Tuesday, September 11, 2007

சந்தை தின்னும் ஊடகங்கள்

திடீரென்று அந்த அரசுப் பள்ளியின் முன் மக்கள் குவிந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. யாரோ ஒருவன் பள்ளியின் மீது கல் ஒன்றை வீசினான். அவ்வளவுதான் கட்டவிழத்துக் கொண்ட வன்முறை, தீப்பிடித்தாற்போல் மளமளவென்று அந்தப் பகுதி முழுதும் பரவியது. ஒரு மாருதி ஜிப்சி எரிக்கப்பட்டது. பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தத் திடீர் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன?
அன்று மதியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி. அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்து அவர்களை நிர்வாணமாகப் படமெடுக்கிறார். பின் அந்தப் படத்தை அவர்களிடம் காண்பித்து, அவர்களை பிளாக்மெயில் செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார் என்றது செய்தி. சாபரி சூட் அணிந்து ஒரு வர்த்தகர் போல் தோற்றம் தரும் ஒரு நடுவயதுக்காரருடன் ஒரு இளம் பெண்ணை அந்த ஆசிரியை அனுப்பிவைப்பது போலவும், அந்தப் பெண்ணிடம் அவர் 4000 ரூபாய் பணம் கொடுப்பது போலவும் காட்சிகள் திரையில் ஓடின. இந்தக் காட்சிகள் சம்பந்தப்பட்டவர்கள் அறியாமல் மறைவாகப் பதிவு செய்யப்பட்டவை (Sting operation) என்று பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது அந்த தொலைக்காட்சி. ஆனால்-
அத்தனையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம்!
பொது அமைதிக்குக் குந்தகமும், பொதுச் சொத்துக்களுக்கு இத்தனை நாசமும் விளைவித்த, இரண்டு பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராத அவமானத்தையும் ஏற்படுத்தித் தந்த இந்தக் காட்சிகள் 'செட்-அப்' செய்யப்பட்டவை. அதில் விலை பேசப்பட்டவராகத் தோன்றிய இளம் பெண் மாணவி அல்ல. அந்த ஆசிரியையும் இது போன்ற செயல்களைச் செய்பவர் அல்ல. இப்படி போலியாக ஒரு செய்தியை உருவாக்கி, ஒளிபரப்பக் காரணம், அந்த இரு பெண்களில் ஒருவரோடு இருந்த தனிப்பட்ட விரோதம்தான்.
உமா குரானா,அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை. பள்ளி வேலை போக, செயற்கைக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். அவருக்கும் வீரேந்திர அரோரா என்பவருக்கும் இடையே, கொடுக்கல் வாங்கலில் ஏதோ தகராறு. வீரேந்திர அரோரா நடத்தி வந்த சிட்பண்ட் நிறுவனத்தில் சீட்டு எடுத்த வகையில் உமா அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.(இதை உமா மறுக்கிறார். அரோரா வேறு ஒருவருக்குப் பணம் கொடுக்கும் போது தான் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்ததாகச் சொல்கிறார்) இதன் காரணமாக இருவருக்குமிடையே விரோதம் இருந்து வந்தது. ஆகஸ்ட் இறுதி நாள்களில் வீரேந்தர் தன்னுடைய நண்பரான பிரகாஷ் சிங்கைத் தொடர்பு கொண்டார்
பிரகாஷ் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த இளம் பத்திரிகையாளர். இருவரும் சேர்ந்து உமா குரானவை 'மாட்டி விட' ஒரு திட்டம் தீட்டினர். சிங் உமாவிடம் கை பேசியில், வேறு ஒரு பெயரில், ஒரு வர்த்தகர் பேசுவது போல பேசினார். அவரது நகைக்கடைக்குத் தன்னால் நிறைய ஆர்டர்கள் வாங்கித் தரமுடியும் என்றும் அது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். பெரிய அளவில் ஆர்டர் கொடுக்கிற பிசினஸ்மேன்கள், பெண்களை அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள் என்றும், அதற்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சொன்னார். ஆனால் உமா அது தன்னால் முடியாது எனத் தெரிவித்து விட்டார். "நீங்கள் ஒரு பெண்கள் பள்ளியில்தானே பணியாற்றுகிறீர்கள், அங்கு யாரையாவது 'கன்வின்ஸ்' செய்து பாருங்கள் என்றும் சிங் யோசனை கொடுத்திருக்கிறார். ஆனால் உமா அநதப் பேச்சே வேண்டாம் என மறுத்து விட்டார்.