அருணாவை என்னுடைய நலம் விரும்பும் நண்பர்களில் முக்கியமான ஒருவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் இப்படி ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார் என நான் நினைத்ததில்லை. சங்கடம் என்னவென்றால் நான் என் சொந்த வாழ்க்கையைப் பற்றி பதிவுகளில் எழுதியதில்லை. எழுதுவது இல்லை என்று ஓர் தீர்மானத்துடன் இருந்தேன்.வலைப்பூக்களில் மட்டுமல்ல, எந்த ஊடகங்களிலும் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதுவரைக்கும் ஆறு பேர் என் கதைகளை எம்.பில், பட்டத்திற்காகவும் ஒருவர் முனைவர் பட்டத்திற்காகவும் ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தவறாமல் செய்யும் ஒரு சடங்கு, சொந்த வாழ்க்கை பற்றிய தகவல்களைக் கேட்டு எழுதுவது. ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே உள்ள உறவு அவனது படைப்புக்கள்தான், என் சொந்தக் கதை எதற்கு என்று அவர்களுக்குக் கூட மறுத்திருக்கிறேன். (ஏன் ஒரு எழுத்தாளனின் படைப்பை ஆராய அவனது சொந்த வாழ்க்கை ஏன் தேவைப்ப்படுகிறது என்று அதற்கு ஒரு பேராசிரியர் விளக்கமளித்து நீண்ட கடிதம் எழுதியிருந்தார்)ஆனால் அருணாவின் வேண்டுகோளுக்கு NO சொல்வது சிரமான காரியம். அவருடன் ஜெசிலா வேறு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு எங்கள் குடியிருப்புதான் (Journalists' Colony) தாய்வீடு. அதாவது அவர் என் மகள் போல.
நான் என் சொந்தக் கதையை எழுதத் தயங்குவதற்குக் காரணம், என் வாழ்க்கையில் கடந்து போன முக்கியமான தருணங்களை விவரிக்கும் போது நான் பல பிரபலங்களின் பெயர்களைக் குறிப்பிட நேரும். அதைப் படிப்பவர்களில் சிலரேனும், அலட்டிக்கிறான், பிலிம் காட்றான் என்று எண்ணக் கூடும். எவ்வளவு பணிவாக எழுதினாலும், அகம்பாவம் தொனிப்பதாக சிலர் கருதக்கூடும்.நான், எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களின் மூலம், சில திருப்பங்களுக்கு, மாற்றங்களுக்கு, விதை போட்டிருக்கிறேன் என நிஜமாகவே நம்புகிறேன். நான்தான் செய்தேன் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவற்றில் எனக்கும் பங்குண்டு என்ற ஓரு மனநிறைவு இருக்கத்தான் செய்கிறது. அதை எழுதப் போனால் நான் பீற்றிக் கொள்வதாக எவரேனும் எண்ணக் கூடும்.என் வாழ்க்கை என்னால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படவில்லை.கணியன் பூங்குன்றன் சொன்னதைப் போல, நீர் வழிப்படும் புணை போல (ஆற்றில் மிதந்து செல்லும் கட்டை போல) அது போய்க் கொண்டிருக்கிறது.
தப்பான அபிப்பிராயங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வதென்றால் ஆசிப் மீரானின் எட்டுப் போலத்தான் எழுத வேண்டும். அந்த நகை(ச்சுவை) நடை நமக்குக் கை வராது.
இப்போதும் இந்தத் தயக்கங்களோடுதான் எழுதுகிறேன்.
***
அந்த நெடிய கூடத்தின் சுவர்களில், காந்தி, நேரு,படேல், மெளலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத், பாரதியார், வினோபாவே, வ.உ.சி எனப் பல புகைப்படங்கள் தொங்குகின்றன. அவற்றினிடையே புகைப்படமாக இல்லாமல், தைல ஓவியமாக, சுபாஷ் சந்திர போஸ், நிமிர்ந்து கொடிக்கு சல்யூட் செய்யும் படமும் உண்டு. கீழே கிராமபோனில் இசைத்தட்டு சுழன்று கொண்டிருக்கிறது.அம்மாவும், அம்மாவின் நெருங்கிய தோழியான கமலா சித்தியும் இசைத்தட்டிலிருக்கும் பட்டமாளோடு சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா மடியில் உட்கார்ந்திருக்கும் என்னை ஒரு கையால் பிடித்துக் கொண்டே, மற்றொரு கையால் தனது இன்னொரு தொடையில் தாளம் போட்டுக் கொண்டே பாடுகிறார். 'ஆடுவோமே... பள்ளுப் பாடுவோமே..' நான் அம்மாவைப் போல என் தொடையில் தாளம் போட்டுப் பார்க்கிறேன்.சத்தம் வரமாட்டேன் என்கிறது.
அன்று அம்மாவும் கமலா சித்தியும் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடிப் பாடிப் பழகுகிறார்கள். இசைத்தட்டின் முள்ளை குத்துமதிப்பாக ஒரு இடத்தில் வைத்து விட்டு அங்கு துவங்கும் வரியிலிருந்து ஆரம்பித்துப் பாடுகிறார்கள்.
