Wednesday, August 15, 2007

அறுபதாண்டு சுதந்திரம்: அடிப்படையான ஓர் கேள்வி

இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த வாசகத்தை எத்தனையோ அரங்குகளில், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ பேர் வாயிலாகக் கேட்டுவந்திருக்கிறோம். வாக்காளர்களின் எண்ணிக்கை என்ற கோணத்தில் பார்த்தால் இது உண்மைதான். ஆனால் ஆட்சியில் மக்களுக்கு உள்ள பிரதிநிதித்துவத்தின் அளவு என்ற கோணத்தில் பார்த்தால், 1992க்கு முன்வரை, இந்தியா தனது ஜனநாயகத்தைக் குறித்துப் பெருமை கொள்ள முடியாது. அன்று இந்தியாவின் மக்கள் தொகை என்பது 80 கோடிக்கு அருகில் இருந்தது. அப்போது, நாடாளுமன்றம், மாநிலச் சட்ட மன்றங்களில் இருந்த இடங்கள் இவை எல்லாமுமாகச் சேர்ந்து மக்களால் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டாது. அதாவது 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வெறும் 5000 பேர். அதாவது 0.000625 சதவீதம்!

இந்திம மக்கள் ஆட்சிகளின் மீதும் அரசியலிம் மீதும் தொடர்ந்து நம்பிக்கை இழந்து வருவதற்கு, இந்திய ஜனநாயகம் இப்படி கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்ததும் ஒரு காரணம்.

கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்த நம் நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகத்தை 1992ல் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசியல் சட்டத் திருத்தம் மாற்றி அமைத்தது. 73வது அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புக்களை கிராம அளவில் அமைவதை உறுதி செய்தது.அது மட்டுமல்ல, அந்த அமைப்புகளில் முன்றிலொரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவும், தலித்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் மூலம் பஞ்சாயத்து உறுப்பினர்களும் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்படவும் அது வகை செய்தது.இவை ஏதோ கருணையின் பேரில அளிக்கப்படும் சலுகையாக அல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமையாக அளிக்கப்பட்டன. அதாவது இவற்றை இன்னொரு அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம்தான் மாற்றவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ முடியும். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பானமை வேண்டும்.

இந்தத் திருத்தத்தின் காரணமாக, சுமார் 30லட்சத்திற்கும் அதிகமாக பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவற்றில் 10 லட்சம் பேருக்கு மேல் பெண்கள். கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு மேல் தலித்துகள்.
நெடுங்காலமாக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, ஓரம் கட்டப்படிருந்த மனிதர்களை ஆளும் பொறுப்புக்களுக்கு (governance) சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கு அரை நூற்றாண்டு காலமாகியது. கிராம சுயராஜ்யமே பூரண சுயராஜ்யம் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி பலமுறை பேசிவந்திருந்த போதிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வரையபட்டபோது கிராம அளவிலான பஞ்சாயத்துக்கள் பற்றி, அந்த வரைவில் ஏதும் குறிப்பிடபடவில்லை. அதைச் சுட்டிக்காட்டி, ராஜேந்திர பிரசாத் டாக்டர்.அம்பேத்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் காரணமாக, அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஓர் விவாதம் எழுந்தது.காந்தியவாதியான கே. சந்தானம் ஒரு வரைவுத் திருத்தத்தை முன் மொழிந்தார். அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் பஞ்சாயத்து பற்றிய கருத்துக்கள் அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றது. வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்குக் கிடையாது. உதாரணம்:மதுவிலக்குஇந்த நிலையை 73வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மாற்றியது. ஆனால் அதை நிறைவேற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்த ராஜீவ் காந்தியின் எண்ணத்தில் உருவான பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அவரே பிரதமராக இருந்த போது 1984ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார். ஆனால் 64வது சட்டத்திருத்தம் என்றழைக்கப்பட்ட அது, மாநிலங்களவையில் அந்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. அப்போது ஆளும் கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.
ராஜீவ் மறைவுக்குப் பின் நரசிம்மராவ் அரசு மீண்டும் அதை அறிமுகப்படுத்தியது. அயோத்தி பிரசினை காரணமாக ஏற்பட்டிருந்த சந்தடியில் அதிக விவாதமின்றி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுடையது. ஒவ்வொரு மாநிலமும் அதை நடைமுறைப்படுத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஒன்றை - உறுதி செய்யும் சட்டமாக, Conformatory legislation- இயற்ற வேண்டும். இந்தியாவில் கடைசியாக அந்தச் சட்டத்தை இயற்றிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும், அதிகாரப் பரவல் ஏற்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்த திராவிட இயக்க அரசுகள், தங்களிடமிருந்த அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டின.

ஆனால் இது திராவிடக் கட்சிகளின் போக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள பல கட்சிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. பீகாரில் லாலு பிரசாத் அரசு இருந்த போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாமலேயே ஊராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் ஆளும் அசாமில், ஊராட்சிகளின் பதவிக்காலமான ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகு, மாநில அரசு, ஓர் அரசாணையின் மூலம் ஊராட்சியின் அதிகாரங்களை அதிகாரிகள் வசம் மாற்றிவிட்டு, தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, குவாஹாத்தியில், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தன்னார்வ அமைப்புக்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். பின் கூட்டாக ஊராட்சித் தேர்தல்களை நடத்தக் கோரி ஒரு மனு தயாரித்தோம். அதை முதல்வரை சந்தித்து அளிப்பதற்காக நேரம் கேட்டோம். முதல்வர் அலுவலகம் அவரை சந்திப்பது கடினம், மனுவை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவரிடம் சேர்த்துவிடுவதாகத் தெரிவித்தது. எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் டிரிப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் மறுநாள்,
எங்கள கருத்துக்களை முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட பின், ( http://www.assamtribune.com/scripts/details.asp?id=apr1207/at01)
முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்கிடையில் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தோம். நீதிமன்றத் தலையீட்டின் பேரில் அக்டோ பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவாகியிருக்கிறது. அடித்தள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக இவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது.

காஷ்மீரில் நிலமை அசாமின் நிலைமைக்கு சற்றும் குறைந்ததல்ல. அங்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.நான் மே மாதம் ஸ்ரீநகர் சென்று முதல்வரைத் தவிர எல்லா அரசியல்கட்சித் தலைவர்களையும் சந்தித்தேன். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும், ஆட்சியில் பங்கு வகிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) நிறுவனரும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான, முப்தி முகமது சயீத்தையும் சந்தித்து, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து வாதிட்டேன். பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. மீண்டும் ஜூலை மாதம் 24ம் தேதி ஸ்ரீநகர் சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தேன்.கிரேட்டர் காஷ்மீர் போன்ற செல்வாக்குள்ள ஆங்கில நாளேடுகளும் உருது ஏடுகளும் என் பேட்டியை பெரிய அளவில் பிரசுரித்திருக்கின்றன. (http://www.greaterkashmir.com/full_story.asp?Date=25_7_2007&ItemID=40&cat=21)
ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். வானத்து நட்சத்திரங்களைப் பறித்துத் தரும்படி கேட்கவில்லை, அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமைகளைப் பெறத்தான் இத்தனை போராட்டம்.

அன்று மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி தயக்கம் காட்டியது. இன்று ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற அவரது கட்சியின் அரசுகளே தயங்குகின்றன.

மக்கள் ஜனநாயகம் பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட்களின் ஆட்சியில், சிங்கூர் நந்திகிராம் ஆகிய இரண்டு இடங்களிலுமே, அங்கு அமைக்கப்படும் டாடா தொழிற்சாலைகள் பற்றி அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளோடு விவாதிக்கப்பட்டு ஒப்புதல் ஏதும் பெறப்படவில்லை.இது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உருதி மொழிகளுக்கு முரணானது. அரசமைப்புச் சட்டத்தின் 243G பிரிவு, மூன்று நிலைகளிலும் உள்ள பஞ்சாயத்துக்கள், தங்கள் பகுதியின் 'பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்குமான' திட்டங்களை வகுக்க வேண்டும் என அதிகாரமளிக்கிறது. தங்கள் பகுதிக்கான வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதில் ப்ஞ்சாயத்துக்களுக்கான உரிமையை அங்கீரிக்கும் பிரிவு இது. ஒரு கிராமத்தில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய கிராமசபைக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்துத் திட்டமிடும் உரிமை உண்டு. மேற்கு வங்கத்தில் இயற்றப்பட்டுள்ள பஞ்சாயத்துக்கள் சட்டம் இன்னும் ஒரு படி மேலே போய், வார்டுகள் தோறும் அங்குள்ள வாக்காளர்களைக் கொண்டு கிராம சன்சாத் என்ற சபைகளை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை உருவாக்கக் கணிசமான அதிகாரங்களை அளித்துள்ளது. இத்த்னைக்குப் பிறகும், மாநில அரசு, பஞ்சாயத்துக்களிடமோ, மக்கள் அங்கம் வகிக்கும் கிராமசபைகளிடமோ கலந்து விவாதிக்காமல், தன்னிச்சையாக அங்கு தொழிற்சாலைகளைத் திணிக்க முற்பட்டது.

கர்நாடகத்தில் ஆளும் ஜனதா-பாஜக கூட்டணி அரசு, அங்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பஞ்சாயத்து அமைப்பில் மக்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டப் பிரிவுகளைத் தூக்கி எறியும் விதமாக அண்மையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் நல்லகாலமாக, ஆளுநர் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து அதைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய அடித்தள ஜனநாயகம், அறுபதாண்டு சுதந்திரத்திற்குப் பின்னும் ஒரு கனவாகவே இருப்பதற்கு என்ன காரணம்?

ஜனநாயகத்தின் ஒர் அம்சமான தேர்தலில் (ஜனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல) முக்கியப்பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லை என்பது மட்டுமல்ல, அவை ஜனநாயகத்தை தங்கள் வசதிப்படி பயன்படுத்திக் கொள்ளவும் முற்படுகின்றன. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இந்தக் கட்சிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதே இதற்கு சாட்சி. நேற்று எதிர்கட்சியாக இருந்த போது நாள்தோறும் வெளி நடப்புச் செய்தவர்கள் இன்று ஆளும் கட்சி. நேற்று ஆளும் கட்சியாக இருந்தவர்கள் இன்று எதிர்க்கட்ட்சியாக மாறியதும், அவர்களும் அவ்வப்போது வெளிநடப்புச் செய்கிறார்கள். காரணம் இரண்டு பேருக்கும் ஒன்றுதான்: சட்டசபையில் பேச அனுமது மறுக்கப்படுகிறது.நேற்று எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் சட்டமன்றத்திற்குள் முக்கிய விவாதங்களின் போது கூட வந்ததில்லை.இன்றும் அதே நிலைதான். ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆட்கள் மாறியிருக்கிறார்கள் ஆனால் காட்சிகள் மாறவில்லை.

சட்டமன்றத்திற்குள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் முழுக்க முழுக்க அங்கு பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தது. அந்தக் கடமையை அரசியல் கட்சிகள் எவ்விதம் நிறைவேற்றுகின்றன? சட்டமன்றத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்கள் கடமை தங்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புவதோடு முடிந்துவிடுகிறது. அதை உற்சாகத்தோடும், கடமை தவறாமலும் அவர்கள் செய்துவருகிறார்கள்.

அண்மையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடாவின் டைட்டானியும் டை ஆக்சைட் ஆலை தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டு அதை ஓர் உயர் நிலைக் குழு விசாரிக்கும், விசாரணை செய்தியாளர்கள் முன் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. வரவேற்க வேண்டிய, ஜனநாயக ரீதியில் ஆன நடைமுறை. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் போது சென்னை நகரம் வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது. அதை விவாதிப்ப்பதற்கான உள்ளரங்கக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

இருவாரங்களுக்குப் பின் நடந்த கூட்டம், "வன்முறைச் சம்பவங்கள் குறித்து எல்லா நாளிதழ்களும் படத்துடன், சம்பவ இடத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன.அதையே முதல் நிலை ஆதாரமாகக் கொண்டு, அரசு ஓர் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை மக்கள் பங்கேற்கும் வகையில், ஊடகங்கள் முன் நடைபெற வேண்டும்" என்ற என் கருத்தை ஒரு தீர்மானமாக ஏற்றுக் கொண்டது. மறுநாள் முரசொலியில் முதல்வர் என்னைத் தனிப்பட விமர்சித்து எழுதினார். அந்தத் தீர்மானத்தை அரசு உதாசீனம் செய்தது.

உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை தலைவிரித்தாடியது. அதை உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டியது.கூட்டுறவுத் தேர்தலில் வன்முறைகள் நடந்தன. அவற்றை கூட்டணிக் கட்சிகள் கண்டித்தன. ஆனால் அப்போதெல்லாம் அதைக் குறித்து விசாரிக்க முன்வராத திமுக அரசு, டாடா ஆலை குறித்து கருத்தாய்வு நடத்த முன் வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றன.

"கலைஞர் மட்டும் காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியிருந்தால், ஒரு தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ, அதிகபட்சம் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ முடிந்து போயிருப்பார். அதைத் தாண்டி அவரால் வளர்ந்திருக்க முடியாது" என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரிடம் ஒருமுறை சொன்னேன். அவர் அதிர்ந்து போய் "என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?" என்றார். " உங்கள் கட்சியில் உயர்பத்விகளில் இருப்பவர்கள் யார்? யோசித்துப் பாருங்கள். ஒன்று அவர் மெத்தப் படித்தவராக, அயல்நாடுகளில் சென்று படித்தவராக இருக்க வேண்டும். அல்லது நிறைய நிலபுலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது பெரிய வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும். அல்லது பஸ் டிரான்ஸ்போர்ட், நூற்பாலை, ஏற்றுமதித் தொழில், செய்பவர்களாகவோ, ஊரில் நான்கைந்து கடைகள் வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்/ கலைஞரிடம் இவை ஏதும் கிடையாது. அதுவும் தவிர செயல்திறனும் மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ள ஒருவரை உங்கள் கட்சியில் வளரவிடமாட்டீர்கள். உங்கள் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை அவ்வப்போது சமன் செய்கிற முயற்சியில் ஆர்வமும் கமிட்மெண்டும் உள்ள ஒருதொண்டரை முடக்கி வைக்கத் தயங்க மாட்டீர்கள். உங்களைப் பொருத்தவரை உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சித் தேர்தல்களை நடத்துவது அல்ல. கோஷ்டிகளை சமனப்படுத்துவது."

அண்ணா தலைமையில் திமுக இருந்த காலத்தில், காங்கிரசிற்கும் திமுகவிர்கும் இடையே இருந்த பெரும் வித்தியாசம் இந்த உள்கட்சி ஜனநாயகம்தான். திமுகவின் கிளைக்கழகத்திலிருந்து மாவட்டக் கழகம் வரை உள்கட்சித் தேர்தல்கள், கட்சி மேலிடத்தின் தலையீடு இல்லாமல் நடந்த காலம் ஒன்றுண்டு. திமுக இளைஞர்களை ஈர்த்ததற்கு அது ஒரு முக்கிய காரணம். ஆனால் இன்று திமுக உள்கட்சி ஜனநாயகத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.இப்போது அங்கு ஜனநாயகம் நிர்வகிக்கப்படுகிறது.யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற முன்தீர்மானித்த முடிவின்படி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் அல்லது குலத்தில் பிறப்பதனாலேயே ஒருவருக்கு சில உரிமைகளும் சலுகைகளும் உண்டு, தகுதிகள் உள்ள ஒருவர் வேறு குலத்தில் பிறந்திருந்தால், அவருக்குத் தகுதி இருந்தாலும் அந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது, என்ற கருத்தாக்கம்தான் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால் அந்தக் கருத்து அநீதியானது என்ற நோக்கில் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து எழுட்சியுடன் போராடி வளர்ந்தது திமுக. ஆனால் இன்று, ஒருவர் கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர் என்ற தகுதி ஒன்றே ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராகவோ, மத்திய அமைச்சாரகவோ போதுமானது என்று அந்தக் கட்சியின் மேலிடம் கருதுகிறது. அதாவது, பகுத்தறிவு இயக்கமாக அரும்பிய திமுக இன்று வர்ணாசிரம தர்மத்தை வேறு ஒரு வடிவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

உட்கட்சி ஜனநாயக விஷயத்தில், திமுகவை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை. அநேகமாக இன்று எல்லா அரசியல்கட்சிகளும் இப்படித்தான் இருக்கின்றன. இன்று காங்கிரசிலோ, திமுகவிலோ, அதிமுகவிலோ, பா.ம.க.விலோ ஒருவர் உயர் பதவிக்கு வர வேண்டுமானால், கட்சித் தலைமைக்கு மட்டுமல்ல, கட்சித் தலைமயின் குடும்பத்திற்கும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியோ, ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருக்கிறது. அதன் தலைமையை அதுதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று கலந்து பேசி, கருத்தொருமித்த முடிவுன் அடிப்படையில் கட்சிப்பதவிகளைத் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கும் போது சீனியாரிட்டிக்கு அதிக மதிப்பு.

இப்படிப்பட்ட கட்சிகளிடமும், தலைவர்களிடமும்தான் நாம் ஜனநாயகத்தை விட்டு வைத்திருக்கிறோம்!

ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையே, மக்கள் ஆள்கையில் பங்கேற்பது. (participation in governance).பாரதியின் வார்த்தைகளில் கூறினால். குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு. ஆனால் அதை நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டோ ம். அதை மீட்டெடுக்காத வரையில் இந்திய ஜனநாயகம் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, தயங்கித் தயங்கியே நகர்ந்து செல்லும்.

