Wednesday, September 29, 2004

கத்தியை எடுக்கத் தயங்குகிறாரா மன்மோகன்?

வெள்ளி சரிகை போல ஒடிக் கொண்டிருந்த நதியில் ஒரு தங்கக் கிண்ணம் போல அந்தப் படகு நகர்ந்து கொண்டிருந்தது.அமைப்பினால் மட்டுமல்ல, அதில் அமர்ந்திருந்தவர்களாலும் அந்தப் படகுக்கு மதிப்பு அதிகம்தான். அதில் அமர்ந்திருந்திருந்தவர்கள், இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன். மற்றவர் காஷ்மீர் அரசர் ஹரிசிங்.
மவுண்ட்பேட்டன் புவியியலை மாற்றி அமைத்த- இந்தியாவை இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக மாற்றிய- வரலாறு கொண்டவர். வரலாற்றை மாற்றக் கூடிய புவி ஹரிசிங் கையில் இருந்தது. காஷ்மீர் ஒரு விநோதமான தேசம்.அதன் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். ஆனால் அதன் அரசர் ஒரு இந்து. விநோதமான தேசம் மட்டுமல்ல, முக்கியமான பிரதேசம். ஏனெனில் இந்தியா, பாகிஸ்தான் சீனம் முன்றும் அதன் எல்லைகளில்தான் சந்திக்கின்றன.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியேறுவது என்று முடிவெடுத்தபோது முளைத்த பிரசினைகளில் ஒன்று அவர்களுக்குக் கப்பம் கட்டிப் பணிந்து வாழ்ந்த மகாராஜக்கள், அந்த மகாராஜாக்கள் ஆண்ட சம்ஸ்தானங்களைப் பற்றியது. அப்போதைய இந்தியாவில் இரண்டு பகுதிகள் இருந்தன. ஒன்று வெள்ளையர்களின் நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகள். மற்றொன்று மகாராஜாகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட"அரசு"கள். அந்த அரசுகளுக்கான பாதுகாப்பை, அதாவது ராணுவ உதவிகளை ஆங்கிலேயர்கள் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்து வந்தார்கள். இப்போது ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டால் அவர்களுக்கு யார் ராணுவப் பாதுகாப்பை அளிப்பார்கள்? புதிதாக அமைய இருக்கும் நாடுகளான, இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ நீங்கள் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலேயர்கள் அந்த மகராஜாக்களிடம் சொன்னார்கள். அநேகமாக அந்த யோசனையை எல்லா சமஸ்தானங்களும் ஏற்றுக் கொண்டுவிட்டன. (வேறு வழி?) முரண்டு பிடித்தவர்கள் மூன்று அரசர்கள். ஜுனாகத், ஹைதராபாத், காஷ்மீர்.

காஷ்மீர் அரசரோடு இணைப்புப் பற்றிப் பேசத்தான் மவுண்ட்பேட்டன் வந்திருந்தார்.

