Monday, February 07, 2005

கவனிப்பாரற்றுக் கிடக்குது கண்ணதாசன் மணி மண்டபம்

"பாட்டெழுதுகிறேன், பாட்டு எழுதுகிறேன் "என்று நிர்வாகிகளிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்தான். அந்தப் பாட்டுத்தான் மிஞ்சியதே தவிர சினிமாப்பாட்டுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவனுக்கு எழுதத் தெரியும் என்று கூட யாரும் நம்பவில்லை"

இதை எழுதியது யாராக இருக்கக் கூடும் என்று ஊகிக்க முடிகிறதா?

கண்ணதாசன். ஆமாம் யாருடைய திரைப்படப் பாடøகளில் ஒரு தலைமுறை மனதைப் பறி கொடுத்துக் கிறங்கிக் கிடந்ததோ அந்தக் கவியரசுக் கண்ணதாசன் தனது ஆரம்ப நாட்கள் குறித்து தனது சுயசரிதை வனவாசத்தில் எழுதிய வரிகள் இவை.

அந்த சுயசரிதை பாசாங்கற்ற ஒரு வாழ்க்கைச் சரிதம். அவன் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டு தன்னுடைய வறுமை, திருட்டு, காமம், ஆசைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், தன் தந்தையின் சீட்டாட்டப் பிரியம், தான் சந்தித்தப் பெண்கள், அரசியல் தந்த எழுட்சி, அங்கு சந்தித்த வஞ்சகம் எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இன்றி எழுதியிருப்பார். 'சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன். சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்' என்று அவரே குறிப்பிட்டிருப்பார்.

அந்த சுயசரிதத்தில், மீசை அரும்பத் துவங்கிய பருவத்து இளைஞனாக, திருச்சி, சென்னை, சேலம், கோவை என்று எல்லா நகரங்களிலும் வயிற்றில் பசியோடு, மனதில் கனவோடு சுற்றிய நாள்களை அவர் விவரிப்பதைக் படிப்பவர் நெஞ்சில் இரக்கம் கசியும்.

ஆனால் அதைவிட மனம் அனுதாபத்தில் கசிந்த அனுபவம் எனக்கு வாய்த்தது. காரைக்குடியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்க என்னை அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சிக்குப் பின் ஓய்விருந்ததால் ஊரைச் சுற்றக் கிளம்பினேன்.

நகரின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கிறது கண்ணதாசன் மணி மண்டபம். நெடிதுயர்ந்த தூண்கள் மீது விரிந்த ஓர் விதானம் முகப்பாக அமைந்திருக்கிறது. அரண்மனை போன்ற ஒரு கம்பீரம். ஆனால் கம்பீரம் அந்த முகப்போடு முடிந்து விடுகிறது. நுழைந்தவுடன் இடப்புறம் ஒரு குறுகிய ஆனால் நீண்ட அறை. அங்கே நான்கைந்து அலமாரிகள். எல்லாவற்றிலுமாகச் சேர்த்து ஒரு 300 அல்லது நானுறு புத்தகங்கள் இருக்கலாம். அரிய புத்தகம் என்றோ, கண்ணதாசனைப் பற்றிய புத்தகம் என்றோ ஒன்றும் என் கண்ணில் படவில்லை. 1962ல் நான்கு ரூபாய் விலையில் துவங்கி பற்பல பதிப்புகள் கண்ட வனவாசம் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. சுடச்சுட விற்றுத் தீர்ந்த அவரது அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கூடக் காணவில்லை.

நூல்கள் மட்டுமல்ல, நூலகரைக் கூடக் காணோம்!. நான் போன நேரம் அந்தக் கட்டிடத்தில் துப்புரவுப் பணிகள் செய்யும் ஒரு நடுத்தரவயதுப் பெண்மணியும் அவருக்குப் 'பேச்சுத் துணையாக' இன்னொரு மூதாட்டியும் மட்டும் அங்கு இருந்தார்கள்.

கண்ணதாசனின் நூல்கள் மட்டுமல்ல, கண்ணதாசனைப் பற்றிய எந்த செய்தியையும் அங்கு வருகிறவர்கள் அறிந்து கொள்ள முடியாது. சில கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதைத் தவிர கண்ணதாசன் யார், எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார், அவருக்கும் காரைக்குடிக்கும் என்ன சம்பந்தம், என்னென்ன எழுதினார், எந்தெந்தத் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார், அவர் வாழ்கிறாரா, அவர் இறந்துவிட்டாரா என்பதைப்பற்றி அங்கு சிறு குறிப்புக் கூடக் கிடையாது.

