Monday, September 21, 2009

தமிழில் பேசும் கணினி

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அவ்ரை இது போன்ற ஒரு மென்பொருளைக் கையாளப் பயிற்சி தந்தோம். தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்வதில் ஆரம்பித்த் அவர் சில வாரங்களில் இணையதளங்களைப் 'பார்வை'யிட்டு அவற்றிற்கு தனது எதிர்வினையை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பவராகவும் ஆகிவிட்டார்.

இனி கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி தமிழிலேயே வாசித்துக் காட்டும்!. இதற்குரிய ஒரு மென்பொருளை (engine) பெங்களுரூவில் உள்ள இந்த அறிவியல் கழகத்தின் (Indian Institute of science) பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் உருவாகியிருகிறார். இதன் வெள்ளோட்ட வடிவத்தை
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

நான் இதில் மூன்றுவித பிரதிகளை இட்டு சோதனை செய்து பார்த்தேன்:

1. பாரதியின் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்ற கவிதை
2. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் சிறுகதையின் ஒரு பகுதி (நாடகத் தமிழும், நெல்லைத் தமிழும் விரவி வரும் ஒரு நடை)
3.ஜெர்மனியில் நடைபெற உள்ள தமிழிணைய மாநாடு பற்றி நான் எழுதிய செய்திக் குறிப்பு
இந்தப் பொறி நன்றாகவே வேலை செய்கிறது. நீங்களும் சோதனை செய்து பார்க்கலாம். உங்கள் கருத்தை ramkiag@ee.iisc.ernet.in என்ற மின்னஞ்சல் மூலம் பேராசிரியருக்குத் தெரிவிக்கலாம்.


நன்றாக வேலை செய்கிறது எனினும் சிற்சில மேம்படுத்தல்கள் தேவை.

ஆங்கிலம் கலந்து எழுதினால் ஆங்கிலப் பகுதிக்ளை அது வாசிப்பதில்லை. எண்களில் அதற்குப் பிரசினைகள் இருக்கிறது.

பேராசிரியர் ஏ.ஜி.ஆர். கணினி/இணையத்தில் தமிழைச் செழுமைப்படுத்த உழைத்து வருபவர்களில் ஒருவர். உத்தமத்தின் தமிழிணைய மாநாடுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்.

இது அவர் தமிழுக்கு அளித்துள்ள மிகப் பெரிய கொடை.

விழியிழந்தவர்களை மட்டுமல்ல, மொழி இழந்த ஒரு தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்ல இது உதவும் என்பதால் இது இன்று அவசியம் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள் ஏ.ஜி.ஆர்.

Saturday, June 27, 2009

ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு 2009

தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்கும் தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மன்றமான உத்தமம் (International Forum for Information Technology in Tamil- INFITT) அமைப்பும், ஜெர்மனியில் அமைந்துள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Insitute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளையும், சவால்களையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும் அவ்வப்போது சர்வதேச அளவில் தமிழ் இணைய மாநாடுகளுக்கு உத்தமம் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து சர்வதேச அளவில் மாநாடுகளை உத்தமம் அமைப்பு மட்டுமே நடத்தி வந்துள்ளது.



இதுவரை சென்னை (1999, 2003 ) சிங்கப்பூர் (2000, 2004) மலேசியா (2001) அமெரிக்கா (2002) ஆகிய நாடுகளில் தமிழ் இணைய மாநாடுகள் நடந்துள்ளன.


இந்த ஆண்டு முதல் முறையாக ஐரோப்பாவில் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. ஜெர்மனியில் உள்ள கோலென் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன்றன. "கணினி வயிக் காண்போம் தமிழ்” என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருக்கும் உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பங்கேற்றவுள்ளார்கள். ஆழ்ந்த விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 100 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு குறித்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் முனைவர் கு.கல்யாணசுந்தரம், "தமிழ் இணைய மாநாடு இதுவரை தமிழர் அதிக அளவில் வாழும இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா இவற்றில் நடைபெற்றன. இந்த ஆண்டு நான்கு லட்சத்திற்குமேல் தமிழர்கள் வசிக்கும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனியில் நடக்கவுள்ளது. இங்கு உள்ள இளம் தமிழர்கள் கணினியை பெருமளவில் ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு இணைய மாநாட்டின் நோக்கின்படி (கணினி வழி காண்போம் தமிழ்) இவர்கள் அனைவரும் தமிழில் கணினியை பயன்படுத்தவும் இணையம் வழி கல்வி கற்க வகை செய்வதே." என்று தெரிவித்தார்.

மாநாட்டில் அளிப்பதற்குரிய கட்டுரைகளை இந்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கட்டுரைகளின் சுருக்கத்தை ti2009@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வாசு ரங்கநாதன் தலைமையில் அமைந்துள்ள வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கீழ்க்கண்ட பொருள்களில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன :
1. Open source software and Localization
2. Tamil enabling in mobile phones
3. Machine Translation, OCR & Voice recognition
4. Tools for Tamil Computing
5. Tamil Internet & Social Networking
6. E-Learning
7. Databases for Digital libraries
8. Digital archiving of Tamil heritage materials
9. Standards for Tamil Computing
மாநாட்டுக்கான இணையதள முகவரி :
http://www.infitt.org/ti2009/

Saturday, June 06, 2009

பத்திரிகைப் பணி அழைக்கிறது

உள்ளே இருக்கா ஓர் ஒளி ?

  • வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், எழுத வேண்டும் என்ன நினைப்பவரா?

  • 'நல்லாவே எழுதுகிறேன்' என்பதுதான் உங்களைப் பற்றிய உங்கள் கணிப்பா?

  • இளைய தலைமுறையின் முழு ஆற்றலும் இன்னும் வெளிக் கொண்டுவரப்படவில்லை, அதை வெளிக் கொண்டுவர என்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற தவிப்பு உங்களிடம் இருக்கிறதா?

  • சமூகப் பொறுப்புடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கும் ஒரு குழுவுடன் இணைந்து செயல்பட ஆர்வமுண்டா?

தமிழில் புதிதாகத் துவங்கப்பட உள்ள ஒரு வார இதழில் சென்னையில் இருந்து முழுநேரப் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம் உங்களைப் பற்றிய விவரங்களையும் உங்கள் படைப்புகளில் மிகச் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றையும் எனக்கு மின் அஞ்சல் ( maalan@gmail.com ) செய்யுங்கள்.

இதழியலில் ஆர்வம் உண்டு . ஆனால் அதை என்னால் முழு நேரப் பணியாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்காக சென்னைக்குப் பெயர்ந்து வர முடியாது. என் குடும்பச்/பணிச் சூழல் அப்படி. இருந்த இடத்திலிருந்தே ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லுங்கள் என்ற நிலையில் இருப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெளிவாகத் தெரிவியுங்கள்.

இளைஞர்களுக்கு முன்னுரிமை.

Monday, June 01, 2009

நன்றி.

வாய்ப்புக் கிட்டாதவ்ர்களும் பதிலளிக்கலாம்

இப்போதெல்லாம் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருப்பதை பதிப்பாளர்களின் புன்னகை curveல் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மிகவும் பிரபலமாகாத தொலைக்காட்சிகளில் Non -prime time நிகழ்ச்சிகளைப் பற்றிக்கூட எங்காவது யாராவது வியக்கிறார்கள் / திட்டுகிறார்கள். வலைப்பூக்களின் வளர்ச்சியை அதன் ஆரம்ப நாட்களிலிருந்து பார்த்து வருபவன் என்ற முறையில் பிரமிப்பாக இருக்கிறது. சாலையில் நடந்து போனால் எதிரே வருகிற பத்துப் பேரில் நான்கு பேராவது செல்போனில் கதைத்துக் கொண்டோ கடலை போட்டுக் கொண்டோ போகிறார்கள். ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால், ஹலோ, பிக, ஆகா, சூரியன், மிர்சி, ரெயின்போ, ரேடியோ சிட்டி என ஓட்டுநர் ஒரு காக்டெயில் வழங்குகிறார். இத்தனைக்கும் நடுவில் பிரபுல் படேல், தயாநிதி மாறன் அளவிற்கு இல்லையென்றாலும் அநேகமாகப் பலர் வாழ்க்கையை சிரமமின்றி ஓட்டுவதற்குத் தேவையான அளவு பொருளீட்டிக் கொண்டிருப்பது போல்தான் தெரிகிறது.

இந்த அமளிகளுக்கு நடுவில் மக்கள் பத்திரிகைகளைப் படிக்கிறார்களா ? படிப்பதில் திருப்தி அடைகிறார்களா? இன்று வாசிக்கும் பழக்கம் எப்படி இருக்கிறது, இனி ஒரு புதிய முயற்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என அறிந்து கொள்ள எனக்கு ஆவல்.

அதற்காகத்தான் Survey Monkey தளம் மூலம் ஆய்வை மேற்கொண்டேன். அந்தத் தளம் 100 பேர் வரை பதில்கள் திரட்டும் சேவையை இலவசமாக அளிக்கிறது. நான் 30ம் தேதி சனிக்கிழமை காலை 12.06க்கு சர்வேயை என் வலைப்பதிவில் இட்டேன். நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

30ம் தேதி 12 மணி 19 நிமிடம் 38ம் நொடிக்கு முதல் பதில் வந்தது. நண்பர் லக்கி லுக் படிவத்தை முதலில் நிரப்பி அனுப்பி இருந்தார். திங்கட் கிழ்மை அதிகாலை 4 மணி 7 நிமிடங்கள் 59 நொடிக்குள் 100 பேர் பதிலளித்து விட்டனர்.

பதிலளித்த அனைவருக்கும் நன்றி. இந்த சர்வே பற்றி தமயந்தி, பாஸ்டன் பாலா, மதுமிதா, இட்லிவடை ஆகியோர் தங்கள் வலைப்பதிவுகளில் தகவல் வெளியிடிருந்தனர். சிலர் மடலாடற் குழுமங்களிலும் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கும் நன்றி.
இட்லி வடை வலைப் பூவில் பதிலளிக்கச் சென்ற சிலர் சர்வே முடிந்துவிட்ட்து என செய்தி வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்கள். 100 பதில்கள் வந்து விட்டதால் இணையதளம் மேற்கொண்டு அனுமதிக்க மறுக்கிறது. சர்வேயை மீண்டும் புதிதாக இட்டு இருக்கிறேன். பதில்களை எதிர்நோக்கியுள்ளேன். புதிய் சுட்டி:http://www.surveymonkey.com/s.aspx?sm=xwg9rVOVbQHHZUc2kxEh1A_3d_3d
பதிலளிக்க விருப்பமுள்ளவர்கள் பதிலளிக்கலாம்

இந்த சர்வே கொடுத்திருக்கும் பதில்களை பகுத்தாய்ந்து கொண்டிருக்கிறேன். விரைவில் அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்

அனைவருக்கும் நன்றி

Saturday, May 30, 2009

தமிழ் இதழ்கள் -ஓர் ஆய்வு

தமிழ் இதழ்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளேன்.

உங்களின் பதில்கள் எனக்குப் பயன்படக்கூடும்

கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் ஒரு படிவம் தோன்றும். அதில் விடையளிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு அதிக நேரம் பிடிக்காது. பதிலளிக்க மிகச் சில நிமிடங்களே ஆகும் வகையில் படிவம் உருவாக்கப்பட்டுள்ளது

http://www.surveymonkey.com/s.aspx?sm=YElCNLuiOwqDdxo2_2bKLcIA_3d_3d

உங்கள் பதில்களை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்

நன்றி

Tuesday, May 19, 2009

தேர்தல் தீர்ப்பு: வென்றதும் வீழ்ந்ததும்

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பாராத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.

அம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.

மறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே!

அதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.

பதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்

திடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.

இரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது

*
இது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.

இந்த முறை வேறு ஒரு நண்பர் தேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:

“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன

தேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.

இந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்க ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆகியவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.

எதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்வார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.

இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.

இந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.

Sunday, May 10, 2009

யாருக்கு வாக்களிப்பது-4?

மாற்று!

இது நாள் வரை சுமார் 75 சதவீத இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே ( 2004ல் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 26.53% 1999ல் பாஜக பெற்ற வாக்குகள் 23.75%) ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வந்திருக்கின்றன. அவை அதிகாரம் செலுத்த உதவியவை மாநிலக் கட்சிகள்தான்!

இந்த முறை ஆட்சிக்கு உரிமை கோரி நிற்கும் அந்த இரண்டு பெரிய கட்சிகளின் தலையில் உள்ள கூட்டணிகளுக்கு மாற்றாக இன்னொரு அணியும் களத்தில் நிற்கிறது. இது தத்தம் மாநிலங்களில் பலம் பொருந்திய கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஓர் அணி.

கூட்டணி ஆட்சி நிலைத்த அரசுகளைத் தராது என்ற வாதத்தை 1999லிருந்து கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வரும் கூட்டணி அரசுகள் உடைத்தெறிந்து விட்டன.இன்று அனேகமாக அனைத்துக் கட்சிகளுமே இனி இந்தியாவில் கூட்டணி அரசுகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

இனி கூட்டணி ஆட்சிதான் யதார்த்தம் என்பதால், வாக்காளர்கள் கூட்டணிகளின் அடிப்படையிலதான் யாருக்கு வாக்களிப்பதை முடிவு செய்ய வேண்டுமே அன்றி ஒரு குறிப்பிட்ட கட்சியின் அடிப்படையில் அல்ல என்பதும் அந்த யதார்த்தத்தின் ஒரு முகமாகிறது.

அந்தக் கோணத்தில் பார்க்கும் போது இருக்கும் மூன்று அணிகளில் மூன்றாவது அணி என்று சொல்லக்கூடிய மாற்று அணி கீழ்க்கண்ட காரணங்களால் நம்பிக்கை தருவதாக இருக்கிறது :
  • இந்தியாவின் சாரம்சம் என நான் கருதும் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை ஆகிய அம்சங்களைப் அது இன்று பிரதிநிதித்துவப்படுத்துகிறது
  • காங்கிரஸ், பாஜக ஆகிய இரு சக்திகளுக்கு மாற்றாக ஒரு அரசியலை முன் வைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி,{UPA} தேசிய ஜனநாயகக் கூட்டணி {NDA} இரண்டுமே இத்தகையதல்ல. ஒன்று பாஜகவிற்கு மாற்று, மற்றொன்று காங்கிரசிற்கு மாற்று. முதன்முறையாக இரு சக்திகளுக்கும் மாற்றாக ஒரு அரசியல் Formation முயற்சிக்கப்படுகிறது. அதை ஆதரிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என நான் கருதுகிறேன்..
    இந்தக் கூட்டணி ஒரு அணியாக நிலைபெறுவது ஒரு வேளை சாத்தியமற்றுப் போனாலும், அரசியலில் இதற்கான ஒரு வெளி ( an alternative political space) விரிவுபடுத்தப்படுகிறது
  • இது மிக முக்கியமானது. ஏனெனில் காங்கிரசோ, பாஜகவோ உருவாக்கும் அணிகள் தங்களது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனால்தான் 1999ல் திமுக பாஜக தலைமையிலான கூட்டணியிலும், 2004ல் அதே திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் பங்கு பெற முடிகிறது.அந்தக் கூட்டணிகள் அரசியல் கருத்து அடிப்படையில் அமைந்தவை அல்ல. அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானல் கணக்குகள் தேவைப்படலாம். ஆனால் இன்று நாட்டின் குடிமகனுக்குத் தேவைப்படுவது காங்கிரஸ்- பாஜக இல்லாத மாற்றரசியல்
    ஒரு கூட்டுத் தலைமைக்கான வாய்ப்பு உருவாகிறது. வாரிசு அரசியல் என்பது வலுவிழப்பதற்கான மாற்று கூட்டுத் தலைமையும், ஒருமித்த கருத்தடிப்படையில் முடிவெடுப்பதும்தான்.(Rule by consensus)
  • இந்தத் தேர்தலின் முடிவில் காங்கிரசோ பாஜகவோ ஆட்சியமைத்தால் அது தேர்தலுக்குப் பின் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு கூட்டாக இருக்கும் (Post Poll Alliance) ஆனால் மூன்றாவது அணி என்பது ஆட்சிக்கு முந்திய கூட்டு.{Pre Poll alliance) வாக்களன் என்ற முறையில் நான் ஆட்சிக்கு முந்திய கூட்டணியையே விரும்புவேன். ஏனெனில் அது பற்றி முடிவெடுக்கும் ஒரு வாய்ப்பை அது எனக்கு அளிக்கிறது. ஆட்சிக்குப் பிந்திய கூட்டிற்கு என் அபிப்பிராயங்கள் தேவையே இல்லை
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் அரசுகளுக்கெதிரான கூட்டு. எந்த ஒரு அரசையும் நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு அறிவிக்கப்படாத யதேச்சாதிகாரம் நடைமுறைக்கு வந்து விடும்

