Tuesday, April 28, 2009

இலங்கை : ஒரு மறு சிந்தனை

இலங்கைச் சிக்கலுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு, போர்நிறுத்தம் கோரி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதம் இவற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நமக்கேற்றவாறு சமைத்துக் கொள்ள வேண்டும், இவை தேர்தல்கால நிர்பந்தங்களின் காரணமாக எழுந்தவை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இருக்கலாம். ஆனால் இதற்கு வேறு கோணங்களும் இருக்க முடியும் என நான் கருதுகிறேன். என்னுடைய சொந்த அனுப்வங்கள் அவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

விடுதலைப் புலிகள் தமிழர்கள் அதிகாரம் பெறுவதன் பொருட்டுப் போராடுகிறவர்கள் அல்ல, தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதன் பொருட்டு ஆயுதம் ஏந்தியிருக்கிற அமைப்பு என்கிற எண்ணம் எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் உண்டு. அப்படிக் கருதுவதற்கு விடுதலைப் புலிகளின் கடந்த காலச்செயல்கள் காரணமாக அமைந்தன.அவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் உயிர்வாழ எந்த நியாயமும் இல்லை எனக் கருதுபவர்கள் எனபதை அவர்கள் பலமுறை தங்களது
செயல் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.பன்முகத் தன்மையை, மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கிற அரசியலை அங்கீகரிக்கிற இந்தியாவில் வளர்ந்த எனக்கு அவர்களது இந்தப் போக்கு ஏற்றுக் கொள்ள இயலாததாக இருந்தது./இருக்கிறது

சிவில் உரிமைகளைப் பெறுவதற்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அணுகுமுறைகள் அவர்களது முதிர்ச்சி குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தன. அவர்கள் காந்திய வழி அறப்போராட்டத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் என நான் சொல்ல வரவில்லை. இலங்கை அதிகார அமைப்பிற்கு எதிராக அது பலன் தராது. ஆயுதப் போராட்டம் என்பதோடு, ராஜரீக வழிகள், அறிவுலகின் ஆதரவு, பொதுக்கருத்தை உருவாக்குபவர்களோடு உறவு (Diplomatic avenues, enlisting support of intellectuals and lobbying with opinion makers) மற்ற வழிகளையும் அவர்கள் மேற்கொண்டு இலங்கை அரசுக்கெதிரான ஒரு கருத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் தமிழ் சமூகத்திற்கு அப்பால் அவர்கள் அத்தகைய முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவில்லை. ஆரம்ப நாட்களில் அது போன்ற முயற்சிகளில் அவர்கள் முனைந்ததுண்டு. ஆனால் பின்னர், குறிப்பாக பாலசிங்கம் போன்றவர்கள் மறைவுக்குப் பின், அதை அவர்கள் கை விட்டுவிட்டார்கள். அல்லது அதற்கு அவர்களிடம் ஆட்கள் இல்லை.

இதன் காரணமாக அவர்கள் மீது பயங்கரவதிகள் என்ற முத்திரை விழுந்த போது அதை அவர்களால் அகற்றமுடியவில்லை

அதே நேரம் தமிழ்ச் சமூகத்திற்குள் விடுதலைப் புலிகள் வேறு, அங்குள்ள தமிழ் மக்கள் வேறு என்ற தெளிவு இருக்கத்தான் செய்தது. ஆனால் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கிற அனுதாபத்தை விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆதரவாக அவர்களது ஊடகங்கள் மூலம் கட்டமைத்துக் காட்டுகிற அபாயம், அதை அவர்களது பயங்கரவாதத்திற்கான ஆதரவாக மாற்றிக்காட்டுகிற அபாயம் இருக்கத்தான் செய்தது.

பயங்கரவாதிகள் எனத் தெரிந்தும் அங்கே ஒரு மாற்றுத் தலைமையை, ஒரு மாற்று அரசியலைக் கட்டமைக்க சக்தி அற்றவர்களாக இலங்கைத் தமிழர்கள் இருந்தது சலிப்பைத் தந்தது. இந்திய மக்கள் தங்கள் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் போது அவர்கள் எத்தனை பெரிய தலைவர்களாக இருந்தாலும் தூக்கி எறிகிற தீரத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். எமெர்ஜென்சிக்குப் பின் இந்திரா காந்தி, 1980 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் (பாண்டிச்சேரியையும் சேர்த்து 2 இடங்களில் மட்டுமே வெற்றி) 1991 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி, 2004
நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆகியவை உதாரணங்கள்.