(2007ம் ஆண்டு சுதந்திர நாளன்று வெளியாகும் புதிய பார்வை இதழுக்காக எழுதியது. இதன் குறுகிய ஆங்கில வடிவத்தை (இந்தியன் எகஸ்பிரசிற்காக எழுதப்பட்டது) எனது yahoo 360 Blogல் காணலாம் http://360.yahoo.com/maalan_narayanan )

Saturday, August 11, 2007

சொன்னது என்ன?

இந்தப் பதிவை நான் எழுத வேண்டுமா என்று முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.அதற்குக் காரணங்கள் சில. ஒன்று: நான் இதுவரையில், எட்டு
போன்ற ஒன்றிரண்டைத் தவிர வேறு எந்தப் பதிவையும் என்னைப் பற்றி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நான் எழுதிய
பதிவுகளின் பட்டியல் அருகில் இருக்கிறது. எவர் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு: பதிவர் பட்டறையில் நான் என்ன பேசினேன் என்பதைச் செவி வழிச் செய்தியாக அறிந்தவர்கள், அதைப் பற்றிய ஒலிப்பதிவு வெளியிடப்படும்வரை காத்திருந்து நான் பேசியவையாகக் கேள்விப்பட்டவை சரிதானா, அவை எந்த வார்த்தைகளில் எந்தச் சூழலில் (context) என்பவற்றை எல்லாம் உறுதி செய்து கொள்ளாமல், கருத்துக்களைக் கொட்ட ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் நோக்கம் உண்மையை அறிந்து கொள்வதல்ல, என்னை வசைபாடுவதுதான், நான் என்ன பதில் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எனக்குத் தோன்றியதால், நேரத்தை இதில் செலவிட வேண்டுமா என எண்ணினேன்.
மூன்றாவதாக சில தமிழ், ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு நான் சுதந்திர தின மலருக்காக் எழுத ஒப்புக் கொண்டிருந்தேன். அதற்கான கெடு
நெருங்கியிருந்தது.
நான்காவதாக, நான் 23ம் தேதி தில்லியை விட்டுக் கிளம்பியவன், ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின் 6ம் தேதிதான் தில்லி
திரும்பியிருந்ததால் இங்கு அலுவலகப் பணிகள் குவிந்து கிடந்தன. (தமிழில் எழுதும் பல பதிவர்கள் அவர்களது பல் வேலைகளுக்கு நடுவே
கிடைக்கும் சிறிய அவகாசத்தில்தான் பதிவுகள் எழுதுகிறார்கள் என்பதால் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கையிருக்கிறது)
ஆனால் பட்டறையை ஏற்பாடு செய்தவர்களே நான் ஏதோ என்னுடைய 'நுண் அரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக்
கொண்டுவிட்டதாக' வலை நன்நடத்தையைப் பற்றிப் பேசாமல் ' ஈழத்தமிழரின் நன்நடத்தையைப் பற்றிப்' பேசிவிட்டதாக ஒருதோற்றத்தை ஏற்படுதத
முற்படும் போது இனியும் மெளனமாக இருப்பது சரியல்ல என்று கருதினேன். மெளன்ம் எப்போதும் சம்மதத்தைக் குறிப்பதில்லை, மெளனம்
கோபத்தின் வெளிப்பாடாக, வருத்தத்தின் வெளிப்பாடகக் கூட இருக்கலாம் என்றாலும் மெளன்ம் சம்மதம் என்றே இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது
என்பதையும் நானறிவேன். எனவேதான் இந்தப் பதிவு.
இங்கே நான் பதிவர் பட்டறையில் என்ன பேசினேன் என்பதை verbatium எழுதப்போவதில்லை. பத்ரியின் பதிவில் என் முழுப் பேச்சும்
(விவாதங்களுக்கான பதில்களோடு) ஒலி வடிவில் இருக்கிறது.(http://thoughtsintamil.blogspot.com/2007/08/blog-post_08.html) ஒலிப்பதிவு சுமார்
நாற்பது நிமிடங்கள் உள்ளது. தம்ழகத்தின் பல இடங்களில் இப்போதும் தொலைத் தொடர்பு பிரசினை இருக்கிறது; அங்கு இதைத் தரவிறக்கம் செய்து
படிப்பதற்கு இணைப்பின் வேகம் காரணமாக, நிறையப் பொறுமை வேண்டும்.பலர் அலுவலக் கணினியைப் பயன்படுத்துபவர்கலாகவோ, இணையவிடுதிகளளப் பயன்படுத்துபவர்களாகவோ இருக்கிறார்கள்.மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்களுக்கும், ஒலி தெளிவாக இல்லை எனக் கருதக்கூடியவர்களுக்கும், விவாதிப்பவர்களின் தெளிவிற்காகவும், எதிர்காலத்தில் திரிப்புகளுக்கு இடமளிக்காதிருக்கவும், ஏற்பாட்டாளர்களின் பதிவைப் படிப்பவர்களுக்கு நான் நாற்பது நிமிடமும் நான் அரசியல் பேசினேன் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும், எனவே என்ன் பேசினேன் என்பதை தெரியப்படுத்தவும் பேச்சின் முக்கிய அமசங்களை இங்கே தர முயல்கிறேன்.
அதற்கு முன்பு சில எண்ணங்கள், விளக்கங்கள்:
1. பதிவர் பட்டறையில், நான் ஏதும் உரை நிகழ்தும் எண்ணத்தோடு பதிந்து கொள்ளவில்லை.முழுநேரமும் என்னால் இருக்க முடியுமா என்ற
சந்தேகத்தைக் கூடப் பதிந்து கொள்ளும் போதே தெரிவித்திருந்தேன்.பட்டறைக்கு முந்திய இரவு விக்கி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
அழைத்தை அடுத்தே நான் அங்கு பேசினேன். எனவே ஏதும் முன்கூட்டிய தயாரிப்புகள், திட்டங்களோடு நான் போகவில்லை, நுண்ணரசியல்
விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த
வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்.
2.பட்டறை இரண்டு பிரிவுகளாக நடக்கிறது , ஒன்று பதிவர்களுக்காக், மற்றொன்று பதிவு துவக்க விரும்புபவர்களுக்காக் என்ற எண்ணம் பட்டறையைப்
பற்றி அது நடக்கும் முன் வெளியிடப்பட்டிருந்த இணையப்பகத்தின் மூலம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அரங்கிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பது
போல் தோன்றியது.ஒரு கட்டத்தில் இராமகி அய்யா, அங்கு வந்திருந்த, பதிவு துவக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த ஆனால் பதிவைப்பற்றி ஏதும்
தெரியாத, ஒருவரிடம் 'அய்யா நீங்கள் மேலே (பதிவு துவக்க விரும்பியவர்களுக்கான அரங்கு) போவது நல்லது என்று சொன்னது என் எண்ணத்தை
உறுதி செய்வதாக அமைந்த்து. நான் அமர்ந்திருந்த அரங்கில், விக்கி, பத்ரி, சிவகுமார், செல்லா, தேசிகன், இராமகி, காசி, வெங்கடேஷ், ஆசீப் மீரான்,
தருமி, டெல்பின் விக்டோரியா, திருஞானம், லிவிங் ஸ்மைல் வித்யா, அண்ணா கண்ணன், வளர்மதி, அருணா ஸ்ரீநிவாசன், டோண்டு,சட்டம் குறித்து
எழுதும் சுந்தரராஜன் -வெற்றிச் செல்வன், எஸ்.கே, மீனாக்ஸ்,ரஜனி ராம்கி, க்ருபாஷங்கர்,லக்கிலுக் எனப் பல பதிவர்களைப் பார்க்க முடிந்தது. அறியாத
முகங்ளும் இருந்தன. சரி அவர்கள் எனக்குத் தெரியாத பதிவர்களாக இருக்கும் என்ரு நினைத்துக் கொண்டேன். எனவே நான் பதிவர்களிடம்தான்
பேசப்போகிறேன், பேசிக் கொண்டிருக்கிறேன், என்ற எண்ணத்திலேயே பேசினேன்.
3. ஆரம்பத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்ன மாலன், பின் அரசியல் பேசிவிட்டார் என்பதைப் போல ஒரு கருத்து அமைப்பாளர்
சிவக்குமாரின் பதிவில் தொனிக்கிறது. அமைப்பளர்களின் ஒட்டுமொத்த உணர்வைத் தெரிவிப்பதாகக் ரவிசங்கர் கூறும் பதிவு “அரசியல் கொள்கை
விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை” என நான் சொன்னதாகத் தெரிவிக்கிறது. அரசியல் என்பது அரசியல் கொள்கையாக மாற்றம்
கண்டிருக்கிறது. உண்மையில் நான் அரசியல் பேச வேண்டாம் எனச் சொல்லவில்லை. பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை, மென் பொருட்களை அரசே
இலவசமாக வழங்க வேண்டும், கணினியில் தமிழை உள்ளிடும் வசதியை default ஆக அமைக்க உத்திரவிட வேண்டும் என்பது போன்ற விஷயங்களை
சிலர் எழுப்பி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிய போது, நம்மால் சாத்தியமில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவதை விட, பதிவுகள்
பற்றிப் பேசலாம், Policy விஷயங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கலாமே என்று ராமகி அய்யா தெரிவித்த கருத்தை வழி மொழிந்து பேசினேன்.Policy
என்பது public policy .ஆனால் அரசின் கொள்கை விஷயங்களைப் பற்றிப் பேசுவது அரசியல் என அமைப்பாளர்களாலேயே திரிக்கப்படுவது
வருத்தத்திற்குரியது.
4.இது போன்ற ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன் கில்லியின் விருந்தினர் பக்கத்தில் கூட அந்த
விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தேன். " ஒரு அனைத்துலக வலைப்பதிவர்கள் மாநாட்டில் இந்தக் கருத்தையும், வலைப்பதிவுகளை வளர்தெடுப்பதைப்
பற்றியும் அக்கறையோடு அலசலாம், ஜனவரி-பிப்ரவரியில் நாட்டுக்கு ஒருவர் கொண்ட ஒரு steering committeeஐ அமைக்க முடிந்தால் 2007
டிசம்பரில் மாநாடு கூட்டுவது சாத்தியம்தான்.தனிமனித வெளிப்பாட்டு (personal expression) தளமாகத் துவங்கிய ஒன்று ஓர் நிறுவனமாக
(institutionalise) ஆகிவிடுவதற்கான சாத்தியக் கூறு ஒன்றுதான் இது போன்ற கூட்டங்களின் எதிர்மறையான அம்சம். ஆனால் நிழல் இல்லாத நிலவு
இல்லை" (http://gilli.in/tamil-blogs-gilli-guest-column-by-maalan/) இதை எழுதும் போது 'நான் சொல்லித்தான் இந்த பட்டறை நடந்தது' என்று நான்
சொன்னதாக நாளை யாரேனும் திரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறேன். அல்லது நான் பங்களிக்காத மாநாட்டிற்கு உரிமை கொண்டாடினேன் என்றும் சிலர்
புறணி பேசக்கூடும். எனவே ஒரு disclaimer: நான் இந்த பட்டறையின் அமைப்புப்பணியிலோ, நிரல்கள் தயாரிப்பிலோ எந்த வகையிலும்
பங்கேற்கவில்லை. ஒரு சிறிய் நன்கொடையைத் தவிர என் பங்களிப்பு ஏதுமில்லை. அதுவும் கூட பட்டறையின் இணையப்பக்கத்தில்
அமைப்பாளர்களால் பதிவு செய்ய்ப்படவில்லை. அதைக் குறித்து எனக்கு கவலையும் இல்லை)
எனவே எனக்கு பட்டறை குறித்து ஓர் இயல்பான ஆர்வம் இருந்தது. அதற்கு தார்மீக ஆதரவளிக்க வேண்டும் என்ற உந்துதலும் இருந்தது. ஆனால்
பணிநிமித்தம் தில்லி திரும்ப வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஆனாலும் அந்தப் பணியை என் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சற்று ஒத்தி
வைக்கச் சொல்லிவிட்டு (அதனால் பலருக்கு அசெள்கர்யம் ஏற்பட்டிருக்கும்) பட்டறையில் கலந்து கொண்டேன் (இதை ஏதோ என்னைப் பற்றிய ஒர்
உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காக இப்போது சொல்லவில்லை. பட்டறைக்கு வந்திருந்த சிலரிடம் அங்கேயே பகிர்ந்து கொண்டிருந்தேன்)
ஆனால் இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது இந்த முடிவிற்காக வருத்தமே மேலோங்குகிறது.கடைசி நிமிடத்தில் என்னைப் பேச் அழைத்தும்
அமைப்பாளர்கள்,மீதிருந்த மரியாதையின் காரண்மாக, தட்டிக் கழிக்காமல் ஒப்புக் கொண்ட எனக்கு அவர்கள் நன்றி சொல்லவிட்டாலும் போகிறது, என்
பேச்சைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்களே அந்த மனங்களுக்கு நன்றி.
இனி என் பேச்சின் சாரம்: 1. நன்னடத்தை என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. அது ஏதோ பள்ளிப்படிப்பு முடிந்து போகும் போது தலைமையாசிரியர் கொடுக்கும் contact
certificate போல தொனிக்கிறது. சில நெறிகள், சுய ஒழுங்குகள் என்று வைத்துக் கொள்ளலாம்
2. மற்றெந்த ஊடகங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு வலைப்பதிவுகளுக்கு உண்டு.வலைப்பதிவுகளின் மிகப் பெரிய கொடை, தனித் தன்மை, ஒரு
விஷயத்தை வெளியிட்ட உடனே பலர் எதிர்வினையாற்றுவது. டைடானியம் டை ஆக்ஸ்டை தொழிற்சாலை குறித்து தினமணி ஒரு கட்டுரை
வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைக் குறித்து மாற்றிக் கருத்துடைய ஒருவர் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதமும்
பிரசுரம் ஆகிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஒருவர் மாற்றுக் கருத்து தெரிவிக்க விரும்பி கடிதம் எழுதினால் அதற்குள்
நாட்கள் கடந்திருக்குமாதலால் அது வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. பலர் ஒரே நேரத்தில் பலருடன் எதிர்வினையாற்ற வாய்ப்பளிக்கும் ஒரே
ஊடகம் வலைபதிவுகள்தான். இந்த வாய்ப்பு சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ, இணைய இதழ்களிலோ கிடையாது. ((Many to Many
communication)
3.வலைப்பதிவுகள் ஏன் வேண்டும் என்று சமூகக் கோணத்தில் பார்த்தால், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து ஒரு கருத்தை,
அபிப்பிராயத்தை வெளியிட அது உதவுகிறது. ஒரு கருத்து என்பதே ஒன்றின் மீதான Critical Judgemenதான் என்பதால், ஒரு சமூகத்தில் Critical
Judgement அதிகமாகும் போது, ஆளுகை (Governance) கலாசாரம் தொடர்பான விஷயங்களை விவாதத்திற்குள் கொண்டு வர முடியும். அது
நிலையை மாற்ற உதவும். அதனால் வலைப்பதிவுகள் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு ஊடகம்.
4.நாம் வாழ்கிற காலத்தில் ஒரு கருத்துதான் சரி,லொரு நிலைதான் சரி என்று முடிவளுக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது.This is Black, This is
white என்று முடிவுக்கு வரமுடியாமல் எங்கும் சாம்பல் பூத்துக் கிடக்கிறது. பல்வேறு பரிமாணங்களப் பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த
ஊடகத்தில் கிடைக்கிறது.
5 ஆனால் வலைப்பதிவுகள் குறித்து நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன
6.வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் யார் என்று பார்த்தால், இப்படி ஒரு தொழில் நுட்பம் வந்திருக்கிறது, அதில் என் மொழி இடம் பெற வேண்டும்
என்ற ஆர்வம் கொண்டவர்கள், மற்ற் ஊடகளில் ஆசிரியர் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நான் எழுதியதைச் சிதைக்கிறார், சுருக்குகிறார், தணிக்கை
செய்கிறார் அதை ஏற்க முடியாது என்று கருதுபவர்கள்,ஒரு குறிப்பிட்ட விஷயம், நிலை பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறவர்கள், உலகம்
முழுதும் தேடல் வாய்ப்புக் கொண்ட ஒருசாதனம் அதனால் இது பதிந்து வைக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள் வலைபதிவுகளை
எழுதுகிறார்கள்.தமிழ் வலைப்பதிவர்களின் சராசரி வயது என்று பார்த்தால்,- சிவஞானம்ஜி, ராமகி அய்யா, என்னையும் சேர்த்து, சில வயதில் மூத்த
பதிவர்கள் இருந்தாலும் கூட- 25-30 இருக்கலாம். சமூகத்தில் பெரும்பாலும் அந்தத் தலைமுறையின் கருத்து காது கொடுத்துக் கேட்கப்படுவதில்லை.
ஆனால் அதற்கு வலைப்பதிவுகள் இடமளிகிறது என்பதால் அது வரவேற்று வலுப்படுத்தப்பட வேண்டிய ஊடகம்.
7 ஒருவர் தனியாக வலைப்பதிவு எழுதும் போது பிரசினை ஏதும் இல்லை.அது ஒரு திரட்டியின் மூலம் திரட்டப்படும் போது அது ஒரு பொது
அரங்கமாக ஆகிறது.
8. வலைப்பதிவுகள் பற்றிய கற்பனைகளில் ஒன்று அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது என்பது. கம்யூனிகேஷன் என்பதில் கட்டற்ற சுதந்திரம்
கிடையாது, இருக்க முடியாது. மொழி மூலமாக வெளிப்படுத்துவது என்னும் போதே சில விதிகளுக்கு உட்படுகிறீர்கள்.அதன் இலக்கணம் சார்ந்து
எழுதுகிறீர்கள்.இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டது என்று எழுத முடியாது. மோதிக் கொண்டன என்றுதான் எழுத வேண்டும். I is coming என்று எழுத
முடியாது. I am coming You is going அல்ல. You are going. நீங்கள் ஏற்றுக் கொண்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.
9.வலைப்பதிவுகள் திரட்டப்படுவதின் காரணமாக சில பின்விளைவுகள், சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆரம்ப நாட்களில் எந்தப்பதிவிற்கு அதிகம்
பின்னூட்டங்கள் வருகிறதோ அது அதிகம் கவனிக்கப்படும் பதிவு என்று கருதப்பட்டது. உலகமே என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது, நான்
எழுதுவதற்கு உலகமே எதிர்வினையாற்றுகிறது என்று ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏற்படும் மனோபாவம் நிலவியது. அந்த பிரமை காரணமாக,
பின்னூட்டங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற மனோபாவம் வந்தது.
அன்று 50 பதிவுகள் இருந்தன, அநேகமாக ஒருவர் எல்லாப்பதிவுகளையும் படித்துவிடக்க்கூடிய நிலை இருந்தது, இன்று 2000 பதிவுகள். அதில் 1000
பேராவது எழுதுகிறார்கள்.இதில் தன்பதிவு கவனிக்கப்பட வேண்டும் என்பதற்க்காக அச்சுப் பத்திரிகைகளின் மலிவான உத்திகள்
பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றால் வலைப்பதிவுகளின் இயல்புகளில், சாத்தியங்களில் திரிபுகள் ஏற்படுகின்றன.அதைக் குறித்து வலைப்பதிவர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
10. கட்டற்ற சுதந்திரம்:
ஒரு தனி மனிதராக இருக்கும் வரை சுதந்திரத்திகுக் கட்டுக்கள் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக ஆகிறபோது சில கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டாக வேண்டியிருக்கிறது. தனியாக இருக்கும் போது ஒருவர் நிர்வாணமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீட்டில் இன்னொருவர் இருந்தால், அது
அம்மாவோ, சகோதரிகளோ, குழந்தைகளோ, ஏன் மனைவியாக இருந்தால் கூட ஒரு பெர்முடாவாவது போட்டுக்க்கொண்டுதான் அலைய
வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது அதற்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்டவர்களோடு சேர்ந்து இயங்கும் போது சில நெறிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி ஒரு மொழியை சில
நெறிகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகிறோமோ அது போல நம் வெளிப்பாடு சில நெறிகளுக்குட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த
ஊடக்மும் கட்டற்ற ஊடகமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பது நம் விழைவு.
11. யாருக்கு சுதந்திரம் அதிகமோ அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். எனவே யார் அதிகம் சுந்த்திரம் வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்கள்
அதற்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
12. மற்றவர் கோணத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்கும் மனநிலையைப் பலர் அடையவில்லை. அது நம்மிடம் இல்லை. வலைப்பதிவுகள் அதை
உடைக்க முடியும் திறந்த மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்ல முடியும். அப்படி இல்லை என்பதில் வருத்தம்.நாம் சில அடிப்படைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என் பதிவில் எழுதப்பட்டுள்ளவற்றிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்க
மாட்டேன்.ஒரு தனிப்பட்ட நபரைத் தாக்கியோ, விமர்சித்தோஎழுதும் கருத்துக்களைநான் வெளியிட மாட்டேன் என்பது போன்ற ஒரு நெறி, சில சுய
ஒழுங்குகளை, ஏற்றுக் கொள்ளலாம். இது நன்னடத்தை அல்ல, விதி அல்ல, கட்டுப்பாடு அல்ல. ஒரு சமூகமாக நாம் இயங்கும் போது நாம்
மேற்கொள்ள வேண்டிய சில சுயக் கட்டுப்பாடுகள்.
இதுதான் நான் பேசியதின் சாரம். இதில் நான் எங்கும் எந்த ஒருவரையும் தனிப்பட விமர்சித்துப் பேசவில்லை. இதில் எதை நுண் அரசியல்
விளையாட்டு என அமைப்பாளர்கள் கருதுகிறார்கள்?
இதன் பின் விவாதங்கள் துவங்கின.
அரவிந்தன் முதல் கேள்வியைக் கேட்டார்:" Moderated Blogலேயே ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகமாக இருக்கிறது.இந்த மனநிலையைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?" என்பது அவர் கேள்வி.
நான்:பின்னூட்டம் என்பது alcohol மாதிரி.சோர்வாக இருக்கும் போது உற்சாகம் தர உதவலாம். ஆனால் அதுவே அள்விற்கு மேல் போனால்
போதையாகி, ஒருவித halucination ஏற்பட்டு, எல்லாம் நல்லா இருக்கு என்ற செயற்கையான மனோபாவத்திற்கு இட்டுச் செல்லும். சுய ஒழுங்கு
இருந்தால் இதை மட்டுப்படுத்திவிடலாம்.
இந்த ஊடகத்தைப் பற்றி அல்ல, இன்னொரு ஊடகத்தைப் பற்றி என்று செல்வா அடுத்த கேள்வியை எழுப்பினார்: "ஐரோப்பிய சினிமா போல்
தமிழிலிருந்து தணிக்கையைத் தூக்கினா என்ன ஆகும்? இப்போ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்றால், நெல்லை எடுத்துக் கொண்டு
அதிலகொண்ஜம் உமியைக் கலந்து, அரிசியையும் கலக்கிறோம்.சென்சார்ல எந்த அளவிற்கு இருந்தால் கட் பண்ணக் கூடாதோ அந்த அளவிர்குக்
காண்பித்துக் கொண்டிருக்கோம். ஐரோப்பா மாதிரி சென்சாரையே தூக்கிட்டா என்ன ஆகும்? ஒரு பக்கம் frivolus movie போய்க்கிட்டிருக்கும். இன்னொரு
பக்கம் முன்னுதாரணப் படங்கள் வருமா, வராதா? இரண்டையும் கலந்து கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இது ஒரு ரிஸ்க்தான். ஒரு சமூகத்தில
கோவிலும் சாராயமும் இருக்கிற மாதிரி.அவங்க அவங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கலாம். Pluralistic Society ங்கிறதை இணையத்தில்தான்
பார்க்க முடிகிறது.அதை regularise பண்றதுங்கிறது ஒரு ரிஸ்க்"
நான்: நான் (கருத்தை) ரெகுலரைஸ் பண்ணுவதைப் பற்றிச் சொல்லவில்லை.உலகம் பூராவும் இன்று ஊடக்த்தொழில் எதை நோக்கிப் போகிறது
என்றால்.....முன்பெல்லாம் ஆனந்த விகடனில் ஒரு கிரைம் கதை, ஒரு சிறுகதை, ஒரு ஆன்மீகக் கட்டுரை, ஒரு அரசியல் கார்ட்டூன், இப்படி எல்லாம்
ஒரே இதழ்ல வரும்.இப்போது, த்னிமனிதனது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நாணய விகடன், விவசாயத்திற்கு பசுமை விகடன், என்று ஒவ்வொரு
துறைக்கும் தனித் தனி இதழ்கள் வருகின்றன. இதை niche journalsனு சொல்வோம். வாச்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தொழில்நுட்பம் காரனமாக
cost of production குறைந்திருப்பதால் இது சாத்தியமாகிறது. ஈனையத்தின் மிகப் பெரிய வசதி எல்லாவற்றிற்கும் தனித் தனி தளம் உருவாக்கிட
முடியும். தமிழ் உலகம் என்று ஒரு மடலாடற்குழு இருந்தது. அதில் ஒருவர் ஆன்மீகம் பற்றித்தான், அதிலும் சைவ சித்தாந்தம் பற்றி மட்டுமே
எழுதுவார்.கருத்து என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசவில்லை.அந்த contentஐக் கொடுக்கக் கூடியவர்கள் தங்களுக்கென்று சில
ஒழுங்குகளையும் வைத்துக் கொள்ள் வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி.
இந்தக் கூட்டத்தை 9:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதனால் எல்லோரும் 8:30க்கு வந்து விட வேண்டும் என்று
சொல்கிறீர்கள். அப்போது அந்த இடட்தில் ஒரு norm விதிக்கிறீர்கள். இது கட்டற்ற கூட்டம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும்
வரலாம் என்றால் ஒருவர் பனிரெண்டு மணிக்கு வந்து முதலில் இருந்து ஆரம்பித்து தமிழிணைய வரலாறு சொல்லுங்கனு கேட்கிறார். ஒரு குழுவாக
செயலபடும் போது சில norms, better performance of the groupக்காக தேவைப்படுகிறது.
மாலனின் கருத்தை வழி மொழிந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்தார் வளர்மதி.Internet Explosionனு சொல்வாங்க. ஆனால் அது Explosion அல்ல,
implosion. Implosionக்கு உதாரணம் சூரியன். அது உள்ளுக்குள்ளேயே வெடிக்கும். அதன் side effect ஆகத்தான் energy radiate ஆகிறது. அதே மாதிரி
இணையம். கட்டற்ற மீடியமாக அது இருந்தாலும், அது அதனுடைய effect தானே தவிர essence அல்ல.
அதில் direct interaction கிடையாது. Physical interaction இல்ல்ங்கிற்துனால, emotional ஆ interacட் பண்றது இல்லை. நேரில் ஒருவர் நீங்க வாங்க
என்ரு சொன்னால் நானும் பதிலுக்கு வாங்க என்று சொல்வேன்.நீங்க ஏய்னு சொன்னா நானும் ஏய்னு சொல்வேன். எழுத்து மூலமா interact செய்யும்
போது ஏய்னு சொன்னா கேள்வி வருது. என்ன தப்பா சொல்லிட்டோம் ஏன் இவர் ஏய்னு சொல்றார்னு கேள்வி தோணுது.அதனால ஒரு time lag
ஏற்படுது.இந்த time lag ஏ beat பண்ணனும், அதுinteractionக்கு இருக்கக் கூடிய Basic need. அந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளணும். அது
கட்டுப்பாடு இல்லை.தோட்டத்தில புல்லு வளர்க்க்றீங்க,. அதோட் களையும் வளருது.புல்லு வளரும்னா களையை எடுக்கணுமா வேண்டாமா?
நான்: தனிப்பதிவாக இருக்கும் வரைக்கும் பிரசினை இல்லை. பதிவுகள் ஒரு திரட்டியின் மூலம் திரட்டி வாச்கர்கள் முன் வைக்கப்படும் போது, திரட்டி
நிர்வாகிகளுக்கு ஒரு பொறுப்பு வேண்டுமா, வேண்டாமா? Many to many communicationlல் வெவ்வேறு levelல் இருப்பவர்கள் interact செய்கிறார்கள்.
WTOவை அடுத்து 60 சட்டங்கள் நிறைவேறின. விவசாயிகளை பாதிக்கக் கூடிய சட்டங்கள். Science based acts ஆனால் விவசாயிகளைப் பாதிக்கக்
கூடியவை. Seeds act என்று ஒன்று. அதைப்போல ஒரு draconian act கிடையாது.இந்தச் சட்டங்கள் பற்றி சில வக்கீல்கள் பதிவு எழுதுகிறார்கள்.
அதற்கு ஒரு பின்னூட்டம் வருகிறது. 'ஏன்யா இதைப்பற்றியெல்லாம் எழுதிக்கிட்டு இருக்க, ரஜனி, ஸ்ரேயா பற்றி எழுதினாலும் நாலு பேர் படிப்பாங்க"
என்று. இரண்டு levelல் இருப்பவர்களிடையே communication, even ஆக இருக்க முடியாது. நீங்களே பின் நவீனத்துவம் பற்றி பதிவு எழுதுகிறீர்கள்.
பின் நவீனத்துவம் தெரிந்தவர்களுக்கு அது குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுகிறார்கள், பின் நவீனத்துவம்னா என்னவென்றே தெரியாத
ஒருவர் வந்து ஏன்யா இதெல்லாம் எழுதறனு பின்னூட்டம் போட்டால் அங்கே கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது? வலைப்பதிவுல எழுத வந்தவங்க
வலைப்பதிவை விட்டுப் போனதற்கு என்ன காரணம்? நம் கருத்துக்களை இங்கே வைக்க முடியாது, அதைப் புரிந்து கொள்ள் மாட்டார்கள், நாம ஏதோ
சுவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம், அதற்கு பேசாமல் இருக்கலாம் என்று தோன்றியிருக்க வேண்டும்.
ஒரு கருத்தை வைப்பதற்கு அச்சமோ, தயக்கமோ தோன்றுமானால் அந்த இடத்தில் சுதந்திரம் இல்லை. அச்சம் உள்ள இடத்தில் சுதந்திரம் இருக்க
முடியாது.என்ன நடக்கிறது? Sanctity என்பது எதற்கும் கிடையாது.எதுவுமே புனிதமானது அல்ல என்பது வலைப்பதிவுகளில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு
கோண்த்தில் அது நல்லது. ஆனால் இன்னொரு கோணத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கக் கூடிய் institutionsஐ - உதாரணமா பெரியார்
இருக்கிறார்- அவரை denigrate செய்வதுமாதிரியான பின்னூட்டம் வந்தால் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் சமூகத்தில் பல விளைவுகளை
ஏற்படுத்தியவர்; சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்?
இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள்
அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின்
பெண் என்ன செய்தார்? மார்க்சிஸ்ட்டா அறியப்பட்டவருடைய பெண் எப்படி அமெரிக்காவில போய் படிக்கலாம்னு கேட்டா?
யதார்த்த வாழ்க்கையில, நேர் முரணான கருத்து உடையவர்களோடு ஏதோ ஒரு விதமான உறவு வைத்துக் கொண்டுதானே இருக்கிறோம்? பெரியார்
அவருடைய மணத்தைப் பற்றி ராஜாஜி ஒருவருக்குத்தானே கடிதம் எழுதி விவாதித்தார்? இரண்டு எதிர் எதிர் கருத்து நிலை உள்ளவர்கள், ஒரு
குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒருவரோடு ஒருவர் interact செய்ய முடியாதா? இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை
எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள்
போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க? இது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில்
கொள்கிற உறவு.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும், அவற்றிற்கும் அரசாங்கம் எடுக்கிற நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவை
முதலாளித்துவத்தை பிரசாரம் செய்யக் கூடியவையும் கிடையாது.சீனாவை அமெரிக்காவே Most Favoured Nation என்று அறிவித்துவிட்ட பிறகு,
சீனாவை ஆதரிக்கும் ஒருவருடைய மகள், அங்கே போய் படிப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது?
இதெல்லாம் தவிர, இது பதிவில் சொல்லப்பட்டிருந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்.....
(மாலன் சார் என்ரு சிவக்குமார் குறுக்கிட நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.)
.

