Thursday, February 11, 2016

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போனால். . .

பத்ரியின் கட்டுரையை ( http://www.badriseshadri.in/2016/02/blog-post.html ) முன் வைத்து.

மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க பத்ரி சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. ஓர் அரசு எப்படிச் செயல்படும் (Style of functioning) என்பதை அதன் தலைமை யார் என்பதைக் கொண்டே ஊகிக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யாரென்று தெரியாத நிலையில்,  அதற்கு வாய்ப்பில்லை. அந்த நிலையில் அதை ஆதரிப்பது குறித்து எடுக்கப்படும் முடிவுகள் எதிர்மறையான சிந்தனைகள், அல்லது காழ்ப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளாகவே கருதப்பட வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணி ஓர் ஆக்க பூர்வமான மாற்றத்தை நோக்கி, (ஆம் ஆத்மியைப் போல) உருவாக்கப்பட்டதல்ல. அது கடந்த கால தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியால், (அதாவது மக்களின் நிராகரிப்பால்) தேர்தல் பேரங்கள் போதுமான அளவு படியாது போன அதிருப்தியால் உருவான கூட்டணி. அதில் இடம் பெற்றுள்ள கட்சிகள் 2014 மக்களவைத் தேர்தல் வரையில் ஏதோ ஒரு கூட்டணியில் இருந்தவர்கள்தான். அப்போது இல்லாமல் இப்போது, இரண்டாண்டிற்குள், திடீரெனெ ஞானோதயம் எங்கிருந்து அல்லது எதிலிருந்து தோன்றியது? அந்தக் கட்சிகள் தங்களது சர்வைவலுக்காக, அந்தக் கட்டாயத்தின் காரணமாக, உருவாக்கிக் கொண்ட அமைப்பு மக்கள் நலக் கூட்டணி, அந்தத் தேவை தீர்ந்த பின் அது பலவீனப்படும். அத்தகைய சூழல் ஆளுகைக்கு (Governance) சிறந்ததாக இருக்க இயலாது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் இல்லாதிருந்த ஞானம் இப்போது வந்தது போல, இன்றுள்ள மனம் இரண்டாண்டுகளுக்குப் பின் இல்லாதும் போகலாம்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள், நியாயம் கேட்பது என்பது என்ற நோக்கில் இயங்கி வந்தவை. சமத்துவம், சமூக நீதி, தமிழ் தேசியம், என்ற கருத்தியல்களுக்கு பன்முகத் தன்மை கொண்ட நம் ஜனநாயக அமைப்பில் இடமுண்டுதான். ஆனால் அரசு என்பதும் அரசியல் என்பதும் ஒன்று அல்ல. அரசு என்பது சமுகத்தின் எல்லா அலகுகளையும் ஒருங்கிணைத்து இயங்கும் பொறுப்புக் கொண்டது. அரசியல் ஒரு கருத்தியல் சார்ந்து இயங்குவது. சுருக்கமாகச் சொன்னால் an activist has only one agenda. But a government is constrained with many. இந்த வேறுபாட்டை உள்வாங்கிக் கொள்ளாத, அல்லது ஏற்றுக் கொள்ள மறுப்பதால்தான் ஆம் ஆத்மி ஆளுகையில் திணறிக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் பதட்டமும், வன்முறையும், நல்லிணக்கம் குன்றிய சூழலும் நிலவுமானால் அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைச் சூழலுக்குமே இடையூறாக அமையும்

ஊழல் மட்டுமே அரசைத் தீர்மானிக்கும் அல்லது நிராகரிக்கும் காரணியாக இருக்கக் கூடாது. ஏனெனில் ஊழல் முதலில் ஒரு கலாசாரப் பிரச்சினை. அதாவது மக்களின் பங்களிப்போடு நடைபெற்றுவரும் செயல். வேறு வழிகளில் அதிகாரத்தை வெல்ல இயலாத போது மக்கள் தங்கள் நலம் கருதி உருவாக்கிக் கொண்ட குறுக்கு வழி. அதற்கு அரசியல் பரிமாணங்கள் உண்டு. காரணம் அது அதிகாரத்தோடும் தொடர்புடையது என்பதால். அதனால்தான் அதிகாரம் உள்ள எல்லா இடங்களிலும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், (தனியார் துறையில் உள்பட) நீதி மன்றம், அது காணப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் காசு வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பும் காவலாளியோ, கோயில் குருக்களோ, ஹெல்மெட் போடாதவரை தண்டிக்க முன் வராத போலீஸ்காரரோ, அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் செயல்படும் இடத்தில் அனுமதிக்கவோ மறுக்கவோ அதிகாரம் உள்ளவர்கள், அந்த அதிகாரத்தின் விளைவு அவர்கள் செய்யும் ஊழல். இந்த எளிய உதாரணத்தின் மூலம் ஊழல் என்பதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.

எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது. முன்பு அச்சுதானந்தன் அவரது உறவினர் ஒருவருக்கு ஒதுக்கிய நிலம் தொடர்பாக வழக்குப் போடப்பட்டது. கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி மீது சுமார் இரண்டு கோடி பெற்றார் என ஒரு குற்றச்சாட்டு. மது அருந்தும் விடுதிகளை அனுமதித்தார் என ஓர் அமைச்சர் பதவி விலகி, பின் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றதும் அங்கு நடந்தது. ஆம் ஆத்மி அமைச்சர் மீது இரு தினங்களுக்கு முன் புகார் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி அமைச்சரவையிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டார். ஊழலை எதிர்த்துப் பேசும் கட்சி உறுப்பினர்கள் குறித்து வந்த செய்திகள் இவை.

இவையெல்லாம் சொல்வது ஊழல் என்பது நம் அமைப்பின் கோளாறு. அதிகாரத்திற்கு வரும் எந்தக் கட்சியும் அதிலிருந்து தப்ப முடியவில்லை. இன்று மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இதுவரை அதிகாரத்தில் இருந்ததில்லை (மேற்கு வங்கம் கேரளம் தவிர, அங்கு அவை இந்தப் புகார்களுக்கு உள்ளாகியிருக்கின்றன) எனவே அவை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை ஒர் ஊகத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டும்.

அப்படியானால் எந்த அடிப்படையில் வாக்களிப்பது? மாநிலத்தின் வளர்ச்சி, தனிநபர் பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி என்பதை வாக்காளர்கள் மனதில் கொள்வது நல்லது. ஐம்பது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், சிறப்பாகவே முன்னேறியுள்ளது. (ஊழல் இருந்த போதும்) தனிநபர் பொருளாதாரம், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின் பொருளாதாரம், மேம்பட்டிருக்கிறது. கல்வி, பொருளாதாரம் இவற்றில் நம் தந்தையைப் போலத்தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் இதற்கு விடை கிடைக்கும்.

திராவிடக் கட்சிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர இந்த வளர்ச்சி ஒரு முக்கிய காரணம்.

வளர்ச்சிக்கான அடித்தளங்கள் முதலில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டன (இலவசப் பள்ளிக் கல்வி, உள்கட்டமைப்பு, சிறு தொழில்) அவை திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டன. அதன் மீதான கட்டிடத்தை அதிமுக எழுப்பியது.

அன்றிருந்த தலைமை இன்று தமிழகக் காங்கிரசிடம் இல்லை. இன்றுள்ள திமுகவும், 70, 80களில் இருந்த திமுக இல்லை.
  
