Sunday, January 11, 2009

அ-புனைகதை யுகம் ஆரம்பிக்கிறதோ?

புழுதி இல்லை; நெரிசல் இல்லை; வானை மூடிப் பந்தலிட்டிருந்ததால் வெயில் கூடத் தெரியவில்லை. தேடி வந்து கையில் திணிக்கப்படும் குப்பைகள் கூட அதிகம் இல்லை.(ஒவ்வொரு முறையும் அந்துருண்டையிலிருந்து அஜீரண
மாத்திரை வரையிலான, புத்தகங்களுக்கு சம்பந்தமில்லாத துண்டு விளம்பரங்களைத் தேடி வந்து கையில் கொடுத்து விட்டுப் போவார்கள்.அவற்றை எங்கே போடுவது என்று தெரியாமல் வீடு வரை எடுத்து வந்து வீசியிருக்கிறேன்).

இந்த ஆண்டு புத்தகச் சந்தை எனக்கு சற்று வித்தியாசமாகத்தனிருந்தது. புத்தகச் சந்தையின் 32 ஆண்டுகளில் அநேகமாக 28 ஆண்டுகளுக்குக் குறையாமல் நான் அதற்கு வருகை தந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பள்ளி மைதானத்தில் நடை பெறும் சந்தைக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன்.

நான் சென்றது சனிக்கிழமை (10.1.08) மதியம் மூன்றே முக்கால் மணிக்கு. கூட்டம் அதிகமில்லை. நுழைவுச் சீட்டு வழங்கும் கவுண்டர்களில் ஒன்றை மட்டும் திறந்து வைத்து விட்டு மற்றதை மூடி வைத்திருந்தார்கள்.

நான் புத்தகச் சந்தையைப் பெரும்பாலும் சாதரணமாக சென்னையில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்காத/ காணக் கிடைக்காத நூல்களை வாங்குவதற்கான வாய்ப்பாகத்தான் பயன்படுத்தி வருகிறேன். 70களின் இறுதியில் சிறுபத்திரிகைகளை, அ.மி. மெளனி, தி.ஜா போன்றோரின் நூல்களை நாடி இந்தச் சந்தைக்குப் போவேன். இன்று சிறுபத்திரிகைகள் பெரும் நிறுவனங்களாகிவிட்டன. ஆனால் இலக்கிய உலகில் இலக்கியச் சிற்றேடுகள்
இருப்பதைப் போல, பதிப்புலகில் சிறு பதிப்பகங்கள் உண்டு. அநேகமாக அரசியல் பிரசுங்களை அல்லது அதிகம் அறியப்படாத படைப்பாளிகளின் எழுத்துக்களை அல்லது மொழி பெயர்ப்புக்களை வெளியிடுபவர்களாக அவர்கள்தானிருப்பார்கள். வெகுஜன எழுத்தாளர்களின், நட்சத்திர எழுத்தாளர்களின் நூல்களை சென்னையிலுள்ள எந்தப் புத்தகக் கடையிலும் என்று வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சிறு வெளியீட்டார்களின் நூல்களை இங்கு விட்டுவிட்டால் பின் தேடிக் காண்பது அரிது. எனவே அவர்களுக்குத்தான்
எனது முன்னுரிமை.

காந்தளகம், பரிசல், திராவிடன், மித்ர, காலச்சுவடு, பயனியர் ஆகிய அரங்குகளில் சில நூல்கள் வாங்கினேன்.உயிர்மை,கீழைக்காற்று, தமிழ்ப் பல்கலைக் கழகம், சந்தியா, அம்ருதா ஆகியவற்றை அடுத்த வருகையின் போது பார்க்க உத்தேசம்.அடையாளம், அலைகள், ஆழி, சாகித்ய அகதாமி, அம்பேத்கர் நூல்கள்
விற்கும் அரங்கு இவற்றில் சில வற்றைப் புரட்டிப் பார்த்தேன்.தமிழினியில் வெங்கடேசனின் புதிய நாவல் (காவல் கோட்டம்) தவிர புதிய நூல்களைப் பார்க்க முடியவில்லை. அங்கே பெரும்பாலும் புனைவிலக்கியமே கண்ணில் பட்டது.

இந்த முறை பொதுவாகவே புது நூல்கள் அதிகமில்லை. ஆனால் சில புதிய முயற்சிகள் வரவேற்கத் தக்கவை.

