Wednesday, May 30, 2007

இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு......

எதிர்பார்த்த செய்திதான். என்றாலும் மகிழ்ச்சி (கவலையும் கூட) தருகிறது.

கவிஞர் கனிமொழி இந்திய நாடளுமன்றத்தின் 'மேலவை'யான மாநிலங்கள் அவைக்குத் தமிழகச் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.திமுகவின் வேட்பாளராக அவரது தந்தை கருணாநிதியால் அறிவிக்கப்பட்டிருக்கிற கனிமொழி வெற்றி பெறுவதில் எந்தப் பிரசினையும் இராது. கருணாநிதியின் குழந்தைகளில் ஒருவர் நாடாளுமன்றத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. அவரது குடுமபத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுவதும் இப்போதுதான். இதுவரை தமிழக அரசியலில் மட்டுமே, தனது ஆண்குழந்தைகளை மட்டுமே ஈடுபடுத்திவந்த கருணாநிதி இதன் மூலம், தனது அரசியல் வரலாற்றின் வேறு ஒரு பரிமாணத்திற்குள் நுழைகிறார்.

ஸ்டாலின் அரசியலில் அறிமுகமான போது அவர் மறைமுகமாக வளர்தெடுக்கப்படுகிறார் எனக் கட்சிக்குள்ளும், ஊடகங்களிலும், அரசியல் அரங்கிலும் விமர்சனங்கள் எழுந்தன.ஆனால் கனிமொழியின் அரசியல் பிரவேசம் அந்த அளவிற்குக் கடுமையான விமர்சனங்களை எழுப்பாது. காரணம் காலம் மாறிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய வாரிசுகள் அரசியலில் அடியெடுத்து வைத்து விட்டார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, முன்னாள் துணைப் பிரதமர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா, முன்னாள் துணைப்பிரதமர் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி, முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஷரத் பவாரின் மகள் சுப்ரியா, ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், பாரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா,ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அவரது சகோதரியும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான விஜயராஜே சிந்தியாவின் மகனுமான துஷ்யந் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப், மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த், மு·தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா, மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மறைந்த முன்னாள் அமைச்சர் சுனில்தத்தின் மகள் பிரியா, மறைந்த முன்னாள் அமைச்சர் பகுகுணாவின் மகன் விஜய் பகுகுணா,பா.ம.க.நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, திமுகவின் நிறுவனர்களில் ஒருவரான ஈவிகே சம்பத்தின் மகன் இளங்கோவன் என நாடாளுமன்றம் ஏற்கனவே ஏகப்பட்ட வாரிசுகளால் நிறைந்து கிடக்கிறது.
எனவே கனிமொழி நாடாளுமன்றத்திற்குள் நுழைவது பெரும் சலசலப்புக்களை ஏற்படுத்திவிடாது.

ஆனால்-
அவர் அரசியலில் இறக்கிவிடப்படும் நேரம், சூழல் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அவரை நேசிப்பவர்களுக்குச் சற்று கவலையும் எழுத்தான் செய்கிறது. கனிமொழி திமுக மாநாடுகளில் ஒரு பார்வையாளராக, அதுவும் கருணாநிதி குடுமபத்தின் மற்ற உறுப்பினர்களோடு, கலந்து கொண்டிருக்கிறாரே தவிர அவர் கட்சி மேடைகளில் பேசி நான் கேட்டதில்லை. தேர்தல் பிரசாரத்தில் கூட அவர் பேசியதாக எனக்கு நினைவில்லை. இத்தனை நாட்களாக அவரைக் களமிறக்காத கலைஞர் இப்போது ஏன் அரசியல் மேடையில் அரங்கேற்றுகிறார்?

அவர் பேச்சாற்றல் மிக்கவர்.தன் கருத்தை மேடை ஏறிச் சொல்வதில் அவருக்குக் கூச்சம் கிடையாது. அவர் பேசிய சில இலக்கியக் கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரது முதல் கவிதை நூலான கருவறை வாசனை வெளியீட்டு விழாவில் நான் பேசியிருக்கிறேன். அப்போது அவர் ஏற்புரை ஆற்றுவதை மேடையிலிருந்தே கேட்டிருக்கிறேன். எனவே அவரது பேச்சுத் திறமை குறித்து எனக்கு சற்றும் சந்தேகம் கிடையாது.