ஏமாற்றமடைந்த சிங் தன்னுடைய நாடகத்திற்கு ஆள் தேட ஆரம்பித்தார். பத்திரிகையாளராக வேண்டும் என்ற தாகத்தோடு, ஆனால் சரியான வேலை கிடைக்காமல், ஒரு சிறு பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஷ்மியின் ஞாபகம் வந்தது. சக பத்திரிகையாளர் என்ற முறையில் அவருக்கு ராஷ்மியோடு அறிமுகம் ஏற்பட்டிருந்தது. ராஷ்மியை சந்தித்துப் பேசினார். ராஷ்மியிடம் தனது sting operationக்கு உதவ வேண்டும் என்றும், அது முடிந்தவுடன், தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சியிலேயே உதவிக் குற்றவியல் செய்தியாளராக வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். ஆனால் ராஷ்மியிடம், உமாவிற்கும், வீரேந்தருக்கும் இருந்து வரும் பகை பற்றி ஏதும் சொல்லவில்லை. ஒரு ஆசிரியையே மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் அக்ரமம் நடந்து வருவதாகவும், அதை அம்பலப்படுத்த தான் மேற்கொள்ளும் நல்ல காரியத்திற்கு உதவ வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
பின் உமாவைத் தொடர்பு கொண்டார். ஆர்டர்கள் பிடித்துத் தருவதில் 'திறமையுள்ள' ஒரு பெண்ணைத் தான் தேடிக் கண்டிருப்பதாகவும் அவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என்று உமா சொன்னபோது நீங்கள் எதற்கும் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுங்களேன் என்று யோச்னை கொடுத்திருக்கிறார். ஜூலை 19ம் தேதி, தன்னை ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் அந்தப் பெண்ணை தன்னை சந்திக்க அழைத்து வருமாறு சொன்னார் உமா. ராஷ்மியையும் அழைத்துக் கொண்டு அந்த வணிக வளாகத்திற்குச் சென்றார் சிங். முதலி ராஷ்மி மட்டும் தனியாகச் சென்று உமாவை சந்த்தித்தார், அவர்கள் இருவரும் உரையாடுவது போன்ற காட்சி உமாவிற்குத் தெரியாமல் பதிவு செய்யபட்டது. பின் சிங் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என சிங்கிடம் சொன்னார் உமா.பின் ராஷ்மி சிங்குடன் காரில் ஏறிக் கொண்டார். அந்தக் காட்சியும் பதிவு செய்யப்பட்டது. பின் சிங் ராஷ்மியிடம் 4000 ரூபாய் கொடுக்கப்படுவது போல் ஒரு காட்சி பதிவு செய்யப்பட்டது. அவ்வளவுதான், இந்தக் காட்சிகளையும், ' பிசினசிற்கு ஏற்பாடு செய்யுங்கள்' 'நீங்கள் இந்த இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்' என்பது போன்ற பொதுவான வாக்கியங்கள் கொண்ட தொலைபேசி உரையாடல்களையும் வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான 'செய்தி' தயாரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சிங் வேலை பார்த்து வந்த தொலைக்காட்சி இதனை ஒளிபரப்ப மறுத்துவிட்டது. செய்தியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக அது கருதியது. அந்த நிறுவனத்தில் ஒரு பயிற்சி செய்தியாளராகத்தான் (intern) இருந்தார் சிங். சில நாட்களில் வேறு ஒரு தொலைக்காட்சியில் வேலை தேடிக் கொண்டு நகர்ந்த சிங், இந்த ஒளிநாடாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். (இது தொலைக்காட்சி உலகில் பெரும் குற்றம்.) அந்த புதிய தொலைக்காட்சியில் தன்னுடைய 'நாடகத்தை' ஒளிபர்ப்பினார். அவ்வளவுதான் ஊர் தீப்பிடித்துக் கொண்டது.
