Wednesday, November 05, 2008

பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்...

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வ்ரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிகாவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க் விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் 'தூய்மைப்படுத்தல்' போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான். அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம். இந்தப் பின்ன்ணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜன்நாயகக் கட்சி வேட்பாளரை அம்ர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

"உலகம்யமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது" ("While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans -- as well as those working hard to become middle class -- are seeing the American dream slip further and further away,") இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் ப்ல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்: இந்த "முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை." ("We're not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn't just tell people what they want to hear but tells everyone what they need to know.")

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ' முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு'க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் 'கார்ப்போரேட்'களை எதிர்த்து - எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், 'கை நழுவிப் போன கனவை' மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். 'இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்' என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

'தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்' என்று சொல்லும் அவர் அதே மூச்சில், 'எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்' (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை 'பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக' விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை- குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும். .பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

3 comments:

ஜமாலன் said...

யதார்த்தமான சிறப்பான அலசல். நல்லதொரு அரசியல் கட்டுரை.

no-nononsense said...

சிறப்பான அலசல்

ஆர். இளங்கோவன் said...

அமீரக்கத்தில் வாழும் ஓர் தமிழனுக்கு திரு.மாலனின் வலையினுள் நுழைய வழி கொடுத்த இறைவனுக்கும் இந்த வலையின் உரிமையாளாரான திரு.மாலனுக்கும் மிக்கா நன்றிகள்.. சென்னை குரோம்ம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி யில் பயின்ற காலத்திலிருந்தெ என்னை ஈர்த்த ஓர் படைப்பாளியை பார்க்க ஏங்கினேன்.. இன்று கிடைத்ததும் மிக்க மகிழ்வில் நான்.. இந்த தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழனின் வரிகள் இந்த வலையில் வருகின்றதே அதற்கே கோடி நன்றிகள் திரு.மாலன் ஐயா..

என்னுடைய வலையின் முகவரி http//elangovan68.blogspot.com
தங்கள் பார்வை பட்டால்.. அதன் வளர்ச்சி நன்றாக அமையும்.

உங்கள் படைப்புக்களை இனி வாசித்து என் பதிவுகளை இடுகின்றேன் ஐயா..

என் நண்பர் சேவியருக்கு நான் எழுதிய அந்த வரிகளையே உங்களுக்கும் எழுத விரும்புகின்றேன்

அவளின் ஈரக்கூந்தலின்
வாசம்
இன்னும் என் மனதில்
இருக்கின்றதே
அதற்கு காரணம்?
அவளின் நினைவுகளா?
எந்தன் உணர்வுகளா??

காதல் பாடம்
கற்றுக் கொள்ளக்
கூடிய பாடமா
கற்றுத் தரக்கூடைய
பாடமா?

அன்புடன் இளங்கோவன்.

வருங்காலங்களில் அதிக எழுத்துக்களுடன் வருவேன் நீங்கள் அனுமதித்தால்....