Wednesday, August 01, 2007

ஒரு கோடிக் கருத்தம்மாக்கள்

"அடுத்து நீங்கள் காண இருக்கும் காட்சிகள் அதிர்ச்சி தரக்கூடியவை. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது" என்ற முன்னெச்சரிக்கையுடன் தொலைக்காட்சி அந்தச் செய்தியை அளித்தது. காட்சிகள் அதிர வைப்பதாகத்தான் இருந்தன.

ஒரிசா மாநிலத்த்ல் உள்ள, நயாகர் என்ற கிராமத்தில் உள்ள, ஒரு பாழும் கிணற்றிலிருந்து அடுத்தடுத்து பாலித்தீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்தப் பாலீதீன் பைகளுக்குள் பிறந்த இளம் பெண் சிசுக்களின் அழுகிய உடலகள் பொதியப்பட்டிருந்தன. அப்படி 30 பாலீதீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்த சிசுக்கள் செய்த குற்றம் பெண்ணாகப் பிறந்தது.

ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என முழங்கும் தலைப்புச் செய்திகளும், பிறக்கும் போதே பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும் கொடூரமான செய்திகளும் ஒரே நேரத்தில் காதை நிறைக்கும் தேசமாக இருக்கிறது இந்தியா!

பெண்சிசுக்கள் கொல்லப்படுகிற அவலம் ஏதோ ஒரிசாவில் மட்டும் நடைபெறுகிற சம்பவம் அல்ல. இது நடைபெறாத இந்திய மாநிலம் எதுவுமே இல்லை எனச் சொல்லிவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், இந்தக் கருத்தம்மாக்கள் பிறந்த உடனேயோ, பிறக்கும் முன்பாகவே கூட, அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், நம் சினிமாக்கள் சொல்வது போல, வறுமை அல்ல! வளமான மாநிலங்களான பஞ்சாபிலும் ?ரியானாவிலும்தான், செலக்டிவ் அபார்ஷன் எனச் சொல்லப்படும், பிறக்கப்போவது பெண்குழந்தை எனத் தெரிந்துகொண்டு அதைக் கருச்சிதைவு செய்யும் வழக்கம் அதிகம். ஹரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண்களுக்கு, 541 பெண்கள் என்ற விகிதத்தில்தான் பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆனால் ஏழைக்குடும்பங்களில் 1000 ஆண்களூக்கு 1567 என்ற அளவில் ஆண் பெண் விகிதம் இருக்கிறது.

இன்னொரு வளமான மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் என்பதாக ஆண்: பெண் விகிதம் அபாய அளவைத் தொட்டிருக்கிறது. அதிலும் அந்த மாநிலத்தின் செழிப்பான பகுதிகளான கிருஷ்ணா, சித்தூர், ரெங்காரெட்டி மாவட்டங்களில் இந்த வழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலேயே கம்மம் மாவட்டத்தில்தான் மிக அதிக அளவில் 93 ஸ்கேனிங் மையங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கும் பகுதிகள், வளமான, பெத்தபள்ளி, ஜகதியால், கோதாவரிகாணி ஆகியவைதான்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 1991ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி இந்தியாவில் ஆண்-பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்பதாக இருந்தது. ஆனால் 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் போது அது 927ஆக சரிந்திருக்கிறது. மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குக் காரணம் பெண்கள்பெண்சிசுக் கொலைகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெண் சிசுக் கொலைக்குக் காரணம் வெறும் வரதட்சிணைக் கொடுமை மட்டும் அல்ல.

ஆண் பெண் விகிதத்தில் ஏற்பட்டிருக்கிற கவலைதரும் சரிவு, இருபது ஆண்டுகளாகத்தான் ஏற்பட்டு வருகிறது. அதாவது Ultra Sonography என்கிற பிறக்கும் முன்பே கருவில் இருப்பது ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை, நகர்ப்புற மத்தியதர வர்க்கத்திடையே பிரபலமாகத் தொடங்கியதிலிருந்து, இந்த சரிவு விரைவுகாணத் தொடங்கியிருக்கிறது என ஊகிக்கமூடியும்.அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்திருக்கிறது. Pre-Natal Diagnostic Technique (Regulation and Prevention of Misuse) Act, 1994, Medical Termination of Pregnancy Act, 1971 என இரு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் நிலைமை சீரடைந்து விடவில்லை.

என்ன காரணம்? பல இருக்கலாம். ஆனால் படித்த நடுத்தர வர்க்கம் அறிவியலை, தனது சுயநலனை முன்னிட்டு. தார்மீக நெறிகளுக்கு முரணாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இந்த ஒரு கோடிப் பெண்சிசுக் கொலைகள் ஓர் உதாரணம். அறிவியலின் கொடைகளை இது போல படித்த வர்க்கம் தவறாகப் பயன்படுத்துவதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்கிறவர்கள், நாற்சந்திகளில் போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, ஆளே இல்லாவிட்டால் கூட வண்டியை நிறுத்தி சிகனல் மாறுவதற்குக் காத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் நகரங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்கனல்களையும் அமைத்து, அதன் கீழே போக்குவரத்தைக் கண்காணிப்பதற்குக் காவலர்களையும் நிறுத்துகிற வேடிக்கையைப் பார்க்கலாம்.அங்கே ஒரு முதியவர் அல்லது பள்ளிக்குழந்தை சாலையைக் கடக்கிறது என்றால் கூட வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்தி வழிவிடுவார்கள். இங்கே, " யோவ் பெரிசு, என்ன வீட்டிலெ சொல்லிட்டு வந்திட்டியா?"