Monday, August 06, 2007

செனனைப் பதிவர் எகஸ்பிரஸ்


இன்றைய The New Indian Expressல் சென்னைப் பதிவர் பட்டறை பற்றி விரிவாக (முதல் பக்கத்திலேயே ) செய்திகள் சகபதிவர்களது புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கின்றன. 'மொக்கைப் பதிவு' 'கும்மிப் பதிவு' பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம், உள்குத்து எல்லாவற்றையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

பட்டறையின் நிகழவுகள் குறித்தும், 71 வயதில் பட்டறையில் வந்து கலந்து கொண்டு பதிவுகள் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய நல்லபெருமாள் பற்றிய் செய்தியும் மூன்றாம் பக்கத்திற்குப் போய்விட்டது. (நல்ல பெருமாள் பற்றி அதிகம் பேர் எழுதவில்லை. அவர் பேசியது என் மனதைத் தொட்டது)

இணைப்புக்கள் இங்கே.

http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3

http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3

இதன் ஆங்கில வடிவததை என் யாஹூ பதிவில் வெளியிட்டிருக்கிறேன். அதன் முகவரி:
http://360.yahoo.com/maalan_narayanan)

அயலகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கும், சென்னையிலேயே இருந்து எகஸ்பிரசை தவறவிட்டவர்களுக்கும், இந்த நிகழ்வின் பதிவுகளை எதிர்காலத்தை முன்னிட்டு சேமிக்கவிரும்புவர்களுக்கும், தங்கள் ஊரில் இது போன்ற பயிலரங்கு (பட்டறை என்பதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாமே?) நடத்த விரும்புவர்களுக்கு ஓர் உந்துதலாகவும் இந்த இணைப்புக்கள் உதவகூடும்.

Wednesday, August 01, 2007

ஒரு கோடிக் கருத்தம்மாக்கள்

"அடுத்து நீங்கள் காண இருக்கும் காட்சிகள் அதிர்ச்சி தரக்கூடியவை. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது" என்ற முன்னெச்சரிக்கையுடன் தொலைக்காட்சி அந்தச் செய்தியை அளித்தது. காட்சிகள் அதிர வைப்பதாகத்தான் இருந்தன.

ஒரிசா மாநிலத்த்ல் உள்ள, நயாகர் என்ற கிராமத்தில் உள்ள, ஒரு பாழும் கிணற்றிலிருந்து அடுத்தடுத்து பாலித்தீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்தப் பாலீதீன் பைகளுக்குள் பிறந்த இளம் பெண் சிசுக்களின் அழுகிய உடலகள் பொதியப்பட்டிருந்தன. அப்படி 30 பாலீதீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்த சிசுக்கள் செய்த குற்றம் பெண்ணாகப் பிறந்தது.

ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என முழங்கும் தலைப்புச் செய்திகளும், பிறக்கும் போதே பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும் கொடூரமான செய்திகளும் ஒரே நேரத்தில் காதை நிறைக்கும் தேசமாக இருக்கிறது இந்தியா!

பெண்சிசுக்கள் கொல்லப்படுகிற அவலம் ஏதோ ஒரிசாவில் மட்டும் நடைபெறுகிற சம்பவம் அல்ல. இது நடைபெறாத இந்திய மாநிலம் எதுவுமே இல்லை எனச் சொல்லிவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், இந்தக் கருத்தம்மாக்கள் பிறந்த உடனேயோ, பிறக்கும் முன்பாகவே கூட, அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், நம் சினிமாக்கள் சொல்வது போல, வறுமை அல்ல! வளமான மாநிலங்களான பஞ்சாபிலும் ?ரியானாவிலும்தான், செலக்டிவ் அபார்ஷன் எனச் சொல்லப்படும், பிறக்கப்போவது பெண்குழந்தை எனத் தெரிந்துகொண்டு அதைக் கருச்சிதைவு செய்யும் வழக்கம் அதிகம். ஹரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண்களுக்கு, 541 பெண்கள் என்ற விகிதத்தில்தான் பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆனால் ஏழைக்குடும்பங்களில் 1000 ஆண்களூக்கு 1567 என்ற அளவில் ஆண் பெண் விகிதம் இருக்கிறது.

இன்னொரு வளமான மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் என்பதாக ஆண்: பெண் விகிதம் அபாய அளவைத் தொட்டிருக்கிறது. அதிலும் அந்த மாநிலத்தின் செழிப்பான பகுதிகளான கிருஷ்ணா, சித்தூர், ரெங்காரெட்டி மாவட்டங்களில் இந்த வழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலேயே கம்மம் மாவட்டத்தில்தான் மிக அதிக அளவில் 93 ஸ்கேனிங் மையங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கும் பகுதிகள், வளமான, பெத்தபள்ளி, ஜகதியால், கோதாவரிகாணி ஆகியவைதான்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 1991ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி இந்தியாவில் ஆண்-பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்பதாக இருந்தது. ஆனால் 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் போது அது 927ஆக சரிந்திருக்கிறது. மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குக் காரணம் பெண்கள்பெண்சிசுக் கொலைகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெண் சிசுக் கொலைக்குக் காரணம் வெறும் வரதட்சிணைக் கொடுமை மட்டும் அல்ல.

ஆண் பெண் விகிதத்தில் ஏற்பட்டிருக்கிற கவலைதரும் சரிவு, இருபது ஆண்டுகளாகத்தான் ஏற்பட்டு வருகிறது. அதாவது Ultra Sonography என்கிற பிறக்கும் முன்பே கருவில் இருப்பது ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை, நகர்ப்புற மத்தியதர வர்க்கத்திடையே பிரபலமாகத் தொடங்கியதிலிருந்து, இந்த சரிவு விரைவுகாணத் தொடங்கியிருக்கிறது என ஊகிக்கமூடியும்.அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்திருக்கிறது. Pre-Natal Diagnostic Technique (Regulation and Prevention of Misuse) Act, 1994, Medical Termination of Pregnancy Act, 1971 என இரு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் நிலைமை சீரடைந்து விடவில்லை.

என்ன காரணம்? பல இருக்கலாம். ஆனால் படித்த நடுத்தர வர்க்கம் அறிவியலை, தனது சுயநலனை முன்னிட்டு. தார்மீக நெறிகளுக்கு முரணாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இந்த ஒரு கோடிப் பெண்சிசுக் கொலைகள் ஓர் உதாரணம். அறிவியலின் கொடைகளை இது போல படித்த வர்க்கம் தவறாகப் பயன்படுத்துவதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்கிறவர்கள், நாற்சந்திகளில் போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, ஆளே இல்லாவிட்டால் கூட வண்டியை நிறுத்தி சிகனல் மாறுவதற்குக் காத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் நகரங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்கனல்களையும் அமைத்து, அதன் கீழே போக்குவரத்தைக் கண்காணிப்பதற்குக் காவலர்களையும் நிறுத்துகிற வேடிக்கையைப் பார்க்கலாம்.அங்கே ஒரு முதியவர் அல்லது பள்ளிக்குழந்தை சாலையைக் கடக்கிறது என்றால் கூட வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்தி வழிவிடுவார்கள். இங்கே, " யோவ் பெரிசு, என்ன வீட்டிலெ சொல்லிட்டு வந்திட்டியா?"

தில்லியில், பலமாடி அடுக்குக் குடியிருப்புகள் இருக்கிற இடங்களில், குடீதன்ணீர் வரும் மெயின் குழாயில், பக்கத்து வீட்டுக்காரனிடம் இருப்பதைவிட சக்தி வாய்ந்த பம்பை நிறுவித் தண்ணீர் எடுத்துக் கொள்ள முயற்சிப்பவர்கள் பலர். நாளடைவில் எல்லோரும் சக்தி வாய்ந்த பம்புகளை நிறுவ, யாருக்கும் தண்ணீர் வருவதில்லை.தண்ணீர் கொடுக்க வேண்டியது நகர நிர்வாகத்தின் ஆதாரமான கடமைகளில் ஒன்று என்பதை அவர்களிடம் மல்லுக் கட்டி எடுத்துச் சொல்வதற்கோ, குடிதண்ணீர் நம் ஆதார உரிமைகளில் ஒன்று எனக் கோரிப் போராடும் திண்மையையோ கல்வி நம் மக்களுக்கு அளிக்கவில்லை.மாறாக அறிவியலை தார்மீக விதிகளுக்கு முரணாகப் பயன்படுத்தும் குறுக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறது.

செல்போன்களை ஆபாச செய்தி அனுப்புவதற்கோ, இணையத்தை, மின்னஞ்சலை, வலைப்பதிவுகளை எப்படி அதர்மமான வழிகளில் பயன்படுத்துவது பற்றியோ, வலைப்பதிவுகளில் போலிப்பின்னூட்டம், ஆபாசப் பின்னூட்டம் இடுவது பற்றியோ அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக, வல்லரசாக உருவாகிவருவதாகப் பேசிப் பெருமிதம் கொள்ளும் படித்த மத்தியதர வர்க்க நண்பர்களிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான்: " அதெல்லாம் சரி நண்பரே, நாம் ஒரு குடிமை ஒழுங்குகொண்ட சமூகமாக - Civic society-யாக உருவாவது எப்போது?"

Thursday, July 19, 2007

கதையல்ல, வாழ்க்கை

அப்பாவா?
நசீமாவால் நம்பத்தான் முடியவில்லை.கையிலிருந்த தொலைபேசியை மறுபடியும் பார்த்தார். அதற்குள் மறுமுனை ஹலோ, ஹலோ என்று சிலமுறை கூப்பிட்டுவிட்டது.
"லைன்லதான் இருக்கேன் சொல்லுங்க"
"உங்க அப்பா உயிரோடுதான் இருக்கிறார்"
"அப்படியா? எங்கே?" கேட்கும் போதே அவரது குரல் உடைந்தது. தனது எட்டு வயதில் அப்பாவைப் பிரிந்து, இதோ இப்போது 24 வருடங்கள் ஆகப்போகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. இப்போது சென்னையில் இருக்கும் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் சவுதி அரேபியாவில் இருக்கும் தன்னைக் கூப்பிட்டு அப்பா உயிரோடுதான் இருக்கிறார் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

"நீங்களே அவர் கிட்ட பேசுங்க" என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி சொன்னபோதும் நசீமாவிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை.சந்தேகம்தான் தோன்றியது. அப்பாவிடம் பேசுவதா? அவருக்குக் காதும் கேட்காது, வாயும் பேசவராது.

ஆனால் நசீமா பேசினார். அப்பா இப்போதும் பேசவில்லை. ஆனால் நசீமா பேசுவதைப் புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சுக்குப் பதிலாக எழுப்பிய சப்தங்கள் உணர்த்தின.

நசீமாவின் கதை சினிமா போன்றது. அது பின்னோக்கி ஓடி 24 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இப்ராஹிம் ஷெரீப்பிற்கு மூன்றும் பெண்கள். மும்தாஜ், ஷம்ஷாத், நசீமா. அவர் அப்போது காஞ்சிபுரத்தில் பீடி சுற்றும் கூலியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். சிரம ஜீவனம்தான். மனைவி ரோகயா பீவி டி.பியில் இறந்த பிறகு அந்த வாழ்க்கை இன்னும் கடினமானது. அவர்தான் மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

மூன்று குழந்தைகளிலும் அவருக்கு கடைக்குட்டியான நசீமாமீது கொள்ளைப் பிரியம். தனது சிரமமான வாழ்க்கைக்கு நடுவேயும் அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆனால் விதி வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

நசீமாவிற்கு எட்டு வயதான போது, ஷெரீபின் உறவினர் ஒருவர் காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தார். நசீமாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி தன்னுடன் அழைத்துப் போவதாகச் சொன்னார். ஷெரீபிற்கு மகளைப் பிரிய விருப்பமில்லை. நாம்தான் இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், நம் குழந்தையாவது எங்கேயாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ, அரை மனதாக சம்மதித்தார்.

அந்த உறவினர் நசீமாவை சென்னையில் ஒரு தம்பதியிடம் விற்றுப் பணத்தை வாங்கிக் கொண்டு காணாமல் போய்விட்டார். நசீமாவை விலை கொடுத்து வாங்கிய தம்பதி போலீஸ்காரத் தம்பதி. கணவன் மனைவி இருவருமே காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். எட்டு வயதுக் குழந்தையின் தலையில் அத்தனை வேலைகளையும் சுமத்தினார்கள். அது செய்ய முடியாமல் திணறிய போது அதட்டினார்கள், அடித்தார்கள், உதைத்தார்கள், கையில் சூடு கூட வைத்தார்கள்.

செல்லக் குழந்தையாக வளர்ந்த நசீமாவால் கொடுமை தாங்க முடியவில்லை. தினம் வீதியில் வந்து காய்கறி விற்கும் ஒரு வண்டிக்காரரின் உதவியுடன் தப்பிவிட்டார்.

வீடு எங்கே என்று கேட்ட போது அண்ணா நகர் என்று சொன்னார் நசீமா. வண்டிக்காரர் நசீமாவை அண்ணாநகரில் கொண்டுவிடச் சொன்னார். நசீமா சொன்னது காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாநகர் என்ற குடிசைப்பகுதியை. ஆனால் இந்த அண்ணாநகர் சென்னையில் பங்களாக்கள் நிறைந்த அண்ணா நகர். அடுக்கு மாடிக் கட்டிடங்களும், நொடிக்கொரு கார் விரைகிற அகன்ற வீதிகளுமாக இருந்த இது அவருக்குப் பரிச்சயமான அண்ணாநகராக இல்லை

.இனி என்ன செய்வது என்ற கவலை எழுந்தது. மீண்டும் அந்தக் கொடுமைக்கார தம்பதியிடம் மாட்டிக் கொண்டுவிடுவோமோ என்ற அச்சம் அவரை அரித்தது. பயத்திலும் ஏமாற்றத்திலும் அழுகை பொங்கிப் பொங்கி வந்தது.

வீதியில் அழுது கொண்டிருந்த குழந்தையை அந்த தம்பதிகள் பார்த்தார்கள் அவர்கள் மைசூரிலிருந்து வந்து சென்னையில் குடியேறியிருந்த பிராமண வகுப்பைச் சேர்ந்த தம்பதிகள். அவர்கள் நசீமாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் தேற்றினார்கள். அதற்குள் நசீமாவின் குடும்பம் காஞ்சிபுரத்தை விட்டகன்று, வேலூருக்கோ, ஆற்காடுக்கோ குடிபெயர்ந்திருந்தது. அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நசீமாவை அந்த பிராமணத் தம்பதிகளே பிரியத்தைக் கொட்டி மகளைப் போல வளர்த்தார்கள். நசீமாவின் வாழ்வில் அந்த நாட்கள் ஒரு பொற்காலம். தங்கள் வழக்கங்கள் எதையும் நசீமா மீது திணிக்கவில்லை. நசீமா தனது மத நம்பிக்கைகளைக் கைவிடுமபடியும் வற்புறுத்தவில்லை. நசீமா தங்கள் மத வழக்கப்படி பர்தா அணிய விரும்பியபோது அதைத் தடுக்கவும் இல்லை.

சில ஆண்டுகளில் ஒருயுவதியாக மலர்ந்துவிட்ட நசீமாவை அவரது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பணக்கார இஸ்லாமியக் குடும்பததைச் சேர்ந்த சையத் மணக்க விரும்பினார். அந்தத் தம்பதிகள் அந்த வரனைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்டு நன்கு விசாரித்து அறிந்து கொண்டனர். " என்னை அழைத்து நசீமாவின் முன் நடக்கச் சொல்லிக் கூடப் பார்த்தார்கள், எனக்கு ஏதும் ஊனம் இல்லையே என உறுதிப்படுத்திக் கொள்ள" என்கிறார் சையத்.

திருமணத்திற்குப் பின் நசீமாவும் சையத்தும் வெளிநாட்டில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். அப்போது நசீமாவிற்கு 20 வயது. வசதியான வாழ்க்கையை உடல் அனுபவித்தாலும் மனதில் வறுமையில் வாடிய நாட்களின் ஞாபகம் வந்து போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு வறுமையிலும் தன்னை ஒரு ராஜகுமாரி போல கவனித்துக் கொண்ட அப்பாவின் நினைவுகள் வந்து வதைக்கத் துவங்கின. மழை நாட்களில் தன் காலில் சேறு படிந்துவிடக் கூடாது என்ற அக்கறையில், தன்னை தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஸ்கூலில் கொண்டு விட்ட அன்பை நினைத்தால், காலில் செருப்பை மாட்டும் போது, கண்கள் பொங்கும்.

அப்பாவைத் தேடித் தரும்படி கணவனை நச்சரிக்கத் தொடங்கினார் நசீமா. கணவரது பிசினஸ் பார்ட்னர், சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.கூடவே ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதினார்கள். துப்பறியும் நிறுவனத்தினர், முதலில் சைபுனீசாவை, அவர்தான் நசீமாவை விற்ற உறவினர், தேடிக் கண்டுபிடித்தனர். அவர் மூலம் இப்ராஹிம் ஷெரீப்பைக் கண்டுபிடித்தனர்.

நசீமா இப்போது நெகிழ்ந்து போயிருக்கிறார். என் கணவருக்கு இருப்பதைப் போல எனக்கும் இப்போது ஒரு குடும்பம் இருக்கிறது என்கிறார். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து.

*

இது கதை அல்ல. வாழ்க்கை. அண்மையில் ஜெயா மேனன் சேகரித்து இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியிட்டிருந்த தகவல்களைக் கதை வடிவில் தந்திருக்கிறேன்.
வாழ்க்கைதான் எத்தனை ஆச்சரியங்கள் நிறைந்தது!

நன்றி: ஜெயா மேனன்/ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Saturday, July 14, 2007

அன்புள்ள பெயரிலிக்கு.....

அன்புள்ள ரமணீதரன், பெயரிலி, அலைஞன் எனப் பல பெயர்களால் அறியப்படும் பெயரிலி என்ற நண்பருக்கு,



என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப்
பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்.


முதலில் உங்களுக்கு நன்றி.என்னிடமிருந்து நீங்கள் அறிய விரும்பிய விளக்கங்களுக்கான கேள்விகளை, எனக்கு அனுப்பாமல் உங்கள் பதிவிலேயே இட்டுக் கொண்டது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. என்னை விமர்சிக்கும் பதிவுகளையும் கூட நானே தேடிச் சென்று வாசிப்பேன், வாசித்து விட்டு அவற்றை அலட்சியம் செய்யாது விளக்கமும் அளிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்களே, அதற்காக நன்றி.


நீங்கள் மெய்யாகவே விளக்கங்களை வேண்டி அந்தக் கேள்விகளைத் தொடுத்திருந்தால்,அதை என் பதிவிலோ அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பியோ கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்களின் உண்மையான அக்கறை
அவற்றுக்கான பதில் அல்ல. வெறுமனே அலை எழுப்புவது. அலைஞன் அல்லவா நீங்கள்?


என்றாலும் விளக்கங்கள் கொடுப்பதில் எனக்கு ஏதும் சிரமம் இல்லை. நேரப் பற்றாக்குறை தவிர.


முதலில் சில கருத்துக்கள்:
1.இந்த எட்டுப் போடுகிற விளையாட்டு என்பதே ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்களை தன் கோணத்திலிருந்து எழுதுவதுதான். (உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதானால், "மிகத்தீவிரமாக இணையத்திலே எட்டுக்குனியா பரவும் இக்காலகட்டத்திலே 'sexed up self claims' நோய்க்குறி") வரலாறு எழுதுவ்து விளையாட்டான விஷயம் அல்ல என்றே நான் கருதுகிறேன். அப்படியிருக்க நீங்கள் ஏன் நான் ஏதோ வரலாற்றைத் திரித்துவிட்டதாக அல்லது வரலாற்றை மறைத்து விட்டதாக அல்லது வரலாற்றுப் பிழை செய்துவிட்டதாக ஆவேசப்படுகிறீர்கள்?


