Tuesday, March 01, 2005

பெரியண்ணன் கண்காணிக்கிறார்

என்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னதையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன.நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்நாளில் கணினியைக் கண்ணால் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். எழுத்துலகில் நோபல் பரிசு புக்கர் பரிசு, புலிட்சர் பரிசு ஆகிய சர்வதேச பரிசுகளை வென்றவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருக்கிறார்கள். தன்னுடைய பெயரையைக் கூட எழுதத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். ஒரு கப் காபிக்கு 40 ரூபாய் கொடுக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். 40 ரூபாய் சம்பாதிக்க ஒருநாள் முழுக்க உழைக்க வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஒரு தலைவலிக்கு உடல் முழுக்க ஸ்கேன் செய்து பார்த்துவிடும் வசதிகள் நகர்புறத்தில் உண்டு. உயிர் போகும் நிலையில் கூட மருத்துவ வசதிகள் இல்லாத கிராமங்களும் உண்டு.

இந்த இரண்டாவது இந்தியாவைப் பற்றி படித்தவர்கள் கவலைப்படுவதில்லை. பட்ஜெட் என்று வந்தால் வருமானவரி குறையுமா? வங்கி டெபாசிட்டிற்கு வட்டி கூடுமா? டெலிவிஷன் பெட்டிக்கு விலை குறையுமா என்றுதான் நடுத்தர வர்க்கம் கவலைப்படுகிறது.
இந்த பட்ஜெட் கிராமப்புற வளர்ச்சிக்கு உந்துதல் தர முனைகிறது. வெறும் வளர்ச்சி என்று பொத்தாம் பொதுவில் பேசாமல், இத்தனை வீடுகள், இத்தனை டெலிபோன்கள், இத்தனை ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம், இத்தனை பேர் குடியிருக்கும் கிராமங்களுக்கு சாலைகள் என்று பேசுகிறது. அதை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது. ஒரு திட்டத்தை (Project) வணிக நிறுவனங்கள் அணுகுவதைப் போல அணுகுகிறது.ஆனால்-இந்தத் திட்டங்களை மாநில அரசின் வழியாகத்தான் நிறைவேற்ற முடியும். நம் அரசமைப்பு அப்படி. மாநில அரசுகள் இதை அரசியலாக்கினால் இது குட்டிச்சுவராக வாய்ப்புண்டு. இதில் பஞ்சாயத்துக்களை ஈடுபடுத்தப்போவதாக சொல்லியிருக்கிறார். நல்ல எண்ணம். நேரடியாகவே பஞ்சாயத்துக்கள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கலாம். ஆனால் அதை அரசியல் கட்சிகள் அனுமதிக்காது.

இந்தியாவின் பிரசினை delivery at the last mile. கடைசிக் கைக்கு எப்படி ரொட்டியை கடத்துவது என்பதைக் குறித்து பேசுகிறோம், பேசுகிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோம். போன பட்ஜெட்டில் நி.அ இதைப் பற்றி பேசினார். இந்த முறையும் சில வார்த்தைகள் சொன்னார். civil society அரசுக்கு இதைப்பற்றி ஆலோசனை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். ("Civil society should also engage Government in a healthy debate on the efficiency of the delivery mechanism."-FM Budget speech para 100)பிரதமர் தரமான நடைமுறைப்படுத்தல் (Quality implementation) பற்றி மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். சிலமாதங்களுக்கு முன் இந்தியா முழுவதிலும் உள்ள IAS அதிகாரிகளை அழைத்துப் பேசினார். இப்போது நி.அ "At the same time, I must caution that outlays do not necessarily mean outcomes. The people of the country are concerned with outcomes." என்கிறார். எல்லோருக்கும் பிரசினை என்னவென்ரு தெரிந்திருக்கிறது. தீர்வு என்னவென்றுதான் தெரியவில்லை.

இந்த பட்ஜெட்டின் இன்னொரு ஆக்கபூர்வமான அம்சம் நுண்கடனுக்கு அரசு அளிக்க முன் வந்திருக்கும் ஊக்கம். வங்கிகளோடு நுண்கடன் அமைப்புகளுக்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவை வெளிநாட்டில் நிதி திரட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பற்றி மேலும் அறிந்து கொள்ள அருணா ஸ்ரீநிவாசனின் இம்மாத திசைகள் கட்டுரையைப் பார்க்கவும்.