தில்லியில், பலமாடி அடுக்குக் குடியிருப்புகள் இருக்கிற இடங்களில், குடீதன்ணீர் வரும் மெயின் குழாயில், பக்கத்து வீட்டுக்காரனிடம் இருப்பதைவிட சக்தி வாய்ந்த பம்பை நிறுவித் தண்ணீர் எடுத்துக் கொள்ள முயற்சிப்பவர்கள் பலர். நாளடைவில் எல்லோரும் சக்தி வாய்ந்த பம்புகளை நிறுவ, யாருக்கும் தண்ணீர் வருவதில்லை.தண்ணீர் கொடுக்க வேண்டியது நகர நிர்வாகத்தின் ஆதாரமான கடமைகளில் ஒன்று என்பதை அவர்களிடம் மல்லுக் கட்டி எடுத்துச் சொல்வதற்கோ, குடிதண்ணீர் நம் ஆதார உரிமைகளில் ஒன்று எனக் கோரிப் போராடும் திண்மையையோ கல்வி நம் மக்களுக்கு அளிக்கவில்லை.மாறாக அறிவியலை தார்மீக விதிகளுக்கு முரணாகப் பயன்படுத்தும் குறுக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறது.

செல்போன்களை ஆபாச செய்தி அனுப்புவதற்கோ, இணையத்தை, மின்னஞ்சலை, வலைப்பதிவுகளை எப்படி அதர்மமான வழிகளில் பயன்படுத்துவது பற்றியோ, வலைப்பதிவுகளில் போலிப்பின்னூட்டம், ஆபாசப் பின்னூட்டம் இடுவது பற்றியோ அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக, வல்லரசாக உருவாகிவருவதாகப் பேசிப் பெருமிதம் கொள்ளும் படித்த மத்தியதர வர்க்க நண்பர்களிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான்: " அதெல்லாம் சரி நண்பரே, நாம் ஒரு குடிமை ஒழுங்குகொண்ட சமூகமாக - Civic society-யாக உருவாவது எப்போது?"

17 comments:

செல்வநாயகி said...

நல்ல பதிவு மாலன். நன்றி முக்கியமாகக் கருத்தம்மாக்கள் பற்றிய உண்மைகளைப் பதிவு செய்ததற்கும், படித்த நடுத்தரவர்க்கத்தின் "இன்னொருவன் தண்ணீரை உறிஞ்ச" பம்ப் நிறுவும் நேர்மையையும், வல்லரசுப் பீற்றல்களையும் தொடர்புபடுத்திச் சுட்டியதற்கும்.

:))

பரிசுத்தவாதிகள் வேறெதையாவது இந்நேரத்தில் பரிவோடு கவனித்துக்கொண்டும், எழுதிக்கொண்டுமிருப்பார்கள். எல்லாம் முடிந்து மெதுவாய்த்தான் எந்த முக்கியத்துவமுமற்ற இந்தக் கேள்வியை எல்லாம் விசாரணைக்கே எடுத்துக்கொள்வார்கள். அல்லது இதையெல்லாம் தவிர்த்து விலகியும் செல்வார்கள். எதற்குப் பயன்பட்டதோ இல்லையோ இந்தியா வழங்கும் சனநாயக உரிமை இணையத்திலாவது இதற்குப் பயன்பட்டிருக்கிறது அவரவர்க்கு வேண்டியதைத் தொடர்ந்து செய்யவும், வேண்டாததைவிட்டு விலகியிருக்கவும் .

நீங்கள் தொடர்ந்து எழுதிவாருங்கள். கருத்துவேறுபாடுகளில் வாதிப்பதற்குக்கூட எல்லாராலும் எல்லோருடனும்
முடிந்துவிடுவதில்லை. அவரவரின் தனிப்பட்ட எல்லைகளும், விரிவுகளும் அதற்குக்காரணம். எனக்கெல்லாம் கற்றுக்கொள்வதற்கு உங்களிடமும் பல இருக்கின்றன.

மயிலாடுதுறை சிவா said...

அய்யா வணக்கம்

இதுப் போல் சமுக கண்ணோட்டம் உள்ள பல பதிவுகளைப் இட வேண்டும். நாள்கள் மாற மாற போலி
பின்னூட்ட மக்களும் மாறுவார்கள்.

உங்கள் நீண்ட எழுத்துலக அனுபவம் வலைப் பூவிலும் வந்தால் நல்லதுதானே?!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

My D Lee said...

FTC!!

A enlightening article.

சிவபாலன் said...

Sir,

Important Post!

Thanks for sharing!

Unknown said...

மாலன்,
எனக்கு மிகவும் கவலை தரும் இந்தியாவின் Civic Sense சம்பந்தமான விசயத்தை தொட்டு இருக்கிறீர்கள்.

