Showing posts with label தேர்தல் 2009. Show all posts
Showing posts with label தேர்தல் 2009. Show all posts

Tuesday, May 19, 2009

தேர்தல் தீர்ப்பு: வென்றதும் வீழ்ந்ததும்

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பாராத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.

அம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.

மறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே!

அதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.

பதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்

திடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.

இரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது

*
இது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.

இந்த முறை வேறு ஒரு நண்பர் தேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:

“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன

தேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.

இந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்க ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆகியவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.

எதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்வார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.

இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.

இந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.

Sunday, May 10, 2009

யாருக்கு வாக்களிப்பது-4?

மாற்று!

இது நாள் வரை சுமார் 75 சதவீத இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே ( 2004ல் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 26.53% 1999ல் பாஜக பெற்ற வாக்குகள் 23.75%) ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வந்திருக்கின்றன. அவை அதிகாரம் செலுத்த உதவியவை மாநிலக் கட்சிகள்தான்!

இந்த முறை ஆட்சிக்கு உரிமை கோரி நிற்கும் அந்த இரண்டு பெரிய கட்சிகளின் தலையில் உள்ள கூட்டணிகளுக்கு மாற்றாக இன்னொரு அணியும் களத்தில் நிற்கிறது. இது தத்தம் மாநிலங்களில் பலம் பொருந்திய கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஓர் அணி.

கூட்டணி ஆட்சி நிலைத்த அரசுகளைத் தராது என்ற வாதத்தை 1999லிருந்து கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வரும் கூட்டணி அரசுகள் உடைத்தெறிந்து விட்டன.இன்று அனேகமாக அனைத்துக் கட்சிகளுமே இனி இந்தியாவில் கூட்டணி அரசுகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

இனி கூட்டணி ஆட்சிதான் யதார்த்தம் என்பதால், வாக்காளர்கள் கூட்டணிகளின் அடிப்படையிலதான் யாருக்கு வாக்களிப்பதை முடிவு செய்ய வேண்டுமே அன்றி ஒரு குறிப்பிட்ட கட்சியின் அடிப்படையில் அல்ல என்பதும் அந்த யதார்த்தத்தின் ஒரு முகமாகிறது.

அந்தக் கோணத்தில் பார்க்கும் போது இருக்கும் மூன்று அணிகளில் மூன்றாவது அணி என்று சொல்லக்கூடிய மாற்று அணி கீழ்க்கண்ட காரணங்களால் நம்பிக்கை தருவதாக இருக்கிறது :
  • இந்தியாவின் சாரம்சம் என நான் கருதும் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை ஆகிய அம்சங்களைப் அது இன்று பிரதிநிதித்துவப்படுத்துகிறது
  • காங்கிரஸ், பாஜக ஆகிய இரு சக்திகளுக்கு மாற்றாக ஒரு அரசியலை முன் வைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி,{UPA} தேசிய ஜனநாயகக் கூட்டணி {NDA} இரண்டுமே இத்தகையதல்ல. ஒன்று பாஜகவிற்கு மாற்று, மற்றொன்று காங்கிரசிற்கு மாற்று. முதன்முறையாக இரு சக்திகளுக்கும் மாற்றாக ஒரு அரசியல் Formation முயற்சிக்கப்படுகிறது. அதை ஆதரிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என நான் கருதுகிறேன்..
    இந்தக் கூட்டணி ஒரு அணியாக நிலைபெறுவது ஒரு வேளை சாத்தியமற்றுப் போனாலும், அரசியலில் இதற்கான ஒரு வெளி ( an alternative political space) விரிவுபடுத்தப்படுகிறது
  • இது மிக முக்கியமானது. ஏனெனில் காங்கிரசோ, பாஜகவோ உருவாக்கும் அணிகள் தங்களது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனால்தான் 1999ல் திமுக பாஜக தலைமையிலான கூட்டணியிலும், 2004ல் அதே திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் பங்கு பெற முடிகிறது.அந்தக் கூட்டணிகள் அரசியல் கருத்து அடிப்படையில் அமைந்தவை அல்ல. அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானல் கணக்குகள் தேவைப்படலாம். ஆனால் இன்று நாட்டின் குடிமகனுக்குத் தேவைப்படுவது காங்கிரஸ்- பாஜக இல்லாத மாற்றரசியல்
    ஒரு கூட்டுத் தலைமைக்கான வாய்ப்பு உருவாகிறது. வாரிசு அரசியல் என்பது வலுவிழப்பதற்கான மாற்று கூட்டுத் தலைமையும், ஒருமித்த கருத்தடிப்படையில் முடிவெடுப்பதும்தான்.(Rule by consensus)
  • இந்தத் தேர்தலின் முடிவில் காங்கிரசோ பாஜகவோ ஆட்சியமைத்தால் அது தேர்தலுக்குப் பின் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு கூட்டாக இருக்கும் (Post Poll Alliance) ஆனால் மூன்றாவது அணி என்பது ஆட்சிக்கு முந்திய கூட்டு.{Pre Poll alliance) வாக்களன் என்ற முறையில் நான் ஆட்சிக்கு முந்திய கூட்டணியையே விரும்புவேன். ஏனெனில் அது பற்றி முடிவெடுக்கும் ஒரு வாய்ப்பை அது எனக்கு அளிக்கிறது. ஆட்சிக்குப் பிந்திய கூட்டிற்கு என் அபிப்பிராயங்கள் தேவையே இல்லை
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் அரசுகளுக்கெதிரான கூட்டு. எந்த ஒரு அரசையும் நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு அறிவிக்கப்படாத யதேச்சாதிகாரம் நடைமுறைக்கு வந்து விடும்

