ஒரு சிற்றூரில் ஒரு சிறு நிலக் கிழார். அவருக்கு இரண்டு மகன்கள். நிலக்கிழார் சாகும் தறுவாயில் இரண்டு மகன்களையும் அழைத்து, " என்னால் உங்களுக்கு ஏதும் சொத்து வைத்துவிட்டுப் போகமுடியவில்லை. ஆனால் கடன் ஏதும் வைக்கவில்லை. நம் பூர்வீக நிலத்தை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் பிழைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு மறைந்தார். சிறிது நாளில் அண்ணனும் தம்பியும் சொத்தைப் பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்தனர். பிரிக்கப்பட்ட பாகங்களை அளக்கும் போது அண்ணன் தன்னுடைய நிலத்தில் ஓரடி கூடுதலாக எடுத்துக் கொண்டுவிட்டார் என்று தம்பிக்கு சந்தேகம் வந்தது. அண்ணனிடம் விளக்கம் கேட்கப் போனார். பேச்சு வாக்குவாதமாக முற்றிப் பின கைகலப்பில் வந்து முடிந்தது. அன்றிலிருந்து இருவருக்கும் இடையே கொலைப்பழி. குத்துப்பழி.
தம்பி உள்ளூர் நீதி மன்றத்தில் அண்ணன் மீது வழக்குப் போட்டார். வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படவே ஐந்தாறு வருடங்களாகியது. சிவில் வழக்குத்தானே? பல முறை விசாரணை ஒத்திப் போடப்பட்டு, பத்து வருடங்களுக்குப்பிறகு அண்ணனுக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று.தம்பிக்கு மனது பொறுக்கவில்லை. உள்ளூரில தனக்கு நியாயம் கிடைக்காது, அண்ணன் ஆட்களை வைத்து ஏதாவது தில்லுமுல்லு செய்திருப்பார் என்று அவருக்கு சந்தேகம். மாவட்ட நீதி மன்றத்தை அணுகினார். அங்கும் பல ஆண்டுகள் வழக்கு நடந்து தம்பிக்கு சாதகமாக, அண்ணனுக்கு எதிராகத் தீர்ப்பாகியது. அண்ணனுக்கு இது கெளரவப் பிஅர்சினையாகிவிட்டது. உயர்நீதிமன்றத்திற்குப் போனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் பூர்வீக நிலம் என்பதால் பழைய ஆவணங்கள் கிடைக்கவில்லை. இருக்கிற ஆவணங்களைக் கொண்டு பார்த்தால் இருவருக்கும் சமமான உரிமை இருக்கிறது. இரு தரப்பும் சமாதனமாகப் போகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. அதற்கு ஏதுவாக ஓர் அதிகாரியை சமாதானம் செய்து வைக்கும் நடுவராக நீதி மன்றம் நியமிக்கிறது.சகோதரர்கள் இருவரும் அவர் முன் ஆஜராகி சமரசம் செய்து கொள்ள வேண்டியது என்று ஒரு மழுப்பலான தீர்ப்பை வழங்கியது. ஆனால் அந்த அதிகாரியிம் முன் சகோதரர்கள் இருவரும் ஆஜராகவில்லை.
ஏன்?
முப்பது நாற்பது வருடங்களாக இழுத்துக் கொண்டு போன வழக்கு ஒரு முடிவுக்கு வருவதற்குள் இருவரும் காலமாகிவிட்டிருந்தார்கள். அவர்களுடைய வாரிசுகளை சந்தித்தார் அதிகாரி. அவர்கள் சமரசம் செய்து கொள்ள இசைந்தார்கள். ஆனால் பகிர்ந்து கொள்ள நிலம்தான் இல்லை!
என்னாயிற்று?
கீழ் நீதி மன்றத்திலும், மாவட்ட நீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் நிலத்திற்காக வழக்காடிய வழக்கறிஞர்களுக்கே, வழக்கிற்கான கட்டணமாக நிலத்தை அண்ணனும் தம்பியும் கிரயம் செய்து கொடுத்திருந்தார்கள்!
நிலத் தகராறுக்காக நீதி மன்றம் போனால், நிலமும் போய்விடும், உயிரும் போய்விடும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக கிராமப்புறங்களில் இந்தக் கதையைச் சொல்வார்கள்.நீதி மன்றங்களில் ஆகும் தாமதம் அத்தனை பிரசித்தம்.