//அயல்நாடுகளுக்குப் பயணம் செய்கிறவர்கள், நாற்சந்திகளில் போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, ஆளே இல்லாவிட்டால் கூட வண்டியை நிறுத்தி சிகனல் மாறுவதற்குக் காத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் நகரங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்கனல்களையும் அமைத்து, அதன் கீழே போக்குவரத்தைக் கண்காணிப்பதற்குக் காவலர்களையும் நிறுத்துகிற வேடிக்கையைப்//

அயல்நாடுகளுக்கு போய்விட்டு வந்து, வலைப்பதிவில் உலக பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நண்பர்கள்கூட இன்னும் குப்பையை நினைத்த இடத்தில் எறிவதற்கோ , சிகப்பு விளக்கை கடப்பதற்கோ எந்த குற்ற உணர்ச்சியும் கொள்வது இல்லை.

பெரும்பாலான இளைஞர்களுக்கு சம்பாதிப்பது அயல்நாடு போவது iPOD வாங்குவது போன்றவையே நாகரீகம்.

இங்கு இருந்து சென்று அயல்நாட்டில் வாழும் பெரும்பாலான இந்தியர்கள் அங்கும் அப்படியே உள்ளார்கள். இதற்கு இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பல இடங்களை உதாரணமாகக் காட்ட இயலும்.

இது கல்வியின் குறைபாடு மட்டும் அல்ல நமது மொத்த சமூகத்தின் குறைபாடு. :-(((

**
காலை 7:20 க்கு சிகப்பு விளக்கு மாறுவதற்காக நான் ஆளில்லா சந்தப்பில் நிற்கும் ஒவ்வொருமுறையும் பலரால் திட்டப்பட்டுக் கொண்டே உள்ளேன். :-((

99.9 % மக்கள் தங்களின் சுயநலனுக்காக எதையும் செய்யத் தயாரகும் இந்த ஊரில் 0.1% மக்கள் மட்டும் சட்டத்தை காப்பது என்பது கேலிக்கூத்தானது. சில நேரங்களில் உயிரையும் கொடுக்க வேண்டியுள்ளது. :-((


//தில்லியில், பலமாடி அடுக்குக் குடியிருப்புகள் இருக்கிற இடங்களில், குடீதன்ணீர் வரும் மெயின் குழாயில், பக்கத்து வீட்டுக்காரனிடம் இருப்பதைவிட சக்தி வாய்ந்த பம்பை நிறுவித் தண்ணீர் எடுத்துக் கொள்ள முயற்சிப்பவர்கள் பலர்.//

பக்கத்துவீட்டுக்காரன் 2 ஹார்ஸ்பவர் பம்பு வைத்தால் அவனைச் சமாளிக்க 4 ஹார்ஸ் பவர் பம்பு வைக்க வேண்டியுள்ளது. ஆனால் அனைவரும் கூடி ஒரு தீர்வு எடுப்போம் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவது இல்லை. இவர்களிம் போராடிப் போராடி கடைசியில் நாமும் 10 ஹார்ஸ் பவர் கொண்ட மோட்டார் வைக்க வேண்டீய இழி நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

***

பொது இடங்களில் ஒவ்வொரு முறையும் வரிசையில் மற்றவர்களையும் நிற்க வைக்க முயற்சித்து ...ஒவ்வொரு முறையும் தோற்றுள்ளேன். 60 வயது பெரியவர் என்னை அடிக்கவே வந்துவிட்டார் ஒரு முறை.

**
படிப்பும்,பணமும் உள்ள சாப்டுவேர் எருமைமாடுகள்கூட இப்படித்தான் உள்ளது.

**

Civic sense is not an Indian thing :-((


**

பல முறை எனக்கு உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் மீதும் , ஊடக வாய்ப்பு கொண்டவர்கள் மீதும் கோபம்தான் வரும்.கதை எழுதுகிறோம், கவிதை எழுதுகிறோம், கட்டுரை எழுதுகிறோம் என்று சொல்லும் பல அறிவு-சீவிகள் / இலக்கியவியாதிகள் சமூகத்திற்கு ஒன்றும் செய்தது இல்லை...பொழுது போக்க புத்தகங்கள் எழுதியதைத் தவிர. :-(( அவர்களிடமும் நான் கேட்பதும் .... "அதெல்லாம் சரி எழுத்தாளரே நாம் ஒரு குடிமை ஒழுங்குகொண்ட சமூகமாக - Civic society-யாக உருவாவது எப்போது?" அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் ?

அவர்கள் சொல்வது "நிகழ்வுகளைப் பதிவு செய்வதுதான் எனது வேலை" ... ஆமாம் அதைப் பதிவது ஒரு தொழிலாக இருக்கலாம். ஆனால் சமூக அக்கறை உள்ள எழுத்தாளன் நிகழ்வுகளைப் பதிவதையும் தாண்டி சில விசயங்கள் செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பு எழுத்தாளனுக்கு மட்டும் அல்ல ...அனைவருக்கும் வர வேண்டும். அப்போதுதான் மாற முடியும்.


***

சாலையில் செல்லும் ஒவ்வொரு நாளும் துன்பமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்தலுக்கான (வயிற்றுப்பாடு) சில கடமைகள் உள்ளது. அது தவிர்த்து மாதத்தில் சில மணி நேரமாவது சில விசயங்களைச் செய்யலாம். ஒரு "பார்க்கை நானும் எனது குடும்பமும் தத்து எடுத்து சுத்தமாக வைத்துக் கொள்கிறோம் , அங்கே குப்பைகளைக்கூட்ட எங்களை அனுமதியுங்கள் " என்று மாநகர நிர்வாகத்தை அனுகினால 3 மாதங்களாக "அய்யா" கிட்ட பேசுங்க.."அய்யா" இன்னும் வரவில்லை என்ற அளவில்தான் உள்ளது. வெறுமனே அனுமதி வாங்கவே தாவு தீர்ந்துவிடுகிறது :-((

நமக்குகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் 99 % சதவீதம் இப்படி "அய்யா" மார்களைப் பார்க்கவே சரியாக உள்ளது.

