இது நாள் வரை சுமார் 75 சதவீத இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே ( 2004ல் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 26.53% 1999ல் பாஜக பெற்ற வாக்குகள் 23.75%) ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வந்திருக்கின்றன. அவை அதிகாரம் செலுத்த உதவியவை மாநிலக் கட்சிகள்தான்!
இந்த முறை ஆட்சிக்கு உரிமை கோரி நிற்கும் அந்த இரண்டு பெரிய கட்சிகளின் தலையில் உள்ள கூட்டணிகளுக்கு மாற்றாக இன்னொரு அணியும் களத்தில் நிற்கிறது. இது தத்தம் மாநிலங்களில் பலம் பொருந்திய கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஓர் அணி.
கூட்டணி ஆட்சி நிலைத்த அரசுகளைத் தராது என்ற வாதத்தை 1999லிருந்து கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வரும் கூட்டணி அரசுகள் உடைத்தெறிந்து விட்டன.இன்று அனேகமாக அனைத்துக் கட்சிகளுமே இனி இந்தியாவில் கூட்டணி அரசுகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டன.
இனி கூட்டணி ஆட்சிதான் யதார்த்தம் என்பதால், வாக்காளர்கள் கூட்டணிகளின் அடிப்படையிலதான் யாருக்கு வாக்களிப்பதை முடிவு செய்ய வேண்டுமே அன்றி ஒரு குறிப்பிட்ட கட்சியின் அடிப்படையில் அல்ல என்பதும் அந்த யதார்த்தத்தின் ஒரு முகமாகிறது.
அந்தக் கோணத்தில் பார்க்கும் போது இருக்கும் மூன்று அணிகளில் மூன்றாவது அணி என்று சொல்லக்கூடிய மாற்று அணி கீழ்க்கண்ட காரணங்களால் நம்பிக்கை தருவதாக இருக்கிறது :
- இந்தியாவின் சாரம்சம் என நான் கருதும் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை ஆகிய அம்சங்களைப் அது இன்று பிரதிநிதித்துவப்படுத்துகிறது
- காங்கிரஸ், பாஜக ஆகிய இரு சக்திகளுக்கு மாற்றாக ஒரு அரசியலை முன் வைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி,{UPA} தேசிய ஜனநாயகக் கூட்டணி {NDA} இரண்டுமே இத்தகையதல்ல. ஒன்று பாஜகவிற்கு மாற்று, மற்றொன்று காங்கிரசிற்கு மாற்று. முதன்முறையாக இரு சக்திகளுக்கும் மாற்றாக ஒரு அரசியல் Formation முயற்சிக்கப்படுகிறது. அதை ஆதரிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என நான் கருதுகிறேன்..
இந்தக் கூட்டணி ஒரு அணியாக நிலைபெறுவது ஒரு வேளை சாத்தியமற்றுப் போனாலும், அரசியலில் இதற்கான ஒரு வெளி ( an alternative political space) விரிவுபடுத்தப்படுகிறது - இது மிக முக்கியமானது. ஏனெனில் காங்கிரசோ, பாஜகவோ உருவாக்கும் அணிகள் தங்களது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனால்தான் 1999ல் திமுக பாஜக தலைமையிலான கூட்டணியிலும், 2004ல் அதே திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் பங்கு பெற முடிகிறது.அந்தக் கூட்டணிகள் அரசியல் கருத்து அடிப்படையில் அமைந்தவை அல்ல. அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானல் கணக்குகள் தேவைப்படலாம். ஆனால் இன்று நாட்டின் குடிமகனுக்குத் தேவைப்படுவது காங்கிரஸ்- பாஜக இல்லாத மாற்றரசியல்
ஒரு கூட்டுத் தலைமைக்கான வாய்ப்பு உருவாகிறது. வாரிசு அரசியல் என்பது வலுவிழப்பதற்கான மாற்று கூட்டுத் தலைமையும், ஒருமித்த கருத்தடிப்படையில் முடிவெடுப்பதும்தான்.(Rule by consensus) - இந்தத் தேர்தலின் முடிவில் காங்கிரசோ பாஜகவோ ஆட்சியமைத்தால் அது தேர்தலுக்குப் பின் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு கூட்டாக இருக்கும் (Post Poll Alliance) ஆனால் மூன்றாவது அணி என்பது ஆட்சிக்கு முந்திய கூட்டு.{Pre Poll alliance) வாக்களன் என்ற முறையில் நான் ஆட்சிக்கு முந்திய கூட்டணியையே விரும்புவேன். ஏனெனில் அது பற்றி முடிவெடுக்கும் ஒரு வாய்ப்பை அது எனக்கு அளிக்கிறது. ஆட்சிக்குப் பிந்திய கூட்டிற்கு என் அபிப்பிராயங்கள் தேவையே இல்லை
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் அரசுகளுக்கெதிரான கூட்டு. எந்த ஒரு அரசையும் நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு அறிவிக்கப்படாத யதேச்சாதிகாரம் நடைமுறைக்கு வந்து விடும்
இந்தக் கூட்டணியின் முன் உள்ள சவாலாக நான் கருதுவது
- எது அதன் பலமோ அதுதான் அதன் பலவீனமும் கூட: அந்தப் பன்முகத்தன்மை. ஆனால் இந்தியாவின் பலமும் பலவீனமும் இதுதான். தீவிரமான இடது சாரிப் பாதை, அல்லது தீவிரமான மூலதனவாதம், தீவீரமான, லிபரல் அல்லது தீவீரமான அடிப்படைவாதப் பாதைக்குச் சென்றுவிடாமல் ஒரு நடுநிலைப் பாதையைப் பின்பற்றுமாறு இந்திய அரசை வற்புறுத்துவதும் இந்தப் பன்முகத் தன்மைதான்.இதற்குள் ஒருவித தடைகளும், சமநிலைப்படுத்தும் கட்டாயமும் (checks and balances) அமைந்திருக்கின்றன. அதே நேரம் இந்த உள்ளீடு விரைந்து செயல்படத் தடையாக இருக்கிறது என்பதும் உண்மைதான்.
