Tuesday, January 13, 2009

கிளிநொச்சிக்குப் பின்னால்...

சர்ச்சைக்குப் பெயர் பெற்ற அரிந்தம் செளத்ரியின் The Sunday Indian 14 மொழிகளில் வெளிவருகிறது. அது தமிழிலும் வெளிவருகிறது. ஆனால் தமிழ் இதழில் சர்ச்சைகள் குறைவு. பல நேரங்களில் தரமான, ஆழமான கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன.

அண்ணா நூற்றாண்டை ஒட்டி அது வெளியிட்ட இதழ் ஒரு பொக்கிஷம். திராவிட இயக்கங்கள் பற்றி முன்பு ஒரு இதழில் விவாதித்தது.

தமிழ் இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் இளைஞர் அசோகன் கால்நடை மருத்துவர். ஆனால் இதழியலிலும் தமிழிலும் இருக்கும் ஈடுபாட்டின் காரணமாக அந்தப் படிப்பை முடித்த பிறகு தில்லி சென்று Indian Institute of Mass communicationல் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அநேகமாக IIMC பட்டம் பெற்ற தமிழ் இதழாளர் இவ்ர் ஒருவராக மட்டுமே இருக்கக்கூடும்.

அவர் இந்த வார தி சன்டே இந்தியனில் இலங்கை நிலைமை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலிப் புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் உணர்ச்சிவசப்பட்ட குரல்கள் ஒலிக்கும் இன்றைய சூழலில் நிதானத்தோடும், நேர்மையோடும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

கிளிநொச்சிக்குப் பின்னால்

என். அசோகன்

இந்தப் புத்தாண்டு விடுதலைப் புலி களுக்கு கெட்ட செய்தியுடன் புலர்ந்தது. ஜனவரி 2-&ம் தேதி கிளிநொச்சி வீழ்ந்தது என்று வந்த தகவல் உலகமெங்கும் உள்ள ஈழ ஆதரவாளர்களை உலுக்கியிருக்கிறது. இன்னும் சற்று வடக்கே போய் ஆனையிறவையும் பிடித்துவிட்டால் யாழ்ப்பாணத்துடனான தரைவழிப் பாதையான ஏ-9 முழுக்க இலங்கை ராணுவம் வசம் வந்துவிடும். போர் தொடர்ந்து நடக்கிறது.
"இழப்புகளைக் குறைக்க பின்னடைவு ஒரு தந்திரோபாயம்" என்றுதான் ஒவ்வொருமுறை நிலப்பரப்பை இழக்கும்போதும் புலிகள் கூறிவருகிறார்கள். இந்த தடவையும் அப்படித்தான் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதற்கு மேலும் தந்திரோபாயம் என்று கூறமுடியாது என்பதுதான் போர் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
புலிகள் இழந்த பகுதிகளை பலமுறை மீட்டிருக்கிறார்கள் என்றாலும், அவற்றில் மிக முக்கியமானது 1998 பிப்ரவரியில் அவர்கள் இழந்த கிளிநொச்சியை 'ஓயாத அலைகள்' என்ற தாக்குதல் மூலம் 1998 செப்டம்பரிலேயே கைப்பற்றியது. பிரபாகரனே அந்தத் தாக்குதலின்போது களத்தில் நேரடியாக இருந்து தாக்குதல்களை வழிநடத்தினார். இலங்கைப் படைகள் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டன.
ஆனால் 1998&ம், 2008&ம் ஒன்றல்ல என்பதுதான் ராணுவ நிபுணர்களின் கருத்து. இலங்கைப் பிரச்னை பற்றி கருத்துச் சொல்பவர்கள் 9/11 தாக்குதலுக்குப் பின்னால் உலகில் மாறியிருக்கும் அரசியல் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறார்கள். "புலிகளின் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டன. கடற்புலிகளும் பலவீனமடைந்துவிட்டனர். 30&க்கும் மேற்பட்ட நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருக்கிறது" என்கிறார் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கர்னல் ஆர். ஹரிஹரன். ஆனால் கிளிநொச்சிப் போரின் போது புலிகளுக்கு ஆயுதங்கள் வந்திறங்கின என்கிற ஊடகங்களின் தகவலும் இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இதற்குமுன்பு இருந்த இலங்கை ஜனாதிபதியான பிரேமதாசா, சந்திரிகா, ரனில் ஆகியோர் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். போரும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர் புலிகளை அழிப்பதை மட்டுமே ஒரே குறிகோளாக வைத்து செயல்படுகிறார். முதலில் விடுதலைப்புலிகளை முடித்துவிட்டு, பிறகு அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று அவரது போக்காக இருக்கிறது. எனவே இந்த ராணுவ நடவடிக்கை மேலும் வலுப்பெறும். கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கு போர்க்களம் இடம்மாறும்.