அதிமுக அரசு, அடித்தள மக்களின் உணவுப் பாதுகாப்பு, உடல் நலம் பேணல், போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதனை எதிர்க்கும் கட்சிகளின் தலைமையில் அமைந்த மத்திய அரசு அதன் அரசின் செயல்பாடுகளுக்குப் பரிசளித்திருக்கின்றன.  ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த மின் தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்ட சிறு தொழில் முடக்கமும் இல்லை. தண்ணீர் கிடைப்பது கூட பல இடங்களில் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஜாதிச் சண்டைகளைத் தவிர பெரிய அளவில் சமூக அமைதி கெடவில்லை.

அதிமுக ஆட்சிதான் ஆகச் சிறந்தது என்று சொல்வதற்கு இல்லை. அதிலும் குறைபாடுகள் இருந்தன, ஆனால் இனி அமையும் ஆட்சிகள் இன்றிருப்பதை விடச் செம்மையாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயற்சிப்பது இழப்பில் முடியலாம்.      

பின் குறிப்பு: முதலில் வெளியான பதிவில் நான் தேர்தல் அறிக்கை வெளியாகவில்லை என எழுத நினைத்து குறைந்த   பட்ச செயல்திட்டம் என்றெழுதிவிட்டேன்அந்தச் சொல்லாடல் நினைவில் தங்கி விட்டதால் வந்த பிழை. அதை திரு முத்து சுட்டிக் காட்டிய பின் அந்தப் பகுதியை நீக்கி விட்டேன்
  

Tuesday, May 13, 2014


online poll by Opinion Stage

online poll by Opinion Stage

Wednesday, December 11, 2013

பாரதியின் குரல்-1

முன் குறிப்பிற்கும் முன்:
இன்று பாரதியின் பிறந்த நாள் . பாரதியின் கவிதைகளைப் பற்றிப் பேசப்படுமளவிற்கு அவரது கட்டுரைகள் கவனிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை முகநூலில் வெளியிட்டு, அவரது கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை நாளை முதல் பகிர்ந்து கொள்ளலாமா எனக் கேட்டிருந்தேன். நாளை முதல் என்ன, இன்றே ஆரம்பியுங்கள் என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். நாக.சொக்கன் வலைப்பதிவிலும் போடுங்கள் என்றார். இதோ போட்டுவிட்டேன்
பாரதியின் குரல்-1


