தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.
அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.
சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.
ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.
அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது.
***
'தமிழரது அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்' என்று பாரதியின் ஒரு மகா வாக்கியம் ஒன்றுண்டு. தமிழன் என்ற பெயரில் எழுதியதாலோ என்னவோ, பாரதி அந்த வாக்கியத்தை எனக்காகவே சொன்னமாதிரி எனக்கு ஒரு நினைப்பு. அந்த நினைப்பில் (அசட்டுத்) துணிச்சலான காரியங்களை அவ்வப்போது செய்வதுண்டு.
அப்படி செய்த ஒரு காரியம்தான் ·புளோரிடா பல்கலைக்கழகத்தில் என் முதுகலைப்படிப்பின்போது, மின்னிதழிற்கு ஒரு முன்மாதிரியை (Prototype for an electronic newspaper) உருவாக்குவது. அமெரிக்கா கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்பு வரை கணியியில் பழக்கம் ஏதும் கிடையாது. அப்பே¡து வீட்டில் கணினி இல்லை. இந்தியா டுடே அலுவலகத்திலும் ஆசிரியப் பகுதியில் கணினி வந்திருக்கவில்லை. ஆனால் நான் என் புராஜக்கெட்டிற்கு நான் எடுத்துக் கொண்ட விஷயம் மின்னிதழிற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்குவது. அந்த முன் மாதிரியை ஒட்டிப் பல்கலை நிர்வாகம் ஒரு மின்னிதழை நடத்தக்கூடும் எனப் பேச்சிருந்ததால் மாணவர்களிடையே ஒரு உற்சாகமான ஆர்வம் இருந்தது.
நாங்கள் ஏழு பேர் ஒரு குழு. இதழியல் கல்லூரியிலிருந்து நாங்கள் மூவர். கணினிப் பொறியியல் மாணவர்கள் இருவர், ஓவியக் கல்லூரியிலிருந்து ஒருவர். சட்ட மாணவர் ஒருவர். இந்த மாதிரி மூன்று குழுக்கள்.
அப்போது BBS என்று ஒன்றிருந்தது. Bullettin Board System என்ற அது கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் LAN வழியே செயல்படுவது. முந்திரிக்கொட்டை முதல் குழு அந்தத் தொழில் நுட்பத்தை எடுத்துக் கொண்டது. இன்னொரு குழு, AOL நெட்வொட்க்கைப் பயன்படுத்தத் தீர்மானித்தது. எங்கள் மின்னிதழ் உலகு தழுவியதாக இருக்க வேண்டும், மல்டி மீடியா இருக்க வேண்டும் என்று பேராசை எங்களுக்கு. ஆனால் அப்போது internet explorer வந்திருக்கவில்லை. நெட்ஸ்கேப் அறிமுக நிலையில் இருந்ததாக ஞாபகம்.
என்னடா, ஆரம்பமே கண்ணைக் கட்டுதே என்று திகைத்துப் போய், என்ன செய்வது என்று ஆங்காங்கே விசாரித்த போது, NASA வின் துணை அமைப்புக்களில் ஒன்றான, NCSCA (National Center for Super Computing Applications) என்ற ஒரு அமைப்பிடம், மொசைக் என்ற ப்ரெளசர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி இரவல் வாங்கி வந்து வேலையை ஆரம்பித்தோம். என் வேலை பத்திரிகைக்கு விஷயம் தயாரிப்பது, என் சகா எழுதும் விஷயத்தை எடிட் செய்வது, எல்லா விஷயங்களையும் ஹைப்பர் டெக்ஸ்டில் எழுதி அதாவது tag போட்டு வலையேற்றத் தயாராக வைப்பது. இப்போது போல் HTML என்ற பித்தானை அமுக்கி எழுதியவற்றை அப்போது மாற்றிவிட முடியாது. எல்லாவற்றையும் <-- -/> என்று மாற்றியாக வேண்டும். அதனால் மணிக்கணக்கில் கணினி முன் உட்கார்திருக்க வேண்டி வந்தது. இந்தக் கணினிக் காதல் பிறந்தது அப்போதுதான்.
படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சிங்கப்பூர் வழியே திரும்பி வந்தேன். அங்கு நான்யாங் பல்கலைக்கழகத்தில், என் நண்பரும் எழுத்தாளருமான பேராசிரியர். நா. கோவிந்தசாமி பணியாற்றிக் கொண்டிருந்தார். கணினிக்குள் தமிழைக் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவர். கணியன் என்ற எழுத்துருவை உருவாக்கியவர். அப்போது தமிழ் கணினிக்குள் வந்திருந்ததே தவிர இணையத்திற்குள் வந்திருக்கவில்லை. என் மொசைக் அனுபவங்களையும், HTML அனுபவங்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த நிமிடமே ஏதாவது செய்து இணையத்தில் தமிழை ஏற்றிவிடமுடியுமா என கோவிந்தசாமி துடித்தார். நான்யாங் பாலிடெக்க்னிக்கில் அவரது அறையில் அமர்ந்து அவரது கணினியில் சில தமிழ்வாக்கியங்களை ஹைப்பர் டெக்ஸ்டில் எழுதிப்பார்த்தோம். ஆனால் இணையத்தில் ஏற்றிப்பார்த்தால் தரப்படுத்தப்படாத எழுத்துரு என்பதால் உதைத்தது.