இந்தக் கூட்டணியின் முன் உள்ள சவாலாக நான் கருதுவது

  • எது அதன் பலமோ அதுதான் அதன் பலவீனமும் கூட: அந்தப் பன்முகத்தன்மை. ஆனால் இந்தியாவின் பலமும் பலவீனமும் இதுதான். தீவிரமான இடது சாரிப் பாதை, அல்லது தீவிரமான மூலதனவாதம், தீவீரமான, லிபரல் அல்லது தீவீரமான அடிப்படைவாதப் பாதைக்குச் சென்றுவிடாமல் ஒரு நடுநிலைப் பாதையைப் பின்பற்றுமாறு இந்திய அரசை வற்புறுத்துவதும் இந்தப் பன்முகத் தன்மைதான்.இதற்குள் ஒருவித தடைகளும், சமநிலைப்படுத்தும் கட்டாயமும் (checks and balances) அமைந்திருக்கின்றன. அதே நேரம் இந்த உள்ளீடு விரைந்து செயல்படத் தடையாக இருக்கிறது என்பதும் உண்மைதான்.
  • மாநிலங்களில் மட்டும் செல்வாக்குக் கொண்ட கட்சிகளின் கூட்டணி என்பதால் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசியல் சமன்பாடுகள் இந்தக் கூட்டணியை காங்கிரஸ் பாஜகவிற்கு எதிரான ஒரு முழுமையான மாற்றாக வளர்ச்சி பெற இயலாத நிலையை ஏற்படுத்திவிடும். அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசும் பாஜகவும் ஆதாயம் தேட முற்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் திமுக அதிமுக மற்ற மாநிலக் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இருக்கும் போது காங்கிரஸ் பாஜக என்பவை தனித்தே தேர்தல்களை எதிர் கொள்ள நேரிடும். அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என ஊகிப்பது எவருக்கும் அத்தனை கடினமில்லை. ஆனால் திமுகவும் அதிமுகவும் எதிர் எதிரே நிற்பதுதான் இன்றைய யதார்த்தம். அதைப் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது. இது நாளடைவில் பிரித்து ஆள்கிற (divide and rule) சூழலை மீண்டும் அரசியலில் கொண்டு வரும்.
  • மாநிலக் கட்சிகளில் ஒருவித Cult அரசியல், அதாவது வழிபாட்டுக் கலாசாரம் இருக்கிறது. அதிமுகவிற்கு இதய தெய்வம் ஜெ. திமுகவின் காவல் தெய்வம் கருணா. பிஜேடியின் தெய்வம் நவீன் பட்னாயக். இந்த வழிபாட்டு அரசியல் நிலை பெற இது உதவலாம். ஆனால் தேசியக் கட்சிகளும் இதற்கு தப்பவில்லை. காங்கிரசில் நேற்று ராஜீவ். இன்று சோனியா, நாளை ராகுல். பாஜகவிலும் மோடி மீது இது போன்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.

மாற்று அணி என்பது ஆட்சி மாற்றம் என்பதாக மட்டும் முடிந்து விடாமல் கொள்கைகளில் மாற்றம், அணுகுமுறைகளில் மாற்றம்,முன்னுரிமைகளில் மாற்றம் என்பதாகவும் விரிவடைய வேண்டும் என நான் விரும்புகிறேன், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. காங்கிரஸ், பாஜக இடையே வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகளில் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால் தனி ஈழம் என்ற ஜெயலலிதாவின் முழக்கம் அயலுறவுக் கொள்கையில் ஒரு மாற்றத்தை நிர்பந்திக்கிறது. இடதுசாரிகள் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன் வைக்கின்றனர்.பயங்கரவாதம் குறித்த அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கும் எனத் தோன்றுகிறது.


Change the status quo என்பதுதான் இன்றைய இந்தியாவின் தேவை. அதனால் 3ம் அணிக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறேன்.

Wednesday, May 06, 2009

யாருக்கு வாக்களிப்பது?-3

இந்தியாவில் மாநிலங்கள் எப்படி அரசியலில் பன்முகத்தன்மையை பிரதிநித்துவப்படுத்துகின்றனவோ அதே போல், மதங்கள் அக உலக நம்பிக்கைகளின் குறியீடாக அமைந்துள்ளன. பெரும்பான்மையான இந்தியர்களால் பின்பற்றப்படும் இந்து மதம் என்பதே பன்முகத் தன்மை கொண்ட ஒரு நிறுவனம்.
அந்த மதத்தின் ஒரு சிறப்பம்சம் இந்து என்பவன் எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கக் கூடாது என்பதை மதம் வரையறுக்கவோ வலியுறுத்தவோ இல்லை என்பது. இந்து என்பவன் மதச் சின்னங்களைக் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும், இன்ன கடவுளைத்தான் வழிபட வேண்டும், கடவுளின் உருவம் இப்படி இருக்க வேண்டும், வழிபாடு இந்த முறையில்தான் அமைய வேண்டும், பிரார்த்தனைகள் இந்த மொழியில் இருக்க வேண்டும், தினம் அல்லது வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் கோவிலுக்கு வந்தாக வேண்டும், இன்னின்ன குடும்பத்தினர் இந்த இடத்திலுள்ள கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
இந்து யார் என்ற கேள்விக்கு ஒற்றைவரியில் ஓர் வரையறையைத் தந்துவிடமுடியாது. அல்லாவை வணங்குகிறவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவைக் கும்பிடுகிறவர்கள் கிறிஸ்துவர்கள் என்று சொல்வதைப் போல சிவனை வணங்குகிறவர்கள் இந்துக்கள் அல்லது விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் இந்துக்கள் என வரையறை செய்துவிடமுடியாது.சிவனை மட்டும் கும்பிடுகிற இந்துக்கள் இருக்கிறார்கள். விஷ்ணுவை மட்டும் கும்பிடுகிற இந்துக்கள் இருக்கிறார்கள். இருவரையும் வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இருவரும் இணைந்த ஐயப்பனையோ சங்கர நாராயணனையோ வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தெய்வங்களை அல்லாமல் பெண் தெய்வங்களை முதன்மைப் படுத்தி வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களல்லாத கருப்பசாமியையோ, முனியனையோ, சுடலைமாடனையோ வணங்குகிறவர்களும் இந்துக்கள்தான்.
இறைவனை/இறைவியை மட்டுமல்லாது இயற்கையையும் வழிபடுகிற வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது.ரிக்வேதத்தின் சில பகுதிகளை மொழி பெயர்த்தால் அவை இயற்கை மீதான கவிதைகளாக அமைந்துவிடும்.(வாசிக்க: பாரதியின் மொழிபெயர்ப்புகள்).விலங்குகள், பறவைகள் இவைகள் கூட தெய்வாம்சம் பொருந்தியதாக அந்த மதத்தில் கருதப்படுகிறது. மனிதர்களுடைய எல்லா வழக்கங்களும், ஒழுக்கங்களும் கடவுள்கள் மீது ஏற்றிச் சொல்லபடுவதையும் இந்துமதம் தடுப்பதில்லை.
வேதத்தின் அடிப்படையில் தங்களை இந்துக்களாக அறிவித்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்.வேதங்களைத் தர்க்க ரீதியான கேள்விகளோடு எதிர்கொள்ளும் உபநிஷத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்.இதிகாசப் புராணக் கதைகளில் வடும் பாத்திரங்களைத் தங்கள் ஆதர்சங்களாக ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள். மதச் சடங்குகளை செய்வதன் மூலம் தாங்கள் இந்துக்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் உண்டு. சடங்குகளை நிராகரித்து, ஆனால் கடவுளை மறுக்காத இந்துக்களும் உள்ளனர். இந்துமதம் ஒரு வாழ்க்கை முறை என டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். நமது மரபுகளைச் சுட்டி கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியிருக்கிறார்.
எனவே இந்து யார் என்பதை ஒற்றை வரியில் வரையறுத்துவிட முடியாது. இதைச் செய்பவன்தான் இந்து, இதைச் செய்யாததால் இவன் இந்து அல்ல எனச் சொல்லிவிட முடியாது. சுருக்கமாகச் சொன்னால் இந்துமதம் ஒரு பன்முகத்தன்மைக்கு இடமளிக்கிறது. ஒருவன் தான் தீவிரமாக வழிபடும் கடவுள் உருவத்திற்கு, வழிபடும் முறைக்கு மாற்றாக வேறு ஒன்றை வழிபடுவனாக இருந்தால் அவனை நிராகரிக்க வேண்டியதில்லை என்ற அணுகுமுறையை இந்து மதம் கொண்டிருக்கிறது..
ஆனால் இந்துத்வம் என்ற கருத்தியலை தனது அடிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிற பாஜக இந்து என்பதை ஒரு ஒற்றை அடையாளமாக்க முயல்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்று அது பன்முகத் தன்மையை மறுத்துப் பேசுகிறது. சாராம்சத்தில் இது, காங்கிரஸ் மாநிலங்களிடையேயான வேறுபாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிகரானது. இதன் மூலம் பாஜக ஒரு வாக்கு வங்கி அரசியலைக் கட்டமைக்கப் முயற்சிக்கிறது.
எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பையும் சகோதரத்துவத்தையும்தான் போதிக்கின்றன. ஆனால் மதம், அரசியல் அதிகாரம் பெற முயலும் போது அங்கு ஒரு வெறித்தனம் பிறந்துவிடுகிறது.. அன்பே சிவம் என்று சொல்லும் இந்துக்கள்தான் சமணர்களைக் கழுவேற்றினார்கள்; சிறு புழு பூச்சிக்குக்கூட துன்பம் ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதும் சமணம் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் எறிந்தார்கள். சகோதரத்துவம் பேசும் இஸ்லாமின் தீவிரவாதிகள் பாஹியான் புத்தர் சிலையைப் பெயர்த்தெறிந்தார்கள். பெளத்தர்கள் இலங்கையை ரத்தக் காடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலுவைப் போர்களும், யூத அரேபியரிடையான மோதல்களும் வரலாற்றில் பதிந்து கிடக்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது மதம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற வேட்கை. பாஜக அது போன்ற ஒரு வேட்கையைக் கொண்டிருக்கிறது
இந்து என்ற ஒற்றை அடையாளத்தை அது வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்து மதத்தின் இன்னொரு அம்சமான ஜாதிப் பிரிவுகள், அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள், இந்திய சமூகத்தில் வேரோடிக்கிடக்கிறது. அதன் நீட்சியாக இன்று அரசியலிலும் வாக்கு வங்கிகள் ஜாதி ரீதியாகப் பிரிந்து கிடக்கின்றன.
நீ இந்து என்று சுட்டிக்காட்ட[ப்படும் போது அதை உணர்ச்சி பூர்வமாக ஏற்கும் ஒருவன் அதை மறுத்து இல்லை நான் நாடார், நான் தலித், நான் பிராமணன் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.ஏனெனில் ஜாதிகள் என்பவை இந்து மதத்தின் உள்ளே அடங்கிய ஒன்று (sun-culture) என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள்.
ஒருவகையில் இது இந்தியன் என்ற (pan nationalist) அடையாளத்தின் உள்ளடங்கிய ஒரு அடையாளம் தமிழன் என காங்கிரஸ் வலியுறுத்துவதைப் போன்றது.
இந்து என்ற ஒற்றை அடையாளத்தைப் பயன்படுத்துவதன்.மூலம் அரசியல் ரீதியாகப் பலனடைந்திருப்பதால் அதை மேலும் பாஜக தீவீரப்படுத்துகிறது.
1984ல் பாஜக நாடாளுமன்றத்தில் இரண்டே இடங்களைப் பெற்றிருந்தது. ராமர் கோயில் பிரசினையை அது கையில் எடுத்துக் கொண்ட பிறகு 1998ல் ஆட்சியமைக்கும் அளவிற்கு வளர்ந்தது. அதே போல 2002ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்தேறிய வன்முறைகள் 2007ல் அது ஆட்சியில் தொடர உதவின.
இந்த அனுபவத்தின் காரணமாக மத உணர்வுகள் கூர்மையாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே (Charged) மக்களை வைத்திருக்க பாஜக முற்படுகிறது. இது இந்தியாவிற்கு நல்லதல்ல என நான் கருதுகிறேன். இந்தியாவின் பன்முகத் தன்மை சீர்கெடுமானால் இந்தியா சமூகம் அமைதி கெடும், வன்முறை கிளம்பும். குறிப்பாக கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு இவற்றில் ஒரு விரைந்து இந்தியா முன்னேற வேண்டிய ஒரு காலகட்டத்தில் இது போன்று நாட்டை உணர்ச்சி வெறியேற்றிப் பிளவு படுத்துவது என்பது பெருந்தீங்காக முடியும்.
பாஜக இன்னொரு ஏமாற்று வேலையிலும் முனைந்திருக்கிறது.அது இந்தத் தேர்தலில் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி எடுப்பது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது என்பவற்றையும் பேசுகிறது. இவற்றையெல்லாம் பாஜகவின் தனி ஆட்சி அமைந்தால் மட்டுமே செய்ய இயலும்.அது பாஜகவிற்கும் தெரியும்.1998லும், 1999லும் அது ஆட்சியில் அமரும் முன்னர் இந்த மூன்றையும் பற்றிப் பேசியது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் இந்த விஷயங்களில் அதனால் ஏதும் செய்ய இயலவில்லை. அப்போது அது , இது எங்களது தனிப்பட்ட ஆட்சியல்ல, தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி, எனவே கூட்டணிக் கட்சிகளின் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என அது விளக்கமளித்தது. இந்தத் தேர்தலிலும் அதன் தலைவர்கள் பாஜக தனித்து ஆட்சிக்கு வராது, எங்கள் கூட்டணி வேண்டுமானால் ஆட்சி அமைக்கலாம் எனப் பேசி வருகிறார்கள். கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்றால் அவர்கள் இந்த மூன்று விஷயங்களையும் நிறைவேற்றுவார்கள்? முடியாது எனத் தெரிந்தும் அவர்கள் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் நான் முன் சொன்னது போல இந்து என்ற ஒற்றை அடையாளத்தை முன்நிறுத்தி, வாக்களர்களை ஒரு உணர்ச்சி பூர்வமான நிலையில் வைத்திருப்பதுதான்.
பாஜக முக்கியமான பிரசினை என இந்தத் தேர்தலில் முன்னிறுத்துவது 'பயங்கரவாதம்'. மும்பையில் நவம்பரில் நடந்த சம்பவங்களை அது சுட்டிக் காட்டி, காங்கிரஸ் அரசிடம் பயங்கரவாதத்தை அடக்க வலிமையான சட்டமோ, கொள்கைகளோ, திட்டமோ இல்லை என வாதிடுகிறது. ஆனால் பாஜக ஆட்சியில் இருந்த போது அதனிடம் இது குறித்து எந்த விதமான அணுகுமுறை இருந்தது. காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில், அன்று பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் தீவீரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்து தன்னுடன் அழைத்துச் சென்று ஒப்படைக்கவில்லையா? நாடாளுமன்றத்தின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் பாஜக ஆட்சியில்தான் நடந்தது.
பயங்கரவாதத்தைக் கையாளும் விஷயத்தில் பாஜக காங்கிரஸ் இரண்டுமே இரட்டை வேஷம் போடுகின்றன என்பது என் கருத்து. நாடாளுமன்ற சம்பவத்தில் குற்றவாசியாக நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்ட அப்சல் குரு மீதான தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அது தொடர்பான கோப்பு தில்லியின் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீக்ஷீத் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் வரும் வாசல் எனக் கருதப்படும் பங்கேற்புப் பத்திரங்கள் (Participatory Notes) என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் ப.சிதம்பரம்.
இரண்டு கட்சிகளுமே பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் எது என அறிந்து கொள்ளவோ அதில் அவர்கள் இழைத்த தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளவோ தயாராக இல்லை. நாட்டின்/சமூகத்தின் பன்முகத் தன்மை அங்கீகரிக்க மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறக்கிறது. அதை அதிகாரத்தை அடக்குமுறையைக் கொண்டு அடக்கிவிட முடியும் என நினைப்பது புரையோடிப் போன புண்ணை புனுகு பூசி குணப்படுத்த முனைவது போன்றது.
பாஜக அதிகாரம் பெறுவது என்பது காங்கிரஸ் அதிகாரம் பெறுவதற்கு மாற்றாக ஆகாது என்பது என் கருத்து. பன்முகத் தன்மையை மறுப்பதிலும் மற்ற பல பிரசினைகளைக் கையாளுவதிலும் இரண்டும் ஒரே பார்வையைக் கொண்டிருக்கின்றன, அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கலாம்.
கும்பகோணம் டிகிரி காபிக்கும், ப்ரூ இன்ஸ்டண்ட் காபிக்கும் சுவை வேறாக இருக்கலாம். ஆனால் இரண்டின் உள்ளடக்கமும் ஒன்றே. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
.