மிகவும் அயர்ச்சியாய்... ஒவ்வொரு படிகளும் ..கடுமையாய் உள்ளது.

தினமும் கோவிலுக்குப் போகும் ஒரு மடையன் , அந்தக் கோவிலில் கொடுக்கும் சில் பொருட்களைத் தின்றுவிட்டு குப்பையை அதே கோவிலின் அருகில் போட்டுவிட்டு தனது காரில் ஏறி செல்கிறான். அவனை என்ன செய்வது?

அந்தக் கடவுளும் வெக்கம் இல்லாமல் இப்படி பக்தனை அனுமதித்துக் கொண்டு உள்ளார். Civic விசயங்கள் ஒரு குற்றமாகவே இவர்கள் நினைப்பது இல்லை. பின்னே எப்போது திருந்த ?

**

இதை இப்படியேவிட முடியாது.

இதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன். அந்த முயற்சியால் இந்தியர்கள் யாரும் திருந்திவிடப்போவது இல்லை. என்னை ஒரு கோமாளியாக பார்க்கத்தான் போகிறார்கள் :-) ஆனால் குறைந்தபட்சம் முயன்ற திருப்தியாவது இருக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படித்தவர்கள் மத்தியில் கூட இந்த அவலம் உள்ளதே!!! எப்போ எந்த நூற்றாண்டில் மாறும்.
இன்னும் எத்தனை கோடி.....ம்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

முதலில் ஆசிரியர்களைப் பயிற்றுவித்து அவர்கள் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு ethics, civic sense சொல்லித் தந்தால் ஒழிய மாற்றத்துக்கு வழி இல்லை.

நண்பன் said...

// படித்த நடுத்தர வர்க்கம் அறிவியலை, தனது சுயநலனை முன்னிட்டு. தார்மீக நெறிகளுக்கு முரணாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பயன்படுத்தத் தயங்குவதில்லை //

மாலன்,

மிக அக்கறையுடனும், கரிசனையுடனும் எழுதப்பட்ட பதிவு.

ஒரு சட்டம் இயற்றும் பொழுது அதன் முழுபரிமாணத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், விவரிக்கப் பயன்பட்ட வார்த்தைகளால் ஆன செயலைத் தவிர மற்ற அனைத்தையும் செய்யலாம் என்ற இயல்பான மனித சிந்தனைகளே, விஞ்ஞான விதிகளையும், அதன் நேர்மையான பயன்பாட்டைத் தவிர மற்றவற்றிற்கும் பயன்படுத்திக் கொள்ளச் செய்கிறது.

இத்தகைய கயமை இந்தியர்களிடத்தில் மட்டுமல்ல - மற்ற எல்லா இடத்திலும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குத் தேவையான கயமைத்தனத்திற்கேற்ப விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் KFC பற்றிய ஒரு தொலைநகல் ஒன்று எங்கள் அலுவலகத்திற்கு வந்தது. அதில் இறைச்சிக்காக கோழிகள் வளர்க்கப்படும் விதத்தைப் பற்றி குறிப்பிட்டு எழுதி இருந்தார் அதை அனுப்பி வைத்தவர் - முழு முகவரியுடன், தொலை பேசி தொடர்பு எண்களுடன். (விவரம் பின்னர் தருகிறேன்) இந்தக் கோழிகளுக்கு அலகு, இறக்கைகள் மற்றும் ரோமங்கள் எதுவுமிருக்காது. உணவு ஒரு சிறு குழாயின் மூலம் செலுத்தப்படும். வெறும் சதைப் பிண்டமாக வளர்ந்து வரும். தேவையான அளவு வளர்ச்சி அடைந்ததும், சமைத்து விடுவார்கள். அதாவது உயிரற்ற சதைப்பிண்டத்தை.

'உணவிற்காக மட்டுமே உன்னைக் கொல்கிறேன்' என்ற பிரார்த்தனையுடன் மட்டுமே உணவிற்கான உயிரினங்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சில மதங்களின் கட்டளைகள் இப்பொழுது ஆக்கபூர்வமாகாவும் ஆரோக்கியமாகவும் படுகிறது. பெங்களூரில் முதன் முதலாக KFC திறக்கப்பட்ட பொழுது, விவாசாய சங்கத் தலைவராக இருந்த நஞ்சுண்டசாமி போராட்டம் நடத்திய பொழுது, இதென்ன மடத்தனம் என்று தோன்றியது. ஆனால், இன்று அவர்களின் உணவு தயாரிக்கும் நேர்மையையும், உயிர்களின் மீது அவர்கள் வைத்திருக்கும் அற்ப மதிப்பையும் பார்க்கும் பொழுது, இவர்களுக்காக ஏன் நம் வாசல்கள் திறக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

விஞ்ஞானத்தை தன் சுய நலத்திற்காகப் பயன்படுத்தும் போக்கு, உலகெங்கும் நிகழத் தான் செய்கிறது. இந்தியர்கள் மட்டுமே இந்தத் தவறைச் செய்கிறார்கள் என்ற தொனியில் ஒலிக்கும் கருத்துகளை ஏற்க முடியவில்லை. இந்தியர்களும் செய்கிறார்கள் என்ற அளவிற்கு மட்டுமே அவை பொருந்தும்.

