Saturday, February 20, 2016

வெற்றி என்பது…..

கடைசிப் பக்கம்:: மாலன்
வெற்றி என்பது…..

“உங்களுக்கு என்னப்பா, மூன்றே பருவங்கள்தான் வெப்பம், அதிக வெப்பம், மிக அதிக வெப்பம். அங்கே, அமெரிக்காவில் அப்படியா?  வீட்டு வாசலில் மூன்றடிக்குப் பனி விழுந்து கிடக்கிறது. அம்மாவிற்கு ஒத்துக்காது . சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்!” என்றார் நண்பர்  நான் புன்னகைத்தேன். சியாச்சின் என் எண்ணங்களில் சிரித்துக் கொண்டிருந்தது

பூமிக்கு இரு துருவங்கள் என பூகோளப் பாடப் புத்தகங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. மூன்றாவதாகவும் ஒரு ‘துருவம்’ உண்டு. அது சியாச்சின். உண்மையில் அது துருவம் அல்ல. அதாவது ஒரு முனையல்ல. அது ஓர் பனிகட்டி..உலகின் மிகப் பிரம்மாண்டமான பனிக் கட்டிகளில் ஒன்று (72 கீ.மீ நீளம்) சுற்றிலும் நெடிதுயர்ந்து நிற்கும் பனிச்சிகரங்கள் சுழன்றடிக்கும் காற்றின் மூலம் ஓயாது பனி தூவிக் கொண்டிருப்பதால் இந்தப் பனிகட்டியில் உள்ள பனியின் ஆழமும் அளவும் துருவப் பகுதிகளுக்கு நிகரானது என்பதால் இது ‘மூன்றாம் துருவம்’

இந்த மூன்றாம் துருவத்தில், ஹனுமந்தப்பா புதையுண்ட போது மூன்றடிக்கு அல்ல, முப்பது அடிக்குப் பனி குவிந்து கிடந்தது. அவரையும் அவரது சகாக்களையும் மீட்டெடுக்க நடந்த முயற்சி மனித ஆற்றலின் சிகரம். மனத் திண்மையின் உச்சம். மரணத்தைத் துச்சமாக மதித்து நடந்த ஓரு போராட்டம்.

19,500 அடி உயரத்தில் இருக்கிறது சியாச்சின். அந்த வெள்ளிப் பனிமலையில் உலவுவது கிடக்கட்டும், மூச்சுவிடுவதே சிரமம். ஏனெனில் காற்றில் ஆக்சிஜன் குறைவு. மைனஸ்55 டிகிரி குளிர். சுழன்றடிக்கும் காற்று. பெய்வதும் நிற்பதுமான பனிமழை. பதினைந்து நிமிடத்திற்கு மேல் அந்தப் பனி வெளியில் நிற்க முடியாது

புதைந்து கிடக்கும் உடல்களை மீட்க வேண்டுமானால் உறைந்து கிடக்கும் பனியை உடைக்க வேண்டும். அதுவோ கான்கீரிட்டை விடக் கடினமாக இருந்தது  இறுகிக் கிடந்த பனியை உடைப்பது அத்தனை எளிதாய் இல்லை. அங்குலம் அங்குலமாகச் செதுக்கித்தான் அகற்ற வேண்டும்.

அசரவில்லை நம் ராணுவம்.150 ராணுவ வீரர்கள் களமிறங்கினார்கள். 20, 20 பேர் கொண்ட குழுவாகப் பிரித்துக் கொண்டார்கள். ஒவ்வொரு குழுவும் அரைமணிநேரம் வேலை செய்யும். பின் ஓய்வு.பின் வேலை.

இயந்திரத் துளைப்பான்கள், மின்சார ரம்பங்கள், ஆழத்தில் ஊடுருவித் தேடும் ரேடார்கள், ரேடியோ அலைகள் மூலம் கண்டறியும் சாதனங்கள் என ஹெலிகாப்டர்கள் 200 நடை போய் எடுத்து வந்தன. அத்தோடு அவர்கள், டாட், மிஷா இரு நண்பர்களையும் அழைத்து வந்தார்கள். இருவரும் மோப்ப நாய்கள்!. என்றைக்கும் நாய்கள்தானே மனிதனின் ‘பெஸ்ட் பிரண்ட்!’
  
ஒருநாளல்ல, இருநாளல்ல, ஐந்து நாள்கள் போராடினார்கள். அந்த ஐந்துநாளும் பனிப்பாறைகளின் இடுக்கில் இருந்த காற்றை சுவாசித்துக் கொண்டு ஹனுமந்தப்பா உயிரைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தார். ஐந்தாம் நாள் அந்திமாலையில், அவரை வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்து விட்டார்கள். காத்திருந்த ஒரு மருத்துவர் குழு அங்கேயே அவருக்கு சிகிச்சை அளித்தது. காரணம் இருட்டிவிட்டதால் ஹெலிகாப்டர்கள் பறக்க முடியாத நிலை. இருள் விலகியதும் புறப்பட்டார்கள். பனிமழை. 150 அடிக்கு அப்பால் பார்க்க முடியாது. மலைகளுக்கு இடையிலான குறுகிய வெளியில், சுழன்றடிக்கும் காற்றில் அங்குலம் அங்குலமாக முன்னேறி சமவெளியில் வந்திறங்கியது ஹெலிகாப்டர்.

பனிவெளியில் மீட்டுப் பாதுகாத்தவரை, புதுதில்லியில் பறிகொடுத்தோம்   

வெற்றி என்பதின் அளவு கோல், அருமை மாணவர்களே, முடிவுகளில் அல்ல. முயற்சிகளில்தான் இருக்கிறது

-கல்கி  

6 comments:

Unknown said...

சியாச்சின் உண்மை நிலைமையை பகிர்ந்தமைக்கு நன்றி. நாடுகாக்கும் நம்வீரர்களுக்கு வணக்கம். ஜெய்ஹிந்த்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

மிகவும் அரிய செய்தியை, மிகவும் எளிய நடையில் தந்திருக்கிறீர்கள்... நம் இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகள்.
கேவலமான தலைவர்களைப் பார்த்துப் பார்த்து, பொதுவாழ்வு, அரசியல் என்றாலே அந்நியப் பட்டுவரும் குழந்தைகளுக்கு இதுபோலும் செய்திகளைக் கொண்டுசேர்ப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.
எனது தளத்தில் இதுபோலும் தங்களின் சில -கல்கியின் கடைசிப்பக்கப் படைப்புகளை- மறுபதிவு செய்ய அனுமதிப்பீர்களா?

மாலன் said...

@நா.முத்துநிலவன். தாரளமாக வெளியிடலாம். பொது வெளியில் வைக்கப்பட்டபின் என் படைப்புக்கள் அனைவருக்கும் உரியது.

மாலன் said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி

பவள சங்கரி said...

அருமை சார். மிக எளிய நடையில் அரிய தகவலை பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ராணுவ வீரர்களின் திடமான பணியின் கடுமையை மீண்டும் உணர வைத்தீர்கள்...
நன்றி!