Sunday, February 08, 2009

தொண்டர்தம் பெருமை

தோட்டம் எனப் பெயர் கொண்ட பகுதிகள் பல சென்னையில் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பலவற்றில் தாவரங்களைப் பார்ப்பதென்பதே அரிதாக இருக்கும். அரசினர் தோட்டம் கான்கிரீட் வனமாக மாறி வருகிறது. போயஸ் தோட்டத்தைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. மந்தவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே கபாலி தியேட்டருக்கு அருகில், மயிலைக் கோயிலுக்குச் சொந்தமாக' கபாலி வன போஜன மண்டபம்' ஒன்று இருக்கிறது. வனம் என அதை நம்ப கற்பனை வேண்டும். என்றைக்காவது அங்கு வந்து போஜனம் செய்திருக்கிறாரா என்பதை கபாலியிடம்தான் கேட்க வேண்டும்.

ஆனால் ராமாவரம் தோட்டம் (அன்று) ஒரு பூங்காவைப் போலிருந்தது. வீட்டை நோக்கிப் போகும் மண் பாதையில் தங்கரளிப் பூக்கள் இறைந்து கிடந்தன. தலையில் தீப்பிடித்த மாதிரி ஒரு குல்மோகர் மரம் என்னைப் பற்றி ஒரு கவிதை எழுது எனச் சொல்லிக் கொண்டு கடந்து போயிற்று. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை கவிதை எழுதுவது அல்ல. எம்.ஜி.ஆருடன் ஒரு நாள் முழுதும் கூட இருந்து அவரது அசைவுகளைக் கவனித்துக் கட்டுரை எழுத வேண்டும் என்பது

முந்தைய வாரம் அவரது ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்குத் தினம் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டத்தை'ப் புள்ளி விவரங்களோடு கடுமையாக விமர்சித்திருந்த என் கட்டுரைக்குப் புன்னகை மாறாமல் விளக்கமளித்தபடியே காலைச் சிற்றுண்டி அருந்திய எம்.ஜி.ஆர். திடீரென்று கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘போகலாமா' எனக் கேட்டுக் கொண்டே எழுந்தார்.

எங்கள் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே மின்சாரம் பாய்ந்தது.பரபரப்பான சில நொடிகளில் அவரது கார், முன்னால் ஒரு பைலட் ஜீப்,
பின்னால் இரண்டு கார்கள் என ஒரு வாகன வரிசை தயாரனது. முன் சீட்டில் ஏறத் தயாரான உதவியாளரை ஜீப்பிற்கு அனுப்பிவிட்டு என்னை அந்த இருக்கையில் உட்காரச் சொல்லி விட்டு, பின் சீட்டில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். தோட்டத்துக் கதவுகள் விரியத் திறக்க அந்த மினி அணிவகுப்பு சாலையில் திரும்பியது. ஒரு பத்தடி சென்றிருக்கும். அன்று அந்த இடத்தில் ஒரு குறுகலான பாலம் இருந்தது. அந்தப் பாலத்தைக் கடக்க காரின் வேகம் குறைந்த தருணத்தில்-

மின்னல் போல காரின் குறுக்கே பாய்ந்தார் ஒருவர். அவரது பாய்ச்சலைக் கையைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தார் அவர் மனைவி. கண நேரம் தாமதித்திருந்தால் கார் அவரை அரைத்துக் கொன்றிருக்கும். ஆனால் ஓட்டுநர் அனுபவம் வாய்ந்த கெட்டிக்காரர். வண்டியை நிறுத்தி விட்டார்.

முதல்வரின் வண்டி நின்று விட்டதைக் கண்ட பைலட் ஜீப்பிலிருந்த போலீசார் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வந்தனர். குறுக்கே பாய்ந்தவரின் கையைப் பிடித்து முதுகுப் பக்கமாக வளைத்துக் கொண்டு செவிட்டில் ஒரு அறை விட்டார் காவலர். பின்னால் காரில் வந்த உதவியாளர்களும் இறங்கி எம்.ஜி.ஆரின் ஜன்னலருகே வந்து நின்றனர். ‘அடிக்க வேண்டாம். கோட்டைக்குக் கொண்டாங்க' என ரத்தினச் சுருக்கமாக உத்தரவிட்ட எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்து நெற்றிப் பொட்டருகே ஆள் காட்டி விரலை சுழற்றிக் காட்டிச் சிரித்தார். அந்த நபரை ‘அள்ளிப் போட்டுக் கொண்டு' பயணம் தொடர்ந்தது.

நாங்கள் கோட்டையை அடைவதற்குள் ஜீப்பில் இருந்த காவல்துறை அந்த நபரைப் பற்றிய விவரங்களைத் திரட்டியிருந்தது. எம்.ஜி.ஆர். நினைத்ததைப் போல அவர் ‘லூசு' இல்லை. கட்சித் தொண்டர். அவர் அணிந்திருந்த அழுக்கேறிய கரை வேட்டியும், கசங்கிய சட்டையில் அவர் வைத்திருந்த எம்.ஜி.ஆர் பட ஸ்டில்லும் அதை உறுதி செய்தன. மானமதுரைக்குப் பக்கத்திலுள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து வந்திருந்தார். இரண்டு நாள்களாக, கோட்டை, தி.நகர் இல்லம், கட்சி அலுவலகம், தோட்டம் என எங்கு முயற்சித்தும் அவரால் அந்தக் கட்டிடங்களின் கேட்டைக் கூட நெருங்க முடியவில்லை. எங்கே போனாலும் துரத்தி அடித்தார்கள். எம்.ஜி.ஆரிடம் இரண்டு வார்த்தை பேசாமல் ஊருக்குத் திரும்புவதில்லை என சபதம் செய்து விட்டு வந்திருந்தார். வேறு வழி தெரியவில்லை. காரின் முன் பாய்ந்து விட்டார்.

எம்.ஜி.ஆர் அவரை ஏற இறங்கப் பார்த்தார். ‘இப்படித்தான் செய்யறதா?' என்று கேட்டார். அந்த நபர் ஏதும் பேசாமல் தடாலென்று காலில் விழுந்தார். அவர் மனைவி கண்களில் நீர் தளும்ப கைகள் நடுங்கியவாறே கும்பிட்டார். எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்து, “குழந்தைங்க எத்தனை?” என்றார். அந்தப் பெண் இரண்டு விரல்களைக் காட்டினார். “ஆம்பிளைக்குத்தான் அறிவில்லைனா, பொம்பளை நீ புத்தி சொல்ல வேண்டாமா” என்றார். அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு பெரும் விசும்பல் புறப்பட்டது.

உயிரைத் திரணமாக எண்ணிக் காரின் முன் பாய்ந்த அந்த நொடிகளில் அவர் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்? செத்தாலும் பரவாயில்லை, ஊர் முன் போட்ட சபதத்தைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற வைராக்கியமா? தலைவருக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற வெறியா? தலைவர் காரில் அடி பட்டுச் செத்தால் பணம் கிடைக்கும் என்ற ஆசையா? நாம் செத்தாலும் குடும்பத்தையும் குழந்தைகளையும் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையா?

தெரியாது. கற்பனையில் இதற்கு விடைகளைத் தேடலாம். ஆனால் அவை சரியானவையாக இருக்க அவசியமில்லை. நான் அவராக ஆகும் வரையில் அந்தக் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காது. என்றோ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.மோட்டர் சைக்கிளில் போனால், போகும் போது முகத்தை வருடிச் செல்லும் ஈரக் காற்றில் சிலிர்க்கலாம்; காலால் மன்ணைத் தொட்டுப் பார்க்கலாம்; மரத்திலிருந்து உதிரும் பன்னீர்ப் பூவின் வாசத்தை நுகரலாம். ஆனால் காரில் போனால். கண்ணாடிக்குள்ளிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறெதுவும் சாத்தியமில்லை. மோட்டார் சைக்கிளில் போகும் போது நீ பங்கேற்பாளன் (participant)காரில் செல்லும் போது நீ ஒரு பார்வையாளன் மட்டுமே. பார்வையாளனுக்குக் காட்சிகள் கிட்டும்; உண்மை அகப்படாது. வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு சத்தியம் தெரியாது என எழுதுகிறான் பாரதி.

அரசியலில் இருக்கும் அடி மட்டத் தொண்டர்களது வாழ்க்கை பற்றி தமிழில் புனைவாகக் கூட அதிகம் பேர் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். அசோசகமித்ரன், காத்திருத்தல் என்று ஒரு நீண்ட சிறுகதை எழுதியிருக்கிறார். தேர்தலில் தான் உழைத்த கட்சித் தோற்றுப் போகிற போது ஒரு தொண்டன் எதிர்கொள்கிற மன அழுத்தங்களையும், வன்முறையையும் பற்றிப் பேசுகிற அந்தக் கதை நாம் கண்டுவரும் காட்சிகளின் உண்மைக்கருகில் நிற்கிறது. ஆனாலும் அது ஒரு புனைவுதான். தமிழின் அபூர்வமான புனைவுகளில் ஒன்று.

“அவன் பேசுவதற்கு ஆளொருவரும் கிடைக்காமல் ஒரு வழியாகச்
சென்று அவன் நேற்றுவரை கூடப் பலரைக் கூட்டி, சந்தித்துப் பேசி,
முடிவுகள் எடுத்து, படித்து, உணவுண்டு, தூங்கி, தண்ணீர் குடித்த
கீற்றுக் கொட்டகைக்குச் சென்றான்.தெருவோரத்தில் அது
அநாதையாக இருந்தது. அதன் பக்கத் தடுப்புகளிலும்
கூரையிலிருந்தும் ஒட்டியும் எழுதியும் தொங்கவிட்டிருந்ததுமான வாக்கியங்கள், பெயர்கள், வேண்டுகோள்கள், எச்சரிக்கைகள்,
ஏச்சுப் பேச்சுகள் எல்லாமே இன்று அர்த்தமற்றதாகக் காட்சி அளித்தன. அர்த்தமற்ற தனமையில் அவைகளை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு
வந்த அவனைக் குருடன், செவிடன், முட்டாள் என்று கேலி செய்வதைப் போலக் கூட காட்சி அளித்தன”

இந்த வரிகளில் தோற்றுப் போன கட்சித் தொண்டனைவிட, அசோகமித்திரனை நாம் அதிகம் காணமுடியும். இவ்வளவு சிந்தனையும் நுண்ணுணர்வும் கொண்ட ஒருவன், வீதியில் இறங்கிச் சண்டையிடுகிறவனாகவும் கோஷமிடுகிறவனாகவும் இருப்பானா என்ற கேள்விகளும் நம்முள் எழும். அ.மி. இந்தக் கதையை 70 களின் துவக்கத்தில் எழுதியிருக்க வேண்டும் (ஆகஸ்ட் 72ல் அவரே பதிப்பித்த இன்னும் சில நாட்கள் தொகுப்பில் அது இடம் பெற்றிருக்கிறது). அறுபதுகளின் இறுதியில் லட்சிய உந்துதல்களும், தன்னுணர்வும் கொண்ட தொண்டர்கள் அரசியல் கட்சிகளுக்கு வாய்த்திருக்கக் கூடும். ஆனால் 2000ல் ‘லும்பன்' சக்திகள் தேர்தல்களின் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டன.

அப்படிப்பட்ட ஒரு தொண்டனாக, ஆட்சி மாறும் போது, அடி, வலி, பயம், அவமானம், சிறைவாசம் எல்லாவற்ரையும் நிஜமாக எதிர்கொண்ட ஓர் இளைஞரது வாழ்வனுபவங்களை அண்மையில் வாசிக்க நேந்தது. ஜோதி நரசிம்மன் என்பவர் எழுதிய ‘அடியாள்' என்ற அந்த சிறு புத்தகம், (கிழக்குப் பதிப்பக வெளியீடு) நம் சமகால அரசியலின் அறியப்படாத பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஜோதி நரசிம்மன் விழுப்புரத்தில் வசித்து வந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். ஐ.டி.ஐ. படித்தவர்.வன்முறையின் மீதுள்ள காதலால் ஒரு தாதாவிடம் போய்ச் சேர்கிறார். இரண்டு முறை சிறை செல்கிறார். அடியாளாக ஒரு முறை. அரசியல் வாதியாக ஒரு முறை. அவரது அனுபவங்களை நூல் பேசுகிறது.

“ நான் விதிர்விதிர்த்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். குமாரைப்
படுக்க வைத்து, கால் முட்டிக்குக் கீழே இருந்த பகுதியில், லாடம் பொருத்தப்பட்ட பூட்ஸ் காலோடு ஏட்டு ஏறி நின்று கொண்டார். அந்த எஸ்.ஐ. கையிலிருந்த மூங்கில் தடியால் குமாருடைய கால் பாதத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தார் ஒவ்வொரு அடியும் இடி போல் இறங்கியது. . . . .. ..என் தொடை வேகமாக ஆட ஆரம்பித்தது. அடுத்து எங்களில் யாரோ ஒருவரைத்தான் அந்த சப் இன்ஸ்பெகடர் அடிக்கப் போகிறார். யாரை?
ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. என்னை அவர் அடித்தால், அதற்குப்
பிறகு நான் ஜெயிலுக்குப் போக மாட்டேன். லாக்கப்பிலேயே பிணமாகி விடுவேன். அந்த அடியில் ஒன்றைக் கூட என்னால் தாங்க முடியாது”
*
தலைவர்களுக்காத் தங்களது குடும்பத்தைப் புறக்கணித்து, எதிரிகளிடமும், போலீசிடமும் அடி வாங்கி, உயிரையும் துறக்கத் தயாராக உள்ள தொண்டர்களுக்கு நம் அரசியல் தலைவர்கள் தரும் வெகுமதி என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, முன்னாள் துணைப் பிரதமர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா, முன்னாள் துணைப்பிரதமர் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி, முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஷரத் பவாரின் மகள் சுப்ரியா, ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், முன்னாள் மக்களவை தலைவர் சங்மாவின் மகள் அகதா சங்மா, பாரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா, (காஷ்மீர் முதல்வர் ஆகும் முன்) ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மறைந்த மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ராஜஸ்தான் மாநில முதல்வருமான விஜயராஜே சிந்தியாவின் மகனுமான துஷ்யந் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த், முஃப்தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா, மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மறைந்த முன்னாள் அமைச்சர் சுனில்தத்தின் மகள் பிரியா, மறைந்த முன்னாள் அமைச்சர் பகுகுணாவின் மகன் விஜய் பகுகுணா, பா.ம.க.நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, மூப்பனாரின் மகன் வாசன் என நாடாளுமன்றம் ஏகப்பட்ட வாரிசுகளால் நிறைந்து கிடக்கிறது.

தேவகெள்டாவின் மகன்கள் குமாரசாமி, அவரது மனைவி அனிதா, குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா, கர்நாடக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். தேவிலாலின் மகன் செளதாலா ஹரியானா அரசியலில் வலுவான ஓர் சக்தி. முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.பி.சவானின் மகன் அசோக் சவான் மகராஷ்டிர முதலமைச்சர். பிஜு பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஒரிசாவின் முதல்வர்.

கட்சிக்குச் செலவிடுகிறவர்களுக்கு அமைச்சர், வாரியத் தலைவர், மாவட்ட செயலாளர் பதவிகள். மணல் குவாரி, அரசின் சிறு காண்டிராக்ட்கள், உள்ளூர் அளவிலான சிறு பதவிகள் இவையெல்லாம் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு.

தலைவர்களுக்காத் தங்களது, குடும்பத்தைப் புறக்கணித்து, எதிரிகளிடமும், போலீசிடமும் அடி வாங்கி, உயிரையும் துறக்கத் தயாராக உள்ள தொண்டர்களுக்கு?

***
அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் எழுதிய்து.

Friday, January 30, 2009

முத்துக்குமார்

தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அக்டோபர் மாத மத்தியில் தமிழக அரசியல்கட்சிகள் இலங்கைப் பிரசினையில் மேற்கொண்ட மிகை உணர்வு நிலையின் உச்சம் நேற்று முத்துக்குமார் என்ற இளைஞனின்
தீக்குளிப்பு. அவரைத் தற்கொலைக்கு உந்தியதில், இலங்கைப் பிரசினை நெருப்பில் குளிர்காய முயன்ற தமிழக ஊடகங்களுக்கும் பங்குண்டு.

