இந்தப் பதிவை நான் எழுத வேண்டுமா என்று முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.அதற்குக் காரணங்கள் சில. ஒன்று: நான் இதுவரையில், எட்டு
போன்ற ஒன்றிரண்டைத் தவிர வேறு எந்தப் பதிவையும் என்னைப் பற்றி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நான் எழுதிய
பதிவுகளின் பட்டியல் அருகில் இருக்கிறது. எவர் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு: பதிவர் பட்டறையில் நான் என்ன பேசினேன் என்பதைச் செவி வழிச் செய்தியாக அறிந்தவர்கள், அதைப் பற்றிய ஒலிப்பதிவு வெளியிடப்படும்வரை காத்திருந்து நான் பேசியவையாகக் கேள்விப்பட்டவை சரிதானா, அவை எந்த வார்த்தைகளில் எந்தச் சூழலில் (context) என்பவற்றை எல்லாம் உறுதி செய்து கொள்ளாமல், கருத்துக்களைக் கொட்ட ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் நோக்கம் உண்மையை அறிந்து கொள்வதல்ல, என்னை வசைபாடுவதுதான், நான் என்ன பதில் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எனக்குத் தோன்றியதால், நேரத்தை இதில் செலவிட வேண்டுமா என எண்ணினேன்.
மூன்றாவதாக சில தமிழ், ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு நான் சுதந்திர தின மலருக்காக் எழுத ஒப்புக் கொண்டிருந்தேன். அதற்கான கெடு
நெருங்கியிருந்தது.
நான்காவதாக, நான் 23ம் தேதி தில்லியை விட்டுக் கிளம்பியவன், ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின் 6ம் தேதிதான் தில்லி
திரும்பியிருந்ததால் இங்கு அலுவலகப் பணிகள் குவிந்து கிடந்தன. (தமிழில் எழுதும் பல பதிவர்கள் அவர்களது பல் வேலைகளுக்கு நடுவே
கிடைக்கும் சிறிய அவகாசத்தில்தான் பதிவுகள் எழுதுகிறார்கள் என்பதால் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கையிருக்கிறது)
ஆனால் பட்டறையை ஏற்பாடு செய்தவர்களே நான் ஏதோ என்னுடைய 'நுண் அரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக்
கொண்டுவிட்டதாக' வலை நன்நடத்தையைப் பற்றிப் பேசாமல் ' ஈழத்தமிழரின் நன்நடத்தையைப் பற்றிப்' பேசிவிட்டதாக ஒருதோற்றத்தை ஏற்படுதத
முற்படும் போது இனியும் மெளனமாக இருப்பது சரியல்ல என்று கருதினேன். மெளன்ம் எப்போதும் சம்மதத்தைக் குறிப்பதில்லை, மெளனம்
கோபத்தின் வெளிப்பாடாக, வருத்தத்தின் வெளிப்பாடகக் கூட இருக்கலாம் என்றாலும் மெளன்ம் சம்மதம் என்றே இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது
என்பதையும் நானறிவேன். எனவேதான் இந்தப் பதிவு.
இங்கே நான் பதிவர் பட்டறையில் என்ன பேசினேன் என்பதை verbatium எழுதப்போவதில்லை. பத்ரியின் பதிவில் என் முழுப் பேச்சும்
(விவாதங்களுக்கான பதில்களோடு) ஒலி வடிவில் இருக்கிறது.(
http://thoughtsintamil.blogspot.com/2007/08/blog-post_08.html) ஒலிப்பதிவு சுமார்
நாற்பது நிமிடங்கள் உள்ளது. தம்ழகத்தின் பல இடங்களில் இப்போதும் தொலைத் தொடர்பு பிரசினை இருக்கிறது; அங்கு இதைத் தரவிறக்கம் செய்து
படிப்பதற்கு இணைப்பின் வேகம் காரணமாக, நிறையப் பொறுமை வேண்டும்.பலர் அலுவலக் கணினியைப் பயன்படுத்துபவர்கலாகவோ, இணையவிடுதிகளளப் பயன்படுத்துபவர்களாகவோ இருக்கிறார்கள்.மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்களுக்கும், ஒலி தெளிவாக இல்லை எனக் கருதக்கூடியவர்களுக்கும், விவாதிப்பவர்களின் தெளிவிற்காகவும், எதிர்காலத்தில் திரிப்புகளுக்கு இடமளிக்காதிருக்கவும், ஏற்பாட்டாளர்களின் பதிவைப் படிப்பவர்களுக்கு நான் நாற்பது நிமிடமும் நான் அரசியல் பேசினேன் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும், எனவே என்ன் பேசினேன் என்பதை தெரியப்படுத்தவும் பேச்சின் முக்கிய அமசங்களை இங்கே தர முயல்கிறேன்.
