'இந்தியர்களின் இன்னொரு மதம் கிரிக்கெட்' என ஊடகங்கள் வர்ணிப்பதாலோ என்னவோ, இந்திய கிரிக்கெட் 'கட்டுப்பாட்டு' வாரியத்தின் நிர்வாகிகள் தங்களைக் கடவுள்கள், -குறைந்த பட்சம் மடாதிபதிகள்- எனக் கருதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.இந்தக் கடவுள்கள், இப்போது அவர்களின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு 'ஸாரி' சொல்லிவிட்டு இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்துவதென முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் நடைபெறாத, இந்திய விளையாட்டு வீரர்களை மட்டும் கொண்டு நடைபெறாத ஒரு போட்டி, எப்படி, 'இந்திய' பீரிமியர் லீகாக இருக்க முடியும்? கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்றொரு தில்லிக்குச் செல்லும் ரயிலொன்று உண்டு.There is nothing Grand about it, nor it takes a trunk route என்று அது விமர்சிக்கப்பட்டதுண்டு. இந்திய பீரிமியர் லீக் இன்னொரு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஆகிவிட்டது.
கிரிக்கெட் இந்தியாவில் இன்னொரு மதமாக ஆனதற்கு அது, இந்தியா, எப்போதோ ஒரு யுகத்தில் ஒருநாள் போட்டிகளின் உலகக் கோப்பையைக் கைப்பற்றியதும், அப்போது புதிதாக மலர்ந்திருந்த தொலைக்காட்சி என்ற ஊடகமும், அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த விளையாட்டு இந்தியாவில் 'மார்க்கெட்' செய்யப்பட்ட விதமும்,தான் காரணம்.அந்த மார்க்கெட்டிங் சாமர்த்தியத்தின் உச்சம்தான் 20:20 போட்டிகள், ஐ.பி.எல்.
அண்மைக்காலமாக இந்திய அணி கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளை ஈட்டி வருகிறது. இந்தியக் கிரிக்கெட் அணி, உலகின் வலிமையான அணி என்று சொல்லத்தக்க நிலையை அது அநேகமாக எட்டிவிட்டது (இதை ஏற்க மறுப்பவர்கள் கூட அது உலகின் வலிமையான அணிகளில் ஒன்று என்பதை ஒப்புக் கொள்ள மறுக்க மாட்டார்கள்)இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 'நாலு காசு' பார்க்க ஐ.பி.எல். விரும்புவது இயற்கைதான். ஆனால் இந்த மார்க்கெட்டிங் வெறியில் மக்களாட்சியின் அடித்தளமான தேர்தலைக் கூடப் பொருட்படுத்தமாட்டோம் என்று கிரிக்கெட் மடாதிபதிகள் நடந்து கொள்ள முற்படுவார்களேயானால், அந்த வெறிக்கு வைத்தியம் பார்க்க வேண்டியது அவசியம்தான்.
நடைபெறவிருக்கும் தேர்தலில் 71 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.41 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், 21 லட்சம் பாதுகாப்புப் படையினரும் பயன்படுத்தப்பட இருக்கின்றனர்.உலகிலேயே இத்தனை வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், பாதுகாப்புப் படையினர் என்று ஒரு தேர்தலில் பங்கு பெறுவது இந்தியாவில் மட்டும்தான். இத்தனை பெரிய தேர்தலை, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னிட்டு, இந்த முறை ஐந்து கட்டமாக, ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி மே மாதம் 13-ம் தேதிவரை நடத்த வேண்டியிருக்கிறது. நவம்பரில் முப்பையில் நடந்த தீவிரவாத சம்பவங்கள், இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் என்பது கற்பனையல்ல, இந்தியா எதிர் கொண்டே ஆக வேண்டிய ஒரு யதார்த்தம் என்பதை உணர்த்துகின்றன. எனவே தேர்தலின் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அதை எதிர்கொள்ள எச்சரிக்கை உணர்வும் பாதுகாப்புப் படையும் அவசியமாகிறது. ஏற்கனவே ஒரு தேர்தலின் போது இலங்கை பயங்கரவாதிகளால், பிரதமர் வேட்பாளர் எனக் கருதப்பட்ட ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வரலாறும் இந்தியாவிற்கு உண்டு.
