Monday, March 28, 2016

தொண்டர்தம் பெருமை

தேர்தல் காலச் சிந்தனைகள்

தேர்தல் பற்றிய என் கருத்துக்களையும் கணிப்புகளையும் கேட்கும் ஆவலில் மும்பைப் பத்திரிகையாளர்  ஒருவர் கடந்த வாரம் வந்திருந்தார். உள்ளே நுழையும் போதே, “ஸ்ஸ்…ப்பா! என்ன வெயில் இப்பவே இப்படி என்றால் மேயில் எப்படி இருக்குமோ?” என்ற உரக்க முணுமுணுத்துக் கொண்டார்.
கோடைச் சூட்டோடு தேர்தல் வெப்பமும் சேர்த்து கொண்டால் என்னவாகும் என்பது அவரது கவலையாக இருந்தது.
வெப்பத்தில் மெழுகு உருகும். இரும்பு இறுகும். இது இயற்கை விதி. ஆனால்  ஆவியாகும் நீரைப் போலக் கண்ணுக்குத் தெரியாமல்  போகிறவர்களைப் பற்றி பத்திரிகைகள் கண்ண்டுகொள்வதே இல்லை என்றேன்
“யார் அவர்கள்?”
“கட்சித் தொண்டர்கள்தான்” என்றேன்.
தேர்தலுக்குத் தேர்தல் சிறப்பிதழ் போடும் பத்திரிகைகள் கடந்த தேர்தல்களை அலசும் நடக்கும் தேர்தலைக் கணிக்கும். இறந்த தலைவர்களை நினைத்துக் கொள்ளும். இருக்கும் தலைவர்களை விதந்து பேசும். ஆனால் தலைவர்களைப் போல வெற்றியினால் பலனோ, தோல்வியினால் மன உரமோ பெறாமல் இரண்டு மாத காலத்தை அவர்களுக்காகச் செலவிட்ட தொண்டர்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிலநாள்களில் ஆவியான நீரைப் போல மறக்கப்பட்டுவிடுவார்கள்
மறக்கப்படுவது கூட மன்னிக்கப்படலாம். ஆனால் தோல்வி கண்ட கடசியின் தொண்டர்கள் அவமானத்தில் புழுங்கி, அச்சத்தில் கலங்குவதை எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்?
தேர்தல் வெற்றிகள் ஆனந்தக் களிப்பில் மட்டுமல்ல, அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்ளும் தருணங்களாகவும் அமைந்து விடுவதுண்டு. எந்த நேரமும் தான் தாக்கப்படலாம் என்ற நிலையில் உள்ள தோற்ற கட்சித் தொண்டனின் மனநிலை எப்படி இருக்கும்?
“மனைவி மிகவும் கெஞ்சினாள்;எல்லாரையும் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள். ”நீங்கள் ராப்பகலா ஓடியாடி உழைத்தீங்களே, அவரைப் பார்த்துச் சொல்லிட்டு வாங்க” என்று கேட்டிருந்தாள்….அவனாகப் போகவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கு நிச்சியம் தகவல் எட்டியிருக்கும். அவர் காரைப் போட்டுக்க் கொண்டு வந்திருக்கக் கூடும். ஆனால் வரவில்லை. தோற்றிருந்தால் என்ன, வந்திருக்கலாம். ஆனால் அந்த மனிதனும் வீட்டில் முடங்கிக் கிடந்திருப்பான். அவனும் யாரிடமும் பேசாமல், பத்திரிகைகளைப் பார்க்க மனமில்லாமல் –தைரியமில்லாமல்- ஒரு சாய்வு நாற்காலியில் விழுந்து கிடப்பான்.மனைவியை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் உட்கார்ந்திருப்பான். குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால் அதைப் பொறுக்க முடியாமல் எரிந்து விழுந்து கொண்டிருப்பான். பத்திரிகைக்காரர்கள் வந்து கேட்டால், ‘பெரிய அநீதி நடந்து விட்டது” எனக் கூறியிருக்கக் கூடும். என்ன பெரிய அநீதி நடந்து விட்டது? சில ஆயிரம் ரூபாய்கள் இந்த மூன்று நான்கு வாரங்களில் கணக்கு வழக்கில்லாமல் செலவழிந்திருக்கும். அந்தச் சில ஆயிரம் ரூபாய்களை வெற்றி பெற்றிருந்தால் பல மடங்காகப் பெருக்கித் திரும்பப் பெற்றிருக்க முடியும்.வெற்றிக்கும் தோல்விக்கும் அது ஒன்றுதான் அந்த மனிதனுக்கு வித்தியாசம் இவனைப் போல் தலையுடைவதை எதிர்பார்த்து, எலும்புகள் நொறுங்குவதை எதிர்பார்த்து, குழந்தை குட்டிகள் தாக்கப்படுவதை எதிர்பார்த்து, ஏன் உயிரே கூட இழக்க நேரிடும் என்பதை எதிர்பார்த்து இருட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கப் போவதில்லை”
1971ல் எழுதப்பட்ட “காத்திருத்தல்” என்ற சிறுகதையில் அசோகமித்திரன் வர்ணிக்கும் மனநிலை இது. கதை என்றாலும் இது கற்பனை அல்ல. 1967 தேர்தலின் போது காங்கிரஸ் தொண்டர்களிடமும், 1991 தேர்தலின் போது திமுக தொண்டர்களிடமும் இந்த மனநிலை நிலவியதை நேரடியாக அறிவேன்
இந்திய ஜனநாயகத்தின் எழுதப்படாத பக்கம் தோல்விக்குப் பின் எழும் மன நிலை. அந்த வன்முறையின் ரத்தக் கறைகள். தொண்டர் குடும்பங்களின் கண்ணீர் சுவடுகள்