மேலை நாட்டின் சாலை ஒழுக்கங்களை மிக மிக சிலாகித்துப் பேசும் பொழுது, அதே மேலை நாட்டினர் பிற நாட்டிற்குச் செல்லும் பொழுது, அந்த நாட்டின் விதிகளை மதிக்கிறார்களா என்ற கேள்வியும் முன் வைக்க வேண்டும். போதை பொருட்கள் உபயோகம் மட்டுமல்ல, அதை தன் உடமையாக வைத்திருப்பதே குற்றம் என்ற கடுமையான சட்டங்களை வைத்திருக்கும் நாடுகளுக்குச் செல்லும் மேலை நாட்டினர் அதை மதிக்கின்றனரா? கிடையவே கிடையாது. சிங்கப்பூர், இந்தோநேசியா போன்ற நாட்டில் சிக்கிக் கொண்ட ஆஸ்திரேலியர்களைச் சொல்லலாம். போதை பொருள் அவர்களுக்கு அத்தனை அத்தியாவசமாக இருக்கும் பொழுது, தான் செல்லும் நாட்டின் சட்டங்களைக் குறித்து கொஞ்சம் கூட கவலை கொள்வதில்லை. அத்தனை தான் சட்டத்தின் மீதும் civic soceity என்ற நடைமுறை ஒழுக்கத்தின் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை.

மீண்டும் சாலை விதிகளுக்கு வருவோம் - மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விஸ்தீரணமிக்க சாலைகள், நெரிசலின்றி விரைந்து செல்லும் வழியில் கட்டமைக்கப்பட்ட மேம்பாலங்கள், சேவை சாலைகள் என அனைத்தும் வழங்கப்பட்ட பின்னர் தான் அவர்களின் சாலை நேர்மை வெளிப்படுகிறது. அதிலும் முற்றிலுமாகக் கிடையாது. கண்காணிப்பு புகைப்பட கருவிகள், ராடார்களின் துணையுடன் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருப்பதாலும், விதி மீறலில் சிக்கிக் கொண்டால் கட்ட வேண்டிய அபராதத் தொகையின் அளவு தரும் பயமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். துபாயின் சாலைகளில் அனைவரும் ஒழுங்காகத் தான் வண்டி ஓட்டுகிறார்கள் - 50% அதிகமானவர்கள் இந்தியர்கள் தான். அதிலும் தொழில்முறையாக வண்டி ஓட்டும் - பெரிய கல்வியறிவு அற்றவர்கள் - ஓட்டுநர்கள் கூட கவனமாகவும், சிரத்தையாகவும் தான் ஓட்டுகிறார்கள்.

இந்தியாவின் விதி மீறல், survival of the fittest என்ற இயற்கையின் விதியின் வலுவினால் தானே அன்றி - இந்தியர்கள் அனைவரும் civic society எனும் பண்பற்றவர்கள் என்ற விதமான கூற்றுடன் வரும் எண்ணங்கள் தவிர்க்கப்படவேண்டியவை...

நண்பன்

மாசிலா said...

நல்ல பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி மாலன் ஐயா.

சராசரியாக இந்திய குடும்பங்களில் பிள்ளைகளை ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவே பார்ப்பதே இதற்கு ஒரு காரணம். பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய பாசத்தை கொட்டி வளர்த்து, பையனை எப்போதுமே ஒரு படி மேலே வைத்து அனைத்து வசதிகளையும் செய்து ஏகபோக படிப்புகளை படிக்கச்செய்து கடைசியில் வெளி நாடுகளிலோ அல்லது உள் நாட்டிலோ நல்ல பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதில் இன்னொரு கவலை தரும் செய்தி யாதெனில் இப்படி பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாற்றப்பட்ட இளைஞர்களும் நாளடைவில் பல மன உளைச்சல்களுக்கு இறையாகி பரிதவிக்கின்றனர்.

பெண் பிள்ளையாக இருந்தால் நல்ல வேலை கிடைக்காது. நிறைய பாதுகாப்புகள் தேவை. சம்பளமும் அதிகம் கிடைக்காது. எப்படி இருந்தாலும் ஒரு காலத்தில் வீட்டை விட்டு அடுத்தவருக்கு வாழ்க்கைப்பட உட்பட்டவர். ஆகவே இந்த கோணங்களில் பெண் வளர்ப்பு என்பது இச்சமுதாயத்திற்கு ஒரு பாரமாகவே தெரிகிறது.

மாறிவரும் இப்போதைய பொருள் ஆடம்பர வெளிவேட போதையில் ஊறிக்கிடக்கும் நுகர்வோர் சமுதாயம் இது போன்ற மனநிலையை மாற்றப்போவதாக நான் நினைக்கவில்லை.

சுய நலமே அனைத்திற்கும் காரணம்.

இதெற்கண ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், சமுதாய அமைப்புகள், சங்கங்கள் பொது நல மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் மூலமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஊடகங்களின் பங்கு இதற்கு அதிகமாகவே தேவைப்படும்.