பாரதியின் குரல்-1
சில தேவையான முன் குறிப்புகள்:
நாம் சுதந்திரம் பெற்ற போது நம் நாட்டில் வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது ஆனால் ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தில் பெண்களுக்கு பல ஆண்டுகள் வாக்குரிமை அளிக்கப்படவில்லை. 1872ல் துவங்கி 1918 வரை நடந்த ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின்னரே அவர்களுக்கு அந்த உரிமை கிடைத்தது. வாக்குரிமை கோரி பெண்களே வீதியில் இறங்கிப் போராடினார்கள்
அந்தப் போராட்டங்களை செய்தியை பாரதி விடாமல் பின் தொடர்ந்து வந்தார். “ இங்கிலாந்திலே இப்போது பெண்களுக்கு எலெக்‌ஷன் சுதந்திரம் கொடுக்கலாமா என்பதைப் பற்றிய விவகாரம் வெகு பலமாக நடந்து கொண்டு வருகிறது.மாதர்கள் செய்யும் தொந்தரை கொஞ்சமில்லை. பார்லிமெண்ட் சபைக்குள்ளே புகுந்து கூச்சலிடுவதும் கலவரம் செய்வதுமாயிருக்கிறார்கள்.போலீசார் வந்து வெளியேறச் சொல்லி பலவந்தம் செய்த போதிலும் வெளியேற மாட்டோமென்கிறார்கள். சிறைச்சாலைக்குள் அடைக்கப்படும் வரை இவர்கள் சாந்தம் கொண்டிருப்பதில்லை என்ற நிச்சியத்துடன் இருக்கிறார்கள்” என்று 24.11.1906 இந்தியாவில் எழுதுகிறார் பாரதி. அதற்கு அடுத்த இதழில் (1.12.1906) முதல் பக்கத்தில் இதையடுத்து வந்த செய்திகளை follow up ஆக வெளியிடுகிறார்,
முதல் உலக யுத்தம் முடிந்த பின்பு 1918ல் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுகிறது அதையொட்டி 10.5.1918ல் அவர் எழுதிய கட்டுரை கீழே.
பெண்களும் தேசமும் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது எப்படி அறிவுஜீவி ஆண்கள் வேதாந்த ஆராய்ச்சியிலும் பெண்கள் வெற்று ஜம்பத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை எள்ளலோடு விவரிக்கும் கட்டுரை இது.
கட்டுரையைப் படிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷ்யங்கள்: பத்திரிகை மொழி என்பது காலந்தோறும் மாறக் கூடியது. மேலே உள்ள இந்தியா மேற்கோளில் போலீசார் பலவந்தம் செய்த போதிலும் பெண்கள் வெளியேற மறுக்கிறார்கள் என்ற ஒரு வரி இருக்கிறது. இன்று பெண்களை பலவந்தம் செய்வதென்றால் வேறு அர்த்தம். அதே போல அன்று இந்தியர் என்பதைக் குறிக்க இந்து என்ற சொல் பத்திரிகைகளில் பயன்படுத்தப்பட்டது. எனவே இந்து என வரும் இடங்களில் இந்திய என்று வைத்துக் கொண்டு வாசியுங்கள்
பத்திரிகையாளர்களாக விரும்பும் இளைஞர்களுக்கு : நீங்கள் கீழே வாசிக்கப்போவது பாரதியார் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்திருக்கிற ஒரு புதுவகையான வடிவம் (format) பத்திரிகையாளர்கள் முன் இருக்கிற சவால்களில் ஒன்று வாசகர்களுக்கு அதிகம் தெரியாத அல்லது அக்கறை இல்லாத ஆனால் வரலாற்றில், சமகால அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய செய்தி ஒன்றை வாசகர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும்வகையில் சொல்வது எப்படி என்பது. அதற்கு பாரதியார் கண்டுபிடித்து, இந்தா பிடி என்று நம் கையில் கொடுத்துவிட்டுப் போயிருக்கிற வடிவம் இது. சற்றே நாடகத்தன்மையோடு, இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து அரட்டை அடிப்பது போல கட்டுரை எழுதுவது. அரட்டைக்கு நடுவில் விஷயம் வந்துவிட வேண்டும்.
பாரதியாரின் இந்த வடிவத்தை அவருக்குப் பின் வந்த பலர் தலைமுறை தலைமுறையாக கையாண்டிருக்கிறார்கள். துமிலன் (அப்பளக் கச்சேரி/ஆனந்த விகடன்) சாவி (அரசியல் நிருபரின் சரடு/ஆனந்த விகடன்) ரா.கி. ரங்கராஜன் (கேள்வி நேரம்/குமுதம்) மாலன் (டைனிங் டேபிள்/சாவி, A2Z/புதிய தலைமுறை) எழுதியவர் பெயர் தெரியவில்லை அனு அக்கா ஆன்டி (ஆனந்த விகடன்) இப்படி காலத்திற்கேற்ப பல அவதாரங்கள் எடுத்த வடிவம் இது
இனி பாரதியார்
இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாய் விட்டதென்று சில தினங்களின் முன்பு 'ராய்டர்' தந்தி வந்தது. அதைப் பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலை நானும் என்னுடையசினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி (அதாவது ''ஸ்திரீகளின் ஜயம்''எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில்"எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினிவேதவல்லி அம்மை வந்தார்.
வேதவல்லி அம்மைக்கு நாற்பது வயது. தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம் கொஞ்சம்தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார்உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமதுபத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும் சௌக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்துவருகிறார். வேதவல்லிக்கு அவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம்,யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம் ஒரு கிழவி பார்த்துக் கொள்கிறாள். வேதவல்லி அம்மை புஸ்தகம்,பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவற்றிலே காலங்கழித்து வருகிறார்.
வேதவல்லி வரும்போது நான் ராமராயர் முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்குசங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன் சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச்சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும்பெண்களுக்கு உயர்வையே காட்டும்) வேதவல்லிக்கு நாற்காலி கொடுத்தோம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டு வரச் சொன்னாள். பக்கத்திலிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து "ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே,வேதவல்லி அம்மை 'என்ன சாஸ்திரம் ஆராய்ச்சிசெய்கிறீர்கள்?' என்று கேட்டாள். சங்கரபாஷ்யம் என்றுசொன்னேன். வேதவல்லி சிரித்தாள். 'சங்கர பாஷ்யமா! வெகுஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்றாடப்போய் ''அன்னிபெஸண்ட்''  வலைக்குள் மாட்டிக் கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடையதேசத்து வீராதி வீரராகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப்பொருள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.க்ஷோக்! ஷேக்! இரட்டை ஷேக்!' என்றாள்.
ராமராயருக்குப் பளிச்சென்று கோபம் வந்துவிட்டது.'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்த்திகள் பிறருக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம்' என்றார்.
''இங்கிலாந்தில் ஸ்திரீகளுக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டது'' என்று சொல்லி வேதவல்லி தன் கையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகையை ஏறக்குறைய ராமராயர் முகத்தில் வந்து விழும்படி வீசிப் போட்டாள். ராமராயர் கையில் தடுத்துக் கீழே விழுந்த பத்திரிகையை எடுத்து மெதுவாக மேஜையின் பேரிலே வைத்துவிட்டு தலைக்குமேலே உத்தரத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் இறங்கிவிட்டார். குழந்தை இச்சமயத்தில் ஜலம் கொண்டு கொடுத்தது.வேதவல்லியம்மை இதை வாங்கி சற்றே விடாய் தீர்த்துக்கொண்டாள். ''என்ன  ராமராயரே,! மோட்டைப் பார்க்கிறீரே? மோட்டில் என்ன எழுதியிருக்கிறது. 'ப்ரம்மம் ஸத்யம் லோகம் மித்யை ஆதலால், வித்வான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பதே மேன்மை' என்றெழுதியிருக்கிறதா?''என்று கேட்டாள்.
ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது.கொஞ்சம் மீசையைத் திருகி விட்டுக்கொண்டார். தாடியைஇரண்டு தரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீமதி ஆன்னி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலே தலையிட்டு சுதேசியமே தாரகமென்றும், வந்தேமாதரம் ஒன்றே ஜீவமந்திரம் என்றும் பேசத் தலைப்பட்டது மேற்படி ராமராயருக்குச் சம்மதமில்லை. வேதாந்திகள் எப்போதும் பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும்; லௌகிக விஷயங்களைத் துளிகூடக் கவனிக்கக் கூடாதென்பது அவருடைய மதம்.
வேதவல்லி அம்மை ராமராயரை நோக்கிச்சொல்லுகிறார்:-  'எடுத்ததற்கெல்லாம் ஆன்னி பெஸண்ட்"சொன்னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக் கத்தி கொண்டிருந்தீர். இப்போது அந்த அம்மாள் சுயராஜ்யம் நல்லதென்று சொல்லும்போது அவளைப் புறக்கணிக்கிறீர்! ஐயோ!கஷ்டம்! புருஷ ஜன்மம்!  ஸ்திரீகளுக்குள்ள திறமையிலே நாலிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும் புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள் அதிகம். அதனால் சரீர உறுதி அதிகம் என்று ருஜு வாக்கியாயிற்று; புத்தி அதிகமென்பதுந்தான். ராமாயணத்தில் சீதை பொய் மானை மெய் மான் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தாள் என்றும் எங்கள் வீட்டில் ஒரு தாத்தா நேற்று வந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சீதை சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும் அவளுக்குப் புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன். தாத்தா தலையைக் குனிந்து கொண்டு வாயில் கொழுக்கட்டையைப் போட்டுக்கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை' என்று வேதவல்லிசொன்னாள்.
'ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம்? என்று ராமராயர் சொன்னார்.
வேதவல்லியம்மை சொன்னார்:'அன்னிபெஸண்டுக்கு ஸமானமாக நம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்தஅம்மாள் கவர்னருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்தீரா? அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் பேசுவீரா?'
இதைக் கேட்டவுடன் ராமராயர், ''நான் வீட்டுக்குப்போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லிஅம்மையின் உபந்யாஸம் நடக்கிறது:-
''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் சேர்ந்து "பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலைஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்துப் புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில்வாசித்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப் பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலே தலையிட்டால் அன்னி  பெஸண்டுக்கு ஸமானமாக வேலைசெய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்த விசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும்தான் உபயோகப்படுவார்கள். ராஜ்ய க்ஷேமத்தைக் கருதி தைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமை இத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்கள், பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமே புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும்,தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியானாலும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள் ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள்.
ஹோ! ஹோ! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ்காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப்போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது.ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர் மாத்திரம் போனால் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர்களைக் கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்கமாட்டார்கள். ஆதலால்,காங்கிரஸ் ஸபையார் நமது ஸ்திரீகளை அனுப்புவதே நியாயம்.எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினால் நான் போய் அங்குள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்றாடி இந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண் பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை' என்று சொன்னாள்.
ராமராயர்  'வேறு விஷயம் பேசுவோம்' என்றார்.தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து, அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி, 'நான் இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லையென்றும், இவர் சும்மாயிருக்கவேண்டும் என்றும், ஆரம்பத்தில் செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்துவிட்டார்' என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார்.
நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும்கேட்கவில்லை. ''ராமராயர் இருக்கும் சபையிலே தான் இருக்கலாகாது'' என்று சொன்னாள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக்  கொண்டிருந்தார்.'என்ன சொல்லுகிறீர்?' என்று கேட்டேன். 
ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும்அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னார். பிறகுமறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம்

Friday, November 19, 2010

ஆணுக்கும் அந்த வலி உண்டா?

முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது.

ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது .

எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் ஒன்றுதான்.அது: அன்பு இல்லம்

பலர் நினைப்பது போல பறவைகள் கூடுகளில் தங்குவது இல்லை. மனிதர்களைப் போல கூடுகளில் உறங்கி மறுநாள் விடிந்ததும் வேலைக்குக் கிளம்புவதில்லை. அவை கட்டுவது வீடுகள் அல்ல. விடுதிகள். பிரசவ விடுதிகள். முட்டையிடவும். முட்டைகளுக்குள்ளிருந்து முகிழத்தெழும் குஞ்சுகளுக்கு உணவளிக்கவும், சிறகு முளைக்கும் வரை அவற்றைச் சீராட்டவும் உருவாக்கப்படும் இடம்தான் இந்தக் கூடுகள்.