தமிழ் மண் பதிப்பகத்தில் தமிழக வரலாற்றை காலவரிசையில் பல தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார்கள். சதாசிவப் பண்டாரத்தாருடைய நூல்கள், வேங்கடசாமி நாட்டாருடைய நூல்கள், வெ.சாமிநாதசர்மாவுடைய நூல்களின் தொகுதி ஆகியவை கிடைக்கின்றன.

ப்ராடிஜி வெளியிட்டிருக்கும் கேள்விக்குறி வரிசையும் (என்ஜினியர் ஆகலாமா? மாறுபட்டு சிந்திக்கலாமா? பேசப்பழகலாமா? பிறரைப் புரிந்து கொள்ளலாமா? எனப் பல கேள்விகள்) அது போன்ற ஒரு வரவேற்கத் தக்க முயற்சி. என் டிரைவரின் குழந்தைக்காக பிராடிஜியில் சில நூல்கள் வாங்கச் சென்ற போது மாறுபட்டு சிந்திக்க்லாமாவைப் புரட்டினேன். எளிதான வசீகரிக்கும் நடை. அவர்களின் நூல் வரிசையைக் கண்டு பிரமித்துப் போனேன். மெகலன், ஜார்ஜ் வாஷிங்டனில் ஆரம்பித்து குளோபல் வார்மிங் வரை அறிவியல் சாதனையாளர்கள், வரலாற்று நாயகர்கள், கண்டங்கள், உயிரினங்கள், அறிவியற் சாதனங்கள் என நாம் குழந்தைகளுக்குச் சொல்ல விரும்பும் அனைத்தும் இருக்கின்றன. சில குறிப்பிடத் தகுந்த விடுபடல்கள்: அறிவியலாளர்களில் ரைட்
சகோதர்கள், சார்ல்ஸ் பாபேஜ் அலக்சாண்டர் ஃபிளமிங், வரலாற்று நாயகர்களில் மாசேதுங், ராஜீவ் காந்தி. கல்பனா சாவ்லா. நம் அரசமைப்புச் சட்டம் அல்லது ஜனநாயகம் அல்லது பாராளுமன்றம் பற்றிய ஒரு புத்தகமும் தேவை. சினிமாவை முற்றிலுமாக ஒதுக்க வேண்டியதில்லை.. சத்தியஜித்ரே கூடவா தேற மாட்டார்? அதே போல தமிழ் எழுத்தாளர்களையும் புறக்கணிக்க வேண்டாம். பாரதியாரைத் தவிர வேறு யாரும் அகப்படவில்லை. பாரதிதாசன், கல்கி கூடவா ஒதுக்கப்பட வேண்டும்?. எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லி இன்று குழந்தைகளைத் தூண்டவில்லை என்றால், 50ஆவது புத்தகக் காட்சியில் நாம் கிழவர்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இசை உலகமும் மெளனம் சாதிக்கிறது.

நெடுநாளாக எனக்குள் ஓர் கனவு உண்டு. அதை ப்ராடிஜி முயற்சி செய்து பார்க்கலாம். பெரும்பாலும் குழந்தைப் புத்தகங்கள் பெரியவர்களின் குழந்தைத்தனமாக இருக்கும் அல்லது பெரியவர்கள் தீட்ட விரும்பும் நல்லுலகாக
இருக்கும். ஆனால் குழந்தைகளின் உலகம், சிந்தனை வேறு. சிறு குழந்தையாக இருந்த போது என் சகோதரி மகள் என்னிடம் கேட்டது: குதித்துக் குதித்துப் பார்த்தும் திராட்சைப் பழம் எட்டவில்லை என்றால் ஏன் நரி ஒரு ஏணியைக் கொண்டு அதை எட்ட முயற்சிக்கவில்லை? கார் ஓட்டும் பூனைகளை டிஸ்னி உலகில் சந்தித்த குழந்தைக்கு ஏணியில் நரி ஏறுவது பெரிய காரியமாகத் தோன்றவில்லை. அழ.வள்ளியப்பாவிடம் குழந்தையாக இருந்த போது என் மகன் கேட்ட கேள்வி : படரக் கொம்பில்லை என்றால் ஒரு கம்பை எடுத்து நட்டிருக்கலாமே? பாரி ஏன் ஒரு தேரை விட்டுச் செல்ல வேண்டும்? குழந்தைகளின் லாஜிக் நம்முடைய லாஜிக்கிலிருந்து வேறுபட்டது. எனவே ஏன் குழந்தைகளே குழந்தைகளுக்குப் புத்தகம் 'எழுத' கூடாது? அவர்களுக்கு எழுத வருமா என்பது கேள்வியே இல்லை. அவர்கள் சொல்லட்டும், NHM ஆசிரியர்களில் யாரேனும் எழுதட்டும்.