மாலை, வெயில் இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்ரீவில்லிபுத்தூர் திருமக்குளக்கரையில், தாத்தா தனது மருத்துவமனையில் பயன்படுத்தும் கறுப்பு நிற மேஜையும், மேஜை அருகில் அவரது நாற்காலியில், வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த பாரதி படம் வைக்கப்பட்டு, பாரதிக்கு கையினால் நூற்கப்பட்ட ஒரு சிட்டம் மாலையாக சூட்டப்பட்டிருக்கிறது. தாத்தாவிற்கு அருகில் முன்வரிசையில் என்னையும் ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். அம்மாவைக் காணோம். என் கண்கள் அவர் எங்கே எனத் தேடிக் கொண்டிருக்கின்றன.
திடீரென்று அம்மாவும் சித்தியும்,மைக் முன் தோன்றி, ஆடுவோமே ... என்று ஆரம்பிக்கிறார்கள்.காலையில் கேட்ட அதே பாட்டு. நான் நாற்காலியிலிருந்து நழுவி இறங்கி ஓடிப் போய் அம்மா பக்கத்தில் அவருடன் ஒட்டிக் கொண்டு நின்று கொள்கிறேன். அம்மா, தனது உள்ளங்கையை என் புஜத்தில் வைத்து அழுத்திக் கொண்டு, ஆனால் குனிந்து என்னைப் பார்க்காமல். தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் முழுக்க என்னைப் பார்க்கிறது. நான் அவ்வப்போது நிமிர்ந்து அம்மாவைப் பார்க்கிறேன். ஆனால் அம்மா என்னைப் பார்ப்பதில்லை. நன்கைந்து பாடல்கள் பாடுகிறார்கள். பாடி முடித்ததும் சற்றே குனிந்து என்னை வாரி எடுத்துக் கொண்டு தன் தந்தையார் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குப் பக்கத்தில் வந்தமர்ந்து கொள்கிறார்கள்.
வீட்டுக்கு வந்ததும் அம்மாவைப் போல பாட முயற்சிக்கிறேன். என் மழலையில் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஆடுவோமே. ஆதுவோமே எனத் நெகிழ்ந்து குழைந்து வருகிறது. ராகமோ, சுருதியோ இல்லாமல் குரல் இழுத்த இடத்திற்கெல்லாம் ஓடுகிறது. ஆனால் அம்மா, முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, கை தட்டிக் கொண்டு பாட ஊக்குவிக்கிறார்.வரி எடுத்துக் கொடுக்கிறார்.
அப்படி ஐந்து வயதில் எனக்கு அறிமுகமானவர் பாரதியார். இன்றைக்கு வரைக்கும் அவரே எனக்கு குரு, வழிகாட்டி, நண்பன், விமர்சகன் எல்லாம்.
அம்மாவிற்குள் கடைசி மூச்சுவரை பாரதியார் இழையோடிக் கொண்டிருந்தார்.அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன், இரவு பத்து மணி வாக்கில், சென்னையிலிருந்த என்னை திருநெல்வேலியிலிருந்து தொலைபேசியில் அழைத்து, " இப்போ பட்டம்மா மாதிரியே ஒர்த்தி பாடறாளே கேட்டியோ, யாரு, புதுசா இருக்கே?" என்று நித்யஸ்ரீயைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினார்.
குரு வழிகாட்டி, நண்பன் பட்டியலில், அம்மா போன பின்பு, பாரதியாரை அம்மா என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
***
ஜனவரி 25 1965. பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் ஞாயிறுகளில் சந்தை நடக்கும் திலகர் திடலில் இருந்த இன்னொரு பெரிய ஊர்வலத்தோடு சேர்ந்து கொண்டு, மதுரை வடக்குமாசி வீதியை நோக்கி நகர்ந்தது.இந்தித் திணிப்புக்கு எதிரான கோஷங்களை முழங்கிக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தோம். உச்சி வெயில். கிருஷ்ணன் கோயில் தாண்டி கொஞ்ச தூரம் வந்திருப்போம், எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த யூ.சி.ஹைஸ்கூல் பசங்க திடீரென்று திரும்பி எங்களை நோக்கி திமுதிமுவெனெ ஓடி வரத் தொடங்கினார்கள்.நாங்களும் கலைந்து ஓடத் துவங்கிய போது, போலீஸ் வந்தது.ஓடிக் கொண்டிருந்தவர்களை அடிக்கத் தொடங்கியது. நான் அப்போது பள்ளியிறுதி வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாலும், அரை டிராயர்தான் அணிவது வழக்கம். கல்லூரிக்கு வரும் வரை முழுக்கால் சட்டை அணிந்ததில்லை. (கிரிக்கெட் மாட்ச்சிற்குப் போகிற தருணங்கள் விதி விலக்கு) போலீஸ் வெறிகொண்ட மாதிரி என்னை அடிக்கத் துவங்கியது. பாதுகாப்பில்லாமல் இருந்த என் இடது காலில் சதை கிழிந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. (அந்த 'வீரத் தழும்பு' இன்னமும் இருக்கிறது) என் வகுப்புத் தோழன், கண்ணன், என்னை இழுத்துக் கொண்டு, ராமாயணச் சாவடிக்கு அருகில் உள்ள அவன் வீட்டை நோக்கி ஓடினான். என்னால் வேகமாக ஓட முடியவில்லை. ஒரு காலை இழுத்துக் கொண்டு, அடிபட்ட நொண்டி நாய் போல விந்தி விந்தி ஓடினேன்.