Monday, May 04, 2009

யாருக்கு வாக்களிப்பது-2

யாருக்கு வாக்களிப்பது?-2

இந்தியாவிலுள்ள கட்சிகளிலே மிகப் பழமையான கட்சி காங்கிரஸ். சுதந்திரத்திற்குப் பின் அது தனது தலைமையை மையப்படுத்தியே தேர்தல்களை சந்தித்து வருகிறது. தலைமை எந்தளவிற்கு ஜனநாயகத்தில், குறிப்பாக உட்கட்சி ஜனநாயகத்தில் அது நம்பிக்கை கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு மாத்திரமே அது கட்சிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நேருவின் காலத்தில், சுதந்திரப் போராட்டத்தின் போது பல மாநிலங்களில் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் தலைவராகத் தொடர்ந்தார்கள்.அவருக்குப் பின தலைமைப் போட்டியின் காரணமாக இந்திரா கட்சியைப் பிளந்து அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.தனது தலைமைக்குப் போட்டி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக,மாநிலங்களில் விசுவாசிகளுக்கும், ஆமாம் சாமிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப் படுத்தினார்.அப்போதிருந்து இந்தியாவின் ஆதார பலமான பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து காங்கிரஸ் மெல்ல மெல்ல நழுவி, ஒரு குடும்பத்தின் கையில் சிக்கிய நிறுவனமாக அது மாறத் தொடங்கியது.நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஒன்று மட்டுமே கட்சியை வழி நடத்துவதற்கான தகுதியாகி விட்டது.

கூட்டாட்சியின் எதிரி

ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இந்தியா என்பதே மாநிலங்களின் தொகுப்பு என்பதுதான். பொதுவான அம்சங்கள் கொண்ட ஒரு நிலப்பரப்பு , நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்ட நாடு அல்ல இந்தியா. மாறாக பல்வேறு பிரதேசங்கள், தங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு அந்நியனை அதிகாரத்தில் இருந்து அகற்றப் போராடி,அதன் தொடர்ச்சியாக ஒரு பொது அடையாளத்தை ஏற்றுக் கொண்டதால் உருவானதுதான் இந்தியா.

சுருக்கமாகச் சொன்னால்,பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழி, கலாசாரம், தேவைகள் அரசியல் வரலாறு கொண்ட மக்களின் ஆதரவைப் பெறாமல் எந்த ஒருவரும் தில்லியில் ஆட்சி அமைக்க, அதிகாரம் பெற இயலாது. மக்களிடம் செல்வாக்கு இல்லாமல், தில்லியால் நியமிக்கப்பட்ட தலைவர்களால் ஆட்சியமைக்கும் அளவிற்கு வெற்றி தேடித் தர இயலாமல் போனதால் 1991லிருந்து மாநிலக் கட்சிகளின் துணையோடுதான் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று வந்திருக்கிறது.இதற்காக காங்கிரஸ் கட்சி அந்த சிறு கட்சிகளுக்கு நன்றியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அதற்கு மாறாக கூட்டணி என்றே பேச்சே கிடையாது, என 1998 செப்டம்பரில் பச்மார்ஹி(மத்திய பிரதேசம்)யில் கூடிய தனது அகில இந்தியக் கூட்டத்தில் தீர்மானம் போட்டது. பின்னர் 2004 தேர்தலில் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிய வந்த நிலையில், 2003 ஜூலையில் சிம்லாக் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தைத் தூக்கிக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை அமைத்தது.அந்த ஆட்சி முடிந்து அடுத்த இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டிய நேரம் வந்தபோது, மீண்டும் தேசிய அளவில் யாரோடும் கூட்டணி கிடையாது என அறிவித்தது. மன்மோகன் சிங், இன்னும் ஒருபடி மேலே போய்,மாநிலக் கட்சிகள், பயங்கரவாதம், மதவாதம், நக்சலிசம் இவற்றிற்கு இணையானது என்ற ரீதியில் பேசினார்.

சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ், Fedaralism என்ற கூட்டாச்சிக்கு எதிரான நிலையைக் கொண்டிருக்கிறது.வேறு வழியில்லாமல் மாநிலக் கட்சிகளை வேண்டா வெறுப்பாக சகித்துக் கொண்டிருக்கிறது.

மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமை,உட்கட்சி ஜனநாயகமற்ற, குடும்ப வாரிசுகளின் கையில் ஒப்படைக்கப்பட்ட Monolithic கட்சியின் ஆட்சி என்பது இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கு ஏற்றதல்ல.காங்கிரஸ் இந்தப் பண்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்வரை அது நிராகரிக்கப்பட வேண்டும்.

பொம்மை ஆட்சி
2004 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் இன்னொரு வெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. அதுதான் பொம்மை ஆட்சி.(Rule by Proxy)மக்கள் செல்வாக்குக் கொண்ட தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு தனது ஆமாம் சாமிகளைக் கட்சியில் முன்னிறுத்திய இந்திராவை விட சோனியா ஒரு படி மேலே போய் ஆமாம் சாமியை பிரதமராக்குகிற கலாசாரத்தை ஆரம்பித்து வைக்கிறார்.இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தக் கலாசாரத்தின் விளைவு இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும். யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.யார் மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப் பட்டவரோ அவர் வசம்தான் அதிகாரம் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் உண்மையான அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற நிலை நாளடைவில் எதேச்சதிகாரத்திற்கு இட்டுச் சென்றுவிடும்.

இந்தக் காரணத்திற்காகவும் நான் காங்கிரசை நிராகரிக்கிறேன்

கூட்டணிக் கட்சிகள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று காங்கிரசின் கூட்டணியில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் அங்கம் வகிக்கின்றன.

திமுக

அடிப்படையில் காங்கிரஸ் திமுக இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளைக் கொண்டவை. காங்கிரஸ் அதிகாரம் மையப்படுத்தப்பட வேண்டும், மாநிலக் கட்சிகள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை என்ற கருத்தைக் கொண்டிருக்கும் கட்சி. திமுக அதிகாரப் பரவல், கூட்டாட்சித் தத்துவம் இவற்றை வலியுறுத்திப் பேசி வந்த கட்சி. ஆனால் இரண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, தக்க வைத்துக் கொள்வது என்ற புள்ளியில் ஒருங்கிணைகின்றன.

1967ல்ஆட்சிக்கு வரும் முன்னர் காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, ஆட்சிக்கு வந்த பின், 1971ல் காங்கிரசோடு கூட்டணி அமைத்துக் கொண்டது. காங்கிரசிற்கு எதிரான கூட்டணி அண்ணாவாலும், காங்கிரசுடனான கூட்டணி கருணாநிதியாலும் அமைக்கப்பட்டது. திமுக பிளவு கண்ட பிறகு, திமுக அல்லது அதிமுக இரண்டும் காங்கிரசோடு கூட்டணி கண்டே தேர்தலை சந்தித்து வந்திருக்கின்றன.

பதிவர்கள் சிலர் கருதுவது போல,(காண்க தமிழ் சசி} எப்போதும் தமிழக அரசியல் என்பது இந்திய தேசியத்திற்கும் திராவிட அரசியலுக்குமான இடையேயான 'போராட்டமாக' இருந்ததில்லை. அது வாக்குகளைத் திரட்டுவதற்கான தேர்தல் அரசியலாகவே இருந்து வந்திருக்கிறது (Competitive Electoral Politics) சித்தாந்த அடிப்படையிலான அரசியல் என்பதிலிருந்து, தேர்தல் கணக்கு சார்ந்த அரசியலாக தமிழக அரசியலை மாற்றியதில் திராவிடக்கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவிற்கு பெரும் பங்குண்டு. இது பாஜகவோடு திமுக உடன்பாடு கண்டபோது அப்பட்டமாகப் பகிரங்கப்பட்டது. அப்படி பகிரங்கப்பட்டபின் திமுக இது குறித்த நாணத்தையோ, கூச்சத்தையோ, குற்ற உணர்வையோ இழந்து விட்டது.

அதன் அடையாளம்தான் சோனியா தலைமையில் அது ஏற்றுக் கொண்டிருக்கும் கூட்டணி. ஜெயின் கமிஷன் அறிக்கை தொடர்பாக தன் அமைச்சர்களை விலக்கிக் கொண்ட திமுக இன்று சோனியா காந்தியின் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பதற்கு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதொன்றே காரணம்.

அந்த அதிகாரம் கூட குடும்ப வாரிசுகளின் நலனின் பொருட்டு என்ற இலக்கை நோக்கி அந்தக் கட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வாரிசுகளின்வசம் கட்சி அதிகாரம், ஆட்சி அதிகாரம் இரண்டையும் ஒப்படைப்பதில் காங்கிரஸ், திமுக என்ற இரண்டு கட்சிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன.

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், அதிகாரத்தை அனுபவிக்கலாம் (Power without accountability) என்ற காங்கிரஸ் அணுகுமுறையின் தமிழகப் பதிப்பாக அழகிரி விளங்குகிறார்.

இலங்கைப் பிரசினையில் திமுக நடந்து கொண்ட விதம் அதன் சுயநல நோக்குகளை அம்பலப்படுத்தி விட்டன.இத்தனை வயதுக்கு மேல், சமரசம் செய்து கொண்டாவது, ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என எண்ணுவதற்குக் காரணம், அந்த அதிகாரம் தன் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்குத் தேவை என்பதற்காகதானிருக்க வேண்டும். இந்த முன்னுதாரணமும் தமிழகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்காது.

விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலைச் சிறுத்தைகளிடம் வாரிசு அரசியல் இல்லை. ஆனால் அவர்களின் சமரசம் திமுகவின் சமரசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.இந்த சமரசத்தின் மூலம் அது அடையப் போகும் பலன் ஆட்சி அல்ல. அதிக பட்சம் நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்கள்..இன்னும் சொல்லப்போனால் கட்சி தோன்றி 25 ஆண்டுகளுக்குப் பின் திமுக சென்றடைந்த இடத்தை விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் களத்திற்கு வந்த சில ஆண்டுகளிலேயே சென்றடைந்து விட்டது அதன் உள்ளீடற்ற பலவீனத்தைப் பகிரங்கப்படுத்துகிறது.

கட்சி அறிவித்த போராட்டங்களுக்காகச் சிறை சென்ற தொண்டர்கள் (சிலர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை சந்தித்தவர்கள்)விடுதலைச் சிறுத்தைகளில் உண்டு. ஆனால் விழுப்புரம் தொகுதியின் வேட்பாளராக கட்சி முதலில் தேர்ந்தெடுத்தது, கட்சி மாநாடுகளில் கூடக் கலந்து கொள்ளாத ஒரு கோடீஸ்வரரை. அவர் வாதத் திறமையோ, ஆங்கில அறிவோ இல்லாதவர். அவரின் ஒரே தகுதி அவர் ரியல் எஸ்டேட் வணிகம் மூலம் கோடிகளைப் பார்த்தவர் என்பது ஒன்றே. அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதும் அவர் மாற்றப்பட்டார். அப்போதும் அந்த இடம் ஒரு தொண்டனுக்கு அளிக்கப்படவில்லை. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. உதைபடத் தொண்டன்! சுகம் பெற கனவான்கள்!

கட்சி, ஆட்சி என்ற எந்தக் கோணத்தில் பார்த்தாலும் காங்கிரஸ் தலைமை ஏற்றுள்ள அணி நிராகரிக்கப்பட வேண்டியதே.

பாஜக அணி பற்றிய அலசல் அடுத்த பதிவில்

Sunday, May 03, 2009

யாருக்கு வாக்களிப்பது? -1

அகில இந்திய அளவில் அலைகள் ஏதும் இல்லை எனக் கருதப்படும் இந்தத் தேர்தல் நம் முன் சில வாய்ப்புக்களை வைக்கின்றன. அவை:

1.ஆட்சியில் இருக்கும் அரசின் ஆளுகையை (governance) மதிப்பிடுவது
2.இந்தியாவின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்துவது
3,காங்கிரஸ், பாஜக ஆகியவற்றிற்கு மாற்றாக உருவாகி வரும் அரசியல் வெளியை நிலைப்படுத்துவது (To increase and stabilse a political space for a third alternative)

அலை வீசுகிற தேர்தல்களில் இதற்கு வாய்ப்புக்கள் இல்லை.அலை வீசுகிற நேரங்களில் ஒரு பிரசினை மீது மக்கள் உணர்ச்சி பூர்வமாக உந்தப்பட்டு, ஆட்சிக்கு நேர்மறையாக (உ-ம்:1984 நாடாளுமன்றத் தேர்தல், இந்திரா படுகொலை ராஜீவ் ஆதரவு) அல்லது எதிர்மறையாக (2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் வாக்களித விதம்) வாக்களிக்கிறார்கள் என்பதால் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவோ பன்முகத்தன்மையையோ, மாற்று அரசியல் தளங்களை வலுப்படுத்தவோ வாக்குகள் பலனளிப்பதில்லை. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். இந்தக் கருதுகோளின் அடிப்படையிலேயே நான் வாக்களிக்க இருக்கிறேன்.

அதே நேரம் இந்த முறை நாம் நம் முன் இருப்பவற்றில் சிலவற்றை நீக்குவதன் மூலம் மற்றொன்று தேர்வு (Selection by elimination) பெறும் முறையைத்தான் கடைப்பிடிக்க முடியும்.

எனவே நாம் முதலில் தீர்மானிக்க வேண்டியது யாருக்கு வாக்களிப்பது என்பதை அல்ல. யாருக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதைத்தான்.

நம் முன் காங்கிரஸ் தலைமையேற்கும் ஒரு அணி, பாஜக தலைமையேற்ற்கும் ஒரு அணி, கூட்டுத் தலைமை கொண்ட இன்னொரு அணி ஆகியவை உள்ளன.லாலு பிரசாத்தின் நான்காவது அணிக்கு தமிழகம் பங்களிக்கவில்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் தமிழகத்தில் களமிறங்கியிருக்கிறது. தமிழகத்தில் விஜயகாந்த்தின் அரசியல் கட்சி,யும், வேறு சில கட்சிகளும் வாக்குக் கோருகின்றன. இவை தவிர சுயேட்சைகள் சிலரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஆளும் கட்சியாகத் தேர்தலை சந்திப்பதால் நான் முதலில் காங்கிரஸ் அணியை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். அதனுடைய ஆட்சி, அந்தக் கட்சி, அதன் அணியில் உள்ள கட்சிகள் என்று மூன்று அம்சங்களாகப் பகுத்துக் கொண்டு பரிசீலிக்க விரும்புகிறேன்

ஆட்சி:

சகிக்கமுடியாத சமரசங்கள்

கடந்த ஐந்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சி நிலையானதாக இருந்தது என்பது ஒன்றுதான் அதன் பிளஸ் பாயிண்ட். ஆனால் இந்த நிலைத்த தன்மையைப் பெற அது பலவிதமான சமரசங்களையும் மேற்கொண்டது என்பதும் உண்மை. ஆட்சியைக் காப்பாற்ற அது கூட்டணிக் கட்சிகளுடன் மேற்கொண்ட சமரசங்களை விட அது ஆளுகையில் (governance) செய்து கொண்ட சமரசங்கள் கவலை தருபவை. அணுசக்தி ஒப்பந்தம் ஓர் உதாரணம்.