2.நான் அந்தப் பதிவில் நான் என் Formative years, எனக்கு கவியுலகோடு ஏற்பட்ட அறிமுகம்,எழுத்துலகோடு ஏற்பட்ட அறிமுகம், பத்திரிகை உலகோடு ஏற்பட்ட் அறிமுகம், அரசியல் உலகோடு ஏற்பட்ட அறிமுகம், என என் பல துவக்கங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதைப் போல,கணினியுடனும் இணையத்தோடும், வலைப்பதிவுலகோடும் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்.அதில் எந்த இடத்திலும் நான் இணைய அறிஞர் என்றோ, இணைய முன்னோடி என்றோ குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படியிருக்க நீ என்ன பெரிய..... என்ற கேள்விக்கோ, கேலிக்கோ அவசியம் என்ன?


"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்கள். வரலாற்றைத் திரிப்பவனாக நீங்கள் கருதும் என் கருத்தை விட்டுத் தள்ளுங்கள். ஆனால் இந்தத் தரவுகளைப் பாருங்கள்:


தரவு-1
"முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words,
Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது"
மேலே உள்ளது தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து பெறப்படது. " கணினியில் தமிழ் என்ற பக்கத்தில் இணையத் தமிழ் முன்னோடி - நா. கோவிந்தசாமி என்ற துணைப்பிரிவில் இந்தத் தகவல் காணப்படுகிறது.


தரவு-2


"Naa Govindaswamy passed away in Singapore, on 26 May 1999 at the relatively young age of 52. He was one of the pioneers of the Tamil digital renaissance of the 20th century. Tamils living in many lands have lost an enthusiastic and gifted worker who had contributed much to nurture their growing togetherness.
The print revolution brought Tamil from the ola leaves to paper, from the select few literati to the many. The digital revolution is bringing Tamil from paper to the computer and the internet. U.V.Swaminatha Iyer and Thamotherampillai heralded the Tamil renaissance in the 19th century. Both Naa Govindasamy and Kuppuswamy Kalyanasundaram have made important contributions to the Tamil digital renaissance of the 20th century."


இது தமிழ்நேஷன் என்ற வலைப்பக்கத்தில் காணப்படும் குறிப்பு: காண்க
http://www.tamilnation.org/hundredtamils/naag.htm


தரவு-3
"உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம் குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா? தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக் கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும் எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி!
1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.
இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம் பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம்
ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார்."
இது 2004ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத் தமிழ்மாநாட்டில் ஆலபர்ட் என்பவரால் அளிக்கப்பட்ட நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி என்பவ்ரின் கட்டுரையிலிருந்து.


தரவு-4


"Tamnet formerly known as Tamil Network Publishing House, was established in 1996 by Mr Naa Govindasamy (1946 - 1999), who is more fondly remembered as the Father ofTamil internet."-இது கணியன் தளத்திலிருந்து (http://www.kanian.com/profile.htm)


தரவு-5


"தமிழ் இணையத்திற்கு முன்பாகவே தமிழ் எழுத்துரு முயற்சிகள் சிங்கப்பூர் நா.கோ மற்றும் இன்ன பிற ஆர்வலர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது..."
இது சகவலைப்பதிவர் அலெக்ஸ் பாண்டியன் ஜீன் 14, 2005ல் எழுதியது.இங்கு அவர் தமிழ் இணையம் எனக்க்குறிப்பிடுவது தமிழ்,நெட் டைத்தான்.தமிழ்.நெட் பற்றி நன்கு அறிந்தவர் அதைக் குறித்து விரிவாக தனது பதிவில் மூன்று பகுதிகளாக எழுத்யிருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன் 97 அல்லது 98லிருந்து இணையத்தில் உலவி வருபவர் எனச் சொல்ல முடியும். காண்க: http://alexpandian.blogspot.com/2005/06/1.html


என்னுடைய கேள்வி எல்லாம், மேலே உள்ள எல்லாத் தரவுகளும், என் வலைப்பதிவு எழுதப்படுவதற்கு முன்னரே இனையத்தில் இடம் பெற்றிருந்தவை. இந்த இடங்களுக்குச் சென்று இதற்கு முன்னர்,
"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்களா என்பதுதான். உங்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் அலலது நிலைநாட்டும் ஆர்வம் மெய்யாகவே இருந்திருக்குமானால் நீங்கள் அதைச் செய்திருப்பீர்கள். ஆனால் உங்கள் நோக்கம் அதுவல்ல. உங்கள் ஆர்வம் அலை எழுப்புவதில்;ஆறுமுக நாவலர் குறித்து நான் வெளியுட்டுள்ள சில கருத்துக்கள் காரணமாக என் மீது ஏற்பட்டுள்ள மனச்சாய்வின் காரணமாக, காழ்ப்பின் காரண்மாக என் மீது சாணி எறிவது.


சரி ஏன் நா.கோ.முதலில் தமிழை இணையத்தில் ஏற்றியவராகக் கருதப்படுகிற்ர்?


நா.கோவே தனது முயற்சி என்ன என்பதை விளக்குகிறார்:
" Singapore is a multilingual and a multiracial country. English, Chinese, Malay and Tamil are the official languages. Most of the government and public documents are published in these four official languages.
However, until recently, it was not possible for the Chinese and Tamil languages to be disseminated through the World Wide Web on the Internet.


In 1994 Dr Tan Tin Wee, my research collaborator initiated work in this area while he was the head of Technet Unit, the first Internet service provider for Research and Educational Institutions in Singapore. Technet Unit was directly under the supervision of the Computer Centre of the National University of Singapore. (Technet Unit has since been commercialised to become Pacific Internet, one of the three ISPs for Singapore. The others are Singnet and Cyberway.) By mid-1994, Technet Unit initiated the Singapore INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the four official languages to be represented in the INFOMAP.


Since English and Malay are using the Roman script, displaying these two languages on the WEB was not a problem. By the end of 1994, Technet had successfully implemented an Experimental Chinese WEB server in Singapore. So the problem of displaying the Chinese script on the Web was solved. However, displaying Tamil script on the Web, and communicating through Tamil on Internet was a problem. There was no Tamil Information System on the Internet which provides a display system in Tamil and English simultaneously on the Text Mode using a Tamil-English single font file. There were a few servers, which were providing Tamil script using GIF image files.
Tamil Eelam Page (http://www.eelam.com/) was and is still very active in this direction. Tamil Nadu Home Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic Library was using (and is still using) a mono 7bit
font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that time.

So there was a need to develop a Tamil Internet System which should go

beyond Web display.

In May 1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE, NTU, the two instititutions of higher learning in Singapore at that time.


At that time, on my own, I was in the process of developing True Type fonts and a Tamil software for Windows Applications (Kanianப)�ப Tamil Software). As the service provider arm of the Technet was sold to a private consortium and renamed Pacific Internet in September 1995, the nascentTamil Internet Research was inherited by the newly formed Internet Research and Development Unit (IRDU). This Research Unit was funded by the National Science and Technology Board (NSTB ) (http://www.nstb.gov.sg/) of Singapore. Mr Leong Kok Yong, just graduated from the Nanyang Technological University, joined IRDU, and became one of the key member for the TamilWEB project.


Objective
During the Technet period, when Dr Tan and I, conceptulised the TamilWEB Project. We had a very clear objective.That is: to develop a bilingual font system for The Total Internet Communication in the Tamil language. That means, the system that we intended to develop:


should provide display of Tamil & English Text simultaneously on the Internet Applications. (Web Browsers & Email sofware packages.)

Tamil and English text should be easily communicated and retrieved in Plain Text.

should work across Platforms. (PC, Mac & Unix)

should be searchable in Tamilshould let the user type Tamil in the Web browser's Forms, and the typed word should be seen in Tamil.

Should allow the user to read Tamil & English in terminal emulation mode (telnet).


Prototype Testing, Preview and Official launch


The prototype of our system was tested during the launch of PoemWEB. PoemWeb is an electronic selection of representative poems from the four official languages, from the book , Journeys: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) which was published by The Centre for the Arts, National University of Singapore. This book was launched by H.E. Mr Ong Teng Cheong, President, Republic of Singapore on Friday 27 Oct 1995.
The preview of the first phase of TamilWEB project was shown to the public and to the Press at the Internet for Everyone 1995 at Suntec City Exibition Hall during 13 December 1995. TamilWeb was officially launched by the Honourable Member of Parliament, Dr Ong Chit Chung (Chairman, GPC for Education and MP for Bukit Batok) on 2 February 1996"


இது கோவிந்தசாமி செப்டெம்பர் 14 1998ம் ஆண்டு, புனேவில் நடைபெற்ற SAARC Conference on Extending the Use of Multilingual & Multimedia Information Technology என்ற மாநாட்டில் அளித்த Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research என்ற கட்டுரையிலிருந்து. இதன் பிரதியை http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm என்ற
இடத்தில் காணலாம்


நீங்கள் கணியன் இதழ்களை மனதில் கொண்டு பேசுகிறீர்கள் எனபது, "கணியன் இதழ் தமிழ்நெட் எழுத்துருவிலே தொடங்கமுன்னரே, மயிலையிலே இணையத்திலே வலைப்பக்கங்கள் இருந்தன " என நீங்கள்
குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்கிறேன். நான் கணியன் இதழ்களை அடிப்படையாகக் கொண்டு என் கருத்தைப் பதிந்திருக்கவில்லை. நான் குறிப்பிடுவது சிங்கப்பூர் அரசு மேற்கொண்ட முயற்சிகளையும், அதில்
கோவிந்தசாமிக்கு இருந்த பங்களிப்பையும்.


தமிழ் நெட் 1995ல் துவங்கப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது: "இணையப் பாவனையும் தமிழில் மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார்."


சிங்கை அரசின் முயற்சிகள் 1994ல் துவங்கிவிட்டன. "By mid-1994, Technet Unit initiated the Singapore INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the four official languages to be represented in the INFOMAP." (இதில் he என்பது Dr,டான் டின் வீ யைக் குறிக்கிறது என்பதை மேலே உள்ள கோவிந்தசாமியின் கட்டுரையைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்)


தமிழ் நெட் எழுத்துரு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் தமிழ் நெட் மடலாடற்குழுவில் எழுதியவர்கள் முத்து நெடுமாறனின் எழுத்துருவைப் பயன்படுத்தியதாக விக்கி பீடியா குறிப்பிடுகிறது: "முரசு அஞ்சல்
எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது."


மயிலை எழுத்துருவில் இணையப்பக்கங்கள் இருந்தன என்பதும் அதை நா.கோ தன் கட்டுரையில் சுட்டியிருக்கிறார் என்பதும் உண்மைதான்.ஆனால் அவற்றின் limitaionகளையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.மயிலை எழுத்துருவை வடிவமைத்தவரும், மதுரைத் திட்டத்தை நிறுவியவருமான டாக்டர். கல்யாணசுந்தரம், 1999ல் தகுதர எழுத்துக்களுக்கும், பின் 2003ல் யூனிகோடிற்கும் தன் தளத்தை மாற்றிக்கொண்டுவிட்டார் என்பதுவே அதன் limitationகளைச் சுட்டப் போதுமானது. "மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மாணிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறோம்." என் மதுரைத் திட்டத்தில் காணப்படும் குறிப்பு சொல்கிறது.


தகுதரத்தின் வரைவு முன்வடிவம் டிசம்பர் 1997ல் வெளியிடப்பட்டது. ('TSCII stands for Tamil Standard Code for Information Interchange. It is a character encoding standard for Tamil on computers. Read the draft proposal released in December 1997, for a detailed discussion. The current draft is labelled, TSCII 1.7" இந்தக் குறிப்பை http://www.tamil.net/tscii/tscii.html என்ற இடத்தில் காணலாம்)



நா.கோ சிங்கப்பூர் அரசின் உதவியுடன், கணியன் பூங்குன்றன் பாடலுடன் வெளியிட்ட இணையதளம் 1995 அக்டோபரிலேயே வலையேறிவிட்டது.



"நீங்கள் எப்போது உத்தமத்திலே சேர்ந்துகொண்டீர்கள் என்பதையேனும் காலவரையறைப்படி சரியாக நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. .....நீங்கள் சேர்ந்து கொண்டது மிக மிகப் பின்னான காலகட்டத்திலே. அனைத்தும் நடந்து
முடிந்து. "


ஆமாம். அதற்கென்ன இப்போது. நான் உத்தமத்தின் ஆரம்பகால உறுப்பினர், நிறுவனர் என்றா என் பதிவில் சொல்லியிருக்கிறேன்?
ஆனால் நான், உத்தம மாநாடுகளுக்கு முன்னோடியாக அமைந்த, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் 1997ம் ஆண்டு மே 17-18 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாட்டில் (அப்போது அது Tamilnet 97 என்றழைக்க்ப்பட்டது) அமைப்புக் குழுவினரின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன். அது குறித்து வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில் காணப்படும் வாசகங்கள் இவை:
"The 2 hour-long discussion session on the second day of the symposium came to a fruitful ending. The discussion panel (a total of 11 members) was led by Sujatha and included N. Anbarasan, S Kuppuswami, ST Nandasara, Kuppuswamy Kalyanasundaram, Malaan, Harold Schiffman, Vasu Renganathan, Muthelilan Murasu Nedumaran, Naa Govindasamy and Tan Tin Wee. The topics discussed includes -
Increasing Tamil Content Worldwide
Keyboard Diversity
Encoding Standards
Standardization of Tamil Websites and WebPages
Work to be done/Time Frame
Next Symposium - TamilNet'98
இதனை http://www.tamilnation.org/digital/tamilnet97/Tamilnet97.htm என்ற இடத்தில் பார்க்கலாம்.
இந்த மாநாட்டின் படங்கள் உத்தமம் இணையதளத்தில்இருந்தன.அண்மையில் அந்தத் தளம் சீரமைக்கப்பட்ட போது அவை நீக்கப்பட்டுவிட்டன.


"உத்தமம் வருவதற்கு முன்னாலே அதற்கு முன்னான ஆரம்பக்குழுக்களும் வெப்மாஸ்ரர் மின்னஞ்சற்பட்டியல் விவாதங்களிலும் நீங்களிருந்தீர்களா?" என்பது உங்களது மற்றொரு கேள்வி.
பதில்: இல்லை.அப்படி இருந்ததாக இந்தப் பதிவில் மட்டுமல்ல நான் எங்கும் குறிப்பிடவில்லை.முதலில் நான் இணைய அறிஞர் அல்ல்.இணையப் பயனர்.97ல் நடந்த மாநாட்டிற்குப் பிறகு, எழுத்துருக்களைத் தரப்படுத்துவது
பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்து விட்ட்ன. 1999ல் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் வரவேற்புரையில் முரசொலி மாறன் குறிப்பிட்டது போல, "இன்று சுமார் 350 மென்பொருள்கள்
கணிப்பொறியில் உலாவந்து கொண்டிருக்கின்றன். இது உண்மையிலேயே பெருமைக்குரிய செய்திதான்.ஆனால் ஒவ்வொருவரும் ஒரு தமிழ் வடிவக் குறியீட்டு முறையைக் கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது -
ஒவ்வொருவரும் தனித்தனி அலைவரிசையில் ஒலி பரப்புவது போல.)விளைவு என்ன? இன்று இண்டர்நெட் இணையத்தில் 350 "தமிழ்கள்" இடம்பெற்றிருக்கின்றன. அதாவது - ஒரு மென்பொருளில் தயாரிக்கப்பட்ட
தமிழ்ச் சொற்களை மற்றொன்று ஏற்றுக்கொள்ளாது. இதனால் கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும் தமிழர்கள் தனித் தனித் தீவுகளாக தொடர்பின்றி நிற்கிறார்கள்"


நான் மென்பொருள் வல்லுநர் அல்ல. இந்த பிரசினைக்குத் தீர்வை முன்மொழியக் கூடிய தொழில்நுட்ப அறிவு என்னிடம் இல்லை. எனவே எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற மனநிலையில் ஒதுங்கி இருந்தேன். அதை என் வலையுலக நண்பர்க்ளிடமும் தெரிவித்து விட்டேன். பின்னால் எல்லாம் முடிந்து (99 மாநாட்டிற்குப் பின்னும் சர்ர்ச்சை தொடர்ந்து கொண்டுதானிருந்தது) யூனிக்கோடின் வருகைக்குப் பின்னர்தான்
இணையத்தில் தமிழ் பற்றிய முயற்சிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். நான் தகவல் பரிமாற்றத் (Communication) துறையைச் சேர்ந்தவன். ஆளுக்கொரு எழுத்துரு வைத்துக் கொண்டு நான் எழுதுவது உனக்குப் புரியாது என்று சர்ச்சித்துக் கொண்டிருக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை?


"மைக்ரோஃஸொப்டின் ஒருகூற்றினைத் தமிழ்ப்படுத்தும் நோக்குடன் இறங்கியபோது (இதைக்கூட தன்னார்வத்தொண்டெனச் சொல்லிவிட முடியுமாவெனத் தெரியவில்லை)"


சந்தேகமே வேண்டாம். அந்த முயற்சிக்காக நான் ஒரு பைசா, சதம், சென்ட், டாலர், எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.பொருளாகவும் பெற்றுக் கொள்ள்வில்லை. அவர்கள் ஒரு மென் பொருளை அளிக்க முன் வந்த போதுகூட அதை விலை கொடுத்துத்தான் வாங்கிக் கொண்டேன். முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டாகத்தான் செய்தேன்.இரவு 10 மணி செய்தி அறிக்கை ஒளிபரப்பான பின் வீடு திரும்பி, இரவு 12 , 1 மணிவரை இதில் கவனம் செலுத்திதான் அந்தப் பணியை செய்து முடித்தேன். தமிழ் ஆர்வம் உங்களுக்கு மட்டும்தான் உரியதா? இந்த அணில்களும் முதுகில் மண் சுமக்க முடியும்.


