திடீரென்று அந்த அரசுப் பள்ளியின் முன் மக்கள் குவிந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. யாரோ ஒருவன் பள்ளியின் மீது கல் ஒன்றை வீசினான். அவ்வளவுதான் கட்டவிழத்துக் கொண்ட வன்முறை, தீப்பிடித்தாற்போல் மளமளவென்று அந்தப் பகுதி முழுதும் பரவியது. ஒரு மாருதி ஜிப்சி எரிக்கப்பட்டது. பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தத் திடீர் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன?
அன்று மதியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி. அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்து அவர்களை நிர்வாணமாகப் படமெடுக்கிறார். பின் அந்தப் படத்தை அவர்களிடம் காண்பித்து, அவர்களை பிளாக்மெயில் செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார் என்றது செய்தி. சாபரி சூட் அணிந்து ஒரு வர்த்தகர் போல் தோற்றம் தரும் ஒரு நடுவயதுக்காரருடன் ஒரு இளம் பெண்ணை அந்த ஆசிரியை அனுப்பிவைப்பது போலவும், அந்தப் பெண்ணிடம் அவர் 4000 ரூபாய் பணம் கொடுப்பது போலவும் காட்சிகள் திரையில் ஓடின. இந்தக் காட்சிகள் சம்பந்தப்பட்டவர்கள் அறியாமல் மறைவாகப் பதிவு செய்யப்பட்டவை (Sting operation) என்று பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது அந்த தொலைக்காட்சி. ஆனால்-
அத்தனையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம்!
பொது அமைதிக்குக் குந்தகமும், பொதுச் சொத்துக்களுக்கு இத்தனை நாசமும் விளைவித்த, இரண்டு பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராத அவமானத்தையும் ஏற்படுத்தித் தந்த இந்தக் காட்சிகள் 'செட்-அப்' செய்யப்பட்டவை. அதில் விலை பேசப்பட்டவராகத் தோன்றிய இளம் பெண் மாணவி அல்ல. அந்த ஆசிரியையும் இது போன்ற செயல்களைச் செய்பவர் அல்ல. இப்படி போலியாக ஒரு செய்தியை உருவாக்கி, ஒளிபரப்பக் காரணம், அந்த இரு பெண்களில் ஒருவரோடு இருந்த தனிப்பட்ட விரோதம்தான்.
உமா குரானா,அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை. பள்ளி வேலை போக, செயற்கைக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். அவருக்கும் வீரேந்திர அரோரா என்பவருக்கும் இடையே, கொடுக்கல் வாங்கலில் ஏதோ தகராறு. வீரேந்திர அரோரா நடத்தி வந்த சிட்பண்ட் நிறுவனத்தில் சீட்டு எடுத்த வகையில் உமா அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.(இதை உமா மறுக்கிறார். அரோரா வேறு ஒருவருக்குப் பணம் கொடுக்கும் போது தான் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்ததாகச் சொல்கிறார்) இதன் காரணமாக இருவருக்குமிடையே விரோதம் இருந்து வந்தது. ஆகஸ்ட் இறுதி நாள்களில் வீரேந்தர் தன்னுடைய நண்பரான பிரகாஷ் சிங்கைத் தொடர்பு கொண்டார்
பிரகாஷ் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த இளம் பத்திரிகையாளர். இருவரும் சேர்ந்து உமா குரானவை 'மாட்டி விட' ஒரு திட்டம் தீட்டினர். சிங் உமாவிடம் கை பேசியில், வேறு ஒரு பெயரில், ஒரு வர்த்தகர் பேசுவது போல பேசினார். அவரது நகைக்கடைக்குத் தன்னால் நிறைய ஆர்டர்கள் வாங்கித் தரமுடியும் என்றும் அது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். பெரிய அளவில் ஆர்டர் கொடுக்கிற பிசினஸ்மேன்கள், பெண்களை அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள் என்றும், அதற்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சொன்னார். ஆனால் உமா அது தன்னால் முடியாது எனத் தெரிவித்து விட்டார். "நீங்கள் ஒரு பெண்கள் பள்ளியில்தானே பணியாற்றுகிறீர்கள், அங்கு யாரையாவது 'கன்வின்ஸ்' செய்து பாருங்கள் என்றும் சிங் யோசனை கொடுத்திருக்கிறார். ஆனால் உமா அநதப் பேச்சே வேண்டாம் என மறுத்து விட்டார்.