தேர்தல் 2016
பத்ரியின் கட்டுரையை ( http://www.badriseshadri.in/2016/02/blog-post.html ) முன் வைத்து.
பத்ரியின் கட்டுரையை ( http://www.badriseshadri.in/2016/02/blog-post.html ) முன் வைத்து.
மக்கள்
நலக் கூட்டணியை ஆதரிக்க பத்ரி சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில்
இல்லை. ஓர் அரசு எப்படிச் செயல்படும் (Style of
functioning) என்பதை அதன் தலைமை யார் என்பதைக் கொண்டே ஊகிக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர்
வேட்பாளர் யாரென்று தெரியாத நிலையில், அதற்கு வாய்ப்பில்லை. அந்த நிலையில்
அதை ஆதரிப்பது குறித்து எடுக்கப்படும் முடிவுகள் எதிர்மறையான சிந்தனைகள், அல்லது
காழ்ப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளாகவே கருதப்பட வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணி ஓர் ஆக்க பூர்வமான மாற்றத்தை
நோக்கி, (ஆம் ஆத்மியைப் போல) உருவாக்கப்பட்டதல்ல. அது கடந்த கால தேர்தல்
தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியால், (அதாவது மக்களின் நிராகரிப்பால்) தேர்தல்
பேரங்கள் போதுமான அளவு படியாது போன அதிருப்தியால் உருவான கூட்டணி. அதில் இடம்
பெற்றுள்ள கட்சிகள் 2014 மக்களவைத் தேர்தல் வரையில் ஏதோ ஒரு கூட்டணியில் இருந்தவர்கள்தான்.
அப்போது இல்லாமல் இப்போது, இரண்டாண்டிற்குள், திடீரெனெ ஞானோதயம் எங்கிருந்து
அல்லது எதிலிருந்து தோன்றியது? அந்தக் கட்சிகள் தங்களது சர்வைவலுக்காக, அந்தக்
கட்டாயத்தின் காரணமாக, உருவாக்கிக் கொண்ட அமைப்பு மக்கள் நலக் கூட்டணி, அந்தத்
தேவை தீர்ந்த பின் அது பலவீனப்படும். அத்தகைய சூழல் ஆளுகைக்கு (Governance)
சிறந்ததாக இருக்க இயலாது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் இல்லாதிருந்த ஞானம் இப்போது
வந்தது போல, இன்றுள்ள மனம் இரண்டாண்டுகளுக்குப் பின் இல்லாதும் போகலாம்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள், நியாயம்
கேட்பது என்பது என்ற நோக்கில் இயங்கி வந்தவை. சமத்துவம், சமூக நீதி, தமிழ்
தேசியம், என்ற கருத்தியல்களுக்கு பன்முகத் தன்மை கொண்ட நம் ஜனநாயக அமைப்பில்
இடமுண்டுதான். ஆனால் அரசு என்பதும் அரசியல் என்பதும் ஒன்று அல்ல. அரசு என்பது
சமுகத்தின் எல்லா அலகுகளையும் ஒருங்கிணைத்து இயங்கும் பொறுப்புக் கொண்டது. அரசியல்
ஒரு கருத்தியல் சார்ந்து இயங்குவது. சுருக்கமாகச் சொன்னால் an activist has only
one agenda. But a government is constrained with many. இந்த வேறுபாட்டை
உள்வாங்கிக் கொள்ளாத, அல்லது ஏற்றுக் கொள்ள மறுப்பதால்தான் ஆம் ஆத்மி ஆளுகையில்
திணறிக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் பதட்டமும், வன்முறையும், நல்லிணக்கம் குன்றிய
சூழலும் நிலவுமானால் அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைச்
சூழலுக்குமே இடையூறாக அமையும்
ஊழல் மட்டுமே அரசைத் தீர்மானிக்கும் அல்லது
நிராகரிக்கும் காரணியாக இருக்கக் கூடாது. ஏனெனில் ஊழல் முதலில் ஒரு கலாசாரப்
பிரச்சினை. அதாவது மக்களின் பங்களிப்போடு நடைபெற்றுவரும் செயல். வேறு வழிகளில்
அதிகாரத்தை வெல்ல இயலாத போது மக்கள் தங்கள் நலம் கருதி உருவாக்கிக் கொண்ட குறுக்கு
வழி. அதற்கு அரசியல் பரிமாணங்கள் உண்டு. காரணம் அது அதிகாரத்தோடும் தொடர்புடையது
என்பதால். அதனால்தான் அதிகாரம் உள்ள எல்லா இடங்களிலும், அரசியல்வாதிகள்,
அதிகாரிகள், (தனியார் துறையில் உள்பட) நீதி மன்றம், அது காணப்படுகிறது. அனுமதி
மறுக்கப்பட்ட இடத்தில் காசு வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பும் காவலாளியோ, கோயில்
குருக்களோ, ஹெல்மெட் போடாதவரை தண்டிக்க முன் வராத போலீஸ்காரரோ, அரசியல் அதிகாரம்
கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் செயல்படும் இடத்தில் அனுமதிக்கவோ மறுக்கவோ
அதிகாரம் உள்ளவர்கள், அந்த அதிகாரத்தின் விளைவு அவர்கள் செய்யும் ஊழல். இந்த எளிய
உதாரணத்தின் மூலம் ஊழல் என்பதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.
எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது. முன்பு
அச்சுதானந்தன் அவரது உறவினர் ஒருவருக்கு ஒதுக்கிய நிலம் தொடர்பாக வழக்குப்
போடப்பட்டது. கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி மீது சுமார் இரண்டு கோடி பெற்றார் என
ஒரு குற்றச்சாட்டு. மது அருந்தும் விடுதிகளை அனுமதித்தார் என ஓர் அமைச்சர் பதவி
விலகி, பின் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றதும் அங்கு நடந்தது. ஆம் ஆத்மி அமைச்சர்
மீது இரு தினங்களுக்கு முன் புகார் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி
அமைச்சரவையிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டார். ஊழலை எதிர்த்துப் பேசும் கட்சி
உறுப்பினர்கள் குறித்து வந்த செய்திகள் இவை.
இவையெல்லாம் சொல்வது ஊழல் என்பது நம் அமைப்பின்
கோளாறு. அதிகாரத்திற்கு வரும் எந்தக் கட்சியும் அதிலிருந்து தப்ப முடியவில்லை. இன்று
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இதுவரை அதிகாரத்தில் இருந்ததில்லை (மேற்கு
வங்கம் கேரளம் தவிர, அங்கு அவை இந்தப் புகார்களுக்கு உள்ளாகியிருக்கின்றன) எனவே
அவை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை ஒர் ஊகத்தின் அடிப்படையில்தான் முடிவு
செய்ய வேண்டும்.
அப்படியானால் எந்த அடிப்படையில் வாக்களிப்பது?
மாநிலத்தின் வளர்ச்சி, தனிநபர் பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி என்பதை
வாக்காளர்கள் மனதில் கொள்வது நல்லது. ஐம்பது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின்
ஆட்சியில் தமிழகம், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், சிறப்பாகவே முன்னேறியுள்ளது.
(ஊழல் இருந்த போதும்) தனிநபர் பொருளாதாரம், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின்
பொருளாதாரம், மேம்பட்டிருக்கிறது. கல்வி, பொருளாதாரம் இவற்றில் நம் தந்தையைப்
போலத்தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் இதற்கு விடை கிடைக்கும்.
திராவிடக் கட்சிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு
வர இந்த வளர்ச்சி ஒரு முக்கிய காரணம்.
வளர்ச்சிக்கான அடித்தளங்கள் முதலில் அமைந்த காங்கிரஸ்
ஆட்சியில் அமைக்கப்பட்டன (இலவசப் பள்ளிக் கல்வி, உள்கட்டமைப்பு, சிறு தொழில்) அவை
திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டன. அதன் மீதான கட்டிடத்தை அதிமுக எழுப்பியது.
அன்றிருந்த தலைமை இன்று தமிழகக் காங்கிரசிடம்
இல்லை. இன்றுள்ள திமுகவும், 70, 80களில் இருந்த திமுக இல்லை.
அதிமுக அரசு, அடித்தள மக்களின் உணவுப்
பாதுகாப்பு, உடல் நலம் பேணல், போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.
பொருளாதார மேம்பாட்டிற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதனை எதிர்க்கும்
கட்சிகளின் தலைமையில் அமைந்த மத்திய அரசு அதன் அரசின் செயல்பாடுகளுக்குப்
பரிசளித்திருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு
முன்பிருந்த மின் தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்ட சிறு தொழில் முடக்கமும் இல்லை.
தண்ணீர் கிடைப்பது கூட பல இடங்களில் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. அங்கொன்றும்
இங்கொன்றுமாக நடந்த ஜாதிச் சண்டைகளைத் தவிர பெரிய அளவில் சமூக அமைதி கெடவில்லை.
அதிமுக ஆட்சிதான் ஆகச் சிறந்தது என்று சொல்வதற்கு
இல்லை. அதிலும் குறைபாடுகள் இருந்தன, ஆனால் இனி அமையும் ஆட்சிகள் இன்றிருப்பதை
விடச் செம்மையாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க
முயற்சிப்பது இழப்பில் முடியலாம்.
2 comments:
அப்படியானால் கடந்த திமுக ஆட்சியை விட இந்த அதிமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறதா? தலைநகர் சென்னையில் நடந்த உருபடியான வளர்ச்சி திட்டம் ஒன்றை சொல்லுங்களேன்? அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல் வடிவம் பெற்றதா? வேளச்சேரி மேம்பால திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் புள்ளி கூட வைக்கவில்லை..
வை.கார்த்திகேயன்
இந்த ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை //அதிமுக ஆட்சிதான் ஆகச் சிறந்தது என்று சொல்வதற்கு இல்லை. அதிலும் குறைபாடுகள் இருந்தன// என்றுதானே எழுதியிருக்கிறேன்? நம் முன் இருக்கும் கேள்வி: இந்தத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது இதைவிடச் சிறந்ததாக இருக்குமா? என்பது. ஆம் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்கான காரணங்கள் புலப்படவில்லை
Post a Comment