இரண்டாண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்ட் 2006) செஞ்சோலையில் குழந்தைகள்
இலங்கை விமானங்களின் தாக்குதலுக்கு பலியான போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதையும் இப்போது பிரபாகரன் பற்றிய தொடர், இலங்கை அரசியல் வரலாறு, குட்டிமணி ஜகன்
பற்றிய பழைய தொடரின் மீள்பிரசுரம் எனக் கடை விரித்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் அக்கறை எதன் மீது எனப் புரியும். தங்கள் அரசின் நிர்வாகத் தோல்விகளால் (மின்வெட்டு, பணவீக்கம்,
விலைவாசி, எரிபொருள் தட்டுப்பாடு) மக்களிடையே ஏற்பட்டிருந்த சினத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஆளும் கூட்டணி இலங்கைத் தமிழர் பிரசினையைக் கையிலிடுத்துக் கொண்டதும்,
ஊடகங்கள் இந்த மிகை உணர்வுச் சூழலில் ஒரு 'மார்க்கெட்' இருப்பதை உணர்ந்து கொண்டு களமிறங்கின. தங்கள் பத்திரிகையின் வாசகர்களை (நுகர்வோர் என வாசிக்கவும்) மிகை உணர்வு நிலையிலேயே வைத்திருக்கும் வகையில் செய்திகள்/பேட்டிகள் வெளியிட்டன. அதன் விளைவு நேற்று சாஸ்திரி பவனில் கொழுந்துவிட்டு எரிந்தது.

இன்று என் கவலை எல்லாம், இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான்.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான
அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி ) ஒரு சம்பவம் ஒரு Syndrom ஆக மாறுவதில் ஊடகங்களுக்குக் கணிசமான பங்குண்டு.
இலங்கைப் பிரசினை விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்குமான மோதல் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் எளிமைப்படுத்தியே பெரும்பாலும் ஊடகங்களில் (வலைப் பதிவுகள் உள்பட) பார்க்கப்படுகிறது. ஆனால்
உண்மையில் அது பல தளங்கள் கொண்டது.

அரசுப்படைகளுக்கும், புலிகளுக்குமிடையே மோதல் நடக்கிறது என்பது கண்ணிற்குத் தெரியும் உண்மை. ஆனால் மோதல் எதன் பொருட்டு? தமிழ் மக்கள் சிங்களர்களுக்குச் சமமான சிவில் உரிமைகளைப் பெறும் பொருட்டு என எளிதாக ஊடகங்கள் எழுதவும் பேசவும் செய்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்த்க் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக
நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் அதிகாரம் பெற்றால் தமிழர்கள் அதிகாரம் பெறுவார்கள் என்பது முற்றிலும் சரியல்ல என்பதைக் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிறது. தங்கள் அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்
கொண்டவர்களை -அவர்கள் தமிழர்களே ஆன போதிலும்- அவர்கள் பலமுறை ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக்
கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ்-ஜெயவர்த்தன திட்டத்தில்
(scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு 'தேனிலவு' கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப்
புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல, தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.

எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.

இந்த மூர்க்கத்தனத்திற்கும், முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே இலங்கையை விட்டும் வன்னியை விட்டும் வெளியேறச் சக்தியோ, விருப்பமோ இல்லாத பொதுமக்கள் மாட்டிக் கொண்டு பலியாகி வருகிறார்கள்.எந்த ஒரு
போரிலும் இது போலப் பொதுமக்கள் crossfireல் மாட்டிக் கொள்வது நடக்க்கிற ஒன்றுதான் என்பதை அண்மையில் இராக்கில் உலகம் கண்டிருக்கிறது.

என்றபோதிலும் இலங்கைப் படைகள் கண் மண் தெரியாமல் சிவிலியன்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஏற்படும் அதிகமான இழப்பிற்கு புலிகளின் போர் அணுகுமுறையும் ஒரு காரணம் என அங்கிருந்து வரும்
செய்திகள் உணர்த்துகின்றன.
"We are urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery - shells and rockets at the army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people," states the Bishop of Jaffna Rt. Rev. Dr. Thomas Savundaranayagam in a letter to President Mahinda Rajapaksa"

இது ஜனவரி 26ம் தேதி வெளியான PTI செய்தி. (இது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் எழுதிய தலையங்கத்தைக் காண: http://www.dailynews.lk/2009/01/28/main_Editorial.asp)

"The ICRC urgently appeals to both sides to allow and facilitate the safe and voluntary movement of civilians out of the combat zone."

இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஜனவரி 28ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் (ICRC News Release No. 09/02) காணப்படும் வரிகள். (அழுத்தம் என்னுடையது) வேண்டுகோள் இரண்டு தரப்பிற்கும் விடப்பட்டிருப்பது விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் வெளியேற்றத்தை மறித்து வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

இதை உறுதி செய்வது போல், இன்று (ஜனவரி 30) தமிழக சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர்
அன்பழகன் "இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் ஏன் அதை மதிக்கவில்லை. இலங்கை அரசின் தற்காலிக போர் நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது ஆச்சரியமளிக்கிறது." என்று பேசியிருக்கிறார் (தினமணிச் செய்தி)
அப்பாவிப் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் இறப்பதற்கும் துயருக்குள்ளாவதற்கும் காரணம் என்ன என்பதை ஊடகங்கள் எடுத்துரைத்திருந்தால் ஒரு வேளை முத்துக்குமார் தன்னை மாய்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கக் கூடும். பொதுமக்களின் துயர் குறித்து அக்கறை கொள்ளாத பயங்கரவாத இயக்கத்தின் ஊதுகுழலாகத் திகழ்ந்த நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.

மூர்க்கத்தனத்திற்கும் முரட்டுக் கோபத்திற்குமிடையே இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்க முடியும்? போரை நிறுத்திவிட்டு இலங்கையை இரண்டாகப் பிரித்து விடுதலைப் புலிகளிடம் ஒரு பகுதியைக்
கொடுத்துவிடுங்கள் என இலங்கை அரசை வற்புறுத்துகிற நிலைப்பாடா? அது தமிழர்களை ஒரு சர்வாதிகர அமைப்பின் கீழ் தள்ளுவதாகாதா? அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் நாங்கள் உங்கள் சார்பாக இலங்கை அரசிடம் பேசுகிறோம் என்ற நிலைப்பாடா? அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது
என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னால் தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் பிரசார பிரங்கிகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தன? " ஈழத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக இந்தியா தலையிட வேண்டுமென்று
நாங்கள் கேட்கவில்லை. ஈழத்தை யாருடைய உதவியும் இன்றி புலிகளே வென்றெடுப்பார்கள். இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்யாமல் இருந்தால் போதும் என்றுதான் கேட்கிறோம் ( திருமாவளவனின் நடிகர் சங்க பேச்சு)

அதாவது இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதுதான் பிரசினை. ஆனால் இன்று (ஜனவரி 30) திருமாவளவன் சொல்வது என்ன? "ஒரு விடுதலைப் போராட்டக் குழுவை எதிர்க்க அல்லது அடக்க ஒன்றல்ல... இரண்டல்ல...
ஏழுநாட்டுப் படைகளும், ஏராளமாய் ஆயுதங்களும், போதாததற்கு இனத் துரோகிகளும் வேலை பார்த்துவரும் கொடுமையை உலகில் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா நண்பர்களே... அது இலங்கையில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது."
(http://thatstamil.oneindia.in/news/2009/01/30/tn-thiruma-hails-prabhakaran.html)

அதாவது இலங்கைக்கு ஏழு நாடுகள் ராணுவ உதவி அளித்துக் கொண்டிருக்கின்றன. எந்த மாதிரியான நாடுகள்?

அதையும் அவரே சொல்கிறார். "பாகிஸ்தான், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்பட பல அரசுகள் சிங்களவர்களுக்கு துணைபோகின்றன."

இந்தப் பின்னணியில் 29ம் தேதி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தரும் இந்த செய்தியையும்
(http://in.reuters.com/article/topNews/idINIndia-37728120090129)
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்:

"While domestic political sensitivities over the fate of Sri Lanka's Tamils forced India to ease its leverage, rivals China and Pakistan stepped into the breach, offering Colombo military assistance in its war against the Tamil Tiger rebels.
China has sold Jian-7 fighters, anti-aircraft guns and JY-11 3D air surveillance radars to the resurgent Sri Lankan army as it seeks to finish one of Asia's longest-running wars by squeezing the Liberation Tigers of Tamil Eelam fighters in a shrinking patch of jungle in the north.
Pakistan also supplied the army small arms, multi-barrel rocket launchers and trained Sri Lankan air force in precision guided attacks against the rebels, strategic analysts said.
"There have been several shipments of weapons from Pakistan. What has made a real difference to the outcome of the war is the Sri Lankan air force which has been rigorously trained by Pakistan in precision-guided attacks.," retired Indian army major general Ashok Mehta said.
India, by contrast, has limited its military assistance to the Sri Lankan army to "defensive weapons".

இந்தச் செய்திகள் சொல்வதென்ன?
1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)

2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது

3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின 'சைக்கிள் கேப்'பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.

இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.

இலங்கையின் கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதில் சீனா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் செய்தி சுட்டிக் காட்டுகிறது:
"The strategic battle in Sri Lanka is seen as part of a wider power struggle in South Asia, involving not only India and Pakistan but also China, which seeks to gain influence in the important economic region.

China has made strides developing strategic assets, like the Gwadar port in Pakistan, the Sri Lankan port of Hambantota and assets in Yangon, part of a strategy to protect shipping lanes.

Sri Lanka sits next to shipping lanes that feed 80 percent of China's and 65 percent of India's oil needs. "

இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம். ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் நம் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் முத்துக்குமார் எரிந்து போகாமல் காப்பாற்றியிருக்கலாம்.

இன்னொன்றையும் ஊடகங்கள் நினைவுபடுத்தியிருக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தமிழ் பேசும் இரு வேறு நாடுகள். ஒரு மொழி பேசும் பல நாடுகள் உலகில் இருக்கின்றன, உதாரணம் இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆங்கிலம் பேசுகின்றன. காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உருது பேசப்படுகிறது. வங்காளத்திலும் வங்கதேசத்திலும் வங்காளம் பேசப்படுகிறது. சீனத்திலும் சிங்கப்பூரிலும் சீனம் பேசப்படுகிறது.அதே மொழியைப் பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு நாடு மற்றொன்றின் உள்நாட்டு
விஷயங்களில் தலையிட முடியாது. தலையிடக் கூடாது.

ஆனால் ஒரு பக்கம் தொப்புள் கொடி உறவென்றும் மற்றொரு பக்கம் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்றும் நம் அரசியல் வாதிகள் செளகரியம் போல் பேசி வருகிறார்கள். அதைத் தவிர்த்திருந்தால் முத்துக்
குமர்கள் கருகியிருக்க மாட்டார்கள்.

Tuesday, January 13, 2009

கிளிநொச்சிக்குப் பின்னால்...

சர்ச்சைக்குப் பெயர் பெற்ற அரிந்தம் செளத்ரியின் The Sunday Indian 14 மொழிகளில் வெளிவருகிறது. அது தமிழிலும் வெளிவருகிறது. ஆனால் தமிழ் இதழில் சர்ச்சைகள் குறைவு. பல நேரங்களில் தரமான, ஆழமான கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன.

அண்ணா நூற்றாண்டை ஒட்டி அது வெளியிட்ட இதழ் ஒரு பொக்கிஷம். திராவிட இயக்கங்கள் பற்றி முன்பு ஒரு இதழில் விவாதித்தது.

தமிழ் இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் இளைஞர் அசோகன் கால்நடை மருத்துவர். ஆனால் இதழியலிலும் தமிழிலும் இருக்கும் ஈடுபாட்டின் காரணமாக அந்தப் படிப்பை முடித்த பிறகு தில்லி சென்று Indian Institute of Mass communicationல் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அநேகமாக IIMC பட்டம் பெற்ற தமிழ் இதழாளர் இவ்ர் ஒருவராக மட்டுமே இருக்கக்கூடும்.

அவர் இந்த வார தி சன்டே இந்தியனில் இலங்கை நிலைமை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலிப் புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் உணர்ச்சிவசப்பட்ட குரல்கள் ஒலிக்கும் இன்றைய சூழலில் நிதானத்தோடும், நேர்மையோடும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

கிளிநொச்சிக்குப் பின்னால்

என். அசோகன்

இந்தப் புத்தாண்டு விடுதலைப் புலி களுக்கு கெட்ட செய்தியுடன் புலர்ந்தது. ஜனவரி 2-&ம் தேதி கிளிநொச்சி வீழ்ந்தது என்று வந்த தகவல் உலகமெங்கும் உள்ள ஈழ ஆதரவாளர்களை உலுக்கியிருக்கிறது. இன்னும் சற்று வடக்கே போய் ஆனையிறவையும் பிடித்துவிட்டால் யாழ்ப்பாணத்துடனான தரைவழிப் பாதையான ஏ-9 முழுக்க இலங்கை ராணுவம் வசம் வந்துவிடும். போர் தொடர்ந்து நடக்கிறது.
"இழப்புகளைக் குறைக்க பின்னடைவு ஒரு தந்திரோபாயம்" என்றுதான் ஒவ்வொருமுறை நிலப்பரப்பை இழக்கும்போதும் புலிகள் கூறிவருகிறார்கள். இந்த தடவையும் அப்படித்தான் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதற்கு மேலும் தந்திரோபாயம் என்று கூறமுடியாது என்பதுதான் போர் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
புலிகள் இழந்த பகுதிகளை பலமுறை மீட்டிருக்கிறார்கள் என்றாலும், அவற்றில் மிக முக்கியமானது 1998 பிப்ரவரியில் அவர்கள் இழந்த கிளிநொச்சியை 'ஓயாத அலைகள்' என்ற தாக்குதல் மூலம் 1998 செப்டம்பரிலேயே கைப்பற்றியது. பிரபாகரனே அந்தத் தாக்குதலின்போது களத்தில் நேரடியாக இருந்து தாக்குதல்களை வழிநடத்தினார். இலங்கைப் படைகள் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டன.
ஆனால் 1998&ம், 2008&ம் ஒன்றல்ல என்பதுதான் ராணுவ நிபுணர்களின் கருத்து. இலங்கைப் பிரச்னை பற்றி கருத்துச் சொல்பவர்கள் 9/11 தாக்குதலுக்குப் பின்னால் உலகில் மாறியிருக்கும் அரசியல் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறார்கள். "புலிகளின் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டன. கடற்புலிகளும் பலவீனமடைந்துவிட்டனர். 30&க்கும் மேற்பட்ட நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருக்கிறது" என்கிறார் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கர்னல் ஆர். ஹரிஹரன். ஆனால் கிளிநொச்சிப் போரின் போது புலிகளுக்கு ஆயுதங்கள் வந்திறங்கின என்கிற ஊடகங்களின் தகவலும் இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இதற்குமுன்பு இருந்த இலங்கை ஜனாதிபதியான பிரேமதாசா, சந்திரிகா, ரனில் ஆகியோர் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். போரும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர் புலிகளை அழிப்பதை மட்டுமே ஒரே குறிகோளாக வைத்து செயல்படுகிறார். முதலில் விடுதலைப்புலிகளை முடித்துவிட்டு, பிறகு அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று அவரது போக்காக இருக்கிறது. எனவே இந்த ராணுவ நடவடிக்கை மேலும் வலுப்பெறும். கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கு போர்க்களம் இடம்மாறும்.

முல்லைத்தீவு தாக்குப்பிடிக்குமா?


2004ல் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டமான முல்லைத்தீவில்தான் புலிகளின் மிகப்பெரிய ராணுவ முகாம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் ஆயுதங்களும் பீரங்கிகளும் அங்குதான் தற்போது வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிறு விமானப்படையும் அங்குதான் தற்போது ஒளித்துவைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்த மக்களும் இப்போது இங்குள்ள காடுகளுக்குத்தான் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். "இது மிக அடர்த்தியான காடுகள் நிறைந்த பகுதி. ராணுவ நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்வதே கடினம்" என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள். இங்கு எம்மாதிரியான பாதுகாப்பு அரண்களை புலிகள் உருவாக்கித் தாக்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா இடங்களிலும் பின்வாங்கியே வந்திருக்கும் புலிகள் தங்கள் இறுதிக்கட்டப் போரை முல்லைத்தீவில் நிகழ்த்துவார்கள். அங்கு ராணுவத்துக்கு எதுவும் எளிதாக இருக்காது என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது. புலிகள் ஆயுதபலத்துடன் இருப்பதை இலங்கை ராணுவதளபதி சரத்பொன்சேகாவே ஒப்புக்கொண்டுள்ளார். இருந்தபோதும் பின்வாங்கியே வருவதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னால் தங்களுக்கு போரில் நம்பிக்கை இல்லை. எங்களால் முடியாதபட்சத்தில் தமிழ் மக்களைக் காக்க திருப்பித்தாக்கினோம் என்று கூறி இறுதிக்கட்ட தாக்குதலைத் தொடுக்கவே என்ற ஒரு கருத்தும் உள்ளது.