ஏமாற்றமடைந்த சிங் தன்னுடைய நாடகத்திற்கு ஆள் தேட ஆரம்பித்தார். பத்திரிகையாளராக வேண்டும் என்ற தாகத்தோடு, ஆனால் சரியான வேலை கிடைக்காமல், ஒரு சிறு பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஷ்மியின் ஞாபகம் வந்தது. சக பத்திரிகையாளர் என்ற முறையில் அவருக்கு ராஷ்மியோடு அறிமுகம் ஏற்பட்டிருந்தது. ராஷ்மியை சந்தித்துப் பேசினார். ராஷ்மியிடம் தனது sting operationக்கு உதவ வேண்டும் என்றும், அது முடிந்தவுடன், தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சியிலேயே உதவிக் குற்றவியல் செய்தியாளராக வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். ஆனால் ராஷ்மியிடம், உமாவிற்கும், வீரேந்தருக்கும் இருந்து வரும் பகை பற்றி ஏதும் சொல்லவில்லை. ஒரு ஆசிரியையே மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் அக்ரமம் நடந்து வருவதாகவும், அதை அம்பலப்படுத்த தான் மேற்கொள்ளும் நல்ல காரியத்திற்கு உதவ வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
பின் உமாவைத் தொடர்பு கொண்டார். ஆர்டர்கள் பிடித்துத் தருவதில் 'திறமையுள்ள' ஒரு பெண்ணைத் தான் தேடிக் கண்டிருப்பதாகவும் அவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என்று உமா சொன்னபோது நீங்கள் எதற்கும் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுங்களேன் என்று யோச்னை கொடுத்திருக்கிறார். ஜூலை 19ம் தேதி, தன்னை ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் அந்தப் பெண்ணை தன்னை சந்திக்க அழைத்து வருமாறு சொன்னார் உமா. ராஷ்மியையும் அழைத்துக் கொண்டு அந்த வணிக வளாகத்திற்குச் சென்றார் சிங். முதலி ராஷ்மி மட்டும் தனியாகச் சென்று உமாவை சந்த்தித்தார், அவர்கள் இருவரும் உரையாடுவது போன்ற காட்சி உமாவிற்குத் தெரியாமல் பதிவு செய்யபட்டது. பின் சிங் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என சிங்கிடம் சொன்னார் உமா.பின் ராஷ்மி சிங்குடன் காரில் ஏறிக் கொண்டார். அந்தக் காட்சியும் பதிவு செய்யப்பட்டது. பின் சிங் ராஷ்மியிடம் 4000 ரூபாய் கொடுக்கப்படுவது போல் ஒரு காட்சி பதிவு செய்யப்பட்டது. அவ்வளவுதான், இந்தக் காட்சிகளையும், ' பிசினசிற்கு ஏற்பாடு செய்யுங்கள்' 'நீங்கள் இந்த இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்' என்பது போன்ற பொதுவான வாக்கியங்கள் கொண்ட தொலைபேசி உரையாடல்களையும் வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான 'செய்தி' தயாரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சிங் வேலை பார்த்து வந்த தொலைக்காட்சி இதனை ஒளிபரப்ப மறுத்துவிட்டது. செய்தியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக அது கருதியது. அந்த நிறுவனத்தில் ஒரு பயிற்சி செய்தியாளராகத்தான் (intern) இருந்தார் சிங். சில நாட்களில் வேறு ஒரு தொலைக்காட்சியில் வேலை தேடிக் கொண்டு நகர்ந்த சிங், இந்த ஒளிநாடாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். (இது தொலைக்காட்சி உலகில் பெரும் குற்றம்.) அந்த புதிய தொலைக்காட்சியில் தன்னுடைய 'நாடகத்தை' ஒளிபர்ப்பினார். அவ்வளவுதான் ஊர் தீப்பிடித்துக் கொண்டது.