அதற்கு முன்பு சில எண்ணங்கள், விளக்கங்கள்:
1. பதிவர் பட்டறையில், நான் ஏதும் உரை நிகழ்தும் எண்ணத்தோடு பதிந்து கொள்ளவில்லை.முழுநேரமும் என்னால் இருக்க முடியுமா என்ற
சந்தேகத்தைக் கூடப் பதிந்து கொள்ளும் போதே தெரிவித்திருந்தேன்.பட்டறைக்கு முந்திய இரவு விக்கி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
அழைத்தை அடுத்தே நான் அங்கு பேசினேன். எனவே ஏதும் முன்கூட்டிய தயாரிப்புகள், திட்டங்களோடு நான் போகவில்லை, நுண்ணரசியல்
விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த
வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்.
2.பட்டறை இரண்டு பிரிவுகளாக நடக்கிறது , ஒன்று பதிவர்களுக்காக், மற்றொன்று பதிவு துவக்க விரும்புபவர்களுக்காக் என்ற எண்ணம் பட்டறையைப்
பற்றி அது நடக்கும் முன் வெளியிடப்பட்டிருந்த இணையப்பகத்தின் மூலம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அரங்கிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பது
போல் தோன்றியது.ஒரு கட்டத்தில் இராமகி அய்யா, அங்கு வந்திருந்த, பதிவு துவக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த ஆனால் பதிவைப்பற்றி ஏதும்
தெரியாத, ஒருவரிடம் 'அய்யா நீங்கள் மேலே (பதிவு துவக்க விரும்பியவர்களுக்கான அரங்கு) போவது நல்லது என்று சொன்னது என் எண்ணத்தை
உறுதி செய்வதாக அமைந்த்து. நான் அமர்ந்திருந்த அரங்கில், விக்கி, பத்ரி, சிவகுமார், செல்லா, தேசிகன், இராமகி, காசி, வெங்கடேஷ், ஆசீப் மீரான்,
தருமி, டெல்பின் விக்டோரியா, திருஞானம், லிவிங் ஸ்மைல் வித்யா, அண்ணா கண்ணன், வளர்மதி, அருணா ஸ்ரீநிவாசன், டோண்டு,சட்டம் குறித்து
எழுதும் சுந்தரராஜன் -வெற்றிச் செல்வன், எஸ்.கே, மீனாக்ஸ்,ரஜனி ராம்கி, க்ருபாஷங்கர்,லக்கிலுக் எனப் பல பதிவர்களைப் பார்க்க முடிந்தது. அறியாத
முகங்ளும் இருந்தன. சரி அவர்கள் எனக்குத் தெரியாத பதிவர்களாக இருக்கும் என்ரு நினைத்துக் கொண்டேன். எனவே நான் பதிவர்களிடம்தான்
பேசப்போகிறேன், பேசிக் கொண்டிருக்கிறேன், என்ற எண்ணத்திலேயே பேசினேன்.
