Sunday, January 13, 2008

திராவிடத்தின் எதிர்காலம்:

திராவிடம் என்பது இன்று மொழிகளை, இனத்தை, கட்சிகளைக் குறிக்கும் ஓர் பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது. ஆனால் அதை ஓர் பண்புத் தொகையாகவே நான் பார்க்கிறேன். இந்திய அரசியலில் அது சில பண்புகளை, இலட்சியங்களைக் குறித்த சொல்.

மையப்படுததப்பட்ட அரசியல் அதிகாரம், சுய அடையாளங்களைத் துறந்து ஓர் பொது அடையாளத்தை மேற்கொள்ள வற்புறுத்தும் கலாசார ஆதிக்கம் (hegemony), பிறப்பின் அடிப்படையில் ஒருவருக்கு சிறப்புகள் ஏற்படுகிறது, அதனால் அவர் அரசு, கல்வி, வழிபாடு ஆகியவற்றில் முன்னுரிமை பெற்றவராகிறார் என்ற கருத்தாக்கம் ஆகியவற்றை நிராகரித்து, அனைவருக்கும் சம உரிமை, சமநீதி கோரும் சமத்துவம், ஆகிய சிந்தனைகளின் அடையாளமாக உருவானது திராவிடம் என்ற கருத்தியல். சுருக்கமாச் சொன்னால் அது மேட்டுக்குடி மனோபாவத்திற்கு எதிரான, நிறுவனமயமான அதிகாரத்திற்கு எதிரான, சமூகத்தில் நிலவிவரும் மரபுகளுக்கெதிரான (anti-elite, anti establishment, anti status quo) ஓர் முற்போக்குச் சிந்தனை

தமிழர்களுக்கான தனி அடையாளம், அந்த அடையாளத்தின் பேரில் மரியாதை ஆகியவற்றிற்கான விழைவு, இவற்றால் உருவான சித்தாந்தம் அது

தமிழ், தமிழ்ச் சமூகம் என்பதைக் குறிக்க அரசியல் இயக்கங்களால் திராவிடம் என்ற சொல் நெடுங்காலம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், அது தமிழ்ச் சொல் அல்ல. ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத நூலில் (தந்திரவார்த்திகா) தமிழைக் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொல்லை பயனுக்குக் கொண்டு வந்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியார். திருநெல்வேலி பிஷப்பாகப் பணியாற்றியவர். திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் என கமில் ஸ்வலபில் போனறவர்கள் கருதுகிறார்கள் என்றாலும், கால்டுவெல் தனது ஆராய்ச்சியின் மூலம் ஆணித்தரமாக நிறுவிய ஒரு கருத்துத் (தமிழ் என்ற திராவிடமொழி, பல இந்திய மொழிகளைப் போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது அல்ல, சம்ஸ்கிருதத்தைச் சார்ந்திராமல் தனித்தியங்கும் ஆற்றல் கொண்டது, மிகத் தொன்மையானது)தான் திராவிடம் என்ற அரசியல் கருத்தாக்கத்திற்கு ஆணிவேராகத் திகழ்ந்து வருகிறது.

வட இந்திய மொழிகள் சம்ஸ்கிருத்தின் வேரொற்றிக் கிளைத்தவை என்பதால் அந்த மொழி பேசும் வட இந்தியர்களின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்ப்பது, இந்திய தேசியம் என்ற கருத்தியல் சுய அடையாளங்களுக்கு மாற்றாக ஓர் பொது அடையாளத்தை வற்புறுத்துவதால் அந்தக் கருத்தியலை எதிர்ப்பது, வேதங்கள் சமஸ்கிருதத்தைக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதிக மரபை எதிர்ப்பது, வேதத்தையும் சமஸ்கிருத்தையும் ஆராதிக்கும் பிராமணர்களை எதிர்ப்பது, வேதத்தின் ஒரு அங்கமான புருஷ சுக்தம் (ரிக் வேதத்தின் 10 மண்டலத்தில் 90வது சுக்தம்) பிறப்பின் அடிப்படையில் ஜாதி பேதங்களை நியாயப்படுத்துவதால் வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பவை திராவிடம் என்ற கருத்தியலின் அடிப்படைகளாக இருந்தன. இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு ஆகியவை அதன் சாரம்.

