Wednesday, April 26, 2006

தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா, கருணாநிதி...

துணிச்சலும் புத்திசாலித்தனமும், கொண்ட ஜேம்ஸ்பாண்ட், ஆள்பலமும் டெக்னாலஜியின் துணையும் கொண்ட வில்லனோடு மோதும் ஹாலிவுட் படங்கள் போல ஆகி வருகிறது தமிழகத் தேர்தல் களம்.இந்தப் படங்களில் முதலில் ஜேம்ஸ்பாண்டும், அடுத்த சில நிமிடங்களிலேயே வில்லனும் மாறி மாறி ஜெயித்துக் கொண்டிருப்பார்கள்.படம் முடிவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன், ஒரு ஹெலிகாப்டரிலோ, சக்தி வாய்ந்த படகிலோ, பாண்ட் வந்து கையெறி குண்டுகளால் வில்லனின் கோட்டையைத் தகர்த்து விட்டு, கொழுந்துவிட்டு எரியும் பின்னணியில் ஓடி வரும் போதுதான் 'முடிவு' என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டதை உணரமுடியும்.

தமிழகக் தேர்தல் களத்திலும், கருத்துக்கணிப்புக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு பார்த்தால், திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஜெயித்துக் கொண்டிருக்கின்றன.இறுதி முடிவு மே.11ம் தேதியன்றுதான் உறுதியாகும்.

எந்தப் பெரிய தேர்தலிலும், இந்த இரு பெரிய அணிகளுக்கிடையே, இவ்வளவு நெருக்கமான போட்டியிருந்ததில்லை. கடந்த வாரம் ( ஏப்ரல் 14 அன்று) இந்து நாளிதழ் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என்னுடன் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருந்தது. அ.தி.மு.க அணிக்கு 46% வாக்குகளும், தி.மு.க அணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றது அந்தக் கணிப்பு.

இந்த வாரம் (ஏப்ரல் 21ம் தேதி) சென்னை லயோலா கல்லூரி ஊடகவியல் துறை தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.இந்தக் கணிப்பு திமுக கூட்டணிக்கு 44.5 சதவீதமும், அதிமுகவிற்கு 40.1 சதவீதமும் ஆதரவிருப்பதாகத் தெரிவிக்கிறது.

இந்துப் பத்திரிகையின் கருத்துக் கணிப்பு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை நடத்தப்பட்டது. லயோலா கல்லூரியின் கணிப்பு ஏப்ரல் 5 முதல் 15 வரை நடத்தப்படது. இதைக் கொண்டு பார்த்தால் ஒரு வார காலத்தில் அதிமுகவை விட திமுக அணியின் கை ஓங்கியிருக்கிறது.

ஆனால் அதை அப்படி உறுதியாக அடித்துச் சொல்லிவிட முடியாது.ஏனெனில் லயோலா கல்லூரி நடத்த கள ஆய்வில் பங்கு கொண்டு பதிலளித்தவர்களில் 91.7 சதவீதம் பேர் ஆண்கள். பெண்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இந்த ஒன்றே இந்தக் கருத்துக் கணிப்பை நிராகரிக்கப் போதுமானது. ஏனெனில் தமிழக வாக்காளர்களில் பெண்கள் ஏறத்தாழ 50 சதவீத அளவில் இருக்கிறார்கள். சில தொகுதிகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகம் உள்ள தொகுதிகளும் உண்டு. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து பெண்கள் பெரும் அளவில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெருமளவில் வளர்ச்சி கண்டு வந்துள்ளது. அந்தக் குழுக்கள் பலவற்றின் ஆதரவு ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது, 'பெண்ணுக்குப் பெண்தான் உதவவேண்டும் ' என்ற மனோபாவம் அந்தப் பெண்களிடம் நிலவுவதை நான் சில இடங்களில் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன்.

இலயோலா கல்லூரியின் கணிப்பு இன்றுள்ள நிலையை முழுமையாகப் பிரதிபலிப்பதாக இன்னொரு காரணத்தினாலும் கருத முடியவில்லை.இந்தக் கணிப்பு அதிமுகவின் இலவச அரிசி அறிவிப்பு, சரத்குமார் அதிமுகவில் இணைந்தது ஆகியவற்றிற்கு முன்பாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது.எனவே இந்த இரு அம்சங்களின் தாக்கம் இந்தக் கணிப்பில் பிரதிபலிக்கவில்லை.