ஆனால் இதனையெல்லாம் விளங்கிக் கொள்ளாமல், இலங்கைத் தமிழர்களில் சிலர், இந்தியத் தமிழர்களை 'விசிலடிச்சான் குஞ்சு'களாகவும், இந்திக்காரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பவர்களாகவும் ஏளனம் செய்து கொண்டிருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.

தாங்கள் நம்பிய தலைமை தங்களை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போர்ச் சூழலில் சிக்க வைத்து விட்டது எனத் தெரிந்தும் அந்தத் தலைமையைத் தூக்கி எறிவது இலங்கைச் சூழலில் நடக்கவில்லை. அதற்கு மக்கள் பயங்கரவாதிகளை நம்பியது காரணமாக இருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு வேறு வழியில்லாதிருந்திருக்க வேண்டும். எப்படியானாலும் 'சரி, அது அவர்கள் தலையெழுத்து' என்ற ஒரு resigned மனோபாவமே தமிழகத்தில் உள்ள பலரிடம் நிலவியது

ஆனால் கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவம் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல், விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்களைக் கொண்டவர்களிடம் கூட அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள்,
பொதுமக்கள் என வேறுபாடில்லாமல், நிராயுதபாணியான மக்கள், குழந்தைகள், சிறுவர்கள் என எல்லோர் மீதும் சகட்டு மேனிக்குக் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல் திடுக்கிடச் செய்தது.நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல் பயங்கரவாதிகள் இருக்கும் சமூகத்தில் collateral damage இருக்கும் என்ற நிலையையும் தாண்டி இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் இருந்தன.

இலங்கையின் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் ராஜபக்க்ஷே சகோதரர்கள், ஜார்ஜ் புஷ்ஷைப் போல, நிக்சனைப் போல போர் வெறியர்கள் (War Mongers) என்பது தெளிவாகத் தொடங்கியது.

இலங்கை அரசின் மூர்க்கத்தனத்தால், மனதில் அரசியல் கேள்விகள் பின் செல்ல, அனுதாபத்தின் காரணமாக எழுந்த ஒரு தார்மீக எழுட்சி, ஏற்கனவே கொண்டிருந்த நிலைகளை மறுபரிசீலனை செய்ய உந்தின.விடுதலைப் புலிகளின் மீதிருக்கும் விமர்சனத்தின் காரணமாக, பொதுமக்கள் படும் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது சரிதானா என்ற கேள்விகள் மனதில் எழுந்தன. விடுதலைப் புலிகள் மீதான விமர்சனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அங்கு உணவுக்கும் மருந்துக்கும் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பின.

இதே போன்ற மாற்றம் அரசியல் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஊடகங்கள் புலி ஆதரவு புலி எதிர்ப்பு என்று அணி பிரிந்து செய்திகளை மிகைப்படுத்தியும், அலட்சியப்படுத்தியும் செய்திகள் வெளியிட்டதன் காரணமாக
உண்மை நிலையைப் புரிந்து கொள்வது சிரமமாகவே இருந்தது. இந்த நிலையில் அரசியல்வாதி அல்லாத, இலங்கைப் பிரசினையில் எந்த நிலையும் எடுத்துக் கொள்ளாத ஸ்ரீரவி சங்கர் போன்ற ஒருவர் அங்கு சென்று நிலைமையை நேரில் பார்த்து வந்து சொல்லும் போது, மாறத் துவங்கியிருக்கும் மனதில் மாற்றம் விரைவு படுத்தப்படுகிறது

இந்தச் சூழ்நிலையில் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இந்தனைக் கொடூரத் தாக்குதலுக்குப் பின் தமிழ் மக்கள் அங்கு சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்தல் சாத்தியமா? ராஜபக்க்ஷே நடத்திய போரின் ரணங்கள், இன்னும் ஒரு
தலைமுறைக்கு, முப்பது நாற்பது வருடங்களுக்கு, தமிழ் மக்கள் மனதில் இருக்கும். அதை ஆற்றக் கூடிய விருப்பம் அந்த அரசுக்கு இருக்கும் எனக் கருத இடமில்லை. அங்கு நிலவும் அரசியலும் அதற்கு இடமளிக்காது.