அந்த நாள் வரை என்னை யாரும் அடித்ததில்லை. அப்பாவோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அடித்ததில்லை. நண்பர்களுடனான சண்டை அதிக பட்சம் சட்டையைப் பிடிப்பது வரைதான் போயிருந்திருக்கிறது. ஒரு மூர்க்கத்தனமான வன்முறையை அத்தனை நெருக்கத்தில் அன்றுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.வன்முறையைவிட அடிவாங்கிய அவமானம் மனதை உறுத்தியது. போலீஸ்காரர்களால் நடுத்தெருவில் ஒரு கிரிமினலைப் போலத் தாக்கப்பட்டதாக மனது மறுபடி மறுபடி குமைந்தது. ' அப்படி என்ன தவறு செய்து விட்டேன், என்ன தவறு செய்தேன்னென்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேன். கால் காயத்தைச் சுற்றி வீங்கி, அது விண்,விண் என்று வலிக்கத் தொடங்கியிருந்தது, சம்பவத்தை மறக்கவிடாமல் செய்தது.
மறுநாள் குடியரசு தினம். அப்பா சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டு நாள்களிலும் வீட்டில் தேசியக் கொடி ஏற்றி வைப்பார்.அதற்கென்று வீட்டு மொட்டை மாடியில் ஒரு கம்பம் இருந்தது. அன்று அவர் எழுவதற்கு முன், நான் எழுந்து, பாதி கிழிந்திருந்த ஒரு குடையை முழுசாகக் கிழித்து, கறுப்புக் கொடி செய்து, மொட்டைமாடிக்கு விந்தி விந்தி ஏறிப் போய் அந்தக் கம்பத்தில் ஏற்றிவிட்டேன்,சிறிது நேரத்தில் அப்பா கொடி ஏற்ற வந்துவிட்டார். மேலே கறுப்புக் கொடி பறக்கிறது. " என்னடா இது?" என்றார். நான் பதில் சொல்லாமல் கல்லுளிமங்கன் போல முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு நின்றேன். " அதை கீழே இறக்குடா" என்றார். நான் அசையவில்லை. அவர் கொடியின் கயிற்றுக்குப் பக்கத்தில் வரும்முன் நான் பாய்ந்து அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அவர் ஒன்றும் பேசாமல் திரும்பி விட்டார்.
என்னை இழுத்துத் தள்ளிவிட்டுக் கொடியேற்ற அவருக்கு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. ஆனாலும் அப்படி ஏதும் செய்யாமல் படியிறங்கிப் போனது அவரது பெருந்தன்மை.
அவரது வருத்தம் எனக்குப் புரிந்தது. சுதந்திரப் போராட்ட நாள்களில், மாநிலக் கல்லூரி மாணவனாக, ஜார்ஜ் கோட்டை மீது இந்தியக் கொடியை ஏற்ற முயன்று கைதாகி அலிப்பூர் சிறையில் சில காலம் இருந்தவர். அவர் அப்படிச் சிறையில் இருந்த போதுதான் அவரது அம்மா இரந்து போனார். அவர் தனது தாய்க்கு ஒரே மகன். அந்தக் கொடியேற்றத்திற்காக அவர் கொடுத்த விலை மிகப் பெரிது. இன்று அவரால் அவரது வீட்டிலேயே கொடி ஏற்ற முடியவில்லை.
***
தூத்துக்குடியில் ஒரு நூற்பாலை இருந்தது.(அப்போது அதன் பெயர் ஹார்வி மில், இப்போது மதுரா கோட்ஸ்) தினமும் காலையும் மாலையும் ஊரே திடுக்கிட்டு எழுவது போல சங்கு ஒன்றை ஒலிக்கச் செய்வார்கள். கிருபானந்த வாரியார் கந்த புராணம் சொல்ல வந்திருந்தார்.பத்து நாளாகக் கதை நடக்கிறது. தினமும் சங்கு ஊதப்படும் நேரத்தை அவர் கவனித்து வைத்திருந்திருக்க வேண்டும். சூரபத்மன் வதைப்படலம் சொல்லிக் கொண்டு வருகிறார், போர்க்களக் காட்சி. வீரபாகு எழுந்து போருக்கு அழைப்பு விடுத்து சங்கு எடுத்து ஊதுகிறான், எப்படித் தெரியுமா? என்று சொல்லி நிறுத்தினார். நூற்பாலை சங்கு ஒலிக்கிறது. அப்படி ஒரு special effects உடன் கதை சொன்னார்.