அவர் தனது கருத்துக்களைப் பொது அரங்கின் முன் வைப்பதிலும் தயக்கம் காட்டுபவர் அல்ல அண்மைக்காலமாக கருத்து என்ற அமைப்பைத் துவக்கி பொது விஷயங்கள் குறித்த விவாதங்களை அரங்கில் நடத்தி வருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு குஷ்பு வெளியிட்ட ஒரு கருத்துத் தொடர்பாக பிரசினை எழுந்த தருணத்தில், கருத்துச் சுதந்திரத்தைப் பேண அந்த அமைப்பை நிறுவினார்.பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் (அப்போது அது விஜயாக ஆகியிருக்கவில்லை) அவரே பல வாரங்களுக்குக் கருத்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தியதுண்டு. சிங்கப்பூர் தொலைக்காட்சியில் அவர் வழங்கிய நிகழ்ச்சிகளைப் பற்றி நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தியா டுடே தமிழ் இதழில் பத்திகள் எழுதி வந்ததுமுண்டு.

பேச்சாற்றல் மிக்க, எழுத்தாற்றல் மிக்க இவரை ஏன் இத்தனை நாள் அரசியலில் ஈடுபடுத்தாமல் இருந்த கருணாநிதி இப்போது ஏன் அவரைக் களமிறக்குகிறார்?

மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனத்தாங்கலை அடுத்துக் கலைஞர், திமுக அவர்களது பலங்களைச் சார்ந்து நிற்கவேண்டியதில்லை, அவர்களது பலங்களுக்கு ஈடான மாற்று ஏற்பாடுகளைக் கட்சியே உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறார் என்பதை அவரது கடநத சில வார நடவடிக்கைகள் காட்டுகின்றன. மாறன் சகோதரர்களின் முதல் பெரும் பலம் அவர்களது சன் தொலைக்காட்சி. அதைப் போன்ற அல்லது அதை விடச் சிறந்த தொலைக்காட்சி ஒன்றைக் கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தோற்றுவிப்பதில் திமுகவின் முன்னணித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். சன் தொலைகாட்சியின் ஆரம்ப நாள்களில் அது வேரூன்ற உழைத்தவரும், அதன் பங்குதாரருமாக இருந்து பின் வெளியேற்றப்பட்ட சரத் என்பவரது நிர்வாகத்தில் இந்தப் புதிய தொலைக்காட்சி உருவாகிவருகிறது. இதற்கு திமுகவின் தலைமையகமான அறிவாலயத்திலேயே இடமளிக்கப்பட்டிருக்கிறது. சன் டிவியும் அங்கிருந்துதான் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது அங்கிருந்து விரைவில் வெளியேறி வேறு இடத்திற்குச் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சன் டிவி நிகழ்ச்சிகளில் முக்கியப் பங்களித்து வரும் சிலர் -குறிப்பாக கலைஞரின் மகள் போன்ற ராதிகா- கலைஞர் டி.விக்கும் பங்களிக்கப் போகிறார்கள் எனப் பேச்சு பலமாக அடிபடுகிறது.

பலர் எழுதியும் மகிழ்ந்தும் வருவது போல, இது சன் டி.வியைப் பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற கோணத்தில் நான் பார்க்கவில்லை. அது கலைஞரின் நோக்கமாகவும் இராது. மாறாக கட்சி சொந்தக் காலில் நிற்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்தப் புதிய ஏற்பாட்டை நான் கருதுகிறேன்.
தில்லியில் திமுகவின் முகம், கருணாநிதியின் குரல் எனக் கருதப்பட்டதால் தயாநிதி, மாறன் சகோதரர்களின் மற்றொரு பலமாகக் கருதப்பட்டார். அவருக்கு மாற்றாக இப்போது ஒருவர் தேவைப்படுகிறார்.அந்த மற்றொருவர்தான் கனிமொழி என்று சில ஊடகங்கள் எழுதியிருந்தன. அதுதான் உண்மை என்றால் மகிழ்ச்சிதான். ஏனெனில் தயாநிதியின் பிளஸ்பாயிண்ட் ஆகக் கருதப்படும் எல்லா அம்சங்களும் கனிமொழியிடமும் உண்டு. கண்ணியமான தோற்றம், இனிமையான சுபாவம், மற்றவர்களை மரியாதையோடு நடத்தும் பண்பு, அதே நேரம் தன் கருத்தில் உறுதியாக நிற்பது, ஊடகங்களிடம் நேசமான உறவு, ஆங்கிலக் கல்வி, நவீன உலகின் சிந்தனைகள் எல்லாம் இவரிடமும் உண்டு.தயாநிதியிடம் இல்லாத வேறு பல பலங்களும் உண்டு. எழுத்தாற்றல், பேச்சாற்றல், இலக்கிய மனம், சமூகம் சார்ந்த முற்போக்கான சிந்தனைகள், தேவை ஏற்பட்டால் தெருவில் இறங்கிப் போராடவும் தயங்காத மனஉறுதி (கலைஞர் கைது செய்யப்பட்டபோது இதைத் தமிழகம் கண்டது) எல்லாவற்றிற்கும் மேலாகக் கலைஞர் வீட்டிலேயே அவர் அருகில் இருந்து பணியாற்றுவதைப் பார்த்து அறிந்து கொண்ட அனுபவம் எனப் பல கூடுதல் பலங்கள் கனிமொழிக்கு உண்டு. எனவே அவர் தயாநிதிக்கு, சிறந்த மாற்றுதான்.

