திருவாளர் பந்தா பளு தூக்கலாமா?
வடிவேலுவா, கவுண்டமணியா என்று ஞாபகம் இல்லை. தன்னை ஒரு பெரிய பலசாலி, பயில்வான், வஸ்தாது என ஊரில் பந்தாப் பண்ணிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் அவரே இரண்டு புறமும் எடைகள் பூட்டப்பட்ட பளுவைத் தூக்கிக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த சூழ்நிலையும் அவரே ஏற்படுத்திக் கொண்டதுதான். தனது மாணவர்கள் பயிற்சி செய்து கொண்டிருக்கும் இடத்திற்குப் போய் 'என்னடா பளு தூக்குறீங்க நான் தூக்குகிறேன் பார்' என்று கெத்தாக பளுவின் கீழ் படுத்து தூக்க முயல்வார். தூக்கமுடியாமல், பளு நச்சென்று அவர் மூக்கின் மேலேயே உட்கார்ந்துவிடும். முகத்தில் ரத்தக்காயம். தொலைக்காட்சியில் இந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து நீங்களும் சிரித்திருப்பீர்கள்.
இந்தக் காட்சியில் வரும் காமெடியனைப் போல சிரிப்பூட்டுகிறது காங்கிரஸ்.
சுதந்திரப் போராட்டம் போன்ற நாடு தழுவிய லட்சியங்கள் இல்லாத சூழ்நிலையில் இந்தியா போன்ற நாட்டில் ஏகப்பெரும் (Monolithic) கட்சி என்பது இருக்கப் போதுமான இடம் அரசியலில் இல்லை. இதனால்தான் இன்று இந்தியாவில் தேசியக் கட்சி என்று உண்மையில் எதுவும் இல்லை. ஒரு தேசியக் கட்சி என்று வர்ணிக்கப்படும் காங்கிரஸ் இந்தியாவின் முன்றாவது பெரிய மாநிலமான பீகாரில், இப்போது முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 11இடங்களை மட்டுமே பிடித்தது.(அங்கு உள்ள மொத்த இடங்கள் 243) தமிழ்நாட்டிலிருந்தோ, கேரளத்திலிருந்தோ ஒரு பாரதிய ஜனதா எம்.பி கூடக் கிடையாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வங்கம் கேரளம் தவிர அவற்றின் அண்டைமாநிலங்களில் கூட செல்வாக்குக் கிடையாது. ஒரு தேசியக் கட்சி என்ற தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அளவிற்குக் கூட இடங்களைப் பெறாத உங்களது அங்கீரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷனால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி. இன்று தேசியக் கட்சிகள் என்று தங்களை வர்ணித்துக் கொள்ளும் கட்சிகள் எல்லாம் திட்டுத் திட்டாக சிற்சில பகுதிகளில் செல்வாக்குக் கொண்டவையே அன்றி நாடு முழுக்க ஒரே மாதிரியான செல்வாக்குப் பெற்றவை அல்ல.
எப்படி மாநிலக் கட்சிகளால் தனித்து இந்தியா போன்ற நாட்டை ஆளமுடியாதோ அதே போல தேசியக் கட்சிகளாலும் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. அதனால்தான் கூட்டணிகள் தேவைப்படுகின்றன.
இதே நிலைதான் மாநிலங்களில் நிலவுகிறதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் மாநிலங்களில் மக்கள் கட்சி அடிப்படையில் வாக்களிப்பதில்லை. அவர்கள் தலைமையின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள். அதாவது ஒரு தலைவரிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது அல்லது அவரிடமுள்ள அதிகாரத்தைப் பறிப்பது என்ற அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று எண்ண இடமிருக்கிறது. மாநில அளவில் ஒரு வலுவான தலைமை இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள நிலைகளுக்கு ஏற்ப மாநிலத்தில் உள்ள கட்சிகளில் ஒன்றிற்கு வாக்களிக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் ஆந்திரம். இன்னொரு உதாரணம் கர்நாடகம். ஒரே மாநிலத்தில் செல்வாக்குள்ள தலைவர்கள் பலர் இருந்தால் மக்கள் தீர்ப்பு பல கூறுகளாகப் பிளவுபடுகிறது. பீகாரும், உத்திரபிரதேசமும் இதற்கு உதாரணங்கள். இந்த நிலை இல்லாத போது மக்கள் ஒரு தலைவரிடம் அதிகாரத்தை ஒப்படைக்க அல்லது பறிக்க வாக்களிக்கிறார்கள். நரேந்திரமோடியின் குஜாராத் வெற்றி, ஷீலா தீட்சத்தின் தில்லி வெற்றி, நவீன் பட்நாயக்கின் ஒரிசா வெற்றி இவை சில உதாரணங்கள்.