அந்தச் சங்கு, அவர் கதை, நான் படித்திருந்த இடதுசாரி தொழிற்புரட்சி நூல்கள் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டிருக்க 'நாத்திக வாசனையோடு' ஒரு கவிதை எழுதினேன். அதை என் நெருங்கிய நண்பனும் வகுப்புத் தோழனுமான முத்துப்பாண்டி குண்டு குண்டான அவனது கையெழுத்தில் படி எடுத்து 'எழுத்து' பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான். நானும் அவனும் மாலை வேளைகளில் காரப்பேட்டை பள்ளிக்கு அருகில் இருந்த பொது நூலகத்தில் உட்கார்ந்து பத்திரிகைகளை மேய்கிற வழக்கம் உண்டு. அங்குதான் எழுத்துப் பத்திரிகையை முதன் முதலில் பார்த்தேன். சி.சு.செல்லப்பா, தன் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் பணயம் வைத்து புதுக்கவிதையை ஒரு இயக்கமாக்க அதை நடத்திக் கொண்டிருந்தார்.தளைகளையெல்லாம் தகர்தெறிய வேண்டும் என்ற இளமையின் வேகத்தில் இருந்த எனக்கு, இலக்கணத்தை நிராகரிக்கும் புதுக்கவிதை என்ற கருத்தாக்கம் பிடித்திருந்தது.
ஒரு நாள் மாலை கல்லூரியிலிருந்து திரும்பி, சைக்கிளை ஸ்டாண்ட் போடுவதற்குள், அம்மா, கங்கிராட்சுலேஷன்ஸ்' என்று ஒரு போஸ்ட் கார்டை நீட்டினார். செல்லப்பா எழுதியிருந்தார். 'உங்கள் கவிதை கிடைத்தது. இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். ஒரு நல்ல கவிதையை வெளியிட்ட திருப்தி எனக்கு. தொடர்ந்து எழுதுங்கள்'. அம்மாவிற்கு பெருமை பிடிபடவில்லை. 'எத்தனை பெரிய எழுத்தாளர். மணிக்கொடி கோஷ்டி இல்லையோ? உன்னை மதிச்சு லெட்டர் போட்டிருக்காரே! அவருக்குப் பெருமையாம் உன் கவிதையை போட்டதில. என்னடா அப்படி எழுதின!' என்று மகிழ்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தாள். அப்பா வந்தவுடன் அவரிடமும் மறு ஒலிபரப்பு. அப்பா அந்தக் கார்டை வாங்கிப் பார்த்தார். அருகில் இழுத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.
அப்பா பெரிய படிப்பாளி. ஐந்து வயதில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த போது, அங்கிருந்த பென்னிங்டன் நூலகத்திற்கு அவர் போகும் போது என்னையும் அழைத்துப் போய், நூலகருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டுலில் உட்கார்த்தி வைத்துவிட்டு புத்தகம் தேடப் போய்விடுவார். ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவே நான் உட்கார்திருப்பேன். புத்தகம் படிப்பதும் எழுதுவதும், பெருமைக்குரிய செயல் என்ற எண்ணம் மனதில் விழுந்தது அந்தத் தருணத்தில்தான்.
அதே போல இன்னொரு பாராட்டையும் சொல்லியாக வேண்டும். எட்டாம் வகுப்புப் படிக்கும் போது ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தி வந்தேன். ஒருநாள் காலையில் தினமணியில் ஒரு செய்தி படித்தேன். ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் கட்டிட வேலைக்காகத் தோண்டிய போது ஒரு தோல் பெட்டி நிறைய கரன்சி நோட்டுக்கள் கிடைத்ததாகவும், ஆனால் அவற்றைக் கரையான் அரித்திருந்ததாகவும் சொன்னது செய்தி. வெகுநேரம்வரை அந்த செய்தி மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. வகுப்பில் அமர்ந்திருக்கும் போது மனதில் 'கவிதை கொட்ட்த்' துவங்கியது. வகுப்பு பூகோள வகுப்பு. மத்தியதரைக் கடல் சீதோஷணத்தைப் பற்றி ஆசிரியர் விவரித்துக் கொண்டிருந்தார். நான் பின்பெஞ்சில் உட்கார்ந்து என் கையெழுத்துப் பத்திரிகைக்குக் அந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருந்தேன். ஓசைப்படாமல் என்னருகில் வந்த அந்த ஆசிரியர் வெடுக்கெனெ அந்தக் கவிதையைப் பறித்தார். படித்துக் கொண்டே அவரது மேசையை நோக்கி நடந்தார். எனக்கு வெலவெலத்துவிட்டது. இன்று தொலைந்தோம் என்று நினைத்து நடுங்கிக் கொண்டிருந்தேன். அவர் என்னை மேசையருகே வரச் சொல்லி அழைத்தார். அதன் பின் அவர் சொன்னவை என்னால் மறக்க முடியாதவை. " கவிதை எழுதுவது என்பது கடவுள் சில பேரைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வரம். அப்படி வரம் வாங்கி வந்த ஒருவன் நம் வகுப்பில் இருக்கிறான்." என்று சொல்லிஅந்தக் கவிதையை என்னை உரக்கப் படிக்கச் சொன்னார். ஒரு நிமிடத்தில் நான் ஒரு ஹீரோ ஆகிவிட்டேன். என் கையெழுத்துப் பத்திரிகையின் சர்க்குலேஷன் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது1
அன்று அவர் மட்டும் என் நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல ஏதாவது சொல்லியிருந்தால் நான் அன்றே எழுதுவதை நிறுத்தி இருக்கக் கூடும்.