"ஹரிசிங், காஷ்மீரை பாகிஸ்தானோடு இணைத்து விடுங்கள்" என்றார் மவுண்ட்பேட்டன்.
"அது ஒரு போதும் நடக்காது!" என்றார் அரசர்.
" உங்கள் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். நிலப்பகுதியாலும் அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. நீங்கள் இந்துவாக இருந்தாலும், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்து விட்டால், உங்களை சகலமரியாதைகளோடும் நடத்தத்தயாராக இருப்பதாக ஜின்னா உறுதியளித்திருக்கிறார். ஒருவேளை நீங்கள் பாகிஸ்தானோடு இணையமுடிவெடுத்து விட்டால், அதற்கான காரணங்களை புரிந்து கொள்வோம் என்று படேல் என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால் நீங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்வதுதான் நல்லது" என்றார் மவுண்ட்பேட்டன்.
"சும்மா பேசிப் பிரயோசனம் இல்லை. அது நடக்காது" என்றார் அரசர்.
"என்ன முடிவு எடுப்பது என்பது உங்கள் விருப்பம். சரி, பாகிஸ்தானோடு இணைய விருப்பம் இல்லை என்றால், இந்தியாவுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்றார் மவுண்ட்பேட்டன்.
"அதுவும் நடக்காது!" என்றார் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்.
மவுண்ட்பேட்டனுக்குக் கோபம் வந்து விட்டது. " யோசித்துத்தான் பேசுகிறீர்களா? நாலாபுறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடு உங்களுடையது. மூன்று பெரிய தேசங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது நிலப்பரப்பு விரிந்து கிடக்கிறது. ஆனால் அதில் மக்கள் தொகை குறைவு. இதெல்லாம் போதாதற்கு, குடிமக்கள் ஒரு மதம், அரசர் ஒரு மதம். இத்தனைக்கும் நடுவில் உங்கள் நாட்டை உங்களால் காப்பாற்ற முடியுமா? வீணாக இரண்டு நாடுகளின் கோபத்திற்கும் ஆளாவீர்கள். மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். இரண்டு தேசங்களும் கத்தியை உருவிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தால் பாதிக்கப்படுவது உங்கள் நாடாகத்தான் இருக்கும். அது போர் நடக்கும் பூமியாக ஆகிவிடும்." என்று படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.
அவருக்கு மட்டும்தான் கோபம் வருமா என்ன? அரசருக்கும் கோபம்தான். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. அன்று முழுவதும் மவுண்ட்பேட்டனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தார். மவுண்ட்பேட்டன் அங்கு இரண்டு நாள் தங்கினார். மூன்றாம் நாள் கிளம்ப இருந்தார். இரண்டாம் நாள் மாலை அவர் அரசரிடம் சொன்னார்."நாளைக்காலை புறப்படும் முன்னால் உங்கள் மாளிகைக்கு வருகிறேன்.உங்கள் மந்திரியையும் வரச் சொல்லுங்கள். எல்லோரும் உட்கார்ந்து பேசி அதிகாரபூர்வமாகவே ஒரு ஒப்பந்தம் போட்டுவிடுவோம்"
"உங்கள் விருப்பம் அதுதான் என்றால் அப்படியே செய்துவிடலாம் "என்றார் ஹரிசிங்.

மறுநாள் அரண்மனைக்குப் புறப்பட மவுண்ட்பேட்டன் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவருக்குத் தகவல் வந்தது: ' மகாராஜா உங்களின் மன்னிப்பைக் கோருகிறார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. வயிற்றுவலி. நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார். எனவே இன்றைக்கு சந்திக்க முடியாது. உடல் சரியானதும் அவரே சொல்லி அனுப்புவார். அதற்குப் பிறகு சந்தித்துப் பேசலாம்'

மறுபடியும் அரசரிடமிருந்து தகவல் வரவேயில்லை. அவருக்கு வந்திருப்பது அசல் வயிற்றுவலி அல்ல, அரசியல் வயிற்றுவலி என்பதைப் புரிந்து கொள்ள மவுண்ட்பேட்டனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

அந்த வயிற்றுவலி பின்னாளில் பெரியதலைவலியாகிவிட்டது. இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டுநாடுகளுக்குமே. காஷ்மீரை முன்னிட்டு மூன்று யுத்தங்கள் நடந்திருக்கின்றன. கணக்கில்லாத முறை பூசல் மூண்டு கிட்டத்தட்ட யுத்தம் என்ற கொதிநிலைக்குப் போயிருக்கிறது. பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் அணுகுண்டு தயாரித்து வைத்துக் கொண்டு ஒன்றை ஒன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆயுதப்போட்டி ஏற்பட்டு, குடிதண்ணீருக்கும், பள்ளிக் கட்டிடத்திற்கும், மருத்துவமனைக்கும், வேலைவாய்ப்பைத் தரக்கூடிய தொழில் முதலீட்டிற்கும் போகவேண்டிய பணம் ராணுவத்திற்குச் செலவாகிக் கொண்டிருக்கிறது.

என்றாலும்-

இந்தியா என்றைக்குமே காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் இங்கே ஒரு பெரும் வகுப்புக் கலவரம் மூளும். ஏராளமாக ரத்தம் சிந்தும். இந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல்வாதிகள் நிலைமையை அப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள். காஷ்மீர் அவர்களுக்குக் கிடைக்காத வரையில் பாகிஸ்தான் தான் வஞ்சித்து ஏமாற்றப்பட்டுவிட்டதாக எண்ணி எண்ணி மருகும். அதன் காரணமாக இந்தியா மீது ஒரு கசப்புணர்வு இருந்து கொண்டே இருக்கும். அங்குள்ள அரசியல்வாதிகள் செய்துவைத்திருக்கும் காரியம் அது.