சட்டம் ஒழுங்குப் பிரசினை ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை உமாவைக் கைது செய்தது. அவர்மீது விபசாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அரசு அவரை வேலையிலிருந்து நீக்கியது. உமா காவலில் இருந்த போது அவரது வீட்டுக் கதவை உடைத்து காவல் துறை சோதனையிட்டது. டிவிடிகளும், ஆவணங்களும் கிடைத்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த டிவிடிகளைப் போட்டுப் பார்த்த போது அவை சினிமாப்படங்களும், கார்ட்டூன் படங்கலும் எனத் தெரிந்தது. விலைமாதுவாகத் தோன்றியவர் மாணவிதானா என உறுதி செய்து கொள்ள பள்ளிக்குச் சென்றது காவல்துறை. அவர் மாணவி அல்ல எனத் தெரியவந்ததும் அதன் புருவங்கள் உயர்ந்தன. சிங்கை அந்தப் பெண், ராஷ்மியை விசாரணைக்கு அழைத்து வருமாறு கோரியது. அவள் விலைமாது. இப்போது எங்கிருக்கிறாள் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சிங். காவல்துறை தேட ஆரம்பித்தது. தான் தேடப்படுவது தெரிந்ததும் ராஷ்மி நீதிமன்றத்தி சரணடைந்தார். அவர் தனக்கும் சிங்கிற்குமிடையே நடந்த உரையாடலைத் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். காவல்துறை சிங்கை 'எடிட்' செய்யப்படாத ஒரிஜினல் ஒளிநாடாக்களைத் தரும்படி கோரியது. அவர் தயங்கினார். காவல்துறை அவற்றைக் கைப்ப்பற்றிப் போட்டுப் பார்த்த போது உண்மைகள் தெரிய வந்தன. சிங் கைது செய்ய்ப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரனையின் போது கண்ணீர் விட்டுக் கலங்கிய சிங், தான் செய்வது தவறு என்று தெரிந்தும், இதன் மூலம் தனது செய்தியாளர் தொழிலில் ஒரு உயர்ந்த இடத்தை அடையலாம் என எண்ணி அதைச் செய்ய முனைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் போலி நாடகம், தில்லி ஊடக உலகில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒரு ஊடகத்தைத் தனது சொந்தப் பகைகளைக் கணக்குத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்வது சரிதானா என்பது ஒரு கேள்வி. தொலைக்காட்சி உலகில் ஏற்பட்டுள்ள போட்டி தொலைக்காட்சிகளை எங்கு இட்டுச் செல்கின்றன? என்ற கவலை தோய்ந்த கேள்வி மற்றொன்று. ஊடகத் துறையில் உள்ள இளம் பத்திரிகையாளர்களது நிலையை, ஊடகத் துறையில் வேலை கிடைப்பதற்கும், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதில் முன்னேறுவதற்கும் இளைஞர்களுக்குள்ள நெருக்கடிகளை, சிங், ராஷ்மி இருவரது நிலையும் உதாரணிக்கின்றன. 'சாதனை' புரியவில்லையெனில் இங்கு காணாமல் போய்விடுவோம் என்ற பதற்றம் அவர்களைப் பற்றியிருப்பதையும், அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நெருக்கடிக்கு அவர்கள் உள்ளாகியிருப்பதைப் பற்றியும் சிலர் பேசுகிறார்கள்.
காயங்களும் நியாயங்களும் எப்படி இருந்தாலும் சந்தை ஊடகங்களைத் மெல்ல மெல்லத் தின்னத் துவங்கியிருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்,
* எதையும் தாங்கும் இதயம் இருந்தால் சந்தையின் நிர்பந்தத்திற்குத் தன்னை விற்க வேண்டிய அவசியமில்லை என்பதை மக்கள் தொலைக்காட்சி நிரூபித்து வருகிறது. அண்மையில் அது தனது முதலாண்டை நிறைவு செய்தது. இந்த ஓராண்டும், திரைப்பட நறுக்குகளையும் திரை நட்சத்திரங்களையும் கொண்டு நிகழ்ச்சிகளை நிரப்பாமல், சுருக்கமாகச் சொன்னால், TRP ratingஐப் பொருட்படுத்தாமல், TAM அறிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அது நடைபோட்டிருக்கிறது. திரை நட்சத்திரங்களுக்குப் பதில், தமிழறிஞர் நன்னன், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர்.