நீதிமன்றத் தாமதததைப் போலவே அரசாங்க அலுவலகத் தாமதங்களும் பிரசித்தமானவை. அரசாங்க இயந்திரத்தை இதயமற்றது, மூளையற்றது, ஆத்மாஅற்றது (heartless, mindless, soul less) என்று தீவிரமாக விமர்சிக்கும் நண்பர்கள் எனக்குண்டு. அதை நான் முழுவதுமாக ஏற்பதில்லை. ஏதோ கோபத்தில் சொல்கிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு. இந்தியாவின் சிறந்த மூளைகள் என்று கடுமையான சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் கண்டறியப்படும் மூளைகள் அரசாங்கத்தில்தான் IAS அதிகாரிகளாகக் கடமையாற்றுகிறார்கள். அப்படியிருக்க அது எப்படி மூளையற்றதாக இருக்கமுடியும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பும் ஆட்டம் கண்டுவிட்டது. அதற்குக் காரணம் தமிழக முதல்வர் கருணாநிதி.
இந்த மாதம் 6ம் தேதி ஒரு புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பைத் துவக்கி வைத்துப் பேசும் போது அவர் ஒரு தகவலைச் சொன்னார். அந்தத் தகவல்தான் என் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்த தகவல். அது:
1998ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லை சேமித்து வைக்கக் கோணிப்பைகள் வேண்டும் அல்லவா? அதற்காக அரசுச் செலவில் கோணிப்பைகள் வாங்குவதென்று தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு (டெண்டர்) அந்த ஒப்பந்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, கோணிப்பைகளும் வாங்கப்பட்டன. வாங்கப்பட்ட கோணிகளுக்குப் பணமும் கொடுக்கப்பட்டாகிவிட்டது. பணம் கொடுக்கப்பட்டாகிவிட்டது, பணி நிறைவடைந்தது, என்ற தகவலை முதலைமைச்சருக்குத் தெரிவித்து கோப்பை மூடிவிடலாமா எனக் கேட்டு கோப்பை முதல்வருக்கு அனுப்ப மூன்றாண்டுகள் ஆயிற்று. 2001ம் ஆண்டு கோப்பு முதல்வருக்கு வந்து சேர்ந்த சமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்தது.தேர்தலில் ஆட்சி மாறியது. கருணாநிதி தோற்றுப் போய் ஜெயலலிதா முதல்வரானார். முதல்வரின் புதிய செயலாளர், இந்தக் கோப்பை உணவுத் துறை அமைச்சரின் கருத்தைக் கேட்டு அனுப்பி வைத்தார். அதுதான் நடைமுறை. உணவு அமைச்சர் அலுவலகத்தில் சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் முதல்வர் அலுவலகத்திற்குக் கோப்பு வந்தது. அந்த நேரம் பார்த்து, உணவு அமைச்சர் மாற்றப்பட்டார். மீண்டும் கோப்பு புதிய உணவு அமைச்சருக்கு அனுப்பப்பட்டது.அவரிடம் இருந்து ஒப்புதல் வந்தது. ஆனால் அந்தக் கோப்பு முதல்வருக்கு அனுப்பப்படும் முன் இரண்டாவது முறையாக உணவு அமைச்சர் மாற்றப்பட்டு மூன்றாவது உணவு அமைச்சர் பதவியேற்றார். கோப்பு மறுபடியும் அவரிடம் அனுப்பப்பட்டது. அவரிடமிருந்து வந்து முதலமைச்சர் அலுவலகத்தில் ஓய்வெடுத்து, அது முதல்வரின் மேசைக்குப் போவதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை இழந்து கருணாநிதி மறுபடி முதல்வரானார். எட்டாண்டுகளுக்கு முன்பு, அவரது ஆட்சிகாலத்தில் போடப்பட்ட ஓர் ஆணைக்கான கோப்பு மறுபடியும் அவர் முதல்வரான பிறகு அவரிடமே போனது. 1998ம் ஆண்டு வாங்கப்பட்ட கோணிப்பைகள் குறித்த கோப்பு 2006 செப்டெம்பர் ஆறாம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