ஹைட் சட்டத்தின் ஷரத்துக்கள் இந்தியா மீது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றன. அவை இந்தியாவை அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் நிலையில் (accountable to US) வைக்கின்றன. சில இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சுயேச்சையான முடிவுகள் எடுக்க இயலாத நிலையை ஏற்படுத்துகின்றன.அதைவிட மோசம் அமெரிக்கா எடுக்கும் நிலையைக் கட்டாயமாக ஆதரித்தாக வேண்டும் என்கின்றன அப்படி இந்தியா ஆதரிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது ஹைட் சட்டம்.(India is working with and supporting the United States and international efforts to prevent the spread of enrichment and reprocessing technology to any state that does not already possess full-scale, functioning enrichment or reprocessing plants Section 104-b-5, Henry J. Hyde United States-India Peaceful Atomic Energy Cooperation Act of 2006’) இந்தச் சட்டப்பிரிவு வெறுமனே working என்று மட்டும் கூறாமல் supporting எனக் கூறுவதையும் கவனிக்க வேண்டும். எனவே ஈரான், கொரியா போன்ற விஷயங்களில் இனி இந்தியா தனித்து முடிவு எடுக்க முடியாது

இதே ஹைட் சட்டம் இந்தியா இனி அணு ஆயுதங்கள் செய்வதற்கும் தடை விதிக்கிறது. அப்படி செய்தால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும் சலுகைகளும் ரத்து செய்யப்படும் (“shall cease to be effective if the President determines that India has detonated a nuclear explosive device...” Sec.106) எனத் திட்டவட்டமாகத் தெளிவாகக் கூறுகிறது சட்டம்.

இந்தியா அணு ஆயுதங்கள் செய்யக் கூடாது என்பதுதான் என் நிலையும். ஆனால் அந்த முடிவை நாம் சுயேச்சையாக எடுக்க வேண்டும். இன்னொருவரின் நிர்பந்தத்தின் காரணமாக அந்த முடிவு எடுக்கப்படக்கூடாது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கு விரிவாக விவாதிக்க இடமில்லை. ஆனால் ஒரு உதாரணம். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் ஊடகங்களுக்குச் சில சுய நெறிகள் வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அதுவே அரசுத் தணிக்கை மூலம் வற்புறுத்தப்படுமானல் அதை எதிர்ப்பேன்.

இது இப்படியிருக்க இந்தியா அணு ஆயுத சோதனை செய்ய எந்தத் தடையுமில்லை என பிரதமர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார். ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என பிராணாப் முகர்ஜி சொல்கிறார். ஆனால் காண்டலீசா ரைசின் கருத்து அதற்கு நேர்மாறாக இருந்தது.( It will have to be completely consistent with the obligations of the Hyde Act… ) சரி, ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்ற வைத்துக் கொள்வோம். ஆனால் அது அமெரிக்க ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும். அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில் அவர் அதற்குக் கட்டுப்பட்டவர். அமெரிக்க அரசின் அதிபர் என்ற வகையிலும் கட்டுப்பட்டவர். அப்படிக் கட்டுப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்தியா இன்னென்ன செய்ததா என அறிக்கை அளிக்க வேண்டும் என அந்தச் சட்டம் சிலவற்றை வகுத்திருக்கிறது.அதன் காரணமாக அது இந்தியாவை மறைமுகமாக கட்டுப்படுத்துகிறது.

மூடி மறைத்தல்

இதில் சினமூட்டும் இன்னொரு அம்சம் என்னவென்றால் அரசு இந்த ஒப்பந்தம் பற்றி வெளிப்படையாக இல்லை. இத்தனை கடுமையான ஷரத்துக்கள் கொண்ட ஒப்பந்தம் குறித்து, அது கையெழுத்திடப்படும் முன் பெரிய அளவில் விவாதிக்கப்படவோ, மக்கள் கருத்தறியவோ முயற்சிகள் மேற்கொள்ளவில்லை

இதே போன்ற வெளிப்படையான அணுகுமுறையை அது இலங்கை விஷயத்திலும் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காண்கிறோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலை என்றால் அதை வெளிப்படையாகச் சொல்ல அதற்குத் தயக்கம் ஏன்? ஆனால் அது அதற்கு மாறாக ஒருபுறம் இலங்கை அரசுக்கு உதவிக் கொண்டு, மறுபுறம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற இலங்கை அரசோடு சமாதானப் பேச்சுகள் நடத்துவது போல பாவனை செய்து கொண்டிருந்தது.

இந்தியாவின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவதை அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக் கொண்ட இந்தியா, இலங்கையின் இறையாண்மையில் தான் தலையிட முடியாது எனச் சாக்குச் சொல்வது ஏமாற்று வேலை. இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது என்றால் அதை ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கொடுத்திருக்கலாம், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தாக தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்க முடியுமே?

சேதுக் கால்வாய் திட்டத்திலும் இது போன்ற ஒரு இரட்டை நிலையைப் பார்க்க முடிந்தது. அது உச்ச நீதி மன்றத்தில் முதலில் தாக்கல் செய்த பிரமாண[ப்பத்திரத்தில் ஒரு நிலையையும், பின்னர் அதற்கு நேரெதிரான நிலையையும் மேற்கொண்டது.

அடித்தள மக்கள் மீது அக்கறையின்மை

இவற்றையெல்லாம் விட ஐக்கிய முன்னணி அரசின் மன்னிக்க முடியாத மாபெரும் தவறு அது அடித்தள மக்கள் வாழ்வின் மீது அக்கறை காட்டாமல் ஆட்சி நடத்தியது.அநேகமாக அது அந்த மக்களைக் கைவிட்டுவிட்டது. ஒரு உதாரணம்: அமைப்புசாரா தொழில்கள், தொழிலாளர்கள் குறித்து ஆராய அரசு டாக்டர் சென்குப்தா தலைமையில் அமைத்த National Commission on Enterprises in the Unorganised Sector- (NCEUS) 2007ல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அது இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை 83 கோடியே 60 லட்சம் பேர் என்கிறது. 110 கோடி மக்கள் உள்ள ஒரு தேசத்தில் 83 கோடிப் பேருக்கு மேல் இநத நிலையில் வாழ்கிறார்கள் என்றால் அது அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் பலன்கள் அடித்தள மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

வறுமையை ஒழிப்பதற்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்து, நான் தினமணி ஆசிரியராக இருக்கும் போது அவற்றை வற்புறுத்திக் கட்டுரைகள் வெளியிட்டு வந்தேன். (தினமணி ஆகஸ்ட் 2, 1994) தீர்வுகளில் ஒன்று வேலை உத்தரவாத சட்டம், மற்றொன்று விவசாயம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் (தினமணி ஆகஸ்ட் 2 1994). இதற்கு ஆதரவு சேர்க்க, மேதா பட்கர் போன்றவர்களை பேட்டி கண்டு பிரசுரித்து வந்தேன்

இன்று இந்த இரண்டு தீர்வுகளும் 13 ஆண்டுகளுக்குப் பின் ஏதோ ஒரு வடிவில் நிஜமாகி விட்டன. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் இரண்டும் இந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் வந்துவிட்டன. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசு சொதப்புகிறது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய அதிகாரம் வழங்கப்படவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்கள் மசோதாவில் குறைந்த பட்சக் கூலி, ஓய்வூதியம் இவை நிர்ணயிக்கப்படவில்லை

வறுமை என்பதை அரசு புத்தகப் பார்வையிலேயே (academic outlook) அணுகுகிறதோ என எண்ணும் விதமாகவே அது நடந்து கொள்கிறது
அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அரசுக்கு ஏதும் தெரியாதோ என்ற கேள்வி அதன் செயல்பாடுகளைக் காணும் போது எழுகிறது. விவசாயிகளுக்கு அது அறிவித்த கடன் தள்ளுபடி ஒரு உதாரணம். வங்கிகளில் கடன் பெற்றுப் பயிர்த் தொழில் செய்யும் 'விவரமான' விவசாயிகளைவிட, தனியார்களிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திணறும் விவசாயிகள்தான் கை தூக்கிவிடப் பட வேண்டியவர்கள். ஆனால் அரசின் கடன் தள்ளுபடி எந்த விதத்திலும் பயன் தராது என்பதுதான் வருத்தமான விஷயம்

ஜனநாயகத்தில் ஒரு நல்ல அரசின் லட்சணம் என்பது, அதன் சுயாதீனம், (soverignity) வெளிப்படையான அணுகுமுறை (Transperancy) பதில் சொல்லும் கடமை (accountability) ஆகியவையே. இந்த மூன்றிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மிக மோசமாகத் தோற்றுவிட்டது. அத்துடன் அது அடித்தள மக்களைக் கை விட்டுவிட்டது

கட்சி பற்றி அடுத்த பதிவில்

Tuesday, April 28, 2009

இலங்கை : ஒரு மறு சிந்தனை

இலங்கைச் சிக்கலுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு, போர்நிறுத்தம் கோரி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதம் இவற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நமக்கேற்றவாறு சமைத்துக் கொள்ள வேண்டும், இவை தேர்தல்கால நிர்பந்தங்களின் காரணமாக எழுந்தவை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இருக்கலாம். ஆனால் இதற்கு வேறு கோணங்களும் இருக்க முடியும் என நான் கருதுகிறேன். என்னுடைய சொந்த அனுப்வங்கள் அவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

விடுதலைப் புலிகள் தமிழர்கள் அதிகாரம் பெறுவதன் பொருட்டுப் போராடுகிறவர்கள் அல்ல, தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதன் பொருட்டு ஆயுதம் ஏந்தியிருக்கிற அமைப்பு என்கிற எண்ணம் எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் உண்டு. அப்படிக் கருதுவதற்கு விடுதலைப் புலிகளின் கடந்த காலச்செயல்கள் காரணமாக அமைந்தன.அவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் உயிர்வாழ எந்த நியாயமும் இல்லை எனக் கருதுபவர்கள் எனபதை அவர்கள் பலமுறை தங்களது
செயல் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.பன்முகத் தன்மையை, மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கிற அரசியலை அங்கீகரிக்கிற இந்தியாவில் வளர்ந்த எனக்கு அவர்களது இந்தப் போக்கு ஏற்றுக் கொள்ள இயலாததாக இருந்தது./இருக்கிறது

சிவில் உரிமைகளைப் பெறுவதற்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அணுகுமுறைகள் அவர்களது முதிர்ச்சி குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தன. அவர்கள் காந்திய வழி அறப்போராட்டத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் என நான் சொல்ல வரவில்லை. இலங்கை அதிகார அமைப்பிற்கு எதிராக அது பலன் தராது. ஆயுதப் போராட்டம் என்பதோடு, ராஜரீக வழிகள், அறிவுலகின் ஆதரவு, பொதுக்கருத்தை உருவாக்குபவர்களோடு உறவு (Diplomatic avenues, enlisting support of intellectuals and lobbying with opinion makers) மற்ற வழிகளையும் அவர்கள் மேற்கொண்டு இலங்கை அரசுக்கெதிரான ஒரு கருத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் தமிழ் சமூகத்திற்கு அப்பால் அவர்கள் அத்தகைய முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவில்லை. ஆரம்ப நாட்களில் அது போன்ற முயற்சிகளில் அவர்கள் முனைந்ததுண்டு. ஆனால் பின்னர், குறிப்பாக பாலசிங்கம் போன்றவர்கள் மறைவுக்குப் பின், அதை அவர்கள் கை விட்டுவிட்டார்கள். அல்லது அதற்கு அவர்களிடம் ஆட்கள் இல்லை.

இதன் காரணமாக அவர்கள் மீது பயங்கரவதிகள் என்ற முத்திரை விழுந்த போது அதை அவர்களால் அகற்றமுடியவில்லை

அதே நேரம் தமிழ்ச் சமூகத்திற்குள் விடுதலைப் புலிகள் வேறு, அங்குள்ள தமிழ் மக்கள் வேறு என்ற தெளிவு இருக்கத்தான் செய்தது. ஆனால் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கிற அனுதாபத்தை விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆதரவாக அவர்களது ஊடகங்கள் மூலம் கட்டமைத்துக் காட்டுகிற அபாயம், அதை அவர்களது பயங்கரவாதத்திற்கான ஆதரவாக மாற்றிக்காட்டுகிற அபாயம் இருக்கத்தான் செய்தது.

பயங்கரவாதிகள் எனத் தெரிந்தும் அங்கே ஒரு மாற்றுத் தலைமையை, ஒரு மாற்று அரசியலைக் கட்டமைக்க சக்தி அற்றவர்களாக இலங்கைத் தமிழர்கள் இருந்தது சலிப்பைத் தந்தது. இந்திய மக்கள் தங்கள் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் போது அவர்கள் எத்தனை பெரிய தலைவர்களாக இருந்தாலும் தூக்கி எறிகிற தீரத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். எமெர்ஜென்சிக்குப் பின் இந்திரா காந்தி, 1980 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் (பாண்டிச்சேரியையும் சேர்த்து 2 இடங்களில் மட்டுமே வெற்றி) 1991 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி, 2004
நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆகியவை உதாரணங்கள்.

ஆனால் இதனையெல்லாம் விளங்கிக் கொள்ளாமல், இலங்கைத் தமிழர்களில் சிலர், இந்தியத் தமிழர்களை 'விசிலடிச்சான் குஞ்சு'களாகவும், இந்திக்காரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பவர்களாகவும் ஏளனம் செய்து கொண்டிருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.

தாங்கள் நம்பிய தலைமை தங்களை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போர்ச் சூழலில் சிக்க வைத்து விட்டது எனத் தெரிந்தும் அந்தத் தலைமையைத் தூக்கி எறிவது இலங்கைச் சூழலில் நடக்கவில்லை. அதற்கு மக்கள் பயங்கரவாதிகளை நம்பியது காரணமாக இருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு வேறு வழியில்லாதிருந்திருக்க வேண்டும். எப்படியானாலும் 'சரி, அது அவர்கள் தலையெழுத்து' என்ற ஒரு resigned மனோபாவமே தமிழகத்தில் உள்ள பலரிடம் நிலவியது

ஆனால் கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவம் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல், விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்களைக் கொண்டவர்களிடம் கூட அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள்,
பொதுமக்கள் என வேறுபாடில்லாமல், நிராயுதபாணியான மக்கள், குழந்தைகள், சிறுவர்கள் என எல்லோர் மீதும் சகட்டு மேனிக்குக் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல் திடுக்கிடச் செய்தது.நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல் பயங்கரவாதிகள் இருக்கும் சமூகத்தில் collateral damage இருக்கும் என்ற நிலையையும் தாண்டி இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் இருந்தன.

இலங்கையின் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் ராஜபக்க்ஷே சகோதரர்கள், ஜார்ஜ் புஷ்ஷைப் போல, நிக்சனைப் போல போர் வெறியர்கள் (War Mongers) என்பது தெளிவாகத் தொடங்கியது.

இலங்கை அரசின் மூர்க்கத்தனத்தால், மனதில் அரசியல் கேள்விகள் பின் செல்ல, அனுதாபத்தின் காரணமாக எழுந்த ஒரு தார்மீக எழுட்சி, ஏற்கனவே கொண்டிருந்த நிலைகளை மறுபரிசீலனை செய்ய உந்தின.விடுதலைப் புலிகளின் மீதிருக்கும் விமர்சனத்தின் காரணமாக, பொதுமக்கள் படும் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது சரிதானா என்ற கேள்விகள் மனதில் எழுந்தன. விடுதலைப் புலிகள் மீதான விமர்சனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அங்கு உணவுக்கும் மருந்துக்கும் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பின.

