Monday, May 04, 2009

யாருக்கு வாக்களிப்பது-2

யாருக்கு வாக்களிப்பது?-2

இந்தியாவிலுள்ள கட்சிகளிலே மிகப் பழமையான கட்சி காங்கிரஸ். சுதந்திரத்திற்குப் பின் அது தனது தலைமையை மையப்படுத்தியே தேர்தல்களை சந்தித்து வருகிறது. தலைமை எந்தளவிற்கு ஜனநாயகத்தில், குறிப்பாக உட்கட்சி ஜனநாயகத்தில் அது நம்பிக்கை கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு மாத்திரமே அது கட்சிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நேருவின் காலத்தில், சுதந்திரப் போராட்டத்தின் போது பல மாநிலங்களில் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் தலைவராகத் தொடர்ந்தார்கள்.அவருக்குப் பின தலைமைப் போட்டியின் காரணமாக இந்திரா கட்சியைப் பிளந்து அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.தனது தலைமைக்குப் போட்டி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக,மாநிலங்களில் விசுவாசிகளுக்கும், ஆமாம் சாமிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப் படுத்தினார்.அப்போதிருந்து இந்தியாவின் ஆதார பலமான பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து காங்கிரஸ் மெல்ல மெல்ல நழுவி, ஒரு குடும்பத்தின் கையில் சிக்கிய நிறுவனமாக அது மாறத் தொடங்கியது.நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஒன்று மட்டுமே கட்சியை வழி நடத்துவதற்கான தகுதியாகி விட்டது.

கூட்டாட்சியின் எதிரி

ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இந்தியா என்பதே மாநிலங்களின் தொகுப்பு என்பதுதான். பொதுவான அம்சங்கள் கொண்ட ஒரு நிலப்பரப்பு , நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்ட நாடு அல்ல இந்தியா. மாறாக பல்வேறு பிரதேசங்கள், தங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு அந்நியனை அதிகாரத்தில் இருந்து அகற்றப் போராடி,அதன் தொடர்ச்சியாக ஒரு பொது அடையாளத்தை ஏற்றுக் கொண்டதால் உருவானதுதான் இந்தியா.

சுருக்கமாகச் சொன்னால்,பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழி, கலாசாரம், தேவைகள் அரசியல் வரலாறு கொண்ட மக்களின் ஆதரவைப் பெறாமல் எந்த ஒருவரும் தில்லியில் ஆட்சி அமைக்க, அதிகாரம் பெற இயலாது. மக்களிடம் செல்வாக்கு இல்லாமல், தில்லியால் நியமிக்கப்பட்ட தலைவர்களால் ஆட்சியமைக்கும் அளவிற்கு வெற்றி தேடித் தர இயலாமல் போனதால் 1991லிருந்து மாநிலக் கட்சிகளின் துணையோடுதான் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று வந்திருக்கிறது.இதற்காக காங்கிரஸ் கட்சி அந்த சிறு கட்சிகளுக்கு நன்றியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அதற்கு மாறாக கூட்டணி என்றே பேச்சே கிடையாது, என 1998 செப்டம்பரில் பச்மார்ஹி(மத்திய பிரதேசம்)யில் கூடிய தனது அகில இந்தியக் கூட்டத்தில் தீர்மானம் போட்டது. பின்னர் 2004 தேர்தலில் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிய வந்த நிலையில், 2003 ஜூலையில் சிம்லாக் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தைத் தூக்கிக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை அமைத்தது.அந்த ஆட்சி முடிந்து அடுத்த இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டிய நேரம் வந்தபோது, மீண்டும் தேசிய அளவில் யாரோடும் கூட்டணி கிடையாது என அறிவித்தது. மன்மோகன் சிங், இன்னும் ஒருபடி மேலே போய்,மாநிலக் கட்சிகள், பயங்கரவாதம், மதவாதம், நக்சலிசம் இவற்றிற்கு இணையானது என்ற ரீதியில் பேசினார்.

சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ், Fedaralism என்ற கூட்டாச்சிக்கு எதிரான நிலையைக் கொண்டிருக்கிறது.வேறு வழியில்லாமல் மாநிலக் கட்சிகளை வேண்டா வெறுப்பாக சகித்துக் கொண்டிருக்கிறது.

மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமை,உட்கட்சி ஜனநாயகமற்ற, குடும்ப வாரிசுகளின் கையில் ஒப்படைக்கப்பட்ட Monolithic கட்சியின் ஆட்சி என்பது இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கு ஏற்றதல்ல.காங்கிரஸ் இந்தப் பண்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்வரை அது நிராகரிக்கப்பட வேண்டும்.