தமிழ்நாட்டில் தலைமையைப் பற்றி மக்களிடம் குழப்பங்கள் இல்லை. எம்.ஜி.ஆர் இருந்தவரை மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள். அவர் உடல் நலம் குன்றிவிட்ட சூழ்நிலையிலும் கூட அவரைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள். அவர் மறைந்தபின்பு, தனியொரு தலைவர் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் காலங்கள் முடிந்துவிட்டன என்று அரசியல் தலைவர்களில் சிலரே கூட எண்ணினார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989ல் நடந்த தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் தனித் தனியாகப் போட்டியிட்டன. மக்கள் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்போது களத்தில் இருந்த கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ஜானகி ஆகிய தலைவர்களில், மக்கள் பார்வையில் கருணாநிதி பெரும் தலைவர். (Tall leader) அரசியலுக்குப் புதியவர் என்ற போதிலும், ஜெயலலிதாவிற்கு, எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகியைவிட, இரண்டாம் இடம் அளித்தார்கள். கருணாநிதிக்கு மாற்று என்று அவரைக் கருதுவதை சூசகமாகத் தெரிவித்தார்கள். ஜானகி அரசியலைவிட்டு விலக நேர்ந்தது. ராஜீவ் காந்தி 12 முறை வந்து பிரசாரம் செய்த போதும்கூட மூப்பனாருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது.
தமிழ்நாட்டு மக்கள் தலைமையின் அடிப்படையில்தான் தங்கள் தீர்ப்புக்களை எழுதுகிறார்கள் என்பதை பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். மாநில ஆட்சியைக் கூட்டணிகளிடம் ஒப்படைப்பதை அவர்கள் விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல அந்த யோசனைகளை நிராகரித்தும் வந்திருக்கிறார்கள். 1980ல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 இடம்தான் எம்.ஜி.ஆரின் அதிமுகவிற்குக் கிடைத்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி மற்ற 38 இடங்களைக் கைப்பற்றியது. சில மாதங்களில் சட்டமன்றத்திற்குத் தேர்தல் வந்தது. ஒரே கூட்டணியாக காங்கிரசும் திமுகவும் தலா 110 இடங்களில் போட்டியிட்டதாக ஞாபகம். தேர்தலின் போதே அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த முதல்வர் யார் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. கூட்டணி ஆட்சி என்று மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் சொன்னார்கள். அப்போதைய தமிழகக் காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்ரமணியம் 7 பேர் கொண்ட தூதுக்குழுவை தில்லிக்கு அனுப்பி விளக்கம் கேட்டார். இந்திரா காந்தி, கலைஞர் அல்லது கலைஞர் சுட்டிக் காட்டும் ஒருவர் முதல்வராவார் என்று சொல்லி அனுப்பினார்.ஆறுமாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏறத்தாழ அனைத்து இடங்களையும் வென்ற திமுக காங்கிரஸ் கூட்டணி அந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி கண்டது.
தமிழக மக்கள் தலைமையைப் பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள் என்றால் பெரிய கட்சிகள் தனித்தே போட்டியிடலாமே, ஏன் கூட்டணி அமைக்க வேண்டும்? நியாயமான கேள்வி. ஓர் உதாரணம் பார்க்கலாம். ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருக்கிறார்கள், அவர்களில் 55 பேர் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 20 பேர் திமுகவிற்கு வாக்களிக்கிறார்கள். 18 பேர் அதிமுகவிற்கு வாக்களிக்கிறார்கள். 7 பேர் பா.ம.கவிற் கு வாக்களிக்கிறார்கள். 6 பேர் காங்கிரசிற்கு வாக்களிக்கிறார்கள். 4 பேர் கம்யூனிஸ்ட்களுக்கோ, மதிமுகவிற்கோ வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