கணிச் சொற்களை நான்தான் முதலில் செய்தேன் என்றும் எங்கும் சொல்லவில்லை. நான் மேற்கொண்ட முயற்சிக்கு முன்னரே. பல அகராதிகள் வழக்கில் இருந்தன என்பதையும் நானறிவேன். நான் சொல்லியிருப்பதெல்லாம் நான் அந்த முயற்சியில் பங்களித்தேன் என்பதைத்தான்.



யார் யார் எப்போது வலைப்பதிவுகள் துவக்கினார்கள் என்பதெல்லாம் அவரர்கள் profile பக்த்திலேயே இருக்கிறது. (அப்போது எல்லோரும் பிளாக்கரில்தான் துவங்கினார்கள்) யார் வேண்டுமானாலும் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.


இனி 'சுதேசமித்ரன் பாரம்பரியம்' பற்றி:


உலகில் எந்த வரலாறுமே எழுதுபவரின் பக்கச் சார்போடுதான் எழுதப்பட்டு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. 1857ல் நடந்த்து ஆங்கிலேயர்கள் பார்வையில் சிப்பாய் 'கலகம்'. இந்தியர்களுக்கு அது முதல் சுதந்திரப் போர்.



தமிழ் இலக்கிய வரலாறும் இதற்கு விலக்கல்ல. தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர் வ்.வே.சு எனவும் இல்லை பாரதி எனவும், வட்டுகோட்டை ஆர்னல்டு என்ற சதாசிவம் என்றும் அதற்கும் முன்னரே சிங்கப்பூர் மக்தூம் சாய்பு எழுதிவிட்டார் எனவும் வாதங்கள் உண்டு.தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் இல்லை, அது ஆதியோர் அவதானி என்ற கவிதை வடிவில் எழுதப்பட்ட நாவல்தான் எனச் சிட்டியும் சிவபாத சுந்தரமும் பிரிட்டீஷ் மியூசியத்திலிருந்த பிரதி ஒன்றைத் தூசி தட்டி எடுத்து நிறுவினார்கள். ஆனால் அண்மையில் கூட, இதை ஏற்க மறுத்த கி.ராஜநாராயணனுக்கும் எனக்குமிடையே மேடை ஒன்றிலேயே
பகிரங்க மோதல் நடந்தது.



சுதேசமிதரனுக்கு முன்பாக இலங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் தமிழ்ப் பத்திரிகைகள் இருந்திருக்கலாம். "மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக் கூறுகிறார்: "(கடந்த 130 ஆண்டுகளில்) மலேசியாவின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் (நாள், வார, மாத இதழ்கள் பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது
காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்குற்றியிருக்க வேண்டும்" என முல்லை இராமையாவை
மேற்கோள் காட்டி மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம், என்ற கட்டுரையில் ரெ. கார்த்திகேசு எழுதுகிறார்.
(காண்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=25961&mode=linear) ரெ.காவின் கட்டுரை 2007ல் எழுதப்பட்டதாக வைத்துக் கொண்டால், மலேசியாவின் இதழியல் வரலாறு 1877ல் துவங்குவதாக ஆகிறது. முல்லை இராமையா இதை எழுதியது எப்போது எனத் தெரியவில்லை. அது நிச்சியம்
ரெ.கா எழுதியதற்கு முன்னர்தான். அப்படியான்ல் மலேசியாவின் இதழியல் வரலாறு 1877க்கு முன்பு கூடத் துவங்கியிருக்கக்கூடும்.


நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு மொழியில் இதெல்லாம் இயல்பானது. அதே போல வரலாறு எழுதுகிறவர்கள் அவர்களுக்குரிய சார்புகளோடுதான் எழுதுகிறார்கள். அவரவர் சார்பு அவரவர்களுக்கு;



உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள முத்தையாவின் மேற்கோளையே எடுத்துக் கொள்வோம்:
முத்தையாவின் கட்டுரையில் உள்ள் ராஜவிருத்தி போதினி, தினவர்த்தமானி, சேலம் தேசாபிமமனி பற்றியவாக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தடித்த எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.(Emaphasis முத்தையாவினுடையது அல்ல, என்று கூட நீங்கள் குறிப்பிடவில்லை)



அதே முத்தையா அதே கட்டுரையில் எழுதியுள்ள வரிகளை வாசிப்பவனின் கவனத்திலிருந்து ம்றைத்துவிட்டீர்கள் அவை இவை:


When Subramania Aiyer quit The Hindu 1898, feeling so fettered by his partner that he could not wage his impassioned campaigns for social reforms, he made the Swadesamitran his full-time business. Operating from premises at the rear of Whiteaway's, he made it a thrice-weekly paper, then, in 1899, the first Tamil daily. It was to enjoy this status for 17 years - and even thereafter did not meet any real challenge till Swararajya started in 1925, Tamil Nadu in 1927 and Dinamani in 1934, but they too were unable to shake the Swadesamitran's primacy till the 1950s. (இதில் தடித்த எழுத்துக்களில் பகுதி என்னால் இடப்பட்டது)


எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள முத்தையாவிற்குமே சுதேசமித்திரன்தான் முதல் தமிழ் நாளிதழ். அதை ஏன் நீங்கள் மறைத்துவிட்டீர்கள்? இது என்ன பாரம்பரியம்?


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தக் குறிப்பை நீங்கள் 'நம்பிக்கைக்குரியது' அல்ல எனக் கருதும் இந்து நாளிதழிலிருந்தே எடுத்திருக்கிறீர்கள்!நம்பிக்கைக்குரியதாக இல்லாத ஒரு நாளிதழில்
வெளியாகும் ஒரு நறுக்கை நம்பி நீங்கள் விவாதத்தைக் கட்டமைப்பது விநோதமாக இருக்கிறது. அதை நம்பித்தானே அதை இங்கு பயன்படுத்துகிறீர்க்ள்?


உங்களது இந்த ஒரு செயலே இந்து நாளிதழ் நம்பிக்கைக்குரியது என நிரூபிக்கும். விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் மீது உலகில் எத்தகைய நம்பிக்கை நிலவுகிறது என்பதை அவை எத்தனை நாடுக்ளில் தடை
செய்யப்பட்டிருக்கின்றன என்று கணக்கிட்டாலே போதுமானது.


பின்னூட்டங்களில் (உங்களுக்கு அவை பொன்னூட்டமாக இருக்கலாம்) மட்டையடித்துக் கொண்டிருக்காமல், ஆக்கபூர்வமாக ஏதாவ்து செய்யலாமே?


நீங்கள் ஏன் ஒரு வரலாறு- உங்கள் சார்புடனேயே இருக்கட்டும்- எழுதக்கூடாது?

Sunday, July 08, 2007

தொட்டுப் போனவர்களுக்கு நன்றி

நா. கோவிந்தசாமியும் நானும்
நன்றி சொல்வதற்காகத்தான் இந்தப் பதிவு. இதை ஒரு பின்னூட்டமாகப் போடாமல் பதிவாகப் போடக் காரணம் உண்டு. அது அப்புறம்.

முதலில் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதற்காக? இரண்டு தவறுகள் நேர்ந்துவிட்டன.
1."படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சிங்கப்பூர் வழியே திரும்பி வந்தேன். அங்கு நான்யாங் பல்கலைக்கழகத்தில், என் நண்பரும் எழுத்தாளருமான டாக்டர். நா. கோவிந்தசாமி பணியாற்றிக் கொண்டிருந்தார்." என்று எழுதியிருந்தேன். நா.கோ. செய்த வேலைகளுக்கும் அதற்குப் பின் இருந்த கடுமையான உழைப்பிற்கும் டாக்டர் பட்டம் கொடுக்கலாம்தான். ஆனால் யாரும் கொடுக்கலையே. வசூல் ராஜாவிற்கெல்லாம் டாகடர் பட்டம் கொடுக்கிற போது மெய்யான அறிஞரான அவருக்கும் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் கொடுக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது அவரை 'டாக்டர்' கோவிந்தசாமி என்று நான் எழுதியது தவறுதான். பேராசிரியர் நா.கோவிந்தசாமி என்றுதான் எழுத வந்தேன். அதற்குள் ஏதோ தொலைபேசி அழைப்பிற்குக் காது கொடுத்துவிட்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தபோது, அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துவிட்டேன்.அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அந்தத் தவற்றை என் பதிவில் திருத்திக் கொண்டிருக்கிறேன்.
இந்த தவற்றைப் பெயரில்லா பெரிய்மனுசன் ஒருவர், எள்ளலோடு ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி. அந்தப் பெயரில்லாப்
பெரியமனுசன், என் பதிவுக்கு வந்து பின்னுட்டம் போட்ட்டுச் சொல்லலை. எனக்கு ஒரு மின்னஞசல் மூலமும் தெரிவிக்கவில்லை.தானாக ஒரு பதிவு எழுதியும் பதிவு செய்யவில்லை. போகிற போக்கில், வேறு ஒரு பதிவில்,
கிடைத்த சந்துக்குள் சந்தடி செய்துவிட்டுப் போயிருக்கிறார். என்றாலும் அவருக்கு நன்றி.

2. " காசியும் அவரது நண்பர்கள் உதவியோடு நிறைய உழைத்து அந்தத் திரட்டியை நிறுவினார்" என்று தமிழ்மணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்த
வரிகளை மீண்டும் படிக்கிற போது, காசி தன் நண்பர்களோடு சேர்ந்து தமிழ்மணம் திரட்டியை ஆரம்பித்தார் என்று சிலர் அர்த்தம் கொள்ள
வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது. அப்படிப் புரிந்து கொண்டால் அது தவ்றாகிவிடும். காசி த்னியொருவராக உழைத்துத்தான் அந்தத் திரட்டியை
நிறுவினார். அவ்ர் அதை நிறுவிய பின் அதை நிர்வகிக்கும் பொறுப்பில் அவரது நண்பர்கள் இணைந்து கொண்டார்கள். அந்த நண்பர்கள் நிர்வாகத்தில்
செலுத்திய உழைப்பும் ஆர்வமும் கணிசமானதுதான். ஆனால் தமிழ்மணத்தை ஆரம்பித்தது காசிதான். இதையும் பதிவில் சரி செய்திருக்கிறேன்.
இனி இரண்டு பதிவுகளுக்குமான நன்றி. ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி நன்றி சொல்ல வேண்டும்தான். ஆனால் இந்தப்பதிவுகளையே, அல்லது
எட்டுப் போடுகிற விளையாட்டையே ஏதோ இமேஜை நிலைநிறுத்திக்கிற உத்தி என்றெல்லாம் ஒன்றிரண்டு பேர் முணுமுணுத்துக் கொண்டு
இருக்காங்க. அப்படியிருக்கும் போது பெயர் சொல்லி நன்றி சொல்ல ஆரம்பித்தால் ஏதோ பின்னூட்டமிட்டவர்களது நல்ல புத்தகத்தில் நான் இடம் பெற முயற்சிப்பதாகவோ, அல்லது ரசிகர் மன்றம் ஆரம்பிப்பதாகவோ புரளி கிளப்பலாம். எனவே தனித்தனியாகப் பெயர் சொல்லிப் பின்னூட்டம் போட்டு,
(பின்னூட்டத்தின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கிக் கொண்டு) நன்றி சொல்லப்போவதில்லை. சிலரது பின்னூட்டங்கள் சிந்தனையைக் கிளப்பின. அந்த சிந்தனைகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
கலக்கிட்டீங்க, அசத்திடீங்க, சூப்பர், சுவாரஸ்யமாக இருந்தது, என்றெல்லாம் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய
செந்தழல் ரவிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, ஒரு சில வார்த்தைகள்.இது போன்ற அனுபவங்கள் ஒரு பத்திரிகையாளனுக்குக் கிடைக்கிற
அனுபவங்க்ள். நான் பத்திரிகையாளனாக இல்லாமல் கணினி நிரல் எழுதுபவனாகவோ, வங்கிக் கணக்கு எழுதுகிறவனாகவோ பணியாற்றியிருந்தால் இந்த அனுபவங்கள் கிடைத்திருக்காது. இது மாலனுக்குக் கிடைத்த அனுபவங்கள் அல்ல்.மாலன் என்ற பத்த்ரிகையாளனுக்குக் கிடைத்த அனுபவங்கள். நீங்களும் ஒரு பத்திரிகையாளனாக 25, 30 வருஷம் குப்பை கொட்டினால் உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் கிடைக்க்லாம்.

'நீங்கள் போட்ட விதையால் வளர்ந்த மரத்தின் பழங்களைத்தான் நாங்கள் இன்று சுவைக்கிறோம்' என்று இலவசக் கொத்தனார் (சங்கப் புலவர் மாதிரி
என்ன ஒரு பெயர்!) தெரிவித்திருக்கிற நன்றியோ, மகிழ்ச்சியோ எனக்குரியது அல்ல.கணினியில் தமிழ் இடம் பெற உழைத்த பெருமக்கள் பலர். முதல்
தமிழ் எழுத்துருவை உருவாக்கிய முனைவர் ஆதமி ஸ்ரீநிவாசன், பேராசிரியர்.ஜார்ஜ் ஹார்ட், மயிலை எழுத்துருவை உருவாக்கிய
முனைவர்.கல்யாணசுந்தரம், பாரதி என்ற நிரலியை உருவாக்கிய முத்துக்கிருஷணன், .இணையத்தில் தமிழ் தோன்ற உழைத்த பேராசிரியர்
நா.கோவிந்தசாமி, கணியில் தமிழில் எழுதுவதை எளிமையாக்கிய முத்து நெடுமாறன், பாலாபிள்ளை, முகுந்தராஜ், அன்பரசன், வலைப்பதிவுகள்
வலுப்பெறக் காரணமான பத்ரி, காசி, மதி என் அந்தப் பட்டியல் நெடியது. நீங்கள், நான், எதிர்காலத் தலைமுறை எல்லாம் நன்றி பாரட்ட வேண்டியது
இவர்களுக்குத்தான். மதுமிதா வலைப்பதிவுகள் பற்றி ஒரு நூல் எழுதப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். யாராவது கண்னியில் தமிழ் வந்த வளர்ந்த வரலாற்றை எழுதலாம். அதை வலைப்பதிவுகளில் எழுதினால் உடனுக்குடன் தகவல் பிழைகள் ஏற்படாமல் சரி செய்து கொள்ள முடியும்.

"தமிழை இணையத்தில் பார்ப்பதற்காக இத்தனை பேர் பட்ட பாடுகளை பார்க்கையில், மறுபடியும் கொஞ்சம் சுறுசுறுப்பாக எழுதலாமா என்று கூடத்
தோன்றுகிறது. ஆனால் இன்னொரு ஓரத்தில் " அடப் போங்கப்பா..நம்முடைய நேரத்தை உபயோகப்படுத்தி வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா
என்றும் தோன்றி விடுகிறது. இப்போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இணையத்தில் கோஷ்டியும் அரசியலும் மலிந்த பிறகு முன்னைப் போல உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் எழுத முடிவதில்லை. தமிழனின் சாபக்கேடு அவன் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த வசதிகளையே அவன் உபயோகிக்க விடாது.." என்ற மூக்குசுந்தரின் மனச் சோர்வு, பலருக்கும் தோன்றி மறைகிற ஒரு சோர்வு. "வலைப் பூக்களில் என்ன ரிப் வான் விங்கிள் மாற்றம்?அதே சாதி அரசியல் தான்.அதே அசிங்க,மிரட்டல் பின்னோட்டங்கள்தான்!" என்ற சீனியின் ஆதங்கமும் இப்படிப்பட்ட ஒரு மனச் சோர்வின் வெளிப்பாடுதான்.எனக்கும் கூட இந்தச் சோர்வு ஒரு தருணத்தில் ஏற்பட்டதுண்டு.இது போன்ற மனச்சோர்வின் காரணமாக வலையில் எழுத வந்த பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டார்கள்.வேறு வெளியீட்டு வாய்ப்புப் பெற்றவர்கள் ' என்னத்துக்கு? தலையெழுத்தா?' என்ற எண்ணம் தோன்றி விலகிப் போவது இயல்புதான். இங்கு எழுதாததால் அவர்களுக்கு இழப்பு ஒன்றும் இல்லை.
இது ஒருவகையான கலாசாரப் பிரசினை என்று எனக்குத் தோன்றுகிறது.நம் சமூகத்தில் சில நோய்க்கூறான அம்சங்கள் நாளுக்கு நாள் வலுப்
பெற்றுவருகின்றன. விவாதங்களில் பங்கேற்பதற்கான குறைந்தபட்சத் தகுதிகளான, பொறையுடமை, (tolerance) சமனநிலை (Balance) ஆகியவற்றை
விரைவில் இழந்துவிடும் நிலையக் காண்கிறேன். ஒரு பிரசினையில், ஒரு விஷயத்தில் தான் மேற்கொண்டுள்ள நிலைக்கு மாறாக இன்னொருவருக்கு
வேறு கருத்து, நிலைப்பாடு இருக்குமானால், அப்படி ஒரு மாற்று நிலை எடுத்ததற்காக் அவரைக் கண்ட துண்டமாக வெட்டிக் காக்காய்க்குப் போட்டுவிட வேண்டுமெனத் துடிக்கிறார்கள். 'If you are not with me you are against me' என்ற பயங்கரவாதக் குழுக்களின், Fundamentalist குழுக்களின் மனோபாவம் வலைப்பதிவுகளுக்கும் வந்துவிட்டது.