சட்டம் ஒழுங்குப் பிரசினை ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை உமாவைக் கைது செய்தது. அவர்மீது விபசாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அரசு அவரை வேலையிலிருந்து நீக்கியது. உமா காவலில் இருந்த போது அவரது வீட்டுக் கதவை உடைத்து காவல் துறை சோதனையிட்டது. டிவிடிகளும், ஆவணங்களும் கிடைத்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த டிவிடிகளைப் போட்டுப் பார்த்த போது அவை சினிமாப்படங்களும், கார்ட்டூன் படங்கலும் எனத் தெரிந்தது. விலைமாதுவாகத் தோன்றியவர் மாணவிதானா என உறுதி செய்து கொள்ள பள்ளிக்குச் சென்றது காவல்துறை. அவர் மாணவி அல்ல எனத் தெரியவந்ததும் அதன் புருவங்கள் உயர்ந்தன. சிங்கை அந்தப் பெண், ராஷ்மியை விசாரணைக்கு அழைத்து வருமாறு கோரியது. அவள் விலைமாது. இப்போது எங்கிருக்கிறாள் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சிங். காவல்துறை தேட ஆரம்பித்தது. தான் தேடப்படுவது தெரிந்ததும் ராஷ்மி நீதிமன்றத்தி சரணடைந்தார். அவர் தனக்கும் சிங்கிற்குமிடையே நடந்த உரையாடலைத் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். காவல்துறை சிங்கை 'எடிட்' செய்யப்படாத ஒரிஜினல் ஒளிநாடாக்களைத் தரும்படி கோரியது. அவர் தயங்கினார். காவல்துறை அவற்றைக் கைப்ப்பற்றிப் போட்டுப் பார்த்த போது உண்மைகள் தெரிய வந்தன. சிங் கைது செய்ய்ப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரனையின் போது கண்ணீர் விட்டுக் கலங்கிய சிங், தான் செய்வது தவறு என்று தெரிந்தும், இதன் மூலம் தனது செய்தியாளர் தொழிலில் ஒரு உயர்ந்த இடத்தை அடையலாம் என எண்ணி அதைச் செய்ய முனைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் போலி நாடகம், தில்லி ஊடக உலகில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒரு ஊடகத்தைத் தனது சொந்தப் பகைகளைக் கணக்குத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்வது சரிதானா என்பது ஒரு கேள்வி. தொலைக்காட்சி உலகில் ஏற்பட்டுள்ள போட்டி தொலைக்காட்சிகளை எங்கு இட்டுச் செல்கின்றன? என்ற கவலை தோய்ந்த கேள்வி மற்றொன்று. ஊடகத் துறையில் உள்ள இளம் பத்திரிகையாளர்களது நிலையை, ஊடகத் துறையில் வேலை கிடைப்பதற்கும், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதில் முன்னேறுவதற்கும் இளைஞர்களுக்குள்ள நெருக்கடிகளை, சிங், ராஷ்மி இருவரது நிலையும் உதாரணிக்கின்றன. 'சாதனை' புரியவில்லையெனில் இங்கு காணாமல் போய்விடுவோம் என்ற பதற்றம் அவர்களைப் பற்றியிருப்பதையும், அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நெருக்கடிக்கு அவர்கள் உள்ளாகியிருப்பதைப் பற்றியும் சிலர் பேசுகிறார்கள்.
காயங்களும் நியாயங்களும் எப்படி இருந்தாலும் சந்தை ஊடகங்களைத் மெல்ல மெல்லத் தின்னத் துவங்கியிருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்,
