Monday, June 25, 2007

ஜனநாயகப் பொம்மலாட்டம்


குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் வட இந்தியப் பத்திரிகைகள், குறிப்பாக சில தொலைக்காட்சிகள், ஒரு 'முக்கியமான' விவாதத்தை நடத்தின.குடியரசுத் தலைவர் என்பதற்கான இந்திச் சொல் ராஷ்ட்டிரபதி. பதி என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல். அதற்கிணையான பெண்பால் பத்தினி. ஆனால் பத்தினி என்பதற்கு மனைவி என்றும் ஒரு பொருள் உண்டு. எனவே ஒரு பெண் குடியரசுத் தலைவரானால் எப்படி அழைக்கப்படுவார்? ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது. ராஷ்டிரபத்தினி என்று அழைப்பது, தேசத்தின் மனைவி எனப் பொருள் தரக்கூடும் என்பதால் அது அபத்தமானது. அப்படியானல் அவரை எப்படி இந்தியில் குறிப்பிடுவது? இதுதான் ஊடகங்கள் நடத்திய அந்த 'முக்கிய' விவாதம்.

இன்னொரு தொலைக்காட்சி, ஒரு பெண் குடியரசுத் தலைவரானால், ராணுவம் அவரது ஆணைகளை ஏற்குமா என்று விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொண்டது. நம் அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் தலைவர்தான் முப்படைகளின் தளபதியும் கூட, எனவே ஆண்கள் அதிகம் உள்ள ராணுவம் ஒரு பெண்ணின் ஆணைக்குக் கீழ்ப்படியுமா என்பது அவர்களது சந்தேகம்.

இந்த இரு நடத்தைகளும், நம் சமூகத்தில் ஆணாதிக்க மனோபாவம் எத்தனை ஆழமாக வேரூன்றிக் கிடக்கிறது என்பதையும் அது எப்படி. ஊடகங்களில் பணியாற்றும் 'நவீன' இளைஞர்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

தமிழில் குடியரசுத் தலைவரை எப்படி அழைப்பது என்ற 'சிக்கல்' இல்லை.ஒரு பெண் குடியரசுத் தலைவர் ஆனால் அவரைத் தலைவி என்று கூட அழைக்க வேண்டியதில்லை. தலைவர் என்றே தொடர்ந்தே அழைத்து வரலாம். தலைவர், கவிஞர், இளைஞர், மாணவர், புலவர், அறிஞர் என்பவை இருபாலருக்கும் பொருந்தக் கூடிய தமிழ்ச் சொற்கள். (சில அறிவு ஜீவிகள் கவிதாயினி, இளைஞி என்றெல்லாம் எழுதுவது தமிழ் அல்ல).

ஆனால் தமிழில் வார்த்தைப் பஞ்சம் இல்லை என்பதால், தமிழர்களிடையே ஆணாதிக்க மனோபாவம் இல்லை என்றாகிவிடாது.பெண் சிசுக் கொலைகளிலிருந்து, பெண்கவிஞர்கள் மீது வீசப்படும் வசைகள் வரை பலநூறு சான்றுகள் நம் முகத்தின் முன் நின்று இளிக்கின்றன.

உண்மையில் இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் பெண் அதிகாரம் பெறுவதற்கும், அதற்கு எதிரானதற்குமான ஓர் போட்டி அல்ல. பெண்களை முன்னிறுத்தி, அவர்கள் பெயரால், ஆதிக்க சக்திகள் அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றுகிற ஒரு முயற்சி. உள்ளாட்சிகளில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, ஆண்கள் தங்கள் குடும்பப் பெண்களை பொம்மை வேட்பாளராக நிறுத்திக் கைப்பற்ற முயல்வதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் இல்லை.