***
கிண்டி ராஜ்பவன் எதிரே, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த என்னை, எதிரே மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சுப்ரமண்ய ராஜு ஓரங்கட்டி நிறுத்தச் சொன்னான். நானும் அவனும் அநேகமாக வாரத்திற்கு மூன்று முறையாவது, தி.நகரில் உள்ள இந்தியா காபி ஹவுஸ் எதிரில் உள்ள பஸ்ஸ்டாண்ட் காம்பவுண்ட் சுவரில் உட்கார்ந்து கொண்டு இலக்கியம், எக்சிஸ்டென்ஷியலிசம் எனப் பல விஷயங்களை 'அரட்டை' அடிப்பதுண்டு. அவன் அப்போது சாவி ஆரம்பித்த பத்திரிகையிலும் எழுதிக் கொண்டிருந்தான். என் கதை ஒன்றையும் வாங்கிக் கொண்டு போயிருந்தான். அதைப் பற்றி ஏதேனும் சொல்லப் போகிறான் என்று நினைத்துக் கொண்டு அவனருகில் போனேன். " சாவி சார் உன்னை நாளைக்கு ஆபீசுக்கு வரச் சொன்னார்" என்றான் மொட்டையாக. " கதை பற்றிப் பேசவா?" அப்போது நாங்கள் எழுதும் கதைகளில் எத்தனை பெரிய ஆசிரியராக இருந்தாலும் எங்கள் அனுமதி இல்லாமல் கைவைக்கக் கூடாது எனப் பிடிவாதமாக இருந்தோம். அதற்காக அவர்கள் அலுவலகம் தேடிப் போய் சணடைகள் போட்டிருக்கிறோம். அந்த மாதிரி ஒரு சண்டை வீடு தேடி வருகிறதோ என நினைத்தேன். " அதெல்லாம் எனக்குத் தெரியாது, வரச் சொன்னார், போய்ப் பார்." " நீ நாளைக்கு அங்கிருப்பியா?" " ஆபீஸ் முடிந்ததும் வருவேன்"
மறுநாள் அமைந்தகரையில் அருண் ஹோட்டல் வளாகத்தில் அமைந்திருந்த சாவி அலுவலகத்திற்குப் போனேன். ராஜுவைக் காணோம். சற்று நேரம் காத்திருந்துவிட்டு, சாவி சார் அறைக்குள் போனேன். மிகுந்த உற்சாகமாக என்னை வரவேற்ற அவர், தனது பத்திரிகைக்கு ஏதேனும் எழுத வேண்டும் என்று சொன்னார். அவரே ஒரு யோசனையும் சொன்னார். வாரம் ஒரு பிரபலமான நபருக்கு 'நறுக்' என்றும், 'சுருக்' என்றும், ஒரு பகிரங்கக் கடிதம் எழுத வேண்டும். அந்த நிமிடத்திலேயே எனக்குத் தமிழன் என்று ஒரு புனைப் பெயரும் சூட்டினார்.
நான் சற்றுத் தயக்கத்துடன் என் கதையைப் பற்றிக் கேட்டேன். அது வந்துரும் சார் என்றார், காஷுவலாக. அதைச் சுருக்கவோ திருத்தவோ கூடாது எனவும், அப்படிச் செய்ய வேண்டி வந்தால் என் அனுமதி பெற வேண்டும் என்றேன். அவர் சொன்னார்: " சார் ஒரு எழுத்தாளனுக்குப் பெயர் கிடைப்பதும் பெயர் கெட்டுப் போவதும் அவன் எழுதும் கதையைப் பொறுத்தது. It is his funeral. நான் ஏன் கவலைப்பட வேண்டும்?"
நான் அரைமனதாக எழுந்து கொண்டேன். அவரது அறைக்கதவைத் திறந்து வெளியே வர இருந்த நேரத்தில் அவர் சொன்னார்: " யார் வேணும்னாலும் கதை எழுதலாம்.மாலனும் எழுதலாம். ஆனால் மற்றதை எல்லாராலும் எழுத முடியாது. ஆனால் மாலனால முடியும். யோசிக்கிற ஆளு நீங்க, யோசிச்சுப் பாருங்க உங்களுக்கே தெரியும்".
அவர் முதல் சந்திப்பிலேயே என் மீது வைத்த நம்பிக்கை என்னை அசர வைத்தது. பகிரங்கக் கடிதங்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்டுரைகள், தலையங்கங்கள், உலக விவகாரங்கள், கேள்வி பதிலகள் (தமிழன் பதில்கள் என அவை வெளியாயின. ஒருநாள் ம.பொ.சி. போன் செய்து செங்கோல் பத்திரிகையில நான் தமிழன் என்ற பெயரில் எழுதியிரூக்கேன் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது, பெயரை மாற்றிக் கொள்ள வேண்டுமா? என்றேன். நீ எழுது ராஜா, நாந்தான் இப்ப எழுதலையே என்றார்) எனப் பல எழுதினேன். கதைகளும் கூட. ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்கள் சொன்னேன்.