ஆனால் இந்துவின் கணிப்பும் சரி, லயோலா கல்லூரியின் கணிப்பும் சரி, ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகின்றன அது: இரண்டு பெரும் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகின்றன. இரு அணிகளும் பெறக் கூடிய இடங்களின் எண்ணிக்கையின் இடையே பெரிய வித்தியாசம் இராது.

இதைத்தவிர இன்னொரு அம்சமும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 52 சதவீத வாக்குகள் பெற்றது. அதிமுக கூட்டணி 35 சதவீத வாக்குகள் பெற்றது. இப்போது திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறி விட்டது. அதிமுக கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறிவிட்டது. இந்த இரு கட்சிகளுமே கூட்டணிக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல என்று எண்ணிக் கொண்டு பார்த்தால், அதிமுக 2004ல் இழந்த 17 சதவீத வாக்குகளில் பெரும்பகுதியை மீட்டுக் கொண்டு விட்டது.

இந்தப் பின்னணியில் தேர்தலுக்குப் பின் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்.

காட்சி அ: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை. தனிப் பெரும் கட்சியாக அதிமுக விளங்குகிறது
இந்த சூழ்நிலையில் அதிமுக ஆட்சி அமைக்க உரிமை கோரும். தனிப் பெரும் கட்சி என்பதால் ஆளுநர் அதற்கு அரசமைக்கும் வாய்ப்பு அளித்து ஓரிரு வாரங்களில் தனது பெரும்பான்மையை சட்ட மன்றத்தில் நிரூபிக்குமாறு கெடு விதிக்கலாம். அப்படி நடந்தால் அதிமுக, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சிலவற்றைத் தன் பக்கம் இழுக்கவோ, அல்லது அந்தக் கட்சிகளைப் பிளந்தோ, அல்லது திமுகவையே பிளந்தோ தனது சட்டமன்றப் பெரும்பான்மையை மெய்ப்பிக்கலாம். ஏற்கனவே காங்கிரஸ், பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை அந்தக் கட்சியிலிருந்து விலகி வந்து தன்னை ஆதரிக்கச் செய்தவர் ஜெயலலிதா. அதே போன்றதொரு முயற்சியை அவரால் இந்த முறையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

மத்தியில் உள்ளதைப் போல, சில கட்சிகளை வெளியிலிருந்து ஆதரவு தரச் சொல்லி, ஓர் உடன்பாட்டிற்கு வரவும் அவர் முயற்சிக்கக் கூடும். திருமாவளவனைப் பயன்படுத்தி அவர் பாட்டாளி மக்கள் கட்சியைத் தன் பக்கம் கொண்டு வர முயற்சிக்கலாம். ஆனால் அது வெற்றி அடையுமா என ஊகிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் பா.ம.க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாக மத்தியில் அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கிறது. டாக்டர். ராமதாசின் மகன் அந்த அமைச்சர் பதவியில் வீற்றிருக்கிறார். எனவே அதை இழக்க அது விரும்பாது. மாநிலத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவு, மத்தியில் திமுக இடம் பெற்றிருக்கும் அரசுக்கு ஆதரவு என்ற விசித்திர நிலையை அது மேற்கொள்ள இயலாது. அது மேற்கொள்ள விரும்பினாலும், திமுக அதற்கு இடம் கொடுக்காது. மாநிலத்தில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய மதிமுக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்தும் வெளியேற வேண்டும் என அது வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.

பா.ம.க.வைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முடியாது போனால், அதிமுக காங்கிரசின் பக்கம் கவனத்தைத் திருப்பலாம். உட்கட்சிப் பூசலுக்குப் பெயர் பெற்ற கட்சி என்பது மட்டுமல்ல, அந்தக் கட்சிக்குள் எல்லா மட்டங்களிலும் ஜெயலலிதாவின் அபிமானிகள் இருக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். அது மட்டுமல்ல, பாரம்பரியமாகவே காங்கிரசிற்குள் கருணாநிதியின் விமர்சகர்கள் உண்டு.அதுவும் தவிர மத்தியில் ஜூனியர் பார்ட்னராக இருந்தாலும், மாநிலத்தில் கூட்டணிக்குள் திமுக பெரியண்ணன் மனோபாவத்தோடு 'நாட்டாமை' செய்கிறது என்று பொருமிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் கோஷ்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள்.வாசன் கோஷ்டி ஏறத்தாழ பாதிக்கு மேற்பட்ட இடங்களைப் பெற்றிருக்கிறது. எனவே ஏதேனும் ஓரு கோஷ்டி அளவுக்கு மேல் வளர்ந்து விடக் கூடாது என்பதைக் குறியாகக் கொண்டு கட்சிக்காரர்களே சில வேட்பாளர்களைத் தேர்தலில் தோற்கடிக்க முற்படலாம். திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கணிசமாக வெற்றி பெற்று, காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனால் அது திமுக தலையில் வந்து விடியும். 1989ம் ஆண்டு தேர்தல் முடிவு வெளியானதும் மூப்பனாரைத் தாக்கி வாழப்பாடி வெளியிட்ட அறிக்கை ஓர் முன்னுதாரணம். இன்னொரு புறம், காங்கிரஸ் தனது சட்டமன்றக் கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் போதும் இந்த கோஷ்டிகளை சமன் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகும்.அதுவும் மனவருத்தங்களை ஏற்படுத்தலாம். (த.மா.க காங்கிரசுடன் இணைந்த போது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நினைவிருக்கலாம்) இவற்றையெல்லாம் ஜெயலலிதா நிச்சயம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்.