இழந்த பகுதிகளில்...

ஏற்கெனவே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை வைத்து இலங்கை அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கு தேர்தல் நடத்தி அரசு அமைப்பதை புலிகளால் தடை செய்யமுடியவில்லை. ஆனால் அங்கு அம்பாறை மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் முதலில் மக்களைக் குடியேற்றி அங்கும் ஒரு தேர்தல் நடத்த இலங்கை அரசு முயற்சி செய்யும். தங்களுக்கு ஆதரவான தமிழ்த் தலைவர்களை தேர்தலில் பங்கேற்க வைக்க அரசு முயற்சி செய்யும். "இலங்கையின் மிகப்பெரிய சோகமே அங்கு ராணுவ நடவடிக்கைகள் நடந்தாலும், ஒரு நம்பகமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதே இல்லை என்பதுதான்" என்கிறார் தசஇயிடம் பேசிய கென்கிழக்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் சூரியநாராயணா.

புலிகளின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்?

போரை நீட்டிப்பதே அவர்கள் திட்டமாக இருக்கும். மரபு வழியிலான போரை தொடர்ந்து நடத்தமுடியாவிட்டால் கெரில்லா போர் முறையைக் கையாளு வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரபாகரன் எப்படி முடிவெடுப்பார் என்று யாருக்கும் தெரியாது. "பிரபாகரன் நாம் யோசிப்பதுபோல யோசிப்பவர் அல்ல" என்கிறார் ஹரிஹரன். கொழும்பு போன்ற நகரங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் வல்லமை புலிகளைப் பொறுத்த வரையில் குறைந்துவருகிறது. மிகக் கடுமையான பல கண்காணிப்பு முறைகளைக் கையாண்டு இலங்கை அரசு தலைநகரில் இந்த அச்சத்தால் விழிப்புடன் இருந்துவருகிறது. ஆனாலும் இருமுறை தற்கொலைக் குண்டுகள் வெடித்துவிட்டன. ஆனால் 'ஓயாத அலைகள்' போன்ற இன்னொரு மறுபாய்ச்சலை புலிகள் நிகழ்த்துவார்களா? என்ற கேள்விக்குப் உடனடி பதில் யாரிடமும் இல்லை.

இந்திய நிலைப்பாடு

கிளிநொச்சி வீழ்ந்ததுமே காங்கிரஸ் கட்சி சார்பாக கேட்ட முதல் குரல் "பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்" என்பதே. அங்கு சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்ற குரலைவிட இதுதான் உச்சமாக ஒலித்தது. இந்திய அரசின் சார்பில் கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன், "ராணுவ நடவடிக்கை மூலம் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியாது. பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால கோரிக்கை" என்று கருத்துத் தெரிவித்தார். இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தி.மு.க.வின் நிலையும் இன்று தர்மசங்கடமாகத்தான் இருக்கிறது. வெளியுறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜியை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, "இலங்கை அரசு விரும்பவில்லையே" என்று பதிலளித்திருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆதரவுக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணி வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ், அ.தி.மு.க. அல்லாத பிற கட்சிகளை ஒன்றுதிரட்டி முல்லைத் தீவில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்காக வலுவான குரலை தமிழகத்தில் எழும்பச் செய்யும் முயற்சி நடக்கிறது. ஆனால் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இந்த முயற்சிகளைப் பாதிக்கலாம்.
''சொந்த மக்கள் மீதே விமானத் தாக்குதல் நடத்தும் அரசு இலங்கை அரசு ஒன்றுதான்!''
இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து தெற்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் சூரியநாராயணாவிடம் பேசினோம்:
தற்போதைய இலங்கைச் சூழலில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிட்டுவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?
இலங்கைப் பிரச்னையில் வருத்தத்துக்குரிய விஷயம் என்பது அங்கு நடக்கும் ராணுவ நடவடிக்கையுடன் அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படாமல் இருப்பதுதான். அதிபர் ராஜபக்சே, ராணுவ நடவடிக்கை முடிந்த பிறகுதான் அரசியல் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசுவேன் என்கிறார். அவரைப் பொறுத்தவரை கூட்டாட்சி முறைக்கு ஒத்துவருபவராகத் தெரியவில்லை. அவர் ராஜபக்சே அரசியல் சாசன திருத்தம் ஏதும் கொண்டுவரப்போவதாகத் தெரியவில்லை. ஒரே இலங்கை (uஸீவீtணீக்ஷீஹ் stணீtமீ)என்பதே அவரது நிலைப்பாடு. தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல் பின்னோக்கிப் போய்விட்டது.
இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் கட்சிகள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
விடுதலைப் புலிகளின் குரலைத்தான் தமிழ் தேசியக் கூட்டணி (டி.என்.ஏ) பிரதிபலிக்கும். டக்ளஸ் தேவானந்தா, டி.எம்.வி.பி எனப்படும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவை இலங்கை அரசின் ஆதரவுக் கட்சிகள். அவை ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பவை என்பதால் அவற்றின் செல்வாக்கு குறைவு. இதில் டி.எம்.வி.பியோ கருணா, பிள்ளையான் இடையே இரண்டாக பிளவு பட்டுவிட்டது. இதில் அதிபர் ராஜபக்சேவின் கை இருக்கிறது என்றே நினைக்கிறேன். யு.என்.பி, ஜேவிபி ஆகிய கட்சிகளையும் ராஜபக்சே உடைத்துவிட்டார். இப்போதைக்கு ராஜபக்சேவின் கைதான் அரசியல் ரீதியாக உயர்ந்திருக்கிறது. அவர் முடிவுதான் செல்லும். பிற கட்சிகள் ஏதும் செய்ய இயலாது.
தற்போதையச் சூழலில் போர் நிலவரம் பற்றிய உங்கள் கருத்தென்ன?
மோதல் பல வடிவங்களில் இன்னும் தொடர்ந்து நடக்கும். புலிகள் மரபுரீதியான போர்முறையில் பின்தங்கி வருகிறார்கள். அவர்கள் நிலப்பரப்பு சுருங்கிவருகிறது. அரசியல்ரீதியாக கிழக்கு மாகாணமும் அவர்களிடம் இல்லை. இலங்கை ராணுவத்தின் விமானப் படை மேற்கொள்ளும் கொடூரமான தாக்குதல்களை அவர்களால் எதிர்கொள்ள் முடியவில்லை. உலகிலேயே சொந்த மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் ஒரே அரசாக இலங்கை அரசுதான் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற சூழலில் இருந்து புலிகள் பலமுறை மீண்டுவந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. 1989&ல் இந்திய அமைதிப்படை விலகிய பிறகு இழந்த பகுதிகளுக்கு அவர்கள் வெற்றிகரமாக மீண்டார்கள். பின்னர் சந்திரிகாவின் ஆட்சியின்போது அவர்கள் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார்கள். தமிழ் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாட்சி அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு முன்வைக்குமானால் பிரச்னை தீரலாம். ஆனால் அது நடக்காத சூழல் உருவாக்கும் வெறுப்புணர்வு, புலிகளுக்கு போராளிகளை கிடைத்துக் கொண்டே இருக்கச் செய்யும். தமிழர்கள் அந்நியப்பட்டவர்களாகவே உணர்வார்கள்.

*
தி சன்டே இந்தியனின் இந்த இதழ் பொங்க்லை ஒட்டி 'புலம் பெயர்ந்த பொங்கல்' என்ற ஒரு சிறப்புப் பகுதியும் கொண்டிருக்கிறது. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். முத்துலிங்கத்தின் பத்தி மனதை கரையச் செய்கிறது.
அந்த பத்திகளை இணையத்தில் படிக்கலாம். தி சண்டே இந்தியனின் இணைய முகவரி: http://www.thesundayindian.com/tamil/20090125



Monday, January 12, 2009

திருமங்கலம் தரும் செய்தி

திருமங்கலம் தேர்தல் முடிவுகள் டில்லிப் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆசிரியர்களில் ஒருவரான அதிதி படோனிஸ், எப்படி, எப்படி என்று தொலைபேசியில் வியப்புக் கொப்பளிக்கக் கேட்டதையும், வேறு சிலர் இதை நாங்கள் எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்டதையும் வைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் நாட்டிலும் சிலருக்கு ஆச்சரியங்கள் இருக்கலாம். .

எனக்கு ஆச்சரியங்கள் இல்லை. ஆனால் இந்த முடிவை நான் எதிர்பார்த்திருந்தேன் எனவும் சொல்ல முடியாது. I was keeping my fingers crossed.

எதிர்பார்த்ததைப் போல இது தனது அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கருணாநிதியும், பணநாயகம் ஜனநாயகத்தைத் தோற்கடித்துவிட்டது என்று ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக் கட்சியினரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

பணம் கொடுத்தார்கள், மிரட்டினார்கள் அதனால் ஆளும் கட்சிக்கு வாக்களித்துவிட்டார்கள் எனச் சொல்வது மக்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வாக்கு வித்தியாசத்தைக் கவனிக்கும் போது (40 ஆயிரத்திற்கு சற்றுக் குறைவு) இது வெறும் பணத்தால் மட்டும் ஈட்டப்பட்ட வெற்றி அல்ல எனத் தோன்றுகிறது.

வாக்குச் சாவடிகளில் அதிகாரிகளாக மத்திய அரசின் ஊழியர்கள், வீடியோ பதிவு, துணை ராணுவப் படை, மூன்றடுக்குப் பாதுகாப்பு, நுண் தேர்தல் பார்வையாளர்கள், அன்னியர்கள் வெளியேற்றம், ஊருக்கு வரும் பாதைகள் சீலிடப்பட்டது, நரேஷ் குப்தாவின் அதிரடி விஜயம், ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு இவையெல்லாம் தேர்தல் பெருமளவிற்கு- சென்னையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் போல் இல்லாமல்- நடுநிலையோடு நடந்திருக்கிறது என்றுதான் எண்ண வைக்கிறது.

திமுக இந்த இடைத் தேர்தல் அறிவிப்பை உற்சாகமாகவோ, நம்பிக்கையோடோ வரவேற்கவில்லை. வேண்டாத விருந்தாளியாகத்தான் கருதியது. மாநிலத் தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆனையம் எல்லாவற்றையும் கருணாநிதி நேரிடையாகவோ மறைமுகமாகவோ சாடிக் கொண்டிருந்தார்.

அவரது கூட்டணியும் விரிசல் கண்டிருந்தது. இடதுசாரிகள் எதிரணிக்குப் போய்விட்டிருந்தார்கள்.பாமக நடுநிலை என்று சொல்லி ஒதுங்கியது. விடுதலைச் சிறுத்தைகள் பிணக்குக் கொண்டு ஒதுங்கி நிற்பதாகச் செய்திகள் சொல்லின (திருமாவளவன் அதை மறுத்தாலும் அவர் பிரசாரத்திற்குப் போகவில்லை) காங்கிரஸ் மட்டுமே கூட்டணியில் மிஞ்சி நின்றது. ஆனால் இலங்கைத் தமிழர் பிரசினையில் அது மேற்கொண்ட நிலை காரணமாக அது மதிப்பிழந்து விட்டதாகவும், அது ஒரு சுமை (liability என்றும் ஒரு கருத்து உலவியது. லதா, ஸ்டாலின் குழுவின் வேட்பாளர் எனவும், அதனால் அழகிரிக்கு அதிருப்தி எனவும் செய்திகள் வந்தன

மின்வெட்டு, விலைவாசி, உரத் தட்டுப்பாடு என பல பிரசினைகள் ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்தன.

ஆனால் இதற்கப்புறமும் திமுக வென்றிருக்கிறது. அதுவும் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்! எப்படி?

ஒரு ரூபாய் அரிசி, 'இலவச' நிலம், அரசின் பல இலவசங்கள் மக்களிடம் அரசுக்கு நல்ல பெயரை வாங்கி இருக்கலாம்.( இதில் ஒரு கவனிக்க வேண்டிய அம்சம், திருமங்கலத்தில் இன்னும் கலர் டிவி விநியோகம் நடக்கவில்லை. நேற்றுவரை அது எதிர்கட்சி எம்.எல்.ஏ தொகுதி)

அண்மையில் தில்லியிலும், மத்திய பிரதேசத்திலும் அதற்கு முன்பு குஜராத்திலும் நடந்தது போல நல்லாட்சி என்பது anti incumbency யை அர்த்தமிழக்கச் செய்து விடுகிறது என்பது மறுபடியும் திருமங்கலத்தில் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கலாம்.

இதெல்லாம் இருக்கலாம்தான்.

ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

ஊடகங்களுக்கும் அடித்தள மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும் வெகுஜனங்களுக்குமிடையே ஆன இடைவெளி போல.

ஊடகங்களும் மெய்யான பிரசினைகளை (real issue) விட்டுவிட்டு அவர்கள் எதை முக்கியம் எனக் கருதுகிறார்களோ அதைப் பேசுகிறார்கள் எனத் தோன்றுகிறது.

ஆம் அப்படித்தானென்றால் இது கவலைக்குரிய விஷயம்.

Sunday, January 11, 2009

அ-புனைகதை யுகம் ஆரம்பிக்கிறதோ?

புழுதி இல்லை; நெரிசல் இல்லை; வானை மூடிப் பந்தலிட்டிருந்ததால் வெயில் கூடத் தெரியவில்லை. தேடி வந்து கையில் திணிக்கப்படும் குப்பைகள் கூட அதிகம் இல்லை.(ஒவ்வொரு முறையும் அந்துருண்டையிலிருந்து அஜீரண
மாத்திரை வரையிலான, புத்தகங்களுக்கு சம்பந்தமில்லாத துண்டு விளம்பரங்களைத் தேடி வந்து கையில் கொடுத்து விட்டுப் போவார்கள்.அவற்றை எங்கே போடுவது என்று தெரியாமல் வீடு வரை எடுத்து வந்து வீசியிருக்கிறேன்).

இந்த ஆண்டு புத்தகச் சந்தை எனக்கு சற்று வித்தியாசமாகத்தனிருந்தது. புத்தகச் சந்தையின் 32 ஆண்டுகளில் அநேகமாக 28 ஆண்டுகளுக்குக் குறையாமல் நான் அதற்கு வருகை தந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பள்ளி மைதானத்தில் நடை பெறும் சந்தைக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன்.

நான் சென்றது சனிக்கிழமை (10.1.08) மதியம் மூன்றே முக்கால் மணிக்கு. கூட்டம் அதிகமில்லை. நுழைவுச் சீட்டு வழங்கும் கவுண்டர்களில் ஒன்றை மட்டும் திறந்து வைத்து விட்டு மற்றதை மூடி வைத்திருந்தார்கள்.

நான் புத்தகச் சந்தையைப் பெரும்பாலும் சாதரணமாக சென்னையில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்காத/ காணக் கிடைக்காத நூல்களை வாங்குவதற்கான வாய்ப்பாகத்தான் பயன்படுத்தி வருகிறேன். 70களின் இறுதியில் சிறுபத்திரிகைகளை, அ.மி. மெளனி, தி.ஜா போன்றோரின் நூல்களை நாடி இந்தச் சந்தைக்குப் போவேன். இன்று சிறுபத்திரிகைகள் பெரும் நிறுவனங்களாகிவிட்டன. ஆனால் இலக்கிய உலகில் இலக்கியச் சிற்றேடுகள்
இருப்பதைப் போல, பதிப்புலகில் சிறு பதிப்பகங்கள் உண்டு. அநேகமாக அரசியல் பிரசுங்களை அல்லது அதிகம் அறியப்படாத படைப்பாளிகளின் எழுத்துக்களை அல்லது மொழி பெயர்ப்புக்களை வெளியிடுபவர்களாக அவர்கள்தானிருப்பார்கள். வெகுஜன எழுத்தாளர்களின், நட்சத்திர எழுத்தாளர்களின் நூல்களை சென்னையிலுள்ள எந்தப் புத்தகக் கடையிலும் என்று வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சிறு வெளியீட்டார்களின் நூல்களை இங்கு விட்டுவிட்டால் பின் தேடிக் காண்பது அரிது. எனவே அவர்களுக்குத்தான்
எனது முன்னுரிமை.