இன்று பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக ஆகும் வாய்ப்பினைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைந்து பேரணிகள் நடத்துகிற திமுக, கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அவருக்கு எதிராக வாக்களித்தது என்பது வரலாறு. எவருக்கும் பொம்மையாகச் செயல்பட மறுத்து, சொந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படும் ஜெயலலிதா போன்ற பெண்தலைவர்கள் -அவற்றில் பல தவறானவை, அகங்காரத்தில் பிறந்தவை என்ற போதிலும் கூட- பெண் என்ற பாலியல் நோக்கில் எப்படி திமுக மேடைகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளில் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அதிகம் எழுதாமலே எல்லாரும் அறிவர். அண்மையில். 'பெண்கள் இப்படியெல்லாம் பேசக்கூடாது' எனச் சட்டமன்றத்திலேயே முதல்வரே கூடப் பேசியிருக்கிறார்.திமுக இன்று நடத்த முன்வரும் உற்சவங்கள் எல்லாம், அண்மையில் மாநிலங்களவைக்கு முன்மொழியப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கில் இறக்கிவிடப்பட்டிருக்கும், முதல்வரின் மகள் கணிமொழிக்கு கட்சிக்குள்ளும், தேசிய அளவிலும் முக்கியத்துவம் கொடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடும்.

பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என உரத்த குரலில் முழங்குகிற மார்க்சிஸ்ட் கட்சியின் உச்ச அதிகார அமைப்பான பொலிட்பீரோவில் அண்மைக்காலம் வரை பெண்களுக்கு இடமிருந்ததில்லை. லாலுவின் கட்சி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதைப் பகிரங்கமாக எதிர்த்த கட்சி.

எனவே திமுக உள்ளிட்ட கட்சிகள் விரும்புவது பெண்கள் அதிகாரம் பெறுவதை அல்ல, தங்கள் பேச்சைக் கேட்டு நடக்கும், தங்களுக்கு விசுவாசமாக இருக்கும், ஆமாம் சாமியான ஒரு பெண் அதிகாரம் பெறுவதையே.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகப் பிரதீபா பாடில் தேர்ந்தெடுகப்பட்டது எப்படி? இதை ஆராய்ந்தால் அவர் எப்படி ஒரு பொம்மையாக முன்நிறுத்தப்படுகிறார் என்பது புரிந்துவிடும்.

அப்துல்கலாமின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, இப்போது துணைக் குடியரசுத் தலைவராக உள்ள பைரோவன் ஷெகாவத் களமிறங்கத் தயாரானார். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் என்பதாலும், மூன்று முறை பா,ஜ,கவின் சார்பில் ராஜஸ்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும், ஆளும் கூட்டணியில் உள்ள பல கட்சிகளை அவரை ஆதரிக்க விரும்பவில்லை.இடதுசாரிகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.அப்துல் கலாமே இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதையும் இடதுசாரிகள் விரும்பவில்லை.கடந்த குடியரசுத் தேர்தலில் அவரை எதிர்த்துக் காப்டன் லட்சுமியை முன் மொழிந்தவர்கள் அவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. ஒரு 'அரசியல்வாதி' ஜனாதிபதியாக வருவதுதான் சரி என்று வாதிட்ட அவர்கள், பிராணாப் முகர்ஜியின் பெயரை முன் வைத்தார்கள். அதன் மூலம், அவர்கள் ஆட்சி புரியும் வங்க மாநிலத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என்பது அவர்களது கணக்கு. என்றேனும் ஒரு நாள் பிரதமர் ஆகலாம் என்ற கனவில் இருக்கும் பிரணாப், குடியரசுத் தலைவராகி அரசியல் துறவறம் பெறத் தயாராக இல்லை. எனவே அவர் அந்த யோசனையை ஏற்க மறுத்தார். பிராணாப் முகர்ஜியைப் போன்ற மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவரானால் அவர்கள் தங்கள் கைக்கு அடங்கி இருக்கமாட்டார்கள் எனக் கருதிய சோனியா, சிவராஜ் பாடீல் பெயரை முன் வைத்தார். அதை ஏற்கக் கம்யூனிஸ்ட்கள் தயாராக இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் சுசில்குமார் ஷிண்டேயின் பெயர் முன் வைக்கப்பட்டது. ஆனால் மாயாவதி அதை ஏற்கத் தயாராக இல்லை. தலித் வகுப்பைச் சேர்ந்த இன்னொரு தலைவர் காங்கிரசின் தயவால் பலம் பெறுவதை அவர் விரும்பவில்லை.கரன்சிங் பெயர் சில காங்கிரஸ்காரர்களால் பேசப்பட்டது. ஆனால் அவருக்குக் கட்சிக்குள் ஆதரவில்லை.