அருணா, நீங்கள் சொல்வது போல 50000 செலவுக்கு 50050 எடுக்க வேண்டியதில்லை. அந்த 50 ரூபாயை உங்கள் கணக்கிலிருந்து எடுத்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியது வங்கிகளின் பொறுப்பு. அவர்கள் வேலைப் பளுதான் கூடும்.

இதைக் கொண்டு கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்பது அபத்தம். இது கறுப்புப் பணம் அதிகரிக்கத்தான் உதவும். என்னைப் போன்ற மாதக் கூலிகளின் (salaried class ஐத்தான் சொல்கிறேன்) சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துப்படுகிறது. நான் செலவிற்கு அங்கிருந்தான் பணம் எடுக்கமுடியும். ஆனால் வணிகர்கள் பணத்தை வங்கியில் செலுத்தாமல், கல்லாவிலிருந்தே செலவுக்கு எடுத்துத் தரமுடியும். எனவே அவர்கள் கையில் ரொக்கமாகவே பணம் வைத்துக் கொள்ளத் தலைப்படுவார்கள். ரொக்கமாகவே பரிவர்த்தனை நடக்கும். இதுதான் கறுப்புப் பணம் உருவாவதன் ஆரம்பம். வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமல்ல, உங்களது Fixed Deposit முதிர்வடைந்து அதைப் பணமாகப் பெறுவது என்றால் கூட இந்த வரியை செலுத்த வேண்டும்.

அறிவியல் புனகதைகளில் வருவது போல அரசாங்கம் முதுகிற்குப் பின் நின்று கண்காணிக்க முற்படுகிறது என்று நான் சந்தேகப்படுகிறேன்.Yes! the big brother is watching! அண்மையில் பங்குகள் வாங்குவதற்கு ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பங்குகள் வாங்குபவரின் விரல் ரேகைகள் பதிந்து கொள்ளப்பட்டு, புகைப்படத்துடன் ஒரு அட்டையும் எண்ணும் வழங்கப்பட்டது.((MAPIN) இந்த அட்டை இருந்தால்தான் பங்குகள் வாங்கவோ விற்கவோ முடியும். இப்போது வங்கிகளில் 10000 ரூக்கு மேல் dd வாங்க வேண்டுமானால் முகவரி, PAN எண் எல்லாம் கொடுக்க வேண்டும்.இவற்றின் தொடர்ச்சிதான் இந்த வரி விதிப்பு முறை என நான் சந்தேகப்படுகிறேன்.
ஏற்கனவே செல்போன் மூலம் நம் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் நம் அந்தரங்களைப் பறித்துக் கொள்கிறதோ? கண்ணாடிச் சுவர்களால் ஆன அறைக்குள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கிறோமோ?

10 comments:

ஜெ. ராம்கி said...

பட்ஜெட் பற்றிய விவாத அரங்கில் வந்திருந்தவர் தங்களிடம் சொன்னபடியே வருமான வரியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் வரவேற்கத்தக்க விஷயம்தான். ஒரு வகையில் நம்முடைய நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தால் சாத்தியமாகியிருக்கிறது. டெக்னாலஜிக்கு நன்றி. இதெல்லாமே வருமான வரி விஷயத்தில் மட்டும்தான். எக்ஸைஸ் மற்றும் சுங்க வரி விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதே பொதுமக்களுக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை.

/ ரிபீட் ஆகியிருக்கிறது. திரும்பவும் சரிவர பதிவு செய்யவும்.

Narain Rajagopalan said...

கிராமங்களுக்கான விசயங்கள் இந்த முறை திரும்பிப்பார்க்கும்போது சற்றே ஆரோக்கியமாக தான் தெரிகிறது

// As against the target of 1.85 lakh self help groups, the government has already achieved2.26 lakh such groups as part of efforts to tackle poverty and unemployment.
உரல்: http://economictimes.indiatimes.com/budget2005show/1035327.cms
//
விவசாயிகளுக்கான உரவிலையில் கொடுக்கப்பட்ட வாக்கினை காபாற்றியிருக்கிறார்.

// Rs 400 crore will be provided for stepping up micro-irrigation comprising drip and sprinkler irrigation. So far, 1.2 million hectares have been covered by micro irrigation in the country which is to be stepped up to three million hectares by the end of the 10th Plan and 14 million hectares by the end of 11th Plan.

Rural RRBs and cooperatives will be asked to extend agricultural credit by another 30 per cent to Rs 1,08,500 crore in the current year.

The National Agriculture Insurance Scheme will be extended for kharif and rabi season of 2005-06. //

இவையனைத்தும் முழுக்க முழுக்க கிராமிய பொருளாதாரத்தினை மனதில் கொண்டு செய்யப்பட்டவை என்று தோன்றுகிறது.