காந்தளகம், பரிசல், திராவிடன், மித்ர, காலச்சுவடு, பயனியர் ஆகிய அரங்குகளில் சில நூல்கள் வாங்கினேன்.உயிர்மை,கீழைக்காற்று, தமிழ்ப் பல்கலைக் கழகம், சந்தியா, அம்ருதா ஆகியவற்றை அடுத்த வருகையின் போது பார்க்க உத்தேசம்.அடையாளம், அலைகள், ஆழி, சாகித்ய அகதாமி, அம்பேத்கர் நூல்கள்
விற்கும் அரங்கு இவற்றில் சில வற்றைப் புரட்டிப் பார்த்தேன்.தமிழினியில் வெங்கடேசனின் புதிய நாவல் (காவல் கோட்டம்) தவிர புதிய நூல்களைப் பார்க்க முடியவில்லை. அங்கே பெரும்பாலும் புனைவிலக்கியமே கண்ணில் பட்டது.

இந்த முறை பொதுவாகவே புது நூல்கள் அதிகமில்லை. ஆனால் சில புதிய முயற்சிகள் வரவேற்கத் தக்கவை.

தமிழ் மண் பதிப்பகத்தில் தமிழக வரலாற்றை காலவரிசையில் பல தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார்கள். சதாசிவப் பண்டாரத்தாருடைய நூல்கள், வேங்கடசாமி நாட்டாருடைய நூல்கள், வெ.சாமிநாதசர்மாவுடைய நூல்களின் தொகுதி ஆகியவை கிடைக்கின்றன.

ப்ராடிஜி வெளியிட்டிருக்கும் கேள்விக்குறி வரிசையும் (என்ஜினியர் ஆகலாமா? மாறுபட்டு சிந்திக்கலாமா? பேசப்பழகலாமா? பிறரைப் புரிந்து கொள்ளலாமா? எனப் பல கேள்விகள்) அது போன்ற ஒரு வரவேற்கத் தக்க முயற்சி. என் டிரைவரின் குழந்தைக்காக பிராடிஜியில் சில நூல்கள் வாங்கச் சென்ற போது மாறுபட்டு சிந்திக்க்லாமாவைப் புரட்டினேன். எளிதான வசீகரிக்கும் நடை. அவர்களின் நூல் வரிசையைக் கண்டு பிரமித்துப் போனேன். மெகலன், ஜார்ஜ் வாஷிங்டனில் ஆரம்பித்து குளோபல் வார்மிங் வரை அறிவியல் சாதனையாளர்கள், வரலாற்று நாயகர்கள், கண்டங்கள், உயிரினங்கள், அறிவியற் சாதனங்கள் என நாம் குழந்தைகளுக்குச் சொல்ல விரும்பும் அனைத்தும் இருக்கின்றன. சில குறிப்பிடத் தகுந்த விடுபடல்கள்: அறிவியலாளர்களில் ரைட்
சகோதர்கள், சார்ல்ஸ் பாபேஜ் அலக்சாண்டர் ஃபிளமிங், வரலாற்று நாயகர்களில் மாசேதுங், ராஜீவ் காந்தி. கல்பனா சாவ்லா. நம் அரசமைப்புச் சட்டம் அல்லது ஜனநாயகம் அல்லது பாராளுமன்றம் பற்றிய ஒரு புத்தகமும் தேவை. சினிமாவை முற்றிலுமாக ஒதுக்க வேண்டியதில்லை.. சத்தியஜித்ரே கூடவா தேற மாட்டார்? அதே போல தமிழ் எழுத்தாளர்களையும் புறக்கணிக்க வேண்டாம். பாரதியாரைத் தவிர வேறு யாரும் அகப்படவில்லை. பாரதிதாசன், கல்கி கூடவா ஒதுக்கப்பட வேண்டும்?. எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லி இன்று குழந்தைகளைத் தூண்டவில்லை என்றால், 50ஆவது புத்தகக் காட்சியில் நாம் கிழவர்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இசை உலகமும் மெளனம் சாதிக்கிறது.

நெடுநாளாக எனக்குள் ஓர் கனவு உண்டு. அதை ப்ராடிஜி முயற்சி செய்து பார்க்கலாம். பெரும்பாலும் குழந்தைப் புத்தகங்கள் பெரியவர்களின் குழந்தைத்தனமாக இருக்கும் அல்லது பெரியவர்கள் தீட்ட விரும்பும் நல்லுலகாக
இருக்கும். ஆனால் குழந்தைகளின் உலகம், சிந்தனை வேறு. சிறு குழந்தையாக இருந்த போது என் சகோதரி மகள் என்னிடம் கேட்டது: குதித்துக் குதித்துப் பார்த்தும் திராட்சைப் பழம் எட்டவில்லை என்றால் ஏன் நரி ஒரு ஏணியைக் கொண்டு அதை எட்ட முயற்சிக்கவில்லை? கார் ஓட்டும் பூனைகளை டிஸ்னி உலகில் சந்தித்த குழந்தைக்கு ஏணியில் நரி ஏறுவது பெரிய காரியமாகத் தோன்றவில்லை. அழ.வள்ளியப்பாவிடம் குழந்தையாக இருந்த போது என் மகன் கேட்ட கேள்வி : படரக் கொம்பில்லை என்றால் ஒரு கம்பை எடுத்து நட்டிருக்கலாமே? பாரி ஏன் ஒரு தேரை விட்டுச் செல்ல வேண்டும்? குழந்தைகளின் லாஜிக் நம்முடைய லாஜிக்கிலிருந்து வேறுபட்டது. எனவே ஏன் குழந்தைகளே குழந்தைகளுக்குப் புத்தகம் 'எழுத' கூடாது? அவர்களுக்கு எழுத வருமா என்பது கேள்வியே இல்லை. அவர்கள் சொல்லட்டும், NHM ஆசிரியர்களில் யாரேனும் எழுதட்டும்.

பொதுவாக புத்தகச் சந்தையில் சக எழுத்தாளர்களை சந்திக்க நேர்வதுண்டு.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை இங்குதான் முதலில் சந்தித்தேன். அவர் தன் புகைப்படங்களை வெளியிட்டுக் கொள்ளாமல் ராணுவ ரகசியம் போல்
காப்பாற்றி வந்ததால் அவர்தான் எஸ்.ஏ.பி. என்று பலருக்குத் தெரியாது. எனக்கும் கூட. திசைகள் (அச்சிதழ்) வெளிவந்த சமயம் அது. வானதி அரங்கில் ஏதோ மேய்ந்து கொண்டிருந்த போது என் தோளைத் தொட்டு 'ஜமாய்க்கிறீங்க' என்று காதருகே மெல்லிய குரலில் ஒருவர் சொல்லக் கேட்டுத் திரும்பிய போது அவர்
புன்னகைத்தார்.திருநாவுக்கரசு ஓடி வந்து அறிமுகம் செய்து வைத்தார். அச்சுப் பத்திரிகைகளுக்கு வரும் முன் கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியராக கல்லூரி மாணவராக சுதாங்கன் அறிமுகம் ஆனதும் ஏதோ ஒரு புத்தகச் சந்தையில்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட கிழக்கில் யாராவது எழுத்தாளர்கள் இருந்து
கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த முறை அதிகம் எழுத்தாளர்களைக் காணவில்லை. தமிழினியில் கண்மணி குணசேகரனைப் பார்த்தேன். அன்னத்தில் மோகனைப் பார்த்தேன். கிழக்கில் வந்து பத்ரியையும் ராகவனையும் தேடினேன். அங்கிருந்த கருந்நீல NHM டி ஷர்ட் அணிந்த ஒருவர் பத்ரி ஆபீசில் மீட்டிங்கில் இருக்கிறார் என்று 'கார்ப்பரேட்' பதிலைச் சொன்னார். ராகவன் வருவார் போவார் ஆனால் எப்போது என்று தெரியாது என்றார். (அப்போது எனக்கு பா.ரா.வின் விபத்துப் பற்றி தெரியாது) ஆனால் இரா.முருகனையும், மருதனையும் சந்தித்தேன்.

எழுத்தாளர்களை சந்திக்க முடியவில்லையே தவிர வாசகர்கள் வழக்கம் போல இன்ப அதிர்ச்சி தந்தார்கள். திருநின்றவூரிலிருந்து வந்திருந்த அறிவுச் செல்வன் பின்னாடியே துரத்திக் கொண்டு வந்து என் சில கதைகளைப் பற்றிப் பேசினார். என் சிறுகதைத் தொகுப்பைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்ன கடையநல்லூர் ஷேக்தாவூத்தை கிழக்கிற்கு அனுப்பி வைத்தேன். நந்தகோபால் என் அறிவியல் புனைகதையான வித்வானை வரிவரியாக நினைவு கூர்ந்து திகைக்க வைத்தார்.

என்றாலும் இந்தப் புத்தகச் சந்தையில் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்த ஒரு விஷயம்: தமிழ் வாசக ரசனை அ-புனைகதைகள் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது. புனைகதைகள் அதிகம் வெளியிடும், தமிழினி, அன்னம்
போன்ற அரங்குகளில் அதிக வாசகர்களைக் காணவில்லை. அம்பானியிலிருந்து கிலானி வரை நூல்கள் வெளியிட்டுள்ள கிழக்கில் நிற்க இடமில்லை. அநேகமாக வெகுஜன இதழ்கள், trendஐத் தீர்மானிக்கின்றன என எனக்கு ஒரு சந்தேகம். 70 களின் இறுதியில் வெகுஜன எழுத்தாளர்களின் தொடர்கதைகள் விற்றுத் தீர்ந்தன.
சாண்டியல்யன் இல்லாமல் பலருக்குத் தூக்கம் வரவில்லை. எண்பதுகளில் கடைக்குக் கடை (புதுக்) கவிதை.அப்போது தமிழர்கள் கவிதையை சுவாசித்து கவிதையைத் தின்று கவிதை (போல ஒன்றை) கழிந்து கொண்டிருந்தார்கள். அப்புறம் சிற்றிதழ் இலக்கியவாதிகளின் படைப்புக்கள் அணிவகுத்தன. இந்தக்
காலகட்டங்களில் வெகுஜனப் பத்திரிகைகளை ஆக்ரமித்திருந்தவையும் இவைதான். இப்போது வாரப்பத்திரிகைகளில் புதினங்கள், புனைவிலக்கியங்களுக்கான இடம் குறைந்து விட்டது. ஏகப்பட்ட மனித் தலைகள். அவர்களைப் பற்றிய துணுக்குகள் கட்டுரைகள். (அக்கப்)போர்கள். எல்லோருக்கும் ஒரு நிமிட எலுமிச்சை வெளிச்சம். பத்திரிகைகள்

வாசக ரசனையைத் தீர்மானிக்கின்றனவா அல்லது Vice-versaவா?அறிந்து கொள்ள ஆவல் இன்னொன்றும் கவனித்தேன். சில ஆண்டுகளுக்கு முன் 600 பக்கங்களுக்குக் குறையாத, கெட்டி அட்டையில் கட்டப்பட்ட (ஹார்ட் பவுண்ட்) செய்யப்பட்ட தலையணைப் புத்தகங்கள் நன்றாகவே விற்பனையாகிக்
கொண்டிருந்தன. நான் போன அன்று பார்த்த வாசகர்கள் தலையணைகளை எடுத்துப்பார்த்துவிட்டு விலையைப் பார்த்து மிரண்டு பயபக்தியோடு திரும்ப வைத்தார்கள். பொருளாதார மந்தம் காரணமாயிருக்குமோ?

நான் தேடிப் போன புத்தகங்கள் கிடைக்கவில்லை. பாரதியின் காலவரிசைப்படுத்தப்பட்ட பதிப்புகள் (5 முதல் 9 வரை) தேவை. அகப்படவில்லை. திராவிட இயக்கங்களின் பழைய இதழ்களின் தொகுப்பு (திராவிடன், குடியரசு ஆகிய இதழ்கள்) தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை. அந்த அதிர்ஷ்டம் இல்லை புத்தகங்களுக்கு சம்பந்தம் இல்லாத பால்கோவாவும், பப்பாளிப் பழத் துண்டுகளும் கூட அரங்கில் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. ஆனால் பழைய புத்தகக்கடைகளை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். முந்தைய புத்தகச் சந்தைகளில் கலைக் கல்லூரிக்கு வெளியே நடைபாதைகளில் அவர்களும் கடைபோடுவார்கள். பள்ளிக்கூட நான் டிடெயிகளையும் pulp fictionயும் சகித்துக் கொண்டு தேடினால் சில முத்துக்களும் அவற்றில் அகப்படும். இந்த சந்தையில் அந்த அதிர்ஷ்டமும் இல்லை.

வாசலில் இருந்த மேடையில் உரையாற்ற வைரமுத்து வந்திருந்தார். (வடுகப்பட்டி) வராக நதியில் வந்துதித்த முத்தே என யாரோ வரவேற்புக் கவிதை வாசிப்பது காதில் விழுந்தது. நதிகளில் முத்துக் குளிக்க முற்படும்
தமிழர்களின் விஞ்ஞானத்தை வியந்து கொண்டே வெளியேறினேன்.

Wednesday, January 07, 2009

கட்டப்பட்ட காவலர்கள்

எந்த ஒரு சமூகத்திலும் அதன் அரசியல்தான் அதன் இலக்கியத்தைத் தீர்மானிக்கிறது; இன்று காலையில் எழுந்து நாம் பல்துலக்குவதிலிருந்து இரவு ஏற்றிவைக்கும் கொசு வர்த்திவரை கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் போல அரசியல் விரவிக்கிடக்கிறது.. அரசியலுக்கும் சமூகத்திற்குமான உறவைக் குறித்து என் கதைகள் விளம்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்தப் பத்தியில் ஑அரசியல்ஒ பேசப் போவதில்லை. நாம் காணத்தவறிய/ காணமறுக்கிற நம் கண்ணுக்கு எட்டாத சமகால மாந்தர்களின் கதைகளை, அவர்தம் மறுபக்கங்களை இவை பேச முற்படும். அவற்றில் அரசியலும் இருக்கலாம். அது தொடாத வாழ்வு இங்கு ஏது?

*

யிலுக்குக் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலிருந்தது. நேரத்தை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் தொலைக்காட்சிகளை மேய்ந்து கொண்டிருந்தேன். உள்ளூர் கம்பிவடச் சானலில் அறியாத முகங்கள் நிறைந்த ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு தெலுங்குப் படத்தின் தமிழ் பிரதி போலத் தோன்றிய அந்தப் படத்தில் நான் நுழைந்த போது ஒரு காவல் அதிகாரி, லாக்கப்பில் அநேகமாக அரை நிர்வாணமாக இருந்த ஒருவனை மூர்க்கத்தனமாக விளாசிக் கொண்டிருந்தார். அதே படத்தில் நகைச்சுவைக்காக ஒரு கான்ஸ்டபிள் பாத்திரம் கோமாளித்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

நம் காவலர்கள் மூர்க்கமான விலங்குக் குணங்களும், முட்டாள்தனமான கோமாளித்தனமும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்து செய்யப்பட்ட உயிரினங்கள் என்பதுதான் பரவலான வெகுஜன அபிப்பிராயம் சினிமா அலுத்துப் போய் செய்திச் சானல்களுக்குத் திரும்பினேன். ந்திரப் பிரதேச வாராங்கல்லில், ஒருதலைக்காதல் வெறியில் இளம்பெண் ஒருவர் மீது சிட் ஊற்றிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அது விவரித்துக் கொண்டிருந்தது. ஓரொம்பச் சரியான நடவடிக்கை, இவனுகளை எல்லாம் சுட்டுத்தான் கொல்ல வேண்டும்ஔ என்று அருகிலிருந்த என் சகோதரி அதை சிலாகித்துக் கொண்டிருந்தார். ஓ போலீஸ்காரனே நீதிபதியாக இருக்கலாம் என்றால் கோர்ட் எதற்கு, சட்டம்தான் எதற்கு?ஔ என்றேன் நான். ஓநீ சும்மா இரு. மெர்சி கதை மறந்து போச்சா?ஔ என்றார் அவர்.