கிட்டத் தட்ட ஒருவருடம் கழித்து. (1995 அக்டோபர் என ஞாபகம்) திடீரென்று ஒரு நாளிரவு கோவிந்தசாமி போனில் கூப்பிட்டார்." போட்டாச்சு மாலன், போட்டாச்சு!" என்று கூவினார். எனக்கு அவர் விளக்காமலே என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்று புரிந்து விட்டது. " என்ன போட்டீர்கள், கவிதையா, கதையா?" "கவிதைதான். சோதனை முயற்சி என்பதால் சுருக்கமாக நான்கு வரி போட்டுப்பார்க்கலாம் என்று கவிதைதான் போட்டேன்" "என்ன கவிதை? அகர முதல எழுத்தெல்லாமா?" " படிக்கிறேன் கேளுங்க: யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவ்வற்றோரன்ன......" கணியன் பூங்குன்றனின் கவிதை முழுக்க அவர் குரலில் வாசித்தார்." பொருத்தமான கவிதைதான். ஆமாம் தீதும்
நன்றும் பிறர் தர வாரா. நம் இணையத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.நமக்கு, அதாவது தமிழர்களுக்கு வேறு யார் செய்து தரப்போகிறார்கள்?" தொலைபேசியை வைத்து விட்டேன். அன்று நான் தூங்க வெகு நேரம் ஆயிற்று. கோவிந்தசாமியைப் போல் என் மனமும் ஓர் விவரிக்க முடியாத சந்தோஷத்தால் நிரம்பியிருந்தது.
இன்று கோவிந்தசாமி இல்லை. ஆனால் இணையத்தை ஒவ்வொரு முறை துவக்கும் போதும் அவரை நினைத்துக் கொள்கிறேன். அவர் முயற்சியில் நடைபெற்ற முதல் தமிழ் இணைய மாநாட்டிலும் கலந்து கொண்டேன். அதில் என் ஹைப்பர் டெக்ஸ்ட் அனுபவங்கள் பற்றி கட்டுரை வாசித்தேன். அதன் கட்டுரைகளைத் தேர்வு செய்யும் குழுவிலும் இருந்தேன். அந்த உறவின் நீட்சிதான் உத்தமம் அமைப்பில் பங்கு கொண்டது. குமுதத்தின் மின்னிதழை வலையேற்றியது. மைக்ரோசா·ப்ட் அதன் MS Officeஐ தமிழ்ப்படுத்திய போது அதை validate செய்து கொடுத்தது. கணிச்சொல் அகராதியைத் தொகுத்தது. முதன்முதலில் யூனிகோடில் அமைந்த தமிழ் மின்னிதழ் திசைகளைத் துவக்கியது எல்லாம்.
எல்லாம் கோவிந்தசாமி போட்ட பிள்ளையார் சுழி.
****
நந்தகுமார் +2 படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறிய மாணவர்களில் ஒருவன். பொறியியற் பிரிவில், வரைவியல் (draftsmanship) பாடத்தில் முதலாவதாக வந்திருந்தான். அவனது கிராமம் வேலூருக்குப் பக்கத்தில். பிரதான சாலையில் இறங்கி ஆறு கீ.மீ தூரம் நடந்து போக வேண்டும்.அவனது கிராமத்தில் அவனது வீட்டிற்கு எங்கள் செய்தியாளர் போன போது, அவன் வீட்டில் இல்லை. கூரையில் எலி செத்து நாறிக் கொண்டிருந்தது. அதைத் தேடி எடுத்துப் போடக் கூட வீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லை. நந்தகுமாரும் அவனது தந்தையும் வயல் வேலைக்குப் போயிருந்தார்கள்.
குமுதம் பத்திரிகையிலிருந்து ஆள் வந்திருக்கிறது என்று தெரிந்ததும், அவனை எங்கெல்லாமோ தேடி சைக்கிளில் பின்னால் உட்கார்த்திக் கூட்டி வந்தார்கள். கிராமத்துப் பையன்களுக்கு நகரத்து ஆட்களிடம் உள்ள கூச்சத்தோடு அவன் பேசினான். இனிமேல் படிக்கப் போவதில்லை என்று தெ
ளிவாகச் சொன்னான். காரணம் சொல்ல மறுத்தான். சொல்லாமலே புரிந்தது, வறுமை. மேலும் படிப்பதானால் மேலும் செலவு. குடும்பத்திற்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறான் என்று புரிந்தது. +2வில் மாநிலத்தில் முதலாவதாக வந்துவிட்டு, வறுமை காரணமாக மேலே படிக்கப்போவதில்லை என்றால் என்ன கொடுமையடா இது! என்று மனம் குமுறிய எங்கள் செய்தியாளர் அவனிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவன் காது கொடுக்கத் தயாராக இல்லை. வெறுத்துப் போய் கிளம்ப ஆயத்தமானார் அவர். அப்போது சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது. நந்தகுமாரின் தாய் நிருபரின் காலில் விழுந்து, " என் மகனுக்கு ஏதாவது வழி பண்ணுங்கய்யா!" என்று மெல்ல விசும்பினார்.
மகன் மேலே படிக்க வேண்டும் எனத் தாய் விரும்புகிறார். அவர் எண்ணம் நியாமானது. மகன் மேலே படிக்கத் தயங்குகிறான். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. என்னசார் செய்யலாம் என நிருபர் என்னிடம் கேட்டார். தாய் விரும்புவதற்கும், மகன் தயங்குவதற்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். வறுமை. இதற்கு ஒரு தீர்வு கண்டால் நாம் பிரசினையைத் தீர்த்துவிடலாம் எனத் தோன்றியது.
அந்தவாரக் குமுதத்தில் நந்தகுமாரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். வாசகர்கள் மனதோடு அந்தக் கட்டுரை பேசியிருந்திருக்க வேண்டும். உலகின் பல மூலைகளிலிருந்தும் பண உதவிகள் வரத் துவங்கின. அவற்றில் பல எளிய நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தன. அந்தக் கொடைகளில் ஏதேனும் ஓரு ஓரத்தில் உழைப்பின் வாசனையோ, கண்ணீரின் ஈரமோ இருந்தது. இன்னும் நினைவிருக்கிறது. சென்னைப் பொது மருத்துவ மனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு செவிலியர், தன் பாரியான உடம்பைத் தூக்கிக் கொண்டு மூச்சு வாங்க மூன்றுமாடி ஏறி என் அறைக்கு வந்து காத்திருந்தார். அவருக்கு ஆர்த்ரைடீஸ் பிரசினை வேறு. நீங்கள் கீழே இருந்து இண்டர்காமில் அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்றேன்.