பொது அரங்கில் ஒருவரது கருத்துக்களை தன்னுடைய கருத்துக்களால் வெல்ல முடியாது என்ற நிலை வரும்போதோ, அல்லது அப்படி ஒரு பதற்றம் ஏற்படும் போதோ, எதிராளியை personal levelல் devalue செய்யத் துவங்குகிறார்கள். அப்படி அந்த நபரை devalue செய்வதன் மூலம் அவரது
கருத்துக்களை devalue செய்ய முடியும் என்றோ, அல்லது செய்துவிட்டதாகவோ மனநிறைவு கொள்கிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அப்படி devalue செய்யப்படுகிற நபர் பலநேரங்களில் வலைப்பதிவுகளை எழுதுபவராகவோ, படிப்பவராகவோ இருப்பதில்லை என்பதால் அவருக்கு பதிலளிக்க வாய்ப்பே தரபடாமல் இந்தத் தாக்குதல் தொடரப்படுகிறது. அவர் பதிலளிக்க மாட்டார் என்ற தெம்பில் மேலும் மேலும் அவர் மீது எள்ளலும் கேலியும் தொடர்கிறது. சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேயே கும்பலாக்ச் சென்று சில பொறுக்கிகள் கேலியும் கிண்டலும் செய்யும் போது, அவள் ஏதும் பேச முடியாமல் நடந்து போக அந்தப் பொறுக்கிகள் உற்சாகம் பெறுகிறார்கள் அல்ல்வா அதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் அதிகம் இல்லை.நம்முடைய அரசியல் கலாசாரத்திலிருந்து பெறப்பட்ட ஒரு சமூக விளைவு இது
இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? 1.இவற்றிலிருந்து விலகி நிற்கும் பொருட்டு வலைப்பதிவுகளிலிருந்தே விலகி நிற்பது; 2.'சண்டைக்கார'
பதிவுகளைத் திறந்தே பார்க்காமல் அலட்சியப்படுத்துவது; 3.சண்டைக்காரர்களை உசுப்பிவிடும் விஷயங்கள் பற்றி வாயே திறக்காமல், முக்கியமில்லாத விஷயங்கள், சின்னஞ் சிறுகதைகள் பேசிப் பொழுதைக் கழிப்பது; இந்த மூன்றில் ஏதோ ஒன்றை அவரவர் வசதிப்படி செய்து கொண்டிருக்கிறோம்.
நான்காவதாக இந்தப் பதிவுகளுக்கு பதிலாக் ஆரோக்கியமான பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யலாம்.ஆனால் இது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல. பாலில் தண்ணீர் அதிகம் கலக்கப்பட்டுவிட்டதென்றால், தண்ணீர் கலக்காத பாலையோ, பால்பவுடரையோ கூடுதலாகச் சேர்த்துப் பாலின் தரத்தை உயர்த்த முடியும். ஆனால் பாலில் விஷம் கலக்கப்பட்டுவிட்டதென்றால், அந்தப் பாலைக் குப்பையில் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.ஊரில் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதென்றால் அவற்றிடமிருந்து விலகிப் போவது ஒரு வழி. அவ்ற்றைப் பிடிக்க நகர்மன்றத்திடம் மன்றாடுவது ஒரு வழி. நகர்மன்ற்ம் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மறுத்ததென்றால் நகர்மன்றத்தையே மாற்ற முயற்சிப்பது
இன்னொரு வழி. தனிந்பர் துதிகளுக்கோ, தாக்குதல்களுக்கோ இடமளிக்காத பதிவுகளை, சுயக் காதலைத் துறந்த பதிவுகளை, ஜல்லியடிக்காத,
கும்மியடிக்காத சாரமுள்ள பதிவுகளை மட்டும் அனுமதிக்கிற ஒரு திரட்டியை உருவாக்கமுடியாதா? திரட்டியைப் பற்றி யோசிக்க வேண்டிய காரணம்,
அது வெறும் தொழில்நுட்ப வசதி அல்ல, ஒரு பொது அரங்கு என்பதால்.

அப்படி ஒரு 'இலட்சியப் பொது அரங்கு' ஏற்படுகிற வரை சில நடத்தை நெறிகளை நாம் நமது பதிவுகள், பின்னூட்டங்களைப் பொறுத்தவரை
பின்பற்றலாம்: அவை:
  1. தனிநபர் புகழ்ச்சி, தனிந்பர் தாக்குதல் இல்லாமல் பதிவுகளை எழுதுவேன். பின்னூட்டம் இடுவேன், பின்னூட்டங்களைப் பிரசுரிப்பேன்.
  2. எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களை அனுமதியேன்
  3. மாற்றுக் கருத்துக்களை பொறுமையுடனும், சமனுடனும் அணுக முயற்சிப்பேன்;
  4. ஒருவரது கருத்துக்களை மறுப்ப்தையோ, நிராகரிப்பதையோ, தரவுகளின் அடிப்படையில் செய்வேன்
  5. தான் சார்ந்துள்ள ஜாதி, மதம், அரசியல் கட்சி, அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரம் இவற்றை மற்றவர்கள் மீது திணிக்கும் வன்முறையை
    அனுமதியேன்.
  6. வெறும் பரபரப்பிற்காக்வோ, கவனம் பெறவோ, எழுதுவதையும் அப்படி எழுதுவதையே தங்கள் இயல்பாகக் கொண்டவர்களையும் தவிர்ப்பேன்
    ஓசை செல்வா, நீங்கள் கேட்டிருந்த " Many to Many communication ல் (web/blog/groups etc) உள்ள சவால்கள்" பற்றிய கேள்விக்கான விடைகளில் சில மேலே உள்ளன. இவற்றைத் தொடர்ந்து இன்னொருநாள் விவாதிப்போம்- ஒர் தனிப்பதிவாக
    "எனக்கு இது நாள் வரை உங்கள் எழுத்துகள் மீது எந்த ஒரு பிடிப்போ நம்பிக்கையோ இருந்தது கிடையாது, உங்களை மட்டும் அல்ல இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அந்த பட்டியலில். ஆனால் உங்கள் எட்டுப்பதிவை படித்த பிறகு ,எனது நிலைப்பாட்டினை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமோ என்று தோன்றுகிறது. இது நாள் வரையில் சன் டி.வியில் தங்களை காணும் பொழுது எல்லாம் வந்துடாங்கய்யானு தான் சலித்துக்கொள்வேன் :-)) " என்று வவ்வால் எழுதியிருந்தார்.
    நன்றி வவ்வால். உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்து என்ற ஒன்று இதுவரை எழுதப்படவே இல்லை. பாரதி மீதும், திருவள்ளுவர் மீதும், ஷேக்ஸ்பியர் மீதும் கூட விமரிசனங்கள் வைக்கப்பட்டதுண்டு. இதற்குப் பல காரணங்கள். பெரும்பாலும் ஒருவரது எழுத்தைப் படிக்கும் முன்னர் அவரைப் பற்றி ஏதோ ஒரு விதத்தில் கேள்விப்பட்டுவிடுகிறோம். அல்லது அவரை வேறு ஒரு தளத்தில் 'சந்தித்து' விடுகிறோம். இது அவரது எழுத்தைப் பற்றி நமக்குள் அதைப் படிக்காமலேயே ஒருவித மனச்சாய்வை ஏற்படுத்தி விடுகிறது. அவரது மூக்கு, அல்லது அவரது ஜாதி, அல்லது அவரது அரசியல் சார்பு, அல்லது அவர் தனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரைப் பற்றி வெளியிட்டிருந்த கருத்து ஏதோ ஒன்று அவருக்கு எதிரான ஓர்
    மனோபாவத்தைத் தோற்றுவித்துவிடுவதுண்டு. பெரும்பாலும் நாம் ஒரு தனிநபரை ஊடகங்கள் ஏற்படுத்திய சில பிம்பங்கள், பிரமைகளுக்கு அப்பால் காண்பதில்லை. என் எழுத்துக்களையோ அல்லது என்னையோ உங்களுக்குப் பிடிக்காமல் போனதற்கும் காரணங்கள் இருக்கலாம். நான் கேட்டுக் கொள்வதெல்லாம், என்னை மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பாளியையும் அவனது ப்டைப்புக்களைப் படித்து, ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது அவனை நீங்கள் நிராகரிக்கக் கூடச் செய்யலாம்.ஆனால் அது ஒரு தேர்ந்த முடிவு.(Discerning opinion). ஒருவேளை நீங்கள் என்னைப் படித்ததற்குப் பின்தான், உங்களது முடிவுகளுக்கு வந்திருந்தீர்கள் என்றால் அதுவும் எனக்கு உடன்பாடுதான். உங்கள் கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை உண்டு.

நான் அழைப்பு விடுத்தவர்களில் உதயச் செல்வி, நிலா, மதுமிதா, ராம்கி, ராகவன் தம்பி ஆகியோர் எழுத இசைந்திருக்கிறார்கள்.உண்மைத் தமிழன் எழுத ஒன்றுமில்லை என நாசூக்காக மறுத்துவிட்டார். அண்ணாக்கண்ணன், பாலுமணிமாறன் ஆகியோரிடமிருந்து எதிர்வினைகள் ஏதுமில்லை. இதுதான்
இன்றைய எழுத இசைந்தவர்களுக்கும், எழுத இயலாது போனவர்களுக்கும் கூட நன்றி
. .


Thursday, July 05, 2007

விட்டுப் போன எட்டு

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது.
***

'தமிழரது அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்' என்று பாரதியின் ஒரு மகா வாக்கியம் ஒன்றுண்டு. தமிழன் என்ற பெயரில் எழுதியதாலோ என்னவோ, பாரதி அந்த வாக்கியத்தை எனக்காகவே சொன்னமாதிரி எனக்கு ஒரு நினைப்பு. அந்த நினைப்பில் (அசட்டுத்) துணிச்சலான காரியங்களை அவ்வப்போது செய்வதுண்டு.

அப்படி செய்த ஒரு காரியம்தான் ·புளோரிடா பல்கலைக்கழகத்தில் என் முதுகலைப்படிப்பின்போது, மின்னிதழிற்கு ஒரு முன்மாதிரியை (Prototype for an electronic newspaper) உருவாக்குவது. அமெரிக்கா கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்பு வரை கணியியில் பழக்கம் ஏதும் கிடையாது. அப்பே¡து வீட்டில் கணினி இல்லை. இந்தியா டுடே அலுவலகத்திலும் ஆசிரியப் பகுதியில் கணினி வந்திருக்கவில்லை. ஆனால் நான் என் புராஜக்கெட்டிற்கு நான் எடுத்துக் கொண்ட விஷயம் மின்னிதழிற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்குவது. அந்த முன் மாதிரியை ஒட்டிப் பல்கலை நிர்வாகம் ஒரு மின்னிதழை நடத்தக்கூடும் எனப் பேச்சிருந்ததால் மாணவர்களிடையே ஒரு உற்சாகமான ஆர்வம் இருந்தது.

நாங்கள் ஏழு பேர் ஒரு குழு. இதழியல் கல்லூரியிலிருந்து நாங்கள் மூவர். கணினிப் பொறியியல் மாணவர்கள் இருவர், ஓவியக் கல்லூரியிலிருந்து ஒருவர். சட்ட மாணவர் ஒருவர். இந்த மாதிரி மூன்று குழுக்கள்.

அப்போது BBS என்று ஒன்றிருந்தது. Bullettin Board System என்ற அது கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் LAN வழியே செயல்படுவது. முந்திரிக்கொட்டை முதல் குழு அந்தத் தொழில் நுட்பத்தை எடுத்துக் கொண்டது. இன்னொரு குழு, AOL நெட்வொட்க்கைப் பயன்படுத்தத் தீர்மானித்தது. எங்கள் மின்னிதழ் உலகு தழுவியதாக இருக்க வேண்டும், மல்டி மீடியா இருக்க வேண்டும் என்று பேராசை எங்களுக்கு. ஆனால் அப்போது internet explorer வந்திருக்கவில்லை. நெட்ஸ்கேப் அறிமுக நிலையில் இருந்ததாக ஞாபகம்.

என்னடா, ஆரம்பமே கண்ணைக் கட்டுதே என்று திகைத்துப் போய், என்ன செய்வது என்று ஆங்காங்கே விசாரித்த போது, NASA வின் துணை அமைப்புக்களில் ஒன்றான, NCSCA (National Center for Super Computing Applications) என்ற ஒரு அமைப்பிடம், மொசைக் என்ற ப்ரெளசர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி இரவல் வாங்கி வந்து வேலையை ஆரம்பித்தோம். என் வேலை பத்திரிகைக்கு விஷயம் தயாரிப்பது, என் சகா எழுதும் விஷயத்தை எடிட் செய்வது, எல்லா விஷயங்களையும் ஹைப்பர் டெக்ஸ்டில் எழுதி அதாவது tag போட்டு வலையேற்றத் தயாராக வைப்பது. இப்போது போல் HTML என்ற பித்தானை அமுக்கி எழுதியவற்றை அப்போது மாற்றிவிட முடியாது. எல்லாவற்றையும் <-- -/> என்று மாற்றியாக வேண்டும். அதனால் மணிக்கணக்கில் கணினி முன் உட்கார்திருக்க வேண்டி வந்தது. இந்தக் கணினிக் காதல் பிறந்தது அப்போதுதான்.

படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சிங்கப்பூர் வழியே திரும்பி வந்தேன். அங்கு நான்யாங் பல்கலைக்கழகத்தில், என் நண்பரும் எழுத்தாளருமான பேராசிரியர். நா. கோவிந்தசாமி பணியாற்றிக் கொண்டிருந்தார். கணினிக்குள் தமிழைக் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவர். கணியன் என்ற எழுத்துருவை உருவாக்கியவர். அப்போது தமிழ் கணினிக்குள் வந்திருந்ததே தவிர இணையத்திற்குள் வந்திருக்கவில்லை. என் மொசைக் அனுபவங்களையும், HTML அனுபவங்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த நிமிடமே ஏதாவது செய்து இணையத்தில் தமிழை ஏற்றிவிடமுடியுமா என கோவிந்தசாமி துடித்தார். நான்யாங் பாலிடெக்க்னிக்கில் அவரது அறையில் அமர்ந்து அவரது கணினியில் சில தமிழ்வாக்கியங்களை ஹைப்பர் டெக்ஸ்டில் எழுதிப்பார்த்தோம். ஆனால் இணையத்தில் ஏற்றிப்பார்த்தால் தரப்படுத்தப்படாத எழுத்துரு என்பதால் உதைத்தது.

கிட்டத் தட்ட ஒருவருடம் கழித்து. (1995 அக்டோபர் என ஞாபகம்) திடீரென்று ஒரு நாளிரவு கோவிந்தசாமி போனில் கூப்பிட்டார்." போட்டாச்சு மாலன், போட்டாச்சு!" என்று கூவினார். எனக்கு அவர் விளக்காமலே என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்று புரிந்து விட்டது. " என்ன போட்டீர்கள், கவிதையா, கதையா?" "கவிதைதான். சோதனை முயற்சி என்பதால் சுருக்கமாக நான்கு வரி போட்டுப்பார்க்கலாம் என்று கவிதைதான் போட்டேன்" "என்ன கவிதை? அகர முதல எழுத்தெல்லாமா?" " படிக்கிறேன் கேளுங்க: யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவ்வற்றோரன்ன......" கணியன் பூங்குன்றனின் கவிதை முழுக்க அவர் குரலில் வாசித்தார்." பொருத்தமான கவிதைதான். ஆமாம் தீதும்
நன்றும் பிறர் தர வாரா. நம் இணையத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.நமக்கு, அதாவது தமிழர்களுக்கு வேறு யார் செய்து தரப்போகிறார்கள்?" தொலைபேசியை வைத்து விட்டேன். அன்று நான் தூங்க வெகு நேரம் ஆயிற்று. கோவிந்தசாமியைப் போல் என் மனமும் ஓர் விவரிக்க முடியாத சந்தோஷத்தால் நிரம்பியிருந்தது.

இன்று கோவிந்தசாமி இல்லை. ஆனால் இணையத்தை ஒவ்வொரு முறை துவக்கும் போதும் அவரை நினைத்துக் கொள்கிறேன். அவர் முயற்சியில் நடைபெற்ற முதல் தமிழ் இணைய மாநாட்டிலும் கலந்து கொண்டேன். அதில் என் ஹைப்பர் டெக்ஸ்ட் அனுபவங்கள் பற்றி கட்டுரை வாசித்தேன். அதன் கட்டுரைகளைத் தேர்வு செய்யும் குழுவிலும் இருந்தேன். அந்த உறவின் நீட்சிதான் உத்தமம் அமைப்பில் பங்கு கொண்டது. குமுதத்தின் மின்னிதழை வலையேற்றியது. மைக்ரோசா·ப்ட் அதன் MS Officeஐ தமிழ்ப்படுத்திய போது அதை validate செய்து கொடுத்தது. கணிச்சொல் அகராதியைத் தொகுத்தது. முதன்முதலில் யூனிகோடில் அமைந்த தமிழ் மின்னிதழ் திசைகளைத் துவக்கியது எல்லாம்.