காக்கையின் கூடுகள் சற்றுப் பெரிதுதான். விட்டம் ஒரடியாவது இருக்கும். முன்பக்கம் முரட்டுச் சுள்ளிகளால் அமைந்திருந்தாலும் உள்ளே இருக்கும் ’கிண்ண’த்தில், மூன்றங்குல ஆழத்திற்கு மெத்து மெத்தென்று வைக்கோல், தென்னை நார், சணல் கயிறு உலர்ந்த இலைகள் இவற்றைக் கொண்ட ஒரு ’மெத்தை’ இருக்கும்.

ஒரு குச்சியைப் பொறுக்கிக் கொண்டு உயரே பறந்த அந்தக் காக்கையைக் கண்ட போது எனக்குள் ஒரு கேள்வி வந்து உட்கார்ந்தது. அந்தக் காக்கை ஆணா? பெண்ணா? தாயா? தந்தையா?

முட்டையிலிருந்து வெளிவந்து மூன்று வாரங்கள் வரை காகங்களுக்குப் பறக்கத் தெரியாது. (முதல் நாள் அதற்குக் கண்ணே தெரியாது) அந்தக் காலங்களில் அங்கும் இங்கும் நகராமல் அம்மா காக்கா அருகிலேயே இருக்கும். அப்பாக் காக்கா உணவு தேடிக் கொண்டுவரும். ஆனால் வீட்டைக் கட்டுவது இருவரும் சேர்ந்துதான் என்கின்றன புத்தகங்கள்.

இயற்கை இந்தப் பறவைகளுக்கு இயல்பாகக் கற்றுக் கொடுத்திருக்கிற செய்திகளை ஆற்றலும் அறிவும் மிக்க மனித குலம் போராடிப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது விளக்கமுடியாத வேடிக்கைகளில் ஒன்று.

காக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த என்னைத் தொலைக்காட்சி அழைத்தது. இயற்கையின் அதிசயங்களிலிருந்து மனிதர்களின் விசித்திரங்களுத் திரும்பினேன். இந்திரா நோயியின் உரையாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இந்திரா இன்று பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி. இந்தியர். சென்னையில் வளர்ந்தவர். ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனத்திற்குப் பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார் என்ற பிரமிப்பிலேயே ஊடகங்கள் அவரைப் பேட்டி கண்டு வந்திருக்கின்றன. இந்தப் பேட்டியும் அந்தக் கோணத்திலேயே அமைந்திருந்தது.

“நீங்கள் மேற்கொள்ளூம் நிர்வாகச் செயல்பாடுகளை ஒரு பெண்ணின் அணுகுமுறை என்பதாகவே உலகம் பார்க்கிறது. அது உங்களை எவ்வளவு எரிச்சலடையச் செய்யும் என்பது எனக்குப் புரிகிறது. ஏனெனில் பெண்களாகிய நாம் தொழில் முறையில் இதை நிறையவே எதிர்கொண்டு வருகிறோம்.” என்று உரையாடலுக்குக் களம் அமைக்கிறார் பேட்டி காணும் பெண். அவர் நாடறிந்த பத்திரிகையாளர் பர்க்காதத்.

”இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை”. என்கிற இந்திரா, தொடர்ந்து “எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிற்து. பெண்ணின் அணுகுமுறை என்பது ஒரு வணிக முயற்சியின் மனிதப் பக்கம்.( the human side of the enterprise,) என்கிறார். ” ஒரு உதாராணம் சொல்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் சொன்ன செய்தி சுவையானது.
“எங்கள் நிறுவனத்தில் இருக்கும் இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஊழியர்களுக்கும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நான் கடிதம் எழுதுகிறேன். வேறு வேலைகளின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதற்காக என் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஒரு பதினைந்து நிமிடம் இதற்காகச் செலவிடுகிறேன்.. இந்தக் கடிதங்கள் ஒரு பக்க அளவில்தான் இருக்கும் ஒரே ஒரு பக்கம்தான். பிசினஸ் விஷயம், சொந்த விஷயம் எல்லாம் அதில் எழுதுவேன். இரண்டு வாரத்திற்கு முன் எழுதிய கடிதம் என் மகளைப் பற்றியது. அவள் இப்போது மேல்நிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கும் முதல் நாளன்று நானும் என் கணவரும், கையில் காமிராவை எடுத்துக் கொண்டு எங்கள் தெருமுனயில் உள்ள ஸ்கூல் பஸ் நிற்கும் இடத்திற்குச் சென்று ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் அவளோடு படம் எடுத்துக் கொள்வோம். இந்த ஆண்டும் அவள் புறப்படும் போது நாங்களும் காமிராவும் கையுமாகக் கிளம்பினோம். அவள் “ அம்மா! நான் இன்றிலிருந்து காரில் போகப் போகிறேன். நானே காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொள்கிறேன்” என்றாள். அவள் இப்போது சிறுமியல்ல, வளர்ந்த ஒரு இளம் பெண் என்பது அப்போதுதான் எங்கள் புத்தியில் உறைத்தது. ஒரு கணம் நிலை குலைந்து போனோம். அவள் எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு ந்டந்தது, நாங்கள் அவளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றி உட்கார வைத்தது, அவள் மூஞ்சியை ’உம்’ என்று வைத்துக் கொண்டு டாடா காட்டியது, பஸ் மெல்ல நகர்ந்து சென்றது எனப் பழைய காட்சிகள் நினைவில் வந்து போயின. ஸ்கூல் யூனிபார்மில் இருந்த அந்தச் சிறுமி என்ன ஆனாள்? இன்று ஒரு இளம் பெண்ணாக ஆகிவிட்டாள். காலம் பறந்து கொண்டிருக்கிறது. நான் இதை என் சக ஊழியர்களுக்கு எழுதினேன். காலம் பறந்து கொண்டிருக்கிறது நண்பர்களே உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். ஏனென்றால் ஒரு சிறுமி இளம் பெண்ணாகி உங்களிடமிருந்து பிரிந்து செல்லும் நாள் வரும் போது உங்கள் உள்ளம் உடைந்து போகும். அதன் பின் இந்த நாட்கள் திரும்பக் கிடைக்காது என்று எழுதினேன். ஒரு ஆண் தலைமை அதிகாரி இதை எழுதியிருப்பாரா?” என்று முடித்தார் இந்திரா. .

சொல்லுங்கள், ஆண் அதிகாரிகள் இப்படி எழுதியிருப்பார்களா? இந்திரா சொன்னதைப் பற்றி ஆண் காகங்கள், -மன்னிக்கவும் - ஆண் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்?

Sunday, November 07, 2010

ஈரம் படிந்த இலக்கியம்

எழுந்திருக்கும் போது வீசி எறிந்த போர்வையைப் போல வீதியெங்கும் ஈரம் ஓர் ஒழுங்கற்றுப் படர்ந்து கிடக்கிறது. தீபாவளிக்கு நீர்ச்சேலை நெய்ய திரண்டு நிற்கின்றன மேகங்கள். எவரும் அழைக்காமலே வந்து நிற்கிறது மழைக்காலம். ”இப்ப இந்த ம்ழையில்லை என்று எவன் அழுதான்” என எரிச்சல்படும் நகரவாசிகள் மீது சரம் சரமாய் பூந்தூறல் தூவிப் புன்னகைக்கிறது வானம்.
கார்காலம் மனதில் கவிதையும் சுரக்கும் காலம். முன்பு எழுதிய வள்ளுவனிலிருந்து இன்று மலர்ந்த புதுக் கவிஞன் வரை மழையைப் பாடாத கவிஞர்கள் எவரும் இல்லை..மழையைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனும் இல்லை. இந்திய இலக்கியத்தின் ஏராளமான பக்கங்களை மழை நனைத்துக் நடக்கிறது. படித்தவற்றில் பல இன்று உலர்ந்து விட்டன. சில இன்னும் வடியாமல் உள்ளேயே தங்கிவிட்டன.

