இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த வாசகத்தை எத்தனையோ அரங்குகளில், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ பேர் வாயிலாகக் கேட்டுவந்திருக்கிறோம். வாக்காளர்களின் எண்ணிக்கை என்ற கோணத்தில் பார்த்தால் இது உண்மைதான். ஆனால் ஆட்சியில் மக்களுக்கு உள்ள பிரதிநிதித்துவத்தின் அளவு என்ற கோணத்தில் பார்த்தால், 1992க்கு முன்வரை, இந்தியா தனது ஜனநாயகத்தைக் குறித்துப் பெருமை கொள்ள முடியாது. அன்று இந்தியாவின் மக்கள் தொகை என்பது 80 கோடிக்கு அருகில் இருந்தது. அப்போது, நாடாளுமன்றம், மாநிலச் சட்ட மன்றங்களில் இருந்த இடங்கள் இவை எல்லாமுமாகச் சேர்ந்து மக்களால் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டாது. அதாவது 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வெறும் 5000 பேர். அதாவது 0.000625 சதவீதம்!
இந்திம மக்கள் ஆட்சிகளின் மீதும் அரசியலிம் மீதும் தொடர்ந்து நம்பிக்கை இழந்து வருவதற்கு, இந்திய ஜனநாயகம் இப்படி கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்ததும் ஒரு காரணம்.
கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்த நம் நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகத்தை 1992ல் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசியல் சட்டத் திருத்தம் மாற்றி அமைத்தது. 73வது அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புக்களை கிராம அளவில் அமைவதை உறுதி செய்தது.அது மட்டுமல்ல, அந்த அமைப்புகளில் முன்றிலொரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவும், தலித்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் மூலம் பஞ்சாயத்து உறுப்பினர்களும் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்படவும் அது வகை செய்தது.இவை ஏதோ கருணையின் பேரில அளிக்கப்படும் சலுகையாக அல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமையாக அளிக்கப்பட்டன. அதாவது இவற்றை இன்னொரு அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம்தான் மாற்றவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ முடியும். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பானமை வேண்டும்.
இந்தத் திருத்தத்தின் காரணமாக, சுமார் 30லட்சத்திற்கும் அதிகமாக பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவற்றில் 10 லட்சம் பேருக்கு மேல் பெண்கள். கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு மேல் தலித்துகள்.
நெடுங்காலமாக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, ஓரம் கட்டப்படிருந்த மனிதர்களை ஆளும் பொறுப்புக்களுக்கு (governance) சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கு அரை நூற்றாண்டு காலமாகியது. கிராம சுயராஜ்யமே பூரண சுயராஜ்யம் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி பலமுறை பேசிவந்திருந்த போதிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வரையபட்டபோது கிராம அளவிலான பஞ்சாயத்துக்கள் பற்றி, அந்த வரைவில் ஏதும் குறிப்பிடபடவில்லை. அதைச் சுட்டிக்காட்டி, ராஜேந்திர பிரசாத் டாக்டர்.அம்பேத்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் காரணமாக, அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஓர் விவாதம் எழுந்தது.காந்தியவாதியான கே. சந்தானம் ஒரு வரைவுத் திருத்தத்தை முன் மொழிந்தார். அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் பஞ்சாயத்து பற்றிய கருத்துக்கள் அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றது. வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்குக் கிடையாது. உதாரணம்:மதுவிலக்குஇந்த நிலையை 73வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மாற்றியது. ஆனால் அதை நிறைவேற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்த ராஜீவ் காந்தியின் எண்ணத்தில் உருவான பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அவரே பிரதமராக இருந்த போது 1984ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார். ஆனால் 64வது சட்டத்திருத்தம் என்றழைக்கப்பட்ட அது, மாநிலங்களவையில் அந்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. அப்போது ஆளும் கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.
ராஜீவ் மறைவுக்குப் பின் நரசிம்மராவ் அரசு மீண்டும் அதை அறிமுகப்படுத்தியது. அயோத்தி பிரசினை காரணமாக ஏற்பட்டிருந்த சந்தடியில் அதிக விவாதமின்றி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுடையது. ஒவ்வொரு மாநிலமும் அதை நடைமுறைப்படுத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஒன்றை - உறுதி செய்யும் சட்டமாக, Conformatory legislation- இயற்ற வேண்டும். இந்தியாவில் கடைசியாக அந்தச் சட்டத்தை இயற்றிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும், அதிகாரப் பரவல் ஏற்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்த திராவிட இயக்க அரசுகள், தங்களிடமிருந்த அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டின.