ஐந்து பேரும் தனித்தனியாகப் போட்டியிட்டால் திமுக ஜெயித்துவிடும். அது மற்றவர்களுக்கும் தெரியும். அதே போல தங்களது 7 வாக்குகளை வைத்துக் கொண்டோ , 6 வாக்குகளை வைத்துக் கொண்டே தாங்கள் ஜெயிக்க முடியாது என்றும் தெரியும். பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தாலும் ஜெயிக்க முடியாது என்றும் தெரியும் அதே போல தாங்கள் ஜெயலலிதா கருணாநிதி இவர்களில் யாரேனும் ஒருவர் பக்கம் சேர்ந்துவிட்டால் அவர்களை அமோக வெற்றி பெறச் செய்துவிடலாம் என்றும் தெரியும். எனவே யாரிடம் அதிகம் பலன் பெறலாம் என்று அரசியல் கட்சிகள் யோசிக்க ஆரம்பிக்கின்றன. பெரிய கட்சிகளும் அவர்கள் மற்றவர்கள் பக்கம் போய் விடாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றன. அதனால் தங்களைவிடப் பலம் குறைந்த கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்கின்றன. கான்கிரீட் வீடு மழையில் கரைந்து விடாது என்றாலும் ஜன்னல் வழியாக மழைச்சாரலடித்து துணியோ புத்தகமோ படுக்கையோ நனைந்து விடக்கூடாது என்று ஜன்னக் கதவை சாத்தி வைப்பதில்லையா அது போல்தான் இது. ஒரு தற்காப்பு நடவடிக்கை (Preventive measure)
மத்தியில் நீங்கள் ஆட்சி அமைக்க நாங்கள் உதவுகிறோம், மாநிலத்தில் எங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள் என திமுகவும் காங்கிரசும் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அதில் முதல் பகுதி நிறைவேறிவிடுகிறது. இரண்டாம் பகுதி நிறைவேறும் முன் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறுக்கு சால் ஓட்டினால் அது முறையா?
சோனியா பிரதமராக வேண்டும் என்ற கோஷத்தை முதலில் எழுப்பியது திமுக. தேர்தலிலும், தேர்தலுக்குப் பின்னும் அதை வற்புறுத்தியது. இப்போது திமுக ஆட்சிக்குக் குரல் கொடுக்க வேண்டியது காங்கிரசின் முறை. ஆனால் அங்கு சில தலைவர்கள் வேறு கனவுகள் காண்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் அதிமுகவிற்கு சாதகமான உணர்வுகள் இருப்பதாக உறுதியாக சொல்ல முடியாது. ஜெயேந்திரர் கைது போன்ற சம்பவங்களால் அது அதற்கிருந்த சில ஆதரவுத் தளங்களை இழந்திருக்கிறது. சுனாமி நிவாரணம், ரேஷன் கார்டு புதுப்பித்தல் இவற்றில் ஏற்பட்ட குழப்பங்கள் அதற்கு பின்னடைவைத் தந்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவை பதிபக்தி இல்லாதவர் என்கிற அளவிற்குத் தரம் தாழ்ந்து பேசியாற்று. அண்மையில் சட்ட மன்றத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை காலி டப்பா என்றெல்லாம் பேசியாயிற்று. இதற்கப்புறமும் காங்கிரஸ் அதிமுக உறவு ஏற்பட வாய்ப்பில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றிருப்பதால் பாமகவும் அதிமுகவுடன் அணி சேர வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் திமுகவை விட்டு விலகிச் சென்றால் யாருக்கு லாபம்?
நிச்சியம் காங்கிரசிற்கு இல்லை. மத்தியில் அதன் ஆட்சி நிலைக்காது. மாநிலத்தில் அது தனித்தோ, மூன்றாவது அணி அமைத்தோ ஆட்சியைப் பிடிக்க முடியாது. மற்ற கட்சிகள் மத்தியில் உள்ள கூட்டணியை விட்டு விலகி வராத நிலையில் அது தமிழகத்தில் தனிமைப்பட்டு போகும். அதிகம் போனால் அது திமுக வெற்றி பெறக் கூடிய இடங்களின் எண்ணிக்கையை சிறிதளவு குறைக்கலாம். ஆனால் திமுக இதற்கெல்லாம் அஞ்சுகிற கட்சி அல்ல. பலமுறை ஆட்சிக் கலைப்பை எதிர் கொண்டவர்கள். பனிரெண்டு ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருக்க நேர்ந்த போதும் குலையாத கட்சி அது. பதவியிலிருந்து பலன் பெறாவிட்டாலும் அவர்கள் கட்சிக்கு செய்கிறார்கள் என்று அண்மையில் ஜெயலலிதாவே திமுகவினரின் விசுவாசம் பற்றிப் பேசியிருக்கிறார். கட்சிக்கு எதுவும் நடந்து விடாது. அதிமுகவிற்கு மாற்று திமுக என்ற நிலை தமிழகத்தில் இருப்பதால் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் அனுபவத்தின் அடிப்படையில் மக்கள் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளும் போது தங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அது நம்பிக்கை கொள்ள இடமிருக்கிறது. வரலாற்றைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஆட்சியில் இருக்கிற கட்சியை தொடர்ந்து ஆளும் விதமாக மக்கள் வாக்களிப்பதில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
