Sunday, February 08, 2009

தொண்டர்தம் பெருமை

தோட்டம் எனப் பெயர் கொண்ட பகுதிகள் பல சென்னையில் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பலவற்றில் தாவரங்களைப் பார்ப்பதென்பதே அரிதாக இருக்கும். அரசினர் தோட்டம் கான்கிரீட் வனமாக மாறி வருகிறது. போயஸ் தோட்டத்தைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. மந்தவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே கபாலி தியேட்டருக்கு அருகில், மயிலைக் கோயிலுக்குச் சொந்தமாக' கபாலி வன போஜன மண்டபம்' ஒன்று இருக்கிறது. வனம் என அதை நம்ப கற்பனை வேண்டும். என்றைக்காவது அங்கு வந்து போஜனம் செய்திருக்கிறாரா என்பதை கபாலியிடம்தான் கேட்க வேண்டும்.

ஆனால் ராமாவரம் தோட்டம் (அன்று) ஒரு பூங்காவைப் போலிருந்தது. வீட்டை நோக்கிப் போகும் மண் பாதையில் தங்கரளிப் பூக்கள் இறைந்து கிடந்தன. தலையில் தீப்பிடித்த மாதிரி ஒரு குல்மோகர் மரம் என்னைப் பற்றி ஒரு கவிதை எழுது எனச் சொல்லிக் கொண்டு கடந்து போயிற்று. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை கவிதை எழுதுவது அல்ல. எம்.ஜி.ஆருடன் ஒரு நாள் முழுதும் கூட இருந்து அவரது அசைவுகளைக் கவனித்துக் கட்டுரை எழுத வேண்டும் என்பது

முந்தைய வாரம் அவரது ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்குத் தினம் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டத்தை'ப் புள்ளி விவரங்களோடு கடுமையாக விமர்சித்திருந்த என் கட்டுரைக்குப் புன்னகை மாறாமல் விளக்கமளித்தபடியே காலைச் சிற்றுண்டி அருந்திய எம்.ஜி.ஆர். திடீரென்று கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘போகலாமா' எனக் கேட்டுக் கொண்டே எழுந்தார்.

எங்கள் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே மின்சாரம் பாய்ந்தது.பரபரப்பான சில நொடிகளில் அவரது கார், முன்னால் ஒரு பைலட் ஜீப்,
பின்னால் இரண்டு கார்கள் என ஒரு வாகன வரிசை தயாரனது. முன் சீட்டில் ஏறத் தயாரான உதவியாளரை ஜீப்பிற்கு அனுப்பிவிட்டு என்னை அந்த இருக்கையில் உட்காரச் சொல்லி விட்டு, பின் சீட்டில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். தோட்டத்துக் கதவுகள் விரியத் திறக்க அந்த மினி அணிவகுப்பு சாலையில் திரும்பியது. ஒரு பத்தடி சென்றிருக்கும். அன்று அந்த இடத்தில் ஒரு குறுகலான பாலம் இருந்தது. அந்தப் பாலத்தைக் கடக்க காரின் வேகம் குறைந்த தருணத்தில்-

மின்னல் போல காரின் குறுக்கே பாய்ந்தார் ஒருவர். அவரது பாய்ச்சலைக் கையைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தார் அவர் மனைவி. கண நேரம் தாமதித்திருந்தால் கார் அவரை அரைத்துக் கொன்றிருக்கும். ஆனால் ஓட்டுநர் அனுபவம் வாய்ந்த கெட்டிக்காரர். வண்டியை நிறுத்தி விட்டார்.

முதல்வரின் வண்டி நின்று விட்டதைக் கண்ட பைலட் ஜீப்பிலிருந்த போலீசார் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வந்தனர். குறுக்கே பாய்ந்தவரின் கையைப் பிடித்து முதுகுப் பக்கமாக வளைத்துக் கொண்டு செவிட்டில் ஒரு அறை விட்டார் காவலர். பின்னால் காரில் வந்த உதவியாளர்களும் இறங்கி எம்.ஜி.ஆரின் ஜன்னலருகே வந்து நின்றனர். ‘அடிக்க வேண்டாம். கோட்டைக்குக் கொண்டாங்க' என ரத்தினச் சுருக்கமாக உத்தரவிட்ட எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்து நெற்றிப் பொட்டருகே ஆள் காட்டி விரலை சுழற்றிக் காட்டிச் சிரித்தார். அந்த நபரை ‘அள்ளிப் போட்டுக் கொண்டு' பயணம் தொடர்ந்தது.