முல்லைத்தீவு தாக்குப்பிடிக்குமா?


2004ல் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டமான முல்லைத்தீவில்தான் புலிகளின் மிகப்பெரிய ராணுவ முகாம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் ஆயுதங்களும் பீரங்கிகளும் அங்குதான் தற்போது வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிறு விமானப்படையும் அங்குதான் தற்போது ஒளித்துவைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்த மக்களும் இப்போது இங்குள்ள காடுகளுக்குத்தான் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். "இது மிக அடர்த்தியான காடுகள் நிறைந்த பகுதி. ராணுவ நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்வதே கடினம்" என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள். இங்கு எம்மாதிரியான பாதுகாப்பு அரண்களை புலிகள் உருவாக்கித் தாக்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா இடங்களிலும் பின்வாங்கியே வந்திருக்கும் புலிகள் தங்கள் இறுதிக்கட்டப் போரை முல்லைத்தீவில் நிகழ்த்துவார்கள். அங்கு ராணுவத்துக்கு எதுவும் எளிதாக இருக்காது என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது. புலிகள் ஆயுதபலத்துடன் இருப்பதை இலங்கை ராணுவதளபதி சரத்பொன்சேகாவே ஒப்புக்கொண்டுள்ளார். இருந்தபோதும் பின்வாங்கியே வருவதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னால் தங்களுக்கு போரில் நம்பிக்கை இல்லை. எங்களால் முடியாதபட்சத்தில் தமிழ் மக்களைக் காக்க திருப்பித்தாக்கினோம் என்று கூறி இறுதிக்கட்ட தாக்குதலைத் தொடுக்கவே என்ற ஒரு கருத்தும் உள்ளது.

இழந்த பகுதிகளில்...

ஏற்கெனவே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை வைத்து இலங்கை அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கு தேர்தல் நடத்தி அரசு அமைப்பதை புலிகளால் தடை செய்யமுடியவில்லை. ஆனால் அங்கு அம்பாறை மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் முதலில் மக்களைக் குடியேற்றி அங்கும் ஒரு தேர்தல் நடத்த இலங்கை அரசு முயற்சி செய்யும். தங்களுக்கு ஆதரவான தமிழ்த் தலைவர்களை தேர்தலில் பங்கேற்க வைக்க அரசு முயற்சி செய்யும். "இலங்கையின் மிகப்பெரிய சோகமே அங்கு ராணுவ நடவடிக்கைகள் நடந்தாலும், ஒரு நம்பகமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதே இல்லை என்பதுதான்" என்கிறார் தசஇயிடம் பேசிய கென்கிழக்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் சூரியநாராயணா.

புலிகளின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்?

போரை நீட்டிப்பதே அவர்கள் திட்டமாக இருக்கும். மரபு வழியிலான போரை தொடர்ந்து நடத்தமுடியாவிட்டால் கெரில்லா போர் முறையைக் கையாளு வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரபாகரன் எப்படி முடிவெடுப்பார் என்று யாருக்கும் தெரியாது. "பிரபாகரன் நாம் யோசிப்பதுபோல யோசிப்பவர் அல்ல" என்கிறார் ஹரிஹரன். கொழும்பு போன்ற நகரங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் வல்லமை புலிகளைப் பொறுத்த வரையில் குறைந்துவருகிறது. மிகக் கடுமையான பல கண்காணிப்பு முறைகளைக் கையாண்டு இலங்கை அரசு தலைநகரில் இந்த அச்சத்தால் விழிப்புடன் இருந்துவருகிறது. ஆனாலும் இருமுறை தற்கொலைக் குண்டுகள் வெடித்துவிட்டன. ஆனால் 'ஓயாத அலைகள்' போன்ற இன்னொரு மறுபாய்ச்சலை புலிகள் நிகழ்த்துவார்களா? என்ற கேள்விக்குப் உடனடி பதில் யாரிடமும் இல்லை.