காங்கிரசிற்கு உதவாது, அது தனிமைப்பட்டு போகும் அபாயம் இருக்கிறது என்று தெரிந்திருந்தும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள்? மத்தியில் தங்கள் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதைவிட மாநிலத்தில் தங்களுக்கு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசலை சமாளிக்க அது உதவும் னைக்கிறார்கள்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசின் உளவுத் துறை அமைச்சர்களின் செயல்பாடு பற்றி புலனாய்ந்து பிரதமருக்கு ஓர் ரகசிய அறிக்கை கொடுக்கும். அண்மையில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை இளங்கோவனுக்கு சாதகமாக இல்லை. அதுவும் தவிர இப்போது வாசன் கோஷ்டியைச் சேர்ந்த எவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல அவரது எதிர் கோஷ்டியினரில் பலருக்கு ஏதோ ஒரு பதவி கிடைத்து விட்டது. சிதம்பரம், மணி சங்கர், இளங்கோவன் அமைச்சர்கள், சுதர்சன நாச்சியப்பன் பொதுச் செயலாளர். ஜெயந்தி நடராஜன் செய்தித் தொடர்பாளர். இதனால் வாசன் கோஷ்டிக்கு பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இளங்கோவனை நீக்கிவிட்டு வாசனை அமைச்சரவையில் சேர்க்கலாமா என்று பிரதமர் யோசித்து வருவதாக தில்ல்லி வட்டாரத்தில் தகவல்கள் கசிகின்றன. இதனால் கூட்டணி ஆட்சி பற்றிப் பேசினால் பதவி போனாலும், பழியை கருணாநிதி மீது போட்டு முகத்தைக் காப்பாற்ற்றிக் கொள்ளலாம் ( Face Saving technique) என்று இளங்கோவன் முயற்சிக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அது வடிவேலு பளு தூக்கிய கதையாக ஆகிவிட்டது.
1 day ago
5 comments:
அன்புள்ள மாலன்
இலக்கியவாதிகள் அரசியல் விமர்சனம் செய்வதில் உள்ள அபத்தங்கள் குறித்து ஏற்கனவே நான் சிந்தித்திருக்கிறேன். ஒரு ஊடகவியலாளராகவும் உள்ள தாங்கள் அரசியல் விமர்சனம் செய்வது தவிர்க்கவியலாததுமாகும். இந்தக் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரங்கள் சரியானவைதான். ஆனால் கூட்டணி ஆட்சி என்று கருத்துக்கூறுவது அத்தனை பெரிய குற்றம் என்று என்னால் கருதமுடியவில்லை. அதற்காக நீங்கள் தரம்தாழ்ந்து திருவாளர் பந்தா என்று இளங்கோவனை அத்தனை தரம்தாழ்ந்த அரசியல்வாதியாக சித்தரிக்க வேண்டியதில்லை. இதற்குமுன் ஜெயலலிதாவிற்கு எதிராக இளங்கோவன் பேசிவந்தபோது "பந்தா" எதுவும் உங்களுக்கோ நீங்கள் சார்ந்துள்ள திமுகவுக்கோ தெரியவில்லை. திமுகவின் முடிவுகளுக்கு மாறாக யார் பேசினாலும் அவர்கள் கலைஞராலும் அவரது விசுவாசிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் படுவது வழக்கம் தான். இது ஜெயலலிதாவின் சர்வாதிகாரங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதே இங்கு குறிப்பிட வேண்டிய இன்னொரு விசயம்.
ஆட்சிக்கு வருவது என்பது திமுக அதிமுகவைப் போலவே பிற கட்சிகளுக்கும் லட்சியக்கனவுதான். காங்கிரசும் அதற்கு விதிவிலக்கலல. அந்த ஆசையை, தங்களின் விருப்பத்தை வெளியிடுவதே பாவம் என்று நீங்கள் கருதினால் அதை என்னவென்று புரிந்து கொள்வது?
தரமான இலக்கியவாதியாக, வலைப்பதிவு முன்னோடியாக, நல்ல பத்திரிகையாளராக நாங்கள் மதித்து வந்திருக்கும் நீங்கள் சராசரி அரசியல்வாதியாக இங்கே முகம் காட்டுவதும் சகிக்கமுடியாததாகிறது. ஏனென்றால் உங்களின் இந்த விமர்சனம் எந்தவிதத்திலும் நடுநிலையானதோ நேர்மையானதோ இல்லை.