நாங்கள் கோட்டையை அடைவதற்குள் ஜீப்பில் இருந்த காவல்துறை அந்த நபரைப் பற்றிய விவரங்களைத் திரட்டியிருந்தது. எம்.ஜி.ஆர். நினைத்ததைப் போல அவர் ‘லூசு' இல்லை. கட்சித் தொண்டர். அவர் அணிந்திருந்த அழுக்கேறிய கரை வேட்டியும், கசங்கிய சட்டையில் அவர் வைத்திருந்த எம்.ஜி.ஆர் பட ஸ்டில்லும் அதை உறுதி செய்தன. மானமதுரைக்குப் பக்கத்திலுள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து வந்திருந்தார். இரண்டு நாள்களாக, கோட்டை, தி.நகர் இல்லம், கட்சி அலுவலகம், தோட்டம் என எங்கு முயற்சித்தும் அவரால் அந்தக் கட்டிடங்களின் கேட்டைக் கூட நெருங்க முடியவில்லை. எங்கே போனாலும் துரத்தி அடித்தார்கள். எம்.ஜி.ஆரிடம் இரண்டு வார்த்தை பேசாமல் ஊருக்குத் திரும்புவதில்லை என சபதம் செய்து விட்டு வந்திருந்தார். வேறு வழி தெரியவில்லை. காரின் முன் பாய்ந்து விட்டார்.

எம்.ஜி.ஆர் அவரை ஏற இறங்கப் பார்த்தார். ‘இப்படித்தான் செய்யறதா?' என்று கேட்டார். அந்த நபர் ஏதும் பேசாமல் தடாலென்று காலில் விழுந்தார். அவர் மனைவி கண்களில் நீர் தளும்ப கைகள் நடுங்கியவாறே கும்பிட்டார். எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்து, “குழந்தைங்க எத்தனை?” என்றார். அந்தப் பெண் இரண்டு விரல்களைக் காட்டினார். “ஆம்பிளைக்குத்தான் அறிவில்லைனா, பொம்பளை நீ புத்தி சொல்ல வேண்டாமா” என்றார். அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு பெரும் விசும்பல் புறப்பட்டது.

உயிரைத் திரணமாக எண்ணிக் காரின் முன் பாய்ந்த அந்த நொடிகளில் அவர் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்? செத்தாலும் பரவாயில்லை, ஊர் முன் போட்ட சபதத்தைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற வைராக்கியமா? தலைவருக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற வெறியா? தலைவர் காரில் அடி பட்டுச் செத்தால் பணம் கிடைக்கும் என்ற ஆசையா? நாம் செத்தாலும் குடும்பத்தையும் குழந்தைகளையும் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையா?

தெரியாது. கற்பனையில் இதற்கு விடைகளைத் தேடலாம். ஆனால் அவை சரியானவையாக இருக்க அவசியமில்லை. நான் அவராக ஆகும் வரையில் அந்தக் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காது. என்றோ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.மோட்டர் சைக்கிளில் போனால், போகும் போது முகத்தை வருடிச் செல்லும் ஈரக் காற்றில் சிலிர்க்கலாம்; காலால் மன்ணைத் தொட்டுப் பார்க்கலாம்; மரத்திலிருந்து உதிரும் பன்னீர்ப் பூவின் வாசத்தை நுகரலாம். ஆனால் காரில் போனால். கண்ணாடிக்குள்ளிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறெதுவும் சாத்தியமில்லை. மோட்டார் சைக்கிளில் போகும் போது நீ பங்கேற்பாளன் (participant)காரில் செல்லும் போது நீ ஒரு பார்வையாளன் மட்டுமே. பார்வையாளனுக்குக் காட்சிகள் கிட்டும்; உண்மை அகப்படாது. வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு சத்தியம் தெரியாது என எழுதுகிறான் பாரதி.