இன்னொருபுறம், இந்தியாவையும் பாகிஸ்தானையும் விட காஷ்மீர் பிரசினையில் உலக வல்லரசுகள் அதிக அக்கறை காட்டி வந்திருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்துவிட்டால் ஆசியாவின் மிகப்பெரிய சக்தியாகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக காஷ்மீர் பிரசினை தீர்ந்துவிடக்கூடாது என்று அவை எண்ணுகின்றனவோ என்று சந்தேகப்படும்படி அவை பலமுறை நடந்து கொண்டிருக்கின்றன. வங்கதேச யுத்தத்தின் போது இந்திராகாந்தியிடம் ரஷ்யா எழுப்பிய கூக்குரலில் துவங்கி, அணுகுண்டு வெடித்த போது அமெரிக்கா நடந்து கொண்ட விதம் வரை ஒரு தனி புத்தகமே எழுதலாம்.

கடந்த வாஜ்பாய் அரசின் காலத்தில் இருநாடுகளுக்குமிடையே இருந்த உறவு மலையும் மடுவுமாகவே மாறிமாறி இருந்திருக்கின்றன. லாகூருக்கு பஸ் போனது. கார்கிலில் யுத்தம் வந்தது. பேச்சு வார்த்தை நடத்த முஷாரப் ஆக்ரா வந்தார். பாதியில் வெறுத்துப் போய் நடுராத்திரியில் திரும்பிப் போனார். இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடந்தது. எல்லை நெடுகிலும் படைகள் நிறுத்தப்பட்டன. எதிரில் நிற்கும் வீரனைக் கண்ணோடு கண்ணினை நோக்கும் விதத்தில் (eye ball to eye ball) வீரர்கள் நிறுத்தப்பட்டார்கள். தூதர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. ஒரு நாட்டின் மேல் இன்னொரு நாட்டின் சிவிலியன் விமானங்கள் பறப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. நிலைமை இவ்வளவு முற்றி மோசமடைந்ததற்குப் பிறகு. இரண்டாண்டுகளுக்கு முன் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் (confidence building measures) துவங்கின. இரண்டு தரப்பிலும் கோபம் மட்டுப்பட்டிருந்ததே தவிர வெறுப்பு வற்றிவிடவில்லை.

இந்தப் பின்னணியில் இரண்டு நாட்டுத் தலைவர்களும் இந்த ஆண்டு ஐ.நாவின் பொதுச்சபைக் கூட்டத்தின் போது சந்தித்துப் பேசுவார்கள் என்ற செய்தி வெளியானபோது பத்திரிகையாளர்கள் வட்டத்தில் புருவங்கள் உயர்ந்தன. நீங்கள் நிழல் யுத்தத்தை நிறுத்துவீர்களானால், ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட்டால், எல்லைப் பகுதியில் கொஞ்சம் விட்டுக் கொடுக்க நாங்கள் தயார் என்று மன்மோகன் முஷாரபிடம் சொல்லப் போகிறார் என்று டைம் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. (அந்த செய்தியை இந்திய அரசு மறுத்துவிட்ட போதிலும்)

பாகிஸ்தானில் பிறந்த இந்தியப் பிரதமரும், இந்தியாவில் பிறந்த பாகிஸ்தான் அதிபரும் தனியே சந்தித்துப் பேசியது நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருகிறது. இரண்டு பேரும் சேர்ந்து வெளியிட்டிருகிற கூட்டறிக்கையின் வாசகங்கள், தொனி அந்த நம்பிக்கையைத் தருகின்றன. இந்த அறிக்கைகளில் இடம் பெறுகிற ஒவ்வொரு சொல்லும் எத்தனை அர்த்தமும் முக்கியத்துவமும் வாய்ந்தவை என்பதை நான் அனுபவபூர்வமாக அறிவேன். காஷ்மீர் விவகாரத்தை பிரசினை (issue) என்று குறிப்பிடுவதா, தகராறு (dispute) குறிப்பிடுவதா என்று எழுந்த முரண்பாடும் ஆக்ரா பேச்சு முறிய ஒரு காரணம்.