எந்தத் திமுக தலைவர்களையும்விட வலிமையோடு ஜெயலலிதாவை எதிர்க்கும் துணிவுள்ள ஒரே அரசியல்வாதியாக முகம்காட்டியவர் இளங்கோவன். அதற்காக தமிழகத்தின் முதல்வராகும் தகுதி அவருக்கிருப்பதாக நினைக்கமுடியவில்லை. இன்றைய சூழலில் கலைஞரைவிட தகுதியானவர்வேறு யாரும் இருப்பதாக கருதமுடியவில்லைதான். காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணியாகத்தான் தமிழகத்தில் இருந்தாக வேண்டுமென்ற கடந்தகால வரலாற்றையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் இளங்கோவனின் கருத்துக்கூறும் உரிமையையே கேள்விக்குள்ளாக்கி கேலிபேசுகிறது உங்கள் கட்டுரை. எல்லா அரசியல்வாதிகளையும் போலவே ஆசைப்படுவதும் கருத்துக் கூறுவதும் அவர்களின் உரிமை. அதைக் கேலி பேசுவது அபத்தம். அந்த அபத்தத்தை தொடர்ந்து செய்யும் அரசியல் வியாதிகளின் பட்டியலில் நீங்களுமா?
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் சுவடுகள் தொடர்கின்றன என்பதற்கு மேலாக நீங்கள் குறிப்பிட்டுள்ள
//ஜெயேந்திரர் கைது போன்ற சம்பவங்களால் அது அதற்கிருந்த சில ஆதரவுத் தளங்களை இழந்திருக்கிறது. சுனாமி நிவாரணம், ரேஷன் கார்டு புதுப்பித்தல் இவற்றில் ஏற்பட்ட குழப்பங்கள் அதற்கு பின்னடைவைத் தந்திருக்கின்றன//
என்பவை வெறும் ஊகங்களே. அவை உண்மைகளாக இருப்பதற்கான வாய்ப்பும் குறைவே.
தற்போது திமுகவுக்கு சாதகமான நிலை இருப்பது உண்மையென்றாலும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இருந்த மனநிலைக்கு அதிகமான மாற்றங்கள் மேற்கண்ட காரணங்களால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. (இவை எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்)
ஆதரவுத் தளங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
//நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவை பதிபக்தி இல்லாதவர் என்கிற அளவிற்குத் தரம் தாழ்ந்து பேசியாற்று. அண்மையில் சட்ட மன்றத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை காலி டப்பா என்றெல்லாம் பேசியாயிற்று. இதற்கப்புறமும் காங்கிரஸ் அதிமுக உறவு ஏற்பட வாய்ப்பில்லை.//
'அரசியலில் நிரந்தர நட்பும் இல்லை. நிரந்தர பகையும் இல்லை' என்பது நீங்கள் அறியாததா? காங்கிரசில் உள்ள அதிமுக அனுதாபிகள் தருணம் பார்த்துள்ளனர்.
//மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றிருப்பதால் பாமகவும் அதிமுகவுடன் அணி சேர வாய்ப்பில்லை.//
பாமக மீது அத்தனை நம்பிக்கையா? காங்கிரசே போய்விட்டால்?
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்!....
//பதவியிலிருந்து பலன் பெறாவிட்டாலும் அவர்கள் கட்சிக்கு செய்கிறார்கள் என்று அண்மையில் ஜெயலலிதாவே திமுகவினரின் விசுவாசம் பற்றிப் பேசியிருக்கிறார்.//
ஜெயலலிதா பேச்சில் உச்சி குளிர்ந்து விட்டதா?
அன்புள்ள அனுராக்,
முதலில் ஒரு தகவல்: நான் திமுக உறுப்பினர் அல்ல. எந்தக் கட்சியிலும் உறுப்பினர் அல்ல. எந்தக் கட்சியின் முன்னணி அமைப்புக்களிலும் உறுப்பினர் அல்ல.
நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பணிக்கு வருவதற்கு முன்னால் 20 வருடங்களாகப் பத்திரிகையாளனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அவை அரசியல் கட்சியின் அதிகாரபூர்வ ஏடுகள் அல்ல.
நான் வேலைபார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளரின் கருத்துக்கள் என் கருத்துக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளரின் கருத்துக்கள் உங்கள் கருத்துக்களாக இருக்க வேண்டியதில்லை. உங்கள் கருத்துக்கள் உங்கள் மகனது அல்லது மனைவியினுடைய கருத்துக்களாக இருக்க வேண்டியதில்லை.சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவருக்கும் தங்களுக்கென்று கருத்துக்கள் இருக்கும்.