இந்திய நிலைப்பாடு

கிளிநொச்சி வீழ்ந்ததுமே காங்கிரஸ் கட்சி சார்பாக கேட்ட முதல் குரல் "பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்" என்பதே. அங்கு சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்ற குரலைவிட இதுதான் உச்சமாக ஒலித்தது. இந்திய அரசின் சார்பில் கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன், "ராணுவ நடவடிக்கை மூலம் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியாது. பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால கோரிக்கை" என்று கருத்துத் தெரிவித்தார். இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தி.மு.க.வின் நிலையும் இன்று தர்மசங்கடமாகத்தான் இருக்கிறது. வெளியுறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜியை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, "இலங்கை அரசு விரும்பவில்லையே" என்று பதிலளித்திருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆதரவுக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணி வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ், அ.தி.மு.க. அல்லாத பிற கட்சிகளை ஒன்றுதிரட்டி முல்லைத் தீவில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்காக வலுவான குரலை தமிழகத்தில் எழும்பச் செய்யும் முயற்சி நடக்கிறது. ஆனால் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இந்த முயற்சிகளைப் பாதிக்கலாம்.
''சொந்த மக்கள் மீதே விமானத் தாக்குதல் நடத்தும் அரசு இலங்கை அரசு ஒன்றுதான்!''
இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து தெற்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் சூரியநாராயணாவிடம் பேசினோம்:
தற்போதைய இலங்கைச் சூழலில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிட்டுவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?
இலங்கைப் பிரச்னையில் வருத்தத்துக்குரிய விஷயம் என்பது அங்கு நடக்கும் ராணுவ நடவடிக்கையுடன் அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படாமல் இருப்பதுதான். அதிபர் ராஜபக்சே, ராணுவ நடவடிக்கை முடிந்த பிறகுதான் அரசியல் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசுவேன் என்கிறார். அவரைப் பொறுத்தவரை கூட்டாட்சி முறைக்கு ஒத்துவருபவராகத் தெரியவில்லை. அவர் ராஜபக்சே அரசியல் சாசன திருத்தம் ஏதும் கொண்டுவரப்போவதாகத் தெரியவில்லை. ஒரே இலங்கை (uஸீவீtணீக்ஷீஹ் stணீtமீ)என்பதே அவரது நிலைப்பாடு. தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல் பின்னோக்கிப் போய்விட்டது.
இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் கட்சிகள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
விடுதலைப் புலிகளின் குரலைத்தான் தமிழ் தேசியக் கூட்டணி (டி.என்.ஏ) பிரதிபலிக்கும். டக்ளஸ் தேவானந்தா, டி.எம்.வி.பி எனப்படும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவை இலங்கை அரசின் ஆதரவுக் கட்சிகள். அவை ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பவை என்பதால் அவற்றின் செல்வாக்கு குறைவு. இதில் டி.எம்.வி.பியோ கருணா, பிள்ளையான் இடையே இரண்டாக பிளவு பட்டுவிட்டது. இதில் அதிபர் ராஜபக்சேவின் கை இருக்கிறது என்றே நினைக்கிறேன். யு.என்.பி, ஜேவிபி ஆகிய கட்சிகளையும் ராஜபக்சே உடைத்துவிட்டார். இப்போதைக்கு ராஜபக்சேவின் கைதான் அரசியல் ரீதியாக உயர்ந்திருக்கிறது. அவர் முடிவுதான் செல்லும். பிற கட்சிகள் ஏதும் செய்ய இயலாது.
தற்போதையச் சூழலில் போர் நிலவரம் பற்றிய உங்கள் கருத்தென்ன?
மோதல் பல வடிவங்களில் இன்னும் தொடர்ந்து நடக்கும். புலிகள் மரபுரீதியான போர்முறையில் பின்தங்கி வருகிறார்கள். அவர்கள் நிலப்பரப்பு சுருங்கிவருகிறது. அரசியல்ரீதியாக கிழக்கு மாகாணமும் அவர்களிடம் இல்லை. இலங்கை ராணுவத்தின் விமானப் படை மேற்கொள்ளும் கொடூரமான தாக்குதல்களை அவர்களால் எதிர்கொள்ள் முடியவில்லை. உலகிலேயே சொந்த மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் ஒரே அரசாக இலங்கை அரசுதான் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற சூழலில் இருந்து புலிகள் பலமுறை மீண்டுவந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. 1989&ல் இந்திய அமைதிப்படை விலகிய பிறகு இழந்த பகுதிகளுக்கு அவர்கள் வெற்றிகரமாக மீண்டார்கள். பின்னர் சந்திரிகாவின் ஆட்சியின்போது அவர்கள் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார்கள். தமிழ் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாட்சி அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு முன்வைக்குமானால் பிரச்னை தீரலாம். ஆனால் அது நடக்காத சூழல் உருவாக்கும் வெறுப்புணர்வு, புலிகளுக்கு போராளிகளை கிடைத்துக் கொண்டே இருக்கச் செய்யும். தமிழர்கள் அந்நியப்பட்டவர்களாகவே உணர்வார்கள்.

