Thursday, April 02, 2009

இதுவோ உங்கள் நீதி?

அவர் வழக்கறிஞர்தானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.கறுப்புக் கோட் அணிந்திருந்தார். என்றாலும் பொது மருத்துவமனைகளில் வெள்ளைக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் டாக்டர்கள் இல்லை, நீதிமன்ற வளாகத்தில் கறுப்புக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் வக்கீல்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

அவர் அணிந்திருந்த கோட்டில் பழமையும் அவர் உடையில் வறுமையும் தங்கியிருந்தன. கோட் அணிந்திருந்த போதும் காலில் ஷீ அணியவில்லை. வெறும் செருப்புப் போட்டிருந்தார். காலையில் என்ன அவசரமோ, முகச் சவரம் செய்து கொண்டிருக்கவில்லை. கையில் கேஸ் கட்டுகளோ, புத்தகங்களோ இல்லை. ஒருகையில் சிறு பெட்டி ஒன்றும் (அதனுள் அவரது அங்கி இருந்திருக்க வேண்டும்) மறுகையில் பச்சை பிளாஸ்டிக் உறையிட்ட டைரி ஒன்றும் வைத்திருந்தார்.

என் பத்திரிகைத் தொழில் மூலமாகவும், அரசியல் அறிமுகங்கள் வழியேயும் நான் அறிந்திருந்த வழக்கறிஞர்கள் போல் அவரில்லை.அந்த வழக்கறிஞர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல. னால் அவர்கள் மிடில் கிளாஸ் புரபஷனல்ஸ் என்பது அவர்கள் பயன்படுத்தும் மொழியில், அவர்களது விழுமியங்களில், அவர்களது ஞானச் செருக்கில், உடல் மொழியில் ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்பட்டுவிடும்.

ஆனால் இவர் வித்தியாசமாக இருந்தார். நண்பர் ஒருவருக்குப் பிணை கொடுக்க நான் சைதாப்பேட்டை நீதி மன்றத்திற்குச் சென்றிருந்தேன். வளாகத்திற்குள் நுழைந்து கட்டிடத்திற்குள் அடியெடுத்து வைக்கும் முன்னரே, எனக்குச் சற்றும் அறிமுகமில்லாத இவர் என்னருகில் வந்து குட்மார்னிங் சார் என்றார். அது சகாக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் முகமன் அல்ல. தெரிந்தவர்கள், நண்பர்கள் சொல்கிற வணக்கமும் அல்ல. உதவி கேட்க வருபவர்கள், பேச்சை ஆரம்பிக்கும் முன் சொல்கிற குழைவான குட்மார்னிங்.

நான் பதிலுக்கு வணக்கம் சொன்னேன். “ஜே கேஸா சார்?” என்றார். நான் புரியாமல் விழித்தேன். டைரி உறைக்குள் செருகி வைத்திருந்த விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது தோற்றம் அவர் வழக்கறிஞர் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கவில்லை.

‘பிணைக் கையெழுத்துப் போடும் போது சில ஆவணங்கள் கேட்பார்கள் அவற்றை எடுத்து வாருங்கள், ஆனால் ஜாக்கிரதை, நிறையத் தரகர்கள் உலாவுவார்கள், நான் வந்தால் மட்டுமே அவற்றை வெளியில் எடுத்தால் போதும்’ என என் நண்பரின் வழக்கறிஞர் சொல்லியிருந்தார். அதனால் நான் என்னை நெருங்கும் எனக்கு அறிமுகம் இல்லாத எவரையும், காதுகளை விரைத்துக் கொண்டு ஓடத் தயார் நிலையில் நிற்கும் மானைப் போல, உஷார் நிலையிலேயே எதிர் கொண்டேன்.

நான் போக வேண்டிய நீதி மன்றம் மாடியில் இருந்தது. நான் அவரது முகவரி அட்டையை ஆராய்ந்து கொண்டே படியேறிய போது கூடவே அவரும் என்னைத் தொடர்ந்து வந்தார்.