வரலாறு என்பதே வென்றவர்களின் கதைதானே? தொண்டர்களின் கதையா அது?  
கடைசிப் பக்கம் கல்கி 3.4.2016

Sunday, March 13, 2016

தேர்தல் 2016:: கை நழுவிய கனி



கை நழுவிய கனி


 கனிந்து விடும் என்று காத்திருந்தது கிளி. இலவம் மரத்திலிருந்த தனது பொந்திலிருந்து வெளியே வந்து அந்தக் காயைச் சுற்றிச் சுற்றிப் பறந்து  பார்த்துக் கொண்டிருந்தது.காயின் நிறம் முற்றியதும் கனிந்தே விட்டது என்று களி கொண்டு உலகிற்கு அறிவித்தது. ஆனாலும் காற்றுக்கு சந்தேகம். கனிந்து விட்டது நிச்சயம்தானா என்று கிளியைக் கேட்டது, நிச்சயம் நிச்சயம் என இறக்கைகளைக் கொட்டிக் குதூகலித்தது கிளி.

அதன் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. கனி கிடைத்து விட்டால் பசி நீங்கிவிடும்.அது நெடுநாளையப் பசி. கிளி மட்டுமல்ல கிளியின் குழந்தைகளும் பசித்திருக்கிறார்கள்

கனி ஒரு நாள் வெடித்தது. வெடித்தது? ஆம்! கிளி நினைத்தது போல அது உண்ணும் கனியல்ல. அதனுள்ளே இனிப்போ சாறோ கிடையாது. அதனுள் இருந்ததெல்லாம் வெறும் பஞ்சு. பின்னே,இலவ மரத்தில் பழமா பழுக்கும்?

இலவு காத்த கிளிக் கதை தமிழுக்கோ தமிழருக்கோ புதிது அல்ல. நிச்சயம் கருணாநிதிக்குப் புதிது அல்ல. 2006 சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி கண்ட மதிமுக இட ஒதுக்கீட்டின் போது ஏற்பட்ட பிரச்சினையால் அதை விட்டு வெளியேறி எதிர் அணிக்குப் போனது. பழம் நழுவிப் பாலில் விழுந்த பின்பும்  அது கை தவறிக் கொட்டிவிடவும் கூடும் என்பதை அவர் அனுபவப் பூர்வமாக அறிந்தவர்தான். என்றாலும் இலவு காத்த கிளியை எண்ணிக் கொண்டுதான் வியாழன்  இரவு படுக்கைக்குப் போயிருப்பார்

நிச்சயம்  கூட்டணிக்கு வருவார் என்று நினைத்திருந்த விஜயகாந்த் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது 'இந்த முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவோம்' என்ற உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்த  திமுகவிற்கு ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.  காரணங்கள் பல

1 திமுக கூட்டணியில் தேமுதிக இருந்திருந்தால்  அதிமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளில் கணிசமான அளவு அந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும். தேமுதிகவினரின் வாக்குகள் அதிமுகவிற்கு விழப் போவதில்லை. கூட்டணி இருந்திருந்தால்  திமுக  போட்டியிடும் இடங்களில், அவை திமுகவிற்கு விழுந்திருக்கும் . இப்போது அந்த வாக்குகள் கிடைக்காது.

