Friday, October 15, 2010

வெறும் நாள்களாகும் திருநாள்கள்

என் ஜன்னலுக்கு வெளியே விரியும் வீதி முனை ஒரு வியாபாரத் தலமாகி வெகு நாள்களாகி விட்டது.பழமும் பூவும் விற்கிற அந்த நடமாடும் கடைகள் பண்டிகை நாள்களில் புது வேடங்கள் புனையத் துவங்கும். பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வரும் காலத்தில், ஏரிகளிலிருந்து வாரி வரப்பட்ட களிமண், அச்சுக்களில் அழுத்தப்பட்டு, விநாயக்ராக வடிவம் பெறும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வண்ணக் குடைகளும் ஆனைமுகத்தாருக்கு அருகிலேயே கடை விரித்திருக்கும்.நவராத்திரி நாள்களில் ஜம்மென்று பொம்மைகள் நம்மை வரவேற்கும்.பொரியும், பூசணியும் கூவி விற்கப்பட்டால் ஆயுத பூஜை வந்துவிட்டது என அர்த்தம். தீபாவளிக்குப் பட்டாசுக் கடைகளும், பொங்க்லுக்கு கரும்பும் நாள்காட்டிகள் இல்லாமலேயே நமக்குக் காலத்தை அறிவிக்கும்.

பருவத்திற்கேற்ப பண்டங்களை மாற்றும் இந்த நடைபாதை வணிகர்களின் நம்பிக்கை என்னை நிறையவே யோசிக்க வைதததுண்டு. பண்டிகைக்கால தேவைகள் மீதும், பக்தியைப் பிரகடனப்படுத்த எண்ணும் வாடிக்கையாளரின் ஆவல் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமல்ல, தங்கள் மீதும் வாழ்வின் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அபாரமானது. கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் அடித்தளமாக உள்ள இந்த நம்பிக்கை விற்பனைக்கல்ல. ஆனால் நம்பிக்கை இல்லாது போனால் எந்த விற்பனையும் இல்லை.

நம் நம்பிக்கைகளின் கொண்டாட்டமே நம் பண்டிகைகள். ஒரு காலத்தில் அவை இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் உறவை எண்ணி மகிழும் நன்நாளாக இருந்தன. உழைப்பைப் போற்றவும், ஊரின் ஒற்றுமையைப் பேணவும், கலைகளை கெள்ரவிக்கவும் உகந்த தருணங்களாக அந்தத் திருநாள்கள் திக்ழந்தன.
நனைத்துப் போகும் நதியை நினைத்து மகிழ ஓர் ஆடிப்பெருக்கு..வானத்தில் ஊர்ந்தாலும் இத்தரையில் ஒளிபரப்பும் நிலவுக்கு ஒரு சித்திரைப் பெளர்ணமி.. கரகமும், காலற்ற ’பொய்’ குதிரைகளும் நடம் புரிய்ம் கோயில் கொடை. காவடி கட்டுதலின் வழியாக வாழ்வில் சமநிலையைக் கற்றுத் தரும் வைகாசிப் பால்குடங்கள். ஊர் கூடி இழுத்த தேரில் உட்கார்ந்து வந்த சமூக ஒற்றுமை.. கதிரவனுக்கும், கழனிகளுக்கும், காளைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாக அமைந்த பொங்கல்.. கருவிகளை வணங்குவதற்கு வந்த ஆயுத பூஜை.

எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் ஏதோ அர்த்தம் இருந்தது.. அறிவதற்கும் பகிர்வதற்கும் அந்தப் பண்டிகைகள் வாய்ப்பளித்தன.

இன்று அவை வீட்டில் படுத்துறங்கும் விடுமுறைத் தினங்களாக ஆகிவிட்டன. சாரமற்ற சம்பிரதாயமாக, சிந்தனை அற்ற சடங்குகளாக முடங்கிப் போயின. இல்லையென்றால் கூளங்களைக் களைவதற்காக, குப்பைகளை அப்புறப்படுத்த, அமைந்த போகித் திருநாளில் நாம் டயர்களைக் கொளுத்தி சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்க மாட்டோம்..திருவிழாக்களை மது விழாக்களாகத் திரித்திருக்க மாட்டோம். கம்பீரம் தொனிக்க வேண்டிய கலை அசைவுகளை சீழ் பிடித்த சினிமாப் பாட்டிற்கு ‘ஸ்டெப்’ போட் வைக்கும் சிறுமையாகக் குறுக்கியிருக்க மாட்டோம்..