ஆனால் இது திராவிடக் கட்சிகளின் போக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள பல கட்சிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. பீகாரில் லாலு பிரசாத் அரசு இருந்த போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாமலேயே ஊராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் ஆளும் அசாமில், ஊராட்சிகளின் பதவிக்காலமான ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகு, மாநில அரசு, ஓர் அரசாணையின் மூலம் ஊராட்சியின் அதிகாரங்களை அதிகாரிகள் வசம் மாற்றிவிட்டு, தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, குவாஹாத்தியில், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தன்னார்வ அமைப்புக்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். பின் கூட்டாக ஊராட்சித் தேர்தல்களை நடத்தக் கோரி ஒரு மனு தயாரித்தோம். அதை முதல்வரை சந்தித்து அளிப்பதற்காக நேரம் கேட்டோம். முதல்வர் அலுவலகம் அவரை சந்திப்பது கடினம், மனுவை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவரிடம் சேர்த்துவிடுவதாகத் தெரிவித்தது. எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் டிரிப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் மறுநாள்,
எங்கள கருத்துக்களை முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட பின், ( http://www.assamtribune.com/scripts/details.asp?id=apr1207/at01)
முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்கிடையில் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தோம். நீதிமன்றத் தலையீட்டின் பேரில் அக்டோ பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவாகியிருக்கிறது. அடித்தள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக இவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது.
காஷ்மீரில் நிலமை அசாமின் நிலைமைக்கு சற்றும் குறைந்ததல்ல. அங்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.நான் மே மாதம் ஸ்ரீநகர் சென்று முதல்வரைத் தவிர எல்லா அரசியல்கட்சித் தலைவர்களையும் சந்தித்தேன். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும், ஆட்சியில் பங்கு வகிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) நிறுவனரும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான, முப்தி முகமது சயீத்தையும் சந்தித்து, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து வாதிட்டேன். பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. மீண்டும் ஜூலை மாதம் 24ம் தேதி ஸ்ரீநகர் சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தேன்.கிரேட்டர் காஷ்மீர் போன்ற செல்வாக்குள்ள ஆங்கில நாளேடுகளும் உருது ஏடுகளும் என் பேட்டியை பெரிய அளவில் பிரசுரித்திருக்கின்றன. (http://www.greaterkashmir.com/full_story.asp?Date=25_7_2007&ItemID=40&cat=21)
ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். வானத்து நட்சத்திரங்களைப் பறித்துத் தரும்படி கேட்கவில்லை, அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமைகளைப் பெறத்தான் இத்தனை போராட்டம்.
அன்று மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி தயக்கம் காட்டியது. இன்று ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற அவரது கட்சியின் அரசுகளே தயங்குகின்றன.
மக்கள் ஜனநாயகம் பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட்களின் ஆட்சியில், சிங்கூர் நந்திகிராம் ஆகிய இரண்டு இடங்களிலுமே, அங்கு அமைக்கப்படும் டாடா தொழிற்சாலைகள் பற்றி அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளோடு விவாதிக்கப்பட்டு ஒப்புதல் ஏதும் பெறப்படவில்லை.இது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உருதி மொழிகளுக்கு முரணானது. அரசமைப்புச் சட்டத்தின் 243G பிரிவு, மூன்று நிலைகளிலும் உள்ள பஞ்சாயத்துக்கள், தங்கள் பகுதியின் 'பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்குமான' திட்டங்களை வகுக்க வேண்டும் என அதிகாரமளிக்கிறது. தங்கள் பகுதிக்கான வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதில் ப்ஞ்சாயத்துக்களுக்கான உரிமையை அங்கீரிக்கும் பிரிவு இது. ஒரு கிராமத்தில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய கிராமசபைக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்துத் திட்டமிடும் உரிமை உண்டு. மேற்கு வங்கத்தில் இயற்றப்பட்டுள்ள பஞ்சாயத்துக்கள் சட்டம் இன்னும் ஒரு படி மேலே போய், வார்டுகள் தோறும் அங்குள்ள வாக்காளர்களைக் கொண்டு கிராம சன்சாத் என்ற சபைகளை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை உருவாக்கக் கணிசமான அதிகாரங்களை அளித்துள்ளது. இத்த்னைக்குப் பிறகும், மாநில அரசு, பஞ்சாயத்துக்களிடமோ, மக்கள் அங்கம் வகிக்கும் கிராமசபைகளிடமோ கலந்து விவாதிக்காமல், தன்னிச்சையாக அங்கு தொழிற்சாலைகளைத் திணிக்க முற்பட்டது.