அது சரி, சென்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னைக்கு கடல்நீரிலிருந்து குடிநீர் பிரித்தெடுக்கும் திட்டம் என்னவாயிற்று ? மாநில அரசின் சொதப்பலா அல்லது மத்திய அரசின் சொதப்பலா?

Kasi Arumugam said...

இதைக் கொண்டு கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்பது அபத்தம். இது கறுப்புப் பணம் அதிகரிக்கத்தான் உதவும். என்னைப் போன்ற மாதக் கூலிகளின் (salaried class ஐத்தான் சொல்கிறேன்) சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துப்படுகிறது. நான் செலவிற்கு அங்கிருந்தான் பணம் எடுக்கமுடியும். ஆனால் வணிகர்கள் பணத்தை வங்கியில் செலுத்தாமல், கல்லாவிலிருந்தே செலவுக்கு எடுத்துத் தரமுடியும்.கரன்சி நோட்டுக்கள் புழக்கம் குறைய இது நிச்சயம் வழிவகுக்கும் என்றுதான் தோன்றுகிறது. இதை அப்பத்தம் என்று ஏன் சொல்லுகிறீர்கள். சம்பளம் முழுதையும் ஒரே நாளில் எடுக்கணுமா என்ன? :P

கரன்சி நோட்டுக்கள் புழக்கம் குறையக்குறைய முறைமைப் படுத்தப்படாத அமைப்புகளுக்குள் பணப்பரிமாற்றம் குறையும் என்றுதான் நான் நம்புகிறேன். இதை ஆதரிக்கிறேன். (இரு இந்தியாக்களையும் உண்ர்ந்தே சொல்கிறேன்:-D)

மாலன் said...

இது அருணா அனுப்பிய பின்னூட்டம்:

அப்பாடி, என்னையும் சிதம்பரத்தையும் ஆதரிக்க ஒருவர் :-) அப்படி சொல்லுங்க காசி :-)

மாலன் சொல்வதுபோல் சம்பளம் வாங்குபவர்கள் வீட்டு செலவுக்கு எடுக்கும்போது
இந்த வரியைக் கொடுப்பது கஷ்டமாகதான் இருக்கும். ஏன், ஏதோ ஒரு
அவசரத்திற்கு ஆபரேஷன் போன்ற சமயங்களில் பெரிய ஆஸ்பத்திரிகளில் ரொக்கமாக
கொடுக்க வேண்டி வரும். அப்போது, கார்ட் அல்லது காசோலை கொடுக்கலாம்.
இதைத்தானே சிதம்பரம் எதிர்பார்க்கிறார்? ஒரு கணக்கு இருக்குமே என்று?
அப்படியே ஒரு வேளை fixed deposit தொகையை எடுக்கும்போது காசோலைதான்
பெரும்பாலும் உபயோக்கிறோம் - அல்லது வேறு கணக்கிற்கு மாற்றுகிறோம். பணமாக
எடுத்தால் என்ன செலவுக்காக / அதாவது யாருக்காக அந்த பணத்தை எடுக்கிறோம்?
- வீடு, நிலம் நகைகள் வாங்க? பயணம்? துணிமனிகள்? பரிசாக? காசோலை அல்லது
டிராப்ட் என்று ஏதாவது ஒரு ரிகார்ட் இல்லாமல் பணமாக பெரிய தொகை கை
மாறும்போது, அதை யார் பெறுகிறாரோ, அவரிடம் அது கறுப்பு பணமாக மாறலாம்.
இதைத்தான் சிதம்பரம் வேரிலேயே தடுக்க நினைக்கிறார். இருந்தாலும் நாமும்
வீட்டு செலவுக்கு என்று 10000 க்கு மேல் ஒரே நாளில் எடுப்பதைத்
தவிர்க்கலாம். அல்லது சிதம்பரம் ஒரு வேளை இந்த வரம்பை 50000 ஆக அல்லது
சற்று மேலே உயர்த்தலாம்.