இதே போன்ற மாற்றம் அரசியல் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஊடகங்கள் புலி ஆதரவு புலி எதிர்ப்பு என்று அணி பிரிந்து செய்திகளை மிகைப்படுத்தியும், அலட்சியப்படுத்தியும் செய்திகள் வெளியிட்டதன் காரணமாக
உண்மை நிலையைப் புரிந்து கொள்வது சிரமமாகவே இருந்தது. இந்த நிலையில் அரசியல்வாதி அல்லாத, இலங்கைப் பிரசினையில் எந்த நிலையும் எடுத்துக் கொள்ளாத ஸ்ரீரவி சங்கர் போன்ற ஒருவர் அங்கு சென்று நிலைமையை நேரில் பார்த்து வந்து சொல்லும் போது, மாறத் துவங்கியிருக்கும் மனதில் மாற்றம் விரைவு படுத்தப்படுகிறது

இந்தச் சூழ்நிலையில் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இந்தனைக் கொடூரத் தாக்குதலுக்குப் பின் தமிழ் மக்கள் அங்கு சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்தல் சாத்தியமா? ராஜபக்க்ஷே நடத்திய போரின் ரணங்கள், இன்னும் ஒரு
தலைமுறைக்கு, முப்பது நாற்பது வருடங்களுக்கு, தமிழ் மக்கள் மனதில் இருக்கும். அதை ஆற்றக் கூடிய விருப்பம் அந்த அரசுக்கு இருக்கும் எனக் கருத இடமில்லை. அங்கு நிலவும் அரசியலும் அதற்கு இடமளிக்காது.

இந்தச் சூழ்நிலையில் இனி அவர்களது எதிர்காலத்திற்குத் தனி ஈழம்தான் தீர்வாக அமையும்

சரி, தனி ஈழம் அமைவது சாத்தியமா?

இந்திய ஆட்சியாளர்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு வாய்ப்புண்டு. விடுதலைப் புலிகள் செய்யத் தவறிய, ராஜரீக ரீதியில் ஆதரவு திரட்டுவது, அறிவுலகின் மனசாட்சியை உசுப்புவது, உலகில் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவது ஆகிய வேலைகளை இந்திய ஆட்சியாளர்களால் செய்ய முடியும். நமீபியா இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்த போது அதைத் தனிமைப்படுத்துகிற வேலையை இந்தியா நன்றாகவே செய்தது. மண்டேலாவிற்கு ஆதரவாக தென்னாப்பிரிக்காவோடும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுடனும் அது உறவை விலக்கி வைத்திருந்ததுண்டு. ஆனால் அவற்றை செய்வதற்கு அன்று ஆட்சியில் இருந்தவர்களிடம் ஒரு அரசியல் உறுதி இருந்தது.

1983ல் இந்திராகாந்தி மாநிலங்களவையில் இலங்கை பிரசினை ஒரு இன அழிப்பு -Genocide என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்- என்று முழங்கி இலங்கைத் தமிழர் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க முன்வந்ததில் எம்.ஜி.ஆருக்குக் கணிசமான பங்கு உண்டு. அன்று இந்திராவிடம் எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்னதைப் போல சோனியாவிடம் கருணாநிதி எடுத்துச் சொல்லியிருந்தால் இந்தியாவின் அணுகுமுறை வேறுமாதிரி இருந்திருக்கலாம். சோனியாவிற்கு இலங்கைத் தமிழர்களால் ஒரு தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டிருந்ததால் அதைப்பற்றி அவரிடம் பேசுவது rubbing on the wrong side ஆகிவிடக் கூடும் என அவர் தயங்கியிருக்கக் கூடும். தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி அதிகாரம் காங்கிரசின் கையில் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

சரி இதை ஜெயலலிதாவால் செய்ய முடியுமா?

முடியலாம்.நான் கவனித்த வரையில் ஜெயலலிதாவின் +பாயிண்டுகளில் ஒன்று அவரது மன உறுதி. பிடிவாதம் என்று அவரது விமர்சகர்களால் வர்ணிக்கப்படும் மன உறுதி. பொதுவாக இந்திய அரசியலில் தலைவர்கள், ஒரு பெரும் வெற்றிக்குப் பிறகு, வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையால் உந்தப்படுவார்கள். அப்போது அவுட் ஆஃப் பாக்ஸ் ஐடியாக்களை நடைமுறைப்படுத்த முனைவார்கள்.இந்திராகாந்தி வங்கிகளை தேசியமயமாக்கியது, ராஜமானியத்தை ஒழித்தது, எம்.ஜி.ஆர் விமர்சனங்களுக்கிடையில் சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ராஜீவ் அசாம், பஞ்சாப் பிரசினைகளில் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொண்டது இப்படி சில உதாரணங்கள் உண்டு. ஜெயலலிதாவிடமும் இந்தக் குணம் உண்டு. 67 சதவீத இட ஒதுக்கீடூ, பொருளாதார சீர்திருததங்கள் இவற்றில் இதன் சாயலைக் காணலாம்.


அவரால் தனி ஈழம் விஷயத்தில் எந்த அளவிற்கு செய்ய முடியும் என்பது மத்தியில் எத்தகைய ஆட்சி அமைகிறது என்பதைப் பொறுத்தது. அது எந்தளவிற்கு வெற்றி பெறும் என்பது விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக இலங்கையில் எத்தகைய தலைமை உருவாகிறது என்பதைப் பொறுத்தது. என்றாலும் அவர் முயற்சிக்கக் கூடும் என்றுதான் தோன்றுகிறது.

Thursday, April 02, 2009

இதுவோ உங்கள் நீதி?

அவர் வழக்கறிஞர்தானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.கறுப்புக் கோட் அணிந்திருந்தார். என்றாலும் பொது மருத்துவமனைகளில் வெள்ளைக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் டாக்டர்கள் இல்லை, நீதிமன்ற வளாகத்தில் கறுப்புக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் வக்கீல்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

அவர் அணிந்திருந்த கோட்டில் பழமையும் அவர் உடையில் வறுமையும் தங்கியிருந்தன. கோட் அணிந்திருந்த போதும் காலில் ஷீ அணியவில்லை. வெறும் செருப்புப் போட்டிருந்தார். காலையில் என்ன அவசரமோ, முகச் சவரம் செய்து கொண்டிருக்கவில்லை. கையில் கேஸ் கட்டுகளோ, புத்தகங்களோ இல்லை. ஒருகையில் சிறு பெட்டி ஒன்றும் (அதனுள் அவரது அங்கி இருந்திருக்க வேண்டும்) மறுகையில் பச்சை பிளாஸ்டிக் உறையிட்ட டைரி ஒன்றும் வைத்திருந்தார்.

என் பத்திரிகைத் தொழில் மூலமாகவும், அரசியல் அறிமுகங்கள் வழியேயும் நான் அறிந்திருந்த வழக்கறிஞர்கள் போல் அவரில்லை.அந்த வழக்கறிஞர்கள் எல்லாம் செல்வந்தர்கள் அல்ல. னால் அவர்கள் மிடில் கிளாஸ் புரபஷனல்ஸ் என்பது அவர்கள் பயன்படுத்தும் மொழியில், அவர்களது விழுமியங்களில், அவர்களது ஞானச் செருக்கில், உடல் மொழியில் ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்பட்டுவிடும்.

ஆனால் இவர் வித்தியாசமாக இருந்தார். நண்பர் ஒருவருக்குப் பிணை கொடுக்க நான் சைதாப்பேட்டை நீதி மன்றத்திற்குச் சென்றிருந்தேன். வளாகத்திற்குள் நுழைந்து கட்டிடத்திற்குள் அடியெடுத்து வைக்கும் முன்னரே, எனக்குச் சற்றும் அறிமுகமில்லாத இவர் என்னருகில் வந்து குட்மார்னிங் சார் என்றார். அது சகாக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் முகமன் அல்ல. தெரிந்தவர்கள், நண்பர்கள் சொல்கிற வணக்கமும் அல்ல. உதவி கேட்க வருபவர்கள், பேச்சை ஆரம்பிக்கும் முன் சொல்கிற குழைவான குட்மார்னிங்.

நான் பதிலுக்கு வணக்கம் சொன்னேன். “ஜே கேஸா சார்?” என்றார். நான் புரியாமல் விழித்தேன். டைரி உறைக்குள் செருகி வைத்திருந்த விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது தோற்றம் அவர் வழக்கறிஞர் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கவில்லை.

‘பிணைக் கையெழுத்துப் போடும் போது சில ஆவணங்கள் கேட்பார்கள் அவற்றை எடுத்து வாருங்கள், ஆனால் ஜாக்கிரதை, நிறையத் தரகர்கள் உலாவுவார்கள், நான் வந்தால் மட்டுமே அவற்றை வெளியில் எடுத்தால் போதும்’ என என் நண்பரின் வழக்கறிஞர் சொல்லியிருந்தார். அதனால் நான் என்னை நெருங்கும் எனக்கு அறிமுகம் இல்லாத எவரையும், காதுகளை விரைத்துக் கொண்டு ஓடத் தயார் நிலையில் நிற்கும் மானைப் போல, உஷார் நிலையிலேயே எதிர் கொண்டேன்.

நான் போக வேண்டிய நீதி மன்றம் மாடியில் இருந்தது. நான் அவரது முகவரி அட்டையை ஆராய்ந்து கொண்டே படியேறிய போது கூடவே அவரும் என்னைத் தொடர்ந்து வந்தார்.

மாடியில் நான் என் நண்பரின் வழக்கறிஞருக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நீதி மன்றத்தில் உட்கார பெஞ்சுகள் காலியாக இல்லை. வெளித் தாழ்வாரத்தில் இருந்த பெரிய ஜன்னல் கட்டைகளில் காக்கை எச்சமும் வெற்றிலைக் காவியும் சிந்திக் கிடந்தன. வேறு வழியில்லாமல் சுவரோரமாக நின்று வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் புதிய நண்பர் என்னிடம் நான் எதற்காக நீதி மன்றம் வந்திருக்கிறேன் என அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். நான் வாயைத் திறக்கவில்லை.

ஆனால் என்னுள் ஒரு பதற்றம் பரவிக் கொண்டிருந்தது.. கோர்ட் துவங்கி விடுமோ, முதலில் என் நண்பரின் மனுவை எடுத்துக் கொண்டு விடுவார்களோ, வக்கீலை இன்னமும் காணோமே, அப்படி எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது, நானே நீதிபதியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிணை கொடுக்க வந்திருக்கிறேன் எனச் சொல்லி உதவி கேட்பதா, நீதிமன்றங்களில் அழைக்காமலேயே ஒருவர் முன்வந்து அப்படிக் கேட்க முடியுமா என எனக்குள் நிறையக் கேள்விகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன.

ஒரு வழியாக வக்கீல் வந்தார். “ஸாரி சார்” என்று என்னிடம் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அருகில் இருந்த கறுப்புக் கோட்டைப் பார்த்தார். “ என்னய்யா. கேஸ் பிடிக்க வந்தியா?.சார் யாரு தெரியுமில்ல?” என்றார். எனக்குச் சங்கடமாக இருந்தது. ஏனெனில் இவ்வளவு நேரம் அந்தக் கறுப்புக் கோட்டு நபர் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார். நான் மெளனமாகவோ, மழுப்பலாகவோ சமாளித்துக் கொண்டிருந்தேன். இப்போது வக்கீல் அதை உலகுக்கே அறிவிப்பது போல் உரத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

“கேஸ் ஒண்ணும் இல்லைப்பா. சார் என் கிளையண்ட்டிற்கு ஜாமீன் கொடுக்க வந்திருக்கார்:” என்றார். கருப்புக் கோட்டு அணிந்தவர் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. என்னிடம் விடை பெற்றுக் கொள்வது போல கை குவித்தார். பின் சற்றும் தயக்கமில்லாமல் “என் கார்டு” என்று அவரது விசிட்டிங் கார்டைக் கேட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

என் வக்கீல் அவரை சற்று கேலியாகப் பார்த்துச் சிரித்தார். “என்ன, அந்தக் கார்டு 10 பைசா இருக்குமா, அதைக் கூடக் கேட்டு வாங்கிட்டுப் போறான் பாரு.அல்பம். அதான் கடவுள் அவனை அப்படி வைச்சிருக்காரு” என்றார்.

“அவர் வக்கீலா சார்?” என்று நான் என் சந்தேகத்தைக் கேட்டேன்

“ஆமாம் சார் ஆமாம். வக்கீல். ஆனா கேஸ் இல்லாத வக்கீல்.” என் நண்பரின் வழக்கறிஞர் முகத்தில் எகத்தாளம் கூத்திட்டது.

“ஜே கேஸானு கேட்டாரே?”

“உங்களையும் கேட்டுட்டானா? குடிக்கக் கூடாதுனு ஒரு சட்டம் இருக்கில்ல?” என்றார். அப்போது மது விலக்கு அமலில் இருப்பதாக நம்பப்பட்டது. “போலீஸ்காரங்க யாரையாவது பிடிச்சு குடிச்சிருந்தான்னு கொண்டு வந்து நிறுத்துவாங்க. பைன் கட்டணும். அதற்கு இந்த மாதிரி வக்கில்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதி மன்ற நடைமுறைகளில் உதவி செய்வாங்க. அந்தமாதிரி டிராபிக் கேஸ், கோர்ட் ஆவணங்கள் வாங்கிக் கொடுப்பது இப்படிச் சின்னச் சின்னதா ஏதாவது செய்து கொடுப்பாங்க.சில வக்கீல்கள் சைதாப்பேட்டை, எழும்பூர், ஹைகோர்ட் என்று எல்லா இடத்திலும் பிராக்டீஸ் செய்வாங்க. அதில சில சமயம் ஏதாவது ஒரு இடத்தில எதிர்பாராம ஹெல்டப் ஆகிடுவாங்க.அப்போ இங்க நீதிபதி முன் கேஸ் வந்தா கிளையண்ட் டென்ஷன் ஆகிவிடுவாங்க. அந்த நேரத்தில இவங்க நீதிபதி முன் போய் நின்னு வாய்தா வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா ஒருநாள் கூட, ஒரு கேஸ்ல கூட வாயைத் திறந்து வாதிடுவோ, விசாரணை- குறுக்கு விசாரணை செய்யவோ-எங்க பாஷையில சொன்னா டிரயல் நடத்தறது- மாட்டாங்க அவங்க செய்யற சின்னச் சின்ன வேலைகளுக்கு ஏதோ ஒரு தொகையை உடனுக்குடன் கேட்டு வாங்கிக்குவாங்க. அவங்க வண்டியும் ஓடணும்ல” என்று விளக்கினார். நண்பரின் வக்கீல்.

“சின்னத் தொகைனா? ”
“நூறு, எவனாவது இளிச்சவாயன் சிக்கினா இருநூறு”
“அவ்வளவுதானா?”
“பின்ன என்ன, பால்கிவாலாவா, பரசரனா? அரசியல் சாசனத்தை அக்கக்கா பிரிச்சு அலசறதுக்கு. இல்லை வி.பி.ராமனா?. வானமாமலையா? கிரிமினல் கேஸ் ஆடறதுக்கு. இவர் செய்யற வேலைக்கு இதுவே பெரிசு”

அண்மையில் நீதிமன்றங்கள் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் முடங்கிக் கிடந்தபோது, இந்த ஏழை வக்கீல் என் நினைவில் வந்து போனார். எந்தவொரு வேலை நிறுத்தத்தின் போதும் முதலில் பாதிக்கப்படுகிற தினக்கூலிகளைப் போல இவரும் இந்த வேலைமுடக்கத்தின் போது பாதிப்பிற்கு உள்ளாகியிருந்திருப்பார்.
*
ஒரு காலத்தில் நான் சட்டம் படிக்க வேண்டும் என என் அம்மா விரும்பியதுண்டு. எதற்கெடுத்தாலும் ‘கோணக்கட்சி’ டுகிற நான் வக்கீலாகப் போனால் பிரமாதமாக வாதிடுவேன் என்று அவர் நம்பினார். னால் வக்கீல் தொழிலில் வெற்றி பெற வெறும் வாதத் திறமை மட்டும் போதாது என அவருக்குத் தெரியாது.

என்றைக்கும் வழக்கறிஞர் தொழிலில் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதே நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. வாயுள்ள பிள்ளை என்று வாதத்திறமையைச் சொல்லவில்லை. ‘Smart’ என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அந்தக் கெட்டிக்காரத்தனத்தைச் சொல்கிறேன். விஷயம் தெரிந்தவராயும், விஷயம் தெரிந்ததைப் போலக் காட்டிக் கொள்ளத் தெரிந்தவராயும், நீதிமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் தன்னைத் தானே மார்கெட்டிங் செய்து கொள்ளத் தெரிந்தவராயும், சகாக்களையும், பலதுறையினரையும் இணைத்து உறவுச் சங்கிலிகளைப் பின்னத் (Networking) தெரிந்தவராயும் இருப்பவர்களே இந்தத் தொழிலில் வெற்றிகரமாக இருக்க முடியும் என்றெனக்குத் தோன்றுகிறது.