மாடியில் நான் என் நண்பரின் வழக்கறிஞருக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நீதி மன்றத்தில் உட்கார பெஞ்சுகள் காலியாக இல்லை. வெளித் தாழ்வாரத்தில் இருந்த பெரிய ஜன்னல் கட்டைகளில் காக்கை எச்சமும் வெற்றிலைக் காவியும் சிந்திக் கிடந்தன. வேறு வழியில்லாமல் சுவரோரமாக நின்று வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் புதிய நண்பர் என்னிடம் நான் எதற்காக நீதி மன்றம் வந்திருக்கிறேன் என அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். நான் வாயைத் திறக்கவில்லை.

ஆனால் என்னுள் ஒரு பதற்றம் பரவிக் கொண்டிருந்தது.. கோர்ட் துவங்கி விடுமோ, முதலில் என் நண்பரின் மனுவை எடுத்துக் கொண்டு விடுவார்களோ, வக்கீலை இன்னமும் காணோமே, அப்படி எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது, நானே நீதிபதியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிணை கொடுக்க வந்திருக்கிறேன் எனச் சொல்லி உதவி கேட்பதா, நீதிமன்றங்களில் அழைக்காமலேயே ஒருவர் முன்வந்து அப்படிக் கேட்க முடியுமா என எனக்குள் நிறையக் கேள்விகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன.

ஒரு வழியாக வக்கீல் வந்தார். “ஸாரி சார்” என்று என்னிடம் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அருகில் இருந்த கறுப்புக் கோட்டைப் பார்த்தார். “ என்னய்யா. கேஸ் பிடிக்க வந்தியா?.சார் யாரு தெரியுமில்ல?” என்றார். எனக்குச் சங்கடமாக இருந்தது. ஏனெனில் இவ்வளவு நேரம் அந்தக் கறுப்புக் கோட்டு நபர் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். நான் மெளனமாகவோ, மழுப்பலாகவோ சமாளித்துக் கொண்டிருந்தேன். இப்போது வக்கீல் அதை உலகுக்கே அறிவிப்பது போல் உரத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

“கேஸ் ஒண்ணும் இல்லைப்பா. சார் என் கிளையண்ட்டிற்கு ஜாமீன் கொடுக்க வந்திருக்கார்:” என்றார். கருப்புக் கோட்டு அணிந்தவர் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. என்னிடம் விடை பெற்றுக் கொள்வது போல கை குவித்தார். பின் சற்றும் தயக்கமில்லாமல் “என் கார்டு” என்று அவரது விசிட்டிங் கார்டைக் கேட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

என் வக்கீல் அவரை சற்று கேலியாகப் பார்த்துச் சிரித்தார். “என்ன, அந்தக் கார்டு 10 பைசா இருக்குமா, அதைக் கூடக் கேட்டு வாங்கிட்டுப் போறான் பாரு.அல்பம். அதான் கடவுள் அவனை அப்படி வைச்சிருக்காரு” என்றார்.

“அவர் வக்கீலா சார்?” என்று நான் என் சந்தேகத்தைக் கேட்டேன்

“ஆமாம் சார் ஆமாம். வக்கீல். ஆனா கேஸ் இல்லாத வக்கீல்.” என் நண்பரின் வழக்கறிஞர் முகத்தில் எகத்தாளம் கூத்திட்டது.

“ஜே கேஸானு கேட்டாரே?”

“உங்களையும் கேட்டுட்டானா? குடிக்கக் கூடாதுனு ஒரு சட்டம் இருக்கில்ல?” என்றார். அப்போது மது விலக்கு அமலில் இருப்பதாக நம்பப்பட்டது. “போலீஸ்காரங்க யாரையாவது பிடிச்சு குடிச்சிருந்தான்னு கொண்டு வந்து நிறுத்துவாங்க. பைன் கட்டணும். அதற்கு இந்த மாதிரி வக்கில்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதி மன்ற நடைமுறைகளில் உதவி செய்வாங்க. அந்தமாதிரி டிராபிக் கேஸ், கோர்ட் ஆவணங்கள் வாங்கிக் கொடுப்பது இப்படிச் சின்னச் சின்னதா ஏதாவது செய்து கொடுப்பாங்க.சில வக்கீல்கள் சைதாப்பேட்டை, எழும்பூர், ஹைகோர்ட் என்று எல்லா இடத்திலும் பிராக்டீஸ் செய்வாங்க. அதில சில சமயம் ஏதாவது ஒரு இடத்தில எதிர்பாராம ஹெல்டப் ஆகிடுவாங்க.அப்போ இங்க நீதிபதி முன் கேஸ் வந்தா கிளையண்ட் டென்ஷன் ஆகிவிடுவாங்க. அந்த நேரத்தில இவங்க நீதிபதி முன் போய் நின்னு வாய்தா வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா ஒருநாள் கூட, ஒரு கேஸ்ல கூட வாயைத் திறந்து வாதிடுவோ, விசாரணை- குறுக்கு விசாரணை செய்யவோ-எங்க பாஷையில சொன்னா டிரயல் நடத்தறது- மாட்டாங்க அவங்க செய்யற சின்னச் சின்ன வேலைகளுக்கு ஏதோ ஒரு தொகையை உடனுக்குடன் கேட்டு வாங்கிக்குவாங்க. அவங்க வண்டியும் ஓடணும்ல” என்று விளக்கினார். நண்பரின் வக்கீல்.