வானத்தினுடைய சிறப்பே மழைதான் என்கிறார் வள்ளுவர். இறைவனுக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் பெற்று அது குறளில் விரிகிறது. இரண்டு வரிகளுக்குள் அவர் தொன்மமும் பேசுகிறார். அறிவியலும் பேசுகிறார். தங்கக் காசின் இரண்டு பக்கங்கள் போல தமிழனின் இரண்டு முகங்கள் இவை.

கடலில் உள்ள நீர் ஆவியாகி, மேகமாகி மழையாக மண்ணுக்குத் திரும்புகிறது என்பது நாம் ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பயின்ற அறிவியல். அதை இரு வரிகளில் இலக்கியமாகச் செய்திருக்கும் அற்புதம் திருக்குறள்.

முற்றும் அறிந்த ஓரு முது அறிஞானகப் பேசுகிறான் வள்ளுவன் என்றால் ஒரு குழந்தையைப் போலக் குதூகலிக்கிறாள் ஆண்டாள். வாளியிலிருந்து குவளை குவளையாக நீரை முகர்ந்து கொட்டுவதைப் போல ஆழியிலிருந்து மொண்டு மழையாகக் கொட்டு என்கிறாள் அவள். வெண்ணையைத் திருடி வாய்க்குள் ஒளித்து வைத்துக் கொண்டதைப் போல கண்ணன் மழையையும் மறைத்து வைத்திருக்கிறானோ என்ற சந்தேகத்தில் “ஆழி மழைக்கண்ணா! நீ ஒன்றும் கை கரவேல்!” என்று ஒரு அதட்டலுடன் ஆரம்பிக்கிறது அவளுடைய பாடல்.

பாரதிக்கோ மழையைக் கண்டால் கன குஷி. என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம், கண்டோம் கண்டோம்’ எனத் தாளங்கள் கொட்டிக் குதித்துக் கொண்டாடுகிறார்.

ஈரம் படிந்த இலக்கியத்தின் பக்கங்களில் எனக்குப் பிடித்த பாடல் ஒரு குடியானவனுடையது. பள்ளுப் பாட்டு என்று எனது பாடப் புத்தகங்கள் சொல்லின. 16ம் நூற்றாண்டில் விவசாயிகள் வளர்த்த இலக்கியப் பயிர் அது.

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி –மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னுதே
என்ற பாடலை நீங்களும் என்றேனும் ஒரு நாள் படித்திருக்கலாம்.

அநதப் பாடலை நடத்திய ஆசிரியை அந்த வகுப்பை ஒரு நாடகக் காட்சி போலவே அமைத்து விடுவார். 'மின்னுதே'வில் 'தே' விற்கு ஓர் அழுத்தம் கொடுத்து தரையை ஓங்கி உதைக்க வேண்டும். மொத்த வகுப்பும் அந்த மாதிரி செய்யும் போது ஒரு tap dance போல இருக்கும். 'கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே' என்னும் போது உய்ய்ய்ய் என்று சப்தமிட்டுக் கொண்டு ஒரு பையன் இடமிருந்து வலமாக ஓடி ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவான். 'சொறித் தவளை கூப்பிடுகுதே' என்னும் போது மாணவிகள் குரலை மாற்றைக் கொண்டு தவளை போல ஒலி எழுப்புவார்கள். குஷியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் கிழக்கே ஈழம். மேற்கே , மலையாளம் இந்த இரண்டு திக்கிலிருந்தும்தான் தமிழகத்திற்கு மழை வர வேண்டும். வடக்கிலிருந்து வராது. அங்கிருந்து எப்போதாவது குளிர்காற்று வீசும். தெற்கிலிருந்தும் அதாவது பொதிகை மலையிலிருந்தும் காற்று வீசும். ஆனால் அது இதமான தென்றல். வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல் என்று தமிழர்கள் பெயர் வைத்தார்கள். மலையாளத்திற்கும் ஈழத்திற்குமாக அதாவது மேற்கிற்கும் கிழக்கிற்குமாக மின்னல் வெட்டுகிறது என்றால் வரப்போவது பெரிய மழையாகத்தான் இருக்கும். அந்தப் பெரிய மழை குறித்துக் கவலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குஷிதான்.

மழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இருப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது.

இயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய 'சந்தோஷத்திற்கு' இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.

ஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்


இந்த தேசத்திற்கு நேர்ந்த இழப்புக்களில் இது மிகப் பெரிது.

Friday, October 22, 2010

சின்ன தேசம் சொனன பாடம்

காலம் வீசி எறிந்த காகிதக் கணை போல வாசலில் வந்து கிடந்தது செய்தித்தாள்..எடுத்துப் பிரித்தேன். கர்நாடகத்தில் இந்திய ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்க காமன்வெல்த்தில் இளைஞர்கள் ஜெயித்துக் கொண்டிருந்தார்கள்.. ஆலம் விதை விழுந்த கோவில் சுவர் போல நம் அமைப்புக்கள் மெல்ல மெல்ல விரிசல் கண்டு கொண்டிருக்கும் அதே வேளையில், காட்டுப் புதர்களில் கண்விழிக்கும் மலர்கள் போல யாருடைய உதவியும் இன்றி நாட்டில் திறமைகள் மலர்ந்து கொண்டிருக்கின்றன.

மழைக்காலத்தில் மாநகரச் சாலைகளில் நடப்பவனைப் போல, விளம்பரங்களுக்கு நடுவே விழுந்து கிடந்த செய்தித் தீவுகளில் தத்தித் தாவி மேய்ந்து கொண்டிருந்தேன்.கண்கள் ஒரு செய்தியில் வந்து நின்றன

பூமிக்குக் கீழே 2000 அடி ஆழத்தில் 69 நாள்களாகச் சிக்கிக் கொண்ட முப்பத்தி மூன்று சுரங்கத் தொழிலாளர்களும் முழுசாக மீட்கப்படட்ட செய்தி சிந்தையைக் கிளறியது. ‘மானுடம் வென்றதம்மா’ என மனம் கம்பனைப் போல மகிழ்ந்து திமிர்ந்தது.

அறுபத்தி ஒன்பது நாள்கள்! அவர்களது உள்ளத்தில் உலவிய உணர்வுகள் என்னவாக இருந்திருக்கும்? என் கற்பனைகள் விரியத் துவங்கின.

அச்சம். அதுதான் முதலில் தோன்ற்யிருக்கும்.ஏனெனில் அவர்கள் இருப்பது இரண்டாயிரம் அடிக்குக் கீழ். கேணிக்குள் வைத்து மூடியதைப் போல மண் சரிந்து வழி மூடிக் கிடக்கிறது.. சுரங்கத்தில் மாட்டிக் கொண்டவர்கள் மீண்டு வந்த சம்பவங்கள் வரலாற்றில் அதிகம் இல்லை. அச்சம் அவர்களை நிச்சயம் தின்றிருக்கும்.