நான் கொடுக்கப்போவது ரொம்ப சொல்பத்தொகை, அதற்காக உங்களை இழுத்தடிப்பது சரியல்ல என்று பதிலளித்தார். அவர் கொடுத்தது அதிகம் அல்ல. சில நூறு ரூபாய்கள். அவர் தயங்கியபடியே, ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு சொன்னார்." நிறையக் கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனா ரிட்டையர் ஆயிட்டேன். பென்ஷன்தான் ஒரே வருமானம். ஸாரி.." என்று நிறைய ஸாரி சொன்னார், ஏதோ தப்புச் செய்து விட்டது போல.
இதற்கிடையில் நநதகுமார் நுழைவுத் தேர்வு எழுதினான். அந்த மதிப்பெண்களையும் கூட்டிப் பார்த்த போது அவனது ராங்க் மிகக் கீழே இருந்தது. அரசுக் கல்லூரிகளில் இலவச இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
தங்கபாலு, (ஆம். காங்கிரஸ் எம்.பி.தான்) சென்னைக்கருகில் ஒரு பொறியியற் கல்லூரி நடத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் நந்தகுமாரின் நி¨லயைச் சொல்லி ஒரு இடம் கொடுக்க முடியுமா எனக் கேட்டேன். நன்கொடையெல்லாம் கொடுக்க முடியாது என்று சொன்னேன். அவர் நன்கொடை மட்டுமல்ல, நான்காண்டுகளுக்கும் கல்விக் கட்டணமே வேண்டாம் என்று சொல்லி இடம் கொடுத்தார். முதலாண்டிற்கான புத்தகங்களை என் மகன் கொடுக்க முன் வந்தான்.
இப்படியெல்லாம் இறுக்கிப் பிடித்து நான்கு லட்ச ரூபாய் அளவில், புரசைவாக்கம் இந்தியன் வங்கியில் fixed deposit ஆகப் போட்டோம். ஆனால் அவன் தந்தைக்கு இவன் இங்கே இருந்து விவசாய வேலைக்குப் போனால் கூலியாவது வரும், சுமை குறையும் என நினைத்தோம், ஆனால் இவன் படிக்கப் பட்டணம் போனால், இன்னும் நான்கு வருஷங்களுக்குத் தன் ஒற்றை வருமானத்தில் குடுமபத்தை ஓட்ட வேண்டுமே என மலைப்பாக
இருந்தது. அதனால் அந்த fixed depositன் வட்டியை ஒரு சேவிங்க்ஸ் கணக்கில் போடச் சொல்லி அதை அவருக்கு அவ்வப்போது நந்தகுமார் மூலமே கொடுக்க ஏற்பாடு செய்தேன்.
குமுதத்தில் கட்டுரை வந்த கட்டுரையைப் படித்த என்.ராம், பிரண்ட்லைனில் நந்தகுமாரைப் பற்றி எழுதினார். அதைப்படித்த பிரதமர் தேவ கவுடா, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்டக் கலெக்டரை அணுகுமாறு கடிதம் அனுப்பினார். NIIT அவனுக்குக் கணினியில் பயிற்சி அளிக்க முன் வந்தது.
இன்று நந்தகுமார் ஒரு சிவில் என்ஜினியர். அவன் படித்து விட்டு வெளியே வந்த போது அவன் கையில் ஒரு தொழிற்பட்டமும், வங்கியில் நாலு லட்ச ரூபாய் பணமும், கணினிப்பயிற்சியும் இருந்தது.
நான் கையெழுத்துப் பத்திரிகை, இளைஞர் பத்திரிகை, இலக்கியப் பத்திரிகை, செய்திப்பத்திரிகை, வாரப்பத்திரிகை, தினசரிப் பத்திரிகை, சிறு பத்திரிகை, வணிகப் பத்திரிகை, இணையப்பத்திரிகை, உள்ளூர் வானொலி, உலக வானொலி, கல்லூரி வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று
எல்லா ஊடகங்களிலும் நிறையவே குப்பை கொட்டியிருக்கிறேன். இரண்டு பிரதமர்கள், ஒரு ஜனாதிபதியோடு, அவர்கள் பயணம் செய்த தனி விமானத்திலேயே வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறேன். பலநாட்டுத் தலைவர்கள் பங்கு கொண்ட காமன்வெல்த் மாநாடு, இந்திய ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு என்று பல அக்கப்போர்களை 'கவர்; செய்திருக்கிறேன். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவற்றின அழைப்பின் பேரில் உரையாற்றியிருக்கிறேன். சென்னா ரெட்டி, பர்னாலா என்ற இரு ஆளுநர்களால் இரு வேறு பல்கலைக்கழகங்களின் செனட்களில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். இவையெல்லாம் என் பத்திரிகை உலகப் பணிக்குக் கிடைத்த பேறுகள்தான். ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிக உயர்ந்ததாக நான் கருதுவது ஒரு நந்தகுமார் கரையேறிவர என் எழுத்து உதவியதைத்தான்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடுமபமும் ஒரு வறுமை நிலையில் இருக்கும் மாணவனுக்காவது கை கொடுப்பது என்ரு இறங்கினால், இந்தியாவில் வறுமையை ஒழித்துவிட முடியும் என்று நான் இப்போதும் நம்புகிறேன். அப்படி நடந்தால் நமக்கு, 'சிவாஜி'கள் தேவைப்படாது.
