Sunday, October 02, 2016

இலக்கியம் - சில அடிப்படைகள்

இலக்கியம் என்பது என்ன?

புற உலகின் யதார்த்தங்கள் நம் மனதில் அதாவது சில சித்திரங்களை, எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த மனம் படைபூக்கம் கொண்டதாக இருந்தால் அது தனது அகச் சித்திரத்தை படைப்பாக உருவாக்குகிறது. அது மொழி வழி வெளிப்படும் போது அதை இலக்கியம் என்கிறோம்

அக உணர்வுகள், சிந்தனைகள், குழப்பங்கள் இவை மாத்திரம் கொண்ட படைப்புகளும்  உள்ளனவே?

ஆம். அந்தப் படைப்புகளுக்கான தூண்டுதலும் பெரும்பாலும் புற உலகின் யதார்த்தங்களாகத்தானிருக்கும். உதாரணம் மரணம், காமம், காதல்,நோய்

புனைவுகள் மட்டும்தான் இலக்கியமா?
ஒருவர் தன் அகச் சித்திரத்தைப் படைப்பாக வெளியிடத் தன் வசம் உள்ள கருவிகளைச் சார்ந்திருக்கிறார். அவற்றில் ஒன்று புனைவு.அநேகமாக அது நம் எல்லோரிடமும் இருக்கிறது. சிறு வயது முதலே பயன்படுத்தி வந்திருப்பதால் நமக்கு அதில் நம்மை அறியாமலே ஒரு பயிற்சி இருக்கிறது. வாசிப்பு அதை செழுமைப்படுத்துகிறது. அதனால் பலர் அதைப் பயன்படுத்துகிறார்கள். நம்முள் உருவாகும் அகச் சித்திரத்தின் தெளிவற்ற பகுதிகளை இட்டு நிரப்பவும் அது பயனளிக்கிறது. இலக்கியத்தில் புனைவின் இடம் எந்தளவு இருக்க வேண்டும், அவை தர்க்கம் சார்ந்து இருக்க வேண்டுமா என்பது பலகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 
முற்றிலும் புனைவு தவிர்த்த படைப்புக்களும் புனைவு குறைந்த படைப்புக்களும் கூட உண்டு

வடிவம், மொழி நடை, இவையும் கருவிகள்தானா?

புனைவு என்ற கருவியின் கருவிகள் இவை.கணினியும் மென்பொருளும் போல. கைபேசியும் appம் போல. தொலைக்காட்சி பெட்டியும் நிகழ்ச்சியும் போல. இலக்கியம் தன் புனைவுக்கும்  தேவைக்கும் ஏற்ப வடிவத்தையும் மொழியையும் தேர்ந்து கொள்கிறது

நவீன இலக்கியத்தில் கவிதை, ஒன்றை  - உணர்ச்சியோ, அனுபவமோ, தத்துவமோ, அல்லது இவற்றின் வழி அறிந்த கருத்தியலோ- உணர்த்தினால் போதுமானது எனக்கருதப்படுகிறது. பாரதியின் காக்கைச் சிறகினிலே பாடல் ஓர் சிறந்த உதாரணம்.இதை வேறு வடிவில் சொல்ல முடியாது. ஒரு சம்பவம், அதன் வழி பெறப்படும் தரிசனம் இவை சிறுகதைக்குத் தேவை.  வாழ்க்கை அனுபவம், அந்தப் பயணத்தில் மாறும் மனம், இவை நாவலுக்கு உகந்தவை. 

தர்க்கமற்ற மிகை புனைவு மாந்திரீக யதார்த்தத்திற்கு உதவும். குறைந்த புனைவு புனைவற்ற புனைவுக்குத் ( non fiction fiction)  தேவை. செறிவான மொழிநடை செவ்வியல் காவியங்களுக்கு உகந்தது வட்டார வழக்கை யதார்த்தவாத கதைகளில் காணலாம்

இலக்கியத் தரம் என்கிறார்களே அது என்ன?

பொருட்களின் தரத்தைப் போல புலன்களால் அறியப்படுவதல்ல இலக்கியத்தின் தரம். அது மனம் சார்ந்தது. தமிழ் இலக்கியம் பெரும்பாலும் ரசனை சார்ந்து மதிப்பிடப்படுகிறது. ரசனை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடக் கூடியது. ரசனையின் உட்கூறுகளாக அமையும், வாழ்வனுபவம், கலாசார மரபு,   அழகுணர்ச்சி, நம்பிக்கைகள், விழுமியங்கள், ஆளுக்கு ஆள், சமூகத்திற்கு சமூகம், நாட்டுக்கு நாடு. வேறுபடக்கூடியவை. 

வைதீக மரபில் வந்தவர்களின் ரசனையும் வேறு மரபுகளில் வளர்ந்தவர்களின் ரசனையும் வேறு வேறாக இருப்பதைப் பல தருணங்களில் பார்க்கலாம். 
வெள்ளைத் தோல், கறுப்புத் தோல், நெடுங்கூந்தல், கத்தரிக்கப்பட்ட முடி, ஆழ்ந்த வர்ணங்கள், வெளிர் நிறங்கள் என ஆளுக்கு ஆள், சமூகத்திற்கு சமூகம், அழகுணர்ச்சி, அது சார்ந்த ரசனை வெளிப்படும். 

இதே போல்தான் இலக்கியமும். செவ்வியல் மரபில் தோய்ந்தவர்கள், செவ்வியல் இலக்கியம் எழுத விருப்பம் கொண்டவர்கள், நுட்பமான எழுத்தைக் கொண்டாடுவார்கள். நுட்பம் என்பது கலை ஞானத்தின் வெளிப்பாடு,ஞானம் வாய்க்கப்பட்டோர் மேலோர் (elite) என்பது அவர்களது நம்பிக்கை. இசையில் இதை வெளிப்படையாகக் காணலாம். ஒரு ராகத்தின் அழகை ரசிக்க அதன் நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். அதனால் அது செவ்வியல் இசை (classical music) ஆனால் திரைப்பட இசையை ரசிக்க நுட்பங்களை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. திரைப்பாடல்கள் பெரும் அதிக அளவில் மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டது. அதில் நுட்பத்திற்கோ, ஞானத்தை புலப்படுத்தவோ அதிக வாய்ப்பில்லை.திரைப்பாடல்களை ரசிப்போர் பெரும்பாலும் ஞானத்தின் அடிப்படையில் அன்றி , அது எழுப்பும் உணர்ச்சிகளின் அடிப்படையில் அதனை ரசிக்கிறார்கள். உணர்வுகளின் அடிப்படையில் அமைந்ததால் அது தாழ்ந்தது. அதாவது அது light music

இதே கண்ணோட்டத்தில் இலக்கியத்தை அணுகுவோர் இருக்கிறார்கள். நுட்பம், ஞானம், இவற்றிற்கு இடம் குறைவாகவும், உணர்ச்சி, வெகு ஜனங்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட எழுத்துக்கள் தாழ்வானது என்பது அவர்களது கருத்தாக இருக்கும்

இந்த  'எலிட்டிச' மனோபாவத்திற்கு இரையானோரின் பின்புலங்களை ஆராய்ந்தால் அவர்கள் வைதீக மரபில் வந்தோராக, அல்லது அது குறித்த பெருமித உணர்வு கொண்டோராக, குறைந்த பட்சம் அதற்கெதிரான உணர்வு அற்றவராக இருப்பதைக் காணலாம். காரணம், வேத மரபு, மேல் கீழ் என அதிகாரப்படிநிலை கொண்ட சமூக அமைப்பில் நம்பிக்கை கொண்டது

அவர்களுக்கு யதார்த்தத்தை விட தொன்மம் முக்கியமானதாகத் தோன்றும். இலக்கியம் தனிமனிதனுக்கானது எனக் கருதுபவர்கள் பிரசாரம்  கூடாது என்பார்கள். பிரசாரம் சமூக நோக்கம் கொண்டது .

ஞானம், நுட்பம் கொண்டவர்கள் எந்த சமூகத்திலும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள் என்பதால் எலைட்கள் குழுவாக இயங்குவார்கள். குழு நலன் கருதி ரசனை குறித்த அவர்களது விளக்க உரைகள் மாற்றம் கொள்ளும். குழுவின் இயக்கத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள் இகழ்ந்துரைக்கப்படுவார்கள் அல்லது புறக்கணிக்கப்படுவார்கள்.

இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள தமிழில் வெளியாகும் இலக்கியச் சிற்றேடுகளின் செயல்பாடுகளை அவதானித்தால் போதும்

சூழல், காலம், சமூக வரலாறு, கலாசார மரபு இவற்றால்
வேறுபடும்  ரசனையை ,இலக்கியத் தரத்தை அளவிடும் பொது அளவுகோலாக ஏற்றுக் கொள்ள இயலாது. அப்படி ஏற்றுக் கொள்பவர்களின் நோக்கம் இலக்கியம் அல்ல

அப்படியானால் இலக்கியத்தை மதிப்பிடுவது எப்படி?

ஒரு படைப்பு அது எடுத்துக் கொண்ட பொருண்மையை, அந்தப் பொருண்மையை புலப்படுத்த எடுத்துக் கொண்ட சூழலை, அதன் பிரதி எப்படி வெளிப்படுத்துகிறது - மேம்படுத்துகிறதா, கைவிடுகிறதா, சிதைக்கிறதா- என்பதை அளவிடுவதன் மூலமே படைப்பை அளவிட வேண்டும். Context, text இவைதான் விமர்சனத்தின் அடிப்படை.