“சின்னத் தொகைனா? ”
“நூறு, எவனாவது இளிச்சவாயன் சிக்கினா இருநூறு”
“அவ்வளவுதானா?”
“பின்ன என்ன, பால்கிவாலாவா, பரசரனா? அரசியல் சாசனத்தை அக்கக்கா பிரிச்சு அலசறதுக்கு. இல்லை வி.பி.ராமனா?. வானமாமலையா? கிரிமினல் கேஸ் ஆடறதுக்கு. இவர் செய்யற வேலைக்கு இதுவே பெரிசு”

அண்மையில் நீதிமன்றங்கள் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் முடங்கிக் கிடந்தபோது, இந்த ஏழை வக்கீல் என் நினைவில் வந்து போனார். எந்தவொரு வேலை நிறுத்தத்தின் போதும் முதலில் பாதிக்கப்படுகிற தினக்கூலிகளைப் போல இவரும் இந்த வேலைமுடக்கத்தின் போது பாதிப்பிற்கு உள்ளாகியிருந்திருப்பார்.
*
ஒரு காலத்தில் நான் சட்டம் படிக்க வேண்டும் என என் அம்மா விரும்பியதுண்டு. எதற்கெடுத்தாலும் ‘கோணக்கட்சி’ டுகிற நான் வக்கீலாகப் போனால் பிரமாதமாக வாதிடுவேன் என்று அவர் நம்பினார். னால் வக்கீல் தொழிலில் வெற்றி பெற வெறும் வாதத் திறமை மட்டும் போதாது என அவருக்குத் தெரியாது.

என்றைக்கும் வழக்கறிஞர் தொழிலில் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதே நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. வாயுள்ள பிள்ளை என்று வாதத்திறமையைச் சொல்லவில்லை. ‘Smart’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அந்தக் கெட்டிக்காரத்தனத்தைச் சொல்கிறேன். விஷயம் தெரிந்தவராயும், விஷயம் தெரிந்ததைப் போலக் காட்டிக் கொள்ளத் தெரிந்தவராயும், நீதிமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் தன்னைத் தானே மார்கெட்டிங் செய்து கொள்ளத் தெரிந்தவராயும், சகாக்களையும், பலதுறையினரையும் இணைத்து உறவுச் சங்கிலிகளைப் பின்னத் (Networking) தெரிந்தவராயும் இருப்பவர்களே இந்தத் தொழிலில் வெற்றிகரமாக இருக்க முடியும் என்றெனக்குத் தோன்றுகிறது.

இசை, சினிமா போன்ற மகிழ்வூட்டும் துறைகளை (எழுத்தையும் சேர்த்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை) முழுநேரத் தொழிலாக ஏற்றுக் கொண்டவர்கள் எதிர் கொள்வதைப் போல ஒரு நிச்சியமற்ற நிலையை, அல்லது அதன் நிழலை வழக்கறிஞர் தொழிலில் இருப்பவர்கள் எதிர்கொள்கிறார்கள். ஏழைகளாக இருப்பதைவிட இப்படி யொரு அநிச்சயமான நிலை அவர்கள் இயல்பைப் பெரிதும் குலைத்து விடுகிறது.