மெர்சி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இதே போல் சிட் வீச்சுக்கு உள்ளான ஒரு கல்லூரி மாணவி. அந்த சம்பவத்தில் முகத்தின் ஒரு பகுதி வெந்துபோய் விட்டது. ஏழைக் குடும்பத்துப் பெண். ஓயார் கல்யாணம் செய்துக்குவா?ஔ என்று அவளது தந்தை மருகி மருகி அழுதபோது, ஓ மேலே படிக்க வையுங்கள், கல்வி காப்பாற்றும்ஔ என்று சொல்லி அந்தப் பெண் பல்மருத்துவம் படிக்க என் குடும்பம் உதவி செய்தது. அதைத்தான் அக்கா ஞாபகப்படுத்துகிறார். அந்தத் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்த போது அந்த வலி அவரைக் கடந்து போயிருக்க வேண்டும்.

விலங்குகளுக்கும் கோமாளிகளுக்கும் இடையில் ஹீரோக்களாகவும் காவலர்கள் இருக்க வேண்டும் என சராசரிப் பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என அவரது விமர்சனம் எனக்குச் சொல்லியது.

அன்று நான் பயணம் செய்த ரயில் பெட்டியில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் பயணித்தார்கள்.இரு சிறு கிராமங்களில் உள்ள காவல் நிலைய ய்வாளர்களாக உள்ள கீழ்த்தட்டு அதிகாரிகள். அவர்களில் ஒருவர் அருகில் இருந்த பயணியிடம் மாலைச் செய்தித்தாளை வாங்கிப் பார்த்தார். வாரங்கல் என்கவுண்டர்தான் அந்த மாலையில் தலைப்புச் செய்தி. ஓஇதிலே போலிசுக்கு நல்ல பேருஔ என்றார் செய்தித்தாளை இரவல் கொடுத்த பயணி. அதிகாரி பேப்பரிலிருந்து கண்களை உயர்த்தி தலையை அசைத்தார். ஓநீங்க என்கவுண்டர் செய்திருக்கிறீர்களா?ஔ என்றார் பயணி அவரிடம்.

அதிகாரி பதில் சொல்லவில்லை. முகத்தில் ஒரு விரக்தி தோய்ந்த புன்னகை நெளிந்தோடியது. பேச்சு எங்கெல்லாமோ ஓடி மணற்கொள்ளையில் வந்து நின்றது. அந்த ய்வாளரின் காவல் நிலையம் தாமிரபரணிக் கரையோரம் உள்ள சிற்றூரில் இருந்தது.ஔ யாரை என்கவுன்டர் பண்ணச் சொல்றீங்க.இப்பெல்லாம் லாரில வந்து லூட் பண்றதில்லை. மாட்டு வண்டில வந்து மணல் அள்ளிக்கிட்டுப் போறாங்க.ஊருக்கு வெளிய நிக்ற லாரில அது லோட் கும். கடாரம் கொண்டான்ல (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இருக்கிற சிமிண்ட்டு பிளாக் பண்ற ஃபாக்ட்ரித்தான் போகுதுனு எனக்கு நல்லாத் தெரியும். னா என்ன செய்ய? மாட்டு வண்டிக்காரனையா என்கவுண்டர்ல போட்டுத் தள்ள? வண்டிய சீஸ் பண்ணி ஸ்டேஷன்ல வைச்சிருந்தோம். மாட்டுக்கு தீவனம் வாங்கிப் போட்டு மாளலை. மாட்டுக்கு ஏதாவது யிருந்தா என் தோலை உரிச்சிருப்பாங்க. விட்டுட்டோ ம்.

மணல் கந்தனு கேள்விப்பட்டிருப்பீங்க. முன்பு அவனுக்கு ரவுடி கந்தன்னு பேரு. இப்ப மணல் கந்தன். பத்து வருஷத்திற்கு முந்தி இந்த ஏரியால அவன்தான் முதல்ல மணல் அள்ள ரம்பிச்சான். அப்போ மணல்ல இவ்வளவு பணம் இருக்குனு நிறையப் பேருக்குத் தெரியாது. இப்போ அவன் கோடீஸ்வரன். அவனை மடக்கிப் பிடிச்சு கேஸ் போட்டோ ம். ஹைகோர்ட் வரைக்கும் போய் பெயில் வாங்கினான். சம்பவம் நடந்த தேதியில நான் மலேசியாவிலிருந்தேன்னு அவன் சொல்லுதான். அவன் பாஸ்போர்ட்டும் அப்படித்தான் சொல்லுது. னா அன்னிக்குத் தேதியில நான் அவனை நான் கண்ணால இந்த ஊர்ல பார்த்தேன். கோர்ட்ல ஜட்ஜூ என்னைக் கோட்டிக்காரன் மாதிரி பாக்கார்.இந்த மாதிரி பொய் கேஸ் எல்லாம் போடாதீரும்னு எனக்கு அட்வைஸ் பண்ணுதாரு.

இருபதாயிரம் ரூபாய்க்கு பெயில் கிடைக்குதுனு சொல்லுதாங்க. லட்சரூபாய்க்கு பாஸ்போர்ட்டும் கிடைக்கும் போல. இதுக்கு நடுவிலதான் நாங்க கேஸ் போட்டு ரவுடிகளை மடக்கணும். என்ன செய்ய?

சட்டக் கல்லூரி பசங்க அடிச்சுக்கிட்டாங்கள்ல. அன்னிக்கு ஹைவேஸ்ல நடு ரோட்டில மோட்டர் சைக்கிள குறுக்க மறிச்சி நிறுத்திட்டு நிக்கான். கவுர்மெண்ட் பஸ் மேல கல்லு விட்டான்.பிடிச்சு அடிக்கப் போனேன். சார் வேணாம் சாதிக் கலவரம் வந்திரும்னு ஏட்டு மறிச்சு தடுத்திட்டார்.

கொள்ளைக் கேசு ஒண்ணு. திருடனைப் பிடிச்சாச்சு. பொருள் அவன் வீட்டு பீரோல இருக்கு. வீட்டுக்குப் போனோம். அவன் பொண்சாதி வாசலை மறிச்சுக்கிட்டு நிற்கிறா. தைரியம் இருந்தா தாண்டிப் போயிரு பார்ப்போம்னு சவால் விடறா. முடியைப் பிடிச்சு இழுந்தெறிஞ்சிட்டு உள்ள போயிருவேன். அலிகேஷன் யிரும். சாட்சி வைச்சுக்கிட்டுப் போனேன். அப்படியும் அவ வீட்டிலிருந்த 10 பவுன் நகையை நான் களவாண்டேன்னு என் மேலே புகார் கொடுத்திருக்காஔ

ஓஅலிகேஷன்னா என்ன?ஔ என்றார் அருகில் இருந்தவர்.

ஓபெரும்பாலும் மொட்டைப் பெட்டிஷன். மொட்டையா இருந்தாலும் விசாரணை நடக்கும்.அதிகாரிகள் நல்லவங்களா, நேர்மையானவர்களா இருந்தா புரிஞ்சுப்பாங்க. இல்லைனா சங்கடம்தான்ஔ

ஓஅரசியல்வாதிகள் தலையீடு இருக்கா?ஔ என்றேன் நான்.

ஓஅலிகேஷன்னு வரும்போது உதவி செய்ய, அவங்க கட்சியில இருக்கிற உள்ளூர் ரவுடிகளை அடக்கி வைக்க அவங்க உதவி தேவை. ளும்கட்சி, எதிர்கட்சினு எந்தக் கட்சியா இருந்தாலும் அனுசரித்துப் போறதுதான் நடைமுறையில் சாத்தியம். விறைச்சுக்கிட்டு நிற்க முடியாது. மேலதிகாரி மாவட்ட செயலாளரோட நெருக்கமா இருக்கார்னா கீழ இருக்கிற கொசு நாங்க மோதிக்கிட்டு நிக்க முடியுமா? இன்னிக்குத் தேதியில மேல இருக்கிற உச்ச பட்ச அதிகாரியிலிருந்து கீழ இருக்கிற எங்களை மாதிரி இன்ஸ்பெக்டர் வரைக்கும் ளும்கட்சியை, அது எந்தக் கட்சினாலும் சரி, விரோதிச்சுக்க முடியாது. முறைச்சுக்கிட்டா ஒண்ணு தூக்கி அடிச்சிடுவாங்க. இல்லை அலிகேஷன்ல போட்டுத் தள்ளிடுவாங்கஔ

ஓ உங்க வீட்டிலே இதெல்லாம் புரியுமா?ஔ

ஓபுரியும். புரியணும். போலீஸ்காரனுக்கு வாக்கப்படறவ என்னிக்கு வேணாலும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பத் தயாரா இருக்கணும்.ஔ

ஓகுழந்தைகள்?ஔ

ஓஒரே பையன். இந்த இரண்டு வருஷத்தில நாலு ஸ்கூலுக்குப் போயிட்டான். ஏன்னா எனக்கு டிரான்ஸ்பர். என் பையன் என்ன படிக்கிறான்னு கேளுங்க?ஔ
ஓஎன்ன படிக்கிறான்ஔ
ஓஎல்.கே.ஜி.ஔ
ஓஎல்.கே.ஜி.யிலேயா நாலு ஸ்கூல்?ஔ
ஓஎன்ன செய்ய அதான் போலீஸ்காரன் தலையெழுத்துஔ

அவர் சொன்ன வேறு சில விஷயங்களும் கேட்கப் பரிதாபமாகத்தான் இருந்தன. அண்மையில் ஒரு கட்சித் தலைவரின் கார் தாக்கப்பட்டதை அடுத்து ஒரு வாரத்திற்கு மேல் அவர் பகுதியில் ஜாதிக்கலவரம்.தினமும் 2 மணி நேரம்தான் தூங்க முடிந்தது. ஊரில் இரவு 3 மணி வரை ரோந்து போயாக வேண்டும். மறுபடியும் காலையில் ஊர் விழித்துக் கொள்ளும் முன் எழுந்து கொள்ள வேண்டும்.

மும்பையில் தீவிரவாதிகளை எதிர்த்து தீரமுடன் போரிட்டு மடிந்த காவலர்கள் வணங்கத்தக்க வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

னால் நம் மத்தியில் கைககள் கட்டப்பட்ட நிலையில் போராடிக் கொண்டே வாழ்கிற இந்தக் காவலர்களின் நிலை அதற்குச் சற்றும் இளைத்ததல்ல.


அம்ருதா ஜனவரி 2009

Sunday, January 04, 2009

மொட்டைமாடியில் திறக்கும் ஜன்னல்.


இந்த வார விகடன் (7/1/2009)தனது பொக்கிஷம் பகுதியில் நான் 33 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதையை மீள் பிரசுரம் செய்திருக்கிறது. அதைப் படித்த நண்பர் ஒருவர் போன் செய்து "நீங்கள் ஏன் இப்போது சிறுகதைகள் எழுதுவது இல்லை?' என்று மெய்யான மனக்குறையுடன் கேட்டார். நான் 2008 நவம்பர் மாதம் கூட கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.(அது இந்த வலைப்பதிவுகளில் கூட இருக்கிறது) நான் அதைச் சொன்னபோது "நீங்கள் ஆடிக்கொரு முறை எழுதுவதற்கு பதில் அவ்வப்போது எழுதக் கூடாதா" என்று கேட்டு என்னை மெளனிக்க வைத்தார் அந்த வாசக நண்பர்.
நான் அடிக்கடி சிறுகதைகள் எழுதவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, அநேகமாக வாரந்தோறும் கட்டுரைகள் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்திருக்கிறேன்.
நான் எந்த நோக்கத்திற்காக சிறுகதைகள் எழுதி வந்தேனோ, சிறுகதைகள் மூலம் என்ன செய்ய வேண்டும் என விருப்பப்பட்டேனோ அவை இந்தக் கட்டுரைகள் மூலமும் நிறைவேறி உள்ளன. அதனால் இந்தக் கட்டுரைகளை எழுதும் போது எனக்கு மகிழச்சியும், மனநிறைவுமே ஏற்பட்டன.
இலக்கியததை 'உய்விக்கும்' நோக்கத்தோடு நான் சிறுகதைகள் எழுத முற்பட்டதில்லை. வாசகனை அவனது மூளையைக் கொண்டே சிந்திக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் எழுத்தின் நோக்கம். அது சிறு கதையானாலும் சரி, கட்டுரையானாலும் சரி. அதற்குப் 'பொறி' கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
நான் க்டந்த இரண்டாண்டுகளில், சிங்கப்பூர் தமிழ் முரசு, புதியபார்வை, உயிர்மை, தினமணி, இந்தியாடுடே, திசைகள், மற்றும் என் வலைப்ப்திவுகளில் எழுதிய கட்டுரைகள் 'என் ஜன்னலுக்கு வெளியே' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. என்நூல்களை வெளியிட்டுவரும் கிழக்குப் பதிப்பகம்தான் இதையும் வெளீயிடுகிறது.

அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரும், வலைப்பதிவரும், zதமிழ் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவில் பணியாற்றுபவரும், ஜூனியர் விகடனில் பத்திகள் எழுதுபவ்ருமான ஜென்ராம் நூலை விமர்சிக்கிறார்.

வெளியீடும் விவாதமும் நாளை 5/1/2009 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியில் (எல்டாம்ஸ் சாலை ஆழ்வார்பேட்டைசென்னை ) நிகழ இருக்கிறது.

மேலதிகத் தகவல்களுக்கு பத்ரியின் பதிவைப் பார்க்க்:
http://thoughtsintamil.blogspot.com/

'இன்றுள்ள சூழலில் கருத்துக்களும் விவாதங்களும் காற்றையும் நெருப்பையும் போல் அவசியமாக இருக்கிறது' என்று அந்த நூலில் ஒரிடத்தில் எழுதியிருந்தேன். மொட்டைமாடியில் காற்றுக்குப் பஞ்சமில்லை. நெருப்பை நீங்கள் கொண்டு வரலாம்.

