இரவு என் ஜன்னலுக்கு வெளியே இரு கரு மேகங்கள், மோதிக்கொள்ளும் முனைப்போடு நிற்கும் யானைகளைப் போலத் திரண்டிருந்தன. அவ்வப்போது எழுந்து அடங்கிய தூரத்து இடி முழக்கம் அச்ச அலைகளை அனுப்பிக் கொண்டிருந்தது. என்னாகுமோ என்ற கவலை உள்ளம் முழுதும் விரவிக் கிடக்க உறங்கப் போனேன். விடிந்தது. வான் மேகங்கள் வந்த சுவடு இல்லாமல் காணாமல் போயிருந்தன. பூமியெங்கும் வெளிச்சம் பரவியிருந்தது - என் உள்ளத்தைப் போலே
ராமர்-பாபர் வழக்கில் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை விட தீர்ப்புக்குப் பின் தேசம் எப்படியிருக்கும் என்பதே என் கவலையாக இருந்தது. மத உணர்வுகள் மனித உணர்வுகளைத் தின்றபோது சிந்திய இரத்தத்தின் கறைகள் இந்திய வரலாற்றின் வழி நெடுகச் சிதறிக் கிடக்கின்றன. காஷ்மீர் கனன்று கொண்டிருக்கிறது, சின்னப் பூசலையும் பெரும் தீயாக ஊதிப் பெருக்க அன்னிய சக்திகள் ஆர்வத்தோடு காத்துக் கிடக்கின்றன, வாக்கு வங்கிகளைக் காத்துக் கொள்ள அரசியல் வல்லூறுகள் வாய்ப்புக்களைத் தேடி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன, இன்னொரு மதக்கலவரத்தை இந்தியா தாங்குமா? சரித்திரகால் மனிதர்களுக்காக சம்கால் மனிதர்களை வெட்டிச் சாய்க்கிற வெறி வீதிகளை நிறைக்குமோ? வறுமைக்கு நடுவேயும் திறமையால் உய்ர்ந்த் வாலிபனைப் போல இந்த தேசம் கண்டுவந்த் வளர்ச்சி வன்முறைக்கு பலியாகுமோ? கவலைகள் என் மன வானில் கருமேகங்களைப் போல படர்ந்தன்.
அடுத்த நாளே அந்தக் கவலைகள் அர்த்தமற்றுப் போயின. “இரு தரப்பு வக்கீல்களும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தனர் வெற்றி யாருக்கு என்பது விளங்கவில்லை” என்று பத்திரிகைகள் எழுதின. வெற்றி நிச்சயமாக இந்தியாவிற்குத்தான். எந்தவித உரசலுமின்றித் தேசம் இயங்கிக் கொண்டிருந்தது என்பதே அதற்கான சாட்சி. மஸ்ஜித்தா? கோவிலா என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை எங்கள் இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதுதான். மதங்களின் பெயரால் அரசியல் நடத்தவும் அதிகாரம் பெறவும் முயன்ற சில அடிப்படைவாத சக்திகளோ இந்தப் பிரசினையைப் பெரிதுபண்ணி வன்மங்களை வளர்த்தெடுத்தன என்பதை மக்கள் கடைப்பிடித்த அமைதி உரத்த குரலில் சொன்னது. தீர்ப்பு பதற்றத்தை தணித்தது. ஆனால் கேள்விகளை எழுப்பியிருக்கிறது
ஆலமரத்தடியில் அமர்ந்து தீர்ப்புச் சொல்லும் கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பு போல் அமைந்துவிட்டது என்று விமர்சன்ங்கள் எழுந்திருக்கின்றன. ச்ட்டத்தைப் பார்க்கவில்லையென்றும், சரித்திரம் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் முணுமுணுப்புக்கள் முளைத்திருக்கின்றன.
இது ராமர் பிறந்த இட்ம்தான் எனக் குறிப்பிடுவதன் மூலம் இந்துக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது. எந்த வழிபாட்டுத் தலத்தையும் இடித்து மஸ்ஜித் கட்டப்படவில்லை எனச் சொல்லியிருப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் கருத்தையும் அது ஏற்றிருக்கிறது. சட்டவிதிகளும் சரித்திரமும் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கைகள் கெளரவப்படுத்தப்பட்டிருகின்றன..பட்டை கட்டிய குதிரையைப் போல சட்டததை மாத்திரம் பார்த்து உண்ர்வு ரீதியான இந்தப் பிரசினைக்கு ஒரு தீர்வு சொல்ல முற்பட்டால் அது அமைதிக்கு எதிரான தீர்ப்பாக நல்லிணக்கத்தைக் கெடுக்கிற தீர்ப்பாக ஆகியிருந்திருக்கக் கூடும். நாட்டின் அமைதியைவிடச் ச்ட்டங்களோ சரித்திரமோ முக்கியமானவை அல்ல. இன்றைய இந்தியாவிற்குத் தேவை இதயம். வெறும் மூளைகள் அல்ல
சகோதரர்களுக்குள் சண்டை வேண்டாம் இருப்பதைப் பங்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருப்பதன் அடிநாதம் சர்ச்சைகள் முடங்கட்டும், ச்மரசம் நிலவட்டும் என்பதுதான்.
அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய சமரசத்தை, மதவாதிக்ளால் ஏற்படுத்த இயலாத சமரசத்தை நீதிமன்றம் ஏற்படுத்த முனைந்திருக்கிறது. அதற்காக நாம் அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.
அயோத்தி மட்டுமே இந்தியா அல்ல. அது அதைவிடப் பெரியது. கடந்த கால கசப்புகளை மறந்து நிகழ்கால நிஜங்களை ஏற்று எதிர்காலத்தை நோக்கி இந்தியாவை இட்டுச் செலல் வேண்டிய் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை நினைவூட்டமட்டுமல்ல, நிறைவேற்றியும் இருக்கிறது நீதி மன்றம். அமைதிக்குப் பங்களிக்க்ச் சொல்லி அழைக்கிறது காலம். அதற்குச் செவி கொடுப்போம்.
2 days ago
No comments:
Post a Comment