3. ஆரம்பத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்ன மாலன், பின் அரசியல் பேசிவிட்டார் என்பதைப் போல ஒரு கருத்து அமைப்பாளர்
சிவக்குமாரின் பதிவில் தொனிக்கிறது. அமைப்பளர்களின் ஒட்டுமொத்த உணர்வைத் தெரிவிப்பதாகக் ரவிசங்கர் கூறும் பதிவு “அரசியல் கொள்கை
விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை” என நான் சொன்னதாகத் தெரிவிக்கிறது. அரசியல் என்பது அரசியல் கொள்கையாக மாற்றம்
கண்டிருக்கிறது. உண்மையில் நான் அரசியல் பேச வேண்டாம் எனச் சொல்லவில்லை. பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை, மென் பொருட்களை அரசே
இலவசமாக வழங்க வேண்டும், கணினியில் தமிழை உள்ளிடும் வசதியை default ஆக அமைக்க உத்திரவிட வேண்டும் என்பது போன்ற விஷயங்களை
சிலர் எழுப்பி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிய போது, நம்மால் சாத்தியமில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவதை விட, பதிவுகள்
பற்றிப் பேசலாம், Policy விஷயங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கலாமே என்று ராமகி அய்யா தெரிவித்த கருத்தை வழி மொழிந்து பேசினேன்.Policy
என்பது public policy .ஆனால் அரசின் கொள்கை விஷயங்களைப் பற்றிப் பேசுவது அரசியல் என அமைப்பாளர்களாலேயே திரிக்கப்படுவது
வருத்தத்திற்குரியது.
4.இது போன்ற ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன் கில்லியின் விருந்தினர் பக்கத்தில் கூட அந்த
விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தேன். " ஒரு அனைத்துலக வலைப்பதிவர்கள் மாநாட்டில் இந்தக் கருத்தையும், வலைப்பதிவுகளை வளர்தெடுப்பதைப்
பற்றியும் அக்கறையோடு அலசலாம், ஜனவரி-பிப்ரவரியில் நாட்டுக்கு ஒருவர் கொண்ட ஒரு steering committeeஐ அமைக்க முடிந்தால் 2007
டிசம்பரில் மாநாடு கூட்டுவது சாத்தியம்தான்.தனிமனித வெளிப்பாட்டு (personal expression) தளமாகத் துவங்கிய ஒன்று ஓர் நிறுவனமாக
(institutionalise) ஆகிவிடுவதற்கான சாத்தியக் கூறு ஒன்றுதான் இது போன்ற கூட்டங்களின் எதிர்மறையான அம்சம். ஆனால் நிழல் இல்லாத நிலவு
இல்லை" (
http://gilli.in/tamil-blogs-gilli-guest-column-by-maalan/) இதை எழுதும் போது 'நான் சொல்லித்தான் இந்த பட்டறை நடந்தது' என்று நான்
சொன்னதாக நாளை யாரேனும் திரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறேன். அல்லது நான் பங்களிக்காத மாநாட்டிற்கு உரிமை கொண்டாடினேன் என்றும் சிலர்
புறணி பேசக்கூடும். எனவே ஒரு disclaimer: நான் இந்த பட்டறையின் அமைப்புப்பணியிலோ, நிரல்கள் தயாரிப்பிலோ எந்த வகையிலும்
பங்கேற்கவில்லை. ஒரு சிறிய் நன்கொடையைத் தவிர என் பங்களிப்பு ஏதுமில்லை. அதுவும் கூட பட்டறையின் இணையப்பக்கத்தில்
அமைப்பாளர்களால் பதிவு செய்ய்ப்படவில்லை. அதைக் குறித்து எனக்கு கவலையும் இல்லை)
எனவே எனக்கு பட்டறை குறித்து ஓர் இயல்பான ஆர்வம் இருந்தது. அதற்கு தார்மீக ஆதரவளிக்க வேண்டும் என்ற உந்துதலும் இருந்தது. ஆனால்
பணிநிமித்தம் தில்லி திரும்ப வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஆனாலும் அந்தப் பணியை என் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சற்று ஒத்தி
வைக்கச் சொல்லிவிட்டு (அதனால் பலருக்கு அசெள்கர்யம் ஏற்பட்டிருக்கும்) பட்டறையில் கலந்து கொண்டேன் (இதை ஏதோ என்னைப் பற்றிய ஒர்
உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காக இப்போது சொல்லவில்லை. பட்டறைக்கு வந்திருந்த சிலரிடம் அங்கேயே பகிர்ந்து கொண்டிருந்தேன்)
ஆனால் இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது இந்த முடிவிற்காக வருத்தமே மேலோங்குகிறது.கடைசி நிமிடத்தில் என்னைப் பேச் அழைத்தும்
அமைப்பாளர்கள்,மீதிருந்த மரியாதையின் காரண்மாக, தட்டிக் கழிக்காமல் ஒப்புக் கொண்ட எனக்கு அவர்கள் நன்றி சொல்லவிட்டாலும் போகிறது, என்
பேச்சைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்களே அந்த மனங்களுக்கு நன்றி.