* எதையும் தாங்கும் இதயம் இருந்தால் சந்தையின் நிர்பந்தத்திற்குத் தன்னை விற்க வேண்டிய அவசியமில்லை என்பதை மக்கள் தொலைக்காட்சி நிரூபித்து வருகிறது. அண்மையில் அது தனது முதலாண்டை நிறைவு செய்தது. இந்த ஓராண்டும், திரைப்பட நறுக்குகளையும் திரை நட்சத்திரங்களையும் கொண்டு நிகழ்ச்சிகளை நிரப்பாமல், சுருக்கமாகச் சொன்னால், TRP ratingஐப் பொருட்படுத்தாமல், TAM அறிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அது நடைபோட்டிருக்கிறது. திரை நட்சத்திரங்களுக்குப் பதில், தமிழறிஞர் நன்னன், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர்.சுப.வீரபாண்டியன், சமூகப் போராளி தியாகு போன்ற நட்சத்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தனித்தமிழார்வம், சமூக சிந்தனைகள், நாட்டார் கலைமரபு, ஆகியவைகள் கவனம் பெறுகின்றன. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத மருத்துவர்கள் (quakery), அதிர்ஷ்டக்கல், நியூமராலாஜி, போன்ற தாயத்து விற்பவர்களைப் புறக்கணித்து வந்திருக்கிறது. அதன் முதலாண்டு விழாவில் பேசும் போது மருத்துவர். ராமதாஸ், விளம்பரங்களைக் கூட சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்கப் போவதில்லை என்று சொன்னார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சுருக்கமாகச் சொன்னால் இலக்கியச் சிற்றேடுகளுக்குரிய தனித் தன்மையோடும், அந்தத் தனித்தன்மையின் காரணமாக ஏற்படும் பெருமித்த்தோடும், பிடிவாதத்துடனும், மக்கள் தொலைக்காட்சி இயங்கி வருகிறது. தமிழின் முதல் niche channel! DTH போன்ற தொழில்நுட்பங்கள் சாத்தியமாகிவிட்ட இன்று, போதுமான சந்தாதாரர்கள் கிடைத்துவிட்டால் அது தொடர்ந்து இந்த சிறுபத்திரிகை குணங்களோடு நீடிக்க முடியும். ஆனால் சிறுபத்திரிகைகள் அரசியல் இலக்குகளை எட்ட உதவாது. அவை அரசியல் கருவிகள் இல்லை (It is not a political instrument) பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த முரண்பாட்டில் உடன்பாடு உண்டா என்பது பொறுத்திருந்துதான் காண வேண்டிய ஒன்று.
உண்ணாநிலை (உண்ணா விரதம்) பரப்புரை (பிரசாரம்), தொடர்வண்டி (ரயில்) தானி (ஆட்டோ ) எனப் பல தமிழ்ச் சொற்களை அதன் செய்திகளில் கேட்டேன்.நல்ல முயற்சி. ஆனால் மக்கள் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக் கொண்டுவிட்ட, மக்கள் மொழியில் உள்ளவற்றை மாற்றும் முன் இருமுறை சிந்திக்கலாம் என்பது கருத்து. சிமிண்ட் என்பதை சிமிட்டி என்று மக்கள் செய்திகளில் சொல்கிறார்கள். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஏனெனில், கட்டடத் தொழிலாளர்கள் மத்தியில் வழக்கில் இருந்த சொல்தான் அது. ஆனால், தானி? உண்ணாவிரதம் உண்ணாநிலை ஆவதில் சில குழப்பங்கள் ஏற்படக் கூடும். 'விரதம்' என்ற சொல்லுக்குப் பின்னுள்ள உணர்வுகள் 'நிலை'யில் வெளிப்படவில்லை. ஒர் இலக்கினை அடைய வேண்டித் தன் சுகங்களைப் புற்ந்தள்ளித் தன்னை வருத்திக் கொள்வது என்பது விரதம் என்ற சொல் பொதிந்து வைத்திருக்கும் பொருள். நிலை என்பது ஒரு நிலைமையை (Status)ஐக் குறிப்பது. ஒருவர் சாப்பிடாமல் இருப்பதற்கு, அதாவது உண்ணாத நிலையில் இருப்பதற்கு, நிறையக் காரணங்கள் இருக்கலாம். வறுமை காரணமாக இருக்கலாம். வயிற்று வலி காரணமாக இருக்கலாம். உணவு கிடைக்காதது காரணமாக இருக்கலாம். கிடைத்த உணவு தரமற்றதாக, ருசியற்றதாக, தனக்குப் பிடித்தமானதாக இல்லாது இருக்கலாம். இவையெல்லாம் 'விரதங்களாக' அதாவத் தற்காலிகத் தவங்களாகிவிடாது. நமது பெண்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஏதோ வேண்டுதல்களுக்காக விரதம் இருக்கிறார்கள். அவை உண்ணாநிலைகளாக ஆகி விடாது. ஏனெனில் அதில் 'போராட்டம்' ஏதுமில்லை.
ஆனால் இவையெல்லாம் சின்ன சின்ன குறைகள். சரிப்படுத்திக் கொள்ளக் கூடிய குறைகள். நோக்கம் பெரிது. அது பாராட்டிற்குரியது.. மக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

