Wednesday, March 01, 2006

வருகிறார் பெரியண்ணன்

வந்துவிட்டார் புஷ். அவரின் வருகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

ஒருவகையில் அமெரிக்க அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.2000ல் கிளிண்டன் வருவதற்கு முன்னால் இரண்டே இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள்தான் இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.ஐம்பதுகளில் ஐஸ்நோவர், அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப்பின் 1978ல் ஜிம்மிகார்ட்டர் இவர்களைத் தவிர யாரும் சுதந்திர இந்தியாவை எட்டிப் பார்த்ததில்லை. கார்ட்டருக்குப் பிறகு 22 கழித்து கிளிண்டன் வந்தார். அதற்குப் பின் ஆறே வருடங்களில் புஷ் வருகிறார். 1947லிருந்து கணக்கு வைத்துக் கொண்டு பார்த்தால் இந்த 59 வருடங்களில் 33 ஆண்டுகள் குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவை ஆண்டிருக்கிறார்கள். ஆனால் ஐஸ்நோவரைத் தவிர எந்தக் குடியரசுக் கட்சியின் அதிபருக்கும் இந்தியாவிற்கு வரத் தோன்றியதில்லை.

ஏன் இப்போது திடீரென்று அமெரிக்காவிற்கு இந்தியா மீது ஒரு கரிசனம்? இன்று அமெரிக்காவில் இருபது லட்சம் இந்திய வம்சாவளியினர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அமெரிக்க அரசியலில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்கள் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் அமெரிக்கவில் வாழும் இந்திய வம்சாவளியினரைக் கவர இரண்டு அரசியல்கட்சிகளுமே விருந்துகளையும் சில நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. இது ஒரு காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீனா ரைஸ், கடந்த ஆண்டு அதாவது 2005ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இனி வரும் நாள்களில் உல்கின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியர்களைப் பொறுத்தவரை இது நெடுநாளையக் கனவு. பாரதிய ஜனதாக் கட்சி அதன் அரசியல் மேடைகளில் இதைப் பற்றி முழங்கியது உண்டு. ஆனால் அதற்கும் முன்னால் நேரு தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியாவிலேயே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் இது இந்தியர்களுக்குப் புதிதல்ல. ஆனால் அமெரிக்கர்களுக்குப் புதிது.காண்டலீனா ரைசின் கணிப்பை புஷ் நிர்வாகத்தின் - ஏன் வாஷிங்டன் அரசியல்வாதிகளின்- கணிப்பு என்றே கொள்ளலாம். எனவே வளர்ந்து வரும் ஒரு சக்தியுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் அக்கறை அமெரிக்காவிற்கு இருக்கலாம்.