இனி என் பேச்சின் சாரம்: 1. நன்னடத்தை என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. அது ஏதோ பள்ளிப்படிப்பு முடிந்து போகும் போது தலைமையாசிரியர் கொடுக்கும் contact
certificate போல தொனிக்கிறது. சில நெறிகள், சுய ஒழுங்குகள் என்று வைத்துக் கொள்ளலாம்
2. மற்றெந்த ஊடகங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு வலைப்பதிவுகளுக்கு உண்டு.வலைப்பதிவுகளின் மிகப் பெரிய கொடை, தனித் தன்மை, ஒரு
விஷயத்தை வெளியிட்ட உடனே பலர் எதிர்வினையாற்றுவது. டைடானியம் டை ஆக்ஸ்டை தொழிற்சாலை குறித்து தினமணி ஒரு கட்டுரை
வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைக் குறித்து மாற்றிக் கருத்துடைய ஒருவர் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதமும்
பிரசுரம் ஆகிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஒருவர் மாற்றுக் கருத்து தெரிவிக்க விரும்பி கடிதம் எழுதினால் அதற்குள்
நாட்கள் கடந்திருக்குமாதலால் அது வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. பலர் ஒரே நேரத்தில் பலருடன் எதிர்வினையாற்ற வாய்ப்பளிக்கும் ஒரே
ஊடகம் வலைபதிவுகள்தான். இந்த வாய்ப்பு சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ, இணைய இதழ்களிலோ கிடையாது. ((Many to Many
communication)
3.வலைப்பதிவுகள் ஏன் வேண்டும் என்று சமூகக் கோணத்தில் பார்த்தால், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து ஒரு கருத்தை,
அபிப்பிராயத்தை வெளியிட அது உதவுகிறது. ஒரு கருத்து என்பதே ஒன்றின் மீதான Critical Judgemenதான் என்பதால், ஒரு சமூகத்தில் Critical
Judgement அதிகமாகும் போது, ஆளுகை (Governance) கலாசாரம் தொடர்பான விஷயங்களை விவாதத்திற்குள் கொண்டு வர முடியும். அது
நிலையை மாற்ற உதவும். அதனால் வலைப்பதிவுகள் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு ஊடகம்.
4.நாம் வாழ்கிற காலத்தில் ஒரு கருத்துதான் சரி,லொரு நிலைதான் சரி என்று முடிவளுக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது.This is Black, This is
white என்று முடிவுக்கு வரமுடியாமல் எங்கும் சாம்பல் பூத்துக் கிடக்கிறது. பல்வேறு பரிமாணங்களப் பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த
ஊடகத்தில் கிடைக்கிறது.
5 ஆனால் வலைப்பதிவுகள் குறித்து நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன
6.வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் யார் என்று பார்த்தால், இப்படி ஒரு தொழில் நுட்பம் வந்திருக்கிறது, அதில் என் மொழி இடம் பெற வேண்டும்
என்ற ஆர்வம் கொண்டவர்கள், மற்ற் ஊடகளில் ஆசிரியர் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நான் எழுதியதைச் சிதைக்கிறார், சுருக்குகிறார், தணிக்கை
செய்கிறார் அதை ஏற்க முடியாது என்று கருதுபவர்கள்,ஒரு குறிப்பிட்ட விஷயம், நிலை பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறவர்கள், உலகம்
முழுதும் தேடல் வாய்ப்புக் கொண்ட ஒருசாதனம் அதனால் இது பதிந்து வைக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள் வலைபதிவுகளை
எழுதுகிறார்கள்.தமிழ் வலைப்பதிவர்களின் சராசரி வயது என்று பார்த்தால்,- சிவஞானம்ஜி, ராமகி அய்யா, என்னையும் சேர்த்து, சில வயதில் மூத்த
பதிவர்கள் இருந்தாலும் கூட- 25-30 இருக்கலாம். சமூகத்தில் பெரும்பாலும் அந்தத் தலைமுறையின் கருத்து காது கொடுத்துக் கேட்கப்படுவதில்லை.