காங்கிரஸ் கட்சி வட இந்தியத் தலைவர்களின் செல்வாக்கிலும், தமிழ்நாட்டில் அது ராஜாஜி என்ற பிராமணரின் பிடியிலும் சிக்குண்ட காலத்தில், காங்கிரசிலிருந்து வெளியேறி அதை எதிர்க்க முற்பட்ட பெரியாருக்கு இந்தக் கருத்தியல் ஏதுவாக இருந்தது. ஆனால் வாக்குகளைச் சார்ந்தியங்கும் அரசியலில் இந்தக் கருத்தியலைக் கொண்டு அவரால் பெரும் தாக்கததை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் இதைக் கொண்டு சமூகத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் கணிசமானவையும், முக்கியமானவையும் மட்டுமல்ல, நிலைத்த தன்மையைக் கொண்டவையும் கூட. அவை தமிழர்களின் அடையாளத்தையும் (identity) சுயமரியாதையையும் நிறுவின.

ஆனால் வாக்குகளைக் கோரி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பெறும் நாடாளுமன்ற அரசியல் முறையை ஏற்று, சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து மாறி அரசியல் கட்சிகளாகத் திராவிட இயக்கங்கள் செயல்படத் துவங்கியபோது, திராவிடம் என்ற சித்தாந்தம் நலிவடையத் தொடங்கியது..

மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் என்பதற்கு மாற்றாகத் தோன்றிய தனிநாடுக் கொள்கை கைவிடப்பட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற கோஷமாக மாறி இன்று மத்தியில் கூட்டணி அரசில் பங்கேற்பதுதான் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை என்றாகிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்த போது இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு இருந்த் அதிகாரங்களில் சில (உதாரணம் கல்வி) மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசும் அதிகாரம் செலுத்த வகைசெய்யும் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதுதான் நிகழ்ந்தது. இது வரை மாநிலங்களின் கையில் இருந்த விற்பனை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரியாக(VAT) மாறியதும் திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில்தான். குறைந்தபட்சம் கட்சிக்குள் கூட அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லை என்பதை திமுக அதிமுக ஆகிய கட்சிகளில் பார்க்கலாம். பரவலாக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல், ஒரு தனி நபரையோ, அல்லது அவரது குடும்பத்தினரையோ அச்சாகக் கொண்டு அவை மையப்படுத்தப்பட்டிருக்கின்றன.

வடவர் எதிர்ப்பு என்பது நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா என்று வட இந்தியர் ஒருவரின் தலைமைக்கு பகிரங்க அழைப்பு விடுத்த அரசியல் முழக்கத்தின் மூலம் சமரசத்திற்குள்ளானது. டால்மியா புரம் என ஒரு வட இந்தியரின் பெயரை தமிழ்நாட்டிலுள்ள கிராமம் ஒன்றிற்குச் சூட்டுவதை எதிர்த்துத் தண்டவாளத்தில் தலைவைக்கத் துணிந்த காலங்கள் பழங்கதையாகி, இன்று மகேந்திராசிட்டிகள் உருவாகிவிட்டன. நெய்வேலியில், தமிழ் மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்படும் நிலக்கரிக்கு மத்திய அரசு ராயல்டி வழங்க வேண்டும் எனப் போராடிப் பெற்றது ஒரு காலம். டாடாக்கள் டைடானியம் ஆக்சைட் ஆலை நிறுவ அரசே முன்னின்று நிலம் கையகப்படுத்திக் கொடுப்பதுதான் இன்றைய நிஜம்.

இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக ஆங்கில மோகத்திற்க இட்டுச் சென்றுவிட்டதையும் பார்க்கிறோம். பம்பாயும், கல்கத்தாவும், டிரிவாண்ட்ரமும், பெங்களூரும் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பே மதறாஸ் சென்னை ஆகிவிட்டது.ஆனால் திமுக தலைவரின் குடும்பத்தினர் அவரையும் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு தொலைக்காட்சி நிறுவனம் துவங்கியபோது அது சண்டிவியாகத்தான் மலர்ந்தது.

