Showing posts with label Indian Presidential Poll. Show all posts
Showing posts with label Indian Presidential Poll. Show all posts

Monday, June 25, 2007

ஜனநாயகப் பொம்மலாட்டம்


குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் வட இந்தியப் பத்திரிகைகள், குறிப்பாக சில தொலைக்காட்சிகள், ஒரு 'முக்கியமான' விவாதத்தை நடத்தின.குடியரசுத் தலைவர் என்பதற்கான இந்திச் சொல் ராஷ்ட்டிரபதி. பதி என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல். அதற்கிணையான பெண்பால் பத்தினி. ஆனால் பத்தினி என்பதற்கு மனைவி என்றும் ஒரு பொருள் உண்டு. எனவே ஒரு பெண் குடியரசுத் தலைவரானால் எப்படி அழைக்கப்படுவார்? ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது. ராஷ்டிரபத்தினி என்று அழைப்பது, தேசத்தின் மனைவி எனப் பொருள் தரக்கூடும் என்பதால் அது அபத்தமானது. அப்படியானல் அவரை எப்படி இந்தியில் குறிப்பிடுவது? இதுதான் ஊடகங்கள் நடத்திய அந்த 'முக்கிய' விவாதம்.

இன்னொரு தொலைக்காட்சி, ஒரு பெண் குடியரசுத் தலைவரானால், ராணுவம் அவரது ஆணைகளை ஏற்குமா என்று விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொண்டது. நம் அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் தலைவர்தான் முப்படைகளின் தளபதியும் கூட, எனவே ஆண்கள் அதிகம் உள்ள ராணுவம் ஒரு பெண்ணின் ஆணைக்குக் கீழ்ப்படியுமா என்பது அவர்களது சந்தேகம்.

இந்த இரு நடத்தைகளும், நம் சமூகத்தில் ஆணாதிக்க மனோபாவம் எத்தனை ஆழமாக வேரூன்றிக் கிடக்கிறது என்பதையும் அது எப்படி. ஊடகங்களில் பணியாற்றும் 'நவீன' இளைஞர்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

தமிழில் குடியரசுத் தலைவரை எப்படி அழைப்பது என்ற 'சிக்கல்' இல்லை.ஒரு பெண் குடியரசுத் தலைவர் ஆனால் அவரைத் தலைவி என்று கூட அழைக்க வேண்டியதில்லை. தலைவர் என்றே தொடர்ந்தே அழைத்து வரலாம். தலைவர், கவிஞர், இளைஞர், மாணவர், புலவர், அறிஞர் என்பவை இருபாலருக்கும் பொருந்தக் கூடிய தமிழ்ச் சொற்கள். (சில அறிவு ஜீவிகள் கவிதாயினி, இளைஞி என்றெல்லாம் எழுதுவது தமிழ் அல்ல).

ஆனால் தமிழில் வார்த்தைப் பஞ்சம் இல்லை என்பதால், தமிழர்களிடையே ஆணாதிக்க மனோபாவம் இல்லை என்றாகிவிடாது.பெண் சிசுக் கொலைகளிலிருந்து, பெண்கவிஞர்கள் மீது வீசப்படும் வசைகள் வரை பலநூறு சான்றுகள் நம் முகத்தின் முன் நின்று இளிக்கின்றன.

உண்மையில் இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் பெண் அதிகாரம் பெறுவதற்கும், அதற்கு எதிரானதற்குமான ஓர் போட்டி அல்ல. பெண்களை முன்னிறுத்தி, அவர்கள் பெயரால், ஆதிக்க சக்திகள் அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றுகிற ஒரு முயற்சி. உள்ளாட்சிகளில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, ஆண்கள் தங்கள் குடும்பப் பெண்களை பொம்மை வேட்பாளராக நிறுத்திக் கைப்பற்ற முயல்வதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் இல்லை.

இன்று பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக ஆகும் வாய்ப்பினைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைந்து பேரணிகள் நடத்துகிற திமுக, கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அவருக்கு எதிராக வாக்களித்தது என்பது வரலாறு. எவருக்கும் பொம்மையாகச் செயல்பட மறுத்து, சொந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படும் ஜெயலலிதா போன்ற பெண்தலைவர்கள் -அவற்றில் பல தவறானவை, அகங்காரத்தில் பிறந்தவை என்ற போதிலும் கூட- பெண் என்ற பாலியல் நோக்கில் எப்படி திமுக மேடைகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளில் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அதிகம் எழுதாமலே எல்லாரும் அறிவர். அண்மையில். 'பெண்கள் இப்படியெல்லாம் பேசக்கூடாது' எனச் சட்டமன்றத்திலேயே முதல்வரே கூடப் பேசியிருக்கிறார்.திமுக இன்று நடத்த முன்வரும் உற்சவங்கள் எல்லாம், அண்மையில் மாநிலங்களவைக்கு முன்மொழியப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கில் இறக்கிவிடப்பட்டிருக்கும், முதல்வரின் மகள் கணிமொழிக்கு கட்சிக்குள்ளும், தேசிய அளவிலும் முக்கியத்துவம் கொடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடும்.

பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என உரத்த குரலில் முழங்குகிற மார்க்சிஸ்ட் கட்சியின் உச்ச அதிகார அமைப்பான பொலிட்பீரோவில் அண்மைக்காலம் வரை பெண்களுக்கு இடமிருந்ததில்லை. லாலுவின் கட்சி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதைப் பகிரங்கமாக எதிர்த்த கட்சி.

எனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் விரும்புவது பெண்கள் அதிகாரம் பெறுவதை அல்ல, தங்கள் பேச்சைக் கேட்டு நடக்கும், தங்களுக்கு விசுவாசமாக இருக்கும், ஆமாம் சாமியான ஒரு பெண் அதிகாரம் பெறுவதையே.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகப் பிரதீபா பாடில் தேர்ந்தெடுகப்பட்டது எப்படி? இதை ஆராய்ந்தால் அவர் எப்படி ஒரு பொம்மையாக முன்நிறுத்தப்படுகிறார் என்பது புரிந்துவிடும்.

அப்துல்கலாமின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, இப்போது துணைக் குடியரசுத் தலைவராக உள்ள பைரோவன் ஷெகாவத் களமிறங்கத் தயாரானார். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் என்பதாலும், மூன்று முறை பா,ஜ,கவின் சார்பில் ராஜஸ்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும், ஆளும் கூட்டணியில் உள்ள பல கட்சிகளை அவரை ஆதரிக்க விரும்பவில்லை.இடதுசாரிகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.அப்துல் கலாமே இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதையும் இடதுசாரிகள் விரும்பவில்லை.கடந்த குடியரசுத் தேர்தலில் அவரை எதிர்த்துக் காப்டன் லட்சுமியை முன் மொழிந்தவர்கள் அவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. ஒரு 'அரசியல்வாதி' ஜனாதிபதியாக வருவதுதான் சரி என்று வாதிட்ட அவர்கள், பிராணாப் முகர்ஜியின் பெயரை முன் வைத்தார்கள். அதன் மூலம், அவர்கள் ஆட்சி புரியும் வங்க மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என்பது அவர்களது கணக்கு. என்றேனும் ஒரு நாள் பிரதமர் ஆகலாம் என்ற கனவில் இருக்கும் பிரணாப், குடியரசுத் தலைவராகி அரசியல் துறவறம் பெறத் தயாராக இல்லை. எனவே அவர் அந்த யோசனையை ஏற்க மறுத்தார். பிராணாப் முகர்ஜியைப் போன்ற மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவரானால் அவர்கள் தங்கள் கைக்கு அடங்கி இருக்கமாட்டார்கள் எனக் கருதிய சோனியா, சிவராஜ் பாடீல் பெயரை முன் வைத்தார். அதை ஏற்கக் கம்யூனிஸ்ட்கள் தயாராக இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் சுசில்குமார் ஷிண்டேயின் பெயர் முன் வைக்கப்பட்டது. ஆனால் மாயாவதி அதை ஏற்கத் தயாராக இல்லை. தலித் வகுப்பைச் சேர்ந்த இன்னொரு தலைவர் காங்கிரசின் தயவால் பலம் பெறுவதை அவர் விரும்பவில்லை.கரன்சிங் பெயர் சில காங்கிரஸ்காரர்களால் பேசப்பட்டது. ஆனால் அவருக்குக் கட்சிக்குள் ஆதரவில்லை.

சமரச வேட்பாளராக ஒரு பெண்ணை முன்நிறுத்தினால், கூட்டணிக் கட்சிகளை சமாதனப்படுத்திவிட முடியும் என்ற சூழ்நிலை. கூட்டணிக் கட்சிகளீன் ஆதரவில்லாமல், காங்கிரஸ் வேட்பாளர் வெல்ல முடியாது. இடது சாரிகள் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணியின் வசம் உள்ள வாக்குகளுக்கும், காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளின் வாக்குகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 90 ஆயிரம் வாக்குகள்தான். மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம், 94,753 வாக்குகள் இருக்கின்றன. அவர்கள் மாற்றி வாக்களித்தால், காங்கிரஸ் கூட்டணி 94ஆயிரம் வாக்குகளை இழக்கும் என்பது மட்டுமல்ல, எதிரணி 94 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி இலக்கை எட்டிவிட முடியும். எனவே இடதுசாரிகளை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வது காங்கிரஸ் கூட்டணிக்கு அவசியமானது. அவர்கள் கடந்த முறை ஒரு பெண்வேட்பாளரை நிறுத்தியிருந்ததால், ஒரு பெண் வேட்பாளரை முன் மொழிந்தால் சமரசத்தை எட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வசம் பெண்வேட்பாளர்கள் இல்லை.அவர்கள் கடைசி நிமிடத்தில் ஒரு பெண்வேட்பாளரை முன் மொழிந்து அவரை ஆதரிக்க வேண்டிய தர்மசங்கடத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க நாம் முதலில் முந்திக் கொள்ளலாம் என சோனியா கருதியிருக்கக்கூடும். இடதுசாரிகளுடனான கூட்டத்திற்கு முன் மன்மோகன் சிங்கே பெண்களின் பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்திருந்ததாகச் செய்திகள் கசிந்தன.

எதிரணியின் தரப்பில் ஷெகாவத்தான் நிற்கக் கூடும் என்ற வலுவான ஊகத்தின் காரணமாக, அவரது இனத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்துவது பாஜகவிற்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலும், சிவராஜ் பாடீல் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒரு மராட்டியரை நிறுத்துவதன் மூலம் அந்த மாநிலத்தவரை சமாதானப்படுத்தலாம், அதைவிட முக்கியமாக, சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே பிணக்கை ஏற்படுத்தலாம் என்பதாலும் மராட்டியராகவும், ஷெகாவத்தாகவும் உள்ள ஒரு பெண்மணியைத் தேட ஆரம்பித்தார்கள்.
அப்படிக் கிடைத்த ஒரு சமரச வேட்பாளர்தான் பிரதீபா.பிரதீபா,எதிர்பாராத சூழ்நிலைகளில், நிலமையை சமாளிக்க எப்படிப் பெண்கள் கறிவேப்பிலையாகப் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் அவர்.பிரதீபா அவருடைய தகுதிகளால் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. . ஏனெனில் வேட்பாளர் பற்றிய ஆலோசனைகள் நடந்த நாட்களில் அவர் பெயர் பேசப்படவே இல்லை. பெண் வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்பது, ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் இலட்சியம் அல்ல. அப்படியிருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே அவரது பெயர் அல்லது வேறெந்தப் பெண்மணியின் பெயரேனும் முன் வைக்கப்பட்டிருக்கும்.

எனவே பெண்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக, பெண்களைக் கெளரவப்படுத்துவதற்காக, பிரதீபா பாடீலை நிறுத்துவதாக ஆளும் கூட்டணி பிரசாரம் செய்யுமேயானால் அது அரசியல் பித்தலாட்டம்.

பிரதீபாவின் தகுதிகளில் மிக முக்கியமான தகுதி, அவர் இந்திரா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான விசுவாசி. சோனியா கிழித்த கோட்டைத் தாண்டக் கனவில் கூட நினையாதவர். 'இந்திரா சொன்னால், துடைப்பத்தை எடுத்துக் கூட்டவும் தயார்' என்று சொன்ன ஜெயில்சிங் குடியரசுத் தலைவராகவில்லையா?

பிரதமராகக் கிடைத்த வாய்ப்புக்களை சோனியா நிராகரித்த போது அவரது செயல் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு வியக்கத்தக்க தியாகமாகக் கருதப்பட்டது. நான் கூட அன்று அப்படித்தான் நினைத்தேன். ஆனால் நேரடியாகப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்ளாமல், அதே சமயம், மறைமுகமாக பொம்மைகளை முக்கியபதவிகளில் நியமித்து, அதன் மூலம் அதிகாரத்தின் பலனை அனுபவிக்க அவர் திட்டமிடுகிறாரோ என்று இப்போது எனக்கு சந்தேகம் எழுகிறது. மன்மோகன் சிங்கே கூட் அரசியல்ரீதியாகப் பலம் இல்லாத, மக்களவைக்கான தேர்தலைக் கூடச் சந்திக்கத் தயங்குகிற, ஒரு பிரதமர்தானே?

அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்படுதப்பட்டுள்ள உயர்ந்த பதவிகள், தகுதிகளைவிட விசுவாசத்தின் அடிப்படையில் நிரப்பப்படுவதே நடைமுறை என்றாகுமானால், அதை விடப் பேராபத்து, ஜனநாயகத்திற்கு, வேறெதுவும் இல்லை.