1 week ago
Monday, June 25, 2007
ஜனநாயகப் பொம்மலாட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் வட இந்தியப் பத்திரிகைகள், குறிப்பாக சில தொலைக்காட்சிகள், ஒரு 'முக்கியமான' விவாதத்தை நடத்தின.குடியரசுத் தலைவர் என்பதற்கான இந்திச் சொல் ராஷ்ட்டிரபதி. பதி என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல். அதற்கிணையான பெண்பால் பத்தினி. ஆனால் பத்தினி என்பதற்கு மனைவி என்றும் ஒரு பொருள் உண்டு. எனவே ஒரு பெண் குடியரசுத் தலைவரானால் எப்படி அழைக்கப்படுவார்? ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது. ராஷ்டிரபத்தினி என்று அழைப்பது, தேசத்தின் மனைவி எனப் பொருள் தரக்கூடும் என்பதால் அது அபத்தமானது. அப்படியானல் அவரை எப்படி இந்தியில் குறிப்பிடுவது? இதுதான் ஊடகங்கள் நடத்திய அந்த 'முக்கிய' விவாதம்.
இன்னொரு தொலைக்காட்சி, ஒரு பெண் குடியரசுத் தலைவரானால், ராணுவம் அவரது ஆணைகளை ஏற்குமா என்று விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொண்டது. நம் அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் தலைவர்தான் முப்படைகளின் தளபதியும் கூட, எனவே ஆண்கள் அதிகம் உள்ள ராணுவம் ஒரு பெண்ணின் ஆணைக்குக் கீழ்ப்படியுமா என்பது அவர்களது சந்தேகம்.
இந்த இரு நடத்தைகளும், நம் சமூகத்தில் ஆணாதிக்க மனோபாவம் எத்தனை ஆழமாக வேரூன்றிக் கிடக்கிறது என்பதையும் அது எப்படி. ஊடகங்களில் பணியாற்றும் 'நவீன' இளைஞர்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
தமிழில் குடியரசுத் தலைவரை எப்படி அழைப்பது என்ற 'சிக்கல்' இல்லை.ஒரு பெண் குடியரசுத் தலைவர் ஆனால் அவரைத் தலைவி என்று கூட அழைக்க வேண்டியதில்லை. தலைவர் என்றே தொடர்ந்தே அழைத்து வரலாம். தலைவர், கவிஞர், இளைஞர், மாணவர், புலவர், அறிஞர் என்பவை இருபாலருக்கும் பொருந்தக் கூடிய தமிழ்ச் சொற்கள். (சில அறிவு ஜீவிகள் கவிதாயினி, இளைஞி என்றெல்லாம் எழுதுவது தமிழ் அல்ல).
ஆனால் தமிழில் வார்த்தைப் பஞ்சம் இல்லை என்பதால், தமிழர்களிடையே ஆணாதிக்க மனோபாவம் இல்லை என்றாகிவிடாது.பெண் சிசுக் கொலைகளிலிருந்து, பெண்கவிஞர்கள் மீது வீசப்படும் வசைகள் வரை பலநூறு சான்றுகள் நம் முகத்தின் முன் நின்று இளிக்கின்றன.
உண்மையில் இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் பெண் அதிகாரம் பெறுவதற்கும், அதற்கு எதிரானதற்குமான ஓர் போட்டி அல்ல. பெண்களை முன்னிறுத்தி, அவர்கள் பெயரால், ஆதிக்க சக்திகள் அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றுகிற ஒரு முயற்சி. உள்ளாட்சிகளில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, ஆண்கள் தங்கள் குடும்பப் பெண்களை பொம்மை வேட்பாளராக நிறுத்திக் கைப்பற்ற முயல்வதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் இல்லை.