ஆனால் அதற்கு வலைப்பதிவுகள் இடமளிகிறது என்பதால் அது வரவேற்று வலுப்படுத்தப்பட வேண்டிய ஊடகம்.
7 ஒருவர் தனியாக வலைப்பதிவு எழுதும் போது பிரசினை ஏதும் இல்லை.அது ஒரு திரட்டியின் மூலம் திரட்டப்படும் போது அது ஒரு பொது
அரங்கமாக ஆகிறது.
8. வலைப்பதிவுகள் பற்றிய கற்பனைகளில் ஒன்று அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது என்பது. கம்யூனிகேஷன் என்பதில் கட்டற்ற சுதந்திரம்
கிடையாது, இருக்க முடியாது. மொழி மூலமாக வெளிப்படுத்துவது என்னும் போதே சில விதிகளுக்கு உட்படுகிறீர்கள்.அதன் இலக்கணம் சார்ந்து
எழுதுகிறீர்கள்.இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டது என்று எழுத முடியாது. மோதிக் கொண்டன என்றுதான் எழுத வேண்டும். I is coming என்று எழுத
முடியாது. I am coming You is going அல்ல. You are going. நீங்கள் ஏற்றுக் கொண்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.
9.வலைப்பதிவுகள் திரட்டப்படுவதின் காரணமாக சில பின்விளைவுகள், சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆரம்ப நாட்களில் எந்தப்பதிவிற்கு அதிகம்
பின்னூட்டங்கள் வருகிறதோ அது அதிகம் கவனிக்கப்படும் பதிவு என்று கருதப்பட்டது. உலகமே என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது, நான்
எழுதுவதற்கு உலகமே எதிர்வினையாற்றுகிறது என்று ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏற்படும் மனோபாவம் நிலவியது. அந்த பிரமை காரணமாக,
பின்னூட்டங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற மனோபாவம் வந்தது.
அன்று 50 பதிவுகள் இருந்தன, அநேகமாக ஒருவர் எல்லாப்பதிவுகளையும் படித்துவிடக்க்கூடிய நிலை இருந்தது, இன்று 2000 பதிவுகள். அதில் 1000
பேராவது எழுதுகிறார்கள்.இதில் தன்பதிவு கவனிக்கப்பட வேண்டும் என்பதற்க்காக அச்சுப் பத்திரிகைகளின் மலிவான உத்திகள்
பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றால் வலைப்பதிவுகளின் இயல்புகளில், சாத்தியங்களில் திரிபுகள் ஏற்படுகின்றன.அதைக் குறித்து வலைப்பதிவர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
10. கட்டற்ற சுதந்திரம்:
ஒரு தனி மனிதராக இருக்கும் வரை சுதந்திரத்திகுக் கட்டுக்கள் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக ஆகிறபோது சில கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டாக வேண்டியிருக்கிறது. தனியாக இருக்கும் போது ஒருவர் நிர்வாணமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீட்டில் இன்னொருவர் இருந்தால், அது
அம்மாவோ, சகோதரிகளோ, குழந்தைகளோ, ஏன் மனைவியாக இருந்தால் கூட ஒரு பெர்முடாவாவது போட்டுக்க்கொண்டுதான் அலைய
வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது அதற்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்டவர்களோடு சேர்ந்து இயங்கும் போது சில நெறிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி ஒரு மொழியை சில
நெறிகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகிறோமோ அது போல நம் வெளிப்பாடு சில நெறிகளுக்குட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த
ஊடக்மும் கட்டற்ற ஊடகமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பது நம் விழைவு.