Monday, November 10, 2008

நடுவர்கள்

வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி.
‘வாக்கிங்' போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக் கிடந்த பேப்பரைத் திரட்டி எடுத்துக் கொண்டு படிக்கத் திறந்தபோது அந்த பயங்கரம் அதில் விரிந்து கிடந்தது. ‘அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி: குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்ட இந்திய இளைஞர்' என முதல் பக்கத்தில் வீறிட்ட அந்தச் செய்தி, அந்த கோர சம்பவத்தை கற்பனைக்கு இடம் வைக்காத ஒரு கிரைம் நாவலைப்போல் விவரித்திருந்தது.
வாசற்கதவிலேயே சாய்ந்து கொண்டு அதை வாசிக்கத் தொடங்கினான் மாதவன்.
*சுரேஷ் ஜெயராமனை ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்திருக்கும். பதினைந்து வருடத்திற்கு முன் அதிகாலையிலிருந்து அமெரிக்கத் தூதரகத்தின் முன் காத்திருந்த வரிசையில் அவரை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அவரை உங்களுக்கு அறிமுகம் இல்லையென்றாலும் அவரது வாழக்கை உங்களுக்குப் பரிச்சயமானதுதான். இந்தியாவின் படித்த, நகர்புற நடுத்தர வர்க்கத்திற்குப் பரிச்சயமான வாழ்க்கை.
அப்பா ஜெயராமன் பொதுத்துறை நிறுவனத்தில் பெரிய அதிகாரி. அம்மா நிர்மலா ஆங்கிலப் பேராசிரியர். இரண்டு பேரும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் ஓய்வு பெற்றார்கள். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகில் எழுந்து நிற்கும் அடுக்குமாடி வீடு ஒன்றில் 1200 சதுர அடி வாங்கிக் கொண்டு ஓய்வுக்குப் பின் குடியேறினார்கள்
பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே அமெரிக்கக் கனவுகளை சுவாசித்து வளர்ந்த பையன் சுரேஷ். அவன் ‘வெட்டி அரசியல்' பேசுவதில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள் எவர் மீதும் உயர்ந்த அபிப்பிராயங்கள் கிடையாது. இடம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் பற்றி எழுதும் ஜும்பா லஹரியின் நாவல்கள் பிடிக்கும். ஆனால் அது இலக்கியமா என்ற சர்சைகளுக்குள் இறங்குவதில்லை. கல்லுரி வந்ததும் கதை படிப்பது குறைந்து விட்டது. சினிமாக் கிசுகிசுக்கள் தெரியும். ஆனால் அவற்றை அறிந்து கொள்ள அதிகம் மெனக்கெட்டதில்லை. கணினியில் மேயும் போது, இணையத்திலிருந்து இலவசமாக இறக்கி வைத்த இசைக்கீற்றுக்களை கேட்பதுண்டு. ஆனால் காதுதான் அதைக் கேட்டுக்கொண்டிருக்குமே தவிர கவனம் எல்லாம் கணினியின் மீதுதான் இருக்கும் தொலைக்காட்சிகளில் ‘பிசினஸ்' சானல்கள் அவனுக்குப் பிடித்திருந்தன. பதின்ம வயதில் எழும் ஹார்மோன் கிளர்ச்சிகள் கூட அவனைக் ‘கவிழ்த்து' விடவில்லை. பெண் சிநேகிதர்கள் உண்டு. ஆனால் அவர்களில் எவரும் காதலிகள் இல்லை.. பள்ளி இறுதித் தேர்வில் மாநில அளவில் ஏழாவதாகவோ எட்டாவதாகவோ ராங்க். பெங்களூர் ஐ ஐ எம் ல் எம்.பி.ஏ. அப்புறம் அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பனியில் கணினி முன் அமர்ந்து ஆபீஸ் வேலையும் பார்த்துக் கொண்டு அவ்வப்போது ‘பிளாக்' எழுதிக் கொண்டு ஒரு இரண்டு வருடம் போயிற்று. அதற்குப்பின் ஸ்காலர்ஷிப் கிடைத்து அமெரிக்காவிற்குப் படிக்கப் போனான். அறையை நான்கு பேருடன் பகிர்ந்து கொண்டு, முறை வைத்து சமைத்து, கட்டில் கிடைக்காத குளிர் நாட்களில் ஸ்லீப்பிங் பைக்குள் பொதிந்து கொண்டு தூங்கி, ஸ்காலர்ஷிப் பணத்தை மிச்சம் செய்து பழைய கார் வாங்கி, அங்கேயும் ஒரு எம்.பி.ஏ முடித்தான்.. அசத்தலான புராஜக்ட். அதனால் கேம்பஸ் இண்டர்வியூவில் மெரில் லிஞ்சில் வேலை கிடைத்தது. அம்மா தன் கூட வேலை பார்த்தவரின் பெண்ணையே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்து வைத்தாள் அவனுக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆட்சேபிக்கிற அளவிற்குக் கனகாவும் அப்படி ஒன்றும் சோடை போனவள் அல்ல. அவனது கனவின் இந்திய பிரதியாகவே அவள் இருந்தாள்..
அமெரிக்கப் பொருளாதாரத்தையும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் வால் ஸ்ட்ரீட் வேலையில் அழுத்தம் அதிகம் இருந்தது. ஆனால் அது வாரிக் கொடுத்தது. ‘அப்பா, மாதச் சமபளத்தில் நாள்களை நகர்த்தும் மத்திய தர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகிவிட்டோம்' என்று உற்சாகமாகக் கடிதம் எழுதினான் சுரேஷ். ”சந்தோஷம். காசு வருகிறபோதே அதில் கொஞ்சத்தைச் சேர்த்து வை. நான் வேண்டுமானால் இங்கே இடம் பார்க்கட்டுமா?” என்று பதில் எழுதினார் ஜெயராமன்..”வேண்டாம். இங்கேயே மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். ஆறை நூறாக்க அதுதான் சிறந்த வழி” என்று சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பினான்..
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடி எடுத்து வைத்ததும் அதன் பொருளாதாரம் அதிர்வுகள் எழுப்பியது. சுரேஷ் வேலை மாற்றிக் கொண்டான். இராக் யுத்தத்தை அடுத்துப் பொருளாதாரத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.
“ இந்தியாவிற்கே திரும்பிப் போய்விடலாமா?” என்றாள் கனகா.“ எப்படிப் போக முடியும்? போனால் நம் கெளரவம் என்னாகும்? அவர்கள் நம்மை ஏதோ சாதனையாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்தில் மண் அள்ளிப் போட வேண்டுமா?”
“பெற்றவர்கள்தானே புரிந்து கொள்ள மாட்டார்களா?”
“எப்படி முடியும் கனகா? இத்தனை நாள் இங்கே இருந்துவிட்டு அங்கே திரும்பிப் போனால் மூச்சு முட்டும். அவ்வப்போது லீவிற்குப் போகும் போது பார்க்கத்தானே செய்கிறாய்? ஏர்போர்டில் இறங்கி இமிகிரேஷன் க்யூவில் நிற்கும் போதே எரிச்சல் ஆரம்பித்து விடும். ஏதாவது அரசியல்வாதி அல்லது அவரது குடும்பத்தினர் க்யூவை உடைத்துக் கொண்டு முன்னால் போய் நிற்பார்கள். யாரும் கேட்க முடியாது.அதிகாரம் இருந்தால், பணம் இருந்தால், இந்தியாவில் ஒரு முன்னுரிமை, ஒரு அறிவிக்கப்படாத சலுகை. இல்லாவிட்டால் வேற மாதிரி மரியாதை. எந்த வேலையும் நேரத்தில் முடிக்க முடியாது. மெஜஸ்டிக் சர்க்கிளிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு டிராபிக்கில் நீத்திப் போக மூன்று மணி நேரம் ஆகும். முழி பிதுங்கி விடும் திட்டமிட்டு எதையும் ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிக்கும் போது திடீரென்று பவர் கட். இரயில்வே ரிசர்வேஷனிலிருந்து எலெக்ட்ரிசிட்டி வரை எதுவும் நிச்சியம் கிடையாது.”
“ 22 வயது வரைக்கும் நாம் அங்கேதான் வளர்ந்தோம் சுரேஷ்”
“நாம் வளர்ந்தோம். இவர்களால் வளர முடியுமா? என்று குழந்தைகள் நிதினையும் நித்தியாவையும் காட்டினான் சுரேஷ். பனிரெண்டு வருஷம் இங்கே படித்த பிறகு அவர்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போகமுடியுமா? போனாலும் அங்கு ஒட்டுமா? “
“பாட்டி தாத்தா பக்கத்திலிருந்து பார்த்து அரவணைத்துக் கொள்ள மாட்டார்களா?”
“பாட்டி பஜ்ஜி வேண்டுமானல் போட்டுத் தருவார். பர்கர் பண்ணத் தெரியுமா அவருக்கு?”
ஏதோ வெறியில் இந்தியாவை விட்டுக் கிளம்பி வந்த மாதிரி அமெரிக்காவை உதறிவிட்டுப் போவது அத்தனை சுலபமல்ல எனப் புரிந்த போது கனகாவிற்குக் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.
ஆனால் சுரேஷ் கலங்கியது அடுத்தடுத்து அமெரிக்க வங்கிகள் திவாலான போதுதான். கலங்கினான் என்று சொல்வதைவிட இடிந்து போனான் என்றுதான் சொல்ல வேண்டும். எவரிடமும் பேசாமல் எப்போதும் யோசனையிலேயே இருந்தான். சில நேரம் கண்ணை மூடிக் கொண்டு காற்றில் விரல்களால் கணக்குப் போட்டான். இரவில் இருட்டில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இணையத்தின் பக்கம் கூடப் போகவில்லை இரண்டொருமுறை காரை எடுத்துக் கொண்டு முப்பது மைல் தள்ளி இருக்கும் ராமர் கோவிலுக்குப் போய் வந்தான். அப்போது அவன் காரை ஓட்டுகிற வேகத்தைப் பார்த்தால் பயமாக இருந்தது.. கனகா சற்றுக் குழம்பி, நிறையத் தயங்கி, மாமனாரைக் கூப்பிட்டு அவராக போனில் கூப்பிடுவது போல கூப்பிடச் சொன்னாள். போன் மணி அடித்த போது அவன் எடுக்கவில்லை. அவள் எடுத்து போன் வந்திருப்பதாகப் போய்ச் சொன்ன போது “ செத்துப் போயிட்டேன்னு சொல்லு” என்று சீறினான்.
அதன் மறுநாளுக்கு மறுநாள் எல்லோருமே செத்துப் போனார்கள், அவனால் சுடப்பட்டு
*“பேப்பர் படிப்பதை வாக் போய்ட்டு வந்து வைச்சுக்கலாமா? ஏற்கனவே உனக்கு கொழுப்பேறிக் கிடக்குனு ஊர்ல பேச்சு இருக்கு. கொஞ்சம் நடந்தாலாவது அது குறையுதானு பார்க்கலாம்” குரல் வந்த திசையைப் பார்த்தான் மாதவன். தினமும் அவனுடன் கடற்கரையோரம் நடைபழகும் நண்பர்கள் நின்றிருந்தார்கள்.
“கொழுப்பு கிழுப்பு ஏன் சொல்ற? அவன் உள்ளத்தாலும் உடலாலும் இனிமையானவன். அதனால் நடந்தால் நல்லது” என்றான் நம்பி., மறைமுகமாக அவனது டயாபடீசைச் சுட்டிக் காண்பித்து. எல்லாவிஷயத்திலும் பாசிடிவ்வான பக்கத்தைப் பார்க்கிறவன் என்று அவன் தன்னை அறிவித்துக் கொள்வது வழக்கம்.
“காலங்கார்த்தால அவரோட தலையை உருட்ட அவரோட ஹெல்த் ரிப்போர்ட்தான் அகப்பட்டதா உங்களுக்கு?” என்று கடிந்து கொண்டாள் அனுராதா
மாதவன் நண்பர்களோடு கடற்கரையை நோக்கி நகர்ந்தான். மார்கழி மாத பஜனை கோஷ்டி மாதிரி தெருவை அடைத்துக் கொண்டு நடந்தார்கள். மப்ளர் அணிந்திருக்கவில்லை. அரைடிராயரும் நடப்பதற்கேற்ற காலணியும் அணிந்திருந்தார்கள். நாற்பதைத் தாண்டியவர்கள் என்றாலும் டி ஷர்ட் அணிந்திருந்தார்கள். அதையும் மீறி பீர் ஊற்றி வளர்த்த அவர்கலது தொப்பை வயதை அறிவித்துக் கொண்டு முன்னே நின்றது.
அந்தக் காலனிவாசிகள் அந்த அரைடிராயர்களுக்கு ‘அறிவுஜீவி கிளப்' என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களில் பலர் அறிவு சார்ந்த தொழில்களில் - ‘நாலட்ஜ் இண்டஸ்ட்ரியில்' - உழைக்கும் வெள்ளைக் காலர் வித்தகர்கள். மாதவன் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளன்.நம்பி மென்பொருள் நிறுவனத்தில் குழுத்தலைவன். அனுராதா ஐ ஏ எஸ் அதிகாரி. கிறிஸ்டோபர் டெலிவிஷன் செய்தியாளன். சபாபதி வங்கி அதிகாரி.
“ இத்தனை இடிக்கறோம் சார் வாயைத் திறக்கிறாரா பாரு?” என்றார் கிறிஸ்டாபர். மாதவன் மனம் முழுக்க சுரேஷ் ஜெயராமனின் கதை நிறைந்து கிடந்தது.
“யாரும் பேப்பர் பார்க்கலையா?” என்றான் மெதுவாக.“ஏன் என்ன விஷயம்? அரசாங்கம் இருக்கில்ல? இல்லை கவுந்திருச்சா?” “அதற்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு. ஆனால் பாவம் அமெரிக்காவில்தான் ஒரு சின்னப் பையன், பையன் இல்லை நம்பளை மாதிரி ஒரு நடுவயசுக்காரன்.... . “மாதவன் பேப்பரை விரித்துக் காட்டினான்.“ என்னய்யா கொடுமை இது?” என்றான் நம்பி“என்னவாக இருக்கும்?' என்றாள் அனுராதா“டிப்ரஷன்”“அது புரிகிறது. ஆனால் ஏன்? இத்தனை படித்தும், அந்தப் படிப்பு தன்னம்பிக்கையைத் தரவில்லையே? மன உறுதியைத் தரவில்லையே”“ அப்படிச் சொல்லிவிடமுடியாது. அமெரிக்காவில், ஏன் எந்த வெளி தேசத்திலும், முற்றாத இளம் வயதில் படிக்கப் போகிறவர்களுடைய மன உறுதியை அத்தனை எளிதாக சந்தேகப்பட்டுவிட முடியாது. அங்கே சின்னதும் பெரிதுமாக எத்தனையோ ஏமாற்றங்கள், அவமானங்கள். அதைக் கண்ணில் தண்ணீர் வராமல் ஜீரணித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வலிக்கும் அந்த நிமிடங்களில் தாங்கிப் பிடிக்க அருகில் குடும்பம் என்ற ‘சேப்டி நெட்' கிடையாது. கிழக்கு மேற்கு தெரியாத ஊர். தாய்மொழியில்லாத பாஷையின் புதிய உச்சரிப்புக்களைப் பழகிக் கொள்ள வேண்டும். புதிய நண்பர்களை சேகரிக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகத் துவங்க வேண்டும். அந்த அனுபவங்கள் எந்த மனிதனையும் புடம்போடும். மன உறுதியைத் தரும்”.“ பணம் போய்விட்டதே என்ற பதற்றமாக இருந்திருக்கும்.இது ஒரு ஆரம்பம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இது போல இன்னும் சில எதிர்பார்க்கலாம்.”“ வெறும் பணம் போன ஏமாற்றம் மட்டும் இல்லை என நினைக்கிறேன். அவனுடைய அமெரிக்கக் கனவு முறிந்து விழுந்த துக்கமாகக் கூட இருக்கலாம்”“ இருக்கலாம். இருக்கலாம். ஆனால் ஒரு கோணத்தில் பார்த்தால் இது ஈகோ பிரசினையாகக் கூட இருக்கலாம் எனத் தோன்றுகிறது. வால் ஸ்ட்ரீட் அனலிஸ்ட். ஆனால் அவனால் அவனது பணத்தையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்னும் போது அவனது ஈகோ விழுந்து நொறுங்கியிருக்கும். ஈகோ இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. ஈகோ இஸ் தி பவுண்டன் ஹெட் ஆப் ஹுயூமன் ரேஸ். அயன்ராண்ட் சொன்னது” “ எனக்கு அந்த அயர்லாந்துப் பொம்பளையைப் பிடிக்காது. ஆனால் ஈகோ இஸ் தி டிரைவிங் ஃபோர்ஸ் ஆஃப் இந்தியன் மிடில் கிளாஸ் என்று நிச்சியமாகச் சொல்லமுடியும். ஈகோதான் நம்மை செலுத்திச் செல்கிறது”
“ உன்னை வைத்துச் சொல்கிறாயா?”
“ மிடில் கிளாசிற்கு ஈகோவே இருக்க முடியாது. அதைச் செலுத்தும் சக்தி சுயநலம்தான். நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன என்னை விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பதுதான் அவர்களது தத்துவம். எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அவர்களது லட்சியம்.தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்”
“நான் ஆட்சேபிக்கிறேன். உலகில் ஏற்பட்ட பல மாறுதல்களுக்கு மிடில்கிளாஸ்தான் காரணம்'
“இருக்கலாம். ஆனால் அந்த மாற்றங்களால் அதிகம் பலனடைந்ததும் அவர்களாகத்தானிருக்கும்”
“நான் சொன்னதைத்தான் நீயும் சொல்கிறாய். தன்னை மையமாகக் கொண்ட சிந்தனைதான் ஈகோவிற்கும் அடிப்படை'
“நான் தத்துவ விசாரனைக்குள் போக விரும்பவில்லை. சுரேஷ் ஜெயராமன் தன்னை மட்டும் மாய்த்துக் கொள்ளவில்லை. குடும்பத்தையும் சாய்த்திருக்கிறான். என்ன காரணம்?”
“ என்ன காரணம்?”
“அமெரிக்கப் பொருளாதார சுனாமி தன்னுடைய சேமிப்பையெல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. கடன்கள் மிஞ்சி இருக்கின்றன. தான் போன பின் அந்தக் கடன் சுமை தன் மனைவி மீதோ குழந்தைகள் மீதோ விழுந்து அவர்கள் துன்பப்பட வேண்டாம் எனக் கூட அவன் நினைத்திருக்கலாம். நான் அவனை ஒரு வில்லனாக அல்ல, பாசம் மிகுந்த குடும்பத் தலைவனாகத்தான் பார்க்கிறேன்.”
“ அது உண்மையாக இருக்கும் என்றால் அந்த அன்பும் தன்னை மையமாகக் கொண்டதுதான்”
‘ ஆலை விடுங்கப்பா. ஆபீஸ் சாவி என்னிடம் இருக்கிறது. நேரத்திற்குப் போய் கல்லாவைத் திறக்கவில்லை என்றால் எனக்கு வேலை போய்விடும். என்னைச் சுட்டுக் கொள்ள என்னிடம் துப்பாக்கி கூட கிடையாது” என்றான் சபாபதி.
ஏனே தெரியவில்லை. எல்லோரும் சிரித்தார்கள்.
*மாதவன் வீட்டிற்குத் திரும்பி பேப்பரை இன்னொரு முறை மேய்ந்தான். எட்டாம் பக்கத்தில் ஒரு ஓரமாய் ஆந்திரப் பிரதேசத்தில் இன்னொரு விவசாயி தற்கொலை எனச் செய்தி வந்திருந்தது. கடன் சுமை தாளாமல் இந்தியாவில் 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்லியது செய்தி.
இந்தத் தற்கொலைகள் பற்றி என்றைக்காவது அறிவுஜீவிகள் கிளப் பேசியிருக்கிறதா என்ற கேள்வி மாதவன் மனதில் ஓடி மறைந்தது. இல்லை. ஏன்? எட்டாம் பக்கத்தில் வந்த செய்தி என்பதால் கவனத்திற்கே வராமல் போய்விட்டதா? அந்த மரணங்கள் முகமற்று, 32 நிமிடத்திற்கு ஒருவர் எனப் புள்ளிவிவரமாகச் சுருங்கிப் போனதால் மனதில் தைக்கத் தவறியதா? ஏன் இந்தச் செய்தி முதல் பக்கத்தில் இடம் பிடிக்கவில்லை? ஏன், ஏன் என்று நாள் முழுதும் கேள்வி குடைந்து கொண்டிருந்தது.
இரவில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, காலையில் கிறிஸ்டோபர் சொன்னது ஞாபகம் வந்தது: “மிடில் கிளாசைச் செலுத்தும் சக்தி சுயநலம்தான்..தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்.”
உண்மைதானோ?
(இந்த வார கல்கியில் வெளியாகியுள்ள என் சிறுகதை)

Wednesday, November 05, 2008

பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்...

