உங்களுக்கு பஞ்சாபியர்கள் குதித்துக் குதித்து ஆடும் பாங்ரா நடனம் தெரியுமா? கோலாட்டக் குச்சிகளை வைத்துக்கொண்டு ஆடும் தாண்டியா? அட, கும்மாங்குத்தாவது தெரியுமா? தெரியாது என்றால், ஏதாவது ஒரு களியாட்டத்தைக் கற்று வைத்துக்கொள்வது நல்ல்து. இல்லையென்றால் உங்கள் நாட்டுப் பற்றை மெய்ப்பிக்க வாய்ப்பில்லாமல் போய்விடக் கூடிய ஆபத்து இருக்கிறது.
மூன்று வாரங்களுக்கு முன், இந்தி ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்திக்கு நடுவே சில நிமிடங்களுக்கு பாங்ரா வந்து போயிற்று. ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம் என்பதை ஒப்புக்கொள்வதில் ஆட்சேபமில்லை. ஆனால் அதற்காக அந்தக் காட்சி செய்திகளுக்கு நடுவே இடம் பெறவில்லை. சினிமா, 'சோப்' எனச் சொல்லப்படும் தொலைக்காட்சித் தொடர்கள் போல தொ.கா. செய்திகளும் 'பொழுதுபோக்காக' மாறிவிட்டன என்று சில உம்மணா மூஞ்சிகள் முனகிக்கொண்டிருக்கிறார்களே அதை மெய்ப்பிப்பதற்காகவா அவை செய்திக்கு நடுவில் வந்து போயின என்றால் அதுவும் இல்லை. பின்னே?
அமெரிக்காவில், ஒரு 'இந்தியர்' லூசியானா மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டிருக்கிறார் என்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் பொங்கிய மகிழ்ச்சியைத்தான் தொ.கா. காட்டிக்கொண்டிருக்கிறது. மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் அந்த 'இந்தியர்' பெற்ற வெற்றிதான் முதல் பக்கச் செய்தி. 'இந்தியர்' ஒருவர் வரலாறு படைத்துவிட்டதாக அவை முழங்கின.
##Pg## இந்தியர் ஒருவர் எப்படி அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட முடியும்? அமெரிக்கக் குடிமகனாக இல்லாதவர் ஒருவர் அங்கு வாக்களிக்க முடியுமா? தேர்தலில் வாக்களிக்கவே முடியாதென்றால் போட்டியிட முடியுமா? இப்படியெல்லாம் அபத்தமாகக் கேள்வி கேட்கக் கூடாது. செய்திகளைக் கூர்ந்து படித்தால் அவர் 'இந்தியர்' அல்லர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தியாவில் பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்று அமெரிக்காவிற்கு வேலைக்குப் போய், பச்சை அட்டை பெற்று, பின் அங்கே குடிமகனாகி, அதன் பின் அரசியலில் இறங்கி, தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியைப் பிடித்திருப்பாரோ? அதுவும் இல்லை. அவரின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அதையே தங்கள் நாடாக ஏற்றுக்கொண்ட பின் அங்கு அவர்களுக்குப் பிறந்து, அங்கேயே வளர்ந்து, கல்வி கற்று, அரசியலுக்கு வந்தவர் இந்த ஜிண்டால். அவரது வளர்ச்சிக்கோ, கல்விக்கோ, இந்தியா ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. அப்படியிருக்க இதில் இந்தியா அல்லது இந்தியர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?
ஒருவேளை அவர் இந்தியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்பதால் இந்தியா மீது 'பாசத்தோடு' இருக்கிறாரா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் ஏதோ ஒருவகையில் உதவக் கூடிய 'அவுட் சோர்சிங்' பிரச்சினையிலாகட்டும், தொழில்முறை விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலாகட்டும், அவரது நிலை அவரது கட்சியான குடியரசுக் கட்சியின் நிலையிலிருந்து எள்ளளவும் மாறுபட்டதில்லை. கட்சித் தலைமை என்ன கோடு கிழிக்கிறதோ அதை விட்டு ஒரு எட்டுக் கூட முன் வைக்காதவர். இதைவிடச் சிக்கலான இந்திய பாகிஸ்தான் உறவு, அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியாவின் நலன்களை முன்னிறுத்தி ஊடகங்களிலும், நாடாளுமன்றங்களிலும் வாதிடக் கூடிய 'இந்தியா காகஸ்' என்ற ஒரு குழு இருக்கிறது. அதில் கூட அவர் சம்பந்தப்பட்டுக்கொள்ளவில்லை.