சாவி இதழ் ஆரம்பித்து 52 வாரங்கள்- ஒரு வருடம்- முடிந்த போது சாவி 10 வாரங்கள் ஐரோப்பாவிற்குச் சுற்றுப் பயணம் கிளம்பினார். அதற்கு முன் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், சில வழக்கமான விஷயங்களுக்குப் பின், " நான் வெளிநாடு போயிருக்கும் போது நம் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை வகிக்கப் போகிறவரை இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், அவருக்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்" எனச் சொல்லி என்னை அழைத்து அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். நான் திகைத்துப் போனேன். " சார்.. என்னால.." " முடியும் மாலன்,முடியும்" என்று தோளில் அழுத்தி உட்காரச் சொன்னார். அன்று வெள்ளிக் கிழமை. ஆபீசில் பூஜை முடிந்து, தேங்காய், பழம், பூ கொண்டு வந்து எடிட்டரிடம் கொடுப்பார்கள். அன்றும் கொண்டு வந்தார்கள். என்னைக் கையைக் காண்பித்து 'எடிட்டரிடம் கொடுங்கள்' என்றார்.
எனக்கு அப்போது முப்பது வயது கூட நிரம்பியிருக்கவில்லை.பத்திரிகை உலகில் முழு நேர அனுபவம் என்று எதுவும் கிடையாது.
திரும்பி வந்த பின் ஒருநாள், நாம் தில்லி போகிறோம் மாலன் என்றார். என்ன விஷயமாக என்று கேட்டேன். நான் புதிதாக இன்னொரு பத்திரிகை ஆரம்பிக்கிறேன். ரிஜிஸ்திரேஷனுக்கு மனுச் செய்யப் போகிறோம். அந்தப் பத்திரிகைக்கு நீங்கள்தான் ஆசிரியர் என்றார். நீங்க அடிக்கடி சொல்வீங்கள்ல, தமிழ்ப் பத்திரிகைகள் இளைஞர்களைப் பிரதிபலிக்கவில்லை என்று, இந்தப் பத்திரிகையை இளைஞர்கள் பத்திரிகையாகவே நடத்துங்கள் என்றார். ஆசிரியர் குழு கூட்டத்தில் தமிழ்ப்பத்திரிகைகள், திரும்பத் திரும்ப ஆறு எழுத்தாளர்களது தொடர்கதைகளையே மாற்றி மாற்றிப் பிரசுரித்து வருகின்றன (லஷ்மி, சுஜாதா, சிவசங்கரி, ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை, பி.வி.ஆர்) என நான் ஆசிரியர் குழு கூட்டங்களில் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.
அந்தப் பத்திரிகைதான் திசைகள். அது தமிழ் எழுத்துலகிற்குப் பலவகையான திறமைகளை அறிமுகப்படுத்தியது. இன்று பிரபலமாக அறியப்படும் சில பெயர்கள் அந்த நர்சரியில் பயிரானவை. பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், நளினி சாஸ்திரி, போன்ற எழுத்தாளர்கள், சுதாங்கன் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் (முன்னாள் அவுட்லுக்) பானுமதி ராஜாராம் (இந்தியா டுடே) சாருப்பிரபா சுந்தர் (குங்குமம்) போன்ற பத்திரிகையாளர்கள், வசந்த், கல்யாண்குமார் போன்ற திரைப்பட இயக்குநர்கள், மருது, அரஸ் போன்ற ஓவியர்கள் எனப்பல உதாரணங்கள். அந்தப் பத்திரிகை தோன்றி, மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் அது இன்னும் பலரது நினைவில் தங்கிவிட்டது.
****
இப்போதைக்குப் பாதிக் கிணறு தாண்டியிருக்கிறேன். அடுத்த நாலு நாளை மறுநாள். அதாவது இந்த சுய புராணம்..... தொடரும்.
2 days ago
29 comments:
உங்களின் பின்னோக்கிய பயணம் சுவாரஸ்யமாக இருக்கிறது......
நீங்கள் உயரத்தில் இருந்தாலும், இணையத்திற்கே உண்டான 6-8 விளையாட்டுக்களிலும் ஈடுபடுவது,
தங்களது சிம்பிளிசிட்டியைக் காட்டுகிறது...
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக...
எட்டு போட்டதற்கு முதல் நன்றி.
வலையுலக பதிவுகள் கொஞ்சம் நீளமாக இருந்தால் அப்புறம் படிச்சிக்கலாம்னு தள்ளிப் போடுவதுதான் வழக்கம். இல்லாவிட்டால் படியெடுத்து வீட்டுக்கு போய் சாவகாசமா படிப்பேன். ஆனால் சிலரது எழுத்தில் மட்டும் ஒரு வகை ஈர்ப்பின் காரணமாக மற்ற எல்லா வேலைகளையும் (அலுவலக வேலை உட்பட) தள்ளிப் போட்டு படிக்க சொல்லும், உங்கள் எழுத்தும் அவ்வண்ணமே. தலையில் பனிக்கட்டி வைக்க சொல்லவில்ல்லை உண்மையில் பெருமிதப்படக் கூடிய நிகழ்வுகள். உங்கள் சுயசரிதை, புத்தகமாக வந்துள்ளதா? இல்லையெனில் விரைவில் வெளியிடுங்கள், பலருக்கு பயன்படும். நல்ல பதிவுக்கு நன்றி.
மிக்க நன்றி மாலன். இது...இதைத்தான் எதிர்பார்த்தேன் :-)
அந்தக் கணியன் பூங்குன்றனார் வரிகள்தாம் எவ்வளவு உண்மை!