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வ்ரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிகாவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க் விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் 'தூய்மைப்படுத்தல்' போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான். அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம். இந்தப் பின்ன்ணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜன்நாயகக் கட்சி வேட்பாளரை அம்ர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

"உலகம்யமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது" ("While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans -- as well as those working hard to become middle class -- are seeing the American dream slip further and further away,") இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் ப்ல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்: இந்த "முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை." ("We're not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn't just tell people what they want to hear but tells everyone what they need to know.")

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ' முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு'க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் 'கார்ப்போரேட்'களை எதிர்த்து - எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், 'கை நழுவிப் போன கனவை' மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். 'இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்' என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

'தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்' என்று சொல்லும் அவர் அதே மூச்சில், 'எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்' (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை 'பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக' விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை- குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும். .பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

Tuesday, March 11, 2008

பத்ரியின் எதிர்வினையை முன் வைத்து....

என்னுடைய தினமணிக் கட்டுரை குறித்து பத்ரி தனது பதிவில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவரது சில கருத்துக்கள் தொடர்பான எனது விளக்கங்களை அவரது பதிவில் எனது பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன்.

பின்னூட்ட்ங்களில் விரிவாக எழுத இயலாது என்பதால் விரிவான விளக்கங்களை இங்கு தனிப்பதிவாக எழுதுகிறேன்.

மாநாட்டுப் பேச்சை மட்டும் பார்த்தாலும் கூட...

>>கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும்.<< என்று பத்ரி சொல்கிறார்.

ஆனால் திருமாவளவனுக்கு ஆதரவாகக் கருணாநிதி சுட்டும் பொடா சட்டம் பற்றிய உச்சநீதி மன்றத் தீர்ப்பு, குற்றச் செயலை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது குற்றம் செய்யும் மனோபாவம் இருந்ததா என்பதையும் பார்க்க வேண்டும் என்ற ரீதியில் பேசுகிறது. இது குறித்துப் பேசும் போது mens rea என்ற குற்றவியல் நீதி முறையை அது சுட்டுகிறது. திருமாவளவனுக்கு சட்டத்தை மீறும் மனோபாவம் இருந்தது என நான் அவரது
ஜீனியர் விகடன் பேட்டியின் அடிப்படையில் கருதுகிறேன். (திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த போது விடுதலைப் புலி என்ற பெயரில் பத்திரிகை நடத்தியவர். அப்போது வைகோவுடன் ஊர் ஊராகச் சென்று விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கூட்டங்கள் பேசியவர். Dalit Panthers of India என்ற அகில இந்திய அமைப்பின் தமிழக அமைப்பாளராக இருந்த போது அந்த அமைப்பின் பெயரை தமிழில் எழுதும் போது இந்திய தலித் சிறுத்தகள் என்று எழுதாமல் விடுதலைப் புலிகள் பாணியில் விடுதலைச் சிறுத்தைகள் என்று விளம்பரம் செய்தவர். ஆனால் நான் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மாநாடு நேரத்தில் அவரது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதற்கான ஆதாரத்தை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்)

பத்ரி சொல்வது போல் அவரது கருத்துரிமை மாநாட்டுப் பேச்சை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்பது என்றாலும், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம். அந்த இயக்கம் தடை செய்யப்பட்டபோது வெலியிடப்பட்ட அரசாணை " Persons and organisations derive inspiration and encouragement from LTTE for their unlawful activities as well as activities punishable under section 153B of the Indian Penal Code" என்று குறிப்பிடுகிறது. LTTEனால் மன எழுட்சி (inspiration) பெற்றவர் நிகழ்த்திய உரை அது என்பது அப்பட்டமாகத் தெரியும் விஷயம்.

விடுதலைப் புலிகளைத் தடை செய்த போது வெளியான அந்த அரசாணையின் நகல் கீழே:

Ministry of Home Affairs Notification New Delhi
under Unlawful Activities (Prevention) Act, 1967 (37 of 1967)

S.O.330(E)

Whereas the Liberation Tigers of Tamil Eelam (hereinafter referred to as the LTTE) is an association actually based in Sri Lanka and having sympathisers, supporters and agents on Indian soil and whereas -

(i) LTTE's objective for a homeland for all Tamils disrupts the sovereignty and territorial integrity of India and thus appears to fall within the ambit of an unlawful activity;

(ii) LTTE has created the Tamil National Retrieval Troops (TNRT) and encouraged and aided its members to undertake unlawful activities in India;

(iii) LTTE encourages and aids United Liberation Front of Assam (ULFA) which is an unlawful association;

(iv) Persons and organisations derive inspiration and encouragement from LTTE for their unlawful activities as well as activities punishable under section 153B of the Indian Penal Code;

And whereas the Central Government is of the opinion that because the activities of the LTTE, it is necessary to declare the LTTE to be unlawful with immediate effect;

Now, therefore, in the exercise of the powers conferred by sub-section (1) of Section 3 of the Unlawful Activities (Prevention) Act, 1967 (37 of 1967), the Central Government hereby declares the Liberation Tigers of Tamil eelam to be an unlawful association and directs in exercise of the powers conferred by the proviso to sub section (3) of that section that this Notification shall, subject to any order that may be made under section 4 of the said Act, have effect from the date of its publication in the Official Gazette.

தடை விவாதிக்கப்பட்டதா?

விடுதலைப் புலிகள் மீதான தடை பற்றி வேறு ஒரு பதிவில் பத்ரி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
>>முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும்<<

நியாயமான கருத்து. முதலில் ஒரு இயக்கம் எப்படித் தடை செய்யப்படுகிறது என்ற நடைமுறையைப் பார்க்கலாம்:

அரசின் உளவு அமைப்புக்கள், நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகள் அவை சார்ந்த அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஆபத்து விளைக்கும் வண்ணம் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, ஆபத்து ஏற்படுத்தக் கூடிய அமைப்புக்கள் எனக் கருதுபவை குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுக்கும். அதைப் பரிசீலீக்கும் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவையின் குழுவிற்கு (CCSA- Cabinet Committee on security affairs) தனது கருத்தைத் தெரிவிக்கும். அந்தக் குழு- அதாவது மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு தடை விதிக்க வேண்டுமா வேண்டாமா என முடிவெடுத்து, அதை மத்திய அமைச்சரவைக்குத் தெரிவிக்கும். மத்திய அமைச்சரவை முடிவெடுத்த பின் அது நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும். அப்படி விதிக்க்ப்படும் தடையும் நிரந்தமானதல்ல. இரண்டாண்டுகளுக்குத்தான். பின்னர் அது ஆய்வு செய்யப்பட்டு தடை
நீட்டிக்கவோ கைவிடவோ படும்.

எனவே ஒரு இயக்கத்தின் மீதான தடை என்பது ஏதோ தன்னிச்சையாக ஒரு தனிநபரின் விருப்பத்தின் பேரில் விதிக்கப்படுவதல்ல. பல நிலைகளில் விவாதம் நடத்தப்பட்டு அதன் பின்னர்தான் முடிவு எடுக்கப்படுகிறது.

அரசாணை வெளியான பிறகு அதைக் குறித்து வழக்குத் தொடுக்கும் உரிமையும் குடிமக்களுக்கு உண்டு.


மக்கள் அனைவரிடமும் கருத்துக் கேட்க வேண்டும் என்கிறார் பத்ரி. எப்படிக் கேட்பது? மக்கள் தொகைக் கணக்கெடுப்பது போன்று வீடு வீடாகச் சென்று சர்வே செய்ய வேண்டுமா? அதற்கு எத்தனை காலம் ஆகும்? அதுவரை நாட்டின் பாதுகாப்பு எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா? இல்லை பொதுத் தேர்தல் மாதிரி ஒரு குறிப்பிட்ட நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா? ஒவ்வொரு பிரசினைக்கும் இப்படி வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருந்தால் அதுவே அரசின் முழு நேர வேலையாகிவிடாதா? ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் கேட்டு முடிவெடுக்க முடியாது என்பதால்தான்
நாம் நமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம். அந்த மக்கள் பிரதிநிதிகளில்
பெரும்பான்மையானவர்களது நம்பிக்கையைப் பெற்றவர்தான் பிரதமர்.அவரது தலைமையில்தான் CCSA இயங்குகிறது.

விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்படும் முன் அது குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடந்தன.

வி.புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற ஓர் தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடு ஒன்றில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அலுவாலியா முன் வைத்தார். அதற்கு (அப்போது) போதிய ஆதாரங்கள் இல்லை என அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் தயக்கம் காட்டினார். எஸ்.பி.சவானின் இந்தப் போக்கை வாழப்பாடி ராமமூர்த்தி கடுமையாகச் சாடினார். பின்னர் மே 14 1992 அன்று காங்கிரஸ் கமிட்டி இந்தத் தீர்மானத்தை (சில திருத்தங்களோடு) ஏற்றது. இது அரசியல் அரங்கில் ஆளும் கட்சிக்குள் நடந்த விவாதம்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தடையை வற்புறுத்தினார்.ஜெயலலிதாவின் நிலையை பா.ம.க சாடியது. சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் மரணத்தின் விளைவாக பலத்த அடி வாங்கியிருந்த திமுக அதிகம் பேசாமல் இருந்தது. (நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு, அமைந்த தேசிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைமையில் அமைந்த அரசுகளில் திமுக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது.தடை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படட போது, அதைக் குறித்து ஆட்சேபணைகள் எழுப்ப்ப அதற்கு
வாய்ப்பிருந்தது. ஆனால் அது ஆட்சேபித்தாகத் தெரியவில்லை.)

தடைக்கு முன், அதிகாரிகள் அளவில் வேறு சில ஆட்சேபணைகள் முன் வைக்கப்பட்டன. வி.புலிகள் இயக்கம் வெளிநாட்டிலிருந்து செயல்படும் இயக்கம். நாம் எப்படி அதற்குத் தடை விதிக்க முடியும், அப்படி விதித்தால் அது செல்லுபடியாகுமா? என்பது அவர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்வி.

மிக அபூர்வமாக ராணுவ அதிகாரிகளிடமும் இது குறித்து விவாதங்கள் எழுந்தன.வி.புலிகளைத் தடை செய்வது அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியங்களைக் குறைத்துவிடும் என அவர்களில் சிலர் -ஜெனரல், மேஜர் போன்ற உயர் ராங்கில் இருந்தவர்கள்- கருதினார்கள்.

எனவே விவாதங்கள் ஏதும் இல்லாமல் தடை விதிக்கப்படவில்லை. ராஜீவ் இறந்தது மே 1991. தடை அறிவிக்கப்பட்டது மே1992க்குப் பிறகு. இடையில் ஒரு ஆண்டுக் காலம் இடைவெளி ஏற்பட்டதற்குக் காரணமே விவாதங்கள் பல தளங்களில் நடந்ததுதான்.

ஒவ்வொருவரையும் கருத்துக் கேட்பது என்று வைத்துக் கொண்டாலும், விடுதலைப் புலிகளின் தடை விஷயத்தில் பெரும் மாற்றம் ஏதும் இராது. ஏனெனில் நான் அறிந்த வரையில், தமிழ்நாட்டுக்கு வெளியே, அரசியல் அரங்கிலாகட்டும், ஊடகங்களிலாகட்டும் விடுதலைப் புலிகள் மீது பெரிய அளவில் அனுதாபம் கிடையாது. எந்த தேசியக் கட்சியும் அதனை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, அதன் பின் வந்த ஒவ்வொரு அரசாங்கமும் (வெவ்வேறு தேசியக் கட்சிகளின் தலைமையில் அமைந்தவை) தடையை நீட்டித்து வந்திருப்பதே அதற்குச் சான்று.
இந்தப் 16 ஆண்டுக் காலத்தில் தடையை எதிர்த்து வழக்காடப்படவில்லை. தடையை நீக்கச் சொல்லி ஊடகங்கள் எழுதவில்லை. பல தேர்தல்கள் நடந்தன. எந்தக் கட்சியும் இதை ஒரு தேர்தல் பிரசினையாக முன் வைக்கவில்லை.

இவையெல்லாமே மக்களின் சம்மதம் இதற்கு இருக்கிறது என்பதைத்தான் மறைமுகமாகக் காட்டுகிறது.

அரசின் ஒரு நடவடிக்கை தவறானது என்றால் இந்தியாவில் அதைத் திரும்பப் பெற வைக்க முடியும். பொடா சட்டம் அது காலாவதியாவதற்கு முன்பே திரும்பப் பெறப்பட்டது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுப் போட ராஜீவ் கொண்டு வந்த கறுப்புச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது எனப் பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் தடை விதிக்க எந்த நடைமுறைகள் பின்பற்ற்ப்பட்டனவோ அதைவிடவும் ஜனநாயகபூர்வமான நடைமுறைகள் இந்தியாவில் பின்பற்றப்பட்டிருக்கின்றன.


முஷரஃபும் தமிழ்ச் செல்வனும்

>>பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் பர்வீஸ் முஷரஃப் பாகிஸ்தான் ராணுவத்தில் பலகாலம் பணிபுரிந்து, பல இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றவர். கடைசியாக கார்கில் யுத்தத்தின்போது பல இந்திய ராணுவ வீரர்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். ஆனால் அவர் பாகிஸ்தானின் அதிபராக (இத்தனைக்கும் மக்களால் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கூடக் கிடையாது) இந்தியா வருகிறார். இந்தியாவின் டிப்ளோமேட்டிக் மரியாதை அத்தனையையும் வாங்கிக்கொள்கிறார். கட்டியணைத்து அவரை வரவேற்கிறார்கள்<<

இந்த ஒப்பீடு சரியானதல்ல. இறையாண்மை கொண்ட ஓர் நாட்டினுடைய ராணுவத்தின் அதிகாரியாக இருந்த முஷரஃப் அந்த ராணுவம் இட்ட கட்டளையை ஏற்றுச் செயல்பட்டதையும் ஒரு பயங்கரவாத இயக்கம் மேற்கொள்ளும் செயல்களையும் எப்படி ஒன்றெனக் கொள்ள முடியும். இறையாண்மை கொண்ட அரசு அதன் அதிகாரத்தை மக்களிடமிருந்து தேர்தல்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் பெறுகிறது. அதன் ராணுவம் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டது. [ஓர் உதாரணத்திற்குச் சொல்வதானால், இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் செயல்கள் குறித்து இந்த நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. (நவம்பர் 9 1987 -மக்களவை) அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியே அதில் கலந்து கொண்டு விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.] அந்த அரசு மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டது. ஆனால் பிரபாகரனின் பயங்கரவாத அமைப்பு அவரைத்தவிர வேறு யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதல்ல.