பிரம்மாண்டமான கூடம் ஒன்று இருக்கிறது. அதைத் திறந்து காட்டச் சொன்னபோது, "கலியாணத்துக்குக் கொடுக்கமாட்டாங்க" என்று அவசர அவசரமாக மறுத்தார் அந்தப் பணிப்பெண். "கூட்டத்திற்குத்தான் கொடுப்பாக. நாள் வாடக எழுநூறு ரூபா" என்று விவரம் சொன்னவர், "இடம் 'புக்கு' பண்ணனும்னா, சிவகங்கைக்கு ( மாவட்டத் தலைநகர்) போயி பி.ஆர்.ஓ (மக்கள் தொடர்பு அதிகாரியை)வைப் பாருங்க" என்றார்.

கட்டிடத்தின் முகப்பில், திறந்த வெளியில் கண்ணதாசனின் மார்பளவுச் சிலை ஒன்று இருக்கிறது. ஒருபுறம் அவரது திரைப்பாடலின் வரிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சிலையின் முன்புறம், சிலைத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களின் (அவர்களில் சிலர் இப்போது அதிமுகவில் இல்லை) நீண்டதொரு பெயர்ப்பட்டியல் இருக்கிறது!

எவ்வளவு பெரிய கவிஞன்! உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களை ஏதோ ஒரு விதத்தில் தொட்டு உலுக்கிய படைப்பாளி. நாற்பது வயதைத் தாண்டியவர்களை அவர்களுக்குப் பிடித்த பத்து சினிமாப் பாடல்களைப் பட்டியலிடச் சொன்னால் அதில் நிச்சியம் நான்கைந்து கண்ணதாசனுடையதாக இருக்கும்.

ஒருமுறை, ம.பொ.சி. இனி கண்ணதாசன் அரசியலை விட்டுவிட்டு உயர்ந்த விஷயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று சொல்லியதை அடுத்து, தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு ஒரு சுயவிமர்சனக் கவிதை எழுதினார்:

மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்

மலையளவு தூக்கி உடன்
வலிக்கும்வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்


நானிடறி வீழ்ந்த இடம்
நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்


நடைபாதை வணிகனென
நான் கூறி விற்ற பொருள்
நல்ல பொருள் இல்லை அதிகம்


ஊர்நெடுக என் பாட்டை
உளமுருகப் பாடுகையில்
ஓர் துயரம் என்னுள் வருமே!

உதவாத பாடல் பல
உணராதார் மேல் பாடி
ஓய்ந்தனையே பாழும் மனமே!


எழுத்தாளர்களுக்கு, அதிலும் கவிஞர்களுக்கு ஈகோ அதிகம். தன்னுடைய ஒவ்வொரு எழுத்தும் பொன்னெழுத்து என்று நம்புபவர்கள் அவர்கள். இலக்கிய உலகில் நெருக்கமாக இருந்த பல நட்புக்கள் விமர்சனங்களைத் தாங்க முடியாமலே முறிந்திருக்கின்றன; திரிந்திருக்கின்றன.நாலைந்து ஆண்டுகளாக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும், இரண்டு புத்தகம் போட்டுவிட்ட படைப்பாளிகளிடமே கூட இந்த மனோபாவத்தைப் பார்க்க முடியும்.

ஆனால் கண்ணதாசன் தன்னைப் பற்றிய ஒரு கசப்பான சுய விமர்சனத்தை எழுதிக் கொண்டார். அதற்கான மன முதிர்ச்சி அவருக்கு இருந்தது. அந்த கவிதையின் இறுதியில், 'இனி மனிதனைப் பாட மாட்டேன்' என்று எழுதினார் கவிஞர்.

பதறிப்போன இன்னொரு மூத்த கவிஞர் திருமதி. செளந்திரா கைலாசம், அதே சந்தத்தில் 'மனிதனைப் பாடு மனமே' என்று பதிலுக்கு ஒரு பாட்டெழுதினார். அதில் அவர் சொன்னதைப் போல, கண்ணதாசன் "தடுமாறும் வேளையிலும் கவி பாடும் மேதையவன், தவறாது தாளம் விழுமே!"