இந்தத் தகவலை முதல்வரே பகிரங்கமாக பொது மேடையில் வெளியிட்டார். அண்மைக்காலமாக ஜெயலலிதாவிற்கும் அவருக்குமிடையே ஓர் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. யாருடைய ஆட்சியில் கோப்புக்கள் அதிகமாகத் தங்கின என்பதைக் குறித்து அவர்கள் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இதைக் குறித்துப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று ஜெயலலிதா சவால் விடுகிறார். பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, அறிஞர்களும், பொதுமக்களும் (பத்திரிகையாளர்கள் இந்த இரு பிரிவுக்குள்ளும் வரமாட்டார்கள் போலும்!) உள்ளடக்கிய ஒரு குழுவின் முன் விவாதிக்கலாம், நான் சொன்ன தகவல்கள் தவறு என்று அந்தக் குழு தீர்ப்பு வழங்கினால், அவர்கள் அளிக்கும் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயார் என்று கருணாநிதி பதில் சவால் விடுகிறார். ஆனால் என்ன துரதிருஷ்டம் பாருங்கள்! தமிழ்ப் பெருங்குடி மக்கள் இந்த சவால்களைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாமல், சூர்யா-ஜோதிகா திருமணத்தைப் பற்றியும், 'ரிவர்சபிள்' புடவையைப் பற்றியும், சிக்கன்குனியாவைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் தெரிவித்த தகவல் எனக்குள் சில கேள்விகளையும் எழுப்பியது.இப்போதெல்லாம் எண்ணெய் வாங்கப்போகிறவர்களோ, பால் வாங்கப் போகிறவர்க்ளோ, பாத்திரம் எடுத்துக் கொண்டு போவதில்லை. விற்கிற பொருளை தகுந்த முறையில் 'பாக்' செய்து கொடுப்பது என்பது பொருளை விற்கிறவர்களது பொறுப்பு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எந்த விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதோ அந்த விவசாயியையே நல்ல தரமான சாக்கில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வரவேண்டும் என்று அரசு சொல்லியிருக்க முடியாதா? அரசு அந்த சாக்கிற்கும் சேர்ந்து விலையை நிர்ணயம் செய்திருக்க முடியாதா? இதில் விவசாயிக்குக் கூடுதலாக எந்த சிரமும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் விவசாயி களத்திலிருந்து நெல்லைக் கை கையாக அல்லது கூடை கூடையாக அள்ளிக் கொண்டு போய் வீடு சேர்ப்பதில்லை. கோணிப்பை இல்லாத விவசாயியின் வீட்டை நான் பார்த்ததில்லை.பொது மார்க்கெட்டில் நெல்லை விற்கக் கொண்டுவருகிற விவசாயி அதை கோணிப்பைகளில் மூட்டையாகத்தான் கட்டிக் கொண்டு வருகிறார்.அரசாங்கத்திற்கு மட்டும் அவர் கோணிப்பையில் அடைத்து விற்காமல் தனியாகவா மரக்காலில் அளந்து விற்கப்போகிறார்? கோணிப்பையில் கட்டிய மூட்டைகளாக விற்பது விவசாயிகளுக்கு சிரமமானது என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், கோணிப்பை வாங்குவது அரசாங்கத்தை விட விவசாயிக்கு எளிது. அவர் அதற்கு டெண்டர் விடத் தேவையில்லை. இந்தச் சாதாரண சிந்தனை (common sense) கோணிப்பைகள் வாங்க உத்தரவிட்டவர்களுக்குத் தோன்றவில்லை?
விவசாயி கோணிப்பைகளில்தான் கொண்டு வருகிறார், ஆனால் அரசாங்கம் தனது சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கும் போது அந்தக் கோணிப்பைகளிலிருந்து புதிய கோணிப்பைகளுக்கு மாற்றுவது வழக்கம் என்று சொல்லக்கூடும். அப்படியானல் அது வழக்கமான நடைமுறை. அதற்காக ஒரு கோப்புத் தயாரித்து அதை முதல்வர் வரை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?