ஊரோடு கலந்து உற்வாடக் கிடைத்த ஒரு வாய்ப்பை, தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்து, பார்த்துச் சலித்த, அல்லது பார்க்கத் தவிர்த்த படங்களைக் கண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க மாட்டோம்.

இன்று இயற்கையோடு நம்க்கு இருக்கும் உறவை நினைவு படுத்துவது இந்தத் திருநாள்கள் அல்ல. விளக்குகளை அணைத்து வைக்கும் 10 10 10 இருள் நாள்களே...

.இனி ஒரு விதி செய்வோம்

ஓவ்வொரு திருநாளையும், தின்று விளையாடி இன்புற்று இருக்கும் நாளாக மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு உதவும் ஓர்நாளாக மாற்றுவோம். இனி நீர்வளத்தைப் பேண நினைவூட்டுகிற நாளே நமக்கு ஆடிப் பெருக்கு. சமூக நல்லிணக்கதைக் கொண்டாடவே கோயில் கொடை... இயற்கை வேளாண்மைக்கு எடுக்கிற திருவிழாவே பொங்கல். தேசததைத் தின்னும் தீமைகளை வீழ்த்துகிற நாளே தீபாவளி.. எழுத்தறிவற்ற ஒருவருக்கு, அல்லது கணினியைப் பழகியிராத கரங்களுக்கு, கற்றுத் தரும் நாளே சரஸ்வ்தி பூஜை.,. சூழலை மாசு படுத்தாத தொழில்நுட்பத்தை வாழ்த்துகிற நாளே ஆயுத பூஜை..

கடவுள்களை வணங்குவோம். மனிதர்களைப் போற்றுவோம். இயற்கைப் பேணுவோம். இதுவே நமக்குத் திருவிழா.

4 comments:

Anonymous said...

இன்று அவை வீட்டில் படுத்துறங்கும் விடுமுறைத் தினங்களாக ஆகிவிட்டன. சாரமற்ற சம்பிரதாயமாக, சிந்தனை அற்ற சடங்குகளாக முடங்கிப் போயின. இல்லையென்றால் கூளங்களைக் களைவதற்காக, குப்பைகளை அப்புறப்படுத்த, அமைந்த போகித் திருநாளில் நாம் டயர்களைக் கொளுத்தி சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்க மாட்டோம்..திருவிழாக்களை மது விழாக்களாகத் திரித்திருக்க மாட்டோம். கம்பீரம் தொனிக்க வேண்டிய கலை அசைவுகளை சீழ் பிடித்த சினிமாப் பாட்டிற்கு ‘ஸ்டெப்’ போட் வைக்கும் சிறுமையாகக் குறுக்கியிருக்க மாட்டோம்..

ஊரோடு கலந்து உற்வாடக் கிடைத்த ஒரு வாய்ப்பை, தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்து, பார்த்துச் சலித்த, அல்லது பார்க்கத் தவிர்த்த படங்களைக் கண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க மாட்டோம்.

இன்று இயற்கையோடு நம்க்கு இருக்கும் உறவை நினைவு படுத்துவது இந்தத் திருநாள்கள் அல்ல. விளக்குகளை அணைத்து வைக்கும் 10 10 10 இருள் நாள்களே...

இதை எல்லாம் உணர்ந்தும் நவீன நாகரீகத்தோடு நடை போடுவதாய் மேற்ச்சொன்னதை தானே செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.. பொருளற்ற நாட்களாய் திருநாள்கள் கசக்கிறது இந்த உண்மை... நல்ல பகிர்வு மாலன் அவர்களே....

Swetha said...

மாலன் ,
உங்களின் எழுத்து ஏனைய எழுத்துலக மக்களின் விருப்பம் என்பது, என்னை போன்றோர்களுக்கு தெரியும், எழுத்தின் பயன் எல்லோரையும் சென்றடைவதே!. உங்கள் எழுத்துக்களை ஜீஜிக்ஸ்.காம் (jeejix.com) தளத்தில் பதியுங்கள், அதிக மக்களை சென்றடையுங்கள். அதிகம் பேர் படித்திருந்தால் உங்களுக்கு பரிசு பெரும் வாய்ப்பும் இருக்கிறது. சமுதாய முன்னேற்றமே எண்களின் நோக்கம் !. தங்கள் வரவை நோக்கி!. - ஸ்வேதா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இனி ஒரு விதி செய்வோம்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்த ஏக்கங்களின் நிழலாக உங்களின் அபாரமான எண்ணங்கள் மாலன்.

சலிப்பின் எல்லைக்குச் சென்று திரும்பத்தான் போகிறோம் ஓர்நாள்.