இன்று பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக ஆகும் வாய்ப்பினைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைந்து பேரணிகள் நடத்துகிற திமுக, கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அவருக்கு எதிராக வாக்களித்தது என்பது வரலாறு. எவருக்கும் பொம்மையாகச் செயல்பட மறுத்து, சொந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படும் ஜெயலலிதா போன்ற பெண்தலைவர்கள் -அவற்றில் பல தவறானவை, அகங்காரத்தில் பிறந்தவை என்ற போதிலும் கூட- பெண் என்ற பாலியல் நோக்கில் எப்படி திமுக மேடைகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளில் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அதிகம் எழுதாமலே எல்லாரும் அறிவர். அண்மையில். 'பெண்கள் இப்படியெல்லாம் பேசக்கூடாது' எனச் சட்டமன்றத்திலேயே முதல்வரே கூடப் பேசியிருக்கிறார்.திமுக இன்று நடத்த முன்வரும் உற்சவங்கள் எல்லாம், அண்மையில் மாநிலங்களவைக்கு முன்மொழியப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கில் இறக்கிவிடப்பட்டிருக்கும், முதல்வரின் மகள் கணிமொழிக்கு கட்சிக்குள்ளும், தேசிய அளவிலும் முக்கியத்துவம் கொடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடும்.
பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என உரத்த குரலில் முழங்குகிற மார்க்சிஸ்ட் கட்சியின் உச்ச அதிகார அமைப்பான பொலிட்பீரோவில் அண்மைக்காலம் வரை பெண்களுக்கு இடமிருந்ததில்லை. லாலுவின் கட்சி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதைப் பகிரங்கமாக எதிர்த்த கட்சி.
எனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் விரும்புவது பெண்கள் அதிகாரம் பெறுவதை அல்ல, தங்கள் பேச்சைக் கேட்டு நடக்கும், தங்களுக்கு விசுவாசமாக இருக்கும், ஆமாம் சாமியான ஒரு பெண் அதிகாரம் பெறுவதையே.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகப் பிரதீபா பாடில் தேர்ந்தெடுகப்பட்டது எப்படி? இதை ஆராய்ந்தால் அவர் எப்படி ஒரு பொம்மையாக முன்நிறுத்தப்படுகிறார் என்பது புரிந்துவிடும்.
அப்துல்கலாமின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, இப்போது துணைக் குடியரசுத் தலைவராக உள்ள பைரோவன் ஷெகாவத் களமிறங்கத் தயாரானார். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் என்பதாலும், மூன்று முறை பா,ஜ,கவின் சார்பில் ராஜஸ்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும், ஆளும் கூட்டணியில் உள்ள பல கட்சிகளை அவரை ஆதரிக்க விரும்பவில்லை.இடதுசாரிகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.அப்துல் கலாமே இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதையும் இடதுசாரிகள் விரும்பவில்லை.கடந்த குடியரசுத் தேர்தலில் அவரை எதிர்த்துக் காப்டன் லட்சுமியை முன் மொழிந்தவர்கள் அவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. ஒரு 'அரசியல்வாதி' ஜனாதிபதியாக வருவதுதான் சரி என்று வாதிட்ட அவர்கள், பிராணாப் முகர்ஜியின் பெயரை முன் வைத்தார்கள். அதன் மூலம், அவர்கள் ஆட்சி புரியும் வங்க மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என்பது அவர்களது கணக்கு. என்றேனும் ஒரு நாள் பிரதமர் ஆகலாம் என்ற கனவில் இருக்கும் பிரணாப், குடியரசுத் தலைவராகி அரசியல் துறவறம் பெறத் தயாராக இல்லை. எனவே அவர் அந்த யோசனையை ஏற்க மறுத்தார். பிராணாப் முகர்ஜியைப் போன்ற மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவரானால் அவர்கள் தங்கள் கைக்கு அடங்கி இருக்கமாட்டார்கள் எனக் கருதிய சோனியா, சிவராஜ் பாடீல் பெயரை முன் வைத்தார். அதை ஏற்கக் கம்யூனிஸ்ட்கள் தயாராக இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் சுசில்குமார் ஷிண்டேயின் பெயர் முன் வைக்கப்பட்டது. ஆனால் மாயாவதி அதை ஏற்கத் தயாராக இல்லை. தலித் வகுப்பைச் சேர்ந்த இன்னொரு தலைவர் காங்கிரசின் தயவால் பலம் பெறுவதை அவர் விரும்பவில்லை.கரன்சிங் பெயர் சில காங்கிரஸ்காரர்களால் பேசப்பட்டது. ஆனால் அவருக்குக் கட்சிக்குள் ஆதரவில்லை.