நம்மைப் பொறுத்தவரையில் ரொக்க பணமாக எடுத்து செல்வழித்தே ( - ஆஸ்பத்திரி,
கடன் திருப்பல், என்று ஏதாவது -) ஆக வேண்டிய தருணங்களில், education cess
2 % கொடுப்பதுபோல், இதையும் நாட்டுக்காக ஒரு நல்ல காரியம் செய்ய என்று
கூட நினைத்து கொள்ளலாம். அல்லது, டிரா·ப்ட் வாங்க கமிஷன் கொடுப்பதுபோல்
இந்த வரியையும் நினைக்கலாம். பல வங்கி கணக்குகளிலிருந்து கொடுப்பார்கள்;
ரூ. 9999.99 பைசா எடுப்பார்கள்; அல்லது பணமாகவே வீட்டில் வைத்துக்
கொள்வார்கள் என்று ஆயிரம் ஓட்டை இருக்கலாம். அப்படி பார்த்தால் ஒவ்வொரு
திட்ட அறிவிப்பிலும் implementation பிரச்சனை இருக்கதான் செய்கிறது.
ஓட்டைகள் இருப்பதாலும், சாமர்த்தியமாக ஏய்ப்பவர்கள் இருப்பதாலுமே ஒரு
பாலிஸியே தவறு என்று சொல்ல முடியாது.

Aruna.

மாலன் said...

காசி, இதை அபத்தம் என்று நான் சொல்வதற்கான காரணங்கள்:

1. என் கேள்வி இதுதான்: கறுப்புப் பண ஆசாமிகளைத் திருத்துவதற்காக ஏன் நேர்மையாகக் கணக்கு வைத்து இருப்பவர்களை தண்டிக்க வேண்டும்?. இன்னும் சொல்லப்போனால் பொய்க்கணக்குக் காட்டுகிறவர்களுக்காக இரண்டு அல்லது மூன்று முறை வெவ்வேறு பெயர்களில் 'மன்னிப்பு'முறை அறிவிக்கப்பட்டது. ஆனால் நேர்மையாக வரி செலுத்துகிறவர்களுக்கு என்ன ஊக்குவிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது? தொடர்ந்து ஐந்தாண்டு காலம் நேர்மையாக வரி செலுத்தியவர்களுக்கு ஒரு சிறிய 'ரிபேட்'கொடுக்கலாம்; அவர்களது குழந்தைகளுக்கு கல்லூரி அட்மிஷனில் முன்னுரிமை கொடுக்கலாம்; பயணப்பதிவில் முன்னுரிமை தரலாம். தொலைபேசிக் கட்டணத்தில் சலுகை தரலாம். உட்கார்ந்து யோசித்தால் ஆயிடம் வழிகள் இருக்கின்றன. ஆனால் கூடுதலாக செலுத்திய வரியைத் திரும்பப் பெறவே ஆறு ஏழு மாதம் ஆகும்.
கேட்டால் வரி செலுத்துவது குடிமகனின் கடமை என்பார்கள். அது கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடமையை செய்யத் தவறியவனுக்கு மன்னிப்பு, கடமையை செய்கிறவனுக்கு தண்டனையா?
2.எல்லாப் பணத்தையும் ஒரே நாளில் எடுக்க வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். எல்லா இடங்களிலும் செக் வாங்கிக் கொண்டால் பிரசினை இல்லை. வீட்டு வாடகைக்கு, பால்காரனுக்கு, மளிகைக்கடைக்கு, பேப்பர்காரனுக்கு, காஸ் கடைக்காரனுக்கு, பூக்காரிக்கு, டிரைவருக்கு, வீட்டு வேலைக்காரிக்கு, சமையல்காரிக்கு, குழந்தையின் பாட்டு கிளாசிற்கு, டியூஷன் மாஸ்டருக்கு, அதை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ரிக்ஷாகாரனுக்கு எல்லோருக்கும் முதல் வாரத்தில் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக தினம் தினம் பாங்கிலோ, ஏடிஎம்மிலோ போய் நிற்க முடியமா?

2. யாரும் தங்களது கறுப்புப் பணத்தை வங்கியில் வைத்திருப்பதில்லை. எனவே இது illogical.லாஜிக் இல்லாத எதுவும் அபத்தம்தான்

கறுப்புப் பணம் உருவாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கை என்ற அருணாவின் வாதமும் சரியல்ல. வணிகர்கள் வங்கிக்குப் போகாமல் வீட்டிலேயே பணத்தை வைத்துக் கொண்டு பட்டுவாடா செய்வதுதான் நடக்கும். அது கறுப்புப் பணத்திற்குத்தான் வழி வகுக்கும். எனவே அது எந்த நோக்கத்திற்காகக் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கத்தையே தோற்கடிக்கும். அதனால் இது அபத்தம்.