புஷ் முதல்முறையாகப் பதவியேற்ற நாள்களிலிருந்தே தெற்காசிய விஷயங்களில் மூக்கை நுழைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். தெற்காசியாவில் எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்க 'வழிகாட்டுதலின்' பேரில் எடுக்கப்பட வேண்டும் என்பது அவரது ஆசைகளில் ஒன்று என்பது வெளிப்படை.அதிகாரத் தராசில் சீனாவைச் சமன்செய்வதற்கு மட்டுமல்லால், தெற்காசியாவில் அமெரிக்காவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நண்பனாக இந்தியாவை உருவாக்க அது விரும்பலாம். பரப்பளவு, மக்கள் தொகை, பொருளாதார பலம், ராணுவபலம் என்ற எல்லாவிதத்திலும் தெற்காசியாவில் உள்ள பெரிய தேசம் இந்தியா. இந்தப் பகுதியின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றல் அதன் வசம் உள்ளது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவு பூசலும் நேசமும் நிறைந்த, காதலும் மோதலும் நிறைந்த உறவாகவே இருந்து வந்திருக்கிறது. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிழல் யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த ஆரம்ப நாள்களில் இந்தியா இரு நாடுகளிடமிருந்தும் விலகித் தனித்து நின்றது. அணி சேரா நாடுகளின் அமைப்பைத் தோற்றுவிப்பதில் முனைப்புக்காட்டிய நாள்கள் அவை. அதன் பின் 1962ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்ட சமயத்தில் இந்தியா அமெரிக்காவுடன் ராணுவரீதியாக நெருக்கம் பாராட்ட முனைந்தது. இந்திராவின் காலத்தில் சோவியத்தின் நண்பனாக இந்தியா கருதப்பட்ட நாள்களில் அமெரிக்க இந்தியாவிடமிருந்து விலகி நின்றது. வன்மம் பாராட்டியது என்று கூடச் சொல்லலாம்.சோவியத் யூனியன் மறைவிற்குப் பின் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய- அமெரிக்க உறவில் ஒருவித இளக்கம் இருந்து வருகிறது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவில் நெருடலாக இருந்து வரும் ஒரு விஷயம் அணுசக்தி.1974ல் இந்தியா தனது அணு ஆற்றலை வெளிப்படுத்தியதை அடுத்து அமெரிக்கா இந்தியாவிற்குப் பலவிதமான முட்டுக்கட்டைகளைப் போட்டு வந்தது.இந்தியா அந்த முட்டுக்கட்டைகளையும் மீறி, தன்னுடைய விஞ்ஞானிகளின் ஆற்றல் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்தியா தொடர்ந்து தன் அணு ஆற்றலை வளர்த்துக் கொண்டிருந்தது. மின்சக்திக்காக உருவாக்கப்பட்ட உலைகளை கேடயமாகக் கொண்டு அணு ஆயுதங்களையும் அது தயாரித்துக் கொண்டிருந்தது. இன்று ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்க எதிர்ப்பை ஒரு பொருட்டாகக் கருதாமல்,தங்களது அணுமின் நிலையங்களைப் பயன்படுத்தி அணுஆயுதங்கள் செய்வதற்கான துணிவைப் பெறுவதற்கு இந்தியா அன்று காட்டிய துணிவு ஒரு முக்கியக் காரணம். (அந்த நாட்டைத் தனிமைப்படுத்த முற்படும் அமெரிக்க முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்பது வரலாற்றின் விசித்திரம். ஒரு துரதிருஷ்டம்)முட்டுக்கட்டைகள் பலன் தராது போனதையடுத்து அமெரிக்கா இந்தியாவை அணுஆயுதப் பெருக்கத் தடை ஒப்பந்தத்தை (Nuclear Non-Proliferation Treaty (NPT) ஏற்குமாறு நிர்பந்தித்து வந்தது. அந்த ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமானது என்பதைச் சுட்டிக் காட்டி இந்தியா அதில் கையெழுத்திடப் பிடிவாதமாக மறுத்து வந்தது. இந்தியாவின் இந்த வாதம் நியாயமானது. இந்தியா அணு ஆயுதம் தயாரிப்பதை ஏற்காத என் போன்ற இந்தியர்கள் கூட, இந்தியாவின் நிலைபாட்டை ஆதரிக்க மட்டுமல்ல, அதைக் குறித்துப் பெருமிதமும் கொள்வர்.

இந்த வரலாற்லிருந்து விலகி இன்று அமெரிக்கா வேறு ஒரு வித ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது.கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்ட அமெரிக்க அரசின் குறிப்பின்படி பார்த்தால் இது ஒரு தலைப் பட்சமானதல்ல. முற்றிலும் இந்தியாவிற்கு எதிரானது அல்ல.இந்தியா பொதுமக்கள் தேவைக்கான அணு மின்நிலையங்களையும், ராணுவத் தேவைக்கான அணு ஆயுத உற்பத்தி ஆலைகளையும் தனித் தனியே இனம் காணவேண்டும் என வற்புறுத்துகிறது அமெரிக்கா. எததகைய அணு ஆயுதம் வைத்துக் கொள்ளப்போகிறோம், எவ்வளவு வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற முடிவு செய்து கொள்ளாமல், இப்படி அணு உலைகளை இனம் பிரிப்பது இயலாது. ஆனால் எவ்வளவு ஆயுதம்,எத்தகைய ஆயுதம் என்பதற்கான விடைகள் நம் மனோபாவம் சார்ந்தவை.அதற்குத் திட்டவட்டமான விடைகள் இருக்க முடியாது. அதுவும் எந்தச் சூழ்நிலையிலும் இந்தியா முதலில் அணு ஆயுதங்களை பிரயோகிக்காது என்ற கொள்கை நிலைபாட்டை வெளிப்படையாக அறிவித்தபின்னர் இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண்பது எளிதல்ல.