சமரச வேட்பாளராக ஒரு பெண்ணை முன்நிறுத்தினால், கூட்டணிக் கட்சிகளை சமாதனப்படுத்திவிட முடியும் என்ற சூழ்நிலை. கூட்டணிக் கட்சிகளீன் ஆதரவில்லாமல், காங்கிரஸ் வேட்பாளர் வெல்ல முடியாது. இடது சாரிகள் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணியின் வசம் உள்ள வாக்குகளுக்கும், காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளின் வாக்குகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 90 ஆயிரம் வாக்குகள்தான். மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம், 94,753 வாக்குகள் இருக்கின்றன. அவர்கள் மாற்றி வாக்களித்தால், காங்கிரஸ் கூட்டணி 94ஆயிரம் வாக்குகளை இழக்கும் என்பது மட்டுமல்ல, எதிரணி 94 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி இலக்கை எட்டிவிட முடியும். எனவே இடதுசாரிகளை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வது காங்கிரஸ் கூட்டணிக்கு அவசியமானது. அவர்கள் கடந்த முறை ஒரு பெண்வேட்பாளரை நிறுத்தியிருந்ததால், ஒரு பெண் வேட்பாளரை முன் மொழிந்தால் சமரசத்தை எட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வசம் பெண்வேட்பாளர்கள் இல்லை.அவர்கள் கடைசி நிமிடத்தில் ஒரு பெண்வேட்பாளரை முன் மொழிந்து அவரை ஆதரிக்க வேண்டிய தர்மசங்கடத்திற்கு ஆளாவதைத் தவிர்க்க நாம் முதலில் முந்திக் கொள்ளலாம் என சோனியா கருதியிருக்கக்கூடும். இடதுசாரிகளுடனான கூட்டத்திற்கு முன் மன்மோகன் சிங்கே பெண்களின் பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்திருந்ததாகச் செய்திகள் கசிந்தன.

எதிரணியின் தரப்பில் ஷெகாவத்தான் நிற்கக் கூடும் என்ற வலுவான ஊகத்தின் காரணமாக, அவரது இனத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்துவது பாஜகவிற்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலும், சிவராஜ் பாடீல் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒரு மராட்டியரை நிறுத்துவதன் மூலம் அந்த மாநிலத்தவரை சமாதானப்படுத்தலாம், அதைவிட முக்கியமாக, சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே பிணக்கை ஏற்படுத்தலாம் என்பதாலும் மராட்டியராகவும், ஷெகாவத்தாகவும் உள்ள ஒரு பெண்மணியைத் தேட ஆரம்பித்தார்கள்.
அப்படிக் கிடைத்த ஒரு சமரச வேட்பாளர்தான் பிரதீபா.பிரதீபா,எதிர்பாராத சூழ்நிலைகளில், நிலமையை சமாளிக்க எப்படிப் பெண்கள் கறிவேப்பிலையாகப் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் அவர்.பிரதீபா அவருடைய தகுதிகளால் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. . ஏனெனில் வேட்பாளர் பற்றிய ஆலோசனைகள் நடந்த நாட்களில் அவர் பெயர் பேசப்படவே இல்லை. பெண் வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்பது, ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் இலட்சியம் அல்ல. அப்படியிருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே அவரது பெயர் அல்லது வேறெந்தப் பெண்மணியின் பெயரேனும் முன் வைக்கப்பட்டிருக்கும்.