11. யாருக்கு சுதந்திரம் அதிகமோ அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். எனவே யார் அதிகம் சுந்த்திரம் வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்கள்
அதற்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
12. மற்றவர் கோணத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்கும் மனநிலையைப் பலர் அடையவில்லை. அது நம்மிடம் இல்லை. வலைப்பதிவுகள் அதை
உடைக்க முடியும் திறந்த மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்ல முடியும். அப்படி இல்லை என்பதில் வருத்தம்.நாம் சில அடிப்படைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என் பதிவில் எழுதப்பட்டுள்ளவற்றிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்க
மாட்டேன்.ஒரு தனிப்பட்ட நபரைத் தாக்கியோ, விமர்சித்தோஎழுதும் கருத்துக்களைநான் வெளியிட மாட்டேன் என்பது போன்ற ஒரு நெறி, சில சுய
ஒழுங்குகளை, ஏற்றுக் கொள்ளலாம். இது நன்னடத்தை அல்ல, விதி அல்ல, கட்டுப்பாடு அல்ல. ஒரு சமூகமாக நாம் இயங்கும் போது நாம்
மேற்கொள்ள வேண்டிய சில சுயக் கட்டுப்பாடுகள்.
இதுதான் நான் பேசியதின் சாரம். இதில் நான் எங்கும் எந்த ஒருவரையும் தனிப்பட விமர்சித்துப் பேசவில்லை. இதில் எதை நுண் அரசியல்
விளையாட்டு என அமைப்பாளர்கள் கருதுகிறார்கள்?
இதன் பின் விவாதங்கள் துவங்கின.
அரவிந்தன் முதல் கேள்வியைக் கேட்டார்:" Moderated Blogலேயே ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகமாக இருக்கிறது.இந்த மனநிலையைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?" என்பது அவர் கேள்வி.
நான்:பின்னூட்டம் என்பது alcohol மாதிரி.சோர்வாக இருக்கும் போது உற்சாகம் தர உதவலாம். ஆனால் அதுவே அள்விற்கு மேல் போனால்
போதையாகி, ஒருவித halucination ஏற்பட்டு, எல்லாம் நல்லா இருக்கு என்ற செயற்கையான மனோபாவத்திற்கு இட்டுச் செல்லும். சுய ஒழுங்கு
இருந்தால் இதை மட்டுப்படுத்திவிடலாம்.
இந்த ஊடகத்தைப் பற்றி அல்ல, இன்னொரு ஊடகத்தைப் பற்றி என்று செல்வா அடுத்த கேள்வியை எழுப்பினார்: "ஐரோப்பிய சினிமா போல்
தமிழிலிருந்து தணிக்கையைத் தூக்கினா என்ன ஆகும்? இப்போ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்றால், நெல்லை எடுத்துக் கொண்டு
அதிலகொண்ஜம் உமியைக் கலந்து, அரிசியையும் கலக்கிறோம்.சென்சார்ல எந்த அளவிற்கு இருந்தால் கட் பண்ணக் கூடாதோ அந்த அளவிர்குக்
காண்பித்துக் கொண்டிருக்கோம். ஐரோப்பா மாதிரி சென்சாரையே தூக்கிட்டா என்ன ஆகும்? ஒரு பக்கம் frivolus movie போய்க்கிட்டிருக்கும். இன்னொரு
பக்கம் முன்னுதாரணப் படங்கள் வருமா, வராதா? இரண்டையும் கலந்து கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இது ஒரு ரிஸ்க்தான். ஒரு சமூகத்தில
கோவிலும் சாராயமும் இருக்கிற மாதிரி.அவங்க அவங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கலாம். Pluralistic Society ங்கிறதை இணையத்தில்தான்
பார்க்க முடிகிறது.அதை regularise பண்றதுங்கிறது ஒரு ரிஸ்க்"
நான்: நான் (கருத்தை) ரெகுலரைஸ் பண்ணுவதைப் பற்றிச் சொல்லவில்லை.உலகம் பூராவும் இன்று ஊடக்த்தொழில் எதை நோக்கிப் போகிறது
என்றால்.....முன்பெல்லாம் ஆனந்த விகடனில் ஒரு கிரைம் கதை, ஒரு சிறுகதை, ஒரு ஆன்மீகக் கட்டுரை, ஒரு அரசியல் கார்ட்டூன், இப்படி எல்லாம்
ஒரே இதழ்ல வரும்.இப்போது, த்னிமனிதனது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நாணய விகடன், விவசாயத்திற்கு பசுமை விகடன், என்று ஒவ்வொரு
துறைக்கும் தனித் தனி இதழ்கள் வருகின்றன. இதை niche journalsனு சொல்வோம். வாச்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தொழில்நுட்பம் காரனமாக
cost of production குறைந்திருப்பதால் இது சாத்தியமாகிறது. ஈனையத்தின் மிகப் பெரிய வசதி எல்லாவற்றிற்கும் தனித் தனி தளம் உருவாக்கிட
முடியும். தமிழ் உலகம் என்று ஒரு மடலாடற்குழு இருந்தது. அதில் ஒருவர் ஆன்மீகம் பற்றித்தான், அதிலும் சைவ சித்தாந்தம் பற்றி மட்டுமே
எழுதுவார்.கருத்து என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசவில்லை.அந்த contentஐக் கொடுக்கக் கூடியவர்கள் தங்களுக்கென்று சில
ஒழுங்குகளையும் வைத்துக் கொள்ள் வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி.