ஆனால்-

இத்தனை நாளாக இல்லாமல் இப்போது கனிமொழி அரசியலில் இறக்கப்படுவதற்கு, குடும்ப உறுப்பினர்கள் சிலரது- குறிப்பாக அண்ணன் அழகிரியின் வற்புறுத்தல்- காரணம் எனச் சில செய்திகள் குறிப்பிடுகின்றன.குடும்பம் மாறன் சகோதரர்களுக்கு எதிராக அணி திரண்டு நிற்பதாகவும், அழகிரி தலைமியில் உள்ள அந்த அணி தங்களுக்கு பலம் சேர்த்துக் கொள்ள கனிமொழியைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளதாகவும் வலைப்பதிவில் ஒருவர் (பத்திர்கையாளர்?) எழுதியிருந்தார். இருக்கலாம். அவர்களது குடும்பச் சண்டைக்குள் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. எனது கவலையெல்லாம் மாறன் சகோதரர்களுக்கும் கலைஞரின் மகன்களுக்கும் இடையில் உள்ள அதிகாரப் போட்டியில் கனிமொழி ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாதே என்பதுதான்.காயம் பட்டுவிட்டக்கூடாதே, கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாதே என்பதுதான்.
கருணாநிதியின் நடவடிக்கைகள் தெளிவாக, பகிரங்கமாகத் தெரிவது போல, மாறன் சகோதரர்களின் நடவடிக்கைகள் துல்லியமாகத் தெரியவில்லை.இப்போதைக்கு மெளனமாக இருப்பது சிறந்தது எனக் கருதுகிறார்போல் தோன்றுகிறது. தயாநிதி அரசியலுக்கு வரும்வரை அவர்களுக்கு அதில் நேரடியாக ஈடுபடும் அதிகார ஆசை இருந்ததாகத் தோன்றவில்லை. வர்த்தக ரீதிகள் அவர்களுக்கு முக்கியமானவை.தங்கள் துறையில் தாங்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்ற தாகம் இருந்தது. அதற்கு எல்லா வழிகளையும் பின்பற்றும் மனநிலையில் இருந்தார்கள். அரசியலும் வணிக வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றுதான் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள் என்று கூட சிலர் எண்ணினார்கள். ஆனால் தயாநிதி அரசியலுக்கு வந்து, அவருக்கு சிறகுகளும் கொடுத்து பின் அது முறிக்கவும் பட்டதின் வலியில் அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.முகத்துக்கு நேர வந்து மோதாமல் எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்மை அவர்களுக்கு உண்டு.

கவிஞராக இருந்ததைவிட அரசியல்வாதியாகக் கனிமொழிக்குத் தடித்த தோலும், வலுவான மனமும் தேவை. அவரது காலை வாரிவிடாத கபடு இல்லாத நட்பு வட்டம் தேவை. கலைஞர் மகள் என்பதற்காகவும், கலைஞரின் ஆதரவு பெற்ற புதிய அதிகார மையம் என்பதற்காகவும் அவரை முகத்திற்கு நேரே பேசவும், குளிர்ச்சியான வார்த்தைகளால் குளிப்பாட்டவும் ஒரு கூட்டம் வரும். ஆனால் மாற்றுக் கருத்தானலும் மனதில் பட்டதை தைரியமாகச் சொல்லும் நண்பர்கள்தான் அவருக்கு அதிகம் பயன்படுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் இனி கனிமொழி தன் எதிரிகளை விட நண்பர்களைப் பற்றித்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