பிராமணப் பெண்ணாகப் பிறந்த ஒருவரை, நான் பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்த ஒருவரைத் தலைவியாக ஏற்றுக் கொண்டுவிட்டது ஒரு திராவிடக் கட்சி. இன்னொரு புறம், பிறப்பினால் ஒருவருக்குச் சிறப்புக்கள் சேர்வதில்லை என்று வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள், அரசியல் அனுபவம் இல்லாத் போதும் தங்கள் மகளையும், பேரனையும், மகனையும் கொல்லைப்புற வழியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ற சித்தாந்தம் அது தோன்றிய போதிருந்த வீரியத்தை காலப்போக்கில் வாக்கு வாங்கும் அரசியலின் நிர்பந்தங்களுக்குப் பணிந்து நீர்த்துவிட்டது.காந்தியம், மார்க்சியம் போன்ற சித்தாந்தங்கள் அரசு செய்ய அதிகாரம் பெற்ற போது சந்தித்த திரிபுகளையும், சமரசங்களையும் திராவிடமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

உலகமயமாக்கல் என்பது நம் தோள்களில் ஏறிக் குந்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் முன்னெப்போதையும் விட அதிகாரப் பரவாலாக்கல், சுய அடையாளங்களைப் பேணுதல், புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் உரிமைகளை மீட்டுத் தருதல் ஆகியவற்றிற்கு அதிகம் தேவை இருக்கிறது அதாவது திராவிடம் தன் வேர்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் திராவிடத்தின் எதிர்காலம் அது தன் கடந்த காலத்திற்குத் திரும்புவதைப் பொறுத்திருக்கிறது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை குடும்பத்தார் வசம் ஒப்படைப்பதன் பொருட்டு, ‘எப்படியாவது’ தக்கவைத்துக் கொள்வது என்ற ஆசைகள் அதனை ஓர் வீர்யமிக்க சமுக இயக்கமாகச் செயல்பட அனுமதிக்குமா என்பது பெரிய கேள்விக் குறி. இதற்கு விடைகாண்பதிலேயே அதன் எதிர்காலம் ம்றைந்திருக்கிறது.

தி சண்டே இந்தியன் பொங்கல் சிறப்பிதழுக்காக எழுதியது

8 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//வடவர் எதிர்ப்பு என்பது நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா என்று வட இந்தியர் ஒருவரின் தலைமைக்கு பகிரங்க அழைப்பு விடுத்த அரசியல் முழக்கத்தின் மூலம் சமரசத்திற்குள்ளானது.//


வட இந்தியா, ஆரியர்கள் இவர்களையெல்லாம் ஏற்றுக்கொண்டுவிட்டு., இப்போது இத்தாலிய பெண்மணியை பிரதமர் பதவிக்கு இந்தியாவிலேயே முதலில் முன்மொழிகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இன்றைய திராவிடம். தமிழர்களான மூப்பனார், அப்துல் கலாம் போன்றவர்களை வரவிடாமல் தடுத்திருக்கிறது. இதே திராவிடம் முன்பொருமுறை சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பொன்னம்மாள் திரவிடத்தைப் பற்றி கேட்ட கேள்விக்கு, விரசமான சத்தத்தை கொடுக்கும் பதிலைத் தந்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

நன்றி,
அன்புடன்,
ஜோதிபாரதி.

கானகம் said...

அன்பு மாலன்,

உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். சமூக அக்கறையுடனும் அதே சமயம் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் உங்கள் கருத்துக்களாகத் தந்து மற்றவர்களையும் சிந்திக்க தூண்டுகிறது உங்கள் கட்டுரைகள்.


//திராவிடம் என்பது இன்று மொழிகளை, இனத்தை, கட்சிகளைக் குறிக்கும் ஓர் பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது.//

நூறு சதவீதம் உணமை.


//மையப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் என்பதற்கு மாற்றாகத் தோன்றிய தனிநாடுக் கொள்கை கைவிடப்பட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற கோஷமாக மாறி இன்று மத்தியில் கூட்டணி அரசில் பங்கேற்பதுதான் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை என்றாகிவிட்டது.//

இதை விட்டால் வேறு எப்படி வாழ்வது. கொள்கைகளும், கோட்பாடுகளும் சித்தாந்தத்தை தாங்கிப் பிடிக்கும் கட்சிகள் இல்லாமல் எப்படி சாத்தியம். கட்சியை உயிரோடு வைக்க இந்த சமரசங்கள் தேவைதானே??

திண்ணையில் படுத்தாவது தனி நாடு கேட்போம் என்ற கொளகையிலிருந்து இறங்கியபோதே ( ஏனெனில் அது சாத்தியமில்லை என அவ்ர்களுக்கும் தெரியும்) தீராவிடம் சாக ஆரம்பித்துவிட்டது.


//பிறப்பின் அடிப்படையில் ஜாதி பேதங்களை நியாயப்படுத்துவதால் வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பது என்பவை திராவிடம் என்ற கருத்தியலின் அடிப்படைகளாக இருந்தன. இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு ஆகியவை அதன் சாரம்.//

ஆனால் இன்று திராவிட கட்சிகளின் நிலை என்ன??