என்றாலும் காங்கிரஸ் பகிரங்கமாக ஜெயலலிதாவை ஆதரிக்க முன்வராது. காரணம், ஜெயலலிதாவிற்கும், சோனியா காந்திக்குமிடையே உள்ள தனிப்பட்ட உறவு. என்னை பகிரங்கமாக ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் நாளன்று, எனக்கு எதிராக வாக்களிக்காமல், 'ஆப்சென்ட்' ஆகி விடுங்கள், பின்னால் பார்த்துக் கொள்கிறேன் என்ற ஓர் உத்தியைக் கூட ஜெ. காங்கிரஸ்காரர்களிடம் பின்பற்றலாம். முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சி 'விப்' எனப்படும் கொறடா ஆணை பிறப்பித்தால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் அதை மீற முடியாது. மீறினால் எம்.எல்.ஏ பதவி பறி போய்விடும். அப்படியும்கூட, வாஜ்பாய் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் சேடப்பட்டி முத்தையா வாக்களித்ததைப் போல, ரரஜமானிய ஒழிப்பு மசோதாவின் மீது மாநிலங்களவையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வாக்களித்தைப் போல, ஏதேனும் 'தவறு' நேர்ந்து, ஜெயலலிதா வெற்றி பெறலாம்.

மிகச் சில இடங்களே தேவைப்பட்டால், ஜெயலலிதா இடதுசாரிகளை அணுகலாம். அவர்கள் அமைச்சரவையில் இடம் கேட்கமாட்டார்கள் என்ற அளவில் அவருக்கு அது வசதியும் கூட. அது மட்டுமன்றி, இந்த விஷயத்தில் அவர் தில்லி தலைமையிடம் பேசி முடிவெடுத்தால் போதும். அவர் தேசிய அளவில் 'மூன்றாவது அணி' என்ற வியூகத்தைக் காட்டி அவர்களை சபலப்படுத்த முடியும். மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங்கள், குறிப்பாக அரசு ஊழியர் சங்கங்கள், ஜெயலலிதாவிற்கு எதிராக இருப்பதுதான் இதற்கு இருக்கக் கூடிய முட்டுக் கட்டை.

இந்த முயற்சிகள் எதுவுமே வேண்டாம் என அவர் விஜயகாந்தைத் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கலாம். ஆனால் அவர் எத்தனை இடங்களைப் பெறுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அவர் 10 சதவீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் மதிப்பிடுகின்றன. அவை எத்தனை இடங்களாக மாறும் என்பது எளிதில் ஊகிக்க முடியாத ஒன்று. தேர்தல் நேரத்தில் அவரது ஆதரவு வாக்குகள் அநேகமாக அதிமுகவிற்கு ஆதரவாக மாறும் என்பது என் கணிப்பு. அவரது கட்சிக்கான சின்னம் இன்னும் முடிவாகவில்லை.அநேகமாக எல்லாத் தொகுதிகளிலும் அந்தக் கட்சி ஒரே சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களும் கூட விஜயகாந்திற்கான தங்கள் ஆதரவை சின்னத்திற்கான ஆதரவாகத் தெரிவிப்பதில் குழப்பம் ஏற்படலாம். அந்த சூழ்நிலையில் அந்த வாக்குகள் அதிமுகவிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் விஜயகாந்த் கட்சியின் எதிர்காலம், அது அதிமுகவிற்கான மாற்றாகத் தன்னை முன்னிறுத்துவதில் இருக்கிறது. வீர வசனங்கள் பேசி விட்டு அது சட்டமன்றத்திற்குள் முதன் முதலில் நுழைந்த உடனேயே ஆளுங்கட்சி வரிசையில் சென்று அமர்ந்தால் அதன் மீதான நம்பிக்கை சரிந்து விடும்.