அடுத்த நாலையும் போட்டுவிடுங்கள்!
அருணா
Very interesting!
And your writting shows the deep love for your mother,she was the one who instilled in you the passion for literature and Bharthi.
Brillent maalan Sir.
Looking forward to more.
சுவாரசியமான எட்டு..
தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2007/07/03/ettu/
நீங்கல்லாம் நல்லாதான் எட்டு போடுவீங்க, நம்ம பதிவு பக்கமெல்லாம் வந்து ஒரு எட்டு பாக்கறது! குத்தம் சொன்னா திருத்திப்போம்ல!
இது போன்று சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வது தற்புகழ்ச்சி இல்லை மாலன். அந்த கவலையே வேண்டாது அடுத்த பாகத்தைப் போடுங்கள்.
ஜனவரி,25,1965
தாக்கப்பட்டது,தமிழகத்தின் தலைவிதி
என்று இன்று நினைக்கத் தோன்றுகின்றது...
அய்யா,
நல்ல சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்..
இரசித்து படித்தேன்..
நன்றி
பிரமாதம் மாலன் சார், எந்த இண்டர்வெல் ப்ளாக்கும் இல்லாமலே ஆர்வம் அதிகமாகிவிட்டது.
எனக்கு இது உங்கள் சுய புராணமாகவோ, பீற்றிக்கொள்வதாகவோ தெரியவில்லை...
1. அம்மாவின் பாடல் உங்களுக்கு கொடுத்த ரசிக்கும் திறன்
2. அப்பாவின் தேசப்பற்று கொடுத்த மனோதிடம்
3. பூகோள (புவியியல்) ஆசிரியர் கொடுத்த ஊக்குவிப்பு
4. சாவி ஆசிரியர் உங்கள் மேல் வைத்த அமோக நம்பிக்கை
இவற்றில் இழையோடும் உங்கள் தன்னடக்கம்.. இவையே.
அடுத்த பாதிக்கிணற்றுக்காக நானும் வெயிட்டிங்....
Super Sir
நீங்கள் என்னதான் சொன்னாலும் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் நிச்சயம் ஒரு celeberity-தான்.
உங்கள் அனுபவங்களை படிக்கும் பொழுது அதே காத்திரத்துடன் (intensity) அவைகளை உணர்கின்ற மாதிரி இருக்கிறது.
அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...
KAலேட்டாக போட்ட எட்டுன்னாலும்,
லேட்டஸ்ட்டா,மிக அழகாக,மிக சிறப்பாகத்தான்
வந்திருக்கு
அனுபவசாலிகள் மற்றும் பிரபலங்களின் எட்டு படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை நிரூபித்து இருக்கீங்க. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க...
மாலன்,
உங்களைப் போல உள்ளவர்கள் எட்டு போட்டால் எத்தனை சுவாரசியமாக இருக்கிறது..!!!
பாலகுமாரனின் முன்கதைச் சுருக்கத்தில் சில சம்பவங்களை படித்த நினைவு...
தொடருங்கள்.
என்றென்றும் அன்புடன்
ரொம்ப சுவாரசியமான விஷயங்கள்.
ஒரு எட்டுப் போதவே போதாது. இன்னும் பல எட்டுப் போடணும் நீங்க.
போடுவீங்கதானே?
//அந்தப் பத்திரிகைதான் திசைகள். அது தமிழ் எழுத்துலகிற்குப் பலவகையான திறமைகளை அறிமுகப்படுத்தியது. இன்று பிரபலமாக அறியப்படும் சில பெயர்கள் அந்த நர்சரியில் பயிரானவை. பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், நளினி சாஸ்திரி, போன்ற எழுத்தாளர்கள், சுதாங்கன் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் (முன்னாள் அவுட்லுக்) பானுமதி ராஜாராம் (இந்தியா டுடே) சாருப்பிரபா சுந்தர் (குங்குமம்) போன்ற பத்திரிகையாளர்கள், வசந்த், கல்யாண்குமார் போன்ற திரைப்பட இயக்குநர்கள், மருது, அரஸ் போன்ற ஓவியர்கள் எனப்பல உதாரணங்கள். அந்தப் பத்திரிகை தோன்றி, மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் அது இன்னும் பலரது நினைவில் தங்கிவிட்டது.//
மாலன் ஸார்.. தங்களுடைய திசைகள் 25 ஆண்டுகளுக்கு முன் மறைந்து போயிருக்கலாம். ஆனால் வாழையடி வாழையாக வாழும் குடும்பம் என்ற பெயருக்கேற்ப அன்று நீங்கள் வளர்த்த வாரிசுகளின் தொடர்ச்சியாகஇ இன்றைக்கு மூன்றாம் தலைமுறையும் பத்திரிகையியலில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். தமிழ் பத்திரிகையாளர்களில் உங்களுடைய முகவரி தாங்கிய பேரப்பிள்ளைகள் அதிகம். பிள்ளையார் சுழி போட்ட திரு.சாவி ஐயா அவர்களையும், 'திசைகள்' தொடங்கி பலருக்கும் திசை காட்டிய உங்களையும் என்றென்றும் நாங்கள் நன்றியோடு நினைத்திருப்போம்..