இந்தச் சூழ்நிலையில் இனி அவர்களது எதிர்காலத்திற்குத் தனி ஈழம்தான் தீர்வாக அமையும்

சரி, தனி ஈழம் அமைவது சாத்தியமா?

இந்திய ஆட்சியாளர்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு வாய்ப்புண்டு. விடுதலைப் புலிகள் செய்யத் தவறிய, ராஜரீக ரீதியில் ஆதரவு திரட்டுவது, அறிவுலகின் மனசாட்சியை உசுப்புவது, உலகில் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவது ஆகிய வேலைகளை இந்திய ஆட்சியாளர்களால் செய்ய முடியும். நமீபியா இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்த போது அதைத் தனிமைப்படுத்துகிற வேலையை இந்தியா நன்றாகவே செய்தது. மண்டேலாவிற்கு ஆதரவாக தென்னாப்பிரிக்காவோடும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுடனும் அது உறவை விலக்கி வைத்திருந்ததுண்டு. ஆனால் அவற்றை செய்வதற்கு அன்று ஆட்சியில் இருந்தவர்களிடம் ஒரு அரசியல் உறுதி இருந்தது.

1983ல் இந்திராகாந்தி மாநிலங்களவையில் இலங்கை பிரசினை ஒரு இன அழிப்பு -Genocide என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்- என்று முழங்கி இலங்கைத் தமிழர் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க முன்வந்ததில் எம்.ஜி.ஆருக்குக் கணிசமான பங்கு உண்டு. அன்று இந்திராவிடம் எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்னதைப் போல சோனியாவிடம் கருணாநிதி எடுத்துச் சொல்லியிருந்தால் இந்தியாவின் அணுகுமுறை வேறுமாதிரி இருந்திருக்கலாம். சோனியாவிற்கு இலங்கைத் தமிழர்களால் ஒரு தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டிருந்ததால் அதைப்பற்றி அவரிடம் பேசுவது rubbing on the wrong side ஆகிவிடக் கூடும் என அவர் தயங்கியிருக்கக் கூடும். தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி அதிகாரம் காங்கிரசின் கையில் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

சரி இதை ஜெயலலிதாவால் செய்ய முடியுமா?

முடியலாம்.நான் கவனித்த வரையில் ஜெயலலிதாவின் +பாயிண்டுகளில் ஒன்று அவரது மன உறுதி. பிடிவாதம் என்று அவரது விமர்சகர்களால் வர்ணிக்கப்படும் மன உறுதி. பொதுவாக இந்திய அரசியலில் தலைவர்கள், ஒரு பெரும் வெற்றிக்குப் பிறகு, வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையால் உந்தப்படுவார்கள். அப்போது அவுட் ஆஃப் பாக்ஸ் ஐடியாக்களை நடைமுறைப்படுத்த முனைவார்கள்.இந்திராகாந்தி வங்கிகளை தேசியமயமாக்கியது, ராஜமானியத்தை ஒழித்தது, எம்.ஜி.ஆர் விமர்சனங்களுக்கிடையில் சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ராஜீவ் அசாம், பஞ்சாப் பிரசினைகளில் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொண்டது இப்படி சில உதாரணங்கள் உண்டு. ஜெயலலிதாவிடமும் இந்தக் குணம் உண்டு. 67 சதவீத இட ஒதுக்கீடூ, பொருளாதார சீர்திருததங்கள் இவற்றில் இதன் சாயலைக் காணலாம்.


அவரால் தனி ஈழம் விஷயத்தில் எந்த அளவிற்கு செய்ய முடியும் என்பது மத்தியில் எத்தகைய ஆட்சி அமைகிறது என்பதைப் பொறுத்தது. அது எந்தளவிற்கு வெற்றி பெறும் என்பது விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக இலங்கையில் எத்தகைய தலைமை உருவாகிறது என்பதைப் பொறுத்தது. என்றாலும் அவர் முயற்சிக்கக் கூடும் என்றுதான் தோன்றுகிறது.