கர்நாடகத்தில் ஆளும் ஜனதா-பாஜக கூட்டணி அரசு, அங்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பஞ்சாயத்து அமைப்பில் மக்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டப் பிரிவுகளைத் தூக்கி எறியும் விதமாக அண்மையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் நல்லகாலமாக, ஆளுநர் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து அதைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
மக்கள் பங்கேற்புடன் கூடிய அடித்தள ஜனநாயகம், அறுபதாண்டு சுதந்திரத்திற்குப் பின்னும் ஒரு கனவாகவே இருப்பதற்கு என்ன காரணம்?
ஜனநாயகத்தின் ஒர் அம்சமான தேர்தலில் (ஜனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல) முக்கியப்பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லை என்பது மட்டுமல்ல, அவை ஜனநாயகத்தை தங்கள் வசதிப்படி பயன்படுத்திக் கொள்ளவும் முற்படுகின்றன. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இந்தக் கட்சிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதே இதற்கு சாட்சி. நேற்று எதிர்கட்சியாக இருந்த போது நாள்தோறும் வெளி நடப்புச் செய்தவர்கள் இன்று ஆளும் கட்சி. நேற்று ஆளும் கட்சியாக இருந்தவர்கள் இன்று எதிர்க்கட்ட்சியாக மாறியதும், அவர்களும் அவ்வப்போது வெளிநடப்புச் செய்கிறார்கள். காரணம் இரண்டு பேருக்கும் ஒன்றுதான்: சட்டசபையில் பேச அனுமது மறுக்கப்படுகிறது.நேற்று எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் சட்டமன்றத்திற்குள் முக்கிய விவாதங்களின் போது கூட வந்ததில்லை.இன்றும் அதே நிலைதான். ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆட்கள் மாறியிருக்கிறார்கள் ஆனால் காட்சிகள் மாறவில்லை.
சட்டமன்றத்திற்குள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் முழுக்க முழுக்க அங்கு பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தது. அந்தக் கடமையை அரசியல் கட்சிகள் எவ்விதம் நிறைவேற்றுகின்றன? சட்டமன்றத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்கள் கடமை தங்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புவதோடு முடிந்துவிடுகிறது. அதை உற்சாகத்தோடும், கடமை தவறாமலும் அவர்கள் செய்துவருகிறார்கள்.
அண்மையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடாவின் டைட்டானியும் டை ஆக்சைட் ஆலை தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டு அதை ஓர் உயர் நிலைக் குழு விசாரிக்கும், விசாரணை செய்தியாளர்கள் முன் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. வரவேற்க வேண்டிய, ஜனநாயக ரீதியில் ஆன நடைமுறை. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் போது சென்னை நகரம் வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது. அதை விவாதிப்ப்பதற்கான உள்ளரங்கக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருவாரங்களுக்குப் பின் நடந்த கூட்டம், "வன்முறைச் சம்பவங்கள் குறித்து எல்லா நாளிதழ்களும் படத்துடன், சம்பவ இடத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன.அதையே முதல் நிலை ஆதாரமாகக் கொண்டு, அரசு ஓர் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை மக்கள் பங்கேற்கும் வகையில், ஊடகங்கள் முன் நடைபெற வேண்டும்" என்ற என் கருத்தை ஒரு தீர்மானமாக ஏற்றுக் கொண்டது. மறுநாள் முரசொலியில் முதல்வர் என்னைத் தனிப்பட விமர்சித்து எழுதினார். அந்தத் தீர்மானத்தை அரசு உதாசீனம் செய்தது.
உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை தலைவிரித்தாடியது. அதை உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டியது.கூட்டுறவுத் தேர்தலில் வன்முறைகள் நடந்தன. அவற்றை கூட்டணிக் கட்சிகள் கண்டித்தன. ஆனால் அப்போதெல்லாம் அதைக் குறித்து விசாரிக்க முன்வராத திமுக அரசு, டாடா ஆலை குறித்து கருத்தாய்வு நடத்த முன் வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றன.