ஆச்சரியம் என்னவெனில் நீங்கள் எட்டு போட்டது. வலைப்பதிவுகள் தறிக்கெட்டு போனாலும் அவ்வப்போது சில சுவாரஸ்யங்கள் வலைப்பதிவு அனுபவங்களை இனிமையாக்கி விடுகின்றன. தொடருங்கள்... உங்களை அறிந்துக் கொள்ள எங்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு...
மாலன் சார்,
வாசிக்க மிக மிக மிக சுவாரசியமாக இருந்தது.
It also triggered a walk down my memory lane (school/college days... Nostalgia!) பழைய நினைவுகளை அசை போடுவது (பல சமயங்களில்!) இனிமையான ஒன்றே.
அடுத்த நான்கிற்கு காத்திருக்கிறேன்!
எ.அ.பாலா
வணக்கம், மாலன்.
சுவையாக இருக்கிறது உங்கள் எட்டு. மிச்சத்தையும் படிக்க ஆவல்.
அன்புடன்,
-காசி
இனிமையான எட்டு. கனவுகள் வேண்டாம் பெண்ணே நிஜங்களின் நிழல்கள் இரசிக்க நீயேனும் கற்றுக்கொள்க என்ற கவிதை தாங்கி வந்த திசைகளையும் அந்த கனவு பெண்ணின் முகம் தாங்கிய அட்டையையும் மறக்க முடியுமா? அருணாவிற்கு நன்றி.
நீளமான இந்தப் பதிவைப் பொறுமையாகப் படித்துப் பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தேசிப் பண்டிட்டிற்கு.( அவர் தளத்தில் இணைப்புக் கொடுத்ததற்காக)
ஜெசிலா சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீளம் வாசிப்பின் எதிரி. முதலில் வெறுமனே 8 படங்களை மட்டும் போட்டுவிட்டு அந்தப் படங்களுக்குக் குறிப்பு எழுதிவிட்டு சும்மா இருந்துவிடலாமா என்றுதான் நினைத்தேன். ஆனால் அது மரியாதையாக இருக்காது என்று நினைத்து ஆரம்பித்தேன். கை இழுத்துக் கொண்டு போய்விட்டது. சுயசரிதை எதுவும் எழுதவில்லை. எழுதும் எண்ணமும் இல்லை. பொழைச்சுக் கிடந்தா ஒரு நாவல் எழுதலாம், கொஞ்சம் autobiographicalஆ?
காசி எவ்வளவு நாளைக்கப்புறம் உங்கள் பெயரைப்பார்க்கிறேன்.உங்கள் வருகைக்கு நன்றி.
பத்மா ஞாபக சக்திக்கு என்ன சாப்பிடுகிறீர்கள்? அந்தக் கவிதைக்கு 35 வயசாச்சு. இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களே, நன்றி.
உண்மைத் தமிழன்,பத்திரிகைத்துறை என்பது வாழையடி வாழையாக வருகிற ஒரு பாராம்பரியம்.சுதேசமித்ரன் ஆரம்பிக்கப்பட்டது 1885ல்.ஒரு பெருமைக்குரிய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் நாம்.
எல்லோருக்கும் மீண்டும் நன்றி
அன்புடன்
மாலன்
i want to recall something of my adolescent yrs associated with thisaigal.i was in my mid teens i think?!!!!u had written a story of two young people trying to bring about a revolution and how they do it thru a radio station etc.i was very idealistic back then and was so impressed ,and i think i was a bit infatuated.!!!sorry for the declaration. i had no idea who you were how you looked etc. i was a tomboyish kid in a rural place.. a total misfit. so your writings made my life livable to some extent.
today technology had made me write to my teen idol!!!how funny.
i hope i have not said anything that would be a problem for you. if so please edit and my apologies.
உள்ளேன் ஐயா!
நன்றி..
வணக்கம் மாலன்!
எனக்கு இது நாள் வரை உங்கள் எழுத்துகள் மீது எந்த ஒரு பிடிப்பொ நம்பிக்கையோ இருந்தது கிடையாது, உங்களை மட்டும் அல்ல இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அந்த பட்டியலில். ஆனால் உங்கள் எட்டுப்பதிவை படித்த பிறகு ,எனது நிலைப்பாட்டினை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமோ என்று தோன்றுகிறது. இது நாள் வரையில் சன் டி.வியில் தங்களை காணும் பொழுது எல்லாம் வந்துடாங்கய்யானு தான் சலித்துக்கொள்வேன் :-))
அந்த ஜனவரி 25-ம் தேதி என்னவோ ஒரு நெருக்கத்தைக் கொடுத்தது போன்ற ஓர் உணர்வைத் தந்தது.
Dear Maalan,
Vanakkam,
I read this and felt very glad.
5 years ago one aged man 82+ hailing from Jaffna, told me in the Seychelles islands about THISAIGAL. I am an ardent reader of your writings.
warm Regards and good wishes,
srinivasan at Perth, Australia.
Dear Maalan Sir,
I read your writings.
Very interesting.
5 years ago on aged 82+ man from Jaffna told me in the Seychelles islands about your THISAIGAL. I saw your content in the net as well and has been consistently looking for your QUALITY stuff.
tHANKS AND WARAM REGADS,
affly,
Srinivasan V at Perth, Australia.
Post a Comment