சுப.வீரபாண்டியன், சமூகப் போராளி தியாகு போன்ற நட்சத்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தனித்தமிழார்வம், சமூக சிந்தனைகள், நாட்டார் கலைமரபு, ஆகியவைகள் கவனம் பெறுகின்றன. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத மருத்துவர்கள் (quakery), அதிர்ஷ்டக்கல், நியூமராலாஜி, போன்ற தாயத்து விற்பவர்களைப் புறக்கணித்து வந்திருக்கிறது. அதன் முதலாண்டு விழாவில் பேசும் போது மருத்துவர். ராமதாஸ், விளம்பரங்களைக் கூட சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்கப் போவதில்லை என்று சொன்னார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சுருக்கமாகச் சொன்னால் இலக்கியச் சிற்றேடுகளுக்குரிய தனித் தன்மையோடும், அந்தத் தனித்தன்மையின் காரணமாக ஏற்படும் பெருமித்த்தோடும், பிடிவாதத்துடனும், மக்கள் தொலைக்காட்சி இயங்கி வருகிறது. தமிழின் முதல் niche channel! DTH போன்ற தொழில்நுட்பங்கள் சாத்தியமாகிவிட்ட இன்று, போதுமான சந்தாதாரர்கள் கிடைத்துவிட்டால் அது தொடர்ந்து இந்த சிறுபத்திரிகை குணங்களோடு நீடிக்க முடியும். ஆனால் சிறுபத்திரிகைகள் அரசியல் இலக்குகளை எட்ட உதவாது. அவை அரசியல் கருவிகள் இல்லை (It is not a political instrument) பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த முரண்பாட்டில் உடன்பாடு உண்டா என்பது பொறுத்திருந்துதான் காண வேண்டிய ஒன்று.
உண்ணாநிலை (உண்ணா விரதம்) பரப்புரை (பிரசாரம்), தொடர்வண்டி (ரயில்) தானி (ஆட்டோ ) எனப் பல தமிழ்ச் சொற்களை அதன் செய்திகளில் கேட்டேன்.நல்ல முயற்சி. ஆனால் மக்கள் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக் கொண்டுவிட்ட, மக்கள் மொழியில் உள்ளவற்றை மாற்றும் முன் இருமுறை சிந்திக்கலாம் என்பது கருத்து. சிமிண்ட் என்பதை சிமிட்டி என்று மக்கள் செய்திகளில் சொல்கிறார்கள். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஏனெனில், கட்டடத் தொழிலாளர்கள் மத்தியில் வழக்கில் இருந்த சொல்தான் அது. ஆனால், தானி? உண்ணாவிரதம் உண்ணாநிலை ஆவதில் சில குழப்பங்கள் ஏற்படக் கூடும். 'விரதம்' என்ற சொல்லுக்குப் பின்னுள்ள உணர்வுகள் 'நிலை'யில் வெளிப்படவில்லை. ஒர் இலக்கினை அடைய வேண்டித் தன் சுகங்களைப் புற்ந்தள்ளித் தன்னை வருத்திக் கொள்வது என்பது விரதம் என்ற சொல் பொதிந்து வைத்திருக்கும் பொருள். நிலை என்பது ஒரு நிலைமையை (Status)ஐக் குறிப்பது. ஒருவர் சாப்பிடாமல் இருப்பதற்கு, அதாவது உண்ணாத நிலையில் இருப்பதற்கு, நிறையக் காரணங்கள் இருக்கலாம். வறுமை காரணமாக இருக்கலாம். வயிற்று வலி காரணமாக இருக்கலாம். உணவு கிடைக்காதது காரணமாக இருக்கலாம். கிடைத்த உணவு தரமற்றதாக, ருசியற்றதாக, தனக்குப் பிடித்தமானதாக இல்லாது இருக்கலாம். இவையெல்லாம் 'விரதங்களாக' அதாவத் தற்காலிகத் தவங்களாகிவிடாது. நமது பெண்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஏதோ வேண்டுதல்களுக்காக விரதம் இருக்கிறார்கள். அவை உண்ணாநிலைகளாக ஆகி விடாது. ஏனெனில் அதில் 'போராட்டம்' ஏதுமில்லை.
ஆனால் இவையெல்லாம் சின்ன சின்ன குறைகள். சரிப்படுத்திக் கொள்ளக் கூடிய குறைகள். நோக்கம் பெரிது. அது பாராட்டிற்குரியது.. மக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
புதிய்பார்வை இதழில் நான் எழுதிவரும் பத்தி- நனைக்க மறந்த நதி-க்காக எழுதியது
3 weeks ago