இந்தி வேண்டாம் என்கின்ற கட்சியின் தலைவரது வாரிசுகள் அதில் டாக்டர் பட்டம் பெறுகின்றனர்.

பார்ப்பன எதிர்ப்பு - திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் உருவானது.

கடவுள் மறுப்பு -- இந்து கடவுள்களை மட்டுமே மறுப்பது என்றாகிவிட்ட சூழ்நிலை. ஏனெனில் இந்துக்களை எவ்வளவு திட்டினாலும், கேவலமாக நடத்தினாலும் எப்படியும் ஓட்டுப் போடுவார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தார்.

இந்துக்கள் நோன்பு மடத்தனமாகவும், இஸ்லாமியர்களின் நோன்புக்கஞ்சி உடம்புக்கு நல்லதெனவும் "பகுத்தறியும்" அறிவு பெற்றிருக்கிறார்கள்.

ஜாதி எதிர்ப்பு..

எந்த ஜாதி கட்சியின் தலைவர் கூட்டனிக்கு உடன்படவில்லையோ அவரை கூறிப்பிட்டு ஜாதி ஒழிப்பு பற்றி வகுப்பு எடுக்கும்மளவுக்கு வளர்ந்துள்ளது ஜாதி எதிர்ப்பு.

//பம்பாயும், கல்கத்தாவும், டிரிவாண்ட்ரமும், பெங்களூரும் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பே மதறாஸ் சென்னை ஆகிவிட்டது.ஆனால் திமுக தலைவரின் குடும்பத்தினர் அவரையும் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு தொலைக்காட்சி நிறுவனம் துவங்கியபோது அது சண்டிவியாகத்தான் மலர்ந்தது.//

ஊருக்குத்தான் உபதேசமெல்லாம். மற்றப்டி இன்றுவரை எத்தனைபெர் கேள்விகள் கேட்டிருப்பார்கள். இது விஷயமாய்.?? ஹிந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்து தனது தமிழ் பக்தியைக் காட்டிய கட்சி இன்று தனது தொலைஇக்காட்சிக்கு சன் டீவி எனப் பெயரிடுகிறது.


//ஆனால் ஆட்சி அதிகாரத்தை குடும்பத்தார் வசம் ஒப்படைப்பதன் பொருட்டு, ‘எப்படியாவது’ தக்கவைத்துக் கொள்வது என்ற ஆசைகள் அதனை ஓர் வீர்யமிக்க சமுக இயக்கமாகச் செயல்பட அனுமதிக்குமா என்பது பெரிய கேள்விக் குறி. இதற்கு விடைகாண்பதிலேயே அதன் எதிர்காலம் ம்றைந்திருக்கிறது.//

இரண்டு திராவிட கட்சிகளும் தனது ஆசாபாசங்களுக்கு மட்டுமே கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன.

எப்போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா சொன்னாரோ அப்போதே அவர்களது கடவுள் மறுப்புக் கொள்கை ஆட்டம் கண்டுவிட்டது. பின்னார் எம்.ஜி.ஆர் வந்து அன்னை மூகாம்பிகையின் பக்தராக இருந்து 13 ஆண்டுகள் திராவிடக் கட்சியின்முதல்வராக இருந்து மறைந்தார்.

ஜெயலலிதாவின் வேள்விகளும், யாகங்களும் ஊரரிந்தது..

இன்னொரு பெரியார் தோண்றி கட்சி ஆரம்பித்தால் ஒழிய திராவிட சிந்தனைகளுக்கு கதிமோட்சமில்லை.

ஜெயக்குமார்

raja said...

திரவிட கட்சிகளை இவ்வளவு விமர்சிக்கும் நாம்,இவைகளை தவிர்த்து, மற்ற கட்சிகளை முழுபலத்தோடு தேர்ந்தெடுக்க நமக்கு தைரியம் இல்லையே. இது பற்றி நாம் சிந்திக்கவேண்டும்.
அன்புடன்,
RJ

Narain Rajagopalan said...