அரசியலில் இருக்கும் அடி மட்டத் தொண்டர்களது வாழ்க்கை பற்றி தமிழில் புனைவாகக் கூட அதிகம் பேர் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். அசோசகமித்ரன், காத்திருத்தல் என்று ஒரு நீண்ட சிறுகதை எழுதியிருக்கிறார். தேர்தலில் தான் உழைத்த கட்சித் தோற்றுப் போகிற போது ஒரு தொண்டன் எதிர்கொள்கிற மன அழுத்தங்களையும், வன்முறையையும் பற்றிப் பேசுகிற அந்தக் கதை நாம் கண்டுவரும் காட்சிகளின் உண்மைக்கருகில் நிற்கிறது. ஆனாலும் அது ஒரு புனைவுதான். தமிழின் அபூர்வமான புனைவுகளில் ஒன்று.

“அவன் பேசுவதற்கு ஆளொருவரும் கிடைக்காமல் ஒரு வழியாகச்
சென்று அவன் நேற்றுவரை கூடப் பலரைக் கூட்டி, சந்தித்துப் பேசி,
முடிவுகள் எடுத்து, படித்து, உணவுண்டு, தூங்கி, தண்ணீர் குடித்த
கீற்றுக் கொட்டகைக்குச் சென்றான்.தெருவோரத்தில் அது
அநாதையாக இருந்தது. அதன் பக்கத் தடுப்புகளிலும்
கூரையிலிருந்தும் ஒட்டியும் எழுதியும் தொங்கவிட்டிருந்ததுமான வாக்கியங்கள், பெயர்கள், வேண்டுகோள்கள், எச்சரிக்கைகள்,
ஏச்சுப் பேச்சுகள் எல்லாமே இன்று அர்த்தமற்றதாகக் காட்சி அளித்தன. அர்த்தமற்ற தனமையில் அவைகளை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு
வந்த அவனைக் குருடன், செவிடன், முட்டாள் என்று கேலி செய்வதைப் போலக் கூட காட்சி அளித்தன”

இந்த வரிகளில் தோற்றுப் போன கட்சித் தொண்டனைவிட, அசோகமித்திரனை நாம் அதிகம் காணமுடியும். இவ்வளவு சிந்தனையும் நுண்ணுணர்வும் கொண்ட ஒருவன், வீதியில் இறங்கிச் சண்டையிடுகிறவனாகவும் கோஷமிடுகிறவனாகவும் இருப்பானா என்ற கேள்விகளும் நம்முள் எழும். அ.மி. இந்தக் கதையை 70 களின் துவக்கத்தில் எழுதியிருக்க வேண்டும் (ஆகஸ்ட் 72ல் அவரே பதிப்பித்த இன்னும் சில நாட்கள் தொகுப்பில் அது இடம் பெற்றிருக்கிறது). அறுபதுகளின் இறுதியில் லட்சிய உந்துதல்களும், தன்னுணர்வும் கொண்ட தொண்டர்கள் அரசியல் கட்சிகளுக்கு வாய்த்திருக்கக் கூடும். ஆனால் 2000ல் ‘லும்பன்' சக்திகள் தேர்தல்களின் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டன.

அப்படிப்பட்ட ஒரு தொண்டனாக, ஆட்சி மாறும் போது, அடி, வலி, பயம், அவமானம், சிறைவாசம் எல்லாவற்ரையும் நிஜமாக எதிர்கொண்ட ஓர் இளைஞரது வாழ்வனுபவங்களை அண்மையில் வாசிக்க நேந்தது. ஜோதி நரசிம்மன் என்பவர் எழுதிய ‘அடியாள்' என்ற அந்த சிறு புத்தகம், (கிழக்குப் பதிப்பக வெளியீடு) நம் சமகால அரசியலின் அறியப்படாத பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஜோதி நரசிம்மன் விழுப்புரத்தில் வசித்து வந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். ஐ.டி.ஐ. படித்தவர்.வன்முறையின் மீதுள்ள காதலால் ஒரு தாதாவிடம் போய்ச் சேர்கிறார். இரண்டு முறை சிறை செல்கிறார். அடியாளாக ஒரு முறை. அரசியல் வாதியாக ஒரு முறை. அவரது அனுபவங்களை நூல் பேசுகிறது.