இசை, சினிமா போன்ற மகிழ்வூட்டும் துறைகளை (எழுத்தையும் சேர்த்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை) முழுநேரத் தொழிலாக ஏற்றுக் கொண்டவர்கள் எதிர் கொள்வதைப் போல ஒரு நிச்சியமற்ற நிலையை, அல்லது அதன் நிழலை வழக்கறிஞர் தொழிலில் இருப்பவர்கள் எதிர்கொள்கிறார்கள். ஏழைகளாக இருப்பதைவிட இப்படி யொரு அநிச்சயமான நிலை அவர்கள் இயல்பைப் பெரிதும் குலைத்து விடுகிறது.

தொழிலின் இந்த நிச்சியமற்ற நிலை கூட, மற்றெந்தத் தொழிலில் உள்ளவர்களையும் விட, அவர்கள் அரசியல் போன்ற தாங்கிப் பிடிக்கும் புறச்சார்புகளை (Props) அதிகம் நாட உளவியல் ரீதியாக ஒரு காரணமாக இருக்கக் கூடும். சங்கங்களாகத் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதும் கூட இதனால்தானோ என்னவோ. இது குறித்து உளவியல் ரீதியாக ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கிறதா? அப்படி ஏதும் இல்லையெனில் இது ஆராயத் தக்கதொரு விஷயம்.

ஆனால் உடனடியாக ஆராயப்பட வேண்டிய விஷயம், மற்றெந்தத் தொழிலில் இருக்கும் படித்தவர்களைவிட வக்கீல்கள் ஏன் அதிகம் வன்முறையின்பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது. பிப்ரவரி 19ம் தேதி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற கல்வீச்சு, காவல் நிலையம் எரிப்பு சம்பவங்கள் ஒரு பிறழ்வு (aberration) என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால் அதற்கு முன்னர் ஜனவரி 30ம்தேதி காலை சுமார் 10:40 மணிக்கு வழக்கறிஞர்கள் சிலர் தலைமை நீதிபதியின் (பொறுப்பு) நீதிமன்றத்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த வழக்கறிஞர்களை நோக்கிக் கூச்சலிட்டதாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு வழக்கு நடத்திக் கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் செல்லப்பா, அவரது மனைவி வசந்தி ஆகியோரை வெளியே இழுத்து அவர்களை ஏளனம் செய்தாகவும் அது சொல்கிறது. இவை எல்லாம் நடந்தது நீதிபதியின் கண்ணெதிரே.

அதே நாளில் ஐந்தாம் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் வாதாடிக் கொண்டிருந்த அரசு வழக்கறிஞர் வழக்கை நடத்த விடாத வண்ணம், நீதிமன்றத்தின் கதவுகளையும், ஜன்னல்களையும் ஓங்கித் தட்டிக் கூச்சலிட்டு நீதிமன்றம் நடக்க இயலாதபடி அதன் நடவடிக்கைகளில் குறுக்கிட்டு அதை முடக்கியதும் வழக்கறிஞர்கள்தான்.

பிப்ரவரி 17ம் தேதி நீதிபதிகள் முன்னிலையில் சுப்ரமண்ய சுவாமி மீது முட்டை வீசும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இவையெல்லாம் பிப்ரவரி 19ம் தேதிக்கு முன்னரே நடைபெற்ற சம்பவங்கள்.

சிலமாதங்களுக்கு முன்பு, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள்ளேயே மோதல் நடந்து ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

என்னுடைய கேள்வியெல்லாம் இதுதான்:

சட்டம் படித்து, அந்தச் சட்டங்களின் அடிப்படையில் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் வழக்கறிஞர்கள், ஏன் பிரசினைகளை சட்டங்களின் மூலம் சந்திக்க அஞ்சுகிறார்கள்? சட்டத்தின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதால்தானா, நீதிபதிகள் கண்ணெதிரேயே வன்முறையில் இறங்குகிறார்கள்?

இதற்குக் கீழுள்ள மூன்றில் ஒன்றுதான் காரணமாக இருக்க வேண்டும்:

1.சட்டத்தை எடுத்துரைக்கும் தங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும்.
அல்லது
2.சட்டங்களின் மீதும் நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும். அல்லது
3.அவர்களது விருப்பங்கள் சட்டங்களால் அனுமதிக்கப்படாவையாக இருக்க வேண்டும்.

இவற்றில் எதுவாயினும் அது கவலைக்குரியது. சிகிச்சைக்குரியது


(அம்ருதா ஏப்ரல் 2009)

Monday, March 23, 2009

IPL, Please get out!

'இந்தியர்களின் இன்னொரு மதம் கிரிக்கெட்' என ஊடகங்கள் வர்ணிப்பதாலோ என்னவோ, இந்திய கிரிக்கெட் 'கட்டுப்பாட்டு' வாரியத்தின் நிர்வாகிகள் தங்களைக் கடவுள்கள், -குறைந்த பட்சம் மடாதிபதிகள்- எனக் கருதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.இந்தக் கடவுள்கள், இப்போது அவர்களின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு 'ஸாரி' சொல்லிவிட்டு இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்துவதென முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் நடைபெறாத, இந்திய விளையாட்டு வீரர்களை மட்டும் கொண்டு நடைபெறாத ஒரு போட்டி, எப்படி, 'இந்திய' பீரிமியர் லீகாக இருக்க முடியும்? கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்றொரு தில்லிக்குச் செல்லும் ரயிலொன்று உண்டு.There is nothing Grand about it, nor it takes a trunk route என்று அது விமர்சிக்கப்பட்டதுண்டு. இந்திய பீரிமியர் லீக் இன்னொரு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஆகிவிட்டது.

கிரிக்கெட் இந்தியாவில் இன்னொரு மதமாக ஆனதற்கு அது, இந்தியா, எப்போதோ ஒரு யுகத்தில் ஒருநாள் போட்டிகளின் உலகக் கோப்பையைக் கைப்பற்றியதும், அப்போது புதிதாக மலர்ந்திருந்த தொலைக்காட்சி என்ற ஊடகமும், அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த விளையாட்டு இந்தியாவில் 'மார்க்கெட்' செய்யப்பட்ட விதமும்,தான் காரணம்.அந்த மார்க்கெட்டிங் சாமர்த்தியத்தின் உச்சம்தான் 20:20 போட்டிகள், ஐ.பி.எல்.

அண்மைக்காலமாக இந்திய அணி கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளை ஈட்டி வருகிறது. இந்தியக் கிரிக்கெட் அணி, உலகின் வலிமையான அணி என்று சொல்லத்தக்க நிலையை அது அநேகமாக எட்டிவிட்டது (இதை ஏற்க மறுப்பவர்கள் கூட அது உலகின் வலிமையான அணிகளில் ஒன்று என்பதை ஒப்புக் கொள்ள மறுக்க மாட்டார்கள்)இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 'நாலு காசு' பார்க்க ஐ.பி.எல். விரும்புவது இயற்கைதான். ஆனால் இந்த மார்க்கெட்டிங் வெறியில் மக்களாட்சியின் அடித்தளமான தேர்தலைக் கூடப் பொருட்படுத்தமாட்டோம் என்று கிரிக்கெட் மடாதிபதிகள் நடந்து கொள்ள முற்படுவார்களேயானால், அந்த வெறிக்கு வைத்தியம் பார்க்க வேண்டியது அவசியம்தான்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் 71 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.41 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், 21 லட்சம் பாதுகாப்புப் படையினரும் பயன்படுத்தப்பட இருக்கின்றனர்.உலகிலேயே இத்தனை வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், பாதுகாப்புப் படையினர் என்று ஒரு தேர்தலில் பங்கு பெறுவது இந்தியாவில் மட்டும்தான். இத்தனை பெரிய தேர்தலை, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னிட்டு, இந்த முறை ஐந்து கட்டமாக, ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி மே மாதம் 13-ம் தேதிவரை நடத்த வேண்டியிருக்கிறது. நவம்பரில் முப்பையில் நடந்த தீவிரவாத சம்பவங்கள், இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் என்பது கற்பனையல்ல, இந்தியா எதிர் கொண்டே ஆக வேண்டிய ஒரு யதார்த்தம் என்பதை உணர்த்துகின்றன. எனவே தேர்தலின் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அதை எதிர்கொள்ள எச்சரிக்கை உணர்வும் பாதுகாப்புப் படையும் அவசியமாகிறது. ஏற்கனவே ஒரு தேர்தலின் போது இலங்கை பயங்கரவாதிகளால், பிரதமர் வேட்பாளர் எனக் கருதப்பட்ட ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வரலாறும் இந்தியாவிற்கு உண்டு.

பயங்கரவாதிகள் கிரிக்கெட்டையும் விட்டு வைப்பதில்லை என பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. எனவே அதற்கும் கணிசமான பாதுகாப்புத் தேவை. இந்தச் சூழ்நிலையில் தேர்தல் முடிந்து உங்கள் ஆட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றால் ஐபிஎல் நிவாகிகள் 'முடியாது, வெளிநாட்டில் நடத்திக் கொள்கிறோம்' என்று மிரட்டுகிறார்கள்.

ஜூன் 2- ம்தேதி முதல் டுவென்டி - 20 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்காக மே 25-ம் தேதியே அணிகள் இங்கிலாந்து வருமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சி ல் ( ஐ சி சி ) கேட்டுக்கொண்டுள்ளது. அதன் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுடன் இந்திய அணி 4 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. தென் ஆப்பிரிக்காவும் அப் போட்டியில் பங்கேற்கிறது. செப்டம்பர் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற உள்ளது. தவிர, 2009 அக்டோபர் முதல் 2010 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகியன 3 உள்நாட்டுத் தொடர்களில் விளையாட உள்ளன. அதனால் ஐபிஎல் போட்டிகளைத் தள்ளி வைக்க முடியாது என அதன் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடக்கும் என்பது ஐந்தாண்டுகளுக்கு முன்பே தெரிந்த விஷயம். கடந்த மக்களவை 2004 மே 23 அன்று அமைந்தது. அதனால் 2009 மே 23க்குள் அடுத்த மக்களை தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும் என இந்தியக் குடிமகன்கள் எல்லோருக்கும் தெரியும். நிச்சியம், கிரிக்கெட் 'கட்டுப்ப்பாடு' வாரியத்தின் தலைவர் சரத் பவாருக்கும், அதன் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் அருண் ஜெட்லிக்கும் தெரிந்த்ருக்கும். அப்படியிருக்க ஏப்ரல் 10 முதல் மே 24வரை ஐபில் போட்டிகளை நடத்தத் தேதி குறித்தது ஐபிஎல்லின் தவறு. சர்வதேசப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன அதனால் தள்ளி வைக்க முடியாது என்பது சப்பையான வாதம். அதுதான் இத்தனை போட்டிகள் நடக்க இருக்கின்றனவே, இந்தப் போட்டி நடக்காவிட்டால் என்ன குடி முழுகிவிடும் (உங்களுக்கு துட்டு வராது என்பதைத் தவிர?) எனக் கேட்க எவ்வளவு நேரமாகும்?

இந்தப் போட்டியை எப்படியும் தாங்கள் குறித்த தேதிகளில் நடத்தியே தீர்வது என்பதற்காக ஐபிஎல் நிர்வாகிகள்அளித்த நெருக்கடிகள் கண்டிக்கத் தக்கவை. பிரதம்ரை நேரில் சந்தித்து முறையிடுகிறார்கள். ஐபிஎல் போட்டிகளை நடத்தத் தவறினால் இந்தியா, பாகிஸ்தானைப் போல பயங்கரவாதத்திற்குப் பணிந்து போகிற மென்மையான் அரசு (soft state) என்று உலகம் எண்ணிவிடும் என ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்கிறது. இந்தச் சர்ச்சையில் அரசியலைக் கூட நுழைத்துப் பார்த்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்தான் பயப்படுகின்றன என்று அதன் நிர்வாகிகளில் சிலர் சொன்னார்கள்.

ஒன்றைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது அரசின் வேலையல்ல. அதை நடத்துவதும் அரசு அல்ல. அதை நடத்துவது ஒரு தனியார் அமைப்பு. இன்னும் சொல்லப்போனால் தனியார் வர்த்தக அமைப்பு. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு இந்த வியாபாரம் நடத்தப்பெறாத வரையில் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால் அந்த வியாபாரிகள், பன்நாட்டு வியாபார நிறுவனங்களைப் போல, நாட்டின் நலனை விடத் தங்கள் நலனைப் பெரிதாக எண்ணிக் கொண்டு அரசை மிரட்ட எண்ணினால் நாம் தயங்காமல், உறுதியாகச் சொல்ல வேண்டியது, 'போ, வெளியே!' (get out)