*****
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் (இப்போது இந்தியா மண்ணைக் கவ்வியதே அந்தப் போட்டி அல்ல, அதற்கும் முந்தியது) துவங்க இருந்த நேரத்தில் பத்ரியை ஒரு பேட்டிக்காக சன் நியூஸ் தொலைக்காட்சி அரங்கத்திற்கு அழைத்திருந்தோம். அவர்தான் முதலில் Blog பற்றி செ
¡ன்னார். அப்போது Blogகள் ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்தன. அதில் தமிழிலும் எழுத முடியுமா என்று நான் கேட்டேன். பத்ரி என் அலுவலகக் கணினியிலேயே ஏதோ சில முயற்சிகள் செய்து பார்த்தார். சரியாக வரவில்லை. வீட்டுக்குப் போய் முயற்சி பண்ணிவிட்டுச் சொல்கிறேன் என்றார். போய்ச் சில நிமிடங்களில் மின்னஞ்சல் வந்துவிட்டது. போகிற வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு போயிருப்பார் போல. பத்ரி அப்போது (இப்போதும் கூட இருக்கலாம்) இலவச பிளாக்கர் சேவைக்கு பதில் காசு கொடுத்துப் பயன்படுத்தும் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று ஞாபகம். அதில் 'டைனமிக் எழுத்துருக்களை' நிறுவிக் கொள்ள வாய்ப்பிருந்தது. அதனால் அவரது கணினியில் தமிழ் வேலை
செய்கிறதோ என்று எனக்கு சந்தேகம்.
முதலில் தகுதரத்தில் (TISCII)தான் எழுதிப் பார்த்தோம். என்னுடைய கணினியில், திசைகளுக்காக முத்து நெடுமாறன் கொடுத்த தமிழ் எழுத்துருக்கள் embeded ஆக இருந்தது. அதனால் எனக்கு இந்த வசதிகள் இல்லாத ஒருவர் இலவச பிளாக்கரில் எழுதிப்பார்த்து அது படிக்க முடிந்தால்தான் நிச்சியமாகும் எனத் தோன்றியது. அருணா அந்த பரிசோதனையை செய்தார்.
தமிழின் முதல் பத்து வலைப்பதிவர்கள் என்று பட்டியலிட்டால் அதில் பத்ரி, நான், அருணா, மதி எல்லோரும் இடம் பெறுவோம் என்றுதான் நினைக்கிறேன். நான் பிளாக்கரில் பதியத் துவங்கியது ஏப்ரல் 2003. பத்ரி பிப்ரவரி 2003ல். அருணா மே 2003 என்று ஞாபகம்.மதியும் ஏறத்தாழ பத்ரி துவங்கிய காலத்திலேயே தன் பதிவைத் துவக்கியதாக ஞாபகம்.
தமிழில் வலைப்பதிவுகள் துவங்கமுடியும் என்ற செய்தியை விரிவாக திசைகளில் எழுதினேன். ஆங்காங்கே மடலாடற்குழுக்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தவர்கள் வலைப்பதிவுகளை ஆரம்பித்தார்கள். மதி உடனடியாக ஆக்கபூர்வமாக ஒரு வேலை செய்தார். வலைப்பூக்களின் முக
வரிகளைத் திரட்டி தமிழ் வலைப்பதிவு என்று ஒரு இணையப் பக்கத்தை நிறுவினார். இப்போது நீங்கள் தமிழ்மணத்தில் பார்க்கிற மாதிரியான இடுகைகளைப் பற்றிய குறிப்பெல்லாம் இருக்காது. ஒரு பட்டியல் மட்டும் இருக்கும்.முகவரிகள் ஹைப்பர் லிங்க்கில். நீங்கள் சொடுக்கினால் பதிவிற்குப் போகலாம். ஆனால் அதுதான் தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி வருவதற்கு முன்னோடி. காசி நிறைய உழைத்து அந்தத் திரட்டியை நிறுவினார். வலைப்பதிவு எழுதுகிறவர்கள் உற்சாகம் அடைந்தார்கள். வலைப்பூக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென வளர ஆரம்பித்தது.
கூடவே பிரசினைகளும். ஆபாசப் பின்னூட்டங்கள், குறிப்பாக பெண்களின் பதிவுகளில் தலைகாட்டத் துவங்கின. போலிப் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன. அதையெல்லாம், திரட்டியை நிர்வகிப்பவர்கள் என்ற முறையில், தமிழ்மணம் நிர்வாகிகள் ஏதாவது செய்து நிறுத்த வேண்டும் என நான் நினைத்தேன். அதைக் கோரி வாதிட்டும் வந்தேன். ஆனால் அவர்கள் அவற்றைப் பற்றி ethics கோணத்தில் சிந்திப்பதை விட, தொழில்நுட்பக் கோணத்தில் பார்த்தார்கள். அது இயல்பானதுதான். ஆனால் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 'அட, போங்க்கப்பா' என்று பிளாக்கரிலிருந்து ஒதுங்கிக் கொண்டு யாகூ 360ல் வலைபதியத் துவங்கினேன்.
சில ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால், ரிப்வான் விங்கிள் 27 வருஷம் தூங்கி எழுந்து ஊருக்கு வந்து பார்த்தமாதிரி எல்லாம் மாறியிருக்கிறது. நிறைய புதிய பெயர்கள்.பழைய பெயர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. ஏதாவது எழுதுகிறார்களா, அவையெல்லாம் வேறு எங்கேனும் எழுதிக் கொண்டிருக்கிறார்களா, அல்லது காதும் காதும் வைத்தமாதிரி ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நாம்படித்த கல்லூரிக்கு 25 வருடம் கழித்துப் போய்ப் பார்த்தால் எப்படி ஒருவித ஏக்கமும், மகிழ்ச்சியுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது.