பணம் கொடுக்கப்பட்டாகிவிட்டது என்ற தகவல்தான் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றால், அதை ஒரு கடிதம் மூலம் அவருக்குத் தெரியப்படுத்த முடியாதா? அதற்கு ஒரு கோப்பு தேவையா? கடிதம்தான் அனுப்பப்பட்டது என்றால் அதில் முதல்வர் கையெழுத்திட வேண்டிய அவசியம் என்ன?
98ம் ஆண்டு வாங்கிய கோணிப்பைகளுக்கு பணம் எப்போது கொடுக்கப்பட்டது? அந்தக் கோப்பு ஏன் 2001ம் ஆண்டுவரை -மூன்றாண்டுகள்- முதல்வரை எட்டவில்லை. ஆட்சி முடிகிற நேரத்தில் அவருக்கு அனுப்பப்பட்டது? கடைசி நேரத்தில் கும்பலோடு கோவிந்தாவாக கையெழுத்தாகிவிடும் என்ற நம்பிக்கையிலா?
இதுபோன்ற சாதரணக் கோப்புகளைக் கூட முடித்து வைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளுக்கு இல்லாமல் இருக்கலாம். மாநில உணவுத் துறை செயலருக்குக்கூடவா இருக்காது? சரி செயலருக்குக்கூட இல்லை என்றாலும் தலைமைச் செயலருக்குக்கூடவா இருக்காது? அவருக்கும் இல்லை என்றால் மாநில அமைச்சருக்குக்கூடவா இருக்காது? அப்படி அவருக்கும் இல்லை என்றால், அதிகாரங்கள் எப்படி ஒரு மையத்தில், ஒரு தனிநபர் வசம் குவிக்கப்படுகின்றன என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். முதல்வர், சவால்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிகாரப் பகிர்வைக் குறித்து உடனடியாக யோசிக்க வேண்டும்.
அதிகாரங்கள் இருந்தும் முதல்வரின் செயலர் மூன்றுமுறை கோப்பைத் திருப்பி அனுப்புகிறார் என்றால், அவர் பணம் வழங்கப்பட்டதில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கும் என்று சந்தேகப்படுகிறரா? அப்படி சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக பணம் வழங்கப்பட்டிருக்கிறதா?
அறிவார்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளால், சந்தேகத்திற்கும் காலதாமதத்திற்கும் இடமளிக்காதவகையில் இயக்கமுடியாத அரசு இயந்திரத்தை, இன்னொரு இயந்திரத்தைக் கொண்டு வெளிப்படையானதாக, விரைந்து செயல்படுவதாக மாற்ற முடியும். அந்த இயந்திரத்தின் பெயர் கணினி.
கணினி மூலம் ஒரு தகவல்- அது கோப்போ, குறிப்போ, கடிதமோ, பணப்பட்டுவாடாவோ-பகிர்ந்து கொள்ளப்படுமானால் அது என்று, எத்தனை மணிக்கு, எங்கிருந்து, யாரால், யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதைக் கணினியே பதிந்து கொள்ளும்படி செய்துவிடலாம். இந்த மின் ஆளுமை முறை ஏற்பட்டுவிட்டால், முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சவால்கள் விட்டுக் கொள்ள வேண்டிய அவசியமோ, பத்திரிகையாளர்களும், அறிஞர்களும், பொதுமக்களும் யார் சோம்பேறி என்று தீர்ப்பெழுத வேண்டிய அவசியமோ இராது.
இது அரசாங்கத்திற்குமே கூட உதவியாக இருக்கும். தமிழகத்தில் உள்ள நில அளவையும், நில உரிமையும் கணினிமயமாக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் உரிமை கொள்ளப்படாத நிலங்கள் எவ்வளவு, அவை எங்கெங்கு இருக்கின்றன, நிலமற்றவர்கள் எவ்வளவு பேர், அவர்களுக்குத் தலா இரண்டு ஏக்கர் அளிக்கமுடியுமா என்பதை மிக விரைவில் கண்டு கொள்ளலாம்.
நிர்வாகத்தைக் கணினிமயப்படுத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. அதுவும் கணினி ஆர்வலரும், பேரனுமான ஒர் இளைஞர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் போது கருணாநிதிக்கு இது மிக எளிது.
அவர் பதில் காண வேண்டியது எல்லாம், வெலிப்படையான, மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக் கொண்ட ஒரு அரசாங்கமாக அவரது அரசு இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான்.
6 days ago