இந்தக் கூட்டத்தை 9:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதனால் எல்லோரும் 8:30க்கு வந்து விட வேண்டும் என்று
சொல்கிறீர்கள். அப்போது அந்த இடட்தில் ஒரு norm விதிக்கிறீர்கள். இது கட்டற்ற கூட்டம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும்
வரலாம் என்றால் ஒருவர் பனிரெண்டு மணிக்கு வந்து முதலில் இருந்து ஆரம்பித்து தமிழிணைய வரலாறு சொல்லுங்கனு கேட்கிறார். ஒரு குழுவாக
செயலபடும் போது சில norms, better performance of the groupக்காக தேவைப்படுகிறது.
மாலனின் கருத்தை வழி மொழிந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்தார் வளர்மதி.Internet Explosionனு சொல்வாங்க. ஆனால் அது Explosion அல்ல,
implosion. Implosionக்கு உதாரணம் சூரியன். அது உள்ளுக்குள்ளேயே வெடிக்கும். அதன் side effect ஆகத்தான் energy radiate ஆகிறது. அதே மாதிரி
இணையம். கட்டற்ற மீடியமாக அது இருந்தாலும், அது அதனுடைய effect தானே தவிர essence அல்ல.
அதில் direct interaction கிடையாது. Physical interaction இல்ல்ங்கிற்துனால, emotional ஆ interacட் பண்றது இல்லை. நேரில் ஒருவர் நீங்க வாங்க
என்ரு சொன்னால் நானும் பதிலுக்கு வாங்க என்று சொல்வேன்.நீங்க ஏய்னு சொன்னா நானும் ஏய்னு சொல்வேன். எழுத்து மூலமா interact செய்யும்
போது ஏய்னு சொன்னா கேள்வி வருது. என்ன தப்பா சொல்லிட்டோம் ஏன் இவர் ஏய்னு சொல்றார்னு கேள்வி தோணுது.அதனால ஒரு time lag
ஏற்படுது.இந்த time lag ஏ beat பண்ணனும், அதுinteractionக்கு இருக்கக் கூடிய Basic need. அந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளணும். அது
கட்டுப்பாடு இல்லை.தோட்டத்தில புல்லு வளர்க்க்றீங்க,. அதோட் களையும் வளருது.புல்லு வளரும்னா களையை எடுக்கணுமா வேண்டாமா?
நான்: தனிப்பதிவாக இருக்கும் வரைக்கும் பிரசினை இல்லை. பதிவுகள் ஒரு திரட்டியின் மூலம் திரட்டி வாச்கர்கள் முன் வைக்கப்படும் போது, திரட்டி
நிர்வாகிகளுக்கு ஒரு பொறுப்பு வேண்டுமா, வேண்டாமா? Many to many communicationlல் வெவ்வேறு levelல் இருப்பவர்கள் interact செய்கிறார்கள்.