பொம்மை ஆட்சி
2004 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் இன்னொரு வெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. அதுதான் பொம்மை ஆட்சி.(Rule by Proxy)மக்கள் செல்வாக்குக் கொண்ட தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு தனது ஆமாம் சாமிகளைக் கட்சியில் முன்னிறுத்திய இந்திராவை விட சோனியா ஒரு படி மேலே போய் ஆமாம் சாமியை பிரதமராக்குகிற கலாசாரத்தை ஆரம்பித்து வைக்கிறார்.இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தக் கலாசாரத்தின் விளைவு இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும். யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.யார் மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப் பட்டவரோ அவர் வசம்தான் அதிகாரம் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் உண்மையான அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற நிலை நாளடைவில் எதேச்சதிகாரத்திற்கு இட்டுச் சென்றுவிடும்.

இந்தக் காரணத்திற்காகவும் நான் காங்கிரசை நிராகரிக்கிறேன்

கூட்டணிக் கட்சிகள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று காங்கிரசின் கூட்டணியில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் அங்கம் வகிக்கின்றன.

திமுக

அடிப்படையில் காங்கிரஸ் திமுக இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளைக் கொண்டவை. காங்கிரஸ் அதிகாரம் மையப்படுத்தப்பட வேண்டும், மாநிலக் கட்சிகள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை என்ற கருத்தைக் கொண்டிருக்கும் கட்சி. திமுக அதிகாரப் பரவல், கூட்டாட்சித் தத்துவம் இவற்றை வலியுறுத்திப் பேசி வந்த கட்சி. ஆனால் இரண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, தக்க வைத்துக் கொள்வது என்ற புள்ளியில் ஒருங்கிணைகின்றன.

1967ல்ஆட்சிக்கு வரும் முன்னர் காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, ஆட்சிக்கு வந்த பின், 1971ல் காங்கிரசோடு கூட்டணி அமைத்துக் கொண்டது. காங்கிரசிற்கு எதிரான கூட்டணி அண்ணாவாலும், காங்கிரசுடனான கூட்டணி கருணாநிதியாலும் அமைக்கப்பட்டது. திமுக பிளவு கண்ட பிறகு, திமுக அல்லது அதிமுக இரண்டும் காங்கிரசோடு கூட்டணி கண்டே தேர்தலை சந்தித்து வந்திருக்கின்றன.

பதிவர்கள் சிலர் கருதுவது போல,(காண்க தமிழ் சசி} எப்போதும் தமிழக அரசியல் என்பது இந்திய தேசியத்திற்கும் திராவிட அரசியலுக்குமான இடையேயான 'போராட்டமாக' இருந்ததில்லை. அது வாக்குகளைத் திரட்டுவதற்கான தேர்தல் அரசியலாகவே இருந்து வந்திருக்கிறது (Competitive Electoral Politics) சித்தாந்த அடிப்படையிலான அரசியல் என்பதிலிருந்து, தேர்தல் கணக்கு சார்ந்த அரசியலாக தமிழக அரசியலை மாற்றியதில் திராவிடக்கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவிற்கு பெரும் பங்குண்டு. இது பாஜகவோடு திமுக உடன்பாடு கண்டபோது அப்பட்டமாகப் பகிரங்கப்பட்டது. அப்படி பகிரங்கப்பட்டபின் திமுக இது குறித்த நாணத்தையோ, கூச்சத்தையோ, குற்ற உணர்வையோ இழந்து விட்டது.

அதன் அடையாளம்தான் சோனியா தலைமையில் அது ஏற்றுக் கொண்டிருக்கும் கூட்டணி. ஜெயின் கமிஷன் அறிக்கை தொடர்பாக தன் அமைச்சர்களை விலக்கிக் கொண்ட திமுக இன்று சோனியா காந்தியின் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பதற்கு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதொன்றே காரணம்.

அந்த அதிகாரம் கூட குடும்ப வாரிசுகளின் நலனின் பொருட்டு என்ற இலக்கை நோக்கி அந்தக் கட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வாரிசுகளின்வசம் கட்சி அதிகாரம், ஆட்சி அதிகாரம் இரண்டையும் ஒப்படைப்பதில் காங்கிரஸ், திமுக என்ற இரண்டு கட்சிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன.

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், அதிகாரத்தை அனுபவிக்கலாம் (Power without accountability) என்ற காங்கிரஸ் அணுகுமுறையின் தமிழகப் பதிப்பாக அழகிரி விளங்குகிறார்.

இலங்கைப் பிரசினையில் திமுக நடந்து கொண்ட விதம் அதன் சுயநல நோக்குகளை அம்பலப்படுத்தி விட்டன.இத்தனை வயதுக்கு மேல், சமரசம் செய்து கொண்டாவது, ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என எண்ணுவதற்குக் காரணம், அந்த அதிகாரம் தன் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்குத் தேவை என்பதற்காகதானிருக்க வேண்டும். இந்த முன்னுதாரணமும் தமிழகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்காது.

விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலைச் சிறுத்தைகளிடம் வாரிசு அரசியல் இல்லை. ஆனால் அவர்களின் சமரசம் திமுகவின் சமரசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.இந்த சமரசத்தின் மூலம் அது அடையப் போகும் பலன் ஆட்சி அல்ல. அதிக பட்சம் நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்கள்..இன்னும் சொல்லப்போனால் கட்சி தோன்றி 25 ஆண்டுகளுக்குப் பின் திமுக சென்றடைந்த இடத்தை விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் களத்திற்கு வந்த சில ஆண்டுகளிலேயே சென்றடைந்து விட்டது அதன் உள்ளீடற்ற பலவீனத்தைப் பகிரங்கப்படுத்துகிறது.

கட்சி அறிவித்த போராட்டங்களுக்காகச் சிறை சென்ற தொண்டர்கள் (சிலர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை சந்தித்தவர்கள்)விடுதலைச் சிறுத்தைகளில் உண்டு. ஆனால் விழுப்புரம் தொகுதியின் வேட்பாளராக கட்சி முதலில் தேர்ந்தெடுத்தது, கட்சி மாநாடுகளில் கூடக் கலந்து கொள்ளாத ஒரு கோடீஸ்வரரை. அவர் வாதத் திறமையோ, ஆங்கில அறிவோ இல்லாதவர். அவரின் ஒரே தகுதி அவர் ரியல் எஸ்டேட் வணிகம் மூலம் கோடிகளைப் பார்த்தவர் என்பது ஒன்றே. அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதும் அவர் மாற்றப்பட்டார். அப்போதும் அந்த இடம் ஒரு தொண்டனுக்கு அளிக்கப்படவில்லை. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. உதைபடத் தொண்டன்! சுகம் பெற கனவான்கள்!

கட்சி, ஆட்சி என்ற எந்தக் கோணத்தில் பார்த்தாலும் காங்கிரஸ் தலைமை ஏற்றுள்ள அணி நிராகரிக்கப்பட வேண்டியதே.

பாஜக அணி பற்றிய அலசல் அடுத்த பதிவில்

4 comments:

தீப்பெட்டி said...

மிக சிறப்பான அலசல்...
ஆனாலும் இது ஒருசார்புடையதென சிலரால் குறை கூறப்படும் அபாயம் உள்ளதை மறுக்கமுடியாது. நமது மக்களின் மனோபாவம் அது.

//யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.யார் மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப் பட்டவரோ அவர் வசம்தான் அதிகாரம் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் உண்மையான அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற நிலை நாளடைவில் எதேச்சதிகாரத்திற்கு இட்டுச் சென்றுவிடும்//

நூற்றுக்கு நூறு சரியான கருத்து...

அறிவன்#11802717200764379909 said...

\\உதைபடத் தொண்டன்! சுகம் பெற கனவான்கள்!\\

70 களில் இருந்து தமிழக அரசியல் க(ம்பெனி)ட்சிகளின் கொள்கை இதுதான் என்பது தெரியவில்லையா என்ன?

prakash said...

வாரிசு அரசியல் , மாநில சுயாட்சி போன்ற அடிப்படை கொள்கைகள் , தேர்தல் அரசியல் ( electoral politics) இல இருந்து மாறி வெகு நாட்கள் ஆகி விட்டன. சித்தாந்த ரீதியான அரசியலை தி.மு.க போன்ற கட்சிகள் போக போக மறந்தே போய்விடும் .

I expected an in-depth analysis pointing out some serious failures of UPA by addressing some key issues. You have kept it simple.

Muthukumar said...

வெகுஜன ஊடகத்தில் வெளிவரவேண்டிய மிக அருமையான அலசல்.

பொம்மை ஆட்சி குறித்து நன்றாக எழுதியுள்ளீர்கள். வாக்காளர்களாக நாம் செய்ய வேண்டியது ஒன்று உண்டு.

ஆட்சி/கட்சி இரண்டையும் சீராக நிர்வகிக்கும் அளவு அறிவாற்றல், தனித்திறமை மற்றும் ஆளுமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ள முயலாமல் முன்னோர்/மூத்தோர் நிழலில் சுகம் காண எத்தனிக்கும் வாரிசுகளை கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் தோற்கடிக்க வேண்டும்.

இன்னொன்று - திரைக்குப்பின்னிருந்து (அல்லது முன்னிருந்தோ) ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் செல்லாக்காசாக்கப்படவேண்டும்.

அப்படி செய்தால் பொம்மை ஆட்சி போன்ற கொடுமைகள் குறையலாம்.

நரசிம்மராவ் மறுபடி வென்றிருந்தால் ஒருவேளை மாற்றம் தட்டுப்பட்டிருக்குமோ ?

அன்புடன்
முத்துக்குமார்