இந்தக் கூட்டணியின் முன் உள்ள சவாலாக நான் கருதுவது

  • எது அதன் பலமோ அதுதான் அதன் பலவீனமும் கூட: அந்தப் பன்முகத்தன்மை. ஆனால் இந்தியாவின் பலமும் பலவீனமும் இதுதான். தீவிரமான இடது சாரிப் பாதை, அல்லது தீவிரமான மூலதனவாதம், தீவீரமான, லிபரல் அல்லது தீவீரமான அடிப்படைவாதப் பாதைக்குச் சென்றுவிடாமல் ஒரு நடுநிலைப் பாதையைப் பின்பற்றுமாறு இந்திய அரசை வற்புறுத்துவதும் இந்தப் பன்முகத் தன்மைதான்.இதற்குள் ஒருவித தடைகளும், சமநிலைப்படுத்தும் கட்டாயமும் (checks and balances) அமைந்திருக்கின்றன. அதே நேரம் இந்த உள்ளீடு விரைந்து செயல்படத் தடையாக இருக்கிறது என்பதும் உண்மைதான்.
  • மாநிலங்களில் மட்டும் செல்வாக்குக் கொண்ட கட்சிகளின் கூட்டணி என்பதால் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசியல் சமன்பாடுகள் இந்தக் கூட்டணியை காங்கிரஸ் பாஜகவிற்கு எதிரான ஒரு முழுமையான மாற்றாக வளர்ச்சி பெற இயலாத நிலையை ஏற்படுத்திவிடும். அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசும் பாஜகவும் ஆதாயம் தேட முற்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் திமுக அதிமுக மற்ற மாநிலக் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இருக்கும் போது காங்கிரஸ் பாஜக என்பவை தனித்தே தேர்தல்களை எதிர் கொள்ள நேரிடும். அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என ஊகிப்பது எவருக்கும் அத்தனை கடினமில்லை. ஆனால் திமுகவும் அதிமுகவும் எதிர் எதிரே நிற்பதுதான் இன்றைய யதார்த்தம். அதைப் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது. இது நாளடைவில் பிரித்து ஆள்கிற (divide and rule) சூழலை மீண்டும் அரசியலில் கொண்டு வரும்.
  • மாநிலக் கட்சிகளில் ஒருவித Cult அரசியல், அதாவது வழிபாட்டுக் கலாசாரம் இருக்கிறது. அதிமுகவிற்கு இதய தெய்வம் ஜெ. திமுகவின் காவல் தெய்வம் கருணா. பிஜேடியின் தெய்வம் நவீன் பட்னாயக். இந்த வழிபாட்டு அரசியல் நிலை பெற இது உதவலாம். ஆனால் தேசியக் கட்சிகளும் இதற்கு தப்பவில்லை. காங்கிரசில் நேற்று ராஜீவ். இன்று சோனியா, நாளை ராகுல். பாஜகவிலும் மோடி மீது இது போன்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.

மாற்று அணி என்பது ஆட்சி மாற்றம் என்பதாக மட்டும் முடிந்து விடாமல் கொள்கைகளில் மாற்றம், அணுகுமுறைகளில் மாற்றம்,முன்னுரிமைகளில் மாற்றம் என்பதாகவும் விரிவடைய வேண்டும் என நான் விரும்புகிறேன், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. காங்கிரஸ், பாஜக இடையே வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகளில் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால் தனி ஈழம் என்ற ஜெயலலிதாவின் முழக்கம் அயலுறவுக் கொள்கையில் ஒரு மாற்றத்தை நிர்பந்திக்கிறது. இடதுசாரிகள் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன் வைக்கின்றனர்.பயங்கரவாதம் குறித்த அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கும் எனத் தோன்றுகிறது.


Change the status quo என்பதுதான் இன்றைய இந்தியாவின் தேவை. அதனால் 3ம் அணிக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறேன்.