குறைந்த பட்சம் அரசாங்கம் இதை அறிவிக்கலாமே: அதாவது எந்த வங்கியின் செக்கை எந்த வங்கியிலும் போடலாம், கலெக்ஷன் சார்ஜ் கிடையாது. வங்கிகளில் டிராப்ட் வாங்க கமிஷன் கிடையாது. இப்படி செய்தால் செக் பயன்படுத்தும் வழக்கம் அதிகரிக்குமே. அதைச் செய்யமாட்டார்கள். வங்கிகளின் கையை அல்லவா கடிக்கும்? சம்பளக்காரன்தான் இளிச்சவாயன். ஊருக்கு இளைச்ச பிள்ளையார் கோயில் ஆண்டி. அவனை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். அவன் பாக்கெட்டில் எவ்வளவு பெரிய ஓட்டையை வேண்டுமானாலும் போடலாம்.

கல்விக்காக இரண்டு சதவீத செஸ் கொடுப்பதும் இதுவும் ஒன்றல்ல. அது எல்லோருக்கும் பொருந்தக் கூடியது. இது நேர்மையாகக் கணக்கு வைத்திருப்பவனை மட்டும் தண்டிக்கக் கூடியது.

எந்தத் திட்டத்திலும்தான் ஓட்டை இருக்கும் என்கிற அருணாவின் வாதமும் சரியல்ல. திட்டமிடுகிறவர்கள் திட்டத்தின் பலவீனங்களையும் எண்ணிப் பார்த்துத்தான் திட்டமிட வேண்டும். அப்படிச் செய்வதற்குப் பெயர்தான் திட்டமிடுவது. அப்படி இல்லாததற்குப் பெயர் கற்பனை.

எல்லாவற்றையும் விட இது குடிமகனின் ஆதார உரிமை பற்றியது. அரசாங்கத்திற்கு ஒரு குடிமகனின் அந்தரங்கத்தைக் கண்காணிக்க எந்தவித அதிகாரமும் உரிமையும் கிடையாது. நான் சட்டம் ஒழுங்கு பிரசினையை ஏற்படுத்தாதவரை, அரசாங்கதை வரி ஏய்ப்பு செய்யாதவரை நான் என்ன செய்கிறேன் என்பதைத் துருவி ஆராய ஒரு நல்ல அரசாங்கம் முற்படக்கூடாது.

கறுப்புப் பணத்தைத் தடுப்பதுதான் நோக்கம் அல்லது பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால், ஏன் அரசாங்கம் இப்படி செய்யக்கூடாது?
ஒவ்வொரு வணிகநிறுவனமும் ஆண்டின் இறுதியில் எந்தெந்தத் தேதியில் யார் யாருக்கு ஒருநாளில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கொடுத்தது, எதற்காகக் கொடுத்தது, அதைப் பெற்றுக் கொணடவரின் முகவரி என்ன, PAN எண் என்ன, என்பதற்கான ஒரு பட்டியலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்கலாமே? The onus may be fixed on those receive money and not on those who draw the money.

இது நிச்சியமாக ஒரு அபத்தமான நடவடிக்கைதான்.

Anonymous said...

மாலன் அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை, கணக்குக்குள் பணத்தை கொண்டுவருபவர்களை தண்டிப்பதை விட்டுவிட்டு, கறுப்புப் பணத்தை சேர்த்துவைத்திருப்பவர்களை சோதனை செய்வதிலும், அதில் சிக்கியவர்களுக்கு அதிக தண்டணை கொடுப்பதிலும் நிதியமைச்சர் கவனம்
செலுத்தியிருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சிகரெட்டுக்கு வரி கூட்டுவது போல கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கான கெடுபிடியை கூட்டியிருந்தால் அது மிகவும் பாராட்டத்தக்க முயற்சியாக இருந்திருக்கும், நடுத்தர மக்களை பாதிக்காமலும் இருக்கும்.

நம்பி.

Anonymous said...

மாலன் அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை, நியாயமானவர்கள் தண்டிக்கப்படுவது நம் நாட்டில் காலம்காலமாக நடந்து வருகிறது. நீங்கள் சிந்தித்த அளவு நி.அ. சிந்தித்திருக்க மாட்டாரா என்ன?
இது தெரிந்தே செய்யும் தவறு?
தண்டணை மட்டும் நமக்கு.
-செந்தில்ராஜ்

K.R.அதியமான் said...

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

http://nellikkani.blogspot.com/

K.R.அதியமான் said...

நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.

சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.

பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.

அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.

சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.

வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...

K.R.அதியமான் said...

கருப்பு பணத்தின் லீலைகள்

வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.

கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.

காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..

தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.

கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.

வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகிண்றனர். அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?

http://nellikkani.blogspot.com/