அன்புள்ள மாலன்,

நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள். உலகமயமாக்கலும் அதன் பின்புலங்கள் சார்ந்த விஷயங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. திராவிட அரசியல் பற்றி எழுத வேண்டுமானால், ஒட்டு மொத்த இந்திய அரசியலை அணுகியே திராவிட அரசியலையும் அணுக வேண்டும் என்பது என்னுடைய சின்ன அபிப்ராயம். நீங்கள், கொள்கையிலிருந்து நீர்த்துப் போன, பாப்பாத்தியினை தலைவியாக கொண்ட திராவிட கட்சி, தன் மகன்/மகள்/குடும்பத்திற்கு அதிகாரம் விநியோகம் பண்ணும் தலைவர் என்று வரிசையாக பல்வேறு பிரச்சனைகளை நேரடியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசியலினை என்னை விட நீங்கள் கடந்த 20 - 30 ஆண்டுகளாக அருகிலிருந்து கவனித்து வருகிறீர்கள். அஸ்ஸாமில் மத்திய அரசுக்கு எதிரான மாணவர் புரட்சி நடத்தி முதல்வரான பிரபுல்லகுமார் மகந்தாவின் நிலையென்ன ? அவர்களின் கட்சி என்னவாயிருகிறது ? மாயாவதி ஆட்சிக்கு வந்ததின் பின்னிருக்கும் அரசியல் சூழல்கள் என்ன ? தெஹல்கா தொடங்கி தெருமுனை வரை காறி துப்பிய பிறகும் மோடி ஆட்சிக்கு வந்ததின் காரணங்கள் என்ன ? பிஜேபியின் மீது சவாரி செய்து கொண்டு, பின் பிஜேபி பதவிக்கு வரவேண்டும் என்கிற நிலையில் காலை வாரிய ஜேடிஎஸ்ஸும், தேவ கவுடாவும் / குமாரசாமியின் இன்றைய நிலையென்ன ? சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் மட்டுமே முன்னேற்றினார் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த காங்கிரஸும் ராஜசேகர் ரெட்டியும் இந்த வருட தேர்தலில் தேறுவது கஷ்டப்படுவது ஏன் ? மக்களுக்கான இயக்கம் என்றறியப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சி கேரளாவில் CPI(M) Pvt. Ltd என்கிற அளவில் இருப்பதற்க்கான காரண காரியங்கள் என்ன ?

உண்மையில் இரண்டு விதமான பொருளாதாரங்கள் இருக்கின்றன. அரசியல் பொருளாதாரம் (Political Economics) மற்றும் சித்தாந்த ரீதியான பொருளாதாரம் (Idealist Economics) தண்டவாளங்கள் போல இவையிரண்டும் எந்த கால கட்டத்திலும் ஒன்று சேராது. திராவிட அரசியல் என்பது சித்தாந்த ரீதியான பொருளாதாரத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்திற்கு மாறியதன் பரிணாம வளர்ச்சி தான் இலவச டிவி. உண்மையில் சென்ற தேர்தலில் இலவச டிவி, அரிசி எனக் கொடுத்தும், கூட்டணி ஆட்சியால் தான் திமுகவால் பதவியில் அமர முடிந்திருக்கின்றது. ஜெயா டிவி சொல்லுவது போல இன்றைக்கும் இது மைனாரிட்டி திமுக அரசு தான்.

ஆனால் திராவிட அரசியல் தமிழ்நாட்டிற்கு பங்களித்தவை எவ்வளவோ இருக்கின்றன. இந்தியாவே இட ஒதுக்கீடு என்கிற பேச்செடுத்தாலே அலறும்போது ஒரு சிறு சலனம் கூட தமிழ்நாட்டில் இருக்காது. ஊரே அரசு தான் பள்ளிகளை / கல்லூரிகளை நடத்த வேண்டும் என்கிற நிலையில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து நாம் தொடங்கிய தனியார் பொறியியல் கல்லூரிகள் தான் இன்றைக்கு இந்தியாவெங்கும் வியாபித்திருக்கிற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தமிழர்களை முன்னெடுத்து சென்றிருக்கிறது.

வை. கோ போன்ற முக்கியமான திராவிட தலைவர்கள் அரசியல் ரீதியாக பல்வேறு கூட்டணி சூழ்நிலையில் இருந்தாலும், இலங்கை தமிழர்களுக்கான குரல் இன்னமும் ஒலிக்கின்றது. திராவிடம் நேரடியாக சாராத, ஆனால் திராவிட இயக்கத்தினால் உந்தப்பட்டதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என அரசியல் இயக்கங்கள் உருவாகி இருக்கின்றன. எப்படி பாரதீய ஜனதா கட்சியின் மூலங்களை தேடினால், அவை ஜன சங், வி.எச்.பி. சங் பரிவார் ஆரம்பத்தில் கொண்டு போய் விடுமோ, அதை போல, திராவிட அரசியலின் பரிணாம வளர்ச்சி என்பது நேரடியாக திமுக, அதிமுக, மதிமுக வால் மட்டும் தனியாக இருக்காது, அவை பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் நேர்மை, காமராஜின் எளிமை என மொத்தமாக உணரப்பட்டு பல்வேறு கட்சிகளால், சாராம்சத்தினை ஏற்றுக் கொண்டு, தலைவர்களை புறந்தள்ளி வேறுவிதமாக வேர் விட்டு வளரும் என்பது என்னுடைய பார்வை. மற்றபடி, திராவிட அரசியலினை திமுக Vs. அதிமுக என்று பார்ப்பதில் உடன்பாடில்லை.