“ நான் விதிர்விதிர்த்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். குமாரைப்
படுக்க வைத்து, கால் முட்டிக்குக் கீழே இருந்த பகுதியில், லாடம் பொருத்தப்பட்ட பூட்ஸ் காலோடு ஏட்டு ஏறி நின்று கொண்டார். அந்த எஸ்.ஐ. கையிலிருந்த மூங்கில் தடியால் குமாருடைய கால் பாதத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தார் ஒவ்வொரு அடியும் இடி போல் இறங்கியது. . . . .. ..என் தொடை வேகமாக ஆட ஆரம்பித்தது. அடுத்து எங்களில் யாரோ ஒருவரைத்தான் அந்த சப் இன்ஸ்பெகடர் அடிக்கப் போகிறார். யாரை?
ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. என்னை அவர் அடித்தால், அதற்குப்
பிறகு நான் ஜெயிலுக்குப் போக மாட்டேன். லாக்கப்பிலேயே பிணமாகி விடுவேன். அந்த அடியில் ஒன்றைக் கூட என்னால் தாங்க முடியாது”
*
தலைவர்களுக்காத் தங்களது குடும்பத்தைப் புறக்கணித்து, எதிரிகளிடமும், போலீசிடமும் அடி வாங்கி, உயிரையும் துறக்கத் தயாராக உள்ள தொண்டர்களுக்கு நம் அரசியல் தலைவர்கள் தரும் வெகுமதி என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, முன்னாள் துணைப் பிரதமர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா, முன்னாள் துணைப்பிரதமர் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி, முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஷரத் பவாரின் மகள் சுப்ரியா, ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், முன்னாள் மக்களவை தலைவர் சங்மாவின் மகள் அகதா சங்மா, பாரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா, (காஷ்மீர் முதல்வர் ஆகும் முன்) ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மறைந்த மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ராஜஸ்தான் மாநில முதல்வருமான விஜயராஜே சிந்தியாவின் மகனுமான துஷ்யந் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த், முஃப்தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா, மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மறைந்த முன்னாள் அமைச்சர் சுனில்தத்தின் மகள் பிரியா, மறைந்த முன்னாள் அமைச்சர் பகுகுணாவின் மகன் விஜய் பகுகுணா, பா.ம.க.நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, மூப்பனாரின் மகன் வாசன் என நாடாளுமன்றம் ஏகப்பட்ட வாரிசுகளால் நிறைந்து கிடக்கிறது.

தேவகெள்டாவின் மகன்கள் குமாரசாமி, அவரது மனைவி அனிதா, குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா, கர்நாடக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். தேவிலாலின் மகன் செளதாலா ஹரியானா அரசியலில் வலுவான ஓர் சக்தி. முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.பி.சவானின் மகன் அசோக் சவான் மகராஷ்டிர முதலமைச்சர். பிஜு பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஒரிசாவின் முதல்வர்.

கட்சிக்குச் செலவிடுகிறவர்களுக்கு அமைச்சர், வாரியத் தலைவர், மாவட்ட செயலாளர் பதவிகள். மணல் குவாரி, அரசின் சிறு காண்டிராக்ட்கள், உள்ளூர் அளவிலான சிறு பதவிகள் இவையெல்லாம் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு.

தலைவர்களுக்காத் தங்களது, குடும்பத்தைப் புறக்கணித்து, எதிரிகளிடமும், போலீசிடமும் அடி வாங்கி, உயிரையும் துறக்கத் தயாராக உள்ள தொண்டர்களுக்கு?

***
அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் எழுதிய்து.

5 comments:

enRenRum-anbudan.BALA said...

நல்லதொரு இடுகைக்கு நன்றி, மாலன் சார்.

//தலைவர்களுக்காத் தங்களது, குடும்பத்தைப் புறக்கணித்து, எதிரிகளிடமும், போலீசிடமும் அடி வாங்கி, உயிரையும் துறக்கத் தயாராக உள்ள தொண்டர்களுக்கு?
//
அல்வா தான், வேறென்ன ? இப்போது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஸ்டேட்ஸ்மென் இல்லை. பிற நாடுகளிலும் தொண்டர்கள் உள்ளார்கள். இங்கே இருப்பது போல ஏமாளிகள் அல்லர்.