வாதங்களை வாதங்களால் எதிர்கொள்ள முற்படுங்கள். தனிநபர் விமர்சனமாக்கி சேறு பூச வேண்டாம்.
என்னுடைய கட்டுரையில் மூன்று நான்கு கருத்துக்களை வைத்திருக்கிறேன்:
1. இன்று இந்தியாவில் தேசியக் கட்சிகள் இல்லை. அதனால் மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாதது
2.மாநிலங்களில் அந்த நிலை இல்லை.
3.தமிழகத்தில் திமுக தனியாக வென்று காட்டியிருக்கிறது; காங்கிரஸ் தனியாக வென்றதில்லை
4.எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஆட்சியில் இருப்பவர்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்ததில்லை.
5.தமிழகத்தில் கருணாநிதி Tall leader. இன்றைய தேதியில் ஜெ.விற்கு மாற்று அவர்தான்.
இதில் எதையேனும் நீங்கள் மறுக்கலாம். காரணங்கள் சொல்லி நிராகரிக்கலாம். வேறு வாதங்களை வைத்து வேறு ஏதேனும் கோணங்கள் இருந்தால் காட்டலாம். அத்தனை வாய்ப்புக்கள் இருக்கும் போது தனிநபர் தாக்குதல் சரியல்ல.
கூட்டணி ஆட்சி பற்றிப் பேசுவதே தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அப்படிப் பேசும் ஒருவர் அதற்கான தர்க்கரீதியான நியாயங்களையும் விவாதத்திற்கு உட்படுத்தத் தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை காங்கிரஸ் பலமாநிலங்களில் அதிக இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கும் என்றால் அது தனது அரசில் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தந்திருக்குமா?
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவு லட்சியம் ஆசை எல்லாம் கட்சிகளுக்கு இருக்கலாம். காங்கிரசிற்கும் இருக்கலாம். அப்படி இருந்தால் அது காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றல்லவா பேசியிருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்பதைக் கூட்டணிக் கட்சிகளிடம் பேசி உறுதி செய்து கொள்ளாமல் மேடைகளில் பேசலாமா?
நான் இளங்கோவனின் கருத்துரிமையை மறுத்து ஒரு வரி கூட என் பதிவில் எழுதவில்லை. கருத்துரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடியவன் நான். எனவே நான் அது போன்ற செயலை ஒரு போதும் செய்யமாட்டேன். நான் இளங்கோவன் இப்படிப் பேசியதற்கு உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறேன். அதைப் பற்றிப் பேசும்போதுதான் நான் இளங்கோவனைப் பற்றி பேசியிருக்கிறேன் என்பதைக் கவனியுங்கள்.
இலக்கியவாதிகள் அரசியல் பற்றி எழுதுவது ஒன்றும் இகழ்சிக்குரியது அல்ல. அப்படி ஒதுங்கி இருப்பது ஏதோ 'புனிதமானது'ம் அல்ல. இலக்கியம் சமூகத்திலிருந்துதான் உருவாகிறது. அரசியல்தான் ஒரு சமூகத்தைத் தீர்மானிக்கிறது. இது குறித்து நான் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே எழுதியிருக்கிறேன். (காண்க: புரட்சிக்காரர்கள் நடுவே- மாலன் -வானதிப்பதிப்பகம்)
கடைசிக்க்குறிப்பு: இது இளங்கோவன் மீதான விமர்சனம் அல்ல. காங்கிரசின் மீதான விமர்சனம் இரண்டாவது பத்தியில் இதை தெளிவாக உணர்த்தியிருக்கிறேன்.
மாலன்
அன்புள்ள அனுராக்,
இனி உங்கள் இரண்டாவது பின்னூட்டத்தில் உள்ள கேள்விகளுக்கான விடைகள்:
>>ஆதரவுத் தளங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?<<
இந்துத்வா சக்திகளின் ஆதரவு கடந்த தேர்தலின் போது ஜெயலலிதாவிற்கு இருந்தது. ஜெயேந்திரர் கைது விவகாரம் காரணமாக அவர் அதை இப்போது இழந்திருக்கிறார்.
>>'அரசியலில் நிரந்தர நட்பும் இல்லை. நிரந்தர பகையும் இல்லை' என்பது நீங்கள் அறியாததா? காங்கிரசில் உள்ள அதிமுக அனுதாபிகள் தருணம் பார்த்துள்ளனர்.<<
காங்கிரஸ் வாக்குகளுக்காக ஒரு தனிப்பட்ட தலைவியை சார்ந்திருக்கிற கட்சி. அந்த சோனியாவையே தனிப்பட்ட முறையில் தாக்கிய பிறகு உடனடியாக நட்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதற்கான முயற்சியை கடந்த முறை தில்லி சென்ற போது முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை.