Friday, March 06, 2009

கனவுகள் எரியும் தேசம்

அந்த தினம் இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. ஏனெனில் அது ஒரு இளைஞன் தமிழுக்காகத் தன்னை எரித்துக் கொண்ட தினம்.
அன்றும் வழக்கம் போல் ‘பராக்கு’ பார்த்துக் கொண்டே பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தேன். போகிற வழியெல்லாம் புதிதாக ஒரு போஸ்டர் முளைத்திருந்தது. வெள்ளைப் பின்னணியில் புள்ளிச் சித்திரமாக செல்வம் வரைந்திருந்த அண்ணாவின் படம். கீழே ரத்தச் சிவப்பில் ‘உலத்துத் தீமைகள் அனைத்திற்கும் தீ மூட்ட உன் அண்ணனது கரங்கள் வலுவற்றதாக இருக்கலாம். னால் உன்னை இரண்டாந்தரக் குடிமகனாக்கும் இந்திக்குத் தீ மூட்ட அவை துவளப் போவதில்லை’
இரண்டாந்தரக் குடிமகன் என்ற வார்த்தை என்னை இம்சித்தது. பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். அப்போதெல்லாம் பள்ளியில் குடிமைப் பயிற்சி (citizenship Training) என்று வாரத்திற்கு ஒரு வகுப்பு இருந்தது. னால் அதிலொன்றும் பெரிதாகக் கற்றுக் கொடுத்துவிட மாட்டார்கள். அந்த வகுப்பு நேரத்தில் அநேகமாக கிரிக்கெட் டுவோம். கிரிக்கெட் டுவது இந்தியக் குடிமகனின் கடமைகளில் ஒன்று என்றுதான் அந்த வகுப்புக்கள் எங்களுக்கு உணர்த்தியிருந்ததன. அதனால் அப்போது எனக்கேற்பட்ட மன இம்சை என் பிரஜா உரிமைகள் பறிபோய்விடப் போகிறது என்பதால் ஏற்பட்ட கலக்கம் அல்ல. னால் நாளையே யாருக்கோ அடிமையாக கி விடப்போகிறோம் என்றோர் இனம் புரியாத பயம் எழுந்தது. புத்தகத்தில் நான் சந்திருந்த அடிமைகள் கசையடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
பள்ளி வாசலில் ராதாகிருஷ்ணன் நின்று கொண்டு மறித்துக் கொண்டிருந்தான். ராதாகிருஷ்ணன் என் வகுப்புத்தான். னால் என்னை விட இரண்டு வயது பெரியவன்.முகத்தில் மீசை வளர்த்திருந்தான். கல்லூரி மாணவன் போல முழுக்கால் சட்டை அணிந்து ஒரு குயர் நோட்டு ஒன்றை ள்காட்டி விரல் முனையில், மகாவிஷ்ணுவின் சக்கரம் போலச் சுற்றிக் கொண்டு பள்ளிக்கு வருவான்.’கிளாசிற்குப் போகாதே வேலை இருக்கு’ என்றான் ராதா.
பத்தரை மணிவாக்கில் எங்கள் பள்ளி மாணவர்கள் 100 பேர் ஊர்வலமாகப் புறப்பட்டு அருகில் இருந்த திலகர் திடலுக்குப் போனோம். அங்கு காத்திருந்த இன்னொரு பெரிய ஊர்வலத்தில் சங்கமித்து, வடக்கு மாசி வீதிக்கு வந்தோம். ஒன்று நூறாகி, நூறு யிரமாகும் போது எற்படுகிற தன்னம்பிக்கையும் மன எழுட்சியும் எங்களை க்கிரமித்திருந்தது.விசையேற்றப்பட்டவனாய் உடல் மன்ணுக்கு உயிர் தமிழுக்கு என நான் எழுப்பிய முழக்கங்கள் என் நண்பர்களுக்கு ச்சரியமளித்தது. எனக்கே கூட ச்சரியமாகத்தானிருந்தது. என் குடும்பச் சூழல், என் பள்ளிச் சூழல் எல்லாம் என்னை இப்படி சந்நதம் வந்தவனைப் போல நடுவீதியில் நாணமற்றுக் கூச்சலிட்டுச் செல்லப் பயிற்றுவித்திருக்கவில்லை. நாலு பேர் நம்மைக் கவனிக்கிறார்கள் என்றதும் உற்சாகம் ஓர் ஊற்றுப் போல் பீறிட்டது.
ஊர்வலத்தின் முன் வரிசையில் யூசி ஹைஸ்கூல் மாணவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களை அடுத்து நாங்கள்.
கிருஷ்ணன் லோவிலைத் தாண்டி ராமாயணச் சாவடி வருகிற வரை ஒன்றும் பிரசினையில்லை.ராமாயணச் சாவடி அருகே வந்ததும் ஒரு சலசலப்பு அங்கே அன்றைய ளுங்கட்சியின் அலுவலகம் இருந்தது அதன் உள்ளிருந்து ஊர்வலத்தின் மீது கல்லெறிந்தார்கள் என்றொரு செய்தி பரவியது. நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலம் தேங்கி நின்றதும்,பின்னாலிருந்தவர்கள் என்ன விஷ்யம் என்றறிந்து கொள்ள முன்னால் முண்டிக் கொண்டு வந்தார்கள் தள்ளு முள்ளு ஓர் அலைமாதிரி என்ன முன்னெடுத்துச் சென்றது. என்ன நடக்கிறது எனத் தெரியாமல் நான் திகைப்பில் திணறிக் கொண்டிருந்த போது, சித்திரைத் திருவிழாவில் திண்டுக்கல் ரோடு பூக்கடைகள் அருகே மலர்ச் சொரிய அந்தரத்தில் திடுமெனத் தோன்றுகிற பொம்மைகள் மாதிரி, ஒரு காவல் அதிகாரி ராமாயணச் சாவடிக் கூரையின் மீது தோன்றினார். விளிம்பில் தொற்றிக் கொண்டு, ஒருகையால் தூணை அணைத்துக் கொண்டு மறு கையில் பெரிய தகரக் குழாயை வாயருகே பிடித்துக் கொண்டு பெரிய குரலில் ஏதோ இரைந்தார். முதலில் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை.உற்றுக் கேட்டபோது காவல்துறை அதிகாரி எங்களைக் கலைந்து போகச் சொல்கிறார் எனப் புரிந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் ராதாகிருஷணன் எங்கேயோ காணாமல் போய்விட்டான்..நான் ஒரு கணம் தயங்கி நின்றேன். அப்படி நின்ற வேலையில் போலீஸ் தடியைச் சுற்றிக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. மிரண்டு போய் கலைந்து ஓடினோம். னால் எனக்குப் பின்னால் ஒரு காவலர் ஓடி வருவதை என்னால் உணர முடிந்தது.
சுளீர்! என் இடது கெண்டைக்காலில் நெருப்புத் துண்டு விழுந்தது போல் ஒரு எரிச்சல் கலந்த வலி. காவலர் கையிலிருந்த தடி என் காலில் இறங்கியிருக்கிறது எனப் புரிந்து கொண்டு ஓட எத்தனித்தேன். அதற்குள் இன்னொரு அடி இறங்கிற்று. அடி விழுந்த காலைத் தூக்கிக் கொண்டு ஒற்றைக்காலால் நொண்டிக் கொண்டே ஓடினேன். சிறுவர்களிடம் அடிவாங்கி, ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு ஓடும் தெருநாயைப் போல அந்தக் கணம் உணர்ந்தேன்.
குறுக்குச் சந்துகளில் ஓடி தானப்ப முதலி தெருவிலிருந்த என் வீட்டுக்கு வந்து காலைப் பார்த்தேன். அடிவிழுந்த இடத்தில் தோல் பிளந்து ரத்தக்காயம். அதைச் சுற்றிலும் ரத்தம் கட்டிக் கரு நீலம்.
வலி. காயத்தைக் கழுவி அம்மா அதன் மேல் டிஞ்சர் அயோடினைத் தடவினார். நெருப்புப் போல் எரிந்தது.
னால் அன்றூ மாலை மாலைமுரசில் படித்த ஒரு செய்தி என் காயம், என் வலி எல்லாம் எத்தனை அற்பமானவை என உணர்த்திற்று. இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி அருகே கீழப்பாவூரைச் சேர்ந்த சின்னசாமி தீக்குளித்து மாண்டார் என்றது செய்தி. ஒரு சிறுகாயம் நெருப்பாக எரிகிறது என்பதையே நம்மால் பொறுக்க முடியவில்லை.னால் தமிழுக்காக ஒருவர் தன் மீதே நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்! வலியால் எப்படித் துடித்திருப்பார்? உடலில் நெருப்புப் பற்றி எரிந்த போது அய்யோ அம்மா என்று அலறவில்லை. மாறாக தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என சின்னசாமி முழக்கமிட்டதாகச் சொல்லியது செய்தி.
சின்னசாமி தன்னை எரித்துக் கொண்டபோது அவருக்கு வயது 27. குடும்பத்தில் ஒரே மகன். திருமணமாகி இருந்தது. திராவிடச் செல்வி என்றொரு பெண் குழந்தை இருந்தது. தீக்குளிக்கும் முன் தன் மனைவியின் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில்,“தமிழைக் காக்க என் உயிரைத் துறக்கிறேன். என் லட்சியம் ஒரு நாள் வெல்லும்” என்று எழுதியிருந்தார்.
தமிழ்நாடெங்கும் சின்னச்சாமியின் மரணம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதுவரை தீக்குளிப்பு என்றொரு போராட்ட முறையைத் தமிழகம் கண்டதில்லை. எனவே அந்தச் செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. அடுத்த நாள் ஜனவரி 26, 1965 அன்று சென்னையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் எதிரில் 21 வயது சிவலிங்கம் தன்னை எரித்துக் கொண்டு மாண்டார்.அதற்கு அடுத்தநாள் விருகம்பாக்கம் அரங்கநாதன். அப்புறம் அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி.
வரிசையாய் அடுத்தடுத்து மாண்ட இளைஞர்களது மரணங்கள் தமிழ்நாட்டை உலுக்கின. இனியும் மத்திய அரசும் மாநில அர்சும் சும்மாயிருந்துவிட முடியாது, பணிந்தே க வேண்டும், இந்தத் தியாகங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.
எழுட்சி மிகுந்த இறுதி ஊர்வலங்களில் தீக்குளித்தவர்களது உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன.ங்காங்கு விர வணக்கக் கூட்டங்கள் நடந்தன. எல்லாக் கூட்டங்களும் ‘என் இலட்சியம் என்றாவது ஒரு நாள் நிறைவேறும்’ என எழுதி வைத்துவிட்டு இறந்த சின்னசாமியின் கனவை நனவாக்குவோம் என்ற முழக்கங்களோடு முடிந்தன.
*இன்று இன்னொரு தீக்குளிப்பு. இன்னொரு இளைஞன். இன்னொரு லட்சியம். அந்த லட்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களின் மனங்கள் கனல் போல் கொதிக்கின்றன. எழுட்சி மிகுந்த இறுதி ஊர்வலங்கள்.ங்காங்கு வீரவணக்கக் கூட்டங்கள்.இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடைசிக் கடிதத்தை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.
இந்தத் தியாகம் வீண்போகாது என்றேனும் இந்த இளைஞனின் லட்சியம் நிறைவேறும் என்ற முழக்கங்கள் ஒலிக்கின்றன. அரசுகள் இந்தத் தியாகத்தை அலட்சியப்படுத்த முடியாது, அப்படி அல்ட்சியப் படுத்த முனைந்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற வேச சபதங்களைக் கேட்கின்றன.*நாங்கள் அந்த மாநில அரசை வீட்டுக்கு அனுப்பினோம். அன்று எங்களுக்கு வாக்குரிமை இல்லை. னாலும் வீடு விடாகப் போய் வாக்காளர்கள் காலில் விழாத குறையாய்க் கெஞ்சி, மன்றாடி அந்த அரசை வீட்டுக்கு அனுப்பினோம். இந்தியை ஒழிப்பார்கள், தமிழைத் தழைக்கச் செய்வார்கள் என்று நம்பியவர்களை நாற்காலிகளில் அமர்த்தினோம்.னால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் ங்கிலமும் இந்தியும் படித்தார்கள். தில்லிக்குப் போனார்கள் போராட அல்ல. இந்தியை அரசு மொழியாகக் கொண்ட அரசில் அமைச்சர்களாகப் பதவி ஏற்க.
சின்னசாமியின் மகள் திராவிடச் செல்வி இன்று எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. னால் கனிமொழி என்னவாக இருக்கிறார் என எல்லோருக்கும் தெரியும்.
தனது ஒரே மகன் முத்துக்குமாரை ஈழப் பிரசினைக்காக தீக்குத் தின்னக் கொடுத்த அவரது தந்தை அதற்காக அரசு கொடுத்த பணத்தைக்கூட மறுத்து விட்டார். இத்தனைக்கும் பழைய இரும்பு விற்றுப் பிழைக்கிற ஏழை அவர்.
னால் இலங்கைத் தமிழர் பிரசினையில் தினம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் மருத்துவரின் ஒரே மகன் தன் அமைச்சர் பதவியைக் கூடத் துறக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லை.
*தீக்குளித்து இறந்த 22 பேரின் உளவியலை ராய்ந்த சண்டிகரைச் சேர்ந்த மனோதத்துவ வல்லுநர்கள் தீக்குலிப்பவர்கலில் பெரும்பாலானோர் லட்சிய வேட்கை / பெரிய சைகள் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள், விரோத மனோபாவம் கொண்டவர்கள், அந்நியப்பட்டுப் போனவர்கள் (Most were ambitious, aggressive, hostile and felt alienated) என வர்ணிக்கிறார்கள்.
எனக்கென்னவோ இந்த வர்ணனை நம் அரசியல்தலைவர்களுக்கே பொருந்தும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நானறிந்தவரை தமிழ்நாட்டில் தீக்குளித்தவர்கள் தங்கள் கோபத்தைக்கூட தங்கள் மீதே காட்டிக் கொள்ளக் கூடிய அளவிற்கு இயலாமை கொண்டவர்கள்.

ஏனெனில் அவர்கள் ஏழைகள்.

அம்ருதா மார்ச் 2009 இதழுக்காக பிப்ரவரி 8ம் தேதி எழுதியது

Tuesday, February 24, 2009

ரஹ்மானின் அந்த ஒரு வாக்கியம்!

ரஹ்மானின் ஆஸ்கார் விருது(கள்) பற்றி எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. அவர் அடைந்த வெற்றிகள், சிகரம் தொட்ட இசைக் கோலங்கள் இவற்றையெல்லாம் விட அவர் நேற்று ஆஸ்கார் மேடையில் சொன்ன ஒரு வாக்கியம் என்னை நெடு நேரம் யோசிக்க வைத்தது. நாள் பூராவும் அவற்றையே அசை போட்டுக் கொண்டிருந்தேன். அவை:

"All my life I've had a choice of hate and love, I chose love and I am here"

எவ்வளவு நிஜம்!

நேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் வெற்றிகளில் குளிக்கிறார்கள்
வெறுப்பை விதைப்பவர்கள் யுத்தங்களில் மடிகிறார்கள்!

Friday, February 20, 2009

காக்கிச் சட்டைகளும் கருப்புக் அங்கிகளும்



கறுப்பு அங்கிகளும் 'விக்'களும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இவர் இன்னார் எனத் தெரியாத (annonimty) தோற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் 17ம் நூற்றாண்டில் நீதித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் அவர்களை இன்னார் என இனம் கண்டு கொள்ளவே உதவியிருக்கின்றன.

காக்கி என்ற இந்துஸ்தானி சொல்லுக்கு புழுதி என்று பொருள் என்றாலும் அதை அதிகாரத்தின் அடையாளமாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்கள். நேற்றைய உயர்நீதிமன்றச் சம்பவங்கள் காக்கியின் பெருமைகளை புழுதிக்கு அனுப்பியிருக்கின்றன

என்ன நடந்திருக்கும்?

இன்று சட்ட மன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் சட்ட அமைச்சர் துரைமுருகன் " சுப்ரமணியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு வக்கீல் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற வக்கீல்கள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் 19-ம் தேதி (நேற்று) இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வக்கீல்கள், சுப்ரமணியசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், புகார் மனு ஒன்றை தருவதற்காக ஐகோர்ட் வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்துள்ளனர். சுப்ரமணியசாமி மீது தாங்கள் கொடுக்க வந்த புகாரை பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தங்களை கைது செய்யுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்று அவர்கள் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது." என்கிறார்.

சுப்ரமண்ய சாமி மீது முட்டை வீசுகிற சம்பவம் நடந்ததற்கு அவர் வக்கீல் ஒருவரை ஜாதிப் பெயரைச் சொல்லியதுதான் காரணம் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். ஆனால் இது அந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் ஒரு அறிக்கை, உச்ச நீதி மன்றத்தில் சாமி முறையீடு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தொழில் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகள், ஆகியவற்றின் காரணமாக நிலைமை முற்றியவுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ள, ஒரு பின் யோசனையாக (after thought) சம்பந்தப்பட்ட வக்கீல்கள் இப்போது ஜாதி பிரசினையைக் கிளப்புகின்றனர் என்றே எனக்குத் தோன்றுகிறது, என் சந்தேகத்திற்கான காரணங்கள்:

சாமி ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிருப்பார் என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அப்படி இழிவு செய்யப்பபட்டதும் திட்டப்பட்டவரின் உடனடி 'ரியாக்ஷன்' என்னவாக இருக்கும்? கைகலப்பு, கன்னத்தில் அறைதல், சட்டையைப் பிடித்தல், புஷ் செய்தியாளர் சந்திப்பில் நடந்தது போல் காலணி வீச்சு, இப்படி ஏதாவது ஒன்று நடந்திருக்கும்.

ஆனால் சம்பவத்தில் அழுகிய முட்டைகள் வீசப்பட்டிருக்கின்றன. வழக்கறிஞர்கள் சாதரணமாக, நீதிமன்றங்களுக்கு கேஸ்கட்டுகள், சட்டநூல்கள் மற்றும் தங்களது ஜூனியர்களுடன் வருவார்கள். கூ முட்டைகளோடு வருவார்களா?

2."நீதிமன்றத்தின் ஒரு வாயிலின் கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டது.

அதன் பின்னர், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திடீரென சில வழக்கறிஞர்கள் மறைத்து வைத்திருந்த அழுகிய முட்டைகளை எடுத்து சுப்பிரமணியன் சுவாமி மீது வீசத் தொடங்கினர். இந்த சம்பவத்தைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை எதிர்பார்க்காத சுவாமியின் மெய்க்காப்பாளர்கள் (சி.ஆர்.பி.எப். போலீஸார்) நீதிமன்றத்தின் மற்றொரு வாயில் வழியாக உள்ளே நுழைந்தனர்.

அதற்குள் சுவாமி மீதும், அவருக்கு எதிரே இருந்த டேபிள்கள் மீதும் முட்டைகள் விழுந்து உடைந்தன. அதன் பிறகு, சுவாமி நீதிபதிகளின் அருகேயிருந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.

இதன்காரணமாக, சுமார் 15 நிமிடங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நீதிபதி கே. சந்துரு ""எதற்கும் ஒரு எல்லை உண்டு'' என்று வழக்கறிஞர்களைப் பார்த்து எச்சரித்தார்."