"கலைஞர் மட்டும் காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியிருந்தால், ஒரு தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ, அதிகபட்சம் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ முடிந்து போயிருப்பார். அதைத் தாண்டி அவரால் வளர்ந்திருக்க முடியாது" என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரிடம் ஒருமுறை சொன்னேன். அவர் அதிர்ந்து போய் "என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?" என்றார். " உங்கள் கட்சியில் உயர்பத்விகளில் இருப்பவர்கள் யார்? யோசித்துப் பாருங்கள். ஒன்று அவர் மெத்தப் படித்தவராக, அயல்நாடுகளில் சென்று படித்தவராக இருக்க வேண்டும். அல்லது நிறைய நிலபுலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது பெரிய வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும். அல்லது பஸ் டிரான்ஸ்போர்ட், நூற்பாலை, ஏற்றுமதித் தொழில், செய்பவர்களாகவோ, ஊரில் நான்கைந்து கடைகள் வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்/ கலைஞரிடம் இவை ஏதும் கிடையாது. அதுவும் தவிர செயல்திறனும் மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ள ஒருவரை உங்கள் கட்சியில் வளரவிடமாட்டீர்கள். உங்கள் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை அவ்வப்போது சமன் செய்கிற முயற்சியில் ஆர்வமும் கமிட்மெண்டும் உள்ள ஒருதொண்டரை முடக்கி வைக்கத் தயங்க மாட்டீர்கள். உங்களைப் பொருத்தவரை உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சித் தேர்தல்களை நடத்துவது அல்ல. கோஷ்டிகளை சமனப்படுத்துவது."
அண்ணா தலைமையில் திமுக இருந்த காலத்தில், காங்கிரசிற்கும் திமுகவிர்கும் இடையே இருந்த பெரும் வித்தியாசம் இந்த உள்கட்சி ஜனநாயகம்தான். திமுகவின் கிளைக்கழகத்திலிருந்து மாவட்டக் கழகம் வரை உள்கட்சித் தேர்தல்கள், கட்சி மேலிடத்தின் தலையீடு இல்லாமல் நடந்த காலம் ஒன்றுண்டு. திமுக இளைஞர்களை ஈர்த்ததற்கு அது ஒரு முக்கிய காரணம். ஆனால் இன்று திமுக உள்கட்சி ஜனநாயகத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.இப்போது அங்கு ஜனநாயகம் நிர்வகிக்கப்படுகிறது.யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற முன்தீர்மானித்த முடிவின்படி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட ஜாதியில் அல்லது குலத்தில் பிறப்பதனாலேயே ஒருவருக்கு சில உரிமைகளும் சலுகைகளும் உண்டு, தகுதிகள் உள்ள ஒருவர் வேறு குலத்தில் பிறந்திருந்தால், அவருக்குத் தகுதி இருந்தாலும் அந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது, என்ற கருத்தாக்கம்தான் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால் அந்தக் கருத்து அநீதியானது என்ற நோக்கில் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து எழுட்சியுடன் போராடி வளர்ந்தது திமுக. ஆனால் இன்று, ஒருவர் கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர் என்ற தகுதி ஒன்றே ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராகவோ, மத்திய அமைச்சாரகவோ போதுமானது என்று அந்தக் கட்சியின் மேலிடம் கருதுகிறது. அதாவது, பகுத்தறிவு இயக்கமாக அரும்பிய திமுக இன்று வர்ணாசிரம தர்மத்தை வேறு ஒரு வடிவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
உட்கட்சி ஜனநாயக விஷயத்தில், திமுகவை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை. அநேகமாக இன்று எல்லா அரசியல்கட்சிகளும் இப்படித்தான் இருக்கின்றன. இன்று காங்கிரசிலோ, திமுகவிலோ, அதிமுகவிலோ, பா.ம.க.விலோ ஒருவர் உயர் பதவிக்கு வர வேண்டுமானால், கட்சித் தலைமைக்கு மட்டுமல்ல, கட்சித் தலைமயின் குடும்பத்திற்கும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியோ, ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருக்கிறது. அதன் தலைமையை அதுதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று கலந்து பேசி, கருத்தொருமித்த முடிவுன் அடிப்படையில் கட்சிப்பதவிகளைத் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கும் போது சீனியாரிட்டிக்கு அதிக மதிப்பு.
இப்படிப்பட்ட கட்சிகளிடமும், தலைவர்களிடமும்தான் நாம் ஜனநாயகத்தை விட்டு வைத்திருக்கிறோம்!
ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையே, மக்கள் ஆள்கையில் பங்கேற்பது. (participation in governance).பாரதியின் வார்த்தைகளில் கூறினால். குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு. ஆனால் அதை நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டோ ம். அதை மீட்டெடுக்காத வரையில் இந்திய ஜனநாயகம் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, தயங்கித் தயங்கியே நகர்ந்து செல்லும்.