இந்தக் கூட்டறிக்கை முதன்முறையாக பொருளாதார நல்லுறவையும், எரிவாயுக் குழாய் இணைப்புப் பற்றியும் பேசுகிறது. (ஈரான் தன்னிடம் உள்ள எரிவாயுவை இந்தியாவிற்கு விற்க ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அந்தக் குழாய்கள் பாகிஸ்தானின் நிலப்பகுதிகள் வழியாகத்தான் வந்தாக வேண்டும். அதற்காக இந்தியா பாகிஸ்தானுக்கு ஏராளமான பணம், சுமார் ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி டாலர்கள் தரத் தயாராக இருக்கிறது. ஆனல் பாகிஸ்தான் இதுநாள்வரை, காஷ்மீர் பிரசினை தீரும்வரை இடம் கொடுக்க முடியாது என்று சொல்லி வந்தது) இதெல்லாம் நல்ல சமிக்கைகள்.

ஆனால் பாஜக இந்த கூட்டறிக்கையை விமர்சிக்கிறது. (எதிர்கட்சி வேறு என்ன செய்ய முடியும்?) இந்தியா விட்டுக் கொடுத்துவிட்டதாக சொல்கிறது. மன்மோகன் நிஜமாகவே வளைந்து கொடுத்து விட்டாரா?
அதற்கான பதில் இந்த சம்பவத்தில் இருக்கிறது:

செப்டம்பர் 26ம் தேதி மன்மோகனின் 72வது பிறந்தநாள். அமெரிக்க நிகழ்சிகளை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிக் கொண்டிருந்த மன்மோகன் அந்த நாளில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் அவரது பிறந்த நாளை விமானத்திலேயே கொண்டாட விரும்பினார்கள். ஒரு கேக்கிற்கு ஏற்பாடு செய்தார்கள். அதை வெட்ட அவரை அழைத்தார்கள். பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பம் இல்லாத பிரதமர், அதற்கு இசையவில்லை. கேக்கை துண்டுபோட்டு எல்லோருக்கும் கொடுக்கும்படி பணியாளர்களிடம் சொன்னார். 'பிரதமர் கத்தியை எடுக்கத் தயங்குகிறார்' என்று பத்திரிகையாளர்கள் கிண்டலடித்தார்கள். சற்று நேரத்திற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேச வந்த பிரதமரிடம், அவருக்குப் பிடித்த மேற்கோள் என்ன என்று கேட்ட போது, சீக்கியர்களின் குரு சொன்ன ஒரு வாக்கியததைச் சொன்னார். அது: "பலசாலிகளைத்தான் உலகம் மதிக்கிறது!"

மன்மோகன் உண்மையான பலம் கத்தியில் இல்லை என்பதையும், அது வேறு எதில் இருக்கிறது என்பதையும் நன்கு புரிந்து வைத்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

-சிங்கப்பூர் நாளிதழ் தமிழ்முரசுக்கு எழுதிய 'சொல்லாத சொல்' கட்டுரை செப் 29.09.04

8 comments:

Balaji-Paari said...

திரு மாலன்:
உங்கள் கட்டுரை அழகாக ஆரம்பித்து, சில புதிய தகவல்களை(குறைந்தபட்சம் எனக்கு) தந்தது. குறிப்பாக மன்னர் ஹரிசிங் -கின் நிலைப்பாடுகள்.

இவ்வளவு informative-ஆக எழுதும் தாங்கள், ஏன்
//முரண்டு பிடித்தவர்கள் மூன்று அரசர்கள். ஜுனாகத், ஹைதராபாத், காஷ்மீர்.// இவ்வாறு கூறுகிறீர்கள்?.

வடகிழக்கு மாகாணத்தில், மணிப்பூர், 1949-ல் அல்லவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இது தொட்ர்பான் செய்திகளை காண
"http://ntmani.blogspot.com/2004/09/lesser-indians.html".

இது குறித்த தங்களின் மறு மொழியினை எதிர் பார்க்கும்
பாலாஜி-பாரி

Balaji-Paari said...

http://ntmani.blogspot.com/2004/09/lesser-indians.html

அப்பதிவை வாசிப்பதில் சிரமங்கள் இருந்தால்,
அப்பதிவை copy செய்து, இ-கலப்பையில் paste செஇதால் படிக்க இயலும்.

பாலாஜி-பாரி

மாலன் said...