எனவே பெண்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக, பெண்களைக் கெளரவப்படுத்துவதற்காக, பிரதீபா பாடீலை நிறுத்துவதாக ஆளும் கூட்டணி பிரசாரம் செய்யுமேயானால் அது அரசியல் பித்தலாட்டம்.

பிரதீபாவின் தகுதிகளில் மிக முக்கியமான தகுதி, அவர் இந்திரா காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான விசுவாசி. சோனியா கிழித்த கோட்டைத் தாண்டக் கனவில் கூட நினையாதவர். 'இந்திரா சொன்னால், துடைப்பத்தை எடுத்துக் கூட்டவும் தயார்' என்று சொன்ன ஜெயில்சிங் குடியரசுத் தலைவராகவில்லையா?

பிரதமராகக் கிடைத்த வாய்ப்புக்களை சோனியா நிராகரித்த போது அவரது செயல் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு வியக்கத்தக்க தியாகமாகக் கருதப்பட்டது. நான் கூட அன்று அப்படித்தான் நினைத்தேன். ஆனால் நேரடியாகப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்ளாமல், அதே சமயம், மறைமுகமாக பொம்மைகளை முக்கியபதவிகளில் நியமித்து, அதன் மூலம் அதிகாரத்தின் பலனை அனுபவிக்க அவர் திட்டமிடுகிறாரோ என்று இப்போது எனக்கு சந்தேகம் எழுகிறது. மன்மோகன் சிங்கே கூட் அரசியல்ரீதியாகப் பலம் இல்லாத, மக்களவைக்கான தேர்தலைக் கூடச் சந்திக்கத் தயங்குகிற, ஒரு பிரதமர்தானே?

அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்படுதப்பட்டுள்ள உயர்ந்த பதவிகள், தகுதிகளைவிட விசுவாசத்தின் அடிப்படையில் நிரப்பப்படுவதே நடைமுறை என்றாகுமானால், அதை விடப் பேராபத்து, ஜனநாயகத்திற்கு, வேறெதுவும் இல்லை.

20 comments:

Balaji-Paari said...

அன்புள்ள மாலன்,
அருமையான அலசல்.
ஜனாதிபதி தேர்தலில் அரசியல் இருக்கக்கூடாது என்று கூறிக்கொண்டே, மிக நீண்ட அரசியலை மூன்றாம் அணியினர் நடத்தினர். அவர்கள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை, காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்பு வெளியிட்டனர்.
இதன் மூலம் ஒரு சங்கடத்தையும் காங்கிரஸ் கூட்டணிக்கு உண்டாக்கி ஊடகத்தின் கவனத்தை பெற்றனர்.

அனைத்து தரப்பினரிடமும் பார்க்கக்கூடிய ஓர் ஒற்றுமை என்னவென்றால், இச்சந்தர்ப்பத்தை தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டததுதான்.

உண்மையில் ஜனாதிபதி என்ற பதவி, அதன் வரம்பு, மற்றும் அதன் தேவைகளை எண்ணிப் பார்க்கத் தூண்டியது இவர்களின் ஆட்டம். இந்த நாள் வரை இப்பதவி, நியமிக்கப்படும் பதவியாக மட்டுமே கருதப்பட்டு வந்திருக்கின்றது. அப்படி இருக்கையில், இந்த பதவியின் அடிப்படையே ஆட்டம் காண்கின்றதோ எனத் தோன்றுகின்றது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Jazeela said...

//ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது. ராஷ்டிரபத்தினி என்று அழைப்பது, தேசத்தின் மனைவி// அப்ப ராஷ்ட்டிரபதி என்றால் மட்டும் தேசத்தின் கணவராகாதா? அது மட்டும் அபத்தமில்லையா?

//பெண்கள் கறிவேப்பிலையாகப் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம்// எல்லா நிலைகளிலும் பெண்கள் கறிவேப்பி்லையாகத்தான் இருக்கிறார்கள் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் ;-(

மாலன் said...