பயங்கரவாதிகள் கிரிக்கெட்டையும் விட்டு வைப்பதில்லை என பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. எனவே அதற்கும் கணிசமான பாதுகாப்புத் தேவை. இந்தச் சூழ்நிலையில் தேர்தல் முடிந்து உங்கள் ஆட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றால் ஐபிஎல் நிவாகிகள் 'முடியாது, வெளிநாட்டில் நடத்திக் கொள்கிறோம்' என்று மிரட்டுகிறார்கள்.
ஜூன் 2- ம்தேதி முதல் டுவென்டி - 20 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்காக மே 25-ம் தேதியே அணிகள் இங்கிலாந்து வருமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சி ல் ( ஐ சி சி ) கேட்டுக்கொண்டுள்ளது. அதன் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுடன் இந்திய அணி 4 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. தென் ஆப்பிரிக்காவும் அப் போட்டியில் பங்கேற்கிறது. செப்டம்பர் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற உள்ளது. தவிர, 2009 அக்டோபர் முதல் 2010 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகியன 3 உள்நாட்டுத் தொடர்களில் விளையாட உள்ளன. அதனால் ஐபிஎல் போட்டிகளைத் தள்ளி வைக்க முடியாது என அதன் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடக்கும் என்பது ஐந்தாண்டுகளுக்கு முன்பே தெரிந்த விஷயம். கடந்த மக்களவை 2004 மே 23 அன்று அமைந்தது. அதனால் 2009 மே 23க்குள் அடுத்த மக்களை தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும் என இந்தியக் குடிமகன்கள் எல்லோருக்கும் தெரியும். நிச்சியம், கிரிக்கெட் 'கட்டுப்ப்பாடு' வாரியத்தின் தலைவர் சரத் பவாருக்கும், அதன் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் அருண் ஜெட்லிக்கும் தெரிந்த்ருக்கும். அப்படியிருக்க ஏப்ரல் 10 முதல் மே 24வரை ஐபில் போட்டிகளை நடத்தத் தேதி குறித்தது ஐபிஎல்லின் தவறு. சர்வதேசப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன அதனால் தள்ளி வைக்க முடியாது என்பது சப்பையான வாதம். அதுதான் இத்தனை போட்டிகள் நடக்க இருக்கின்றனவே, இந்தப் போட்டி நடக்காவிட்டால் என்ன குடி முழுகிவிடும் (உங்களுக்கு துட்டு வராது என்பதைத் தவிர?) எனக் கேட்க எவ்வளவு நேரமாகும்?
இந்தப் போட்டியை எப்படியும் தாங்கள் குறித்த தேதிகளில் நடத்தியே தீர்வது என்பதற்காக ஐபிஎல் நிர்வாகிகள்அளித்த நெருக்கடிகள் கண்டிக்கத் தக்கவை. பிரதம்ரை நேரில் சந்தித்து முறையிடுகிறார்கள். ஐபிஎல் போட்டிகளை நடத்தத் தவறினால் இந்தியா, பாகிஸ்தானைப் போல பயங்கரவாதத்திற்குப் பணிந்து போகிற மென்மையான் அரசு (soft state) என்று உலகம் எண்ணிவிடும் என ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்கிறது. இந்தச் சர்ச்சையில் அரசியலைக் கூட நுழைத்துப் பார்த்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்தான் பயப்படுகின்றன என்று அதன் நிர்வாகிகளில் சிலர் சொன்னார்கள்.
ஒன்றைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது அரசின் வேலையல்ல. அதை நடத்துவதும் அரசு அல்ல. அதை நடத்துவது ஒரு தனியார் அமைப்பு. இன்னும் சொல்லப்போனால் தனியார் வர்த்தக அமைப்பு. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு இந்த வியாபாரம் நடத்தப்பெறாத வரையில் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால் அந்த வியாபாரிகள், பன்நாட்டு வியாபார நிறுவனங்களைப் போல, நாட்டின் நலனை விடத் தங்கள் நலனைப் பெரிதாக எண்ணிக் கொண்டு அரசை மிரட்ட எண்ணினால் நாம் தயங்காமல், உறுதியாகச் சொல்ல வேண்டியது, 'போ, வெளியே!' (get out)
6 days ago