புதிய்பார்வை இதழில் நான் எழுதிவரும் பத்தி- நனைக்க மறந்த நதி-க்காக எழுதியது

18 comments:

வடுவூர் குமார் said...

நானும் கேள்விப்பட்டேன்,நல்ல தமிழ் உச்சரிப்பு கொண்டவர்கள் செய்தி வாசிப்பதாக..
இன்னும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் "மக்கள்" தொலைக்காட்சியில் பார்க்கவில்லை.

குழலி / Kuzhali said...

உண்ணா நிலை என்பதற்கு பதில் உண்ணா நோன்பு சரியாக வருமா? நோன்பு என்பது தூய தமிழ் சொல்லாகுமா?

Naina said...

இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் பொருள் மெய் பொருள் காண்பதறிவு என்று வள்ளுவன் வாக்ககின் அவசியத்தை இச்சம்பவம் நினைவூட்டுகிறது. செய்தி ஊடகங்களும், காவல் துறையும் பொறுப்பற்று நடந்து மக்களுக்கு தவறான தகவல்களை தருகிறார்கள் என்பதற்கு இது ஓர் சான்றாக இருக்கிறது.
எத்தனை கொந்தளிப்பான சம்பவங்களில் சர்வ சாதாரணமாக "முக்கிய ஆதாரம் கிட்டியது" என்று கொட்டை எழுத்துக்களில் போட்டு விட்டு செய்தியின் விரிவான பகுதியில் அதற்கு துளியளவு கூட சம்பந்தம் இல்லாத விளக்கங்கள் இருப்பதை பார்க்கிறோம். வாழ்க போலி கருத்து சுதந்திரம். அதே போன்றே கொந்தளிப்பான எத்தனையோ சம்பவங்களில் போலீஸ் உயர் அதிகாரிகள் தரும் பேட்டிகள். சம்பவம் நடந்த வினாடிகளிலேயே இந்த அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று பேட்டி தருவதோடு சரி. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும், நீதிக்கு முன்னால் குற்றம் செய்தவர்கள் நிரூபிக்கப்பட்டு தண்டணை தரப்பட்டது கிடையாது. விருப்பு வெறுப்பின்றி ஒரு சம்பவத்தை ஆய்வு செய்தாலே தவிர, குற்றமிழைத்த கும்பல்களை கூண்டோடு பிடித்து வேறோடும் வேறடி மண்ணோடும் வீழ்த்த முடியாது.
எனவே நாம் சந்திக்கும் தீவிரவாதம் தோற்கடிக்கப்படாமல் இருப்பதற்க்கு ஊடகங்கள், காவல் துறையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் முக்கிய காரணம் என்பது எனது கருத்து

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் பொருள் மெய் பொருள் காண்பதறிவு

நெய்னா முஹம்மது

Unknown said...

மாலன்

இது தனிப்பட்ட ஒருவர் செய்த தவறாக தான் தெரிகிறதே தவிர ஓட்டுமொத்த ஊடகங்கள் மீதான குற்றசாட்டாக பார்க்க முடியவில்லை.
சிங் வேலை பார்த்த தொலைக்காட்சி இதை ஒளிபரப்ப மறுத்த செய்தி உங்கள் பதிவில் உள்ளது.

சந்தைக்காக பரபரப்பு செய்திகளை வெளியிட்டால் கடைசியில் நக்கீரன், தராசு மாதிரி அட்ரஸ் இல்லாமல் போகவேண்டியதுதான்.மக்கள் நம்பகத்தன்மையை இழந்தால் அந்த ஊடகத்துக்கு அதன்பின் அதோ கதிதான்.

வெற்றி said...

நல்ல பதிவு.

/* அதன் முதலாண்டு விழாவில் பேசும் போது மருத்துவர். ராமதாஸ், விளம்பரங்களைக் கூட சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்கப் போவதில்லை என்று சொன்னார். பாராட்டப்பட வேண்டிய விஷயம். */

இப்போது 'மக்கள் தொலைக்காட்சி' புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்று வருகிறது.

மருத்துவர் இராமதாசு அவர்களின் பணி பாராட்டத்தக்கது.

ஜீவி said...

ஒரு பிர்மாண்ட தொலைக்காட்சியில்
சில பொறுப்புகளில் இருந்த அனுபவத்தில், எழுதுவதும் கைவந்த நிலையில், இதைவிடச் சிறப்பாக
மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்
சிறப்புகளை எங்களுடன் பகிர்ந்து
கொண்டிருந்திருக்கலாம்.
முடிந்தால் வேறு ஒரு தலைப்பில்
ஊடகங்களில், பத்திரிகைத் துறையையும் சேர்த்துக்கொண்டு உங்கள் அனுபவங்களைச் சுவைபடச் சொல்லலாமே..இது எனது ஒரு
'சஜஷன்' தானே தவிர, உங்களுக்கேத் தெரிந்த சில தனிப்பட்டக் காரணங்களினால், வேண்டாம் என்றால் வேண்டாம்.

ரவி said...

தகவல் தொழில்நுட்பத்துறையை மெச்சூரிட்டி இல்லாத துறை என்று கூறுகிறோம்...

காரணம் இளம் வயதில் பணிக்கு வந்துவிடுவதால் எந்த விஷயத்திலும் பொறுமை இருப்பதில்லை...அதனால் தான் ஒன்று இரண்டு வருடத்தில் அடுத்த நிறுவனத்தை தேடிப்போய்க்கொண்டிருக்கிறார்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் இளைஞர்கள்..

இப்போது ஊடகத்துறையிலும் இளமை புகுந்துவிட்டதால் அந்த இம்மெச்சூரிட்டி இங்கேயும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்..

மென்பொருள் துறையில் இருப்பவர்கள் பொறுமை இழந்து தான் தோன்றித்தனமாக செயல்பட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை...ஆனால் ஊடகத்துறையினரின் கையில் உள்ள ஆயுதம் மிகவும் கூர்மையானது, அசாத்திய பொறுமையோடு ஜாக்கிரதையாக கையாளவேண்டும் என்று இந்த சம்பவம் உணர்த்தியது எனக்கு..