அன்புள்ள பாலாஜி-பாரி,
நீங்கள் சொல்வது சிந்திக்கப்பட வேண்டிய விஷ்யம்.ஜனாதிபதி பதவி பற்றிய ஒரு மறு சிந்தனை, மீள்பார்வை அவசியம் தேவை
மாலன்

மாலன் said...

அன்புள்ள ஜெசிலா,

பதி என்ற சொல்லின் நேரிடையான பொருள் தலைவர் என்பது. சேனாதிபதி: படைத் தலைவர், சத்ரபதி: போர்ப்படைத் தலைவர். ரகுபதி:ரகு வம்சத்தின் தலைவர்.கைலாசபதி: கைலாசத்தின் தலைவர்.சபாபதி:அவைத் தலைவர்.மடாதிபதி:மடத்தின் தலைவர்.குலபதி: குலத்தின் தலைவர்.

Head of the state என்ற ஆங்கிலச் சொல் அரசின் தலைவர் என்னும் பொருள்பட, ராஷ்ட்ரபதி ஆயிற்று.

பதி என்ற சொல் தலைவன் என்ற பொருளில் கணவனையும் குறிப்பதாக அமைந்தது. பதி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பது போல பத்தினி என்ற சொல்லுக்கு பல பொருட்கள் இல்லை.

//ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது. ராஷ்டிரபத்தினி என்று அழைப்பது, தேசத்தின் மனைவி// என்பது என் கருத்தல்ல. விவாதங்களில் சொல்லப்பட்ட கருத்தைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

பொதுவாகவே எல்லா மொழிகளும் ஆண்களுக்குச் சார்பாகவே கட்டமைக்கப்பட்டிருகின்றன.குறிப்பாக அதிகாரம் பதவி சார்ந்த சொற்கள். தமிழில் ஆண்டவன் உண்டு. ஆண்டவள் உண்டா? ஆங்கிலத்தில் கடவுள் Lord. Lady அல்ல.

இது மாற்றப்பட வேண்டிய ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன் கடவுள் ஆணா பெண்ணா என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். முடிந்தால் தேடி எடுத்து அதை உங்களுக்காக மறுபிரசுரம் செய்ய முயற்சிக்கிறேன்.

அன்புடன்
மாலன்

லக்ஷ்மி said...

//பெண்களை முன்னிறுத்தி, அவர்கள் பெயரால், ஆதிக்க சக்திகள் அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றுகிற ஒரு முயற்சி.//
ஆமாம் மாலன். 33% மசோதாவை எதிர்க்கும் லாலு , தன் மனைவியை முதல்வராக்கியது போல்தான் இதுவும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மாலன்.. அப்துல்கலாமை பற்றியும், ராஷ்டிரபதி பவனை பற்றியும் வரலாறு தெரியாமல் உளறுகிறீர்கள்.. என்னுடைய கீழ்கண்ட பதிவுகளை படித்து தெளிவு பெற முயற்சி பண்ணுங்கள்..

மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்'-1

மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்'-2

மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்'-3

அப்துல்கலாம் ஏன் வேண்டும்?

உண்மைத்தமிழன் said...

மாலன் ஸார் நல்ல தீவிரமான அலசல்..

சோனியாவை பதவியேற்க விடாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியதற்கு கலாமிற்கு கிடைத்த பரிசுதான் கெட் அவுட்.

சிவசேனாவும், சரத்பவாரும் மறைமுகமாகக் கூட்டணி வைத்து எதிர்ப்பைக் கிளப்பியதுதான் உண்மையில் சிவ்ராஜ்பாட்டீலுக்கு கிடைத்த நோ வேகன்ஸி..

சிவசேனா சிவ்ராஜ் தவிர்த்த மராட்டியருக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தி சரத்பவார் மூலம் சென்றடைந்த பின்புதான் ஒரு மராட்டியர் தேர்வு செய்யப்பட்டே தீர வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ்க்கு வந்துள்ளது. சிவசேனாவின் ஆதரவும் கிடைத்துவிட்டால் சுலபமாக வென்றுவிடலாமே என்று எண்ணினார் சோனியா. அதையே செய்தும் காட்டினார். இப்போது பா.ஜ.க.வுக்கே தண்ணி காட்டிவிட்டார் பால்தாக்கரே.. இந்த உணர்வு நமது கலைஞருக்கு எங்கே போனது என்பது ஒரு கேள்விக்குரிய விஷயம்..