பத்ரியின் முதல் பதிவு கல்பனா சாவ்லாவின் மரணத்தைப் பற்றியது. சென்டிமென்டலாக யோசிப்பவர்களுக்குக் கொஞ்சம் சங்கடமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இன்று தமிழில் வலைப்பதிவுகள் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன். இணையத்தில் தமிழ் content அதிகரிக்க வேண்டும், அதுவும் யூனிக்கோடில் எழுதப்பட்ட தமிழ் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் திசைகள் துவக்கப்பட்டதின் நோக்கம். அதுதான் வலைப்பதிவுகளை வாசக உலகிற்கு நான் அறிமுகப்படுத்தி வைத்ததன் நோக்கமும்.
இன்று வலைப்பதிவுகள் இப்படிப் பல்கிப் பெருகியதற்கு ஏதோ ஒரு விதத்தில் நானும் ஆரம்பத்தில் ஒரு விதை போட்டேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவற்றின் உள்ளடக்கதில் செறிவைக் கூட்டவேண்டியது அடுத்த கட்ட பணி. திசைகளை மீண்டும் துவக்கிவிடலாமா என்று கூட கை அரிக்கிறது. பார்ப்போம். இன்ஷா அல்லாஹ். நல்லதே நடக்கட்டும்.
***
ஒரு சீசனில் சென்னையில் 'மெட்றாஸ் ஐ' வராதவர்களைச் சல்லடை போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. புத்தர் கடுகு வாங்கி வரச் சொன்ன கதைதான். அந்த மாதிரி ஆகிவிட்டது 8 போடாத வலைப்பதிவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. யாரைக் கேட்டாலும் நான் எட்டுப் போட்டாச்சே, நீங்க பார்க்கலையா என்கிறார்கள் என்னவோ ஓட்டுப் போட்டது போன்ற ஒரு களிப்புடன். அதுவும் தவிர எட்டுப்பேர் எழுதக்கூடிய நீளத்திற்கு நான் என்னுடைய ராமாயணத்தை எழுதிவிட்டதால், இன்னும் எட்டுப்பேரை அழைக்கத் தயக்கமாக இருக்கிறது. மிகவும் யோசித்து இந்த எட்டுப் பேருக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் வந்து எட்டுப் போட்டு எங்களை கெளரவிக்க வேண்டும். குட்டுப் போட்டாலும் ஏற்கத் தயார்:
மதுமிதா
ஆச்சரிய்மாக இருக்கிறதே, இன்னுமா உங்களை விட்டுவைச்சிருக்காங்க!
நிலா
சேவாலாயா அனுபவங்களை எழுதுவீங்கதானே?
(ரஜனி) ராம்கி
எழுதுங்க சும்மா அதிர்ற்றட்டும்!
ராகவன் தம்பி
வடக்கு வாசல் அனுபவங்கள், தில்லி தமிழ்ச் சங்க உரைகள் இவற்றில் இருந்தெல்லாம் எடுத்து எழுதுங்க
அண்ணா கண்ணன்
பட்டிமன்றத்தில்தான் கலக்கணுமா? இந்த வெட்டி மன்றத்திற்கும் வாங்க
உண்மைத் தமிழன்
பின்னூட்டப் பிரசினைகளிலிருந்து ஒரு மாற்றமா இருக்கும்ல?
உதயச் செல்வி
உதயா நீங்க எழுதி எத்த்னை நாளாச்சு. அப்பா கவிதை மாதிரி ஒரு 8 கவிதை வேண்டும்
பாலுமணிமாறன்
சிங்கை அனுபவங்களை, (இலக்கிய அனுபவங்களும் சேர்த்துத்தான்) எழுதுவீங்கள்ல?
அவர்களுக்காக விதி முறைகள் இன்னொரு தரம் இங்கே:
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும்
எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
வாங்க வாங்க.
2 days ago
32 comments:
என்னை அழைத்தற்கு நன்றி
கலக்கிட்டீங்க; வேறு என்ன சொல்றது! கோவிந்தசாமி தமிழ் இணையத்தின் பிதாவாச்சே... அவருடைய ஆரம்ப கால முயற்சிகள் மறக்க முடியாதவை. அருமையான, அயராத மனிதர். நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மாலன்.
The power of the written word, the pen yields such power. Well done Maalan sir, you have helped a poor family thru your writting.
And may uyou be blessed by the divine in all your work.
மாலன் ஸார்..
சுவையான அனுபவங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். உங்களுடைய பத்திரிகை அனுபவம் என்பது வெறும் பேப்பர் கட்டிங் அல்ல.. 40 ஆண்டு கால தமிழக அரசியலூடனேயே நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதில் ஒரு சிறிய பகுதிதான் எம்.ஜ.ஆருடனான உங்களது சந்திப்பு பற்றிய செய்தி.
எம்.ஜி.ஆர். ஏதோ ஓட்டுக்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பரிபாலனம் செய்தார் என்ற அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் மெத்தப் படித்த மேதாவிகள் தங்களுக்குள் செய்திகளை பரப்பி வந்தார்கள். அது ஒரு வாழ்வியல் அனுபவத்தின் விளைவாக எழுந்த சமூகப் புரட்சி என்பதை தங்களது அரசியல் கொள்கைக்காக பின்னுக்குத் தள்ளி தங்களுடைய அறிவுஜீவித்தனத்தை அவ்வப்போது காட்டி வருகிறார்கள்.