✪சிந்தாநதி said...

சமீபத்தில் வெளியான இந்த ஆசிரியை மீதான
ஊடக ஊழல் மக்கள் மத்தியில் நிச்சயம் ஊடகங்கள் மீதான நம்பிக்கையில் இன்னும் சறுக்கலை ஏற்படுத்தும்.

மக்கள் தொலைக்காட்சி ஜனரஞ்சகம் என்ற பெயரால் சறுக்கி விடாமல் நல்ல நோக்கத்துடன் நடைபோடுவது பாராட்டுக்குரியது.

ரவியின் பின்னூட்டம்

//ஊடகத்துறையினரின் கையில் உள்ள ஆயுதம் மிகவும் கூர்மையானது, அசாத்திய பொறுமையோடு ஜாக்கிரதையாக கையாளவேண்டும் என்று இந்த சம்பவம் உணர்த்தியது எனக்கு..//

இது மிக உண்மை.

மாலன் said...

அன்புள்ள குமார்,
ஆம் மக்களில் செய்தி வாசிப்பவர்களின் உச்சரிப்பில் குறை சொல்வதற்கில்லை. ஆனால் விண், தமிழன் தவிர மற்ற தொலைக்காட்சிகளிலும் செய்திவாசிப்பாளர்கள் உச்சரிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். பின்னணிக் குரல் கொடுப்பவர்கள் (Voice Over)நிகழ்ச்சித் தொகுப்பாளர்களைப் பற்றி அவ்விதம் சொல்வதற்கில்லை. அதற்கான காரணங்கள் பல.

மக்களில் இருக்கும் நல்ல செய்திவாசிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீதர் கலைஞருக்கு மாறவிருக்கிறார் எனத் தெரிகிறது. (கலைஞரில் நீங்கள் சந்திக்கக் கூடிய மற்ற அறிந்த முகங்கள்: செய்தி வாசிப்பாளர்கள்: ஜெயஸ்ரீ சுந்தர்,(சன்) ஸ்ரீகாந்த் (சன்) அசோக் ரத்தினம் (சன்) ஜெயந்தி சுப்ரமணியம் (சன்) நிர்மலா ராமன் (ராஜ்) ஸ்ரீவித்யா சங்கர் (ஜெயா) நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்: பிரியதர்ஷ்னி, (பெப்சி) உமா, நடிகை ஆர்த்தி (காமெடி நிகழ்ச்சிகளில் பருத்த உடலுடன் நடிப்பாரே அவர்) மகேஸ்வரி (சன் மியூசிக்). அப்படி நேர்ந்தால் அது மக்களுக்கு இழப்புத்தான்.

மாலன் said...

அன்புள்ள குழலி,
நோன்பு தமிழ்ச் சொல்லா என உறுதியாகத் தெரியாது. ஆனால் மக்களிடம் பயன்பாட்டில் இருக்கிறது. மக்கள் பயன்பாட்டில் இருக்கும் சொற்களை அவை தமிழ்ச் சொல்லாக இல்லாத போதும் தவிர்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

மாலன் said...

அன்புள்ள நயினா,

உங்கள் வருத்த்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், >>நாம் சந்திக்கும் தீவிரவாதம் தோற்கடிக்கப்படாமல் இருப்பதற்க்கு ஊடகங்கள், காவல் துறையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் முக்கிய காரணம் << என்பது சற்று மிகை

மாலன் said...

அன்புள்ள செல்வன்,

>>இது தனிப்பட்ட ஒருவர் செய்த தவறாக தான் தெரிகிறதே தவிர ஓட்டுமொத்த ஊடகங்கள் மீதான குற்றசாட்டாக பார்க்க முடியவில்லை.
சிங் வேலை பார்த்த தொலைக்காட்சி இதை ஒளிபரப்ப மறுத்த செய்தி உங்கள் பதிவில் உள்ளது.<<

இந்த செய்தி வெளியான இரு தினங்களில் வெளியான இன்னொரு செய்தி, எம்.பி.களிடம் போலியான sting operation நடத்திய மூவர் கைது. எனவே இது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது.

முதலில் ஒரு தொலைக்காட்சி வெளியிட மறுத்தது. அப்போது அந்த நிருபர் பயிற்சி நிருபராக (intern) இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் புதிதாக ஆரம்பித்த ஒரு தொலைக்காட்சி இதை வெளியிட்டது. இத்தனைக்கும் அதன் தலைவர் IIMCயில் முதுநிலை இதழியல் படித்தவர். என்ன காரணம்? போட்டிக்கு நடுவே கவனம் பெற வேண்டும் என்பதுதான்.