(2007ம் ஆண்டு சுதந்திர நாளன்று வெளியாகும் புதிய பார்வை இதழுக்காக எழுதியது. இதன் குறுகிய ஆங்கில வடிவத்தை (இந்தியன் எகஸ்பிரசிற்காக எழுதப்பட்டது) எனது yahoo 360 Blogல் காணலாம் http://360.yahoo.com/maalan_narayanan )
1 day ago
7 comments:
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அந்த பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் (பதவியை பிடுங்கும்) அதிகாரம் இருந்தால்தான் மக்களாட்சி என்ற சொல்லே முழுமை பெறும்.
-சுந்தரராஜன்
கிராம பஞ்சாயத்தை நிர்வகிப்பதும் ஒன்றும் பிரமாதமான
ஜனநாயகம் பெற்று தந்துவிடபோவதில்லை. இந்த உள்ளாட்சி
அதிகாரத்தைக் கொண்டு அதிகபட்சம் ஊருக்குள் ரோடு
போடலாம், குழாய் போடலாம். மற்றபடி சட்டம் இயற்றும்
அதிகாரம், பொருளாதாரக் கொள்கைகள் etc etc தான்
மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது.
உதாரணத்துக்கு எங்கேயோ தில்லியில் இருந்துகொண்டு விதைநெல்
சட்டம் என்று ஒரு சட்டம் போடுகிறார்கள். உடனே பாரம்பரிய
விதைகள் எல்லாம் காணாமல் போகிறது. பணம் கொடுத்து
விதை வாங்க வேண்டியிருக்கிறது. இந்த முடிவுகளில்
கிராமத்தில் இருப்பவனுக்கு என்ன பங்கு இருக்கிறது?
panchayat raj is a farce. தங்களிடம் ஏதோ
அதிகாரம் இருப்பதாக மாயை வேண்டுமானால் இது தரலாம்.
//கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்த நம் நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகத்தை 1992ல் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசியல் சட்டத் திருத்தம் மாற்றி அமைத்தது. 73வது அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புக்களை கிராம அளவில் அமைவதை உறுதி செய்தது.//
வணக்கம் மாலன்,
இது ஒரு வித்தியாசமான பதிவு என்பதில் சந்தேகம் இல்லை.
1992 க்கு முன்னர் உள்ளாட்சி அமைப்புகளே நாட்டில் இல்லை என்பது போல ஒரு தொனியில் உங்கள் கட்டுரை உள்ளதால் எனக்கு தெரிந்த சிலவற்றை குறிப்பிடுகிறேன்!
பஞ்சாயத்து அமைப்புகள் 92க்கும் முன்னர் இருந்தே இருக்கிறது , நடுவில் அந்த அந்த மானில அரசுகள் ஏதோ சிலக்காரணங்களுக்காக உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிட்ட. உதாரணம் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்ட மாஸ்டர் ரோல் ஊழல்.
92 இல் உள்ளாட்சி அமைப்புகளுகு அதிக அதிகாரம் , மேலும் தேசம் முழுவதும் ஒரே வகையில் 3 அடுக்கு முறையில் இருக்க தான் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு சில மானிலங்களில் 4 அடுக்கு, 3 அடுக்கு என ஒரே மாதிரியாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லை!
பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தத்தின் முன்வரைவை உருவாக்கியவர் குஜராத் மானில முதல்வராக இருந்தவர், பெயர் நினைவில் இல்லை அது 1976இல் வடிவமைக்கப்பட்டது என்பது தான் குறிப்பிட வேண்டிய விஷயம். தேசிய அளவில் ஒரு சட்டமாக வர 1992 வரை ஆயிற்று!
இப்படி சட்டம் எல்லாம் கொண்டு வந்த பிறகும் பல மானிலங்கள் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் காலம் கடத்தின உதாரணம் பாண்டிச்சேரி , அங்கு கடந்த ஆண்டு தான் முதன் முறையாக மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது!
வணக்கம் மாலன் ,
பஞ்சாயத் ராஜ் சட்டங்களை முன்வரைவு செய்த குஜராத் மானில முன்னால் முதல்வர் பெயர் "பல்வந்ராய் மேத்தா". பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் தந்தை இவர் தான்.அவர் 1950 இலேயே வடிவமைத்து விட்டார், அது 1960 இல் முதல் பஞ்சாயத் ராஜ் சட்டமாக இயற்றப்பட்டது. அதை தவறுதலாக 1976 என சொல்லி இருக்கிறேன். 60 இல் போடப்பட்ட சட்டத்திற்கு தான் 92 இல் மறுவடிவம் தந்தார்கள்.