அந்த அச்சத்தை அவர்கள் ஒற்றுமை என்ற உளியால் உடைத்தெறிந்தார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உணமை அவர்களுக்கு உறைத்த நேரத்தில் ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்க முன் வந்தார்கள். உணவைப் பகிர்ந்து கொண்டார்கள். உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு தனிமனிதனாக உள்ளே போனார்கள். நெருக்கடி நேரத்தில் ஒரு குடும்பத்தைப் போல ஒன்றுபட்டார்கள். வெளியேற வாய்ப்பு வந்ததும், நீ போ முதலில் என ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த நேசம் நமக்கு இதைச் சொல்கிறது. அவர்களுக்குள் இளையவராக இருந்தவரை முதலில் அனுப்பியதும், தலைவராக இருந்தவர் எல்லோரையும் அனுப்பிவிட்டுக் கடைசியாக வெளியேறிய்தும் தலைமைப் பண்பை மட்டுமல்ல மனிதப் பண்புக்கும் உதாரணமாக ஒளிர்கின்றன.

வருவார்களா, வந்தாலும் உடலாக வருவார்களா, உயிரோடு வருவார்களா என வெளியே கவலையோடு காத்திருந்தவர்களிடையே கனத்த நம்பிக்கைகளும் உலவின. அவர்கள் அந்தப் பாலைவனத்தில் தங்களது தற்காலிக முகாமிற்கு வைத்த பெயர் “நம்பிக்கை முகாம்” (Camp Hope)

இந்த வெற்றியின் ஆணிவேர் அந்த நாட்டு அரசாங்கம். சுரங்கம் அரசினுடையது. உலகில் தாமிரம் அதிகம் உள்ள நாடு சிலி. சிறிய தேசம். பொருளாதார ரீதியாகத் தலை நிமிர்ந்திருக்கும் லத்தீன் அமெரிக்க தேசம் அது ஒன்றுதான். சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை விரைந்து மீட்டெடுக்க என்ன வழி என அது யோசித்தது, மூன்று நிறுவனங்கள் துளைபோடும் பணியில் இறக்கி விடப்பட்டன. மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு தோண்ட்ட்டும் என அது முடிவு செய்தது.

கிறிஸ்யியன் சயின்ஸ் மானிட்டர் என்ற இதழ், இந்த வெற்றிக்கு ஐந்து காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது. 1.காத்திருந்த குடும்பங்களின் நம்பிக்கை 2.சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்கள் காட்டிய பொறுமை 3.மீட்பிற்குப் பயன்பட்ட உயர்தொழில்நுட்பம் 4.பொறுப்பான அரசாங்கம் 5.உயிர்கள் முக்கியம் பணமல்ல என்ற மனோபாவம்

யோசித்துப் பார்த்தால் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மட்டுமல்ல எந்த நாட்டையும் மீட்டெடுக்க இந்த ஐந்தும் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. காந்தஹாருக்கு விமானம் கடத்தப்பட்டபோது நம்மிடம் இந்த ஐந்தும் இருந்திருந்தால் பின்னாளில் மும்பையில் குண்டுகள் வெடித்திருந்திருக்காது.

உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொருநாளும் நமக்கான பாடங்கள் விரிந்து கொண்டிருக்கின்றன. கற்பது எப்போது?

(புதிய தலைமுறை இதழுக்காக)

Friday, October 15, 2010

வெறும் நாள்களாகும் திருநாள்கள்

என் ஜன்னலுக்கு வெளியே விரியும் வீதி முனை ஒரு வியாபாரத் தலமாகி வெகு நாள்களாகி விட்டது.பழமும் பூவும் விற்கிற அந்த நடமாடும் கடைகள் பண்டிகை நாள்களில் புது வேடங்கள் புனையத் துவங்கும். பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வரும் காலத்தில், ஏரிகளிலிருந்து வாரி வரப்பட்ட களிமண், அச்சுக்களில் அழுத்தப்பட்டு, விநாயக்ராக வடிவம் பெறும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வண்ணக் குடைகளும் ஆனைமுகத்தாருக்கு அருகிலேயே கடை விரித்திருக்கும்.நவராத்திரி நாள்களில் ஜம்மென்று பொம்மைகள் நம்மை வரவேற்கும்.பொரியும், பூசணியும் கூவி விற்கப்பட்டால் ஆயுத பூஜை வந்துவிட்டது என அர்த்தம். தீபாவளிக்குப் பட்டாசுக் கடைகளும், பொங்க்லுக்கு கரும்பும் நாள்காட்டிகள் இல்லாமலேயே நமக்குக் காலத்தை அறிவிக்கும்.

பருவத்திற்கேற்ப பண்டங்களை மாற்றும் இந்த நடைபாதை வணிகர்களின் நம்பிக்கை என்னை நிறையவே யோசிக்க வைதததுண்டு. பண்டிகைக்கால தேவைகள் மீதும், பக்தியைப் பிரகடனப்படுத்த எண்ணும் வாடிக்கையாளரின் ஆவல் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமல்ல, தங்கள் மீதும் வாழ்வின் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அபாரமானது. கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் அடித்தளமாக உள்ள இந்த நம்பிக்கை விற்பனைக்கல்ல. ஆனால் நம்பிக்கை இல்லாது போனால் எந்த விற்பனையும் இல்லை.

நம் நம்பிக்கைகளின் கொண்டாட்டமே நம் பண்டிகைகள். ஒரு காலத்தில் அவை இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் உறவை எண்ணி மகிழும் நன்நாளாக இருந்தன. உழைப்பைப் போற்றவும், ஊரின் ஒற்றுமையைப் பேணவும், கலைகளை கெள்ரவிக்கவும் உகந்த தருணங்களாக அந்தத் திருநாள்கள் திக்ழந்தன.
நனைத்துப் போகும் நதியை நினைத்து மகிழ ஓர் ஆடிப்பெருக்கு..வானத்தில் ஊர்ந்தாலும் இத்தரையில் ஒளிபரப்பும் நிலவுக்கு ஒரு சித்திரைப் பெளர்ணமி.. கரகமும், காலற்ற ’பொய்’ குதிரைகளும் நடம் புரிய்ம் கோயில் கொடை. காவடி கட்டுதலின் வழியாக வாழ்வில் சமநிலையைக் கற்றுத் தரும் வைகாசிப் பால்குடங்கள். ஊர் கூடி இழுத்த தேரில் உட்கார்ந்து வந்த சமூக ஒற்றுமை.. கதிரவனுக்கும், கழனிகளுக்கும், காளைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாக அமைந்த பொங்கல்.. கருவிகளை வணங்குவதற்கு வந்த ஆயுத பூஜை.

எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் ஏதோ அர்த்தம் இருந்தது.. அறிவதற்கும் பகிர்வதற்கும் அந்தப் பண்டிகைகள் வாய்ப்பளித்தன.

இன்று அவை வீட்டில் படுத்துறங்கும் விடுமுறைத் தினங்களாக ஆகிவிட்டன. சாரமற்ற சம்பிரதாயமாக, சிந்தனை அற்ற சடங்குகளாக முடங்கிப் போயின. இல்லையென்றால் கூளங்களைக் களைவதற்காக, குப்பைகளை அப்புறப்படுத்த, அமைந்த போகித் திருநாளில் நாம் டயர்களைக் கொளுத்தி சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்க மாட்டோம்..திருவிழாக்களை மது விழாக்களாகத் திரித்திருக்க மாட்டோம். கம்பீரம் தொனிக்க வேண்டிய கலை அசைவுகளை சீழ் பிடித்த சினிமாப் பாட்டிற்கு ‘ஸ்டெப்’ போட் வைக்கும் சிறுமையாகக் குறுக்கியிருக்க மாட்டோம்..