எல்லாம் கோவிந்தசாமி போட்ட பிள்ளையார் சுழி.
****
நந்தகுமார் +2 படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறிய மாணவர்களில் ஒருவன். பொறியியற் பிரிவில், வரைவியல் (draftsmanship) பாடத்தில் முதலாவதாக வந்திருந்தான். அவனது கிராமம் வேலூருக்குப் பக்கத்தில். பிரதான சாலையில் இறங்கி ஆறு கீ.மீ தூரம் நடந்து போக வேண்டும்.அவனது கிராமத்தில் அவனது வீட்டிற்கு எங்கள் செய்தியாளர் போன போது, அவன் வீட்டில் இல்லை. கூரையில் எலி செத்து நாறிக் கொண்டிருந்தது. அதைத் தேடி எடுத்துப் போடக் கூட வீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லை. நந்தகுமாரும் அவனது தந்தையும் வயல் வேலைக்குப் போயிருந்தார்கள்.
குமுதம் பத்திரிகையிலிருந்து ஆள் வந்திருக்கிறது என்று தெரிந்ததும், அவனை எங்கெல்லாமோ தேடி சைக்கிளில் பின்னால் உட்கார்த்திக் கூட்டி வந்தார்கள். கிராமத்துப் பையன்களுக்கு நகரத்து ஆட்களிடம் உள்ள கூச்சத்தோடு அவன் பேசினான். இனிமேல் படிக்கப் போவதில்லை என்று தெ
ளிவாகச் சொன்னான். காரணம் சொல்ல மறுத்தான். சொல்லாமலே புரிந்தது, வறுமை. மேலும் படிப்பதானால் மேலும் செலவு. குடும்பத்திற்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறான் என்று புரிந்தது. +2வில் மாநிலத்தில் முதலாவதாக வந்துவிட்டு, வறுமை காரணமாக மேலே படிக்கப்போவதில்லை என்றால் என்ன கொடுமையடா இது! என்று மனம் குமுறிய எங்கள் செய்தியாளர் அவனிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவன் காது கொடுக்கத் தயாராக இல்லை. வெறுத்துப் போய் கிளம்ப ஆயத்தமானார் அவர். அப்போது சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது. நந்தகுமாரின் தாய் நிருபரின் காலில் விழுந்து, " என் மகனுக்கு ஏதாவது வழி பண்ணுங்கய்யா!" என்று மெல்ல விசும்பினார்.

மகன் மேலே படிக்க வேண்டும் எனத் தாய் விரும்புகிறார். அவர் எண்ணம் நியாமானது. மகன் மேலே படிக்கத் தயங்குகிறான். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. என்னசார் செய்யலாம் என நிருபர் என்னிடம் கேட்டார். தாய் விரும்புவதற்கும், மகன் தயங்குவதற்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். வறுமை. இதற்கு ஒரு தீர்வு கண்டால் நாம் பிரசினையைத் தீர்த்துவிடலாம் எனத் தோன்றியது.

அந்தவாரக் குமுதத்தில் நந்தகுமாரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். வாசகர்கள் மனதோடு அந்தக் கட்டுரை பேசியிருந்திருக்க வேண்டும். உலகின் பல மூலைகளிலிருந்தும் பண உதவிகள் வரத் துவங்கின. அவற்றில் பல எளிய நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தன. அந்தக் கொடைகளில் ஏதேனும் ஓரு ஓரத்தில் உழைப்பின் வாசனையோ, கண்ணீரின் ஈரமோ இருந்தது. இன்னும் நினைவிருக்கிறது. சென்னைப் பொது மருத்துவ மனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு செவிலியர், தன் பாரியான உடம்பைத் தூக்கிக் கொண்டு மூச்சு வாங்க மூன்றுமாடி ஏறி என் அறைக்கு வந்து காத்திருந்தார். அவருக்கு ஆர்த்ரைடீஸ் பிரசினை வேறு. நீங்கள் கீழே இருந்து இண்டர்காமில் அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்றேன்.
நான் கொடுக்கப்போவது ரொம்ப சொல்பத்தொகை, அதற்காக உங்களை இழுத்தடிப்பது சரியல்ல என்று பதிலளித்தார். அவர் கொடுத்தது அதிகம் அல்ல. சில நூறு ரூபாய்கள். அவர் தயங்கியபடியே, ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு சொன்னார்." நிறையக் கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனா ரிட்டையர் ஆயிட்டேன். பென்ஷன்தான் ஒரே வருமானம். ஸாரி.." என்று நிறைய ஸாரி சொன்னார், ஏதோ தப்புச் செய்து விட்டது போல.

இதற்கிடையில் நநதகுமார் நுழைவுத் தேர்வு எழுதினான். அந்த மதிப்பெண்களையும் கூட்டிப் பார்த்த போது அவனது ராங்க் மிகக் கீழே இருந்தது. அரசுக் கல்லூரிகளில் இலவச இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

தங்கபாலு, (ஆம். காங்கிரஸ் எம்.பி.தான்) சென்னைக்கருகில் ஒரு பொறியியற் கல்லூரி நடத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் நந்தகுமாரின் நி¨லயைச் சொல்லி ஒரு இடம் கொடுக்க முடியுமா எனக் கேட்டேன். நன்கொடையெல்லாம் கொடுக்க முடியாது என்று சொன்னேன். அவர் நன்கொடை மட்டுமல்ல, நான்காண்டுகளுக்கும் கல்விக் கட்டணமே வேண்டாம் என்று சொல்லி இடம் கொடுத்தார். முதலாண்டிற்கான புத்தகங்களை என் மகன் கொடுக்க முன் வந்தான்.

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடித்து நான்கு லட்ச ரூபாய் அளவில், புரசைவாக்கம் இந்தியன் வங்கியில் fixed deposit ஆகப் போட்டோம். ஆனால் அவன் தந்தைக்கு இவன் இங்கே இருந்து விவசாய வேலைக்குப் போனால் கூலியாவது வரும், சுமை குறையும் என நினைத்தோம், ஆனால் இவன் படிக்கப் பட்டணம் போனால், இன்னும் நான்கு வருஷங்களுக்குத் தன் ஒற்றை வருமானத்தில் குடுமபத்தை ஓட்ட வேண்டுமே என மலைப்பாக
இருந்தது. அதனால் அந்த fixed depositன் வட்டியை ஒரு சேவிங்க்ஸ் கணக்கில் போடச் சொல்லி அதை அவருக்கு அவ்வப்போது நந்தகுமார் மூலமே கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

குமுதத்தில் கட்டுரை வந்த கட்டுரையைப் படித்த என்.ராம், பிரண்ட்லைனில் நந்தகுமாரைப் பற்றி எழுதினார். அதைப்படித்த பிரதமர் தேவ கவுடா, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்டக் கலெக்டரை அணுகுமாறு கடிதம் அனுப்பினார். NIIT அவனுக்குக் கணினியில் பயிற்சி அளிக்க முன் வந்தது.

இன்று நந்தகுமார் ஒரு சிவில் என்ஜினியர். அவன் படித்து விட்டு வெளியே வந்த போது அவன் கையில் ஒரு தொழிற்பட்டமும், வங்கியில் நாலு லட்ச ரூபாய் பணமும், கணினிப்பயிற்சியும் இருந்தது.

நான் கையெழுத்துப் பத்திரிகை, இளைஞர் பத்திரிகை, இலக்கியப் பத்திரிகை, செய்திப்பத்திரிகை, வாரப்பத்திரிகை, தினசரிப் பத்திரிகை, சிறு பத்திரிகை, வணிகப் பத்திரிகை, இணையப்பத்திரிகை, உள்ளூர் வானொலி, உலக வானொலி, கல்லூரி வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று
எல்லா ஊடகங்களிலும் நிறையவே குப்பை கொட்டியிருக்கிறேன். இரண்டு பிரதமர்கள், ஒரு ஜனாதிபதியோடு, அவர்கள் பயணம் செய்த தனி விமானத்திலேயே வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறேன். பலநாட்டுத் தலைவர்கள் பங்கு கொண்ட காமன்வெல்த் மாநாடு, இந்திய ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு என்று பல அக்கப்போர்களை 'கவர்; செய்திருக்கிறேன். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவற்றின அழைப்பின் பேரில் உரையாற்றியிருக்கிறேன். சென்னா ரெட்டி, பர்னாலா என்ற இரு ஆளுநர்களால் இரு வேறு பல்கலைக்கழகங்களின் செனட்களில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். இவையெல்லாம் என் பத்திரிகை உலகப் பணிக்குக் கிடைத்த பேறுகள்தான். ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிக உயர்ந்ததாக நான் கருதுவது ஒரு நந்தகுமார் கரையேறிவர என் எழுத்து உதவியதைத்தான்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடுமபமும் ஒரு வறுமை நிலையில் இருக்கும் மாணவனுக்காவது கை கொடுப்பது என்ரு இறங்கினால், இந்தியாவில் வறுமையை ஒழித்துவிட முடியும் என்று நான் இப்போதும் நம்புகிறேன். அப்படி நடந்தால் நமக்கு, 'சிவாஜி'கள் தேவைப்படாது.

*****
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் (இப்போது இந்தியா மண்ணைக் கவ்வியதே அந்தப் போட்டி அல்ல, அதற்கும் முந்தியது) துவங்க இருந்த நேரத்தில் பத்ரியை ஒரு பேட்டிக்காக சன் நியூஸ் தொலைக்காட்சி அரங்கத்திற்கு அழைத்திருந்தோம். அவர்தான் முதலில் Blog பற்றி செ
¡ன்னார். அப்போது Blogகள் ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்தன. அதில் தமிழிலும் எழுத முடியுமா என்று நான் கேட்டேன். பத்ரி என் அலுவலகக் கணினியிலேயே ஏதோ சில முயற்சிகள் செய்து பார்த்தார். சரியாக வரவில்லை. வீட்டுக்குப் போய் முயற்சி பண்ணிவிட்டுச் சொல்கிறேன் என்றார். போய்ச் சில நிமிடங்களில் மின்னஞ்சல் வந்துவிட்டது. போகிற வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு போயிருப்பார் போல. பத்ரி அப்போது (இப்போதும் கூட இருக்கலாம்) இலவச பிளாக்கர் சேவைக்கு பதில் காசு கொடுத்துப் பயன்படுத்தும் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று ஞாபகம். அதில் 'டைனமிக் எழுத்துருக்களை' நிறுவிக் கொள்ள வாய்ப்பிருந்தது. அதனால் அவரது கணினியில் தமிழ் வேலை
செய்கிறதோ என்று எனக்கு சந்தேகம்.

முதலில் தகுதரத்தில் (TISCII)தான் எழுதிப் பார்த்தோம். என்னுடைய கணினியில், திசைகளுக்காக முத்து நெடுமாறன் கொடுத்த தமிழ் எழுத்துருக்கள் embeded ஆக இருந்தது. அதனால் எனக்கு இந்த வசதிகள் இல்லாத ஒருவர் இலவச பிளாக்கரில் எழுதிப்பார்த்து அது படிக்க முடிந்தால்தான் நிச்சியமாகும் எனத் தோன்றியது. அருணா அந்த பரிசோதனையை செய்தார்.

தமிழின் முதல் பத்து வலைப்பதிவர்கள் என்று பட்டியலிட்டால் அதில் பத்ரி, நான், அருணா, மதி எல்லோரும் இடம் பெறுவோம் என்றுதான் நினைக்கிறேன். நான் பிளாக்கரில் பதியத் துவங்கியது ஏப்ரல் 2003. பத்ரி பிப்ரவரி 2003ல். அருணா மே 2003 என்று ஞாபகம்.மதியும் ஏறத்தாழ பத்ரி துவங்கிய காலத்திலேயே தன் பதிவைத் துவக்கியதாக ஞாபகம்.

தமிழில் வலைப்பதிவுகள் துவங்கமுடியும் என்ற செய்தியை விரிவாக திசைகளில் எழுதினேன். ஆங்காங்கே மடலாடற்குழுக்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தவர்கள் வலைப்பதிவுகளை ஆரம்பித்தார்கள். மதி உடனடியாக ஆக்கபூர்வமாக ஒரு வேலை செய்தார். வலைப்பூக்களின் முக
வரிகளைத் திரட்டி தமிழ் வலைப்பதிவு என்று ஒரு இணையப் பக்கத்தை நிறுவினார். இப்போது நீங்கள் தமிழ்மணத்தில் பார்க்கிற மாதிரியான இடுகைகளைப் பற்றிய குறிப்பெல்லாம் இருக்காது. ஒரு பட்டியல் மட்டும் இருக்கும்.முகவரிகள் ஹைப்பர் லிங்க்கில். நீங்கள் சொடுக்கினால் பதிவிற்குப் போகலாம். ஆனால் அதுதான் தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி வருவதற்கு முன்னோடி. காசி நிறைய உழைத்து அந்தத் திரட்டியை நிறுவினார். வலைப்பதிவு எழுதுகிறவர்கள் உற்சாகம் அடைந்தார்கள். வலைப்பூக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென வளர ஆரம்பித்தது.

கூடவே பிரசினைகளும். ஆபாசப் பின்னூட்டங்கள், குறிப்பாக பெண்களின் பதிவுகளில் தலைகாட்டத் துவங்கின. போலிப் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன. அதையெல்லாம், திரட்டியை நிர்வகிப்பவர்கள் என்ற முறையில், தமிழ்மணம் நிர்வாகிகள் ஏதாவது செய்து நிறுத்த வேண்டும் என நான் நினைத்தேன். அதைக் கோரி வாதிட்டும் வந்தேன். ஆனால் அவர்கள் அவற்றைப் பற்றி ethics கோணத்தில் சிந்திப்பதை விட, தொழில்நுட்பக் கோணத்தில் பார்த்தார்கள். அது இயல்பானதுதான். ஆனால் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 'அட, போங்க்கப்பா' என்று பிளாக்கரிலிருந்து ஒதுங்கிக் கொண்டு யாகூ 360ல் வலைபதியத் துவங்கினேன்.

சில ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால், ரிப்வான் விங்கிள் 27 வருஷம் தூங்கி எழுந்து ஊருக்கு வந்து பார்த்தமாதிரி எல்லாம் மாறியிருக்கிறது. நிறைய புதிய பெயர்கள்.பழைய பெயர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. ஏதாவது எழுதுகிறார்களா, அவையெல்லாம் வேறு எங்கேனும் எழுதிக் கொண்டிருக்கிறார்களா, அல்லது காதும் காதும் வைத்தமாதிரி ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நாம்படித்த கல்லூரிக்கு 25 வருடம் கழித்துப் போய்ப் பார்த்தால் எப்படி ஒருவித ஏக்கமும், மகிழ்ச்சியுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது.

பத்ரியின் முதல் பதிவு கல்பனா சாவ்லாவின் மரணத்தைப் பற்றியது. சென்டிமென்டலாக யோசிப்பவர்களுக்குக் கொஞ்சம் சங்கடமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இன்று தமிழில் வலைப்பதிவுகள் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன். இணையத்தில் தமிழ் content அதிகரிக்க வேண்டும், அதுவும் யூனிக்கோடில் எழுதப்பட்ட தமிழ் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் திசைகள் துவக்கப்பட்டதின் நோக்கம். அதுதான் வலைப்பதிவுகளை வாசக உலகிற்கு நான் அறிமுகப்படுத்தி வைத்ததன் நோக்கமும்.

இன்று வலைப்பதிவுகள் இப்படிப் பல்கிப் பெருகியதற்கு ஏதோ ஒரு விதத்தில் நானும் ஆரம்பத்தில் ஒரு விதை போட்டேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவற்றின் உள்ளடக்கதில் செறிவைக் கூட்டவேண்டியது அடுத்த கட்ட பணி. திசைகளை மீண்டும் துவக்கிவிடலாமா என்று கூட கை அரிக்கிறது. பார்ப்போம். இன்ஷா அல்லாஹ். நல்லதே நடக்கட்டும்.

***
ஒரு சீசனில் சென்னையில் 'மெட்றாஸ் ஐ' வராதவர்களைச் சல்லடை போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. புத்தர் கடுகு வாங்கி வரச் சொன்ன கதைதான். அந்த மாதிரி ஆகிவிட்டது 8 போடாத வலைப்பதிவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. யாரைக் கேட்டாலும் நான் எட்டுப் போட்டாச்சே, நீங்க பார்க்கலையா என்கிறார்கள் என்னவோ ஓட்டுப் போட்டது போன்ற ஒரு களிப்புடன். அதுவும் தவிர எட்டுப்பேர் எழுதக்கூடிய நீளத்திற்கு நான் என்னுடைய ராமாயணத்தை எழுதிவிட்டதால், இன்னும் எட்டுப்பேரை அழைக்கத் தயக்கமாக இருக்கிறது. மிகவும் யோசித்து இந்த எட்டுப் பேருக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் வந்து எட்டுப் போட்டு எங்களை கெளரவிக்க வேண்டும். குட்டுப் போட்டாலும் ஏற்கத் தயார்:

மதுமிதா
ஆச்சரிய்மாக இருக்கிறதே, இன்னுமா உங்களை விட்டுவைச்சிருக்காங்க!
நிலா
சேவாலாயா அனுபவங்களை எழுதுவீங்கதானே?
(ரஜனி) ராம்கி
எழுதுங்க சும்மா அதிர்ற்றட்டும்!
ராகவன் தம்பி
வடக்கு வாசல் அனுபவங்கள், தில்லி தமிழ்ச் சங்க உரைகள் இவற்றில் இருந்தெல்லாம் எடுத்து எழுதுங்க
அண்ணா கண்ணன்
பட்டிமன்றத்தில்தான் கலக்கணுமா? இந்த வெட்டி மன்றத்திற்கும் வாங்க
உண்மைத் தமிழன்
பின்னூட்டப் பிரசினைகளிலிருந்து ஒரு மாற்றமா இருக்கும்ல?
உதயச் செல்வி
உதயா நீங்க எழுதி எத்த்னை நாளாச்சு. அப்பா கவிதை மாதிரி ஒரு 8 கவிதை வேண்டும்
பாலுமணிமாறன்
சிங்கை அனுபவங்களை, (இலக்கிய அனுபவங்களும் சேர்த்துத்தான்) எழுதுவீங்கள்ல?
அவர்களுக்காக விதி முறைகள் இன்னொரு தரம் இங்கே:

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும்

எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

வாங்க வாங்க.