Thursday, April 02, 2009

இதுவோ உங்கள் நீதி?

அவர் வழக்கறிஞர்தானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.கறுப்புக் கோட் அணிந்திருந்தார். என்றாலும் பொது மருத்துவமனைகளில் வெள்ளைக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் டாக்டர்கள் இல்லை, நீதிமன்ற வளாகத்தில் கறுப்புக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் வக்கீல்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

அவர் அணிந்திருந்த கோட்டில் பழமையும் அவர் உடையில் வறுமையும் தங்கியிருந்தன. கோட் அணிந்திருந்த போதும் காலில் ஷீ அணியவில்லை. வெறும் செருப்புப் போட்டிருந்தார். காலையில் என்ன அவசரமோ, முகச் சவரம் செய்து கொண்டிருக்கவில்லை. கையில் கேஸ் கட்டுகளோ, புத்தகங்களோ இல்லை. ஒருகையில் சிறு பெட்டி ஒன்றும் (அதனுள் அவரது அங்கி இருந்திருக்க வேண்டும்) மறுகையில் பச்சை பிளாஸ்டிக் உறையிட்ட டைரி ஒன்றும் வைத்திருந்தார்.

என் பத்திரிகைத் தொழில் மூலமாகவும், அரசியல் அறிமுகங்கள் வழியேயும் நான் அறிந்திருந்த வழக்கறிஞர்கள் போல் அவரில்லை.அந்த வழக்கறிஞர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல. னால் அவர்கள் மிடில் கிளாஸ் புரபஷனல்ஸ் என்பது அவர்கள் பயன்படுத்தும் மொழியில், அவர்களது விழுமியங்களில், அவர்களது ஞானச் செருக்கில், உடல் மொழியில் ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்பட்டுவிடும்.

ஆனால் இவர் வித்தியாசமாக இருந்தார். நண்பர் ஒருவருக்குப் பிணை கொடுக்க நான் சைதாப்பேட்டை நீதி மன்றத்திற்குச் சென்றிருந்தேன். வளாகத்திற்குள் நுழைந்து கட்டிடத்திற்குள் அடியெடுத்து வைக்கும் முன்னரே, எனக்குச் சற்றும் அறிமுகமில்லாத இவர் என்னருகில் வந்து குட்மார்னிங் சார் என்றார். அது சகாக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் முகமன் அல்ல. தெரிந்தவர்கள், நண்பர்கள் சொல்கிற வணக்கமும் அல்ல. உதவி கேட்க வருபவர்கள், பேச்சை ஆரம்பிக்கும் முன் சொல்கிற குழைவான குட்மார்னிங்.

நான் பதிலுக்கு வணக்கம் சொன்னேன். “ஜே கேஸா சார்?” என்றார். நான் புரியாமல் விழித்தேன். டைரி உறைக்குள் செருகி வைத்திருந்த விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது தோற்றம் அவர் வழக்கறிஞர் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கவில்லை.

‘பிணைக் கையெழுத்துப் போடும் போது சில ஆவணங்கள் கேட்பார்கள் அவற்றை எடுத்து வாருங்கள், ஆனால் ஜாக்கிரதை, நிறையத் தரகர்கள் உலாவுவார்கள், நான் வந்தால் மட்டுமே அவற்றை வெளியில் எடுத்தால் போதும்’ என என் நண்பரின் வழக்கறிஞர் சொல்லியிருந்தார். அதனால் நான் என்னை நெருங்கும் எனக்கு அறிமுகம் இல்லாத எவரையும், காதுகளை விரைத்துக் கொண்டு ஓடத் தயார் நிலையில் நிற்கும் மானைப் போல, உஷார் நிலையிலேயே எதிர் கொண்டேன்.

நான் போக வேண்டிய நீதி மன்றம் மாடியில் இருந்தது. நான் அவரது முகவரி அட்டையை ஆராய்ந்து கொண்டே படியேறிய போது கூடவே அவரும் என்னைத் தொடர்ந்து வந்தார்.