தங்களுடைய இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் உள்ளன்பையும், அவருடைய நல் உள்ளத்தையும், தொலை நோக்குப் பார்வையையும் வெளிக்காட்டுகிறது. ஒருவரின் நற்செயல்களை அவருடைய குடும்பத்தாரே சொல்ல மறந்தாலும் பத்திரிகையாளன் மறக்கக்கூடாது என்பது பத்திரிகையாளரின் அடிப்படை தர்மம். நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
தொடர்ந்து உங்களுடைய கணினியில் தமிழ் என்ற வகையிலான முயற்சிகள் முன்பே அறிந்திருந்தது என்றாலும் இவ்வளவு டீடெயிலாக இல்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். வலைத்தளத்தின் முதல்வராக இருந்தும் நீங்கள் தொடர்ந்து இத்தளங்களில் உங்களுடைய பங்களிப்பை வழங்க முடியாமல் போனது எங்களுடைய துரதிருஷ்டம்தான்.. இனி அப்படியொரு நிலைமை ஏற்படாது என்றே நம்புகிறோம்.
மேலும் தங்களுடைய அழைப்புக்கு மிக்க நன்றி..
ஏற்கெனவே கடந்த வாரங்களில் திரு.சேவியர், திரு.மணிகண்டன் ஆகியோர் என்னை அழைத்திருந்தார்கள். அப்போதே நான் அவர்களுக்குத் தெரிவித்திருந்தது என் வாழ்க்கையில் எட்டு போடும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. என்னால் இயலாது என்பதைத்தான்..
இப்போது தாங்கள்.. என் மதிப்பிற்குரிய ஆசிரியர். ஆனாலும் தயங்காமல் தங்களுடைய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்..
மொத்தமே கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும்கூட 3-க்கு மேல போக மாட்டேங்குது. ஏனெனில் தங்களுடைய அழைப்பிற்காக வந்து மொக்கையாக எதையும் எழுதிவிடக் கூடாது என்று பார்க்கிறேன். என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.. நன்றி.. நன்றி..
குறிப்பு : 12.14 மணிக்கு பின்னூட்டமிட்டிருப்பது போலியார்தான்..))))))))) (இன்பத் தொல்லை)
நன்றி! நன்றி!!
MGR குறித்த தகவல்கள் சுவாரசியமாக இருந்தது. அந்த மாணவன் (சிவில் இஞ்சினியர்) இப்போது எப்படி இருக்கிறார்? தமிழ் Blog உலகத்திற்கு நீங்கள் ஆற்றிய பங்குக்கு (பெரிதாக எந்த கஷ்டமும் படாமல், இன்று தமிழில் Blog எழுதுபவன் என்ற முறையில்) நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்.
தமிழை இணையத்தில் பார்ப்பதற்காக இத்தனை பேர் பட்ட பாடுகளை பார்க்கையில், மறுபடியும் கொஞ்சம் சுறுசுறுப்பாக எழுதலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் இன்னொரு ஓரத்தில் " அடப் போங்கப்பா..நம்முடைய நேரத்தை உபயோகப்படுத்தி வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா என்றும் தோன்றி விடுகிறது. இப்போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இணையத்தில் கோஷ்டியும் அரசியலும் மலிந்த பிறகு முன்னைப் போல உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் எழுத முடிவதில்லை.
தமிழனின் சாபக்கேடு அவன் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த வசதிகளையே அவன் உபயோகிக்க விடாது...
அருமையான பதிவு! நீங்கள் போட்ட விதையால் வளர்ந்த மரத்தின் பழங்களைத்தான் நாங்கள் இன்று சுவைக்கிறோம்.
நந்தகுமார் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார்?
கல்க்கிட்டீங்க. அதுவும் எம்ஜிஆர் வீட்டுக்குள்ளே இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வந்து போச்சுங்க.
ஹய்யோ.................
படிச்சுமுடிச்சதும் திறந்தவாயை மூட முடியலை.
அனுபவங்கள்தான் வாழ்க்கை. அதை முழுசுமா
அனுபவிச்சு எங்களுக்குச் சொல்லி இருக்கீங்க.
கலக்கல், போங்க!
முழுவதும் படித்தேன். நிறைய விசயங்கள். தொடர்ந்து தங்கள் துறை சார்ந்த பதிவுகளைப் படிக்க ஆசை. உதாரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்கள் மன நிலைஎப்படியிருந்தது?.. வெற்றி பெற்றபோது... தோல்வியடைந்த போது
2. Many to Many communication ல் (web/blog/groups etc) உள்ள சவால்கள்
பற்றியெல்லாம் அறிய ஆசை.
நன்றி
ஓசை செல்லா
மாலன்,
இதே போல் சாவி அவர்களும் எம் ஜி யாரைப் பார்த்து எழுதினார்.கண்ணாடி,தொப்பி &சட்டையும் போடாமல் முண்டா பனியனுக்குள் லேசான இளம் தொந்தி என்று வர்ணனை கொடுத்திருப்பார்.அவர் தலையையும் வர்ணித்திருப்பார்.
நந்தகுமார் பெற்ற உதவி!நீங்கள் காலத்தில் செய்தது,சாலச் சிறந்தது.
அந்த இந்தி போராட்டத்தின் போது,மதுரை சிந்தாமணியில் சக்கை போடு போட்ட லவ் இன் டோக்யோ படத்தை
பயந்து தூக்கினார்கள் என என் மாமா சொல்வார்.
வலைப் பூக்களில் என்ன ரிப் வான் விங்கிள் மாற்றம்?
அதே சாதி அரசியல் தான்.அதே அசிங்க,மிரட்டல் பின்னோட்டங்கள்தான்!
அன்புடன்
ஸ்ரீனி
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..சுவையான எட்டு.
அருமையான பதிவு...
இந்த பதிவை படிக்கும்போது, நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பெருமிதம், ஆச்சர்யம், கண்ணீர், கோபம், ஆற்றாமை என்று எல்லாவித உணர்ச்சிகளின் கலவையாக மாறிவிட்டேன்...