இந்தியா-பாகிஸ்தானிடையே நடைபெற்றது அறிவிக்கப்பட்ட யுத்தம். ஆனால் இந்தியா இலங்கைக்கு போர் தொடுக்கச் செல்லவில்லை. அந்த நாட்டிலிருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றது. எனவே யுத்த்த்தின் போது முஷ்ரஃப் ஒரு ராணுவ அதிகாரியாக நடந்து கொண்டதை, மறைந்திருந்து தாக்கும் கெரில்லா இயக்கத் தலைவரின் நடவடிக்கையோடு ஒப்பிட முடியாது.

முஷரஃப் பாகிஸ்தானின் அதிபராக இந்தியா வந்தார். அயல்நாடு ஒன்றின் அரசுத் தலைவர் ஒருவர் இந்தியா வந்தால் எப்படி வரவேற்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன (protocol) அவை பின்பற்றப்பட்டன. ஒரு நாட்டின் தலைவராக ஒருவர் எப்படி ஆகிறார் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா, புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப் பற்றுகிறாரா, ஒற்றைக் கட்சி ஜனநாயகத்தின் மூலம் பதவிக்கு வருகிறாரா, வெளிநாட்டு சக்திகளால் பொம்மையாக் நியமிக்கப்படுகிறாரா என்பது அந்த நாட்டின் உள்நாட்டு அரசியல். அதில்
இந்தியா எதுவும் சொல்வதற்கில்லை.

>>அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச்
சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது<<

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போது தமிழ்ச் செல்வன் கொல்லப்படவில்லை. அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வந்த எவரையும் இந்தியாவோ, இலங்கை அரசோ கொன்றதில்லை.

தமிழ் அபாஸ்?

>> (தமிழ்ச் செல்வனது பணி) இன்றைய பி.எல்.ஓவின் அப்பாஸ்போல<<

நானறிந்தவரையில் அபாஸ் ஆயுதம் ஏந்திப் போரிட்டவர் அல்ல. சிரியாவில் ஆரம்பப்பள்ளி ஆசிர்யராகவும், பின்னர் கத்தாரில் சிவில் அதிகாரியாகவும் (IASபோல) பணியாற்றியவர். PLO வின் அரசியலமைப்பான ஃபதா கட்சியின் நிறுவனவர்களில் ஒருவர். PLOவை கடுமையாக விமர்சிக்கும் யூதப் பத்த்ரிகைகள் கூட அவரை மிதவாதி என்றுதான் விமர்சிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவர் பாலஸ்தீன பிரதமர் பதவியை இழந்ததற்கும் இந்த மிதவாதத் தோற்றம்தான் காரணம். விடுதலைப் புலிகளின் அபாஸ் என யாரையாவது சொல்ல முடியுமானால் அது பாலசிங்கமாகத்தான் இருக்க முடியும். தமிழ்ச் செல்வன் அல்ல.

பாலஸ்தீனத்தை ஓரளவிற்கு மேல் இலங்கை இனப் பிரசினையோடு ஒப்பிடமுடியாது. பாலஸ்தீனம் தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்ட பிறகு உலகில் 100 நாடுகள் அதனைத் தனிநாடாக அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளை பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்திருக்கின்றன.

எனக்கு மட்டுமல்ல

>>கருணாநிதி தனது நிலையை விளக்கியாகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவோ, பத்திரிகையாளராக மாலனோ கேட்பது நியாயம்தான் முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.<<

எனக்கும் ஜெயலலிதாவிற்கும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளனுக்கும் அந்த உரிமை உணடு.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் திமுக தனது நிலையை வெளிப்படையாக (ஜெயலலிதாவைப் போல்) விளக்க வேண்டியது இந்தியா முழுக்க உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமை

கருத்துரிமைக் காவலரா திருமா?

தனது மாநாட்டைக் கருத்துரிமை மீட்பு மாநாடு என்று அழைத்துக் கொள்கிறார் திருமாவளவன். அதாவது முன்பு கருத்துரிமை இருந்தது இப்போது அது இல்லை என அந்தத் தலைப்பு குறிப்பால் உணர்த்துகிறது. கருத்துரிமை இல்லை என்றால் அவரால் இது போன்ற ஒரு மாநாட்டை நடத்தவே முடியாது என்கிற உண்மையே அவரது வாதத்தில் சாரம் இல்லை என்பதைக் காட்டுகிறது. அவரால் கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலோ கருத்துரிமை
மீட்பு மாநாடு நடத்த முடியுமா? முடியாது.ஏனென்றால் அங்கு அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை வெளியிட முடியாது. வெளியிட்டால் அமிர்தலிங்கத்தின் கதிதான் ஏற்படும்.

ஆனால் இந்தியாவில் இதெல்லாம் முடியும். என்ன விசித்திரம், எங்கு உரிமை உள்ளதோ அங்கு உரிமை கோரி மாநாடு நடத்துகிறார். ஆனால் எங்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டிருக்கிறதோ அதைப் பற்றி மெளனம் காக்கிறார்.

ஏனெனில் அவரது நோக்கம் கருத்துரிமை அல்ல.

விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்துக்களை வெளியிடும் தன்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக திருமாவளவன் கருதினால், அவர் செய்ய வேண்டியது உச்சநீதி மன்றத்தில் அரசமைபுச் சட்டம் உறுதி செய்த அடிப்படை உரிமைகள் (பிரிவு 19) பறிக்கப்படுவதாக வழக்குப் போடுவது. அதை விடுத்து, அவர் போடும் முச்சந்திக் கூட்டங்கள் அவருக்குக் கருத்துரிமையை மீட்டுத் தராது. அவர் தமிழ்ச் செல்வனின் நினைவை நிஜமாகவே போற்ற விரும்பியிருந்தால் ஊருக்கு ஊர் டிஜிட்டல் பானர் வைப்பதை விட ஊருக்கு ஊர் மரம் நடலாம். அது சுற்றுச் சூழல் பிரசினைகளைக் குறைக்க உதவுவதோடு, தலைமுறை தலைமுறையாக தமிழ்ச் செல்வனைப் பற்றி தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால் அவர் தமிழ்ச் செல்வன் கொலையை முகாந்திரமாகக் கொண்டு தனக்கு விளம்பரமும் அரசியல் ஆதாயமும் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார். எவ்வளவு மலிவான அரசியல் இது!

இன்னொரு புறம் கருத்துரிமை பற்றித் திருமாவளவன் பேசுவதைப் போல ஒரு வேடிக்கை இருக்க முடியாது.

குஷ்பு வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக அவரது இயக்கம் எப்படி நடந்து கொண்டது என்பதை யாரும் இன்னும் மறந்து விடவில்லை.திருமாவளவன் மட்டுமல்ல, பொதுவாக மனித உரிமைக்குக் குரல் எழுப்புபவர்கள், விடுதலைப் புலிகளது குழந்தைப் படைவீரர்கள் குறித்து முணுமுணுப்பது கூட இல்லை. ஆட்கடத்தல் பற்றி பேசுவதில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது பற்றி வாய் திறப்பதில்லை.

விடுதலைப் புலிகள் தமிழர்களது உரிமைக்குப் போராடுவதாக ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையிலேயே அதற்குத்தான் போராடியவர்கள் என்றால், அவர்கள் இந்தியாவால் முன் மொழியப்பட்ட பிரதேசக் கவுன்சில் யோசனையை ஒதுக்கித் தள்ளியிருந்திருக்க மாட்டார்கள். அதை ஒரு ஆரம்பமாகப் பிடித்துக் கொண்டு ஒரு சிவிலியன் அரசை ஏற்படுத்தி, மெல்ல மெல்ல மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோருகிற நிலையை மேற்கொண்டிருப்பார்கள். 25 ஆண்டுகாலத்திற்கும் மேல் யாருக்கும் வெற்றிகாண முடியாத ஒரு
யுத்தத்தை, வெற்றிகாண முடியாது எனத் தெரிந்த பின்னும், விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். யுத்தம் இருக்கும் வரைதான் அவர்களிடம் அதிகாரம் இருக்கும். யுத்தம் இருக்கும் வரைதான் அவர்களுக்குப் பணம் வரும். யுத்தம் இருக்கும் வரைதான்
அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத எதேச்சதிகாரிகளாக இருக்க முடியும்.

ஜனநாயகம் கேள்விகளைக் கொண்டு வரும் உரிமைகளைக் கோரும். துப்பாக்கிகளை விட மக்கள் வலிமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்

மக்களை பலி கொடுத்தாவது தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள நினைப்பவர்கள் எப்படி மனித உரிமைக் காவலர்களாக இருக்க முடியும்?
.
விடுதலைப் புலிகள், கருணா பிரிவு, சிங்கள அரசு எல்லோருமே பெருமளவில் மனித உரிமைகளை மீறித்தான் அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் தரப்பு அதிகம் பாதிபுக்குள்ளாகும் போது அவர்கள் மனித உரிமைக் குரல் எழுப்புவார்கள். அவர்களுக்கு அதில் மெய்யான அக்கறை கிடையாது.விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இடையே நடக்கும் போர் தமிழர்கள் உரிமைக்கான போர் அல்ல. அது அவர்கள் தத்தம் அதிகார எல்லைகளை
விரிவுபடுத்திக் கொள்வதற்கான போர்.

இந்த உள்நாட்டு அரசியலில் இந்தியா சிக்கிக் கொள்ளாமல் விலகி நிற்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்தியா தனது எல்லைகளையும் இறையாண்மையையும் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே போதுமானது.

Tuesday, March 04, 2008

தடுமாறுகிறார் முதல்வர். ஏன்?

‘தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்சநீதி மன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலையாளர்கள் மனதில் ‘தீர்ப்பில் என்னதான் சொல்லியிருக்கிறது' என்ற கேள்வி எழுந்திருக்கும்.

கருணாநிதி அளித்திருக்கும் விளக்கங்கள், அவர் இந்த விஷயத்தில் சற்றுக் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. முதலில் ‘தடை செய்யப்பட்ட இயக்கம்', ‘பயங்கரவாத இயக்கம்' என்ற இரண்டும் ஒன்றெனக் கொள்ளும் மயக்கம் அவரிடம் காணப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனியொரு சட்டம் (Unlawful activities (Prevention) Act 1967) ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. பொடா சட்டம் என்பது பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம். இன்று காலாவதியாகிவிட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே அதன் ஆதரவாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பொடா சட்டம் தேவையில்லை. அதை இன்று பயன்படுத்தவும் இயலாது. காலவதியான சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? ஆனால் இந்தப் பிரசினையில் கருணாநிதி பொடா சட்டம் குறித்துப் பேசியிருப்பது அவரது குழப்பத்தையோ அல்லது பிரசினையைத் திசை திருப்பும் அவரது விருப்பத்தையோ காட்டுகிறது.

சரி, பொடா சட்டம் குறித்த வழக்கின் தீர்ப்பு என்னதான் சொல்கிறது?((AIR2004SC 456) குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று mens rea. ‘Mens rea' என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘குற்ற மனப்பான்மை' என்று பொருள். வெறும் செயலின் அடிப்படையில் மாத்திரமே ஒருவரைக் குற்றம் செய்தவராகக் கருதக் கூடாது, குற்றம் செய்யும் மனப்பானமையோடு அந்தச் செயல் செய்யப்பட்டதா என்பதே ஒருவரை குற்றம் புரிந்தவரா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற லத்தீன் வாசகத்தின் அடிப்படையில் உருவானதுதான் குற்றவியல் நீதி பரிபாலன முறை.

பொடா சட்டத்தின் 20,21,22 ஆகிய பிரிவுகள் செயலைக் கணக்கில் கொள்கின்றனவே அன்றி குற்ற மனத்தைக் கருதிப் பார்க்கவில்லை எனவே அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது, அந்தச் சட்டபிரிவுகள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கக் கோரி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரு பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமோ, திட்டமோ இல்லாமல், ஒருவர் கூட்டத்தில் பேசவே, அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாலோ அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை எனத் தாங்கள் எண்ணுவதாகத் தெரிவித்தார்கள். (AIR 2004 SC 456) சட்ட வார்த்தைகளையும், அலங்கார நடையையும் உரித்து விட்டுப் பார்த்தால், அவர்கள் சொல்வதன் பொருள், ‘வேண்டும் என்று செய்யாமல் தெரியாமல் செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டாம்' என்பதுதான்

திருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல், (அதாவது ‘தெரியாமல்' )அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா? கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துக்களின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்து விட்டதாக எண்ண இயலவில்லை. “விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அலிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா? ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா?

எனவே கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ள உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் வரிகள் திருமாவளவனின் பேச்சுக்களுக்குப் பொருந்துவதாக இல்லை. அந்த வரிகளை சொல்லப்பட்ட சூழலில் இருந்து தனியே பிய்த்தெடுத்து (quoting out of context) திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காத தனது அரசின் செயலை நியாப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார் கருணாநிதி.

இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. முதலில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பைச் சுட்டி நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை எனப் பேசியவர், பின்னர் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, தேவையானால், ஒரு சட்டம் கொண்டு வரவும் தயார் என்கிறார். அதாவது பொடா சட்டத்தை விடவும் கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவும் அவர் தயார். ஒருகாலத்தில் பொடா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த அவர் இப்படித் தலைகீழான மாற்றத்திற்கும் தயாரானது எதன் பொருட்டு? விடை எல்லோரும் அறிந்தது. காங்கிரசை எப்படியாவது குளிர்வித்து கூட்டணியையும் அரசையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்.

இதில் இன்னொரு வேடிக்கை, திருமாவளவனது கூட்டத்திற்கு சில நாட்கள் முன்னதாக காவல் துறைத் தலைவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஆனால் முதல்வர், அப்படி நடவடிக்கை எடுக்கச் சட்டமே இல்லை என்பது போலப் பேசுகிறார். சட்டமே இல்லை என்றால் காவல்துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்வது எப்படி? சட்டம் இருக்கிறது என்றால், முதல்வர் அதைப் பயன்படுத்தத் தயங்குவது ஏன்?

நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் எனத் தவறாகப் பிரசாரம் செய்யப்படுகிறது என்றும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால் தமிழ்ச் செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியது எந்த அடிப்படையில்? அவர் ஒரு தமிழர் என்ற அடிப்படையிலா? அப்படியானால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட எத்தனையோ ஆயிரம் தமிழர்களுக்காக இரங்கல் தெரிவித்து கருணாநிதி இரங்கல் கவிதைகள் எழுதியிருக்கிறாரா? இந்திய அமைதிப்படையில் பணியாற்றி விடுதலைப்புலிகளுக்கு பலியான மேஜர் பரமேஸ்வரனுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? கதிர்காமர் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? மனிதாபிமான அடிப்படையில் என்றால் போரில் இறந்த எல்லா மனிதர்களுக்கும் அல்லவா அவர் இரங்கல் தெரிவித்திருந்திருக்க வேண்டும்?. தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம்

தமிழ்ச் செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப் படையில் இருந்த பலர் போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர். இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணின் இந்திய நாட்டைப் பிரதிநித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது..

தமிழ்ச் செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு. அவரது மரணம் விடுதலைப் புலிக்களுக்கு இழப்பு. அந்த இழப்புக்குக் கருணாநிதி அனுதாபப்படுகிறார் என்றால் அவர் யார் பக்கம்?

விடுதலைப் புலிகளை அவர் ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை. ஜெயலலிதா எதிர்க்கிறார். தான் எதிர்க்கிறேன் என்பதை, வாக்கு வங்கியை இழக்க நேரிடலாம் என்ற ‘ரிஸ்கை'யும் பொருட்படுத்தாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார். கருணாநிதியோ திமுகவோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?

20.2.2008 அன்று எழுதி, 3.3.2008ல் தினமணியில் வெளியான கட்டுரை