மற்றபடி தமிழ், தமிழர், திராவிடம் என்று extrapolate செய்வதில் நம்பிக்கையில்லை. திராவிட கட்சிகளாக பரிணமித்து அரசியலுக்கு வருவதற்கு முன்பும், தமிழும், தமிழரும் வாழ்ந்தார்கள். கிட்டத்திட்ட 45 ஆண்டுகளாக தேசிய கட்சிகள், புதிய கட்சிகள், சாதி கட்சிகள் மத்தியிலும், திராவிட அரசியலும், தமிழும், தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இனிமேலும் வாழத்தான் போகிறார்கள். உண்மையில் இந்தியாவிலேயே, அரசியல் கலப்பில்லாத பெரும்பான்மை முன்னேற்றம் தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அரசியல் நேர்மையாய் இருந்திருப்பின் இன்னமும் முன்னேறியிருப்போம் என்பது ஒரு பார்வை. கருணாநிதி Vs. ஜெயலலிதாவினை ஒரு சாதாரணணாய் between devil and deep sea என்று ஒரு குறுகிய பார்வை பார்த்து பேசினாலும், ஒட்டுப் போட்ட மறுகணமே மறந்துவிட்டு, தத்தம் வேலைகளை பார்க்க போய் விடுகின்ற கூட்டம் தான் பெரும்பாலானவர்கள். அவர்களின் உழைப்பு, வியர்வை, மற்றும் உலகமயமாக்கலின் பங்கு இவை தான் தமிழகத்தையும், தமிழினத்தையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறதேயொழிய, தமிழ் தான் உயிர் என்று மேடைப் பேச்சு பேசும் எவராலும், இனத்தையோ, மொழியையோ, நம் வரலாறையோ முன்னெடுத்து செல்ல முடியாது.


நன்றி.

வால்பையன் said...

முதலில் புடியுங்கள் என் வாழ்த்துக்களை
ஆ. வி. இல் வந்ததற்கு,
திராவிடத்தை பற்றி எழுதினாலே பெரிதாக வாங்கி கட்டி கொள்ள வேண்டியிருக்கிறது

வால்பையன்

Unknown said...

ramji_nellai (kuppan_2007) says

Nice Post. Pongal wishes.

Dhravidam enbadhu basically meant for soothirar, brahmanar.

Already Vaiko & Veeramani accepted the aryan leader (paapathi Jayalalitha aiyangaar).

Ramadoss is also going to follow aaryan leader (Jayalalitha).

Till Kalaignar's death Dravidam, periyarism etc will live after wards no body is going to follow.

Stallin, Kanimozhi are all have brahmin secreataries, brahmin friends... (Veerapandi aarumugam, TR Baalu,KKSSRR, Vellakoil Swaminathan, Ko Si Mani.. as well.)

Ondriya cheyalalargal, Maavatta seyalaalargal also know this concepts, shows very well.

3 DMK district secreataries and 2 ADMK MLA's went sabarimalaa this year.

Every one knows this Dravidan , aaryan (brahmin, non brahmin shows, medai pechu , time pass activity.

Periyar concept are total failure. You could see so much crowd (even educated crowd, BE, MBA, CA, IIT graduates..) in all the temples.

Periyar is basically anti brahmin or anti hindu God.

Periyaar or Dravidar Kazagam never opposed Jesus christ or Allah. They support the mooda nabikkais of Christians and Islam.

Everone knows that periyarism is failure and fraud concept. Veeramani runs the party just to safe guard Periyaar's assets.

Thanks & Regards

Kuppan

Purush said...