நாம் ஒவ்வொருவரும் இதற்கு நம் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

தமிழ்மணம் நிர்வாகிகள் அல்லது வேறொருவரோ இதெற்கென ஒரு கையழுத்து இயக்கம் நடத்தி நம் கண்டனங்களை பதிவு செய்யலாம்.

நன்றி.

seethag said...

malan,
this whole issue of foeticide is a reflection of a deeper issue,right ?as far as i am concerned unless a person is able to have self examination constantly it is not easy to tackle the problem. how often do girls specifically get asked..'do you cook'?when i tried to ask the samething to a man, there was an extremely embarrassing silence.i am not saying a girl should nto learn to cook,but if ti is seen as a gender specific behaviour then all problems start.

unless we handle our unconscious biases and prejudices ,the issue such as foeticide will always be there.

civic sense..when the govt doesnt have /reflect then how will common people be able to?in madras , near satya studio, the traffic is very complex.(mind you alal the ministers live there) there is no proper pedestrian crossing, sameway with all the flyovers in adyar have you ever tried to walk in L.B.road?
obiviously we are not a country where everyone is swishing in cars.

i would say mass media like tv should be used more to create awareness more vigoruosly. in australia they could manage to control the pandemic of HIV through constant campaigns in the tv.ban all those weepy serials in the tv.

Unknown said...

//இந்தியர்கள் அனைவரும் civic society எனும் பண்பற்றவர்கள் என்ற விதமான கூற்றுடன் வரும் எண்ணங்கள் தவிர்க்கப்படவேண்டியவை...//

நண்பன்,
சாலை விதிகள் கடைபிடிக்கப்படாமைக்கு நீங்கள் சொல்லும் காரணம் சரி என்பது போல் தோன்றினாலும் அது உண்மை அல்ல.
10 பேர் மட்டுமே உள்ள ஒரு "கவுண்டரில்" வெகு இயல்பாக முன்னே செல்ல எத்தனிக்கும் மனிதர்களை என்ன சொல்வீர்கள்?

அடுக்குமாடிவீட்டின் பால்கனியில் மேலிருந்தபடியே வெளியில் குப்பையை கூட்டித் தள்ளும் கணவான்களின் செயலுக்கு எதாவது காரணம் வைத்து உள்ளீர்களா?

குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் குப்பை போடும் மனிதர்களை என்ன சொல்வீர்கள்?

//survival of the fittest என்ற இயற்கையின் விதியின் வலுவினால் தானே அன்றி //

உண்மைதான். ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கு பல விளக்கங்கள் சொல்லலாம்.பிக்-பாக்கெட் கூட survival of the fittest என்ற இயற்கையின் விதிதான் என்பது திருடனின் வாதம்.

***

சமுதாயத்தில் குறைந்தது 50% மக்களாவது ஒழுங்கைப் பின்பற்றாவிட்டால் , ஒழுங்கின்மையே ஒழுங்காகிவிடும்.

ஒழுங்கு என்பதும் அவரவர் பார்வையில் வேறுபடும்.

ச.மனோகர் said...

அருமையான பதிவு மாலன்.. Civic Sense இல்லாமல் இந்தியா இருப்பதற்கு குறிப்பிட்ட ஒரு குழுவை காரணம் காட்ட முடியாது.நாம் எல்லோரும்தான்.நேற்று என் நண்பன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வரிசையின் இடையே புகுந்து டிக்கட் வாங்கியதை, இப்போது நினைத்தால் அவமானமாக இருக்கிறது.

நண்பன் said...

•//இந்தியர்கள் அனைவரும் civic society எனும் பண்பற்றவர்கள் என்ற விதமான கூற்றுடன் வரும் எண்ணங்கள் தவிர்க்கப்படவேண்டியவை...//

கல்வெட்டு,

என்னுடைய வாதம் - இந்தியர்களிடத்தில் தான் பண்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்படும் தொனியைக் குறித்து தான். ஒரு பெரிய நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சமயத்தில் கூட, சில சமயம் சில வயோதிக பெரியவர்களுக்காக வரிசையில் சற்று முன்னதாக இடம் கொடுக்கும் காத்திருப்போரையும் குறிப்பிடலாமே?

ஒரு தனி மனிதனின் குணங்களை ஒரு சமூகத்தின் மீது ஏற்றிக் கூறுவதென்பது தான் தவறு. மற்ற சமூகங்கள் அனைத்தும் பண்பு பெற்று விட்டதாகவும், நாம் இன்னும் பண்பாடு அடையவில்லை என்றும், அவர்களைத் திருத்த வேண்டும் என்று சொல்வதும் பண்பாடு என்பது தங்களது தனிப்பட்ட சொத்தாக நினைத்துக் கொள்ளும் மனநிலையே அன்றி, பண்பாட்டைக் குறித்தான மேனிலையை அடைந்து விட்டதாக அர்த்தமல்ல. இன்னமும் இந்த மேனிலை மனப்பான்மை பல ‘வெள்ளையர்களிடம்’ இருக்கத் தான் செய்கிறது. தங்களுடைய கலாச்சாரம் உயர்ந்ததாகவும், கீழை நாட்டு கலாச்சாரங்கள் சற்றேனும் தாழ்ச்சியுடையதாகவும் நினைத்துக் கொண்டு, அந்த மாதிரியே நடந்து கொள்ளவும் செய்கின்றனர். இவர்களிடத்திலிருந்து வரும் civic sense எப்படி உயர்ந்ததாக கருத முடியும்? பள்ளி மாணவன் முதல் கல்லூரி மாணவன் வரை, கற்கும் இடத்திற்கு துப்பாக்கி எடுத்து செல்வது முதல் கொலை செய்வது வரை எந்த குற்ற உணர்வுமின்றி இயங்குகிறார்களே, இது போன்ற சமூக நுண்புலனைக் குறித்தான சிலாகிப்பா பெரிது?