- மாநிலங்களில் மட்டும் செல்வாக்குக் கொண்ட கட்சிகளின் கூட்டணி என்பதால் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசியல் சமன்பாடுகள் இந்தக் கூட்டணியை காங்கிரஸ் பாஜகவிற்கு எதிரான ஒரு முழுமையான மாற்றாக வளர்ச்சி பெற இயலாத நிலையை ஏற்படுத்திவிடும். அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசும் பாஜகவும் ஆதாயம் தேட முற்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் திமுக அதிமுக மற்ற மாநிலக் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இருக்கும் போது காங்கிரஸ் பாஜக என்பவை தனித்தே தேர்தல்களை எதிர் கொள்ள நேரிடும். அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என ஊகிப்பது எவருக்கும் அத்தனை கடினமில்லை. ஆனால் திமுகவும் அதிமுகவும் எதிர் எதிரே நிற்பதுதான் இன்றைய யதார்த்தம். அதைப் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது. இது நாளடைவில் பிரித்து ஆள்கிற (divide and rule) சூழலை மீண்டும் அரசியலில் கொண்டு வரும்.
- மாநிலக் கட்சிகளில் ஒருவித Cult அரசியல், அதாவது வழிபாட்டுக் கலாசாரம் இருக்கிறது. அதிமுகவிற்கு இதய தெய்வம் ஜெ. திமுகவின் காவல் தெய்வம் கருணா. பிஜேடியின் தெய்வம் நவீன் பட்னாயக். இந்த வழிபாட்டு அரசியல் நிலை பெற இது உதவலாம். ஆனால் தேசியக் கட்சிகளும் இதற்கு தப்பவில்லை. காங்கிரசில் நேற்று ராஜீவ். இன்று சோனியா, நாளை ராகுல். பாஜகவிலும் மோடி மீது இது போன்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.
மாற்று அணி என்பது ஆட்சி மாற்றம் என்பதாக மட்டும் முடிந்து விடாமல் கொள்கைகளில் மாற்றம், அணுகுமுறைகளில் மாற்றம்,முன்னுரிமைகளில் மாற்றம் என்பதாகவும் விரிவடைய வேண்டும் என நான் விரும்புகிறேன், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. காங்கிரஸ், பாஜக இடையே வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகளில் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால் தனி ஈழம் என்ற ஜெயலலிதாவின் முழக்கம் அயலுறவுக் கொள்கையில் ஒரு மாற்றத்தை நிர்பந்திக்கிறது. இடதுசாரிகள் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன் வைக்கின்றனர்.பயங்கரவாதம் குறித்த அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கும் எனத் தோன்றுகிறது.
Change the status quo என்பதுதான் இன்றைய இந்தியாவின் தேவை. அதனால் 3ம் அணிக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறேன்.
3 comments:
இலங்கையில் ஒரே இரவில் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலி.
http://www.ponmaalai.com/2009/05/2000.html
Dear Mr.maalan,
I read ur yarruku vaakalipathu series. Weldone. I appreciate ur analysis. And as a citizen of to be born new country Tamil Eelam i thank you... Thanks a lot for ur decision.
If our brothers and sisters in Tamil naadu take dis decision, they can save innocent eelam tamils and u all can help to create a new country.
Cos we r da people who lost e.thing. we only have one hope. that is tamil naadu people. please help us,
Ramesh
From Tamil Eelam
Offering money and comforts for vote is a good sign indicating that people who do this have fell in trap where they can never satisfy people, because, these or just ghee poured on fire and not water. People will never say enough, after all they are a collection of indhriyas...
Contentment is achieved only by showing the way and making people work for it.
Post a Comment