மாடியில் நான் என் நண்பரின் வழக்கறிஞருக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நீதி மன்றத்தில் உட்கார பெஞ்சுகள் காலியாக இல்லை. வெளித் தாழ்வாரத்தில் இருந்த பெரிய ஜன்னல் கட்டைகளில் காக்கை எச்சமும் வெற்றிலைக் காவியும் சிந்திக் கிடந்தன. வேறு வழியில்லாமல் சுவரோரமாக நின்று வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் புதிய நண்பர் என்னிடம் நான் எதற்காக நீதி மன்றம் வந்திருக்கிறேன் என அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். நான் வாயைத் திறக்கவில்லை.

ஆனால் என்னுள் ஒரு பதற்றம் பரவிக் கொண்டிருந்தது.. கோர்ட் துவங்கி விடுமோ, முதலில் என் நண்பரின் மனுவை எடுத்துக் கொண்டு விடுவார்களோ, வக்கீலை இன்னமும் காணோமே, அப்படி எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது, நானே நீதிபதியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிணை கொடுக்க வந்திருக்கிறேன் எனச் சொல்லி உதவி கேட்பதா, நீதிமன்றங்களில் அழைக்காமலேயே ஒருவர் முன்வந்து அப்படிக் கேட்க முடியுமா என எனக்குள் நிறையக் கேள்விகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன.

ஒரு வழியாக வக்கீல் வந்தார். “ஸாரி சார்” என்று என்னிடம் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அருகில் இருந்த கறுப்புக் கோட்டைப் பார்த்தார். “ என்னய்யா. கேஸ் பிடிக்க வந்தியா?.சார் யாரு தெரியுமில்ல?” என்றார். எனக்குச் சங்கடமாக இருந்தது. ஏனெனில் இவ்வளவு நேரம் அந்தக் கறுப்புக் கோட்டு நபர் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். நான் மெளனமாகவோ, மழுப்பலாகவோ சமாளித்துக் கொண்டிருந்தேன். இப்போது வக்கீல் அதை உலகுக்கே அறிவிப்பது போல் உரத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

“கேஸ் ஒண்ணும் இல்லைப்பா. சார் என் கிளையண்ட்டிற்கு ஜாமீன் கொடுக்க வந்திருக்கார்:” என்றார். கருப்புக் கோட்டு அணிந்தவர் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. என்னிடம் விடை பெற்றுக் கொள்வது போல கை குவித்தார். பின் சற்றும் தயக்கமில்லாமல் “என் கார்டு” என்று அவரது விசிட்டிங் கார்டைக் கேட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

என் வக்கீல் அவரை சற்று கேலியாகப் பார்த்துச் சிரித்தார். “என்ன, அந்தக் கார்டு 10 பைசா இருக்குமா, அதைக் கூடக் கேட்டு வாங்கிட்டுப் போறான் பாரு.அல்பம். அதான் கடவுள் அவனை அப்படி வைச்சிருக்காரு” என்றார்.

“அவர் வக்கீலா சார்?” என்று நான் என் சந்தேகத்தைக் கேட்டேன்

“ஆமாம் சார் ஆமாம். வக்கீல். ஆனா கேஸ் இல்லாத வக்கீல்.” என் நண்பரின் வழக்கறிஞர் முகத்தில் எகத்தாளம் கூத்திட்டது.

“ஜே கேஸானு கேட்டாரே?”