இவ்வளவும் அந்த மணிமண்டபத்தைச் சுற்றி வந்த போது மனதில் வந்து போயின. அந்த மண்டபத்தின் பராமரிப்பு அந்தக் கவிஞனுக்கே செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு. அத்தனை லட்சம் செலவழித்துக் கட்டிடம் கட்டியவர்களுக்கு அதற்குள் சில ஆயிரம் ரூபாய்களுக்கு அவரது நூல்களை சேகரித்து வைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? செலவழிக்க வேண்டாம், இலவசமாகக் கேட்டால் கூட அவரது அபிமானிகள் கொண்டு வந்து கொட்டியிருப்பார்களே? அவரது வாழ்க்கைப் பயணம், அவரது இலக்கியப் பயணம் ஆகியவை குறித்து ஒரு கண்காட்சி அமைத்திருக்கக் கூடாதா? என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத கற்பனை வறட்சியா? அல்லது ஏன் செய்ய வேண்டும் என்ற அலட்சியமா?

கேள்விகள் மொய்ய்க்க அந்த மண்டபத்தைவிட்டு வெளியே வந்தேன். கையாலாகாத ஊமைக் கோபம், ஒன்றுக்கும் உதவாத எரிச்சல் எல்லாமாகச் சேர்ந்து கொள்ள எனக்கு அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட வேண்டும் எனத் தோன்றியது. நான் கலந்து கொள்ள இருந்த மாலை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே போய்விட்டேன். இருப்புக் கொள்ளாமல் அந்த அரங்கைச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அது நாளையப் பதிவில்..

7 comments:

meenamuthu said...

உங்களைப் போல்த்தான் அவர்(நானும்)பிறந்த
ஊரான சிறுகூடல்ப்பட்டியில் அவர் பிறந்து
வளர்ந்த வீட்டைப் பார்க்கவென்று வந்தவர்களில்
ஒருவர் அவரின் சிதிலமடைந்த(முள்ளுக் காடான)
வீட்டைப் பார்த்து மனம் வெறுத்து வாரப் பத்திக்கை
ஒன்றில் அவரின் மனக்குமுறலை எழுதினார்.அதன் விளைவாக
அவரின் பிறந்த வீட்டிற்கு ஒரு விடிவுகாலம் வந்து
மறுசீரமைப்புச் செய்து இன்று அது அவரின் நினைவுச்
சின்னமாக விளங்குகிறது.

அதுபோல் காரைக்குடியில் உள்ள 'மணிமண்டபத்திற்கும்'
தங்களால் விடிவுகாலம் பிறக்கட்டும்(பிறக்கும்).

அன்று அங்கு திறப்புவிழாக்கண்ட அவரின் திரு(முகம்)
உருவம்தான் சரியாக அமையவில்லை யாரோபோல் இருக்கிறது

ஆதங்கத்துடன்
மீனா.

தங்களின் அடுத்தபதிவை காண
ஆவலாயுள்ளேன்.

மாலன் said...

சிறுகூடற்பட்டி வீட்டைப் பற்றி நான் குமுதம் ஆசிரியராக இருந்த போது மணா என்ற ஒரு பத்திரிகையாளரை (அவர் இப்போது புதிய பார்வை இதழின் பொறுப்பாசிரியர்) அனுப்பி பார்த்துவரச் செய்து எழுதினேன். அது குடும்பச் சொத்து என்பதால் ஒரு சில பிரசினைகள் இருந்தன. குமுதம் கட்டுரை வந்த பின் குடும்பத்தினர் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

இது அரசாங்க விஷயம். லேசில் அசைந்து கொடுக்காது

மாலன்

அன்பு said...

இந்தப்பதிவு இங்கு சொல்லாத சொல்லில் வந்ததைவிட அதிக விவரம் இருப்பதாய் படுகிறது (முரசில் அந்த மபொசி விடயம் இல்லையென்று நினைக்கிறேன்). மிகவும் நன்றி.

ஜெ. ராம்கி said...

கம்பன் பிறந்த தேரழுந்தூரிலும் இதே நிலைமைதான். கண்ணதாசன் மணிமண்டபத்திற்கும் கம்பன் மணிமண்டபத்திற்கும் ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆங்காங்கே கம்பன் விழா நடத்துபவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டிய சங்கதி!

Anonymous said...