இது சம்பவம் பற்றி தினமணியில் வெளியான செய்தி. (18/2/09)

நீதி மன்றத்தின் கதவுகள் உள்புறமாகத் தாழிடப்பட்டன என்ற செய்தி தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

3. இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகக் கோஷம் எழுப்பப்பட்டது என்ற செய்தியும், தாக்குதலுக்குக் காரணம் அவர் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியது அல்ல என்பதைக் காட்டுகிறது.

4. இந்த சம்பவம் குறித்து தினமணிக்குப் பேட்டியளித்த, வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவைத் தலைவர், கே. பாலு, "வழக்கறிஞர்கள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீதி மன்ற புறக்க ணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று அரசுத் தரப்பி ல் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் ரீதியாகப் பயன்பெறவே சுப்பிரமணியன் சுவாமி நீதி மன்றத்துக்கு வந்துள்ளார்" எனக் குற்றம் சாட்டுகிறார்.

எனவே வழக்கறிஞர்களின் ஆத்திரம் சாமி நீதிமன்றப் புறக்கணிப்பை ஆதரிக்காமல், நீதிமன்றத்திற்கு வழக்காட வந்துதான், ஜாதிப் பிரசினை அல்ல.

இப்படி ஜாதியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, கற்பனையான ஒரு புகாரைப் பதிவு செய்ய வற்புறுத்தியதே ஒரு நீதியற்ற செயல். அப்படி அந்தப் புகாரைப் பதிவு செய்தால் எங்களை கைது செய்து கொள்ளலாம் எனப் பேரம் பேசியது இன்னொரு நியாயமற்ற செயல். அப்படிப் பதிவு செய்த பின்னும் அவர்கள் தங்கள் வாக்கைக் காப்பாற்றவில்லை என்பதை துரைமுருகனின் அறிக்கையிலுள்ள இந்த வரிகள் காட்டுகின்றன:

"சுப்ரமணியசாமி மீது தாங்கள் கொடுக்க வந்த புகாரை பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தங்களை கைது செய்யுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்று அவர்கள் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் சுப்ரமணியசாமியை கைது செய்துவிட்டு பின்னர் தங்களை கைது செய்ய வேண்டும் என்றனர்"

இவற்றிலிருந்து என்ன நடந்திருக்குமென்பதை ஊகிக்க முடிகிறது:

1.புலிகள் விமர்சகரான சாமி, இலங்கைப் பிரசினைக்காக நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடக்கும் போது நீதி மன்றம் வந்ததை சில வழக்கறிஞர்களால் பொறுக்க முடியவில்லை
2. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.
3. பின்னர் அதன் விளைவுகளை எண்ணி அஞ்சி பின் யோசனையாக ஒரு காரணத்தைக் 'கண்டுபிடிக்கிறார்கள்'
4.சாமி மீது புகார் பதிவு செய்தால் எங்களை கைது செய்து கொள்ளலாம் எனப் பேரம் பேசுகிறார்கள்
5.அது உண்மையில் ஒரு தந்திரம். போலீஸ் கைது செய்ய முற்படும் போது அதை எதிர்த்து வன்முறையில் இறங்குகிறார்கள்.
6.வன்முறையைக் கட்டுப்படுத்த சிரமப்படும் போலீஸ் கண்மண் தெரியாமல் புகுந்து விளாச வன்முறை மேலும் வளர்கிறது.


'இலங்கைத் தமிழர்கள் ஈழம் பெறுவதற்காக நாங்கள் எதையும் இழக்கத்தயார்' என்பதுதான் வழக்கறிஞர்களது உண்மையான நிலை என்றால், அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? " நீ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசி வருகிறாய். அது பொறுக்கமாட்டாமல் முட்டை அடித்தேன். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள், அதற்கான விளைவை ஏற்க நான் தயார் " என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தண்டனையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள் செய்வதையும் செய்துவிட்டு இப்போது அதற்கு ஜாதி முலாம் பூசி ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள்

சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர் கொள்ள வழக்கறிஞர்கள் அஞ்சுகிறார்கள், தங்கள் செயலுக்கான பொறுப்பை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் (Not owning responsibility for their own actions) என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்க மறுப்பதற்குக் காரணம் அவர்கள் அந்த செயல்களை அறிவின் பாற்பட்டு செய்யவில்லை, உணர்ச்சி வேகத்தில் செய்கிறார்கள் என்பதே.

சிந்தித்துச் செயல்படுகிற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருந்தால், வீதியிலிறங்கிக் கோஷம் போடுவதன் மூலம், சாலையில் உட்கார்ந்து மறியல் செய்வதன் மூலம், நீதிமன்றப் புறக்கணிப்பு மூலம் ராஜபக்க்ஷேயைப் பணிய வைக்க முடியாது, அதற்கு டிப்ளமேட்டிக் சானல்கள் எனப்படும் தூதரகங்கள் மூலம் லாபி செய்ய வேண்டும், தா.பாண்டியன் சொன்னதைப் போல சர்வதேச நீதி மன்றத்தில் மனித உரிமை மீறல் என வழக்குத் தொடுக்க வேண்டும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழ்கிற மக்கள், அறிவு ஜீவிகளிடம் இலங்கை அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்க வேண்டும், ஊடகங்களில் எழுத வேண்டும் என்பது போன்ற அறிவு சார்ந்த நிலைகளை எடுத்திருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஏற்கனவே பல விதங்களில் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில் அவர்கள் மத்தியிலேயே கூச்சல் போடுவது எதைக் கருதி? வழக்குகள் தள்ளிப் போவதால் சம்பந்தப்பட்ட வாதி/பிரதிவாதிகளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்வதைத் தவிர வேறு இதனால் என்ன நடந்து விடும்? தேர்வுகள் தள்ளிப் போவதால் மாணவர்களின் அதிருப்தியை சம்பாதிக் கொள்வதை அன்றி வேறு என்ன பலன் கிடைத்து விடும்? இது மக்களிடமிருந்து அவர்கள் அன்னியப்படுவதற்கு உதவுமே அன்றி மக்களைத் திரட்ட உதவாது. மக்களைத் திரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஏற்கனவே அவர்கள் இலங்கை பிரசினையில் வழக்கறிஞர்கள் வெளிப்படுத்தும் உணர்வில்தான் இருக்கிறார்கள்.

இதன் மூலம் அரசை சங்கடப்படுத்துவது, அல்லது திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் நோக்கம் என்றால் அதுவும் அவர்களது நோக்கத்திற்கே எதிராய் முடியும். திமுக ஆட்சி வீழ்ந்தால் அடுத்த அரசு அமைய எப்படியும் 4 முதல் 6 வார காலமெடுக்கும். அதற்குள் இலங்கையில் நிலைமை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது. திமுக போய் ஜெயலலிதா வந்தால் அவரிடமிருந்து புலிகளுக்கு ஆதரவு கிடைக்காது. திமுகவாலேயே மத்திய அரசை ஓரளவிற்கு மேல் நிர்பந்திக்க முடியவில்லை என்னும் போது , பா.ம.கவோ, மதிமமுகவோ, விடுதலைச் சிறுத்தைகளோ அதைத் தனியாகப் பணிய வைத்து விடமுடியுமா?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அர்த்தம் இல்லை. அதிலும் அது வன்முறை வடிவம் எடுப்பதென்பது கண்டனத்திற்குரியது.

அவர்கள் சட்டம் தன் வேலையைச் செய்ய அனுமதித்து நீதி மன்றங்களுக்குத் திரும்பட்டும்.

காவல்துறை மீது தவறேயில்லையா?

நிச்சியமாக இருக்கிறது.குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை வீடு தேடிச் சென்று கைது செய்திருக்கலாம்.அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து கொள்ள அவகாசம் அளித்தது காவல்துறையின் திறமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.


"The FIR (against Swamy) was finally registered after a couple of hours . It seemed the tension had been defused, when all of a sudden, two companies (roughly 200 men) of Swift Action Group, a wing of the armed reserve police reached the spot around 3:15 pm. Blostered by the presence of SAG police made a bid to arrest 20 lawyers who were identified as those involved in the attack on Subramaniam Swamy. As lawyers shoved the SAG personnel went beserk and pelted stones. என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா (20/2/09)

வழக்கமான காவல்துறையால் கையாளப்பட வேண்டிய விஷயத்திற்கு SAGயை அனுப்ப உத்தரவிட்டது ஏன்? உத்தரவிட்டது யார்? சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டபோது கையைக் கட்டிக் கொண்டிருக்க உத்தரவிட்டதும் இப்போது கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்க உத்தரவிட்டதும் ஒரே நபரா? அப்படியானால் அது -

யார் ?

Wednesday, February 11, 2009

கணிப்புகள் மீது ஒரு கருத்து

கருத்துக்கணிப்புக்களுக்குத் தடை விதிப்பது குறித்து Zதமிழ் தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடல் (விவாதம்?) நடந்தது. அதில் பங்கேற்ற பத்ரி தனது பதிவில் அதைக் குறித்து எழுதியிருக்கிறார்.

கருத்துக் கணிப்புகள் மக்களின் முடிவை மாற்ற வல்லவை அல்ல, அதனால் அதற்குத் தடை என்பது தேவை இல்லை, அப்படித் தடை செய்வது கருத்துரிமைக்கு எதிரானது, இன்றைக்குக் கருத்துக் கணிப்பைத் தடை செய்பவர்கள் நாளை இணைய வழி, கைபேசிக் குறுஞ் செய்திகள் வழி, பிரசாரத்தையும் தடை செய்யலாம், 10 மணிக்கு மேல் கூட்டம் போடக் கூடாது போன்று எத்தனை தடைகள் இந்த நாட்டில் என்றெல்லாம் பத்ரி கருத்துக் சொன்னார்.

என்னுடைய பார்வையில், இந்தியச் சூழ்நிலையில், இன்று மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகள் மூலம், பெரும்பாலும் சரியான யூகங்களுக்கு வரமுடிவதில்லை. அதனால் அவை பெரும்பாலும் ஊடகங்களின் பரபரப்பு மனோபாவத்திற்குத் தீனி போடுபவையாகவோ அல்லது விற்பனைக்கு உதவுபவையாகவோ மட்டுமே இருக்கின்றன.

கருத்துக் கணிப்புகள் ஏன் பொய்க்கின்றன?

முதன் முதலில் கருத்துக் கணிப்பு தமிழ்த் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் அதில் பங்கேற்றவன் என்ற முறையில் அந்தக் கணிப்புக்களுக்குப் பின் அறிவியல் ரீதியான அணுகுமுறை (psephology தேர்தலியல்?)இருந்தது என்பதை என்னால் சொல்ல இயலும். .

பொதுவாகக் கருத்துக் கணிப்புக்களின் போது கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி முடிவுக்கு வர Cube law என்ற ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த முறை இரு கட்சிகள் பிரதானமாக இருக்கிற நாடுகளில், அதிலும் குறிப்பாக கட்சிகளுக்கு Registered Voters இருக்கிற அமெரிக்காவில் பலனளித்திருக்கிறது. பல கட்சிகள் கொண்ட இந்தியாவில் இந்த விதியில் சிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சி, அதற்கு எதிராக இருக்கும் அணிகள் எல்லாம் ஒரு கட்சி எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கட்சிகள் எத்தனை தூரம் ஒற்றுமையாக இருக்கின்றன என்பதைக் கணக்கிட Index of opposition unity என்ற ஒன்றைக் கணக்கிட வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் சில கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறி நிற்பதால் அதன் பலத்தை துல்லியமாகக் கணக்கிட முடிவதில்லை (உ-ம்: பா.ம.க)

ஒன்றுக்கு மேற்பட்ட ஊகங்களின் அடிப்படையில் கணிப்புக்களை மேற் கொள்ளும் போது அவை தவறாகிவிடும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

தேர்தலில் அலைவீசும் போது Cube law பயனுள்ளதாக இருப்பதில்லை.

இந்தியத் தேர்தல் முறையில், பெரும்பாலும் மக்கள் உள்ளூர் காரணிகளின் அடிப்படையில் (பிரசினைகள், ஜாதிப் பிரிவுகள், வேட்பாளரின் செல்வாக்கு) வாக்களிப்பதால் ஒட்டு மொத்தமான கணிப்புகளைவிட தொகுதிவாரியாக மேற்கொள்ளப்படுகிற கணிப்புகளே ஓரளவிற்கு சரியாக இருக்கும். இதைக் கவனத்தில் கொண்டு, 1998ல் கருத்துக் கணிப்பை தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தியபோதே, மாவட்ட வாரியான கணிப்பை மேற்கொண்டாம். ஆனால் இன்று பெரும்பாலும் மாநிலம் முழுமைக்குமான 'ராண்டம் சாம்பிள்'கள் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன

நம் கலாசாரத்தில் மக்கள் பெரும்பாலும், தனிப்பட்ட நேர் பேட்டிகளில் ஆளுங்கட்சிக்கு எதிராக (அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி) வெளிப்படையாகத் தன் எண்ணங்களைத் தெரிவிப்பதில்லை. (கூட்டமாகச் சேர்ந்து போராட அவர்கள் தயங்குவதில்லை என்பது வேறு விஷயம்)

கருத்துக் கணிப்பிற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தலைக்குத் தலை அதை நடத்த முற்பட்டதால் அது இன்று Law of diminishing returnsபடி அதன் பலன் குறைந்த நிலையை எட்டியிருக்கிறது.

எனவே இன்று கருத்துக் கணிப்புக்கள் குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஆனால் அதைச் சாக்கிட்டு ஊடகங்கள் பரபரப்பேற்படுத்துவதைத் தவிர்க்க ஏதாவது ஒருவிதமான நெறிப்படுத்தல் தேவை

சுதாங்கன் - ஜென்ராம் நெறிப்படுத்தும் Z தமிழ் 'முதற்குரல்' விவாதங்கள் பெருமளவிற்கு நடுநிலையாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் விருந்தினர்களைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக கருத்துக் கணிப்புப் பற்றிய இந்த விவாதத்தில் கருத்துக் கணிப்பு நடத்தும் நிறுவனங்களோ (ORG-MARGபோல), அமைப்புக்களோ (லயோலா கல்லூரி போல) பங்கேற்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே போல தேர்தல் கமிஷன் சார்பில் முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் யாரேனும் (சேஷன் சென்னையில்தான் வசிக்கிறார் என நினைக்கிறேன். முன்னாள் விஜிலன்ஸ் கமிஷனர் விட்டல் இங்கேதானிருந்தார்) பங்கேற்றிருக்க வேண்டும்.

ஆனால் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களுக்கு விருந்தினர்களை 'பிடிப்பது' எத்தனை சிரமமானது என எனக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும் என்பதால் இது குறித்து நான் வேறேதும் சொல்லப்போவதில்லை

Monday, February 09, 2009

தேர்தல் 2009

இன்னொரு தேர்தல் வந்து விட்டது.

'நாட்டைப் பிளவுபடுத்தும் மதவாதக் கட்சிகளை ஒதுக்கித் தள்ளுங்கள் என காங்கிரசும், பரம்பரை ஆட்சி நாட்டிற்கு நல்லதல்ல என பாரதிய ஜனதாவும், தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவு என இடதுசாரிகளும் நமக்குப் பழக்கமான குரல்களில் முழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் தேர்தல்களில் அரசியல்வாதிகளின் குரல்களை விட பிரஜைகளின் குரல்தான் முக்கியத்துவம் கொண்டது

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கருத்துக்களுக்கென தனி ஒரு வலைப்பதிவைத் துவக்கியிருக்கிறேன்.

http://therthal.blogspot.com/

தேர்தல் குறித்த செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக் கணிப்புகள், கார்ட்டூன்கள் இதில் இடம் பெறும். எல்லா வகையான கருத்துக்களுக்கும் இடமுண்டு.

கூடியவரை தினம் ஒரு பதிவாவது வெளியிட முயற்சிக்கிறேன்.

கூட்டுப் பதிவாகவும் அமைத்துக் கொள்ளலாம்.தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் எனக்கொரு மின்னஞ்சல் (maalan@gmail.com)அனுப்புங்கள்.

இன்றிலிருந்து இந்தப் பதிவு துவங்குகிறது.

இதை உங்கள் Blogrollல் சேர்த்துக் கொள்ளுங்கள், தொடர்ந்து வாசிக்க எளிதாக இருக்கும்