எனக்கு மட்டும் தான் இந்த நிலையா ?
பின்னூட்டத்துல யாராவது சொன்னா நல்லார்க்கும்...
பல அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி!
என் இடுகையை முதன் முதலில் இணையத்தில் பார்த்தத்ற்கே எனக்கு தூக்கம் வரவில்லை.
ஆனால் தமிழ் எழுத்தை முதலில் இணையத்தில் உங்களுக்கு எப்படி இருந்திருக்குமென நானும் உணர்கிறேன்.
Sir,
Actually I was trying to say like this..
But, Copy error.. Sorry.. Pls ignore my previous comment.
// வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது //
// சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. //
That is really great one! This is what i try say.
Thanks Sir.
மாலன் சார்!
அப்போ நீங்களெல்லாம் மூத்த பதிவர்னுதான் சொல்லணும்!
8 பதிவு நல்லா இருக்கு!
நான் இன்னும் மீதி 4 எழுதணும்!
போன வருஷ பொங்கலப்போதான் உங்க 360 பக்கத்தைப் பார்த்தேன்!
மாலன்! அருமையான 8!!ஆனால் என்னதான் எம்ஜிஆர் சொன்னாலும் என்னால் சத்துணவு திட்டம் ஏத்துக்க முடியாது. மீன் பிடிக்க கத்து குடுக்கனுமே தவிர மீன் குகுக்க கூடாது!
அழைப்பிற்கு நன்றி மாலன் அவர்களே!
அப்பப்ப வந்து எட்டிப்பார்த்திட்டிருந்தவள எட்டுப்போட சொல்லிட்டிங்க! நீங்க சொல்லி போடலேன்னா எப்படிங்க! ஆரம்பிக்கிறேன்!
உங்க பதிவைப் படிக்கையில் சொல்லத் தோன்றியது.....
உம்மைப் போன்றவர்களைப் பற்றிய இது போன்ற தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய நிகழ்வுகள் உம்மால் சொல்லப்படா விட்டால் எம்மால் அறிந்து கொள்ளவே முடியாமல் போயிருந்திருக்கக் கூடும்! எவ்வளவு சுவாரசியமும், ஆச்சரியமும், நெகிழ்ச்சியுமான நிகழ்ச்சிகள்! நன்றி நண்பரே!உங்கள் பதிவிற்கும் அழைப்பிற்கும்!
மாலன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு திசைகள் நடத்திய ஒரு நிகழ்வுக்காக
ஈரோட்டில் பாலகுமாரனோடு தங்களை சந்தித்திருக்கிறேன்.அப்போது கல்யாண்குமார் உடன் இருந்ததாக ஞாபகம்
சுவாரஸியமான எட்டு தான்...நந்தகுமாருக்கு தாங்கள் பத்திரிகை மூலமாக உதவியது போலவே வலைப்பதிவுகள் குறிப்பாக தமிழ் வலைப்பதிவு நண்பர்கள் மூலமாக சிலருக்கு கல்வி உதவியும் சிலருக்கு மருத்துவ உதவியும் வழங்கப் பட்டிருக்கிறது என்பதனை தாங்கள் அறிந்திருக்கலாம்..தமிழ் வலைப்பூக்களை நான் இன்னும் நேசிப்பதற்கு காரணம் இது போன்ற மனதுக்கு நிறைவான உதவி சாத்தியக் கூறுகள் தான் :)
//எம்.ஜி.ஆர். ஏதோ ஓட்டுக்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பரிபாலனம் செய்தார் என்ற அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் மெத்தப் படித்த மேதாவிகள் தங்களுக்குள் செய்திகளை பரப்பி வந்தார்கள். அது ஒரு வாழ்வியல் அனுபவத்தின் விளைவாக எழுந்த சமூகப் புரட்சி என்பதை தங்களது அரசியல் கொள்கைக்காக பின்னுக்குத் தள்ளி தங்களுடைய அறிவுஜீவித்தனத்தை அவ்வப்போது காட்டி வருகிறார்கள்.//
வெண்ணைத்தனமான பின்னூட்டம். காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்துக்கு பெயர் மட்டும் மாற்றியது பெரிய சாதனையா என்ன?
எம்ஜியாரால் தமிழகம் பத்தாண்டுகளுக்கு பின்னால் போனது தான் அவர் செய்த சாதனை!
Malaanji
please put your poem in your blog
இப்படி அலுவலகத்திலேயே அழ வச்சிட்டீங்களே. ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும் சரி, மனம் சஞ்சலப்பட்டாலும் சரி கண் அணை உடைந்து விடுகிறது. நிறைவான பதிவு. இன்னும் நிறைய அனுபவங்களை எழுதுங்கள்.
திரு.மாலன் அவர்களே, தங்களின் திசைகள் வலைப்பக்கத்தைத் தேடிப்போனால் ஒரு மாது திறந்த மார்போடு நிற்கும் படம் காட்ட, தமிழில் டைப் செய்து கூகிளில் தேடி இங்கு வர இத்தனை நாளாயிற்று.
தங்களின் எழுத்துக்களை இனி தொடரந்து படிக்க முடியும் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
தொடருங்கள். வாழ்த்துக்கள்.
தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். //
நம்ப முடியவில்லை ..நம்ப முடியவில்லை.. :)
முதலில் எட்டுக்கான வாழ்த்துகள்.