பொதுவாக புத்தகச் சந்தையில் சக எழுத்தாளர்களை சந்திக்க நேர்வதுண்டு.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை இங்குதான் முதலில் சந்தித்தேன். அவர் தன் புகைப்படங்களை வெளியிட்டுக் கொள்ளாமல் ராணுவ ரகசியம் போல்
காப்பாற்றி வந்ததால் அவர்தான் எஸ்.ஏ.பி. என்று பலருக்குத் தெரியாது. எனக்கும் கூட. திசைகள் (அச்சிதழ்) வெளிவந்த சமயம் அது. வானதி அரங்கில் ஏதோ மேய்ந்து கொண்டிருந்த போது என் தோளைத் தொட்டு 'ஜமாய்க்கிறீங்க' என்று காதருகே மெல்லிய குரலில் ஒருவர் சொல்லக் கேட்டுத் திரும்பிய போது அவர்
புன்னகைத்தார்.திருநாவுக்கரசு ஓடி வந்து அறிமுகம் செய்து வைத்தார். அச்சுப் பத்திரிகைகளுக்கு வரும் முன் கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியராக கல்லூரி மாணவராக சுதாங்கன் அறிமுகம் ஆனதும் ஏதோ ஒரு புத்தகச் சந்தையில்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட கிழக்கில் யாராவது எழுத்தாளர்கள் இருந்து
கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த முறை அதிகம் எழுத்தாளர்களைக் காணவில்லை. தமிழினியில் கண்மணி குணசேகரனைப் பார்த்தேன். அன்னத்தில் மோகனைப் பார்த்தேன். கிழக்கில் வந்து பத்ரியையும் ராகவனையும் தேடினேன். அங்கிருந்த கருந்நீல NHM டி ஷர்ட் அணிந்த ஒருவர் பத்ரி ஆபீசில் மீட்டிங்கில் இருக்கிறார் என்று 'கார்ப்பரேட்' பதிலைச் சொன்னார். ராகவன் வருவார் போவார் ஆனால் எப்போது என்று தெரியாது என்றார். (அப்போது எனக்கு பா.ரா.வின் விபத்துப் பற்றி தெரியாது) ஆனால் இரா.முருகனையும், மருதனையும் சந்தித்தேன்.

எழுத்தாளர்களை சந்திக்க முடியவில்லையே தவிர வாசகர்கள் வழக்கம் போல இன்ப அதிர்ச்சி தந்தார்கள். திருநின்றவூரிலிருந்து வந்திருந்த அறிவுச் செல்வன் பின்னாடியே துரத்திக் கொண்டு வந்து என் சில கதைகளைப் பற்றிப் பேசினார். என் சிறுகதைத் தொகுப்பைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்ன கடையநல்லூர் ஷேக்தாவூத்தை கிழக்கிற்கு அனுப்பி வைத்தேன். நந்தகோபால் என் அறிவியல் புனைகதையான வித்வானை வரிவரியாக நினைவு கூர்ந்து திகைக்க வைத்தார்.