>>பாமக மீது அத்தனை நம்பிக்கையா? காங்கிரசே போய்விட்டால்?<<
மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் பாமக என்ன நிலையெடுக்கும் என்று இப்போது ஊகிக்க முடியாது. ஆனால் மத்தியில் ஆட்சியைக் காப்பார்றிக் கொள்ள காங்கிரஸ் திமுகவுடன் இணக்கமான உறவைப் பேணும். அதனால் பா.ம.க நிலையில் மாற்றமிராது.
>>ஜெயலலிதா பேச்சில் உச்சி குளிர்ந்து விட்டதா?<<
ஜெயலலிதாவை விட திமுகவை கடுமையாக விமர்சிக்கும் இன்னொருவர் இருக்க முடியாது. அவரே விமர்சிக்க முடியாத விஷயம் இது என்றுதான் சொல்கிறேன்.
மாலன்
அன்புள்ள மாலன்
பிரச்சினை இளங்கோவனால் உருவாக்கப் பட்டது. அது குறித்தே விவாதங்களும் விமர்சனங்களும். உங்கள் கட்டுரையின் தலைப்பும் கருத்தும் அதுசார்ந்தே உருவானவை. தனிநபர் விமர்சனங்களை நான் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறேன். அதனாலேயே இந்தப் பதிவிற்கு நான் மறுமொழி இட்டதும்.
ஆனால் உங்களின் மறுமொழி நான் தனிநபர் தாக்குதல் செய்வதாக கூறுகிறது. வருந்துகிறேன். தயவு செய்து மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கவும். நான் மிகவும் மதிக்கும் ஒருவரிடமிருந்து இத்தகைய ஒரு பதிவு வந்தது பற்றியே உங்களைப்பற்றி குறிப்பிட்டிருந்த வரிகள்...மற்றப்படி உங்களின் பிற கருத்துக்களை அந்த மறுமொழியிலேயே ஆதரித்துதான் எழுதியிருந்தேன்.
இலக்கியவாதிகள் அரசியல்பற்றி எழுதும்போது ஏற்படும் சார்புநிலை சார்ந்த பிரச்சினைகள்... உங்கள் கட்டுரையின் தொனி ஒரு திமுக உறுப்பினர் அல்லது சார்பாளருக்குரியது போலத்தான் இந்தக் கட்டுரையில் வெளிப்படுகிறது. இவைதான் நான் எழுப்பிய பிரச்சினைகள்.
இவை இருக்கட்டும். இப்போது இளங்கோவன் வருத்தம் தெரிவித்துவிட்டார். காங்கிரஸ் தலைவியும் வருத்தம் தெரிவித்துவிட்டார். திமுக விரும்பியபடியே காங்கிரஸ் மிகவும் இறங்கி வந்திருக்கிறது. ஆனாலும் இளங்கோவனை திமுக பலி கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அரசியல் மட்டுமல்லாமல் இளங்கோவன் கலைஞரை ஜாதியைச்சொல்லி இகழ்ந்ததாகவும் செய்தி கேள்விப் பட்டேன். இது குறித்து மேல்விபரங்கள் தெரியவில்லை. இந்த விவகாரத்தின் ஆரம்பமான இளங்கோவன் பேச்சு முழுவிபரம் இணையத்தில் இருந்தால் சுட்டி தரவும். நன்றி.
காங்கிரஸை (அல்லது இளங்கோவன் போன்ற எவரையும்) வடிவேலுவின் சுய எள்ளல் நகைச்சுவையோடு ஒப்பிடுவது வேதனை தருகிறது. தன்னம்பிக்கையுடன் பேசினால் இது போன்ற உவமானம்தான் கிடைக்குமா? இதே போல் அடுத்து ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத வைகோ-வின் மதிமுக, தொல். திருமாவளவன் என்று தொடருமா!?
தேசிய கட்சியாக விளங்குவதற்கு மாநில அமைப்புகளுக்கு அபரிமிதமான சுதந்திரங்கள் தேவை. காட்டாக அமெரிக்காவில் ஒன்றுக்கொன்று எதிரெதிரான கோட்பாடுகளைக் கொண்டவர் ஒரே கட்சியில் இருப்பது சர்வ சாதாரணம். காங்கிரசில் அந்த சகிப்புத் தன்மை குறைந்ததால் தேசிய அங்கீகாரத்தை இழந்திருக்கலாம். இது போன்று இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், இன்றைய குரல்களினால் அந்த அந்தஸ்து மீண்டும் கிட்டலாம்.
