Sunday, January 04, 2009

மொட்டைமாடியில் திறக்கும் ஜன்னல்.


இந்த வார விகடன் (7/1/2009)தனது பொக்கிஷம் பகுதியில் நான் 33 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதையை மீள் பிரசுரம் செய்திருக்கிறது. அதைப் படித்த நண்பர் ஒருவர் போன் செய்து "நீங்கள் ஏன் இப்போது சிறுகதைகள் எழுதுவது இல்லை?' என்று மெய்யான மனக்குறையுடன் கேட்டார். நான் 2008 நவம்பர் மாதம் கூட கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.(அது இந்த வலைப்பதிவுகளில் கூட இருக்கிறது) நான் அதைச் சொன்னபோது "நீங்கள் ஆடிக்கொரு முறை எழுதுவதற்கு பதில் அவ்வப்போது எழுதக் கூடாதா" என்று கேட்டு என்னை மெளனிக்க வைத்தார் அந்த வாசக நண்பர்.
நான் அடிக்கடி சிறுகதைகள் எழுதவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, அநேகமாக வாரந்தோறும் கட்டுரைகள் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்திருக்கிறேன்.
நான் எந்த நோக்கத்திற்காக சிறுகதைகள் எழுதி வந்தேனோ, சிறுகதைகள் மூலம் என்ன செய்ய வேண்டும் என விருப்பப்பட்டேனோ அவை இந்தக் கட்டுரைகள் மூலமும் நிறைவேறி உள்ளன. அதனால் இந்தக் கட்டுரைகளை எழுதும் போது எனக்கு மகிழச்சியும், மனநிறைவுமே ஏற்பட்டன.
இலக்கியததை 'உய்விக்கும்' நோக்கத்தோடு நான் சிறுகதைகள் எழுத முற்பட்டதில்லை. வாசகனை அவனது மூளையைக் கொண்டே சிந்திக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் எழுத்தின் நோக்கம். அது சிறு கதையானாலும் சரி, கட்டுரையானாலும் சரி. அதற்குப் 'பொறி' கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
நான் க்டந்த இரண்டாண்டுகளில், சிங்கப்பூர் தமிழ் முரசு, புதியபார்வை, உயிர்மை, தினமணி, இந்தியாடுடே, திசைகள், மற்றும் என் வலைப்ப்திவுகளில் எழுதிய கட்டுரைகள் 'என் ஜன்னலுக்கு வெளியே' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. என்நூல்களை வெளியிட்டுவரும் கிழக்குப் பதிப்பகம்தான் இதையும் வெளீயிடுகிறது.

அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரும், வலைப்பதிவரும், zதமிழ் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவில் பணியாற்றுபவரும், ஜூனியர் விகடனில் பத்திகள் எழுதுபவ்ருமான ஜென்ராம் நூலை விமர்சிக்கிறார்.

வெளியீடும் விவாதமும் நாளை 5/1/2009 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியில் (எல்டாம்ஸ் சாலை ஆழ்வார்பேட்டைசென்னை ) நிகழ இருக்கிறது.

மேலதிகத் தகவல்களுக்கு பத்ரியின் பதிவைப் பார்க்க்:
http://thoughtsintamil.blogspot.com/

'இன்றுள்ள சூழலில் கருத்துக்களும் விவாதங்களும் காற்றையும் நெருப்பையும் போல் அவசியமாக இருக்கிறது' என்று அந்த நூலில் ஒரிடத்தில் எழுதியிருந்தேன். மொட்டைமாடியில் காற்றுக்குப் பஞ்சமில்லை. நெருப்பை நீங்கள் கொண்டு வரலாம்.

5 comments:

ஆர். முத்துக்குமார் said...

வணக்கம்

புத்தக அறிமுக விழாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை பற்றி பேசும்போது 'புழக்கடை' என்ற பதத்தை நீங்கள் பயன்படுத்தினீர்கள். மாநிலங்களவை என்பதும் சட்டத்துக்கு உட்பட்டது தானே.. ஏன் அந்த அவையை புழக்கடை என்று சொல்லவேண்டும்? கொஞ்சம் விளக்கம் சொன்னால் மகிழ்ச்சி

மாலன் said...

அன்புள்ள முத்துக்குமார்,
ஒருவர் மக்களவை உறுப்பினர் ஆக வேண்டுமானால் தேர்தலில் போட்டியிட்டு, மக்களை சந்தித்து வாக்குகள் கோரி, வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகள் பெற வேண்டும். மக்களின் அங்கீகாரம் (நம்பிக்கை) அவருக்கு இருக்கிறது.
மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் சட்டசபைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அல்லது நியமனம் பெறுகிறார்கள். அந்த மாநில மக்களின் மொழி அறியாத வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் (உ-ம்: மன்மோகன் சிங் (அசாம்) திருநாவுக்கரசர் (ம.பி) MAMராமசாமி (கர்நாடகா) கூட ஒரு மாநிலத்தைப் பிரதிநிதிப்பவர்களாக ஆகி விடலாம் அதிகார மையங்களோடு தொடர்பு இருப்பவர்கள், வாரிசுகள், இவர்கள் மக்களை சந்திக்காமலேயே மாநிலங்களவை போய் விடலாம்.

ஊர் பார்க்க வீட்டுக்குள் நுழைபவர்கள் தலைவாசல் வழியே வருகிறார்கள். ரகசியமாக வருபவர்கள் பின் வாசல் வழி- அதான் புழக்கடை வ்ழி- நுழைகிறார்க்ள்
மாலன்

ஜமாலன் said...

உங்கள் நூ ல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருவதில் மகிழ்ச்சி.

அதே சமயம் நீங்கள் கவிதை (வீடுபற்றிய உங்கள் கவிதை தமழில் வந்த குறிப்பிடத் தகுந்த கவிதைகளில் ஒன்று) சிறுகதை, நாவல் (நந்தலாலா மற்றும் ஜனகனமன போன்ற) எழுதுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும். கட்டுரைகளைவிட படைப்பிலக்கியங்களில் பேசப்படும் அரசியல் அதிக பாதிப்பை உருவாக்கக்கூடியதுதானே.

அன்புடன்
ஜமாலன்.

மாலன் said...

உண்மைதான் ஜமாலன். இந்த ஆண்டு இரண்டு நாவல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த எண்ணியிருக்கிறேன். பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்
மாலன்

Anu said...

Dear Sir,

I enjoyed reading above said book.

But, the drawback of reading a collection of essays written 2/ 3 years ago is that, many of the events/ issues are outdated now.

For instance, the essay on the future of Tamil blogosphere, where you explain the funda of unicode and all that. The essay no doubt, was relevant when it was first written. But in 2009, Tamil blogosphere is thriving and the essay does seem out of context.