என்றாலும் இந்தப் புத்தகச் சந்தையில் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்த ஒரு விஷயம்: தமிழ் வாசக ரசனை அ-புனைகதைகள் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது. புனைகதைகள் அதிகம் வெளியிடும், தமிழினி, அன்னம்
போன்ற அரங்குகளில் அதிக வாசகர்களைக் காணவில்லை. அம்பானியிலிருந்து கிலானி வரை நூல்கள் வெளியிட்டுள்ள கிழக்கில் நிற்க இடமில்லை. அநேகமாக வெகுஜன இதழ்கள், trendஐத் தீர்மானிக்கின்றன என எனக்கு ஒரு சந்தேகம். 70 களின் இறுதியில் வெகுஜன எழுத்தாளர்களின் தொடர்கதைகள் விற்றுத் தீர்ந்தன.
சாண்டியல்யன் இல்லாமல் பலருக்குத் தூக்கம் வரவில்லை. எண்பதுகளில் கடைக்குக் கடை (புதுக்) கவிதை.அப்போது தமிழர்கள் கவிதையை சுவாசித்து கவிதையைத் தின்று கவிதை (போல ஒன்றை) கழிந்து கொண்டிருந்தார்கள். அப்புறம் சிற்றிதழ் இலக்கியவாதிகளின் படைப்புக்கள் அணிவகுத்தன. இந்தக்
காலகட்டங்களில் வெகுஜனப் பத்திரிகைகளை ஆக்ரமித்திருந்தவையும் இவைதான். இப்போது வாரப்பத்திரிகைகளில் புதினங்கள், புனைவிலக்கியங்களுக்கான இடம் குறைந்து விட்டது. ஏகப்பட்ட மனித் தலைகள். அவர்களைப் பற்றிய துணுக்குகள் கட்டுரைகள். (அக்கப்)போர்கள். எல்லோருக்கும் ஒரு நிமிட எலுமிச்சை வெளிச்சம். பத்திரிகைகள்

வாசக ரசனையைத் தீர்மானிக்கின்றனவா அல்லது Vice-versaவா?அறிந்து கொள்ள ஆவல் இன்னொன்றும் கவனித்தேன். சில ஆண்டுகளுக்கு முன் 600 பக்கங்களுக்குக் குறையாத, கெட்டி அட்டையில் கட்டப்பட்ட (ஹார்ட் பவுண்ட்) செய்யப்பட்ட தலையணைப் புத்தகங்கள் நன்றாகவே விற்பனையாகிக்
கொண்டிருந்தன. நான் போன அன்று பார்த்த வாசகர்கள் தலையணைகளை எடுத்துப்பார்த்துவிட்டு விலையைப் பார்த்து மிரண்டு பயபக்தியோடு திரும்ப வைத்தார்கள். பொருளாதார மந்தம் காரணமாயிருக்குமோ?

நான் தேடிப் போன புத்தகங்கள் கிடைக்கவில்லை. பாரதியின் காலவரிசைப்படுத்தப்பட்ட பதிப்புகள் (5 முதல் 9 வரை) தேவை. அகப்படவில்லை. திராவிட இயக்கங்களின் பழைய இதழ்களின் தொகுப்பு (திராவிடன், குடியரசு ஆகிய இதழ்கள்) தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை. அந்த அதிர்ஷ்டம் இல்லை புத்தகங்களுக்கு சம்பந்தம் இல்லாத பால்கோவாவும், பப்பாளிப் பழத் துண்டுகளும் கூட அரங்கில் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. ஆனால் பழைய புத்தகக்கடைகளை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். முந்தைய புத்தகச் சந்தைகளில் கலைக் கல்லூரிக்கு வெளியே நடைபாதைகளில் அவர்களும் கடைபோடுவார்கள். பள்ளிக்கூட நான் டிடெயிகளையும் pulp fictionயும் சகித்துக் கொண்டு தேடினால் சில முத்துக்களும் அவற்றில் அகப்படும். இந்த சந்தையில் அந்த அதிர்ஷ்டமும் இல்லை.

வாசலில் இருந்த மேடையில் உரையாற்ற வைரமுத்து வந்திருந்தார். (வடுகப்பட்டி) வராக நதியில் வந்துதித்த முத்தே என யாரோ வரவேற்புக் கவிதை வாசிப்பது காதில் விழுந்தது. நதிகளில் முத்துக் குளிக்க முற்படும்
தமிழர்களின் விஞ்ஞானத்தை வியந்து கொண்டே வெளியேறினேன்.

11 comments:

Anonymous said...

நன்றி. Prodigyயில் செய்யக்கூடியவை என்று நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பனவற்றைக் குறித்துக்கொண்டேன். ஒரு விஷயம். எதுவுமே ‘கூடாது’ என்று நான்+நாங்கள் நினைப்பதில்லை. எதையும் செய்து பார்த்துவிடுவது என்பதுதான் நோக்கம். சில புத்தகங்கள் விரைவில் வந்துவிடுகின்றன. சில தாமதமாகின்றன. எழுதுவதற்கு சரியான ஆள்கள் கிடைப்பது மிகப்பெரிய பிரச்னை. Prodigyயில் எழுத்தாளர்கள் பற்றியும் விஞ்ஞானிகள் பற்றியும் நூல்கள் கொண்டுவரும் பணியை ஏற்கெனவே ஆரம்பித்து இருக்கிறோம். 2009ல் வரத் தொடங்கும்.