எனக்கு ஒரு ஐயம். காமராஜர் அவர்கள் கொண்டு வந்த மதியவுணவுத் திட்டத்திற்கும் எம்.ஜி.ஆர் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் சத்துணவுத்திட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஏனென்றால் முதன்முதலில் பள்ளிகளுக்குச் சம்பளம் கெட்ட வேண்டும் என்ற திட்டத்தை திருச்செந்தூரில் வைத்து (ஒரு மூதாட்டியின் வேண்டுகோளால்) மாற்றினாராம். அதாவது இலவசக் கல்வி என்ற திட்டம் வந்ததாம். அப்பொழுது கொண்டு வந்ததா இந்த மதியவுணவுத்திட்டம்? அதில் எம்ஜிஆர் செய்த மாற்றம் என்ன?
அன்புள்ள ராகவன்,
மதிய உணவுத் திட்டதை அறிமுகப்படுத்தியது என்று வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பனகல் அரசரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். 1923ல் சென்னை மாநகராட்சியின் மேயராக அவர் இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளிகளில் அவர் ஒர் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
காமராஜர் முதல்வராக இருந்த போது சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம்)அருகே ஒரு ரயில்வே கிராசிங்கில் கேட் திறப்பதற்காக நிற்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் கறுப்புப்பூனை, கூடவே ஏழெட்டுக் கார்கள், கட்சிக்காரர்கள் என்றெல்லாம் பெரிய பந்தாக்கள் கிடையாது. காமராஜர் தன் காரின் தலையில் சிவப்பு விளக்குக் கூடப் பொருத்திக் கொள்ளவில்லை.
கேட்டில் நின்ற போது, அருகில் இருந்த திறந்த வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து, " படிக்கப் போக வேண்டிய வயதில் மாடு மேய்ச்சுக்கிட்டிருக்கியே, பள்ளிக் கூடம் போகலையா?" என்று கேட்டார். பையனுக்கு அவர் யார் என்று தெரியாது. யாரோ காரில் வருக்கிற பணக்காரப் பெரியமனுசன் புத்தி சொல்ல வந்துவிட்டார் என்று நினைத்தானோ. அல்லது அந்த வயதுக்கே உரிய துடுக்குத்தன்மோ, " மாடு மேய்ச்சா பால் கொடுக்கும். பள்ளிக்கூடும் போனா யார் சாப்பாடு போடுவா? நீ போடுவியா?" என்று கேட்டான் பதிலுக்கு." நீ போடுவியா?" என்பது காமராஜை மிகவும் உறுத்திவிட்டது. சென்னை திரும்பியதும் அதிகாரிகளை அழைத்துப் பேசிப் பள்ளிகளில் மதிய உணவிட உத்தரவிட்டார்.
அப்போது இந்தியா உணவுப் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் திட்டம் ஒன்று PL 480 என்று பெயர்- இருந்தது. அதன் கீழ் உணவுப் பொருட்கள் வந்தன என்று சொல்வார்கள்.பால் பவுடர் மூட்டைகளை நான் பார்த்திருக்கிறேன். ஊருக்குப் பொதுவாக ஒரு சமையல் கூடம் ஏற்படுத்தி, அங்கு சமைத்துப் பள்ளிக்கூடத்திலேயே கொண்டுவந்து பரிமாறுவார்கள்.பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் அந்தத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தினார். முதலில் ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளுக்கு என்று ஆரம்பித்தார். பின்னர் 10 வகுப்பு வரை அதை நீட்டித்தார். எம்.ஜி.ஆர்,காலத்தில் அரசுப் பணம் அதற்கு செலவிடப்பட்டது.
இன்று இந்தியாவில் பல மாநிலங்களில் மதிய உணவுத் திட்டம் இருக்கிறது. குஜராத் 1980ல் ஆரம்பித்தது. கேரளா, மத்தியப் பிரதேசம், ஒரிசா இவை 1995 வாக்கில் ஆரம்பித்தன. நவம்பர் 28, 2001 அன்று எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லா ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சமைத்த மதிய உணவு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுவிட்டது.
மாலன்
காமராஜர் துவக்கிய மதிய உணவு திட்டத்தை திரு.பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் மேலும் சிறப்புர செய்தார்.
எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. புரசைவாக்கத்திலுள்ள முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் திரு பக்தவத்சலம் தலைமையில் காமராஜரே வந்திருந்து பரிமாறிய மதிய உணவு விருந்தில் நானும் மாணவனாக கலந்துக்கொண்டேன்.
மக்கள்திலகம் முதல்வராக இருந்த காலத்தில் அவருடைய தலைமைச் செயலக அலுவலகத்திற்கும் ஆற்காடு சாலை அலுவலகத்திற்கும் பலமுறை செல்ல வேண்டியிருந்துள்ளது. ஆள் உயர தூக்குகளில் உணவு வந்து இறங்குவதையும் பார்த்திருக்கிறேன். ஒரேயொரு முறை நானும் என்னுடன் வந்திருந்த என்னுடைய வங்கி அதிகாரியும் அவருடைய கட்சி காரியதரிசியுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளோம்.
மக்கள்திலகத்தைப் பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்துக்கு எதிர்கருத்து கூற நான் விரும்பவில்லை. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.
மற்றபடி உங்களுடைய எட்டு பதிவு நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்...
அன்புள்ள திரு.ஜோசப்,
>>மக்கள்திலகத்தைப் பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்துக்கு எதிர்கருத்து கூற நான் விரும்பவில்லை. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு<<
ஒவ்வொருவரும் அவருடைய் அனுபவங்களின் அடிப்படையில் தோன்றுகிற கருத்துக்களைத்தான் கொண்டிருக்கிறோம். இதில் சரியான கருத்து தவறான கருத்து என்று ஏதும் இல்லை. நான் இந்தப் பதிவில் கருத்து என்று எதையும் தெரிவிக்கவில்லை. அனுபவங்களை எழுதியிருக்கிறேன்.
உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள். அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
அன்புடன்
மாலன்
Very Nice Malan........
Post a Comment