இதற்குத் தீர்வு கல்வி ஒன்று தான். அது சிந்திக்க வைக்கிறது.

எ.அ.பாலா

naan said...

தொண்டர்களின் ரத்தத்தில் உருவான சுயநலவாதிகள்.

குப்பன்.யாஹூ said...

பதிவு அருமை.

ஆனால் தொண்டர்களை பற்றி என் உயிர் தோழன், சத்யா போன்ற திரை படங்கள் மிக அருமையாக தமிழில் சொல்ல பட்டுள்ளன.

ஆனால் பல தொண்டர்களும் பதவி பெற்றுள்ளனர்கள், கருப்பசாமி பாண்டியன், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், சிவாஜி ரசிகர் மன்ற தொண்டர் ராஜசேகர் இன்று சட்ட மன்ற உறுப்பினர்., தொண்டராக இருந்த தூத்துக்குடி பெரியசாமியின் மகள் இன்று மாநில அமைச்சர்.


இன்றைய தொண்டர்கள் மிக விவரமானவர்கள், ஒரு தெருமுனை பொதுக் கூட்டம் நடத்த கட்சியில் பத்தாயிரம் வாங்கி கொண்டு ஆறாயிரம் செலவு செய்து விட்டு நாலாயிரத்தை லவட்டுகின்றனர்.

எங்கு பணம் தருகிறார்களோ அங்கேதான் தொண்டர்களும் செல்கின்றனர். ஆறு மாதம் வரை விஜயகாந்த் ரசிகன், கட்சியின் வட்ட செயலாளர்ராக் இருந்து விட்டு சரத் குமார் பாத்து லட்சம் தந்ததும் மாவட்ட செயலாளர் ஆகி விட்டார் கிண்டி வேணு என்ற தொண்டர்.

நேடுர் வரை வைகோ கட்சியில் தொண்டனாக இருந்து விட்டு இன்று பதவி பணம் தருகிறார்கள் என்றதும் வேட்டி கரையை மாற்றிய சபாபதி மோகன் பற்றி என்ன சொல்வது.

பணமும் பாட்டிலும் கொடுக்காவிட்டால் இன்று எந்த தொண்டனும் கொடி புடிக்கவோ கோஷம் போடவோ வர மாட்டான் என்பதே நிதர்சனம்.

இன்று விஜயகாந்த், சரத் குமார் பின்னால் செல்பவர்களும் என்றாவது கே கே எஸ் எஸ் ஆர், சென்கொட்டையனாக மாற மாடோம என்ற ஆசையிலேயே செல்கின்றனர்.


அந்த வகையில் ஒரு உண்மையான அடிப்படை தொண்டனாக உள்ள சிப்பிபாறை ரவிச்சந்திரனை பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய வைகோவை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

குப்பன்_யாஹூ

ஆர். முத்துக்குமார் said...

கட்டுரையை அம்ருதாவிலேயே படித்துவிட்டேன். ஒரேயொரு விடுபடல். ஈ.வெ.கி. சம்பத்தின் மகன் ஈ.வெ.கி.ச. இளங்கோவனை விட்டுவிட்டீர்கள்.

kankaatchi.blogspot.com said...

இப்போது இருக்கும் தொண்டர்கள் சுயமாக சிந்திப்பதில்லை
அவ்வாறு சிந்திக்க அவர்கள் சார்ந்த கட்சி தலைவர்களும் விடுவதில்லை
சுயமாக சிந்தித்தால் அவர்கள் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்படுவார்கள் அல்லது ஒழிக்கப்பட்டுவிடுவார்கள்
கட்சி தலைமை எதை சொல்கிறதோ அதை செயல்படுத்துவதுதான் இன்றைய நிலைமை
முடியாதவர்கள் கட்சி மாறி கொண்டு இருக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின் காணாமல் போய்விடுகிறார்கள்.
இந்த நிலைதான் இந்திய நாடு முழுவதும்.