Boston Bala said...

----நதிகளில் முத்துக் குளிக்க முற்படும்
தமிழர்களின் விஞ்ஞானத்தை ----


கற்பனைக்கும் உண்டோ அடைக்கும் தாழ் :)

மருதன் said...

நடைபாதைக் கடைகள் முளைத்துவிட்டன. நேற்று பல புத்தகங்களை அங்கே வாங்கினேன். நிறைய pulp fiction. நிறைய pirated copies. உட்கார்ந்து தேடிப்பார்த்தால் நல்ல நூல்கள் அகப்படும். தென் ஆப்பிரிக்க இனவெறி பற்றி ஒரு நூல், மிலன் குந்தேராவின் சிறுகதை தொகுப்பு, வால்ட்டர் பெஞ்சமின், மகாத்மே புலே என்று பல புத்தகங்ளை நேற்று வாங்கி வந்தேன். அடுத்த முறை கண்காட்சிக்கு வரும்போது நடைபாதைகளையும் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்.

ஹரன்பிரசன்னா said...

Dear Malan, Thanks for the comments on Prodigy.

We have already published the books on Bharathidasan and Kalpana chawla. Some other books are on its way. Again thanks.

Vassan said...

என் சிறுகதைத் தொகுப்பைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்ன கடையநல்லூர் ஷேக்தாவூத்தை கிழக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

வணக்கம்.

ஷேக்தாவூதுக்கு உங்கள் சிறுகதை தொகுப்பு கிடைக்கவில்லை என்றால் என்னால் தர முடியும். காசு கொடுத்து வாங்கியது.

படிக்க சில தடவைகள் முயன்றும் அறவே படிக்க பிடிக்கவில்லை. இருக்கும் ஒரு நூறு+ தமிழ் நூல்களிடையே, கண்ணேறாக எதற்கும் இருக்கட்டும் என்பதாகக் கிடக்கிறது. தபால் செலவு மட்டும் ஷேக் அவர்களின் பொறுப்பு.

Vassan

vassan.koLLidam.com

மாலன் said...

அன்புள்ள திரு.வாசன்,

உங்கள் யோசனைக்கு நன்றி. திரு.ஷேக் தாவூதின் முகவரி என்னிடம் இல்லை.அவர் நான் தொடர்பில் இருக்கும் நண்பரும் அல்ல. தற்செயலாக அவரை புத்தக சந்தையில் சந்தித்தேன்.அவரை அடுத்த முறை சந்திக்க நேர்ந்தால் உங்கள் எண்ணத்தைத் தெரிவிக்கிறேன்.

என் தொகுப்பு உங்களுக்க்ப் பிடிக்காமல் போயிருக்கலாம். இன்னாரை திருப்திப்படுத்த வேண்டும் இன்னாரை வெறுப்பேற்ற வேண்டும் என நான் எழுதுவதில்லை. நான் என்னை எழுதுகிறேன். எனவே அது உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றால் அதை நீங்கள் நிராகரிக்கலாம். எனக்கு வருத்தமில்லை.
அன்புடன்
மாலன்

Anonymous said...

மாலன் அவர்களுக்கு வணக்கம்,
தமிழில் இதுவரை நூல்களாக வெளிவந்துள்ள அறிவியல் புனைகதைகளின் நூல் விவரங்கள் வேண்டும்.

தமிழ்த்தேமா said...

மாலன் அவர்களுக்கு வணக்கம்,
தமிழில் இதுவரை நூல்களாக வெளிவந்துள்ள அறிவியல் புனைகதைகளின் நூல் விவரங்கள் வேண்டும்.

தமிழ்த்தேமா said...

மாலன் அவர்களுக்கு வணக்கம்,
தமிழில் இதுவரை நூல்களாக வெளிவந்துள்ள அறிவியல் புனைகதைகளின் நூல் விவரங்கள் வேண்டும்.

தமிழ்த்தேமா said...

வணக்கம். தமிழி்ல் இதுவரை நூல்களாக வெளிவந்துள்ள அறிவியல் புனைகதைகள் பற்றிய விவரங்களை் தரவும்.

தமிழ்த்தேமா said...

மாலன் அவர்களுக்கு வணக்கம்,
தங்களது அறிவியல் புனைகதை நூல் கிடைக்குமா? எங்கு?