ஆட்களை இழுக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அதிமுக, திமுகவின் பக்கமும் பார்வையைச் செலுத்தும். திமுகவின் அசைக்க முடியாத விசுவாசிகளாக ஒரு காலத்தில் தோற்றம் தந்த, வைகோ, திருமாவளவன், சரத்குமார், ராதிகா ஆகியோரை அது தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கும் அண்மைக்கால நிகழ்ச்சிகள் அதன் maneuvering வலிமைக்கு ஓர் உதாரணம். அண்மையில் திமுகவின் பக்கம் போய்ச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் எதிரிகளாகத் தோற்றமளித்தவர்கள் (பாக்யராஜ், டி.ராஜேந்தர், சேடப்பட்டி முத்தையா, இந்திராகுமாரி ) என்பதும், ஜெயலலிதாவின் பக்கம் போனவர்கள் எல்லாம் கருணாநிதியின் விசுவாசிகளாகக் கருதப்பட்டவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த இடப் பெயர்ச்சிகளின் ஆழம் புரியும்.

காட்சி ஆ: முன்னிலையில் திமுக கூட்டணி. ஆனால் திமுகவிற்குப் பெரும்பான்மை இல்லை திமுக இந்தத் தேர்தலில் 130 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. தனிப் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. அதாவது தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் அது போட்டியிடும் இடங்களில் 90 சதவீத இடங்களைப் பெற வேண்டும். அதாவது அது 12 இடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூடத் தோற்கக் கூடாது. அலை இல்லாத தேர்தலில் இதற்கு சாத்தியம் இல்லை.

வேறு ஒரு கணக்கைப் பார்த்தாலும் இது விளங்கும். லயோலா கல்லூரிக் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணிக்கு 44.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்கள் 36 சதவீதம் பேர்கள்தான். அதாவது திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஆதரவில் கணிசமான அளவு, அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கிடைக்கிறது. அதாவது திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் கூட, அதில் திமுகவின் இடம் அதிகமாக இராது.

இந்தச் சூழ்நிலையில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின் அடிப்படையிலே ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டியிருக்கும். இந்த ஆதரவு என்பது ஆட்சியில் பங்கேற்று அளிக்கும் ஆதரவாகவோ, ஆட்சிக்கு வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவாகவோ இருக்கலாம். இடதுசாரிகள் ஆட்சியில் பங்கேற்க மாட்டார்கள். பா.ம.க பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. ஆனால் என்ன நிலை எடுக்கும் என்பது குறித்துத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் விவாதம் நடக்கலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது திமுக நடந்து கொண்ட விதத்தை மனதில் கொண்டு காங்கிரஸ் இப்போது நடந்து கொள்ள நினைக்கலாம். அதாவது ஆட்சியில் சில முக்கிய இலாக்கக்களைத் தங்களுக்குத் தர வேண்டும் என அது கோரலாம். இதன் அதிக பட்சமாக அது துணை முதல்வர் பதவியைக் கோரலாம். அல்லது மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் நடந்த மாதிரி, முதல் இரண்டரை ஆண்டுக்கு திமுக- அடுத்த இரண்டரை ஆண்டிற்கு காங்கிரஸ் எனப் பேரம் நடக்கலாம்.

இதில் எது நடந்தாலும் அது கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளிக்காது.அவர் மத்திய அரசு நிலைக்கத் தன்னைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தன் கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இது இரண்டு கட்சிகளுக்கிடையே இருக்கும் உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தும்.

ஒருவேளை காங்கிரசின் தயவு இல்லாமல், திமுக தனது பலத்தில், பா.ம.க, இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க ஆட்சி அமைக்க முற்படலாம். அது ஆட்சியின் உறுதிப்பாட்டை மேலும் கேள்விக்குரியதாக்கும்.

ஒரு வேளை கருணாநிதியின் உடல் நலம் காரணமாக, அல்லது வேறு காரணங்களினால், இடைக்காலத்தில் வேறு ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகுமானால்,அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும்.

காட்சி இ:யார் ஆள்வது என்பதை விஜயகாந்த் தீர்மானிக்கும் நிலை இரண்டு பெரும் அணிகளும் சமபலம் பெற்று, திமுக அணியிலிருந்து இடப் பெயர்ச்சி ஏதும் ஏற்படாத நிலையும் உருவானால், விஜயகாந்த் கட்சிதான் தனது ஆதரவின் மூலம் யார் ஆள்வது என்பதைத் தீர்மானிக்கும் சூழ்நிலையும் உருவாகலாம். அதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றாலும் அதை 'ரூல் அவுட்' (ஒதுக்கித் தள்ள) முடியாது. அந்த நிலையில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது இன்று ஊகிக்க முடியாத நிலை. அவர் தன்னைப் பற்றிய மிகையான மதிப்பீட்டில் இருக்கிறார் என்று ஒரு எண்ணம் அரசியல் நோக்கர்களிடம் இருக்கிறது.