எப்படியிருந்தாலும் ஒரு பொம்மை பிரதமரைத் தொடர்ந்து, ஒரு பொம்மை ஜனாதிபதியும் சோனியாவுக்குக் கிடைத்துள்ளார். அவருக்கு சந்தோஷம்தான்..

ஆனால் இது நீங்கள் குறிப்பிட்டதைப் போல ஜனநாயகத்தை தோல்வியடையச் செய்யும் முயற்சிதான்.. அவ்வப்போது தேர்தலில் தோற்றாலும் இதில் மட்டும் நமது அரசியல்வாதிகள் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் said...

ஸார்.. 5.16 மணிக்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி உண்மைத்தமிழன்.. வெரி ஸாரி ஸார்.. நான் வேறென்ன சொல்வது? Mouse-ஐ வைத்து சோதனை செய்து பாருங்கள். தெரியும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மேலே உண்மைத்தமிழன் பெயரில் வந்திருக்கும் நான்கு பின்னூட்டங்களும் போலி உண்மைத்தமிழனுடையது. ஒரிஜினல் உண்மைத்தமிழன் நான் தான். நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

பாரதி தம்பி said...

//அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்படுதப்பட்டுள்ள உயர்ந்த பதவிகள், தகுதிகளைவிட விசுவாசத்தின் அடிப்படையில் நிரப்பப்படுவதே நடைமுறை என்றாகுமானால், அதை விடப் பேராபத்து, ஜனநாயகத்திற்கு, வேறெதுவும் இல்லை.//

தெளிவான வரிகள். ஆனால் ஜனாதிபதி போன்ற பதவிகள் தகுதிகளின் அடிப்படையில் நிரப்பப்பட்டாலுமே, அதிகாரங்களற்ற அப்பதவியால் என்ன பயன் வந்துவிடப்போகிறது..? - அதுவும் இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் ஒன்றான கருணை மனுக்களை நிராகரிக்கும் விஷயத்தில் கூட இதுவரைக்கும் அப்சலுக்கு ஒரு முடிவு சொல்லாமல் மௌன சாமியாராக இருக்கிறார் அப்துல் கலாம். குறைந்தபட்சம் அப்சலை கனவு காணக்கூடச் சொல்லவில்லை..

(இது, இந்த கட்டுரையின் மைய தொனியிலிருந்து விலகிப்பேசும் கருத்தென நினைத்தால் தாராளமாக ஒதுக்கிவிடலாம்..)

செல்வமுத்துகுமரன் said...

மாலன், ஒரு சிறிய வேண்டுகோள். தயவு செய்து கமென்ட் மாடரேஷனை நிறுவுங்கள். சற்று நேரம் செலவிட்டு கமென்ட்டின் ப்லாகர் ஐடியும் பார்த்துவிட்டு பப்ளிஷ் செய்யுங்கள். ஏதோ புது பின்னூட்டமென்று ஆவலோடு வந்து பார்த்தால் ஒவ்வொரு முறையும் பல்பு வாங்குகிறேன். தாங்கலை. வடிவேலுவின் வேணாம் அழுதுடுவேன் காமெடிதான் நினைவுக்கு வருது இந்த அனானிமஸ் விளையாட்டெல்லாம் பாக்கும்போது.

selventhiran said...

மாலன் சார், இணையத்தில் இதுமாதிரி இம்சைகள் தொடர்வதால் எத்தனையோபேர் எழுதுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள். கமாண்டு மாடரேஷனை நிறுவிக்கொண்டு இது மாதிரியான அனாதை ஆடியோஸ்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்

மாலன் said...