“உங்களையும் கேட்டுட்டானா? குடிக்கக் கூடாதுனு ஒரு சட்டம் இருக்கில்ல?” என்றார். அப்போது மது விலக்கு அமலில் இருப்பதாக நம்பப்பட்டது. “போலீஸ்காரங்க யாரையாவது பிடிச்சு குடிச்சிருந்தான்னு கொண்டு வந்து நிறுத்துவாங்க. பைன் கட்டணும். அதற்கு இந்த மாதிரி வக்கில்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதி மன்ற நடைமுறைகளில் உதவி செய்வாங்க. அந்தமாதிரி டிராபிக் கேஸ், கோர்ட் ஆவணங்கள் வாங்கிக் கொடுப்பது இப்படிச் சின்னச் சின்னதா ஏதாவது செய்து கொடுப்பாங்க.சில வக்கீல்கள் சைதாப்பேட்டை, எழும்பூர், ஹைகோர்ட் என்று எல்லா இடத்திலும் பிராக்டீஸ் செய்வாங்க. அதில சில சமயம் ஏதாவது ஒரு இடத்தில எதிர்பாராம ஹெல்டப் ஆகிடுவாங்க.அப்போ இங்க நீதிபதி முன் கேஸ் வந்தா கிளையண்ட் டென்ஷன் ஆகிவிடுவாங்க. அந்த நேரத்தில இவங்க நீதிபதி முன் போய் நின்னு வாய்தா வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா ஒருநாள் கூட, ஒரு கேஸ்ல கூட வாயைத் திறந்து வாதிடுவோ, விசாரணை- குறுக்கு விசாரணை செய்யவோ-எங்க பாஷையில சொன்னா டிரயல் நடத்தறது- மாட்டாங்க அவங்க செய்யற சின்னச் சின்ன வேலைகளுக்கு ஏதோ ஒரு தொகையை உடனுக்குடன் கேட்டு வாங்கிக்குவாங்க. அவங்க வண்டியும் ஓடணும்ல” என்று விளக்கினார். நண்பரின் வக்கீல்.

“சின்னத் தொகைனா? ”
“நூறு, எவனாவது இளிச்சவாயன் சிக்கினா இருநூறு”
“அவ்வளவுதானா?”
“பின்ன என்ன, பால்கிவாலாவா, பரசரனா? அரசியல் சாசனத்தை அக்கக்கா பிரிச்சு அலசறதுக்கு. இல்லை வி.பி.ராமனா?. வானமாமலையா? கிரிமினல் கேஸ் ஆடறதுக்கு. இவர் செய்யற வேலைக்கு இதுவே பெரிசு”

அண்மையில் நீதிமன்றங்கள் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் முடங்கிக் கிடந்தபோது, இந்த ஏழை வக்கீல் என் நினைவில் வந்து போனார். எந்தவொரு வேலை நிறுத்தத்தின் போதும் முதலில் பாதிக்கப்படுகிற தினக்கூலிகளைப் போல இவரும் இந்த வேலைமுடக்கத்தின் போது பாதிப்பிற்கு உள்ளாகியிருந்திருப்பார்.
*
ஒரு காலத்தில் நான் சட்டம் படிக்க வேண்டும் என என் அம்மா விரும்பியதுண்டு. எதற்கெடுத்தாலும் ‘கோணக்கட்சி’ டுகிற நான் வக்கீலாகப் போனால் பிரமாதமாக வாதிடுவேன் என்று அவர் நம்பினார். னால் வக்கீல் தொழிலில் வெற்றி பெற வெறும் வாதத் திறமை மட்டும் போதாது என அவருக்குத் தெரியாது.

என்றைக்கும் வழக்கறிஞர் தொழிலில் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதே நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. வாயுள்ள பிள்ளை என்று வாதத்திறமையைச் சொல்லவில்லை. ‘Smart’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அந்தக் கெட்டிக்காரத்தனத்தைச் சொல்கிறேன். விஷயம் தெரிந்தவராயும், விஷயம் தெரிந்ததைப் போலக் காட்டிக் கொள்ளத் தெரிந்தவராயும், நீதிமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் தன்னைத் தானே மார்கெட்டிங் செய்து கொள்ளத் தெரிந்தவராயும், சகாக்களையும், பலதுறையினரையும் இணைத்து உறவுச் சங்கிலிகளைப் பின்னத் (Networking) தெரிந்தவராயும் இருப்பவர்களே இந்தத் தொழிலில் வெற்றிகரமாக இருக்க முடியும் என்றெனக்குத் தோன்றுகிறது.

இசை, சினிமா போன்ற மகிழ்வூட்டும் துறைகளை (எழுத்தையும் சேர்த்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை) முழுநேரத் தொழிலாக ஏற்றுக் கொண்டவர்கள் எதிர் கொள்வதைப் போல ஒரு நிச்சியமற்ற நிலையை, அல்லது அதன் நிழலை வழக்கறிஞர் தொழிலில் இருப்பவர்கள் எதிர்கொள்கிறார்கள். ஏழைகளாக இருப்பதைவிட இப்படி யொரு அநிச்சயமான நிலை அவர்கள் இயல்பைப் பெரிதும் குலைத்து விடுகிறது.