அந்த நிருபரை போலீஸ் விசாரித்த போது, அவர் உடைந்து போய் அழததாக செய்தி வந்தது. தவறு என்று தெரிந்துதான் செய்தேன். இதன் மூலம் எனது தொழிலில் எனக்குக் கவனமும் அதன் மூலம் உயர்வும் கிடைக்கும் என நினைத்தேன் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இதுதான் சந்தையின் அழுத்தம். இதுதான் கவலைதரும் அம்சம்

மாலன் said...

அன்புள்ள ஜீவி,

பதிவு மக்கள் தொலைக்காட்சியைப் பற்றியது அல்ல.அதை ஓர் நல்ல உதாரணம் என்ற அளவில் சுட்டியிருக்கிறேன்.

எனக்குக் கிடைக்கும் அவகாசத்தில் மக்க்ள் செய்திகளை மட்டும், பெரும்பாலும் இரவு 10 மணிக்குப் பார்க்கிறேன்.சில நாட்கள் சொல்விளையாட்டுப் பார்ப்பதுண்டு. ஞாயிறுகளில் நன்னனின் தமிழ்ப்பண்ணை பார்ப்பேன். மற்ற நிகழ்ச்சிகள் குறித்து அறிமுகம் இல்லை. வாய்ப்புக் கிடைக்கும் போது பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

மாலன் said...

அன்புள்ள ரவி,

வயதிற்கும் முதிர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பது என் எண்ணம்.

thiru said...

//காயங்களும் நியாயங்களும் எப்படி இருந்தாலும் சந்தை ஊடகங்களைத் மெல்ல மெல்லத் தின்னத் துவங்கியிருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்//

உண்மை.

சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கமும், உள்வாங்கலும் ஊடகத்தை பிடித்திருக்கிறது. ஊடகங்கள் மக்கள் மனதில் விதைக்கும் கருதுக்கள்/கருத்தியலில் உண்மை என்ன என ஆராயும் மனப்பக்க்குவம் கூட மழுங்கடிக்கப்படுகிறது. ஆசிரியை உமா விடயத்தில் ஊடக செய்தியால் இழுக்கப்பட்டவர்கள் உண்மையைப் பற்றிய கவலையே இல்லாமல் துன்புறுத்தியது கொடுமை.

பொதுமக்களிடம் கருத்துக்களை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. சந்தைப் பொருளாதாரத்தில் இது ஒரு சவாலான விடயம்.

Naina said...

இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்
மாலன் ஐயா!
தங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி. நான் ஊடகங்கள் காவல்துறையினரின் செயல்பாடுகள் மட்டுமே காரணம் என்று குற்றம் சாட்டவில்லை. ஆனால் முக்கிய காரணிகளில் ஒன்றாக கூறுகிறேன்.
இன்று முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சக சகோதர சமுதாய சாமான்ய மக்களால் பார்க்கபட்டு முஸ்லிம்கள் தனிமைபடுத்த படுவதில் மேலே குறிபிட்ட இருவர்களின் பங்கும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று என்பதையே பதிவு செய்ய விரும்புகிறேன்.

முஸ்லிம் பெயர் தாங்கிய சில மனித குல துரோகிகள் இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்லாத்தையும், இஸ்லாமிய மக்களையும் இப்பூமியில் இல்லாத அழித்தொழிக்க வேண்டும் என்ற பாஸிச வெறிபிடித்தவர்களும் நம்மில் கலந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே? ஒரு சம்பவம் நடந்தால் முஸ்லிம் செய்திருப்பானோ என்று மட்டும் சந்தேகிக்கும் காவல் துறை, ஏன் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் பாஸிச வெறிகளின் மீதும் சந்திக்க கூடாது? என்பதே எனது கேள்வி.
ஒரு தரப்பை மட்டுமே சந்தேகிப்பதால் தான், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் உண்மை குற்றவாளிகள் இது வரையில் சட்டத்தால் தண்டிக்கப்படாமல் தப்பித்து வருகிறார்கள் என்று கருதுகிறேன்.
நன்றி
நெய்னா முஹம்மது

Naina said...

இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

மாலன் ஐயா!
இன்றைய மாலைமலர் (15-9-07) பத்திரிக்கையினை இணைய தளத்தில் பார்வையிடும் போது திருநெல்வேலி மாவட்ட செய்தி தொகுப்பிலே ஒரு செய்தி பதிவாகியுள்ளது. அதன் தலைப்பு, "மேலப்பாளயத்தில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு".
செய்தியின் உள்ளே குறிப்பிடபட்ட தகவல் அதன் தலைப்புக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அதனை முழுமையாக தருகிறேன் பாருங்கள்.