சுத்தம், சாலை ஒழுக்கம், திருட்டுக் குற்றங்கள், இத்யாதிகள் பொருளாதாரம் சார்ந்த உள்கட்டமைப்புகளைக் கொண்டு இயங்குபவை அல்லது நிகழ்பவை. நம்முடைய பொருளாதார நிலையும் உயரும் பொழுது இவை தன்னைப் போல குறையும். இப்பொழுது பெங்களூரில் சில இடங்களில், தள்ளுவண்டியை வைத்துக் கொண்டு, வீட்டு வாசலிலே வந்து wet garbage, dry garbage என வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை வாங்கிச் செல்கிறார்கள். ஒரு இரண்டு – மூன்று வருடங்களுக்கு முன்னர், எல்லோரும் தெருமுனை குப்பைத் தொட்டிகளைத் தான் உபயோகித்துக் கொண்டிருந்தோம். உணவு தேடும் தெரு நாயகளோ, மாடுகளோ, அல்லது பிளாஸ்டிக் சேகரிப்பவர்களோ தெரு முழுவதும் அந்த குப்பைகளை விசிறியடித்துச் செல்வர். இப்பொழுது அந்த சூழல் மாறி இருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் வரும் பொழுது, இந்த civic sense தானாக வரும்.


//
//survival of the fittest என்ற இயற்கையின் விதியின் வலுவினால் தானே அன்றி //

உண்மைதான். ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கு பல விளக்கங்கள் சொல்லலாம்.பிக்-பாக்கெட் கூட survival of the fittest என்ற இயற்கையின் விதிதான் என்பது திருடனின் வாதம். //

இப்படி தான் பொருள் கொள்ள வேண்டும் என்றால், இதில் மேற்கொண்டு விளக்கம் சொல்வதற்கு ஏதுமில்லை. பரிணாம கொள்கையின் விளக்கங்களில் மிக முக்கியமான கூற்று இது. கடவுள் மறுப்புக் கொள்கையை முன் வைத்துப் பேசும் பரிணாமக் கொள்கை, இறைவன் எனும் தத்துவத்திற்கு எதிராக வைத்த மாற்றுக் கொள்கை தான் இது.

எல்லாம் விதி என்று தன்னைச் சுற்றி நிகழும் இயக்கவிதிகளை புறந்தள்ளி, தன் இயலாமைகளை மறைத்துக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருந்த மனிதனின் மரபுகளைக் கட்டுடைத்து, போராடினால் வெல்லலாம் என்ற புரிதலை மனிதனுக்குக் கொடுத்தது இந்த விதி தான். என்றும் இல்லாத அளவிற்கு ஒரு materialistic வாழ்க்கையை மனிதன் மேற்கொள்வதற்கு அடிகோலியது. ஒரு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ள முனைப்பு கொடுத்தது.

ஒரு போட்டி உலகில், வாழ்க்கைய முன் நகர்த்தி செல்லும் ஒரு சவாலில், குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டு தான் இந்த வாழ்க்கைப் போராட்டம் நடக்கிறது. இந்த survival of the fittest என்பது குற்றங்கள் புரிவதற்கான வக்காலத்து வாங்கும் நியதியாக எழுதப்படவில்லை. மாறாக, ஒரு போட்டியின் போது, உயிர் வாழ்வதும், தன் சந்ததிகளை விருத்தி செய்வதுமான போட்டிகள் நிறைந்த உலகில் சக பிராணிகள் மீது பரிவோ பாசமோ காட்டாமல், அக்கறை கொள்ளாமல், தன் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு, சக போட்டியாளர்களுக்கான வாய்ப்பை மறுத்து, தனதாக்கிக் கொள்ளும் தன்மையை மட்டுமே குறிக்கிறது.

குற்றங்கள் புரிவதற்கான ஆதரவாக அல்ல. குற்றங்கள் புரிவது வாழ்க்கையை அபிவிருத்தி செய்வதற்கான வாழ்க்கைப் போராட்டம் அல்ல.

சாலையில் ஒருவரை முந்தி செல்ல முனையும் ஓட்டுநர்களின் சுயநலம் - நெருக்கடிகளிலுனுள்ளிருந்து, விடுபட்டு, முன்னதாக தன் இலக்கை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தவிர, பக்கத்தில் செல்லும் சைக்கிள்காரனை இடித்துத் தள்ளிக் கொன்று விட வேண்டும் என்றோ, அல்லது புதிய வாகனங்களைக் கண்டால், அதை இடித்து பழுதாக்கி விட வேண்டும் என்றோ எண்ணம் கொண்டு குற்றம் புரியும் மனநிலை அல்ல - தன்னுடைய சேருமிடத்தை சற்று முன்னதாக அடைந்தால் போதும் என்ற நிலை தான்.