தொழிலின் இந்த நிச்சியமற்ற நிலை கூட, மற்றெந்தத் தொழிலில் உள்ளவர்களையும் விட, அவர்கள் அரசியல் போன்ற தாங்கிப் பிடிக்கும் புறச்சார்புகளை (Props) அதிகம் நாட உளவியல் ரீதியாக ஒரு காரணமாக இருக்கக் கூடும். சங்கங்களாகத் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதும் கூட இதனால்தானோ என்னவோ. இது குறித்து உளவியல் ரீதியாக ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கிறதா? அப்படி ஏதும் இல்லையெனில் இது ஆராயத் தக்கதொரு விஷயம்.

ஆனால் உடனடியாக ஆராயப்பட வேண்டிய விஷயம், மற்றெந்தத் தொழிலில் இருக்கும் படித்தவர்களைவிட வக்கீல்கள் ஏன் அதிகம் வன்முறையின்பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது. பிப்ரவரி 19ம் தேதி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற கல்வீச்சு, காவல் நிலையம் எரிப்பு சம்பவங்கள் ஒரு பிறழ்வு (aberration) என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால் அதற்கு முன்னர் ஜனவரி 30ம்தேதி காலை சுமார் 10:40 மணிக்கு வழக்கறிஞர்கள் சிலர் தலைமை நீதிபதியின் (பொறுப்பு) நீதிமன்றத்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த வழக்கறிஞர்களை நோக்கிக் கூச்சலிட்டதாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு வழக்கு நடத்திக் கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் செல்லப்பா, அவரது மனைவி வசந்தி ஆகியோரை வெளியே இழுத்து அவர்களை ஏளனம் செய்தாகவும் அது சொல்கிறது. இவை எல்லாம் நடந்தது நீதிபதியின் கண்ணெதிரே.

அதே நாளில் ஐந்தாம் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் வாதாடிக் கொண்டிருந்த அரசு வழக்கறிஞர் வழக்கை நடத்த விடாத வண்ணம், நீதிமன்றத்தின் கதவுகளையும், ஜன்னல்களையும் ஓங்கித் தட்டிக் கூச்சலிட்டு நீதிமன்றம் நடக்க இயலாதபடி அதன் நடவடிக்கைகளில் குறுக்கிட்டு அதை முடக்கியதும் வழக்கறிஞர்கள்தான்.

பிப்ரவரி 17ம் தேதி நீதிபதிகள் முன்னிலையில் சுப்ரமண்ய சுவாமி மீது முட்டை வீசும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இவையெல்லாம் பிப்ரவரி 19ம் தேதிக்கு முன்னரே நடைபெற்ற சம்பவங்கள்.

சிலமாதங்களுக்கு முன்பு, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள்ளேயே மோதல் நடந்து ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

என்னுடைய கேள்வியெல்லாம் இதுதான்:

சட்டம் படித்து, அந்தச் சட்டங்களின் அடிப்படையில் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் வழக்கறிஞர்கள், ஏன் பிரசினைகளை சட்டங்களின் மூலம் சந்திக்க அஞ்சுகிறார்கள்? சட்டத்தின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதால்தானா, நீதிபதிகள் கண்ணெதிரேயே வன்முறையில் இறங்குகிறார்கள்?

இதற்குக் கீழுள்ள மூன்றில் ஒன்றுதான் காரணமாக இருக்க வேண்டும்:

1.சட்டத்தை எடுத்துரைக்கும் தங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும்.
அல்லது
2.சட்டங்களின் மீதும் நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும். அல்லது
3.அவர்களது விருப்பங்கள் சட்டங்களால் அனுமதிக்கப்படாவையாக இருக்க வேண்டும்.

இவற்றில் எதுவாயினும் அது கவலைக்குரியது. சிகிச்சைக்குரியது


(அம்ருதா ஏப்ரல் 2009)