நீங்கள் கூறுவது சரிதான். 1891ல் வரை ஆங்கிலேயர்களுக்கும் மணிப்பூர் ஆட்சியாளர்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக மணிப்பூர் இளவரசர் திக்ரிஜித்தை, குயிட்டன் என்ற ஆங்கில அதிகாரி சிறைப்பிடிக்க முயன்றபோது கிளர்ச்சி வெடித்தது.ஐந்து ஆங்கிலேய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். அந்த செய்தி கேட்டு ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர்கள் வங்காளத்திலிருந்து மூன்று பெரும் படைப்பிரிவுகளை அனுப்பி மணிப்பூர் மீது போர் தொடுத்தனர். மணிப்பூர் வீழ்ந்தது. அதன் பின் அது ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட சமஸ்தானமாக இருந்தது. 1947ல் The Manipur Constitution Act 1947 என்ற சட்டத்தின் கீழ் அங்கு ஒரு சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. மன்னர் தலைமை நிர்வாக அதிகாரியாக (Executive Head) அங்கீகரிக்கப்பட்டார். இதைத்தான் '1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 28ம் தேதி மணிப்பூர் சுதந்திரம் அடைந்தது' 'மன்னராட்சியில் கீழமைந்த குடியரசாக மணிப்பூர் பிரகடனப்படுத்தப்பட்டது' என்று குறிப்பிடுகிறார்கள் என்று கருதுகிறேன்.
சட்டமன்றத்துடன் கூடிய குடியரசு ஏற்பட்ட பின்னர் அது சமஸ்தானமாகக் கருத முடியாதல்லவா, அதனால்தான் மற்ற மூன்று சமஸ்தானங்களோடு நான் அதைக் குறிப்பிடவில்லை.

எல்லா சம்ஸ்தானங்களும் முழுமனதுடன் இந்தியாவுடன் இனணந்தன என்று சொல்ல முடியாது. சிலரை கையை முறுக்கிதான் சம்மதம் வாங்கினார்கள். சிலட் மிரண்டு போய் கையெழுத்துப் போட்டார்கள். திருவாங்கூர் ஓர் உதாரணம். இந்தியாவுடன் இணையாமல் திருவாங்கூர் தனி அரசாக இயங்கும் என்று அதன் திவான் சி.பி.ராமசாமி அய்யர் அறிவித்ததும், அதை எதிர்த்து மக்கள் அங்கு கிளர்ச்சி செய்ததும் வரலாற்று உண்மைகள். 1947ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி திவான் திருவனந்தபுரம் சுவாதித்திருநாள் இசை அகாதமியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த போது அவரை கொல்ல ஒரு முயற்சி நடந்ததைக் கண்டு மிரண்டு போன மன்னர் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன் வந்தார். திவான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறினார்.

இணைப்பு பற்றி நிறைய எழுதலாம். அவகாசம் கிடைக்கும் போது நிச்சியம் எழுதுகிறேன்

Balaji-Paari said...

நன்றிகள் திரு மாலன்:
ஆனால் தாங்கள் கூறியது மணிப்பூர் தங்களுக்குண்டான parliment-ஐ உருவாக்கியது பற்றியது. அப்போதும் அவர்கள் இந்தியாவுடன் இணையவில்லை. 1949-ஆம் ஆண்டு நடந்த கை முறிக்கல் மூலமாக ஒப்பந்தம் என கூறப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை தங்களைப் போன்றோர் கூறினால் பல விசயங்கள் சரியான முறையில் அனைவரையும் அடையும். நீங்கள் இணைப்பு பற்றி எழுதுவது குறித்து கூறியதற்கு மீண்டும் நன்றிகள்.
பாலாஜி-பாரி

tamilkirukkan said...

அருமையான சில தகவல்களை தந்த திரு மாலன் அவர்களுக்கு நன்றி.
மேலும் பலவற்றை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

வீரமணிஇளங்கோ said...

திரு மாலன் அவர்களுக்கு,
இணைப்பு பற்றியும்,அப்போதெழுந்த பிரச்னைகள் பற்றியும் விரிவாக எழுதுங்கள்.ஆவலாக உள்ளேன்.
காஷ்மீர் அரசர் குறித்து ஒரளவு கேள்விப்பட்டிருந்தேன்.புதுத்தகவல்கள் நிறைய தெரிந்துகொண்டேன். நன்றி.