*
தி சன்டே இந்தியனின் இந்த இதழ் பொங்க்லை ஒட்டி 'புலம் பெயர்ந்த பொங்கல்' என்ற ஒரு சிறப்புப் பகுதியும் கொண்டிருக்கிறது. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். முத்துலிங்கத்தின் பத்தி மனதை கரையச் செய்கிறது.
அந்த பத்திகளை இணையத்தில் படிக்கலாம். தி சண்டே இந்தியனின் இணைய முகவரி: http://www.thesundayindian.com/tamil/200901253 comments:

Sanjai Gandhi said...

பிரபாகரன் இதுவரை போர்க்களத்தில் நின்று சண்டை இட்டதே இல்லை என்று கருணா சொல்லி இருக்கிறார். ( உண்மையோ பொய்யோ?) ..

மீண்டும் ஓயாத அலைகள் போன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்பு மிகக் குறைவே. கருணா பிரிந்து சென்ற போது அவருடன் சில ஆயிரம்( அவர் கணக்கில் 6000 பேர்) போராளிகளும் பிரிந்து சென்று விட்டனர். ஆகவே போதிய ஆள் பலம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது.

இந்த போரில் தமிழ்மக்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைத்தீவில் சிக்கிக் கொண்ட மக்கள் மீண்டும் கிளிநொச்சி மற்றும் அவர்களின் முந்தைய வசிப்பிடங்களுக்கு திரும்ப புலிகளும் ஒத்துழைப்பு கொடுக்கனும். இவர்கள் சண்டையில் அப்பாவி மக்கள் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு 2 தரப்புமே காரணம்.

Anonymous said...

முக்கியமான பல விஷயங்கள் இங்கே விடுபட்டுவிட்டன. புலிகளது வெற்றிகளுக்கு தனது சொந்த சிப்பாய்களை ஈவிரக்கமில்லாமல் பிரபாகரன் உபயோகப்படுத்துவதே காரணம். ஒரு கட்டத்துக்குப் பின்னர், சிப்பாய்களின் நலனை பார்க்காத இயக்கம் மடிவது இயல்பானது.

திறமையான பலர் கரும்புலிகளாக கொல்லப்பட்டார்கள். திறமையான பல தலைவர்கள் சயனைடு சாப்பிடவைத்தும், உண்ணாவிரதம் இருக்கவைத்தும் சாகடிக்கப்பட்டார்கள். ஒரு காலத்துக்கு பின்னர் இது ஒரு வெறித்தனமான தற்கொலை கும்பலாகத்தான் தோன்றுகிறது. இது வாழவைக்கும் இயக்கமாக இல்லை. அதேபோல, இயக்கத்தின் உள்ளே பெருந்தலைகளுக்கு மத்தியிலும் ஒரு ஜனநாயக கலந்துரையாடல் இல்லை. தன்னை பிரபா கொன்றுவிடுவார் என்று உணர்ந்ததாலேயே கருணா இலங்கைத்தரப்புக்கு ஓடினார். பேசினால் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், கருணா புலியாகவே தொடர்ந்திருப்பார்.

இன்று முல்லைத்தீவிலிருந்து பெரும் அளவில் ஒரு எதிர்த்தாக்குதல் நடக்கும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். நிச்சயம் நடக்கும். அதன் மூலம் ஓரளவு இழந்த இடங்கள் பிடிபடலாம். ஆனால், திரும்பத்திரும்ப இந்த ஆட்டத்தை விளையாட பணம் கொடுக்கவும், ஆதரவு கொடுக்கவும் புலத்தில் உள்ள, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவு இருக்காது.

பிரியமுடன்... said...

திரு. மாலன் உண்மையிலேயே நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள். என்ன நடக்கிறது இலங்கையில் என்று தெரியாமல் இருந்த என்னைபோன்ற தமிழ் பற்றுடைய தமிழனுக்கு இன்று உங்கள் பதிவு ஒரு சிறந்த தகவலை தந்துள்ளது! வாழ்த்துக்கள். வணக்கம்!!