சமரச வேட்பாளராக ஒரு பெண்ணை முன்நிறுத்தினால், கூட்டணிக் கட்சிகளை சமாதனப்படுத்திவிட முடியும் என்ற சூழ்நிலை. கூட்டணிக் கட்சிகளீன் ஆதரவில்லாமல், காங்கிரஸ் வேட்பாளர் வெல்ல முடியாது. இடது சாரிகள் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணியின் வசம் உள்ள வாக்குகளுக்கும், காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளின் வாக்குகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 90 ஆயிரம் வாக்குகள்தான். மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம், 94,753 வாக்குகள் இருக்கின்றன. அவர்கள் மாற்றி வாக்களித்தால், காங்கிரஸ் கூட்டணி 94ஆயிரம் வாக்குகளை இழக்கும் என்பது மட்டுமல்ல, எதிரணி 94 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி இலக்கை எட்டிவிட முடியும். எனவே இடதுசாரிகளை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வது காங்கிரஸ் கூட்டணிக்கு அவசியமானது. அவர்கள் கடந்த முறை ஒரு பெண்வேட்பாளரை நிறுத்தியிருந்ததால், ஒரு பெண் வேட்பாளரை முன் மொழிந்தால் சமரசத்தை எட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வசம் பெண்வேட்பாளர்கள் இல்லை.அவர்கள் கடைசி நிமிடத்தில் ஒரு பெண்வேட்பாளரை முன் மொழிந்து அவரை ஆதரிக்க வேண்டிய தர்மசங்கடத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க நாம் முதலில் முந்திக் கொள்ளலாம் என சோனியா கருதியிருக்கக்கூடும். இடதுசாரிகளுடனான கூட்டத்திற்கு முன் மன்மோகன் சிங்கே பெண்களின் பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்திருந்ததாகச் செய்திகள் கசிந்தன.
எதிரணியின் தரப்பில் ஷெகாவத்தான் நிற்கக் கூடும் என்ற வலுவான ஊகத்தின் காரணமாக, அவரது இனத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்துவது பாஜகவிற்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலும், சிவராஜ் பாடீல் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒரு மராட்டியரை நிறுத்துவதன் மூலம் அந்த மாநிலத்தவரை சமாதானப்படுத்தலாம், அதைவிட முக்கியமாக, சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே பிணக்கை ஏற்படுத்தலாம் என்பதாலும் மராட்டியராகவும், ஷெகாவத்தாகவும் உள்ள ஒரு பெண்மணியைத் தேட ஆரம்பித்தார்கள்.
அப்படிக் கிடைத்த ஒரு சமரச வேட்பாளர்தான் பிரதீபா.பிரதீபா,எதிர்பாராத சூழ்நிலைகளில், நிலமையை சமாளிக்க எப்படிப் பெண்கள் கறிவேப்பிலையாகப் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் அவர்.பிரதீபா அவருடைய தகுதிகளால் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. . ஏனெனில் வேட்பாளர் பற்றிய ஆலோசனைகள் நடந்த நாட்களில் அவர் பெயர் பேசப்படவே இல்லை. பெண் வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்பது, ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் இலட்சியம் அல்ல. அப்படியிருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே அவரது பெயர் அல்லது வேறெந்தப் பெண்மணியின் பெயரேனும் முன் வைக்கப்பட்டிருக்கும்.
எனவே பெண்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக, பெண்களைக் கெளரவப்படுத்துவதற்காக, பிரதீபா பாடீலை நிறுத்துவதாக ஆளும் கூட்டணி பிரசாரம் செய்யுமேயானால் அது அரசியல் பித்தலாட்டம்.
பிரதீபாவின் தகுதிகளில் மிக முக்கியமான தகுதி, அவர் இந்திரா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான விசுவாசி. சோனியா கிழித்த கோட்டைத் தாண்டக் கனவில் கூட நினையாதவர். 'இந்திரா சொன்னால், துடைப்பத்தை எடுத்துக் கூட்டவும் தயார்' என்று சொன்ன ஜெயில்சிங் குடியரசுத் தலைவராகவில்லையா?
பிரதமராகக் கிடைத்த வாய்ப்புக்களை சோனியா நிராகரித்த போது அவரது செயல் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு வியக்கத்தக்க தியாகமாகக் கருதப்பட்டது. நான் கூட அன்று அப்படித்தான் நினைத்தேன். ஆனால் நேரடியாகப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்ளாமல், அதே சமயம், மறைமுகமாக பொம்மைகளை முக்கியபதவிகளில் நியமித்து, அதன் மூலம் அதிகாரத்தின் பலனை அனுபவிக்க அவர் திட்டமிடுகிறாரோ என்று இப்போது எனக்கு சந்தேகம் எழுகிறது. மன்மோகன் சிங்கே கூட் அரசியல்ரீதியாகப் பலம் இல்லாத, மக்களவைக்கான தேர்தலைக் கூடச் சந்திக்கத் தயங்குகிற, ஒரு பிரதமர்தானே?
அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்படுதப்பட்டுள்ள உயர்ந்த பதவிகள், தகுதிகளைவிட விசுவாசத்தின் அடிப்படையில் நிரப்பப்படுவதே நடைமுறை என்றாகுமானால், அதை விடப் பேராபத்து, ஜனநாயகத்திற்கு, வேறெதுவும் இல்லை.
Wednesday, June 20, 2007
கோடையில் ஒரு குழப்பம்
ஒவ்வொரு கோடையிலும் சென்னையில் தவறாமல் கேட்கிற ஒரு வாசகம்:" ஸ்ஸ்ஸ் ...பா என்ன வெய்யில். எந்த வருஷமும் இந்த வருஷம் போல இப்படி வெயில் கொளுத்தியது இல்லை" ஓவ்வொரு வருஷமும் இதைக் கேட்கும் போதும் நான் எனக்குள் சிரித்துக் கொள்வேன். இந்த வருஷமும் இந்த வாசகத்தைக் கேட்க நேர்ந்தது. ஆனால் சென்னையில் இல்லை. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பலர் ஓடும் காஷ்மீரில்!
இந்தியா முழுக்க இந்த முறை கோடை கடுமையாகத்தான் இருக்கிறது. இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் மாலை நான்கு மணிக்கு தில்லியின் வெயில் 46 டிகிரி செல்சியஸ்.காஷ்மீரில் 35 டிகிரி. காஷ்மீர் மாநிலத்தில் யமுனா நகர் என்றொரு இடம் இருக்கிறது. நெடிய மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்தது. இப்போது அங்கு நிறைய பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வந்துவிட்டன. அந்த இடம் இப்போது தில்லியை விட சூடாக 49.9 டிகிரியில் இருக்கிறது.
சுற்றுச் சூழல் கெட்டுவருவதால் வெப்பம் அதிகரித்து வருவதாக தினந்தோறும் தில்லிப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.இமயம் உருகிவிடும், கடல் மட்டம் அதிகரித்துவிடும் என்றெல்லாம் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. Global Warming என்றால் என்ன என்று ஒரு சுற்றுச் சூழல் விஞ்ஞானியிடம் கேட்டேன்.' "சூரியன் தன் கதிர்களை அனுப்பி பூமியை சூடாக்குகிறது. ஆனால் சூரியனிலிருந்து வரும் எல்லாக் கதிர்களும் பூமியின் மீது பாய்ந்துவிடுவதில்லை. அப்படித் தாக்கிவிடாமல் பூமிக்கு மேல் உள்ள வளி மண்டலம் தடுத்து தனக்குள் பல கதிர்களை வாங்கிக் கொள்கிறது. வளி மண்டலத்தைத் தாண்டி வ்ரும் சில கதிர்களால் பூமி சூடாகிறது. பூமி சூடாகும் போது அதுவும் சில கதிர்களை -infra red rays-வெளியிடுகிறது. இந்தக் கதிர்கள் வளிமண்டலத்தை சென்றடையாமல் சில வாயுக்கள் தமக்குள் வாங்கிக் கொண்டு பூமியை வெப்பமாக வைத்திருக்கின்றன.அந்த வாயுக்களை green house gases என்று சொல்கிறோம். இந்த green house gasesன் அளவு அதிகரிக்கும் போது அவற்றால் வாங்கிக் கொள்ளும் வெப்பத்தின் அளவும் அதிகரிக்கிறது. " என்று அவர் என் சிறிய மூளைக்கு எட்டுகிறமாதிரி சொன்னார். ஆனால் அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் எனக்குள் திகிலைக் கிளப்பி விட்டது. அவர் சொன்னார் நம் வளி மண்டலத்தில் 78 சதவீத்ம் நைட்டிரஜன். 21 சதவீதம் ஆக்சிஜன். மீதம் உள்ள 1 சதவீதம்தான் இந்த கீரின் ஹவுஸ் வாயுக்கள். அவையும் ஒரே வாயு அல்ல. கரியமில வாயு, மீதேன், நீர் ஆவி எனப் பல." ஒரு சதவீதமே இந்தப்பாடு என்றால் இது இதைவிட அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே எலும்பெல்லாம் உருகிவிடும் போலிருந்தது. கரியமில வாயு அதிகரிக்கப் பல காரணங்கள். மக்கள் தொகை அதிகரிப்பு, ஆலைகள் வெளியிடும் மாசு, மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது எனப் பல காரணங்கள்.
புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதானா இல்லை சும்மா பயம் காட்டுகிறீர்களா என்ற என் கேள்விக்குப் பின்னிருந்த திகிலைப் பொருட்படுத்தாமல் அவர் மேலே மேலே சொல்லிக் கொண்டு போனார்: அதற்கான அடையாளங்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. வெப்பக் காற்று, பருவம் தப்பிய கோடைகள், அதாவது வேனில் காலம் அல்லாத காலங்களிலும் கோடைக்காலம் போல வெயில், வெப்பம், கடலோரங்களில் கடல் மட்டம் உயர்வது, பனிப்பாறைகள் உருகுவது என்பதல்லாம் ஆரம்ப அடையாளங்கள். போகப் போக நிலைமை கடுமையாகும். எதிர்ப்பாராமல், மழைக்காலம் அல்லாத பருவங்களிலும் வெள்ளம், ஆறுகள் வரண்டு விவசாயத்திற்கு நீர் கிடைக்காமல் போய் உணவு உற்பத்தித் தட்டுப்பாடு, பஞ்சம் என அவர் அடுக்கிக் கொண்டே போனார்.
புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டு வருவது உண்மைதான். ஆனால் அவர் தீட்டுகிற சித்திரம் போல அவ்வளவு பயங்கரம் ஏற்பட்டுவிடவில்லை. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? புவி வெப்பம் தொடர்பாக ஜப்பான் நகரான கியோட்டா நகரில் உலக நாடுகள் 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திட்டன. அந்த பிப்ரவரி மாதம் முப்பது வருடங்களாக இல்லாத அளவிற்கு பனி பொழிந்து காஷ்மீரில் 150 பேர் இறந்து போனார்கள். அந்த ஆண்டுதான் நாற்பது வருடங்களில் குறைந்த அளவு வெப்பம் மும்பை நகரில் பதிவாகியது" என்று அந்த விஞ்ஞானி சொன்னதற்கு நேர் எதிரிடையாக தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார் ஒரு பத்திரிகையாளர்.
அவர் ஒரு மேற்கோளையும் படித்துக் காட்டினார்: "இந்த விஷயத்தில் நாம் சூதாட்டம் போல ரிஸ்க் எடுத்துக் கொள்ள முடியாது. சும்மா இருக்க முடியாது. இந்தக் கருத்துடன் முரண்படும் அறிவியலாளர்கள், பொறுப்பற்றுச் செயல்படுகிறார்கள். நம் வானிலை மிக மோசமாக மாறப்போகிறது என்பதற்கான அடையாளங்கள் அலட்சியப்படுத்த இயலாத அளவிற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன" 1972ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரையிலிருந்து அவர் இந்த மேற்கோளைப் படித்துக் காட்டினார்.அந்தக் கட்டுரை புவி வெப்பம் அதிகரித்து வருவதைப் பற்றியது அல்ல. அது பூமி குளிர்ந்து வருவதைப் பற்றியது!
இன்று சுற்றுச் சூழல் என்பது பெரிய பிசினஸ் ஆகிவிட்டது. பல கோடி டாலர்கள் பன்னாட்டு அளவில் இதற்காக முதலீடு செய்ய்ப்பட்டிருக்கின்றன. என்று அவர் மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போனார்.
இப்போது எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் புவியின் வெப்பம் கவலைப்படும் அளவு அதிகரித்து வருகிறதா இல்லை மிகைப்படுத்துகிறார்களா?
தெரியாவிட்டால், மூளைக்கு ஏதாவது ஆகிவிடக் கூடும். அப்படியானால் யாராவது இந்த தகிக்கும் வெயிலைக் கூடப் பழி சொல்லக்கூடும்!
சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு எழுதியது

Subscribe to:
Posts (Atom)