ஊரோடு கலந்து உற்வாடக் கிடைத்த ஒரு வாய்ப்பை, தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்து, பார்த்துச் சலித்த, அல்லது பார்க்கத் தவிர்த்த படங்களைக் கண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க மாட்டோம்.

இன்று இயற்கையோடு நம்க்கு இருக்கும் உறவை நினைவு படுத்துவது இந்தத் திருநாள்கள் அல்ல. விளக்குகளை அணைத்து வைக்கும் 10 10 10 இருள் நாள்களே...

.இனி ஒரு விதி செய்வோம்

ஓவ்வொரு திருநாளையும், தின்று விளையாடி இன்புற்று இருக்கும் நாளாக மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு உதவும் ஓர்நாளாக மாற்றுவோம். இனி நீர்வளத்தைப் பேண நினைவூட்டுகிற நாளே நமக்கு ஆடிப் பெருக்கு. சமூக நல்லிணக்கதைக் கொண்டாடவே கோயில் கொடை... இயற்கை வேளாண்மைக்கு எடுக்கிற திருவிழாவே பொங்கல். தேசததைத் தின்னும் தீமைகளை வீழ்த்துகிற நாளே தீபாவளி.. எழுத்தறிவற்ற ஒருவருக்கு, அல்லது கணினியைப் பழகியிராத கரங்களுக்கு, கற்றுத் தரும் நாளே சரஸ்வ்தி பூஜை.,. சூழலை மாசு படுத்தாத தொழில்நுட்பத்தை வாழ்த்துகிற நாளே ஆயுத பூஜை..

கடவுள்களை வணங்குவோம். மனிதர்களைப் போற்றுவோம். இயற்கைப் பேணுவோம். இதுவே நமக்குத் திருவிழா.

அமைதி அளித்த தீர்ப்பு

இரவு என் ஜன்னலுக்கு வெளியே இரு கரு மேகங்கள், மோதிக்கொள்ளும் முனைப்போடு நிற்கும் யானைகளைப் போலத் திரண்டிருந்தன. அவ்வப்போது எழுந்து அடங்கிய தூரத்து இடி முழக்கம் அச்ச அலைகளை அனுப்பிக் கொண்டிருந்தது. என்னாகுமோ என்ற கவலை உள்ளம் முழுதும் விரவிக் கிடக்க உறங்கப் போனேன். விடிந்தது. வான் மேகங்கள் வந்த சுவடு இல்லாமல் காணாமல் போயிருந்தன. பூமியெங்கும் வெளிச்சம் பரவியிருந்தது - என் உள்ளத்தைப் போலே

ராமர்-பாபர் வழக்கில் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை விட தீர்ப்புக்குப் பின் தேசம் எப்படியிருக்கும் என்பதே என் கவலையாக இருந்தது. மத உணர்வுகள் மனித உணர்வுகளைத் தின்றபோது சிந்திய இரத்தத்தின் கறைகள் இந்திய வரலாற்றின் வழி நெடுகச் சிதறிக் கிடக்கின்றன. காஷ்மீர் கனன்று கொண்டிருக்கிறது, சின்னப் பூசலையும் பெரும் தீயாக ஊதிப் பெருக்க அன்னிய சக்திகள் ஆர்வத்தோடு காத்துக் கிடக்கின்றன, வாக்கு வங்கிகளைக் காத்துக் கொள்ள அரசியல் வல்லூறுகள் வாய்ப்புக்களைத் தேடி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன, இன்னொரு மதக்கலவரத்தை இந்தியா தாங்குமா? சரித்திரகால் மனிதர்களுக்காக சம்கால் மனிதர்களை வெட்டிச் சாய்க்கிற வெறி வீதிகளை நிறைக்குமோ? வறுமைக்கு நடுவேயும் திறமையால் உய்ர்ந்த் வாலிபனைப் போல இந்த தேசம் கண்டுவந்த் வளர்ச்சி வன்முறைக்கு பலியாகுமோ? கவலைகள் என் மன வானில் கருமேகங்களைப் போல படர்ந்தன்.

அடுத்த நாளே அந்தக் கவலைகள் அர்த்தமற்றுப் போயின. “இரு தரப்பு வக்கீல்களும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தனர் வெற்றி யாருக்கு என்பது விளங்கவில்லை” என்று பத்திரிகைகள் எழுதின. வெற்றி நிச்சயமாக இந்தியாவிற்குத்தான். எந்தவித உரசலுமின்றித் தேசம் இயங்கிக் கொண்டிருந்தது என்பதே அதற்கான சாட்சி. மஸ்ஜித்தா? கோவிலா என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை எங்கள் இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதுதான். மதங்களின் பெயரால் அரசியல் நடத்தவும் அதிகாரம் பெறவும் முயன்ற சில அடிப்படைவாத சக்திகளோ இந்தப் பிரசினையைப் பெரிதுபண்ணி வன்மங்களை வளர்த்தெடுத்தன என்பதை மக்கள் கடைப்பிடித்த அமைதி உரத்த குரலில் சொன்னது. தீர்ப்பு பதற்றத்தை தணித்தது. ஆனால் கேள்விகளை எழுப்பியிருக்கிறது

ஆலமரத்தடியில் அமர்ந்து தீர்ப்புச் சொல்லும் கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பு போல் அமைந்துவிட்டது என்று விமர்சன்ங்கள் எழுந்திருக்கின்றன. ச்ட்டத்தைப் பார்க்கவில்லையென்றும், சரித்திரம் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் முணுமுணுப்புக்கள் முளைத்திருக்கின்றன.

இது ராமர் பிறந்த இட்ம்தான் எனக் குறிப்பிடுவதன் மூலம் இந்துக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது. எந்த வழிபாட்டுத் தலத்தையும் இடித்து மஸ்ஜித் கட்டப்படவில்லை எனச் சொல்லியிருப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் கருத்தையும் அது ஏற்றிருக்கிறது. சட்டவிதிகளும் சரித்திரமும் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கைகள் கெளரவப்படுத்தப்பட்டிருகின்றன..பட்டை கட்டிய குதிரையைப் போல சட்டததை மாத்திரம் பார்த்து உண்ர்வு ரீதியான இந்தப் பிரசினைக்கு ஒரு தீர்வு சொல்ல முற்பட்டால் அது அமைதிக்கு எதிரான தீர்ப்பாக நல்லிணக்கத்தைக் கெடுக்கிற தீர்ப்பாக ஆகியிருந்திருக்கக் கூடும். நாட்டின் அமைதியைவிடச் ச்ட்டங்களோ சரித்திரமோ முக்கியமானவை அல்ல. இன்றைய இந்தியாவிற்குத் தேவை இதயம். வெறும் மூளைகள் அல்ல

சகோதரர்களுக்குள் சண்டை வேண்டாம் இருப்பதைப் பங்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருப்பதன் அடிநாதம் சர்ச்சைகள் முடங்கட்டும், ச்மரசம் நிலவட்டும் என்பதுதான்.

அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய சமரசத்தை, மதவாதிக்ளால் ஏற்படுத்த இயலாத சமரசத்தை நீதிமன்றம் ஏற்படுத்த முனைந்திருக்கிறது. அதற்காக நாம் அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

அயோத்தி மட்டுமே இந்தியா அல்ல. அது அதைவிடப் பெரியது. கடந்த கால கசப்புகளை மறந்து நிகழ்கால நிஜங்களை ஏற்று எதிர்காலத்தை நோக்கி இந்தியாவை இட்டுச் செலல் வேண்டிய் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை நினைவூட்டமட்டுமல்ல, நிறைவேற்றியும் இருக்கிறது நீதி மன்றம். அமைதிக்குப் பங்களிக்க்ச் சொல்லி அழைக்கிறது காலம். அதற்குச் செவி கொடுப்போம்.