ஆனால், தேமுதிகவிற்கு இருக்கக் கூடிய வாக்குகள் 5 முதல் 8 சதவீதத்திற்குத்தான் இருக்கும். அதனால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடாது என்று திமுகவினர் சொல்கிறார்கள். 2006 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. அப்போது அது  3 தொகுதிகளில் 20% வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15%லிருந்து 20% சதவீத வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% 15% வாக்குகளையும் பெற்றது. பலமுனைப் போட்டி உறுதியாகிவிட்ட இந்தத்  தேர்தலில் இந்த அளவு வாக்குகளை அந்தத் தொகுதிகளில் அல்லது சில தொகுதிகளில் பெற்றால் அவை வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டவை

2. திமுகவிற்கு இழப்பு ஏற்படும் அதே நேரம் அதிமுகவிற்கு இழப்பு ஏதுமில்லை. மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவது அதற்கு சாதகமாக ஆகலாம்


3.பாமக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக, என அநேகமாக எல்லாக் கட்சிகளும் திமுக அதிமுக இரண்டையும் விமர்சித்து வருகின்றன. இப்போது தேமுதிகவும் அந்த வரிசையில் இணைகிறது.மற்ற கட்சியினரைப் போல் அல்லாது, தேமுதிக குறி வைப்பது, கிராமப்புற, அதிகம் படிப்பறிவில்லாத, சினிமா கவர்ச்சியில் தன்னை இழந்த, வாக்காளர்களை.அதனால் திமுக மீதான விமர்சனங்கள்  வேறு ஒரு தளத்திற்கும் செல்கின்றன. திமுக இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். வெறுமனே அதிமுகவை விமர்சித்து மாத்திரம் அதன் பிரசாரத்தைத் தொடர முடியாது.

4. அதிமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணி என்று திமுக கூட்டணிக்கு ஏற்பட்டிருந்த பிம்பம் கலைவது

5. அதன் வெற்றி வாய்ப்பு, கடந்த கால அனுபவங்கள், கணக்குகளின் அடிப்படையில் கேள்விக்குரியதாகிறது. விஜயகாந்த்தின் கட்சி கூட்டணிக்கு வரவில்லை என்பதால்  , திமுக  கிட்டத்தட்ட 2001 தேர்தலில் இருந்த  நிலைக்குத்  திரும்பி வந்துவிட்டது. அப்போது அதனுடன் பாஜகவைத் தவிர வேறு எந்தப் பெரிய கட்சியும் கூட்டணியில் இல்லை. பாஜகவைத் தவிர சில ஜாதிக் கட்சிகள் மட்டுமே அப்போது அதனுடன் இருந்தன. இப்போது பாஜகவிற்கு பதில் காங்கிரஸ் இருக்கிறது.  தமிழகத்தில்  காங்கிரஸ் பாஜக கட்சிகளிடையே உள்ள வாக்கு வித்தியாசம்  2முதல் 3 சதவீதம் இருக்கும். 2014 தேர்தலுக்குப் பின் காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அநேகமாக இரண்டு கட்சிகளின் வாக்கு பலமும் சமமாக மாறியிருக்கலாம். அதனால் 2001 தேர்தலில் இருந்த  நிலைக்குத் திமுக கூட்டணி திரும்பியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத்  தேர்தலில்  183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களில் வென்றது திமுக

விஜயகாந்த்தின் முடிவு வேறு சில கட்சிகளையும்  சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வியாழன்று நடந்த பொதுக்கூட்டத்தில், தெளிவாகச் சொல்கிறேன்,  தனித்துப் போட்டியிடுவேன் என மூன்று முறை சொன்ன பின், அவரது அனுமதி பெற்று  பேசிய,  அவர் மனைவி பிரேமலதா, எங்கள் தலைமையை ஏற்பவர்கள், எங்களுடன் ஒத்த கருத்து உள்ளவர்கள் எங்களுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்த வரலாம் என்று அறிவித்தார். இது விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதில் எங்களுக்குப் பிரசினை ஏதுமில்லை என்று அறிவித்த மக்கள் நலக் கூட்டணியை இப்போது என்ன செய்வது என்ற திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு இருந்த கட்சிகள் எல்லாமும் அதை விட்டு விலகி விட்டன. பாஜக தனியாகவோ, அல்லது சிறுகட்சிகளுடன் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதாவது பாஜக 15 ஆண்டுகளுக்குப் பின்- 2001க்கு முன்பு இருந்த நிலைக்கு- தள்ளப்பட்டுவிட்டது.