இதைக்கூட ஏன் சொல்கிறேன் என்றால் 92க்கு முன்னர் மக்கள் பிரதினித்துவம் ஊசலாடியது என தாங்கள் சொன்னதால்.
அமைப்புகளை உருவாக்கித் தேர்தல் நடத்துவது மட்டும் போதாது.
மத்திய, மாநில அரசுகளின் அதிகாரத்துக்குட்பட்டவை என்று பட்டியலில் சொல்லப்படாதவை எல்லாம் பஞ்சாயத்துகளின் அதிகாரத்துக்குள் வரும் என்றும். கீழ் நிலை அமைப்பால் செய்ய முடியாத பணிகள் மட்டுமே உயர் நிலைக்கு கடத்தப்பட வேண்டும் என்றும் வந்தால்தான் உண்மையான மக்களாட்சி வரும்.
இதற்கெல்லாம் போராடுவதற்குக் கூட தலைநகரைத் தளமாகக் கொண்டுதானே செயல்பட வேண்டியிருக்கிறது. முன்பு தொழில் நடத்த தில்லியைச் சார்ந்து இருந்தது மாறி இப்போது கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பது போல, அரசியல் நிர்வாகத்துக்கும் தில்லி சார் / சென்னை சார் ஆதாரங்கள் குறைய வேண்டும்.
மா சிவகுமார்
நண்பர் மாலன்,உங்கள் எழுத்துக்களை படித்திருக்கிறேன்,ஆனால் வலை உலகை அலசுவது சமீப காலமாகவே.
உங்களுடைய பதிவில் 1.உள்ளாட்சிகளுக்கு அமைப்புகளுக்கு சரியான முறையில் அதிகாரம் தரப்படாததோ அல்லது சரியான முறையில் தேர்தல் மூலம் அவை புதுப்பிக்கப் படாததோதான் கிராம அளவில் நிர்வாக அமைப்பு சீர்கெடக் காரணம் என்று சொல்ல முயன்றிருக்கிறீர்கள்.
இதற்கான தீர்வு:
-உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் கட்சிகளின் சார்பு வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளை பிரதிபலிப்பவர்களோ போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
-உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் சுழற்சி முறையில் உறுப்பினர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட வகை செய்ய வேண்டும்.
-ஒரு சட்டமன்ற தொகுதியிலோ,மக்களவை தொகுதியிலோ முன்னெடுத்துச் செல்லப்படும் திட்ட்ங்கள்,அத் தொகுதியின் அனைத்து உள்ளாட்சித் தலைவர்கள் கூட்டமைப்பில் விவாதித்து நிறவேற்றப்பட வேண்டியது சட்டமாக்கப்பட வேண்டும்.
2.அரசியல் கட்சிகள் அனைத்திலும் உள்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லாதிருக்கிறது என்பதும் உங்கள் கருத்து.
-அரசியல் என்பதே பிழைப்புக்கு என்றாகி விட்டது.பிற துறை வல்லுநர்கள் அரசியலில் ஈடுபடும் ஆக்கப்பூர்வமான மாறுதல் வர வேண்டும்.அதற்கு தேர்தல் முறைகளிலும்,வாக்கு பிரதிநிதித்துவத்திலும் மாறுதல்கள் வர வேண்டும்.இது ஆள வேண்டியவர்களைத் தேர்வு செய்வதில் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடும்,(பிரிட்டனிலும்,அமெரிக்காவிலும் கட்டமைப்பு வளர்ச்சிகள் பெருமளவு எட்டப் பட வேண்டிய கால கட்டங்களில் வாக்குரிமை சிற்சில விதிகளுக்குட்பட்டே வழங்கப்பட்டது.இது தற்போது அடக்குமுறை சார்ந்த சிந்தனையாகத் தோன்றலாம்,ஆனால் பெருமளவு வாக்காளர்களிடமிருந்து எவ்விதம் வாக்குகள்,அரசியல் கட்சிகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பதை பார்க்கும் போது இந்த ரணசிகிச்சை தேவை என்றே தோன்றுகிறது.)
இல்லையெனில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் என்று ஓதி விட்டு வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
-முதல்வர்களும் பிரதமர்களும் நேரடியாகத் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் பிரதமரால் பல்துறை வித்தகர்களில் இருந்து அமைக்கப்பட வேண்டும்.
நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.
சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.
பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.
அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.
சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.
வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...
Post a Comment