், அவருக்கும் காரைக்குடிக்கும் என்ன சம்பந்தம், என்னென்ன எழுதினார், எந்தெந்தத் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார், அவர் வாழ்கிறாரா, அவர் இறந்துவிட்டாரா என்பதைப்பற்றி அங்கு சிறு குறிப்புக் கூடக் கிடையாது.

பிரம்மாண்டமான கூடம் ஒன்று இருக்கிறது. அதைத் திறந்து காட்டச் சொன்னபோது, "கலியாணத்துக்குக் கொடுக்கமாட்டாங்க" என்று அவசர அவசரமாக மறுத்தார் அந்தப் பணிப்பெண். "கூட்டத்திற்குத்தான் கொடுப்பாக. நாள் வாடக எழுநூறு ரூபா" என்று விவரம் சொன்னவர், "இடம் 'புக்கு' பண்ணனும்னா, சிவகங்கைக்கு ( மாவட்டத் தலைநகர்) போயி பி.ஆர்.ஓ (மக்கள் தொடர்பு அதிகாரியை)வைப் பாருங்க" என்றார்.

கட்டிடத்தின் முகப்பில், திறந்த வெளியில் கண்ணதாசனின் மார்பளவுச் சிலை ஒன்று இருக்கிறது. ஒருபுறம் அவரது திரைப்பாடலின் வரிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சிலையின் முன்புறம், சிலைத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களின் (அவர்களில் சிலர் இப்போது அதிமுகவில் இல்லை) நீண்டதொரு பெயர்ப்பட்டியல் இருக்கிறது!

எவ்வளவு பெரிய கவிஞன்! உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களை ஏதோ ஒரு விதத்தில் தொட்டு உலுக்கிய படைப்பாளி. நாற்பது வயதைத் தாண்டியவர்களை அவர்களுக்குப் பிடித்த பத்து சினிமாப் பாடல்களைப் பட்டியலிடச் சொன்னால் அதில் நிச்சியம் நான்கைந்து கண்ணதாசனுடையதாக இருக்கும்.

ஒருமுறை, ம.பொ.சி. இனி கண்ணதாசன் அரசியலை விட்டுவிட்டு உயர்ந்த விஷயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று சொல்லியதை அடுத்து, தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு ஒரு சுயவிமர்சனக் கவிதை எழுதினார்:

மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்

மலையளவு தூக்கி உடன்
வலிக்கும்வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்


நானிடறி வீழ்ந்த இடம்
நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்


நடைபாதை வணிகனென
நான் கூறி விற்ற பொருள்
நல்ல பொருள் இல்லை அதிகம்


ஊர்நெடுக என் பாட்டை
உளமுருகப் பாடுகையில்
ஓர் துயரம் என்னுள் வருமே!

உதவாத பாடல் பல
உணராதார் மேல் பாடி
ஓய்ந்தனையே பாழும் மனமே!


எழுத்தாளர்களுக்கு, அதிலும் கவிஞர்களுக்கு ஈகோ அதிகம். தன்னுடைய ஒவ்வொரு எழுத்தும் பொன்னெழுத்து என்று நம்புபவர்கள் அவர்கள். இலக்கிய உலகில் நெருக்கமாக இருந்த பல நட்புக்கள் விமர்சனங்களைத் தாங்க முடியாமலே முறிந்திருக்கின்றன; திரிந்திருக்கின்றன.நாலைந்து ஆண்டுகளாக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும், இரண்டு புத்தகம் போட்டுவிட்ட படைப்பாளிகளிடமே கூட இந்த மனோபாவத்தைப் பார்க்க முடியும்.

ஆனால் கண்ணதாசன் தன்னைப் பற்றிய ஒரு கசப்பான சுய விமர்சனத்தை எழுதிக் கொண்டார். அதற்கான மன முதிர்ச்சி அவருக்கு இருந்தது. அந்த கவிதையின் இறுதியில், 'இனி மனிதனைப் பாட மாட்டேன்' என்று எழுதினார் கவிஞர்.

பதறிப்போன இன்னொரு மூத்த கவிஞர் திருமதி. செளந்திரா கைலாசம், அதே சந்தத்தில் 'மனிதனைப் பாடு மனமே' என்று பதிலுக்கு ஒரு பாட்டெழுதினார். அதில் அவர் சொன்னதைப் போல, கண்ணதாசன் "தடுமாறும் வேளையிலும் கவி பாடும் மேதையவன், தவறாது தாளம் விழுமே!"

இவ்வளவும் அந்த மணிமண்டபத்தைச் சுற்றி வந்த போது மனதில் வந்து போயின. அந்த மண்டபத்தின் பராமரிப்பு அந்தக் கவிஞனுக்கே செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு. அத்தனை லட்சம் செலவழித்துக் கட்டிடம் கட்டியவர்களுக்கு அதற்குள் சில ஆயிரம் ரூபாய்களுக்கு அவரது நூல்களை சேகரித்து வைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? செலவழிக்க வேண்டாம், இலவசமாகக் கேட்டால் கூட அவரது அபிமானிகள் கொண்டு வந்து கொட்டியிருப்பார்களே? அவரது வாழ்க்கைப் பயணம், அவரது இலக்கியப் பயணம் ஆகியவை குறித்து ஒரு கண்காட்சி அமைத்திருக்கக் கூடாதா? என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத கற்பனை வறட்சியா? அல்லது ஏன் செய்ய வேண்டும் என்ற அலட்சியமா?

கேள்விகள் மொய்ய்க்க அந்த மண்டபத்தைவிட்டு வெளியே வந்தேன். கையாலாகாத ஊமைக் கோபம், ஒன்றுக்கும் உதவாத எரிச்சல் எல்லாமாகச் சேர்ந்து கொள்ள எனக்கு அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட வேண்டும் எனத் தோன்றியது. நான் கலந்து கொள்ள இருந்த மாலை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே போய்விட்டேன். இருப்புக் கொள்ளாமல் அந்த அரங்கைச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அது நாளையப் பதிவில்..

Monday, January 31, 2005

வலைப்பதிவுகளுக்கு திசைகள் வழங்கும் பரிசுகள்

2005ம் ஆண்டின் சிறந்த வலைப்பதிவு (Best Blog of the year)க்கு ஒரு பரிசு, இந்த ஆண்டு (2005) முழுவதும் தொடர்ச்சியாக வலைப்பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் பத்துப் பேருக்குப் பரிசு, எனப்பரிசுகள் காத்திருக்கின்றன. அத்துடன்ஒவ்வொரு வாரமும் வலைப்பதிவுகளில் கருத்தைக் கவர்ந்த சிலவற்றைத் தொகுத்து வெளியிடவும் திசைகள் விரும்புகிறது.
விவரங்களுக்கு பிப்ரவரி திசைகள் இதழைப் பாருங்கள் (http://www.thisaigal.com)