இனங்கள் குறித்தான பார்வைகளில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து செயலளவிலும் செய்யபட்டு வருகிறது. மேலும் ஆரிய-திராவிட கருத்து முற்றிலும் பொய்யானது என்பதை பலரும் இன்றைய நிலையில் ஒப்பு கொள்கின்றனர். ரொமிலா தாப்பர் போன்றோரும் இந்த இன வேற்றுமையை மறுத்து பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் அது மீண்டும் தூசி தட்ட பட வேண்டும் என்ற மாலன் சொல்வார் எனில், அதை நினைத்து நான் வருந்துகிறேன்.

"இன/மொழி அடையாளம்" கொஞ்சம் கொஞ்சமாக தனது செல்வாக்கை இழந்துவருவதற்க்கு உலகமயமாக்கல் என்பதை மட்டுமே காரணமாக கொள்ளாமல் இன்ன பிற சாத்தியங்களை நினைத்து பார்க்கவேண்டும். உலகமயமாக்கல் நடைபெறா விட்டாலும் திராவிடம் தனது கருத்தியல் மற்றும் அரசியல் அரங்கை இழந்திருக்கும். அதற்கு முக்கிய காரணம், வேலை வாய்ப்பு. "தமிழ்நாடு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது" என்றுமே முடியாத செயல் என்பதை அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

மற்றபடி, அதிகார பரவலாக்கம் என்பது எந்த சித்தாந்தமும் இதுவரை செய்ய முடியாத ஒன்று. அதற்கு சித்தாந்தத்தை காரணமாக சொல்வதற்கில்லை, ஆனால் அதை கைகொள்ளும் மனிதர்கள் எந்த விதத்திலும் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை நாம் உணரவேண்டும்.

மேலும், "identity politics" என்பது பாஸிசத்திற்க்கு வழிகோலும் என்பது தான் சரித்திரம் நமக்கு சொல்லும் பாடம். இனியும் வேண்டாம், இன்னுமொரு, "final solution".

kankaatchi.blogspot.com said...

தமிழ் செம்மொழி ஒத்துக்கொள்கிறோம் -ஆனால் தமிழன் ?