வீரமணி இளங்கோ

உண்மைத்தமிழன் said...

மாலன் ஸார் நிறைய விஷயங்களை கொடுத்தமைக்கு எனது நன்றிகள்..

காஷ்மீர் விஷயம் இவ்வளவு மோசமானதற்கு காரணம் நமது அரசியல்வாதிகளின் சித்து விளையாடல்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பஞ்சாபில் காலிஸ்தான் தலை விரித்தாடியபோது அனைவரின் கவனமும் பஞ்சாப் மீதே இருந்தது. அப்போது காஷ்மீர் ஒரு அமைதியான பசுமைச் சோலை. பின்பு பஞ்சாபை அடக்கிவிட்டு இந்திராகாந்தியின் கவனம் காஷ்மீர் மீது திரும்பியது. இந்திரா அப்போது ஒருவித கர்வத்துடன்தான் இருந்தார் என்று நான் நினைக்கிறேன்.

பரூக் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்த்து, அவரின் மைத்துனரை ஆட்சிக்குக் கொண்டு வர காங்கிரஸ் நடத்திய அரசியல் நாடகம்தான் காஷ்மீரின் இன்றைய நிலைமைக்கு முதல் பிள்ளையார் சுழி. அதன் பின்புதான் அங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஆட்சியின் மேல் பித்துப் பிடித்ததைப் போல் ஆக.. ஆட்சி நிர்வாகம் செயலிழந்து போனது. தொடர்ந்து பயங்கரவாதிகள் ஊடுறுவல்.. இதுதான் சாக்கு என்று அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை இந்திரா கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் அரசுக்கும், போலீஸ்க்கும் தீவிரவாதிகள் பற்றிய தகவலைத் தராமல் தீவிரவாதிகளுக்கே வீம்புக்கே என்று துணை போனது.

காலம்காலமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்த இந்து பண்டிட்களை ஏதோ சினிமாவில் வருவதைப் போல் நேரம், தேதி சொல்லி வெளியேற்றியது.. மத்திய அரசு கை கட்டி வேடிக்கை பார்த்த அவலம்.. அதிலிருந்துதானே தினமும் ஒரு சண்டை, போர், வெடிகுண்டு வீச்சு. காஷ்மீர் பள்ளத்தாக்கே எரியத் தொடங்கியது.

நம் நாட்டில் எந்தப் பிரச்சனை பூதாகரமாகத் தோன்றினாலும் அதை முதலில் ஆரம்பித்து வைத்த பாக்கியம் கண்டிப்பாக நமது அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள். இந்தக் கேடு கெட்ட அரசியல் திருந்தாதவரையில் நாடு அமைதியாகாது..

ஜோதிஜி said...

உங்களின் பழைய இடுகையின் உள்ளே வந்த போது எதிர்பாரத விதமாக பொக்கிஷம் கிடைத்தது. காஷ்மீர் மன்னர், திருவிதாங்கூர் மன்னர் கொலை முயற்சி போன்ற விஷயங்கள் மிக சந்தோஷமாக இருந்தது. காரணம் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் என்று சுதந்திரப்போராட்டம், பாகிஸ்தான் பிரிவினை அதன் குறித்து மற்ற தொடர்பான செய்திகள் என்று என்னால் முடிந்த வரையில் தொடராக இதுவரை 30 பதிவுகள் எழுதி நல்ல முறையில் தொடர்ந்து கொண்டுருக்கிறது. உங்கள் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் எந்த காழ்ப்புணர்வும் இல்லை. கண்ணியமான வார்த்தைகள். உங்களை சந்தித்த போது கையில் வைத்திருந்த புத்தகம். திரு. தார்க்ஷியா எழுதிய அற்புத புத்தகம். நூறு சதவிகிதம் பொருந்திப்போகின்றது. நன்றி ஐயா.


இனி எழுத முடியும் என்று 82 தலைப்புக்குப்பிறகு (நீங்கள் சொன்ன அத்தனையும்) புதிய இடுகையில் உங்கள் அறிவுரையை பதிவு செய்தால் (நேரம் இருந்தால்) மிகுந்த சந்தோஷம் அடைவேன்.

நன்றி

ஜோதிகணேசன்.

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://texlords.wordpress.com

http://deviyar-illam.blogspot.com

texlords@gmail.com