WTOவை அடுத்து 60 சட்டங்கள் நிறைவேறின. விவசாயிகளை பாதிக்கக் கூடிய சட்டங்கள். Science based acts ஆனால் விவசாயிகளைப் பாதிக்கக்
கூடியவை. Seeds act என்று ஒன்று. அதைப்போல ஒரு draconian act கிடையாது.இந்தச் சட்டங்கள் பற்றி சில வக்கீல்கள் பதிவு எழுதுகிறார்கள்.
அதற்கு ஒரு பின்னூட்டம் வருகிறது. 'ஏன்யா இதைப்பற்றியெல்லாம் எழுதிக்கிட்டு இருக்க, ரஜனி, ஸ்ரேயா பற்றி எழுதினாலும் நாலு பேர் படிப்பாங்க"
என்று. இரண்டு levelல் இருப்பவர்களிடையே communication, even ஆக இருக்க முடியாது. நீங்களே பின் நவீனத்துவம் பற்றி பதிவு எழுதுகிறீர்கள்.
பின் நவீனத்துவம் தெரிந்தவர்களுக்கு அது குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுகிறார்கள், பின் நவீனத்துவம்னா என்னவென்றே தெரியாத
ஒருவர் வந்து ஏன்யா இதெல்லாம் எழுதறனு பின்னூட்டம் போட்டால் அங்கே கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது? வலைப்பதிவுல எழுத வந்தவங்க
வலைப்பதிவை விட்டுப் போனதற்கு என்ன காரணம்? நம் கருத்துக்களை இங்கே வைக்க முடியாது, அதைப் புரிந்து கொள்ள் மாட்டார்கள், நாம ஏதோ
சுவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம், அதற்கு பேசாமல் இருக்கலாம் என்று தோன்றியிருக்க வேண்டும்.
ஒரு கருத்தை வைப்பதற்கு அச்சமோ, தயக்கமோ தோன்றுமானால் அந்த இடத்தில் சுதந்திரம் இல்லை. அச்சம் உள்ள இடத்தில் சுதந்திரம் இருக்க
முடியாது.என்ன நடக்கிறது? Sanctity என்பது எதற்கும் கிடையாது.எதுவுமே புனிதமானது அல்ல என்பது வலைப்பதிவுகளில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு
கோண்த்தில் அது நல்லது. ஆனால் இன்னொரு கோணத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கக் கூடிய் institutionsஐ - உதாரணமா பெரியார்
இருக்கிறார்- அவரை denigrate செய்வதுமாதிரியான பின்னூட்டம் வந்தால் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் சமூகத்தில் பல விளைவுகளை
ஏற்படுத்தியவர்; சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்?
இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள்
அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின்
பெண் என்ன செய்தார்? மார்க்சிஸ்ட்டா அறியப்பட்டவருடைய பெண் எப்படி அமெரிக்காவில போய் படிக்கலாம்னு கேட்டா?
யதார்த்த வாழ்க்கையில, நேர் முரணான கருத்து உடையவர்களோடு ஏதோ ஒரு விதமான உறவு வைத்துக் கொண்டுதானே இருக்கிறோம்? பெரியார்
அவருடைய மணத்தைப் பற்றி ராஜாஜி ஒருவருக்குத்தானே கடிதம் எழுதி விவாதித்தார்? இரண்டு எதிர் எதிர் கருத்து நிலை உள்ளவர்கள், ஒரு
குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒருவரோடு ஒருவர் interact செய்ய முடியாதா? இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை
எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள்
போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க? இது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில்
கொள்கிற உறவு.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும், அவற்றிற்கும் அரசாங்கம் எடுக்கிற நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவை
முதலாளித்துவத்தை பிரசாரம் செய்யக் கூடியவையும் கிடையாது.சீனாவை அமெரிக்காவே Most Favoured Nation என்று அறிவித்துவிட்ட பிறகு,
சீனாவை ஆதரிக்கும் ஒருவருடைய மகள், அங்கே போய் படிப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது?
இதெல்லாம் தவிர, இது பதிவில் சொல்லப்பட்டிருந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்.....
(மாலன் சார் என்ரு சிவக்குமார் குறுக்கிட நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.)
.