¸ñ½¾¡ºÉ¢ý ¸Å¢¨¾Â¢ø ¯ûÇ ±Ç¢¨Á ¦º¡øÄ¢ Á¡Ç¡Ð. ²§¾¡ ´Õ §ÀîÍô §À¡ðÊìÌ ±ÉìÌ ÅÉÅ¡ºõ À⺡¸ «Ç¢ò¾¡÷¸û. µ§Ã ¿¡Ç¢ø ÀÊòÐ ÓÊò§¾ý.¿¡ý §ÀÍõ §À¡Ð «Åâý ¸Å¢¨¾ ¸¨Ç «¾¢¸õ ¯¾¡Ã½õ ¸¡ðÎÅÐ ¯ñÎ. ±Ç¢¨Á, «§¾ §¿Ãò¾¢ø «¾ü¸¡¸ ¾Â¡÷ ¦ºöÂò§¾¨Å¢ø¨Ä.
"¾õÁ¢Ûõ ¦ÁĢ¡¨Ãò ¾ÁШ¼¨Á «õÁ¡ ¦À⦾ýÚ «¸õ Á¸¢ú¾ø §ÅñÎõ' ±ýÀ¨¾ " ¯ÉìÌõ ¸£§Æ ¯ûÇÅ÷ §¸¡Ê ¿¢¨ÉòÐôÀ¡÷òÐ ¿¢õÁ¾¢ ¿¡Î ±ýÈ Åâ¸û ±Ç¢¾¡ö ¦º¡øÖõ. ¾¢¨ÃôÀ¼í¸ÙìÌ À¡ð¦¼Ø¾¢, «Ãº¢ÂÄ¢ø ¾ÎÁ¡È¢, Àð¦¼É §Àº¢Â¾¡ø ¾¡§É¡ ±ýɧš ¸ñ½¾¡ºÛìÌ «ò¾¨É «í¸£¸¡Ãõ þø¨Ä. ¡ÕìÌ ¿ñÀý ±ýÀ¨¾Å¢¼, ¡ÕìÌô À¨¸Åý ±ýÀÐõ §¾¨Å¾¡§É¡ ±ýɧš.
"¿¡ý ¿¢Ãó¾ÃÁ¡ÉÅý «Æ¢Å¾¢ø¨Ä ±ó¾ ¿¢¨Ä¢Öõ ±É째¡÷ ÁýÁ¢ø¨Ä±ýÚ «Å§Ã ¦º¡ýÉЧÀ¡ø Á½¢Áñ¼Àõ þøÄ¡Áø §À¡É¡¦ÄýÉ, Áì¸û ÁÉòÐ º¢õÁ¡ºÉõ ¯ñÎ ±ô§À¡Ðõ.
ÀòÁ¡ «ÃÅ¢óò

மாலன் said...
This comment has been removed by a blog administrator.
மாலன் said...

மேலே உள்ள தகுதர பின்னூட்டத்தின் யூனிகோட் வடிவம்:

கண்ணதாசனின் கவிதையில் உள்ள எளிமை சொல்லி மாளாது. ஏதோ ஒரு பேச்சுப் போட்டிக்கு எனக்கு வனவாசம் பரிசாக அளித்தார்கள். ஓரே நாளில் படித்து முடித்தேன்.நான் பேசும் போது அவரின் கவிதை களை அதிகம் உதாரணம் காட்டுவது உண்டு. எளிமை, அதே நேரத்தில் அதற்காக தயார் செய்யத்தேவையில்லை.
"தம்மினும் மெலியாரைத் தமதுடைமை அம்மா பெரிதென்று அகம் மகிழ்தல் வேண்டும்' என்பதை " உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகள் எளிதாய் சொல்லும். திரைப்படங்களுக்கு பாட்டெழுதி, அரசியலில் தடுமாறி, பட்டென பேசியதால் தானோ என்னவோ கண்ணதாசனுக்கு அத்தனை அங்கீகாரம் இல்லை. யாருக்கு நண்பன் என்பதைவிட, யாருக்குப் பகைவன் என்பதும் தேவைதானோ என்னவோ.
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கோர் மரணமில்லைஎன்று அவரே சொன்னதுபோல் மணிமண்டபம் இல்லாமல் போனாலென்ன, மக்கள் மனத்து சிம்மாசனம் உண்டு எப்போதும்.
பத்மா அரவிந்த்