குற்றங்களுக்கும், போராட்டங்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கவே செய்கிறது.

Unknown said...

நண்பன்,
மேலைநாடு சிறந்தது என்று ஒப்பீடளவில் நான் பேசவில்லை. குப்பையை சரியான இடத்தில் போடுவதற்குக்கூட மேலைநாட்டை ஒப்பிடவேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம் என்பது கேவலமானது.

இதியாவில் சிவிக் சென்ஸ் இல்லை எனதே எனது வாதம் தவிர , அது இருப்பதால் மேலை நாடு உயர்ந்தது என்று சொல்லவில்லை.
அப்படி எங்காவது சொல்லி இருக்கிறேனா?

**
//ஒரு தனி மனிதனின் குணங்களை ஒரு சமூகத்தின் மீது ஏற்றிக் கூறுவதென்பது தான் தவறு.//

:-))

சமூகம் என்படு என்ன? தனி மனிதர்களால் கட்டமைக்கப்பட்டதுதான். 99 % தவறாக உள்ள மனிதக்கூட்டத்தை என்ன மொழியில் சொல்லலாம்? சொல்லுங்கள் அதையே பயன்படுத்துகிறேன்.

***

//இப்பொழுது பெங்களூரில் சில இடங்களில், தள்ளுவண்டியை .. இப்பொழுது அந்த சூழல் மாறி இருக்கிறது. //

:-))

தெருவில் வீசப்படும் குப்பையைச் சுற்றி அலையும் நாய்கள் கடித்து இறந்த குழந்தைகள் பற்றிய ஆய்வு உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது உங்களின் உதாரணத்தில் இருந்தே தெரிகிறது.

அடிப்படைக் கட்டமைப்பு இருந்தாலும் அதை பயன் படுத்த இன்னும் சிவிக் சென்ஸ் இல்லை என்றுதான் கூறுவேன்.

***

அடுக்குமாடிவீட்டின் பால்கனியில் மேலிருந்தபடியே வெளியில் குப்பையை கூட்டித் தள்ளும் கணவான்களின் செயலுக்கு எதாவது காரணம் வைத்து உள்ளீர்களா? இவர்கள் செய்வது எதை முந்த? சோம்பேறித்தனமும் பொறுப்பின்மையும்தான்.

அதே பெங்களூரில் ஒரு நாள் குப்பை அள்ளும் நபருடன் சுற்றிப் பாருங்கள் உண்மை அறிய. நான் செய்துவிட்டுத்தான் சொல்கிறேன்.

***

உங்கள் வாதத்தின் சாரம் அனைத்துச் செயல்களுக்கும் ஒரு விளக்கம் இருக்கும் என்பது. அதை கீழ்க்கண்ட பதிலில் இருந்து தெரிந்து கொண்டேன்.

//தன்னுடைய சேருமிடத்தை சற்று முன்னதாக அடைந்தால் போதும் என்ற நிலை தான்.//

தன் இலக்கை எப்படியும் அடையலாம் என்பதற்கும் இப்படித்தான் அடையவேண்டும் என்பத்ற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நீங்கள் "கோல்" போடுவதே இலக்கு அதை சற்று முன்னதாக அடைய விளையாட்டின் விதியை மீறலாம் என்கிறீர்கள். நான் விதியை கடைபிடிக்க வேண்டும் என்கிறேன். இலக்கை அடைவதே உங்கள் நோக்கம். ஆனால் அதை எப்படி அடைகிறான் என்பதே எனது பார்வை.

ஒவ்வொரு விசயத்திற்கும் பல பார்வைகள் உள்ளது.உங்களின் "...சேருமிடத்தை சற்று முன்னதாக அடைந்தால் போதும்..." வகைப் பார்வையை புரிந்து கொண்டேன். அதை மதிக்கிறேன். நான் ஒதுங்கி வழிவிடுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது.

முன்னதாக அடைவதே உங்கள் நோக்கம் எனில் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை.

:-))

Unknown said...

நண்பன்,
"பேச ஒன்றும் இல்லை" என்று நான் சொன்னது இந்த விசயத்தில்தான். அதை பொதுவான ஒன்றாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

மாறுபட்ட கருத்துக்களில் விலகிச்சென்றும் , ஒன்றுபட்ட கருத்துக்களில் கூடியும் விவாதிப்போம். கருத்துப் பகிர்விற்கு நன்றி !

நண்பன் said...

// "பேச ஒன்றும் இல்லை" என்று நான் சொன்னது இந்த விசயத்தில்தான். அதை பொதுவான ஒன்றாக எடுத்துக் கொள்ளவேண்டாம். //

Oh! No!!! அப்படியெல்லாம் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ள மாட்டேன்.

கவலைப்படாதீர்கள்.

// மாறுபட்ட கருத்துக்களில் விலகிச்சென்றும் , ஒன்றுபட்ட கருத்துக்களில் கூடியும் விவாதிப்போம். கருத்துப் பகிர்விற்கு நன்றி //

மிக்க மகிழ்ச்சி. தொடரலாம்.

அன்புடன்
நண்பன்.

M.Rishan Shareef said...

மிக நல்ல பதிவு.
விகடனில் பார்த்துத் தான் இங்கே வந்தேன்.மிகப் பயனுள்ள வலைத்தளம்...பாராட்டுக்கள் நண்பரே..!
தொடர்ந்து எழுதுங்கள்.