இலக்கிய உலகில் கனிமொழிக்கு குடும்பம் என்பது ஒரு சுமையாகவே இருந்தது என நான் எண்ணுவதுண்டு. கலைஞரின் மகள் என்பதாலே அவர் எளிதில் கவனம் பெற்றுவிட்டார் எனக் கருதுகிறவர்கள் இலக்கிய உலகில் உண்டு. ஆனால் .புகழ் பெற்ற, அதிகாரம் மிக்க ஒருவரது மகள் என்பது அவருக்கு ஒரு சங்கடமாகவே இருந்திருக்க வேண்டும். அவரது கருத்துக்கள் பல கலைஞரின் கருத்திலிருந்து மாறுபட்டவை.பெண்களைப் பற்றிய அவரது பார்வை, ஜாதிகளைப் பற்றிய அவரது பார்வை, ஏன் இலக்கியம் பற்றிய அவரது பார்வை இவையெல்லாம் கலைஞரது பார்வையிலிருந்து மாறுபட்டவை மாறுபட்டவை என்பதற்காக அவர் அவற்றை மறைத்ததில்லை. மழுப்பியதில்லை. தந்தையின் கருத்துக்கு மாறாக அவர் கருத்து வெளிப்படும் போதெல்லாம், கலைஞரது மகளா இப்படிச் சொன்னார் என வியப்பும் கண்டனங்களும் எழுந்ததுண்டு. அவர் கலைஞரின் மகள் என்பதனாலேயே கலைஞ்ரின் எதிரிகளின் கணைகள் அவரது இலக்கியத்தின் மீதும் பாய்ந்ததுண்டு, இதனால் எல்லாம் அவருக்கு தந்தையின் புகழ் அவருக்கு இறக்கைகளாக அல்ல, இடையூறாகவே இருந்தது. அவர் இதையெல்லாம் மீறித் தன் வாசிப்பால், தன் சிந்தனையால், தன் எழுத்தால், தன் முயற்சியால் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் அரசியலில் அவருக்கு குடுமப்த்தின் அரவணைப்பு வேண்டும். கட்சியின் துனை வேண்டும். அவற்றின் கருத்துக்கு மாறாக தனக்கென ஒரு கருத்து இருந்தாலும் கூட அதை வெளிப்படையாகப் பேச எழுத விவாதிக்க முடியாது. அப்படிச் செய்தால் அது பிரசினைகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உள்ளாகும். இலக்கியத்திலிருந்து அரசியலுக்குப் போகும் பயணத்தில் சுதந்திரச் சிந்தனையாளார் கனிமொழியை இழந்துவிடுவோமோ? அப்படி நேருமானால் அவரது நண்பர்களுக்கு அதைவிடப் பெரிய இழப்பு இல்லை

சிங்கப்பூர் தமிழ் முரசு இதழுக்கு எழுதியது

9 comments:

PRABHU RAJADURAI said...

"இப்போது கனிமொழி அரசியலில் இறக்கப்படுவதற்கு, குடும்ப உறுப்பினர்கள் சிலரது- குறிப்பாக அண்ணன் அழகிரியின் வற்புறுத்தல்- காரணம்"

இது ஒன்றே கவலையளிக்கும் ஒரு விடயம். அதே அச்சத்தை தாங்களும் வெளிப்படுத்தியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

கனிமொழியும் தனது மதுரை வருகையின் மூலம் இந்த அச்சத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

உண்மைத்தமிழன் said...

மாலன் ஸார்.. நான் முன்பே எழுதியிருந்ததைப் போல இது மாறன்களுக்கு கலைஞர் வைத்திருக்கின்ற செக்தான்.. எனக்கு நேரடி சொந்தம்தான் முக்கியம்; நீங்கள் அல்ல.. என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். வேறு ஒன்றுமில்லை.

கனிமொழிக்கும் மீடியா வெளிச்சம் பட்டவுடன் ஏன் நான் வரக்கூடாது என்ற உணர்வும் வந்துவிட்டது. கலைஞரின் பெண் வாரிசு நான்தான் என்று கனிமொழி புளகாங்கிதப்படுவதை அவருடைய பட்டறிவு படம் பிடித்துக் காட்டிவிட்டது.

ஆக குடும்பச் சண்டை கொலு மண்டபத்திற்கு வந்ததும் அல்லாமல் பாராளுமன்ற மண்டபத்திற்கும் செல்கிறது. அவ்வளவுதான்..

கலைஞர் வாழ்க.. தி.மு.க. வாழ்க என்று தொண்டைத் தண்ணி தீர கத்திக் கொண்டிருக்கிறார்களே அந்தத் தொண்டர்கள் மகா பாவம்..

அடிபடுவது அவர்கள். அலுங்காமல், குலுங்காமல் முன்னேறுபவர்கள் இவர்கள்.