விவாதிக்கப்பட்டிருக்கும் பொருளுக்குத் தொடர்பில்லாமல் தனிநபர் தாக்குதல்களாக இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.எனக்குத் தணிக்கையில் நம்பிக்கை கிடையாது. அதனாலேயே இது நாள் வரையில் moderate செய்யும் வசதியை நிறுவிக் கொள்ளாமல் இருந்தேன்.ஆனால் என் வலைப்பதிவில் தனிநபர் பூசல்களுக்கு இடமளிப்பதில் எனக்கு சம்மதமில்லை. மிகுந்த வருத்ததுடன் இந்த முடிவை எடுக்கிறேன்.
அதேபோல என் பதிவில் விளம்பரங்களுக்கும் இடமளிப்பதில்லை.இணையத்தின் சிறப்பே விளம்பரங்களைத் தவிர்த்த ஓர் ஊடகமாகப் பயப்படுத்தும் வாய்ப்புக் கொண்ட ஊடகமாக அதை செயல்படுத்த முடியும் என்பதுதான். திசைகளில் கூட நான் விளம்பரங்கள் வெளியிட்டதில்லை.
எனவே அவையும் தடை செய்யப்படும்

மாலன்

மாலன் said...

ஆழியூரான் கருதுவது போல குடியரசுத் தலைவர் பதவி அதிகாரங்கள் அற்ற பதவி அல்ல. அரசமைப்புச் சட்டம் அவரை Head of the State ஆகக் கருதுகிறது. அதாவது அவர் நிரந்திரமானவர்.பிரதமர் அல்லது மத்திய அரசு கூட இல்லாமல் தேசம் இருக்கலாம்,ஆனால் ஜனாதிபதி இல்லாமல் தேசம் இருக்க முடியாது(அரசமைப்புச் சட்டத்தின்படி) நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் ஆனால் அது ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியாது.அதை இத்தனை நாளைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அவரை வற்புறுத்த முடியாது. எனவே அவர் நினைத்தால் ஒரு விஷ்யத்தைக் கிடப்பில் போடலாம்.
அரசு அமைப்பது யார் எனத் தீர்மானிப்பதிலும் மாநில அரசுகளை நீக்குவதிலும் அவரது பங்கு கணிசமானது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்களைக் கூட மறுபரிசீலனை செய்யச் சொல்லி அவர் கேட்க முடியும்.

நமது ஜனாதிபதிகள் அரசியல்வாதிகளின் தயவில் பதவிக்கு வருவதால் அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை.
அவ்வளவுதான்
மாலன்

பாரதி தம்பி said...

அன்பின் மாலன்..அதிகாரமில்லாத பதவி என பொதுப்புத்தியில் படிந்திருக்கும் கருத்துதான் என்னிடமிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. சில புதிய விஷயங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி..!

We The People said...

அருமையான அலசல். ஓவ்வொறு விசயமும் மிக சரியே!

நன்றி,

நா ஜெயசங்கர்

ச.மனோகர் said...

நல்ல பதிவு மாலன்…ஆனால் ஏன் எப்போதும் இல்லாத இந்த ஜனாதிபதி தேர்தல் கலாட்டா? அது ஒரு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவி என்றல்லவா சொல்லுவார்கள்? திடீரென்று அந்த பதவி உண்மையிலேயே அவ்வளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டதா?

அவராவது விஞ்ஞானம்,வல்லரசாவது என்று பள்ளிக்குழந்தைகளை கொஞ்சமாவது தூண்டினார். சரி இந்த முறை ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதே என கொஞ்சம் சந்தோசப்படும் வேளையில்,இந்தம்மா வரும்போதே ஆவி,அருள்வாக்கு என கூறிக்கொண்டு வருகிறாரே…எதாவது உருப்படியா தேறுமா?

Anonymous said...

மாலன் சார் மிக நல்ல பதிவு.

குளக்கோட்டன்

Unknown said...

Respected Sir,

Its a very good and useful post to know abt Mrs.Pratibha Patil.
Please write this article in Tamil Magazines.It helps for people to know more abt her.Its my humble request.

Regards
Kamalkanth