உண்மை கசக்கும் .ஆனால் எத்தனை நாட்களுக்கு நோயை மறைத்து வைப்பது ?நோய் தீர வேண்டுமென்றால் நோய் தன்மை என்ன என்று தெரிந்து கொண்டால்தானே சிகிட்சை எடுக்க முடியும் .
ஆத்திரப்படாமல் அறிக்கையை படிக்க வேண்டுகிறேன் .தற்கால தமிழன் தரம் கெட்டு போய்விட்டான் .உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறான் .அநீதியை கண்டு பயந்து ஓடி ஒளிகிறான் .எந்த ஒரு பிரச்சினைகளிலும் ஆராயாமல் முட்டாள்தனமான தூண்டிவிடும் செயலுக்கு முக்யத்வம் கொடுத்து
உணர்ச்சிவசப்பட்டு பொது சொத்துக்களுக்கும் அப்பாவி பொது மக்களுக்கும் சேதத்தை விளைவிக்கிறான் .வாய் பேச்சில் இருக்கும்வீரம் செயலில் காட்டுவதில்லை சிந்தித்து செசெயல்படும் பழக்கத்தை அறவே மறந்து விட்டான் ..
பிறர் வாழ பொறுக்காதவன் அநுஸரித்து போகும் குணம் குறைந்துவிட்டதாலும் நீதி மன்றங்களுக்கும் கட்ட பஞ்சயட்டுகளுக்கும் அலைந்துகொண்டிருக்கிறான்
உலகில் எங்கு சென்றாலும் அங்கு உதைபடுவது அவனுக்கு வாடிக்கையாகிவிட்டது .நல்ல கல்வியிருந்தும் ,திறமையிருந்தும் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு அடிமியாகவே வாழ்கிறான் கிடைக்கும் நல் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ளாதவன்
என்ன கேட்பதற்கு சங்கடமாக இருக்கிறதா ? ஆனால் அதுதான் உண்மை . சில விதி விளக்குகளை தவிர .இன்னும் அவனைப்பற்றி கேளுங்கள் .அவன் செய்யாத மோசடிகளே இல்லை .தான் சார்ந்த அரசியல் கட்சிகளுக்காக எது வேண்டுமானாலும் செய்வான் . எதை வேண்டுமானாலும் இழப்பான் .
.பயணிகளோடு பேருந்தையே கொளுத்தியவன்
நல்லவர்கள் யார் தீயவர்கள் யார் என்பதை சீர் தூக்கி பார்க்கும் சக்தியை இழந்து விட்டவன்
ஆபாசத்தை ஒழிக்கவேண்டும் என்று கூகுரளிட்டுக்கொண்டே ஆபாசக் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் ஆகியோரை ஆதரித்து அவர்கள் கோடி கொடியை சம்பாதிக்க வழி வகுப்பவன் .
தமிழை ஒழுங்காக பெசத்த்ரிஆவிட்டாலும் தமிழுக்காக உயிரையும் விடத்துணிபவன் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்வான் . அவர் காட்டிய குறள் வழி நிர்க்கமாட்டன் .முக்கியமாக கள்ளுண்ணாமை அறன் வலியுறுத்தல் போன்ற அதிகாரத்தை அவமானப்படித்தும் வகையில் குடிபோதையில் மூழ்கி அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டி தருவான்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறிக்கொண்டே சக தமிழன் வாழ போருக்கதவன்
அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி வசூலித்து கொடுத்துவிட்டு தானும் தன் குடும்பமும் பட்டினியால் வாடுவதில் இன்பம் கான்பாவன் .
காவாங்கரை ,ஏரிக்கரை ,கடற்க்கரை ,நதிக்கரை அனைத்தையும் அசிங்கப்படுத்தும் பண்பினை உடையவன் .கொயல்கள் ,பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் சுவர்களை சுற்றி அசிங்கம் செய்யாமல் அவனால் இருக்க முடியாது .சுவர்களில் எழுதியும் போஸ்டர் ஒட்டியும் அசிங்கப்படுத்தாமல் அவனால் இருக்கமுடியாது .காணும் இடமநித்திலும் எச்சில் துப்பாமலும் குப்பை போடாமலும் அனைத்துவிதமான கழிவுகளையும் வீசி எறியாமல் அவனால் இருக்கமுடியாது .;
சிலை வைக்க போராட்டம் நடத்துவான் .பிறகு அந்த சிலையை காரணம் கட்டியே போராட்டம் நடத்துவான் .அற்ப காரணகளுக்காக அனைத்தையும் அழிப்பான் .அனைவருக்கும் அல்லலை ஏற்படுத்துவான் .தான் சார்ந்த மக்களையே ஏமாற்றி கொழுப்பவன்
எல்லா நதிகளிலும் சாக்கடை நீரையும் நட்சு கழிவுகளையும் விட்டு சுற்றுப்புறத்தை நாசப்படுத்துபவன் .நதிகள் மற்றும் ஏரிகளில் உள்ள மணலை l முழுவதையும் வாரி விற்று கொள்ளையடிப்பவன் தன்னோடு வாழும் சக மக்களையே ஆசைகள் பல காட்டி மோசம் செய்பவன்
ஒழுக்கம் தாவரியாதால் இன்று பலவிதமான நோய்களால் பீடிக்கப்பட்டு துன்பமான வாழ்க்கையை நடத்துபவன் தமிழினால் லக்ஷதிபதகியவர்கள் தமிழை வளர்க்க ஒன்றும் செய்யவில்லை தங்களை வலப்படுதுக்கொன்டத்தை தவிர இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவனின் பிரதாபங்களை .பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும் .இத்தோடு நிறுத்தி கொள்வோம் .மேற்கண்ட தகவல்கள் எல்லாம் தினம் செய்திதாள்களில் வெளியகியாவற்றில் ஒரு சில செய்திகளே .இதுதான் இன்றைய தமிழனின் பொதுவான லக்ஷ்ணனம் .இவன் செய்கின்ற படு பாடக செயல்களை பட்டியலிட்டால் இடம் போடாது .படித்த தமிழன் பாமரனை மதிப்பது கிடையாது .பணக்காரன் ஏழையை மதிப்பது கிடையாது .என் ஒரு தமிழன் தன் சக தமிழனை மதிப்பது கிடையாது தமிழ் வழியில் கல்வி கற்றவனுக்கு இங்கு மரியாதை கிடையாது
தமிழை முறைப்படி கற்ப்பதும் கிடையாது .கர்ப்பிப்பவரும் கிடையாது .ஊடகங்களில் தமிழை கொலை செய்யும் அறிவிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது .இந்த வெட்ககேட்டை என்னவென்று பயிரில் களைகள் வருவது சகஜம் . ஆனால் இன்று பயிரை விட மேற்கண்ட களைகளே அதிகமாக உள்ளது .உண்மையை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு திருத்தி கொண்டால் தமிழ் சமுதாயம் அது இழந்துவிட்ட பெருமையை மீண்டும் பெறலாம் .