என்ன செய்வது? தி.மு.க. என்பதே திருக்குவளை மு.கருணாநிதியாக இருக்கிறது..

✪சிந்தாநதி said...

//என்ன செய்வது? தி.மு.க. என்பதே திருக்குவளை மு.கருணாநிதியாக இருக்கிறது..//

இது திமுகவுக்கு மட்டுமல்ல.எல்லா கட்சிகளுக்கும் இன்று பொருந்ததும். எந்தக் கட்சியும் (ஒரு வேளை கம்யூனிஸ்டுகள் மாறுபட்டிருக்கலாம்.) தலைமையின் கண்ணசைவை மீறி எதுவும் செய்ய முடியாது. தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் இன்றைய எல்லா அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன.

எனவே இதற்காக திமுகவை மட்டும் குறை கூறுவது அர்த்தமற்றது.

லக்ஷ்மி said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு வலையுலகுக்கு திரும்பியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நல்வரவு மாலன். என்னுடைய பதிவை எட்டி பார்த்தமைக்கும் நன்றி.
//இனி கனிமொழி தன் எதிரிகளை விட நண்பர்களைப் பற்றித்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.// இதென்னவோ நிச்சயம் உண்மை. அவரிடம் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம். எல்லாவற்றையும் அவர் சமாளித்து வர வேண்டும். அமைச்சர் பதவி பற்றிய கேள்விக்கு படிபடியாக போகலாமே என்று பதிலளித்திருக்கிறார். இன்னும் சில நாட்களேனும் அவர் பொறுத்திருப்பாரேயானால் நிச்சயம் அவர் மேல் மரியாதை கூடும். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

Aruna Srinivasan said...

சிங்கப்பூரில் தமிழ்முரசில் அவர் பணியாற்றியபோது முதலில் அறிமுகமாகியபோதும், பின்னர் சென்னையில் தூரத்தில் இருந்து நான் பார்த்தவரையிலும், கனிமொழி என்கிற பெண் இனிமையானவராக, பண்புள்ளவராக, கண்ணியமானவராக, நல்ல முதிர்ச்சியுடைய கருத்துக்களைக் கொண்டவராக, துணிவுடன் அதே சமயம் பண்புடன் தன் கருத்துக்களை வெளிப்படுத்துபவராகத் தெரிகிறார். வாரிசு என்பதாலேயே ஒருவரை ஒதுக்குவதும் சரியல்ல என்ற அவர் வாதம் சரியானதுதான். இவர் அரசியலில் நுழைக்கப்பட்ட நேரம் இவர் ஒரு பகடைக்காய் போல் பயன்படுத்தப்படுவதாகத் தோன்றினாலும், இது போன்ற ஒரு சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து நுழைக்கப்பட்டதுபோல்தான் தோன்றுகிறது. இருந்தாலும், இன்றைய தேதியில் தமிழக அரசியலில் ஒரு புதுக் காற்றுபோல் அவரது குணங்கள் தெரிகின்றன.

ஆனால்.... எவ்வளவு நாள் அவர் மற்றுமொரு சராசரி அரசியல்வாதியாக மாறாமல் இருப்பார் என்பது நிச்சயமில்லை. அப்படி அவர் மாறாமல் இருக்கும் பட்சத்தில், இப்போது "தென்படும்" இதே குணங்களுடன் இருப்பாரென்றால், தேவையான மக்கள் தொடர்பு, விஷய ஞானம் போன்றவற்றை இன்னும் ஆழமாக இவர் கற்றுக்கொண்டுவிட்டால், தமிழக அரசியலில் தூரத்தில் சற்று வெளிச்சம் தெரிகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கனிமொழி வந்தநேரம் தவறானது.
வந்ததும் வராததுமாகவே மதுரை வன்முறையை நியாயப்படுத்தியோ, தி.மு.க.வைக் காத்தோ கருத்துச் சொல்ல வேண்டியநிலை. அப்படித்தான் சொல்லியுமுள்ளார். இனிமேல் நாங்கள் கருதிவைத்திருந்த கனிமொழியைக் காணமுடியாது. முழுக்க முழுக்க சராசரி அரசியல்வாதியான கனிமொழியைத்தான் காணமுடியும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அம்மா ஜெயலலிதாவுக்கு போட்டியாக கனிமொழி என்பது ஒப்புக்கொள்வதாக இல்லை. வேண்டுமானால் சின்னம்மா சசிகலாவோடு கனிமொழி போட்டி போடட்டும்.