##Pg## இதே ஜிண்டால், இதே மாநிலத்தில், இதே பதவிக்குக் கடந்த முறை போட்டியிட்டுத் தோற்றுப் போனார். அப்போது இந்தியா 'இந்தியர்' ஒருவர் தோற்றுப் போனதற்காக ஒப்பாரி வைத்து அழவில்லை. இன்று அவர் வெற்றி பெற்றதும் அது 'இந்தியர்' பெற்ற வெற்றி ஆகிவிட்டது.
இதே போல் சுனிதா வில்லியம்சின் சாதனைகளின் போதும் இந்திய ஊடகங்கள் மார்தட்டிக்கொண்டன. விண்வெளியில் 195 நாள்கள் வசித்ததும், 29 மணி நேரத்திற்கு மேல் நடந்ததும் நிச்சயம் பெருமைக்குரிய சாதனைகள் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இதுநாள் வரை வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தகர்த்த அந்தச் சாதனைகள் மனித குலத்திற்கே பெருமை தருபவை. ஆனால் அந்தச் சாதனைகளை நிகழ்த்த சுனிதாவிற்கு இந்தியா எந்த விதத்திலும் துணை நின்றதில்லை. உதவியதில்லை. பயிற்சி அளித்ததில்லை. அவர் கல்பனா சாவ்லா அல்ல.
கல்பனா, இந்தியாவில் பிறந்தவர். சுனிதா, அமெரிக்காவில் பிறந்தவர். கல்பனாவின் பெற்றோர்கள் இருவரும் இந்தியர்கள். சுனிதாவின் தாய் ஸ்லோவினியாவைச் சேர்ந்தவ்ர். கல்பனா பள்ளிக் கல்வி, பட்டப் படிப்பு இரண்டையும் இந்தியாவில் படித்தவர். சுனிதா பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டத்திற்கான படிப்பு அனைத்தையுமே அமெரிக்காவில் படித்தவர். கல்பனா ஜே.ஆர்.டி. டாடா விமானம் ஓட்டியதைப் பள்ளிப் பருவத்தில் படிததது வானம் இந்தியர்களுக்கும் வசப்படும் எனற மன எழுச்சியையும், கனவையும் தந்தது என்று சொல்லியிருந்தார். இந்தியப் பள்ளிக் குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்திக் கையெழுத்திட்ட ஒரு பட்டுத் துணியை கல்பனா விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். சுனிதாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள சம்பந்தம் அவர் விண்வெளிக்கு, சில சமோசாக்களையும் ஒரு பிள்ளையார் பொம்மையையும் எடுத்துப் போனதுதான்.
##Pg## ஃபிஜியில் மகேந்திர செள்த்ரி ஆட்சியைப் பிடித்த போதும், சிங்கப்பூரில் நாதன் அதிபராக ஆனபோதும் இதே போல இந்திய ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொண்டன. மகேந்திர செளத்ரி, நாதன் இருவருமே தத்தம் நாட்டில் பிறந்தவர்கள். நாதனின் பெற்றோர்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் மலேயாவில் குடியேறியவர்கள். நாதனின் பிறப்பும், கல்வியும் முழுக்க சிங்கப்பூரிலேயே நிகழ்ந்தது. நாதனுக்குச் சிங்கப்பூர் அரசியலில் நிறைகுடம் என்ற நன்மதிப்பு உண்டு.