தொழிலின் இந்த நிச்சியமற்ற நிலை கூட, மற்றெந்தத் தொழிலில் உள்ளவர்களையும் விட, அவர்கள் அரசியல் போன்ற தாங்கிப் பிடிக்கும் புறச்சார்புகளை (Props) அதிகம் நாட உளவியல் ரீதியாக ஒரு காரணமாக இருக்கக் கூடும். சங்கங்களாகத் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதும் கூட இதனால்தானோ என்னவோ. இது குறித்து உளவியல் ரீதியாக ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கிறதா? அப்படி ஏதும் இல்லையெனில் இது ஆராயத் தக்கதொரு விஷயம்.

ஆனால் உடனடியாக ஆராயப்பட வேண்டிய விஷயம், மற்றெந்தத் தொழிலில் இருக்கும் படித்தவர்களைவிட வக்கீல்கள் ஏன் அதிகம் வன்முறையின்பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது. பிப்ரவரி 19ம் தேதி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற கல்வீச்சு, காவல் நிலையம் எரிப்பு சம்பவங்கள் ஒரு பிறழ்வு (aberration) என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால் அதற்கு முன்னர் ஜனவரி 30ம்தேதி காலை சுமார் 10:40 மணிக்கு வழக்கறிஞர்கள் சிலர் தலைமை நீதிபதியின் (பொறுப்பு) நீதிமன்றத்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த வழக்கறிஞர்களை நோக்கிக் கூச்சலிட்டதாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு வழக்கு நடத்திக் கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் செல்லப்பா, அவரது மனைவி வசந்தி ஆகியோரை வெளியே இழுத்து அவர்களை ஏளனம் செய்தாகவும் அது சொல்கிறது. இவை எல்லாம் நடந்தது நீதிபதியின் கண்ணெதிரே.

அதே நாளில் ஐந்தாம் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் வாதாடிக் கொண்டிருந்த அரசு வழக்கறிஞர் வழக்கை நடத்த விடாத வண்ணம், நீதிமன்றத்தின் கதவுகளையும், ஜன்னல்களையும் ஓங்கித் தட்டிக் கூச்சலிட்டு நீதிமன்றம் நடக்க இயலாதபடி அதன் நடவடிக்கைகளில் குறுக்கிட்டு அதை முடக்கியதும் வழக்கறிஞர்கள்தான்.

பிப்ரவரி 17ம் தேதி நீதிபதிகள் முன்னிலையில் சுப்ரமண்ய சுவாமி மீது முட்டை வீசும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இவையெல்லாம் பிப்ரவரி 19ம் தேதிக்கு முன்னரே நடைபெற்ற சம்பவங்கள்.

சிலமாதங்களுக்கு முன்பு, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள்ளேயே மோதல் நடந்து ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

என்னுடைய கேள்வியெல்லாம் இதுதான்:

சட்டம் படித்து, அந்தச் சட்டங்களின் அடிப்படையில் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் வழக்கறிஞர்கள், ஏன் பிரசினைகளை சட்டங்களின் மூலம் சந்திக்க அஞ்சுகிறார்கள்? சட்டத்தின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதால்தானா, நீதிபதிகள் கண்ணெதிரேயே வன்முறையில் இறங்குகிறார்கள்?

இதற்குக் கீழுள்ள மூன்றில் ஒன்றுதான் காரணமாக இருக்க வேண்டும்:

1.சட்டத்தை எடுத்துரைக்கும் தங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும்.
அல்லது
2.சட்டங்களின் மீதும் நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும். அல்லது
3.அவர்களது விருப்பங்கள் சட்டங்களால் அனுமதிக்கப்படாவையாக இருக்க வேண்டும்.

இவற்றில் எதுவாயினும் அது கவலைக்குரியது. சிகிச்சைக்குரியது


(அம்ருதா ஏப்ரல் 2009)

8 comments:

ஆயில்யன் said...

//அண்மையில் நீதிமன்றங்கள் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் முடங்கிக் கிடந்தபோது, இந்த ஏழை வக்கீல் என் நினைவில் வந்து போனார். எந்தவொரு வேலை நிறுத்தத்தின் போதும் முதலில் பாதிக்கப்படுகிற தினக்கூலிகளைப் போல இவரும் இந்த வேலைமுடக்கத்தின் போது பாதிப்பிற்கு உள்ளாகியிருந்திருப்பார்//


மனதை மிகவும் பாதித்தது !