இந்தச் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதன் முக்கியமான பக்க விளைவு தேசிய அரசியலில் நிகழும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ல் நடைபெற வேண்டும். அதனால் அடுத்த ஆண்டிலிருந்து அதாவது 2007க்குப் பிறகு அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் துவங்கும். ஜெயலலிதா, முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டுறவில், இடதுசாரிகள் ஒத்துழைப்போடு ஒரு மூன்றாவது அணிக்கான விதைகள் ஊன்றப்படலாம்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க இந்த மூவருமே முயற்சிப்பார்கள் என்பதால் இவர்கள் ஒருங்கிணைய வாய்ப்புண்டு. அப்போது திமுக என்ன நிலையை மேற்கொள்ளும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஜெயலலிதா - சோனியா இடையே உள்ள தனிப்பட்ட மோதல் திமுகவை காங்கிரஸ் ஆதரவு என்ற நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டது. ஒருவேளை அது காங்கிரசின் உதவியோடு மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகுமானால், அந்த உறவு இறுக்கமானதாக ஆகிவிடும்.

மத்தியில் ஆட்சியில் இருப்பதால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான மனநிலையை (anti incumbency) காங்கிரஸ் அடுத்த தேர்தலில் சந்திக்க நேரும். அப்போது திமுக வேறு அணிகளுக்குத் திரும்ப இயலாத நிலையில் இருக்கும்.1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அரசில் இருந்துவிட்டு, 2004ல் அதற்கு எதிராக வாக்குக் கேட்ட காங்கிரசோடு இணைந்து கொண்ட விளையாட்டை மீண்டும் அணி மாறி ஆடமுடியாது. அப்படி ஆடினால் அது மாநிலத்தில் காங்கிரசும், இடதுசாரிகளும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். அந்தக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலத்தில் அரசமைத்துவிட்டு, அந்த நிலையை திமுகவால் எடுக்க முடியாது. எனவே அதன் விதி காங்கிரசின் எதிர்காலத்தோடு பிணைக்கப்பட்டுவிட்டது.

அதிமுகவிற்கு அது போன்ற சிக்கல்கள் இல்லை. இந்தத் தேர்தலில் ஏறத்தாழத் தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால், அதுதான் மாநிலத்தில் வலுவான கட்சி என்ற எண்ணம் ஏற்பட்டு, அதன் மீதான தேசியக் கட்சிகளின் பார்வை மாறக் கூடும். ஒருவேளை அப்படி நடக்கவில்லையென்றாலும் அதற்கு மூன்றாவது அணிக்கட்சிகளோடோ , பாஜகவோடோ உறவு அமைத்துக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதாவது இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதன் நிலை, நாடளுமன்றத்தைப் பொறுத்தவரை open ended ஆக இருக்கிறது.

ஒரு வேளை இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதன் பக்கவிளைவாக, நாடாளுமன்றத் தேர்தலும் விரைவிலேயே வரலாம்.

எனவே தேர்தலை விட தேர்தலுக்குப் பிறகுதான் சுவாரஸ்யமான காட்சிகள் விரிய இருக்கின்றன.

23.4.2006 அன்று (சிங்கப்பூர் தமிழ் முரசுக்காக) எழுதியது

1 comment:

சந்தர் said...

சதவிகித வாக்குகளைக் கொண்டு வெற்றிபெறும் இட எண்ணிக்கைகளை கண்டுப்பிடிக்க உங்களால் மட்டுமே ஆகும்! போன தேர்தலில் வெற்றிப்பெற்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது அனைவரும் அறிந்ததே. வாக்கு சதவீதத்தில் எந்தவித அதிகபட்ச வித்தியாசமும் இல்லை என்பதும் தெரிந்த ஒன்று. மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் யாவும் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னர் மேற்கொண்டவை யாகும். மக்கள் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னர்தான் யாருக்கு வாக்களிப்பது என்பதை தீர்மானிக்கிறார்கள் என்பது வரலாறு! சமீபகாலங்களில் மக்கள் (பயத்தின் காரணமாக?) வெளிப்படையாக யோசிப்பதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்! கருத்துக் கணிப்புகளின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.