மகேந்திர செளத்ரியும் ஃபிஜித் தீவில் பிறந்தவர்தான். நாதனுக்கு சிங்கப்பூர் அரசியலில் கிடைத்த நற்பெயரும் நன்மதிப்பும் செள்த்ரிக்குக் கிடைக்கவில்லை. அடிதடி, ஊழல் வழக்குகளுகளை நீதி மன்றத்தில் சந்திக்க நேர்ந்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகத்தான் அவர் கருதப்பட்டார். ஆனாலும் நமக்குப் பெருமை பிடிபடவில்லை.
இந்திய வம்சாவளியில் பிறந்ததனாலேயே ஒருவருக்குப் பெருமை வந்துவிடும் என்பது குலப் பெருமை பேசுகிற மேட்டிமைத்தனம். பிறப்பினாலே ஒருவருக்குப் பெருமைகளும் தகுதிகளும் வந்துவிடும் என்கிற வர்ணாசிரம தர்மத்திற்கும் இதற்கும் சாராம்சத்தில் அதிக வேறுபாடு இல்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்) என்று சொன்னதும் நம் பாரம்பரியம்தான்.
இது போன்ற அசட்டுப் பெருமைக்கு ஒரு காரணம் ஒருவர் பிரபலமானவராகிவிட்டால், 'தெரியுமா, அவர் நம்ம ஆளு' என்ற மனோபாவம். அவர் வாழ்வில் உயர்வதற்கு நாம் நெல் முனை அளவு கூட உதவியிராவிட்டாலும் கூட அவரது வெற்றிக்கு உரிமை கொண்டாடும் ஆர்வம். இரண்டுமே ஒருவித தாழ்வு மனப்பான்மையிலிருந்து பிறப்பவை. அது ஆரோக்கியமானதல்ல.
##Pg## அண்மைக் காலமாக இந்திய ஊடகங்கள், இந்தியாவைப் பற்றிய மிகைப்படுததப்பட்ட பிம்பங்களை இந்தியர்களிடம் விற்று வருகின்றன. இந்தியா வல்லரசாக வேண்டும், வல்லரசாகிவிடும் என்ற கனவுகளின் அடிப்படையில் விற்கப்படும் பிம்ம்பங்கள் இவை. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் நாட்டிவரும் வெற்றிக் கொடிகள், பங்குச் சந்தையில் காட்டி வரும் பாய்ச்சல், உலகமயமாதலின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில் பொருட்களை விற்பதற்கு ஒரு பெரும் சந்தையாகவும், பயிற்சி அளிக்கப்பட்ட மனித உழைப்பைப் பெற மலிவான சந்தையாகவும் அளிக்கும் தோற்றம், இவையெல்லாம் இந்தியாவிற்கு உலக அரங்கில் கவனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் உலக நிறுவனங்கள், அரசியல், வணிகம், போன்ற துறைகளில் எடுக்கும் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு வல்லமையை இந்தியா பெற்றுவிடவில்லை என்பதும், நம் அடித்தள மக்களின் குறைந்தபட்சத் தேவைகளை (கல்வி, குடிநீர், சுகாதாரமான வாழ்விடம்) நிறைவு செய்வதில் நாம் பாதியளவுகூட வெற்றி காணவில்லை என்பதும் அதே அளவிற்கு உண்மை.
இந்த யதார்த்தங்களை மறக்குமளவு வல்லரசுக் கனவுகளை விற்பது போதை மருந்து விற்பதற்கு நிகரானது.
இறுதியாக ஒரு கேள்வி: இந்திய வம்சாவளியினர் ஒருவர், ஒரு மாநில முதல்வரானதற்கு ஆனந்தக் கூத்தாடும் சக இந்தியர்களே, வேறு ஏதோ ஒரு நாட்டில், அல்லது வம்சாவளியில் பிறந்த ஒருவர் இந்த நாட்டின் பிரதமராகவோ, குடியரசுத் தலைவராகவோ ஆவது உங்களுக்குச் சம்மதம்தானா?
சிஃபி.காம் (தமிழ்) தீபாவளி மலரில் வெளியானது
3 days ago