என் வழி தனி வழி என்பது ரஜனிகாந்த்தின் திரைப்பட வசனமாக இருக்கலாம். ஆனால் இப்போது அது விஜயகாந்த்தின் தேர்தல் முழக்கம்!

தமிழ் முரசு (சிங்கப்பூர்) 13.3.2016

Saturday, March 05, 2016

அனுபவம் அது முக்கியம்


புத்தரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூடியிருந்தனர். புத்தர் வந்தார். மேடையில் அமர்ந்து கொண்டார். அங்கே இருந்த ஒரு தாமரைப் பூவைக் கையில் எடுத்துப் பார்த்தார். பக்கத்தில் இருந்த சீடர் காசியபனைப் பார்த்துச் புன்னகைத்தார். கூட்டத்தைப் பார்த்து முறுவலித்தார். பூவைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்து போய்விட்டார். அவ்வளவுதான் உரை முடிந்துவிட்டது.

ஒருவார்த்தைகூடப் பேசாமல் எப்படி உரை நிகழ்த்தப்பட்டதாகச் சொல்ல முடியும்? வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால், உண்மைகளை விளக்காது. புத்தகங்கள், பாராயணங்கள், உபதேசங்கள் இவற்றின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. உண்மை என்பது மழையைப் போல எளிமையானது. மழையைப் பார்க்கலாம். கேட்கலாம். உணரலாம். ஆனால் அதைக் குறித்து எத்தனை கவிதைகள் எழுதினாலும் மழையின் ஈரத்தை விரல்களில் உணர முடியாது

அனுபவம் அது முக்கியம்

உளியை மரத்தின் மீது வைத்து சுத்தியலால் மெதுவாகத் தட்டினால் உளி நழுவி விழுகிறது. வேகமாக ஓங்கித் தட்டினால் உளி மரத்தில் சிக்கிக் கொள்கிறது. எவ்வளவு மெதுவாக அல்லது வேகமாகத் தட்ட வேண்டும் என்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. தானாக வேலை செய்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

அனுபவம் அது முக்கியம்

ரோஜப்பூவைப் போன்ற வண்ணம், மென்மை ஏன் அதன் மணம் கூட கொண்ட பூவைத்  தொழில்நுட்பம் கொண்டு, இயந்திரத்தில் தயாரித்து விட முடியும். ஆனால் அந்தப் பூவின் உயிர்ப்பை இயந்திரங்களால் தர முடியுமா?
அனுபவம் அது முக்கியம்


வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இலக்கியத்திற்கும் அனுபவம் முக்கியம். வாழ்ந்து பெறாத அனுபவத்தை வார்த்தைக் குவியல்களால் விவரிக்கும் இலக்கியங்கள் இயந்திரங்கள் செய்த ரோஜாப்பூவைப் போல உயிர்ப்பின்றி இருக்கின்றன.

எழுத்துக்கு அனுபவம் அவசியம் என்றால், நான் சரித்திரக் கதைகள் எழுதுவது எப்படி?கொலையைப் பற்றி நான் கதை எழுதுவதற்குக் கொலை செய்திருக்க வேண்டுமா? வேண்டாம், ஆனால் அதை எழுதும் நேரம் நீங்கள் கொலைகாரனாக மாறியிருக்க வேண்டும். ராஜராஜனாக மாறத எவராலும் பெருங்கோயில் கட்ட முடியாது, கற்களினால் அல்ல, சொற்களைக் கொண்டு கூட.

அப்படிக் கூடுவிட்டுக் கூடு பாய புத்தகங்கள் உதவும்.அவ்வளவுதான். ஆனால் புத்தகங்கள் மட்டும் போதாது.கருவாடு என்றாலும் கல்கண்டு என்றாலும் அது அப்படியே ரத்தத்திற்குச் செல்வதில்லை.படித்தது அனுபவமாகச் சேமிக்கப்படாவிட்டால் அதனால் பயனில்லை. படைப்பாளிக்கும் பண்டிதனுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான்.

வாசிப்பும் ஓர் அனுபவம்தானே? ஆம். ஆனால் வாழ்க்கை வாசிப்பிற்கு அப்பாலும் விரிந்து கிடக்கிறது, உமா ஷக்தியின் ஒரு கவிதை சொல்வது போல
கவிதை எழுத அமர்ந்தேன்
ஜன்னலருகே ஓடி மறைந்தது
அணில் ஒன்று
கணினியை மூடிவிட்டேன்


 கல்கி 13.3.2016