" மேலப்பாளயத்தில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு

நெல்லை, செப். 15-
நெல்லையில் இன்று விநாயக சதுர்த்தி கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரில் 34 இடங்களிலும், மாவட்டத்தில் சுமார் 300 இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் டி.ஐ.ஜி. கண்ணப்பன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சிரிதர், துணை போலீஸ் கமிஷனர் தினகரன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேலப்பாளயத்தில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஒரு அமைப்பை சேர்ந்த 10 இளைஞர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று முக்கியமானவர்களை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி சென்றனர்.

அவர்களது நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த இளைஞர்கள் கும்பலை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

இதையறிந்த அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மேலப்பாளயத்தில் உள்ள இப்ராகிம்ஷா தைக்கா தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கினர்.

மேலும் அவர்களது கையில் சில பைகளும் இருந்தது. இதனால் போலீசார் அதிரடியாக அந்த இளைஞர்கள் பதுங்கிய இடத்தை சுற்றி வளைத்து அவர்களை தப்பவிடாமல் பிடித்தனர்.

மேலும் அவர்களது உடமைகள். அந்த பகுதியில் உள்ள சந்தேகப்படும்படியான இடங்களை போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தினார்கள்.

இதில் சந்தேகப்படும்படி எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவர்கள் எதற்காக கூடினார்கள் என்பது மர்மமாக உள்ளது. இதனால் பிடிபட்ட 10 இளைஞர்களும் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? அவர்கள் எதற்காக மேலப்பாளயம் வந்துள்ளனர்? விநாயக சதுர்த்தி விழாவை சீர்குலைக்க ஏதேனும் சதிதிட்டம் நடந்ததா? என்று துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்"

பார்த்தீர்களா பத்திரிக்கை சுதந்திரத்தின் இழி நிலையை?

தீவிரவாதி சுற்றி வளைப்பு என்று போடுகிறாய் ஏதோ ஊர்ஜிதப்படுத்தபட்டுவிட்டது போல, ஆனால் கீழே நீயே எழுதுகிறாய், "சந்தேகப்படும்படி எதுவும் சிக்கவில்லை" என்று. ஏன் சாமனியர்கள் மத்தியல் குழப்பத்தையும், பதட்டத்தையும் விளைக்க முற்படுகிறாய்? கேவலம் உனது பத்திரிக்கையை பரபரப்பாக விற்று தீர்த்து கோடி கோடியாக நீ சம்பாதிக்க வேண்டும் என்னும் கீழ்தரமான எண்ணம் தானே? ஊர்ஜிதப்படுத்தப்படாத உனது புரட்டு தகவல் பொது மக்களிடம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த பத்திரிக்கை விளங்க வேண்டாமா? சமூகத்தில் தனிமனிதனுக்கு இருக்கும் பொறுப்பை விட ஒரு பத்திரிக்கையாகிய உனக்கு அதிகம் அல்லவா இருக்க வேண்டும்?

சமூகத்தில் குழப்பம் விளைவிப்பது கொலையை விட கொடிய செயல் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. கொலை என்பது கொலை செய்யப்பட்டவன், செய்தவன் ஆகிய இரு குடும்பத்திற்கு மட்டுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் குழப்பம் பல்லாயிரகணக்கான குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

நான் முன்பு தங்களிடம் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக பொய்யாக சமுதாயத்தில் சித்தரிக்கப்படுவதற்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று கூறினேனே? அதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு தான் மேலே குறிப்பிடப்பட்ட செய்தி.

தாங்கள் ஒரு பத்திரிக்கையாளர் என்பதனால் ஒரு கேள்வி கேட்கிறேன். இப்படி பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டு பதட்டமான சூழல் உருவாக்குபவர்களுக்கென தண்டனை பெற்று தர சட்டத்தில் இடம் உள்ளதா?

நன்றி
நெய்னா முஹம்மது

vels-erode said...

அன்பு மாலன்,

வேரு வழியில்லை.

சந்தைப்படுத்துதல் என்பது ஒரு தொழிலாகவே ஏற்றுக் கொள்ளப் பட்ட பிறகு இம் மாதிரியான சவால்கள் இன்றைய சமூகத்துக்கு எதிரி(ல்)யாக இருக்கிறது.

இன்றைய சமூகம் 'சந்தை நாகரிகம்' நோக்கித் தானே போய்க் கொண்டு இருக்கிரது?

உள்ளுக்குள் எல்லொரும் உண்மை கொண்டு வரும் வரை வெளியே எல்லாமே பேய்கள்தான்.

நன்றி.