எனவே புஷ் இந்தியா வரும் போது இந்த விவாகாரம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என நான் கருதவில்லை. ஆனால்
வேளாண்மையில் இந்திய அமெரிக்க ஒத்துழைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த முயற்சிகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகலாம். அவற்றிற்கும் அப்பால், காண்டலீனா ரைஸ் வாஷிங்டன் போஸ்டில் வெளிப்படுத்திய 'ஐந்து வல்லரசுகளில் ஒன்று' என்ற நம்பிக்கையை ஏற்பதுமட்டுமல்ல, உறுதி செய்வதாகவும் இந்தப் பயணம் அமையுமானால் அது அர்த்தமுள்ளது.இல்லையென்றால் இது வெறும் சுற்றுலாதான்.

புஷ் பாகிஸ்தானுக்கும் செல்கிறார். அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானை இந்தியாவைவிட நெருக்கமான நண்பனாகவே கருதி வந்திருக்கிறது. ஆனால் இன்று பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிராகக் கடுங் கோபம் நிலவி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இருப்பது, ஈராக் மீது அது நடத்திய ஆக்கிரமிப்பு, அமெரிக்கா இஸ்லாமிற்கு எதிராக இருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டிருப்பது போன்றவை இந்தக் கோபத்திற்குக் காரணம். எனவே புஷ் அங்கு வரும் போது அங்கு அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணிகள் நடக்கலாம். இந்தியாவிலும் கூட இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆனால் அது 'வழக்கமான' எதிர்ப்பாக இருக்கும். பாகிஸ்தான் அளவு கடுமையாக இராது. என்றாலும் கூட புஷ் முஷரபைப் புகழ்ந்து பேசுவார். முஷரபைப் புகழும் அதே சமயம் பாகிஸ்தானைக் கண்டிக்கவும் செய்யலாம். சில தினங்களுக்கு முன் (பிப்ரவரி 22) அமெரிக்காவில் உள்ள ஆசியா சொசைட்டியில் உரைநிகழ்த்தும்போது, பாகிஸ்தான் ஊடகங்கள் சுதந்திரமானவையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை பாதுக்காப்புப் படையினரின் நெருக்குதலுக்கு உள்ளாவதைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தானை கண்டிக்கும் விதமாகப் பேசினார். ஆனால் இதெல்லாம் 'சும்மா' (Tokenism) விமர்சனங்களுக்குப் பிறகும் பாகிஸ்தானுடனான உறவு தொடரும். ராணுவ ஆட்சியாளர் என்றாலும் அங்குள்ள மதவாதிகளைவிட முஷ்ராஃப் தேவலாம் என்பதால் அமெரிக்கா முஷரபை ஆதரிப்பதை இந்தியா பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

அறிவிக்கப்படவில்லை என்றாலும் புஷ் ஆப்கானிஸ்தானிலும் சில மணிநேரம் செலவிடலாம். அங்கு கணிசமான அளவு அமெரிக்கப்படைகளும், நேட்டோ படைகளும் இருக்கின்றன.அவற்றிற்கு மன ஊக்கம் தருவதற்காக அவர் அங்கு போகலாம். ஆனால் அதனால் அங்கு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது.