Thursday, March 17, 2005

வினாக்களும் விளக்கங்களும்

கருப்பை அரசியல் பற்றிக் கருத்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களில் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விடைகளைக் கீழே கொடுத்திருக்கிறேன்: விளக்கங்கள் நீண்டு விட்டதனால் தனிப் பதிவாக எழுத வேண்டியதாயிற்று.

>>தங்களது கட்டுரையின்படி - பெண்கள் தங்களது மேலாதிக்கம்... குறைந்தபட்சமாக சமநிலையை இழந்தது, இந்த கட்டத்தில்தான் என்று புரிகிறது. ஆனால் அந்த மாற்றம் நடந்தது எப்போது? அதை பெண்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? தனது பெண்டு, பிள்ளைகளிடமே, அதுவரையில்லாத ஒரு அரசியல் பண்ணத் தொடங்கிய அந்த தந்தை வம்சம் யார்? அதற்கான நெருக்கடி என்ன? எப்படி இதை மற்ற பகுதிகளுக்கும் அவர்கள் பரப்பினர்? இந்த கட்டுரையைப் படிக்கும்போதே... இப்படி பல கேள்விகள் என்னுள் எழுகிறது. தௌதவான, ஒரு argument வைக்கும் நீங்கள் - அந்த மாற்றம் பற்றி மேல்
தகவல்களையும் தந்தால் மகிழ்வோம்<< -
சந்திரன்

சந்திரன், மாற்றங்கள் திடீரென்று ஒரு நாளில் நடந்துவிடவில்லை. இவை ஒரு தனி
நபரால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அல்ல. இது எப்படி நேர்ந்தது என்பது ஒரு நீண்ட கதை. சுருக்கமாக, என்னால் முடிந்தவரை தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன்:

ஆதி சமூகத்தில் உணவு தேடுவது ஒன்றுதான் முக்கிய வேலை. இதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று மற்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது.மற்றொன்று இயற்கைதரும் காய் கனி கிழகங்குகளை உண்பது. வேட்டையாடுவது, குறிப்பாக ஈட்டி போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ஆண்களின் முதன்மைத் தொழிலாகவும், உணவு சேகரிப்பது பெண்களின் வேலையாகவும் இருந்தது. வேட்டையாடுவது பின்னாளில் விலங்குகளை வளர்ப்புக்குக் கொண்டு சென்றது. உணவு சேகரிப்பது விவசாயத்திற்கு இட்டுச் சென்றது.

வேட்டை முக்கியத்துவம் பெற்றிருந்த நாள்களில் ஆணுக்கு முக்கியத்துவம் இருந்தது. வேட்டையாடுவது போன்ற கடினமான முயற்சிகளில்லாமல், விவசாயத்தின் மூலம் பசியாறலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, பெண்ணின் கை ஓங்கியது. ஏனெனில் விவசாயம் பெண்ணின் கண்டுபிடிப்பு.

ஆண்கடவுள்களின் கையில் ஆயுதங்களையும்- அதிலும் வேட்டையாடுவதற்கான ஆயுதங்களான வில், வேல், போன்றவற்றையும்- பெண் தெய்வங்களின் கையில் பூ,தான்யக் கதிர் போன்றவற்றைப் பார்க்கலாம். ( சூலம் ஏந்திய காளி பிற்காலப் படைப்பு) கடவுள்கள் மனிதர்களின் பிரதிபலிப்புத்தானே?

விவசாயத்தை விட விலங்குகளை மேய்த்துப் பராமரித்து வாழ்வது உழைப்பு ரீதியாக
எளிதாக இருப்பதைக் கண்டு சமூகம் அந்த திசையில் வளர்ச்சி கண்டது. மேய்ச்சல்
சமூகத்தில் மிண்டும் ஆண்களின் கை ஓங்கிற்று. இதுதான் ரிக் வேத காலம். ரிக்
வேதர்களுக்கு மேய்ச்சல் முதன்மையாகவும், விவசாயம் இரண்டாம் பட்சமும் ஆயிற்று.

அவர்கள் விவசாயத்தை வெறுக்கவும் செய்தனர். இனக் குழ சண்டையில் தோற்றவர்களே விவசாயத்தை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். இதனால் விவசாயம் 'தாழ்ந்த' தொழிலாயிற்று. விவசாயத்தை கண்டுபிடித்த பெண்களும் இரண்டாம் நிலையினர் ஆயினர். விலங்குகள் பராமரிப்பு, அதற்குத் தேவையான மேய்ச்சல் நிலம், அதன் மீதான உரிமை இவை ஆண்கள் கையில் பொருளாதார பலத்தைச் சேர்த்தன. அந்த பலம் ஆணதிக்க சமூகத்தை நிலைநிறுத்த உதவியது.

>>அது சரி, புத்தர் ஏன் பெண்களுக்கு துறவறம் வேண்டாமென்றார் ? அவர் காலம்
வரும்போது ஏற்கனவே ஆண்கள் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டதா? பெண்கள் துறவறம்
மேற்கொள்ள லாயக்கில்லை என்று அவர் நினைத்தாரா?மனிதர்களிடையே வித்தியாசம் பாராட்டாதவர் என்றுதான் அவரை பற்றி நினைத்திருந்தேன்
.<< - அருணா

வேத காலத்து சமூகத்தின் சாதிய, பால் ஒடுக்குமுறையின் விளைவாக எழுந்த மாற்றுக் கோட்பாடு பெளத்தம். புத்தரின் காலம் கிமு 5-6 நூற்றாண்டுகள்.

ரிக்வேதத்தின் ஒரு பகுதியாக புருஷ சூக்கத்திலேயே சாதி பேதங்களும், மனு ஸ்மிருதியின் மூலம் பால் பேதங்களும் நிறுவப்பட்டுவிடுகின்றன.

வேதங்கள் ஏற்படுத்திய பேதங்களின் விளைவாக, வேதத்திற்கு மாற்றாகத் தோன்றியது தந்திரம். வேதம் ஆண் தத்துவத்தை முன்நிறுத்துகிறது ( புருஷார்த்தம்) தந்திரம் பெண்தத்துவத்தை முன் வைக்கிறது (பிரகிருதி) வைதீகம் தூய ஆன்மாவைத் தேடியது. தந்திரம் உடலை முன்நிறுத்தியது.( தேக தத்துவம்) உடலில் உள்ளதே உலகில் உள்ளது, உலகில் உள்ளதே உடலில் உள்ளது, மனிதர் உடலின் மர்மத்தை அறிந்தால் இயற்கையின் ரகசியத்தை அறியலாம், மனிதர் பிறக்கும் முறையிலேயே இயற்கையும் பிறந்தது என்பவை தேக தத்துவத்தின் ஆதார கருதுகோள்கள். வேதியல் (ரசவாதம்), வேளாண்மை, இயற்கை மருத்துவம், யோகா இவையெல்லாம் தந்திர மரபிலிருந்து கிளைத்தவை.

வருணப் பிரிவுகளையும், பிராமணர்கள் மேலானவர்கள் என்பதையும் ஏற்க மறுத்தது தந்திரம். வேள்வியை ஏற்க மறுத்தது. விதவை என்ற கருத்தாக்கத்தை நிராகரித்தது.திருமணம் என்பது கற்பனை என்றது. ஆண் பெண்தான் நிஜம், அவர்கள் உறவிலோ, விலக்கிலோ தவறில்லை; இன்னாருக்கு இன்னார் கணவன் மனைவி என்ற வரம்பில்லை என்றெல்லாம் வாதிட்டது.

நாளடைவில் அது உடலின்பத்தை முதன்மைப்படுத்துகிற சடங்குகள் கொண்டதாக மாறிப் போயிற்று.

பின் வந்த பெளத்தம் வைதீகம் தந்திரம் என்ற இரண்டையுமே மறுத்தது.வேதமரபின் வேள்வி முறையை நிராகரித்தது; தந்திரம் முன்வைத்த உடலின்பத்தை மறுத்து துறவறத்தை வலியுறுத்தியது. பெளத்தத்தின் பெரிய கவர்ச்சி அதில் காணப்பட்ட சமத்துவம். ஆரம்பத்தில் புத்தர் பெண்களின் துறவை முழு மனதோடு ஏற்கவில்லையென்றாலும் ( அது ஏன் என்று பின்னர் சொல்கிறேன்) அவர் அவர்களை மறுக்கவவில்லை. அதே போல ஜாதி பேதம் பார்க்கவில்லை. புத்தருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் உபாலி. இவர் நாவிதர் வகுப்பை சேர்ந்தவர். சத்தி என்று ஒரு சீடர் இருந்தார் அவர் மீனவர். நந்தா என்பவர் இடையர். ஆனந்தர், ராகுலர், அநிருத்தர், ஆகிய மன்னர்களும், சாரிபுத்தா, கச்னா ஆகிய பிராமணர்களும் கூட அவரது சங்கத்தில் இருந்தனர். சுனிதா என்ற நகரசுத்தித் தொழிலாளியின் பெண்ணும், சுபா என்ற கொல்லன் மகளும் கூட அவரது சங்கத்தில் இருந்தனர்.

பெளத்தம் சங்க வாழ்வை அடிப்படையாகக் கொண்டது சங்கம் என்பது Congregation அல்லது commune மாதிரி. அதற்குள் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. ஆனால் புத்தர் சங்கத்திற்கு வெளியே, சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முயற்சிக்கவில்லை என்பது அவர் மீது சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு.

மன்னன் பிம்பிசாரன் வேலுவனம் என்ற பூங்காவை புத்தருக்கு பரிசாகத் தந்தான். அதுதான் புத்தர் ஏற்றுக் கொண்ட முதல் கொடை. அதற்குப் பின் பலர் அதே போலக் கொடைகளை அளிக்க முன் வந்தார்கள். அந்த பிந்தகன் என்ற ஒரு வணிகன் ஜேதவனம் என்ற இடத்தை புத்தருக்குக் காணிக்கையாகத் தரவிரும்பினான். அது ஜேதகுமாரன் என்பவனுக்கு சொந்தமானது. வணிகனின் ஆர்வத்தைக் கண்ட ஜேதன், அந்த இடம் முழுவதையும் பணத்தால் நிரப்ப வேண்டும். அதுதான் அந்த இடத்திற்கு விலை என்று சொன்னதாகவும், வணிகன் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் அந்த நிலத்தில் பரப்பி அடுக்கி அந்த நிலத்தை வாங்கி புத்தருக்குக் கொடுத்தான் என்றும் ஒரு கதை உண்டு.

இது போன்ற பரிசுகள் காரணமாக புத்தர் அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் சாதகமாக நடந்து கொண்டார் என்று அவரைக் குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, போரில் ஈடுபடுவதன் மூலம் பலரைக் கொல்கிறோம், பல தீமைகளை செய்கிறோம், அவற்றுகெல்லாம் பிராசியத்தம் சங்கத்தில் சேர்ந்து நல்ல காரியம் செய்வதுதான் என்று பல போர்வீரர்கள் பிக்குகளை நாடி வந்தார்கள். இப்படிப் பலர் படையை விட்டுப் போய்விட்டதால், தளபதிகள் அரசனிடம் போய் முறையிட்டார்கள். அரசு ஊழியத்தில் இருப்பவர்களைத் தடுத்தால் அவர்களுக்கு என்ன தண்டனை என்று நீதிபதிகளிடம் கேட்டான் அரசன். தடுத்தவனின் தலையை வாங்குவதுதான் தண்டனை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசன் பிம்பிசாரனுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. அவன் புத்தரிடம் போய் அரசு ஊழியத்தில் உள்ளவர்களுக்கு தீட்சை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான்.பின் வந்த ஒரு பிரசங்கத்தில் புத்தர் பிக்குகளிடம் அரசு ஊழியர்களுக்கு தீட்சை தர வேண்டாம், மீறினால் குற்றம் செய்தவர் ஆவீர்கள் என்று பிக்குகளை எச்சரித்தார்.

அதே போல கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த முடியாது போனால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்பட்க் கடனை செலுத்த முடியாதவர்கள் சங்கத்தில் சேர்ந்தார்கள். அவர்களைக் கைது செய்ய வந்தால், சங்கத்தில் இருப்பவர்களைத் துன்புறுத்தக்கூடாது என்பது அரசன் பிம்பிசாரனின் கட்டளை என்பதைச் சுட்டிக் காட்டி, காவலர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள். இதனால் வணிகர்கள் புத்தரிடம் முறையிட்டார்கள். புத்தர் கடனாளிகளை சங்கத்தில் சேர்க்கக் கூடாது என்று உத்தரவிட்டார் ( ராகுல சாங்கிருத்தியாயன்)

இந்த சங்கம் என்ற அமைப்பு காரணமாகத்தான் புத்தர் பெண்களுக்கு துறவறம் தர தயங்கி இருக்க வேண்டும். துறவற ஒழுங்கு கெட்டுவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். அல்லது நாளடைவில் தந்திரா மரபைப்போல மூல நோக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியிருக்கலாம்.

>> ஸ்ரீவசனபூஷணம் எனும் புத்தகத்தில் கண்ணன் பாஞ்சாலிக்கு சரணம் கொடுத்த பொழுதில் அவள் மாதவிடாயாக இருந்தாள் என வரும். எனவே இறை ஒழுக்கத்திற்கு இது தடையல்ல என்று வைணவம் சொல்கிறது<< - கண்ணன்

பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது அவள் தனது மாதவிடாய்க் காலத்தில் இருந்தாள் என்றுதான் பாரதியும் சொல்கிறார். சூதில் பாண்டவர்கள் தோற்றதும், பாகன் ஒருவனை அந்தப்புரத்திற்கு அனுப்பி பாஞ்சாலியை அழைத்து வரச் சொல்கிறான் துரியோதனன். பாஞ்சாலி வர மறுத்து விடுகிறாள். இனி பாரதி:

நன்று மனத்திடைக் கொண்டவன்- சபை
நண்ணி நிகழ்ந்தது கூறினான்

மாதவிடாயிலிருக்கிறாள் அந்த
மாதரசென்பதுங் கூறினான் - கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் -

என்று போகிறது பாஞ்சாலி சபதம்.

>>ஆசாரம் என்பதை யார் அதிகம் கடைபிடிக்கிறார்கள்..? << - மூர்த்தி

பெண்கள் பூசாரிகள் ஆவதற்கு இந்து/ பிராமணீய மரபில் மட்டுமல்ல, கிறிஸ்துவத்திலும் எதிர்ப்பு எழுந்த்து. போப்பாண்டவர் ஒரு அறிக்கையே வெளியிட்டார். இஸ்லாமிலும் அனுமதி இல்லை என நினைக்கிறேன். அவசியம் என்றால் அதைப் பற்றி அவகாசம் கிடைக்கும் போது இரண்டொரு நாளில் எழுதுகிறேன்.

4 comments:

Thangamani said...

மாலன், பெண்கள் வேட்டைத்தொழிலைக் கைவிட்டு மெள்ள விவசாயத்திற்கு மாறினதற்கு, குழந்தைப்பிறப்புக்கு முந்தியும் பிறகும் அவர்கள் ஓய்வெடுக்கவும், வேட்டையாடுதலை விடுத்து குழந்தையோடு இருக்க நேர்ந்ததுமாக இருக்குமென நினைக்கிறேன். அதோடு தாவர உணவுவகைகளை, தானியங்களை நீண்டநாள் சேமித்து வைத்து மேற்சொன்ன காலங்களில் பயன்படுத்திகொள்ள முடியும் என்பதாலுமாக இருக்கலாம்.

பாலாஜி-பாரி said...

புத்தருக்கு உண்டான வெளி அழுத்தங்கள்
பற்றி நல்ல பல குறிப்புகள் தந்தற்கு நன்றிகள்.
`வால்காவிலிருந்து கங்கை வரை`(ரா.சாங்கிருத்யாயன்) ஒரு உண்மைகள்
கலந்த புனைவானாலும் அது சில முக்கிய குறிப்புகளை கொண்டிருக்கும்.
மீண்டும் நன்றிகள்!!

Moorthi said...

தங்களின் அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன் அண்ணா.

Chandravathanaa said...

மாலன்
நேற்றைய உங்கள் பதிவுக்கான பதிலையும், எனது சந்தேகங்களையும் எழுதி விட்டு
எத்தனையோ முறை முயன்று பார்த்தேன். Blog அதை ஏற்க மறுத்து விட்டது.
இன்று எனது அந்தப் பின்னூட்டத்துக்கே அவசியமில்லாத படி உங்கள் பதில் அமைந்துள்ளது.
நன்றி. இந்தக் காலத்தினூடான மாற்றங்கள் பற்றி இன்னும் அறிய வேண்டுமென்ற ஆவல் எனக்கு.
தேடுகிறேன்.
நட்புடன்
சந்திரவதனா