>>>தலைவரிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது ---
இது நல்லதா அல்லதா என்றும் தாங்கள் அலசவேண்டும். படிப்பறிவு உள்ளவர்களிடமும் இவ்வாறான போக்கு தமிழகத்தில் காணப்படுகிறதா?
குஜராத், டில்லி போன்ற ஒப்புமைகள் மொத்தமாக உங்கள் தியரியைக் கொண்டுவர பொதுமைப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்துத்துவா, பூகம்ப மீட்புப் பணி, டில்லியின் வளர்ச்சி என்று பல பரிமாணங்களை சேர்த்துக் கொள்ளாமல் 'தலை'க்குக் கிடைத்த வோட்டு என்பது சரியான conclusion ஆகாது. தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற முடிவுகள், குஜராத்தில் வேறு மாதிரி அமைந்ததையும் குறிப்பிடலாம்.
ஜானகி, ஜெயலலிதா என்று தலைவரைப் பார்த்து அப்பொழுது ஓட்டு விழுந்தாலும், அமெரிக்கா முதற்கொண்டு ஆண்டிப்பட்டி வரை (டயலாக் சொருகலுக்கு மன்னிக்க); கெர்ரி முதல் கருணாநிதி வரை பண பலம் அதி முக்கியம்... இந்த டாலர்/ரூபாய்களே தாக்குப்பிடித்தலுக்கு உறுதுணையாக இருக்கிறது. இதன் மூலமே பத்து பன்னிரெண்டாண்டுகள் சட்டசபையைக் கைப்பற்றாவிட்டாலும், 1989களில் ஆட்சியப் பிடிக்க உதவுகிறது.
தங்களின் நூறு வாக்காளர் எடுத்துக்காட்டு ரசிக்கத்தக்கது. இதற்குத் தீர்வாக ஐரோப்பாவின் சில நாடுகளில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றலாம். அனைவருக்கும் தேர்தல் வைத்து, பின் முதல் மூன்று/நான்கு இடங்களில் நிற்போரை மட்டும், மீண்டும் தேர்தல் வைப்பது (அல்லது) திருமாவளவன் சொல்லும் இரட்டை வாக்குரிமை (அல்லது) இவர் முதல் விருப்பம், மற்றவர் இரண்டாவது விருப்பம், மூன்றாவது விருப்பம் என்று பட்டியல் கொடுப்பது போன்றவற்றைக் கொண்டு வரலாம். தலை-யை பார்த்தே வாக்களிக்கிறார்கள்; -- எனவே, மாநிலத்தில் கூட்டணி ஆட்சி ஒவ்வாது என்பது நீங்கும்.
ஜெயலலைதாவின் அராஜகப் போக்கு, ஸ்டாலின் மேலான மேம்பால ஊழல் புகார் போன்றவை கூட்டணி ஆட்சியில் வெகுவாக கட்டுக்குள் வரும்.
>>இரண்டாம் பகுதி நிறைவேறும் முன் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறுக்கு சால் ---
அப்படியானால், என்னதான் இகழ்ந்தாலும், சீனியர் மாணாக்கன் போல் ரேகிங் செய்தாலும் பொறுத்துத்தான் போக வேண்டுமா? வார்டனாகிய மக்களிடம் முறையிடுவதல் கூட தவறா!?
>>>>கூட்டணி ஆட்சி பற்றிப் பேசினால் பதவி போனாலும், பழியை கருணாநிதி மீது போட்டு முகத்தைக் காப்பாற்ற்றிக் கொள்ளலாம் -----
பதினாறு எம்.பிக்களை வைத்துக் கொண்டு ஆறோ ஏழோ அமைச்சர்கள். பிஹாரில் ஆட்சி மாற்றம். முலாயமின் மத்திய ஆட்சி வருகை நடக்கலாம். அவர் வைத்துள்ள எம்.பி.க்களுக்கு அனுபவ அடிப்படையில் அல்லாமல், விகிதாசார அடிப்படையில் கேபினெட் பதவிகள் கோருவாரோ என்னும் ஹேஷ்யங்கள். அதற்கு தி.மு.க.வின்
முகத்தைக் காப்பாற்ற்றிக் கொள்ளும் திட்டம்( Face Saving technique) என்று கழுகார் கூறுகிறார்.
Post a Comment