காலம் வீசி எறிந்த காகிதக் கணை போல வாசலில் வந்து கிடந்தது செய்தித்தாள்..எடுத்துப் பிரித்தேன். கர்நாடகத்தில் இந்திய ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்க காமன்வெல்த்தில் இளைஞர்கள் ஜெயித்துக் கொண்டிருந்தார்கள்.. ஆலம் விதை விழுந்த கோவில் சுவர் போல நம் அமைப்புக்கள் மெல்ல மெல்ல விரிசல் கண்டு கொண்டிருக்கும் அதே வேளையில், காட்டுப் புதர்களில் கண்விழிக்கும் மலர்கள் போல யாருடைய உதவியும் இன்றி நாட்டில் திறமைகள் மலர்ந்து கொண்டிருக்கின்றன.
மழைக்காலத்தில் மாநகரச் சாலைகளில் நடப்பவனைப் போல, விளம்பரங்களுக்கு நடுவே விழுந்து கிடந்த செய்தித் தீவுகளில் தத்தித் தாவி மேய்ந்து கொண்டிருந்தேன்.கண்கள் ஒரு செய்தியில் வந்து நின்றன
பூமிக்குக் கீழே 2000 அடி ஆழத்தில் 69 நாள்களாகச் சிக்கிக் கொண்ட முப்பத்தி மூன்று சுரங்கத் தொழிலாளர்களும் முழுசாக மீட்கப்படட்ட செய்தி சிந்தையைக் கிளறியது. ‘மானுடம் வென்றதம்மா’ என மனம் கம்பனைப் போல மகிழ்ந்து திமிர்ந்தது.
அறுபத்தி ஒன்பது நாள்கள்! அவர்களது உள்ளத்தில் உலவிய உணர்வுகள் என்னவாக இருந்திருக்கும்? என் கற்பனைகள் விரியத் துவங்கின.
அச்சம். அதுதான் முதலில் தோன்ற்யிருக்கும்.ஏனெனில் அவர்கள் இருப்பது இரண்டாயிரம் அடிக்குக் கீழ். கேணிக்குள் வைத்து மூடியதைப் போல மண் சரிந்து வழி மூடிக் கிடக்கிறது.. சுரங்கத்தில் மாட்டிக் கொண்டவர்கள் மீண்டு வந்த சம்பவங்கள் வரலாற்றில் அதிகம் இல்லை. அச்சம் அவர்களை நிச்சயம் தின்றிருக்கும்.
அந்த அச்சத்தை அவர்கள் ஒற்றுமை என்ற உளியால் உடைத்தெறிந்தார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உணமை அவர்களுக்கு உறைத்த நேரத்தில் ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்க முன் வந்தார்கள். உணவைப் பகிர்ந்து கொண்டார்கள். உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு தனிமனிதனாக உள்ளே போனார்கள். நெருக்கடி நேரத்தில் ஒரு குடும்பத்தைப் போல ஒன்றுபட்டார்கள். வெளியேற வாய்ப்பு வந்ததும், நீ போ முதலில் என ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த நேசம் நமக்கு இதைச் சொல்கிறது. அவர்களுக்குள் இளையவராக இருந்தவரை முதலில் அனுப்பியதும், தலைவராக இருந்தவர் எல்லோரையும் அனுப்பிவிட்டுக் கடைசியாக வெளியேறிய்தும் தலைமைப் பண்பை மட்டுமல்ல மனிதப் பண்புக்கும் உதாரணமாக ஒளிர்கின்றன.
வருவார்களா, வந்தாலும் உடலாக வருவார்களா, உயிரோடு வருவார்களா என வெளியே கவலையோடு காத்திருந்தவர்களிடையே கனத்த நம்பிக்கைகளும் உலவின. அவர்கள் அந்தப் பாலைவனத்தில் தங்களது தற்காலிக முகாமிற்கு வைத்த பெயர் “நம்பிக்கை முகாம்” (Camp Hope)
இந்த வெற்றியின் ஆணிவேர் அந்த நாட்டு அரசாங்கம். சுரங்கம் அரசினுடையது. உலகில் தாமிரம் அதிகம் உள்ள நாடு சிலி. சிறிய தேசம். பொருளாதார ரீதியாகத் தலை நிமிர்ந்திருக்கும் லத்தீன் அமெரிக்க தேசம் அது ஒன்றுதான். சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை விரைந்து மீட்டெடுக்க என்ன வழி என அது யோசித்தது, மூன்று நிறுவனங்கள் துளைபோடும் பணியில் இறக்கி விடப்பட்டன. மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு தோண்ட்ட்டும் என அது முடிவு செய்தது.
கிறிஸ்யியன் சயின்ஸ் மானிட்டர் என்ற இதழ், இந்த வெற்றிக்கு ஐந்து காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது. 1.காத்திருந்த குடும்பங்களின் நம்பிக்கை 2.சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்கள் காட்டிய பொறுமை 3.மீட்பிற்குப் பயன்பட்ட உயர்தொழில்நுட்பம் 4.பொறுப்பான அரசாங்கம் 5.உயிர்கள் முக்கியம் பணமல்ல என்ற மனோபாவம்
யோசித்துப் பார்த்தால் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மட்டுமல்ல எந்த நாட்டையும் மீட்டெடுக்க இந்த ஐந்தும் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. காந்தஹாருக்கு விமானம் கடத்தப்பட்டபோது நம்மிடம் இந்த ஐந்தும் இருந்திருந்தால் பின்னாளில் மும்பையில் குண்டுகள் வெடித்திருந்திருக்காது.
உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொருநாளும் நமக்கான பாடங்கள் விரிந்து கொண்டிருக்கின்றன. கற்பது எப்போது?
(புதிய தலைமுறை இதழுக்காக)
2 days ago