இதில் context என்பது படைப்பினுள் இயங்கும் சூழல் மட்டுமல்ல, படைப்பு உருவாகும் சூழலையும் குறிக்கும். ஏனெனில் படைப்பு சமூக நோக்கம் கருதியது. சமூகம் சூழல் சார்ந்தது. 

பாரதியின் தேசியப்பாடல்களை மதிப்பிடுகையில் அதன் காலச் சூழலைக் கணக்கில் கொள்ளாத ரசனை விமர்சகர் அவை வெறும் மேடை முழக்கங்கள் (rhetoric) என்ற முடிவுக்கு வந்து சேர்வார். 
காலச் சூழலைப் போல இடத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். காலனி ஆதிக்கத்தின் போது அறுபட்ட கலாச்சார மரபை மீட்டெடுக்க தாய்த் தமிழகத்தில்  பாரதி, திருவிக, பாரதிதாசன் , போன்ற ஆளுமைகள் முன்னின்று வழிநடத்திய இயக்கங்களைப் போல மலேசிய, சிங்கையில் இயக்கங்கள் தோன்றவில்லை. கோ.சா. அப்படி ஓரு முயற்சியை மேற்கொண்டார். ஆனால் அது ஓர் குறுகிய காலத் தாக்கத்தையே ஏற்படுத்தி அரசியல் பலன்களைப் பெறுவது நோக்கித் திரும்பிற்று. 

சூழல் எனப் பேசும் போது படைப்பாளியின் பின்புலமும் கவனத்தில் கொள்ளத் தக்கதே. சிங்கையின் நிரந்திரவாசிகள் தமிழகத்தில் வாழ்ந்த போது, பன்முகத் தன்மை கொண்ட ஊடகங்களின் வழியே பன்முக வாசிப் பிற்குப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். இலக்கியம், கலை என்பவை அவர்களுக்கு வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டன. வேளாண் சமூகங்களில் செவ்வியல் கலைகளுக்கு நிகரான நாட்டார் வழக்குகள் இருந்தன. இவையெல்லாம் சிங்கையில் பிறந்து வளர்ந்த சிங்கப்பூரியர்களுக்கு குறைவு

எனவே சூழலைப் பின்புலமாகக் கொண்டு பிரதியை அளவிடும் அணுகுமுறையைக் கைவிட்டு, தமிழகத்தில் தங்களை மேட்டுக்குடி மேலோர்களாக, eliteகளாக, நிறுவிக் கொள்ளப் பயன்பட்ட, ரசனைத் தராசு கொண்டு, செவ்வியல் பார்வையில் மதிப்பிட்டு  சிங்கை இலக்கியத்தை மட்டுமல்ல எந்த படைப்பையும் குப்பை எனப் புறந்தள்ளுவது முறையாகாது

நினைவில் கொள்ளத்தக்க சில யதார்த்தங்கள்

உலகம் பன்முகத்தன்மை கொண்டது. ஐந்து விரல்களும் ஒன்று போல் அமைந்தவை அல்ல. ஒரு மலரின் இதழ்களும் ஒரே அளவினால் அமைந்தவை அல்ல. ஒரே கனியே -எடுத்துக்காட்டாக மாங்கனி- பல்வேறு வகைகளும் சுவையும் கொண்டது.இந்த plurality, ஒரு பலம் என்பதை இயற்கை காலங்காலமாக மெய்ப்பித்திருக்கிறது.மாறாக ஒற்றைக் கலாசார ஆதிக்கம் (cultural  hegemony) தீதானது. 

சிங்கை மலேசிய தேசிய இலக்கியங்களை உருவாக்க விழையும் அரசு அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், எழுத்தாளர்கள், சிங்கை - மலேசிய இலக்கியங்கள் தமிழக இலக்கியங்களின் நகலாக இருக்க வேண்டியதில்லை என்ற யதார்த்தத்தை ஏற்க வேண்டும். 

இங்கு வேண்டியது பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வழிகாட்டிகளேயன்றி சட்டாம்பிள்ளைகள் அல்ல

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஜெயமோகன் கனபாடிகள் , மோரிஸ் பழம் எடை போடுகையில்
தக்கலையில் பயன் படுத்தும் தராசையே தாம்பரத்திலும்
பயன் படுத்தக் கூடாது என்கிறார் மாலன்

Tam said...

மிக அருமையான விளக்கம். உங்கள் கருத்தை முற்றிலுமாக வரவேற்கிறேன். இங்கே ஒரு குழு தங்களை Eliteஆக நினைத்துக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்து நான் கடந்த மாதம் 27ம் தேதி நான் முகநூலில் இதே மாதிரியான ஒரு கருத்தை முன் வைத்தேன். அது உங்கள் பார்வைக்கு
"I am not worried about producing good work by our generation. I am worried about the future generation...will they sustain? We need them to be creative and write it in whichever form they like and it's not about how they express rather what they express is important as long as they use Tamil language wisely. That's all. His criticism is all about the form and structure which is not my worry." - Tam Shanmugam