நிறைய இடங்களில் இது போன்ற மனிதர்களை காண இயலும் - தாசில்தார் அலுவலகத்தில் மனு எழுதிக்கொடுப்பவர்களாகவோ,கலெக்டர் ஆபிஸிலோ தன்னார்வமாய் பணி செய்து தங்களின் வயிற்றுபிழைப்பினை போக்கிக்கொள்ளும் மனிதர்கள் - ஏனோ உடன் அதே தொழில் செய்யும் மனிதர்களால் இன்றளவும் விலக்கியே வைக்கப்பட்டிருப்பது சோகமே!

Anonymous said...

Wonderful - Sir....Last three point..realy the originary people should see..

குப்பன்.யாஹூ said...

அருமையான கட்டுரை அலசல்.

வக்கில்களின் தொழில் வீழ்வதற்கு ஒரு காரணம் நம் நாட்டில் தேவை அளிப்பு விதி கடை பிடிக்க படாமல் (demand supply is not considered), கல்லூரிகள் வருடா வருடம் பல வழக்கறிஞர் பட்டதாரிகளை உருவாக்குகின்றன.

இது பொறியாளர் (civil engineer, mech engeneer), மருத்துவர், பட்டய கணக்காயர் போன்ற தொழிலுக்கும் பொருந்தும்.

நீங்கள் திருவான்மியூர், ராஜ அண்ணாமலை புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றீர்கள் எனில் ஒரு மருத்துவரை பார்க்கலாம்.

திறந்த வெளியில் (வெயிலில்) அவர் ஒரு இருக்கையில் அமர்ந்து ரூபாய் பத்து, இருபது பெற்று கொண்டு மருத்துவ சான்றிதழ் வழங்குவார்.

நீடிமன்றனகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி, தேங்கி உள்ள வழக்குகளை விரைவாக முடித்து, கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கையை கட்டு படுத்தினால் இந்த தொழில் சிறக்கும்.

பணியும் பணமும் கிடைத்தால் வழக்கறிஞர்கள் தடி எடுத்து வன்முறையில் இறங்க மாட்டார்கள், நேரமும் இருக்காது.

குப்பன்_யாஹூ

Kavinaya said...

//வாயுள்ள பிள்ளை என்று வாதத்திறமையைச் சொல்லவில்லை. ‘Smart’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அந்தக் கெட்டிக்காரத்தனத்தை//

இந்த நிலை எல்லா துறைகளிலுமே இருக்கத்தான் செய்கிறது. சதவிகிதம் மாறுபடக் கூடும்.

நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் சிந்தனைக்கும் கவலைக்கும் உரியவை. பூனைக்கு மணி கட்டுபவர் யார்?

enRenRum-anbudan.BALA said...

மாலன் சார்,

நல்ல கட்டுரை, நன்றி.

எ.அ.பாலா

Unknown said...

ரத்த சூட்டில் கத்தியோடு கல்லூரிக்குள் போகும் மாணவர்கள் அப்பன் பணத்தில் அடிதடிகளை அரங்கேற்றும் அன்பர்கள் வாழ்கையின் அடித்தளத்தை காலம் அசைக்க ஆரம்பித்தால் நிலைமை கவலைக்கிடம் தான் என்பதைத்தான் இதன் மூலம் நான் உணர்கிறேன்.

Anonymous said...

You rightly exposed the present poor life of lawyers.That ia true also.But apart from all theses things they are having too much of ego and over confidence that they only know law and others are just layman and useless.they think they can do anything and nobody cannot do anything against them or their community persons.
They already lost their credibility and are interested in politics to earn more by their mouth and legal voices.Majority of lawyers are not worthy to be believed.They have no moral duty conscious to help their clients.many became brokers of client's lawyers.No hesitation to do underground work to defeat their other side for money purpose.In simple word >>lawyers became a "brokers of cases " between police stations and power personalities.A fight was held between police and lawyers only at Chennai>>.repeat only at Chennai..No other places there was "best' relationships between the police station and lawyers prevailed.I have witnessed it as a press person.---R.SELVAPRIYAN--cHALAKKUDY

த. ஜார்ஜ் said...

உங்கள் கட்டுரை எழுப்பிய கேள்விகள் எமக்குள்ளும் முட்டி மோதி கிடக்கின்றன. தவறுகள் பெருவாரிகளால் செய்யப்படும்போது நடவடிக்கை இல்லாத நியாயங்களாகி விடுகின்றனவே.