நேரம் இதுதானா?

என் ஜன்னலுக்கு வெளியே எழும் ஓசைகளேப் பல நேரங்களில் என்னை விழிப்படையச் செய்திருக்கின்றன. சற்றே கூவும் ஒற்றைக் குயிலின் ஓசைகளாகவே அவை எப்போதும் இருந்ததில்லை. சேவல்கள் சென்னையிலிருந்து விடைபெற்றுச் சென்று வெகு நாட்களாகிவிட்டன. சண்டையிடுவதைப் போல சர்ச்சிக்கும் காக்கைக் குரல்களைக் கேட்டுக் கண்விழிக்கும் காலைகளே வழக்கமாகிவிட்டன. இரைந்து கரையும் இந்தக் காக்கைகளை நாடாளுமன்றத்திலே அமர்த்திப் பார்த்தார் பாரதி. எனக்கென்னவோ இன்று இந்தக் காக்கைகள் ஊடக்ங்களுக்குள்ளே வந்து உட்கார்ந்து கொண்டு விட்டனவோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது.

காமன்வெல்த் போட்டிகள் குறித்து ’தேசிய’ ஊடகங்களில் நடைபெறும் ’விவாதங்கள்’ ‘சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர், மிகச் சலிப்புத் தருகிறத்டி சகிப் பெண்களே’ என்ற மகாகவியின் வார்த்தைகளை நினைவிற்குக் கொண்டு வ்ருகின்றன.

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் என்பதில் மறுப்பேதுமில்லை. அதைச் சுட்டிக் காட்ட வேண்டியது ஊடகங்களின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு செயற்கைக் கூரையிலிருந்து நான்கைந்து தெர்மகோல் துண்டுகள் பிரிந்து விழுந்து விட்டதை அரங்கின் கூரையே இடிந்து விழுந்து விட்டதைப்போல மிகைப்படுத்திப் பரபரப்பு ஏற்படுத்துவது ஊடகங்களின் பொறுப்புணர்வைக் காட்டவில்லை. நடைபாதைப் பாலம் சரிந்து விழுந்ததை ஏதோ நாடே சரிந்துவிட்டததைப் போல விவரிப்பது அத்தனை ஆரோகியமானதில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில சில நீர் கசிவதாகவும், சுகாதாரமற்ற பராமரிப்போடும் இருந்திருக்கக் கூடும் மறுக்கவில்லை..ஆனால் எல்லா குடியிருப்புகளுமே அப்படி இருப்பதைப் போல சித்தரிப்பது முறையானதல்ல.

எதிர்மறையாகச் செய்திகள் வெளியிட்டுப் ஏதோ தீப்ப்பிடித்ததைப் போன்ற பரபரப்பை ஏற்படுத்துவது துரதிருஷட்வச்மாக நம் ஊடகங்களின் வழக்கமாகிவிட்டன.ஆனால் வியாபாரப் போட்டி விளைவிக்கும் வெற்று ஆரவாரங்கள், தேசத்தைத் தின்றுவிட அனுமதிக்கலாமா? காமன்வெல்த் போட்டிகள் குறித்த எதிர்மறையான செய்திகளை வெளியிட ஊடகங்கள் தேர்ந்தெடுத்த நேரம் சரியானதுதானா?

போட்டிகளில் பங்கேற்ற்க அயல்நாடுகளில் அணிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம் அது. ஊடகங்களின் ஓலத்தைக் கேட்டுப் போட்டிக்கே போகவேண்டாம் என அவை ஒதுங்கிக் கொண்டுவிட்டால், அவமானம் யாருக்கு? இந்தியாவிற்கு, என்பது எந்தச் சின்னக் குழந்தைக்கும் தெரியும்.
ஒரு தேசத்திற்கு ஏற்படும் அவமானம் என்பது அதன் ஒவ்வொரு பிரஜைக்கும் ஏற்படும் அவமானம்

இன்னொருபுறம், இந்தமுறை சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் பதக்கங்களைக் குவிக்கத் இந்திய வீரர்கள் தங்களைப் பட்டைதீட்டிக் கொண்டிருந்த இறுதிக் கணங்களும் இவைதான். போட்டிகளையே கேலிக் கூத்தாகச் சித்தரிக்கும் செய்திகள் நிச்சியம் அவர்களின் செஞ்சுறுதியைக் குலைக்கும்.

காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்கங்கள் அமைப்பதில் அளவு கடந்த காலதாமதம் ஏற்பட்டது உணமை. ஆனால் அந்தத் தாம்தத்தைக் கடைசி நிமிடம்வரை கண்டு கொள்ளாமல் மெள்னம் சாதித்த ஊடகங்கள் இப்போது ஏன் உரத்து முழ்ங்குகின்றன? இத்தனைநாள் இதுகுறித்து ஊடகங்கள் சாதித்த கள்ள மெளனம் அவையும் கடமை தவறியதன் அடையாளம் அல்லவா? கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வ்ரும் வேலைகள் சுணங்கியபோதெல்லாம் செய்தி வெளியிட்டிருந்தால் அவை வேலைகளை விரைந்து முடிக்க உதவியிருக்கலாம். இன்னும் சில நாள்கள் என்னும் நிலையில் எழுப்பப்படும் குரல்களால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?ஊடகங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகம் இந்தக் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவின் போட்டியாகத்தான் எண்ணுகின்றன. போட்டியில் நாம் பெறுகிற பதக்கங்களைவிட, போட்டியை நாம் எப்ப்டி நடத்துகிறோம் என்பதில்தான் நம் கெள்ரவம் இருக்கிறது.

இந்தியர்களைப் பற்றி எப்போதுமே ஒரு விமர்சனம் உண்டு. தனித் தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு இந்தியரும் அபார ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் அவர்களிடையே ஒரு அணியாக இணைந்து செயல்படும் இணக்கம் கிடையாது. என்று உலகம் நம்மைப்பற்றி எடை போட்டு வைத்திருக்கிறது. அது உண்மைதானோ என்பதைப்போல காம்ன்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் தொடர்புள்ள பல அமைச்ச்கங்களுங்கிடையே ஒற்றுமை உணர்வு இல்லை, அமைச்ச்கங்களும் அதிகாரிகளும ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதைப் போல பிரதமரே பேசியிருக்கிறார்.

இந்தியாவின் இன்னொரு பலவீனம் என உலகம் எண்ணுவது நாடு முழுக்கப் புரையோடிப் போயிருக்கும் ஊழல். இதுவும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியிருக்கக் கூடும். அப்படியிருந்தால் அவை அம்பலப்படுத்தப்பட வேண்டும், அரங்கிற்குக் கொண்டு வந்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால் அதெல்லாம் அப்புறம். விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பின்னால்.

ஊழல், ஒற்றுமையின்மை என்ற இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா நிமிர்ந்து நிற்க வேண்டிய தருணம் இது. உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு திருவிழா நம் பொறுப்பில் நடக்கவிருக்கிறது, சின்ன சின்ன ப்லவீனங்களைப் ஊதிப் பெரிதுபடுத்தாமல் ஊடகங்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசமும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.


.

.