Tuesday, October 05, 2010

நேரம் இதுதானா?


என் ஜன்னலுக்கு வெளியே எழும் ஓசைகளேப் பல நேரங்களில் என்னை விழிப்படையச் செய்திருக்கின்றன. சற்றே கூவும் ஒற்றைக் குயிலின் ஓசைகளாகவே அவை எப்போதும் இருந்ததில்லை. சேவல்கள் சென்னையிலிருந்து விடைபெற்றுச் சென்று வெகு நாட்களாகிவிட்டன. சண்டையிடுவதைப் போல சர்ச்சிக்கும் காக்கைக் குரல்களைக் கேட்டுக் கண்விழிக்கும் காலைகளே வழக்கமாகிவிட்டன. இரைந்து கரையும் இந்தக் காக்கைகளை நாடாளுமன்றத்திலே அமர்த்திப் பார்த்தார் பாரதி. எனக்கென்னவோ இன்று இந்தக் காக்கைகள் ஊடக்ங்களுக்குள்ளே வந்து உட்கார்ந்து கொண்டு விட்டனவோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது.

காமன்வெல்த் போட்டிகள் குறித்து தேசியஊடகங்களில் நடைபெறும் விவாதங்கள்’  ‘சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர், மிகச் சலிப்புத் தருகிறத்டி சகிப் பெண்களேஎன்ற மகாகவியின் வார்த்தைகளை நினைவிற்குக் கொண்டு வ்ருகின்றன.

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் என்பதில் மறுப்பேதுமில்லை. அதைச் சுட்டிக் காட்ட வேண்டியது ஊடகங்களின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு செயற்கைக் கூரையிலிருந்து நான்கைந்து தெர்மகோல் துண்டுகள் பிரிந்து விழுந்து விட்டதை அரங்கின் கூரையே இடிந்து விழுந்து விட்டதைப்போல மிகைப்படுத்திப் பரபரப்பு ஏற்படுத்துவது ஊடகங்களின் பொறுப்புணர்வைக் காட்டவில்லை. நடைபாதைப் பாலம் சரிந்து விழுந்ததை ஏதோ நாடே சரிந்துவிட்டததைப் போல விவரிப்பது அத்தனை ஆரோகியமானதில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில சில நீர் கசிவதாகவும், சுகாதாரமற்ற பராமரிப்போடும் இருந்திருக்கக் கூடும் மறுக்கவில்லை..ஆனால் எல்லா குடியிருப்புகளுமே அப்படி இருப்பதைப் போல சித்தரிப்பது முறையானதல்ல.

எதிர்மறையாகச் செய்திகள் வெளியிட்டுப் ஏதோ தீப்ப்பிடித்ததைப் போன்ற பரபரப்பை ஏற்படுத்துவது  துரதிருஷட்வச்மாக நம் ஊடகங்களின் வழக்கமாகிவிட்டன.ஆனால் வியாபாரப் போட்டி விளைவிக்கும் வெற்று ஆரவாரங்கள், தேசத்தைத் தின்றுவிட அனுமதிக்கலாமா?  காமன்வெல்த் போட்டிகள் குறித்த எதிர்மறையான செய்திகளை வெளியிட ஊடகங்கள் தேர்ந்தெடுத்த நேரம் சரியானதுதானா?

போட்டிகளில் பங்கேற்ற்க அயல்நாடுகளில் அணிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம் அது. ஊடகங்களின் ஓலத்தைக் கேட்டுப் போட்டிக்கே போகவேண்டாம் என அவை ஒதுங்கிக் கொண்டுவிட்டால், அவமானம் யாருக்கு? இந்தியாவிற்கு, என்பது எந்தச் சின்னக் குழந்தைக்கும் தெரியும்.
ஒரு தேசத்திற்கு ஏற்படும் அவமானம் என்பது அதன் ஒவ்வொரு பிரஜைக்கும் ஏற்படும் அவமானம்

இன்னொருபுறம், இந்தமுறை சொந்த மண்ணில்  நடக்கும் போட்டி என்பதால் பதக்கங்களைக் குவிக்கத் இந்திய வீரர்கள் தங்களைப் பட்டைதீட்டிக் கொண்டிருந்த இறுதிக் கணங்களும் இவைதான். போட்டிகளையே கேலிக் கூத்தாகச் சித்தரிக்கும் செய்திகள் நிச்சியம் அவர்களின் செஞ்சுறுதியைக் குலைக்கும்.

காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்கங்கள் அமைப்பதில் அளவு கடந்த காலதாமதம் ஏற்பட்டது உணமை. ஆனால் அந்தத் தாம்தத்தைக் கடைசி நிமிடம்வரை கண்டு கொள்ளாமல் மெள்னம் சாதித்த ஊடகங்கள் இப்போது ஏன் உரத்து முழ்ங்குகின்றன? இத்தனைநாள் இதுகுறித்து ஊடகங்கள் சாதித்த கள்ள மெளனம் அவையும் கடமை தவறியதன் அடையாளம் அல்லவா? கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வ்ரும் வேலைகள் சுணங்கியபோதெல்லாம் செய்தி வெளியிட்டிருந்தால் அவை வேலைகளை விரைந்து முடிக்க உதவியிருக்கலாம். இன்னும் சில நாள்கள் என்னும் நிலையில் எழுப்பப்படும் குரல்களால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?



ஊடகங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகம் இந்தக் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவின் போட்டியாகத்தான் எண்ணுகின்றன. போட்டியில் நாம் பெறுகிற பதக்கங்களைவிட, போட்டியை நாம் எப்ப்டி நடத்துகிறோம் என்பதில்தான் நம் கெள்ரவம் இருக்கிறது.

இந்தியர்களைப் பற்றி எப்போதுமே ஒரு விமர்சனம் உண்டு. தனித் தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு இந்தியரும் அபார ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் அவர்களிடையே ஒரு அணியாக இணைந்து செயல்படும் இணக்கம் கிடையாது. என்று உலகம் நம்மைப்பற்றி எடை போட்டு வைத்திருக்கிறது. அது உண்மைதானோ என்பதைப்போல காம்ன்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் தொடர்புள்ள பல அமைச்ச்கங்களுங்கிடையே ஒற்றுமை உணர்வு இல்லை, அமைச்ச்கங்களும் அதிகாரிகளும ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதைப் போல பிரதமரே பேசியிருக்கிறார்.

இந்தியாவின் இன்னொரு பலவீனம் என உலகம் எண்ணுவது நாடு முழுக்கப் புரையோடிப் போயிருக்கும் ஊழல். இதுவும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியிருக்கக் கூடும். அப்படியிருந்தால் அவை அம்பலப்படுத்தப்பட வேண்டும், அரங்கிற்குக் கொண்டு வந்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால் அதெல்லாம் அப்புறம். விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பின்னால்.

ஊழல், ஒற்றுமையின்மை என்ற இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா நிமிர்ந்து நிற்க வேண்டிய தருணம் இது. உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு திருவிழா நம் பொறுப்பில் நடக்கவிருக்கிறது, சின்ன சின்ன ப்லவீனங்களைப் ஊதிப் பெரிதுபடுத்தாமல் ஊடகங்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசமும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.


புதிய தலைமுறை இதழுக்காக 26.9.2010 அன்று எழுதிய்து

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நாமே நடந்து (போய்க்) கொண்டிருக்கிறோம். கல்
தடுக்கிவிடுவதில்லையா? அதற்காக, 6 மாதங்கள்
படுக்கையில் படுத்து ஓய்வா எடுக்கமுடியும்?
ஒரு விஷேச காரியம் ஏற்பாடு செய்யும்போது,
தாங்கள் சொன்னதுபோல் மேற்கூரையின் சில
தெர்மகோல் துண்டுகள் விழுவதும் கட்டிக்கொண்டிருக்கும்
நடைபாலம் சரிவது சகஜம்தான்.
ஊடகங்கள் இப்போது, அந்தச் செய்திகளை
விபரீதப்படுத்தியிருக்க வேண்டாம்.
மேலும் ஊழல்கள்பற்றி பிறகு விவாதிக்கலாமே!
தன்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.