தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்கும் தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மன்றமான உத்தமம் (International Forum for Information Technology in Tamil- INFITT) அமைப்பும், ஜெர்மனியில் அமைந்துள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Insitute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளையும், சவால்களையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும் அவ்வப்போது சர்வதேச அளவில் தமிழ் இணைய மாநாடுகளுக்கு உத்தமம் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து சர்வதேச அளவில் மாநாடுகளை உத்தமம் அமைப்பு மட்டுமே நடத்தி வந்துள்ளது.
இதுவரை சென்னை (1999, 2003 ) சிங்கப்பூர் (2000, 2004) மலேசியா (2001) அமெரிக்கா (2002) ஆகிய நாடுகளில் தமிழ் இணைய மாநாடுகள் நடந்துள்ளன.
இந்த ஆண்டு முதல் முறையாக ஐரோப்பாவில் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. ஜெர்மனியில் உள்ள கோலென் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன்றன. "கணினி வயிக் காண்போம் தமிழ்” என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருக்கும் உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பங்கேற்றவுள்ளார்கள். ஆழ்ந்த விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 100 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு குறித்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் முனைவர் கு.கல்யாணசுந்தரம், "தமிழ் இணைய மாநாடு இதுவரை தமிழர் அதிக அளவில் வாழும இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா இவற்றில் நடைபெற்றன. இந்த ஆண்டு நான்கு லட்சத்திற்குமேல் தமிழர்கள் வசிக்கும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனியில் நடக்கவுள்ளது. இங்கு உள்ள இளம் தமிழர்கள் கணினியை பெருமளவில் ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு இணைய மாநாட்டின் நோக்கின்படி (கணினி வழி காண்போம் தமிழ்) இவர்கள் அனைவரும் தமிழில் கணினியை பயன்படுத்தவும் இணையம் வழி கல்வி கற்க வகை செய்வதே." என்று தெரிவித்தார்.
மாநாட்டில் அளிப்பதற்குரிய கட்டுரைகளை இந்த ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் கட்டுரைகளின் சுருக்கத்தை ti2009@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வாசு ரங்கநாதன் தலைமையில் அமைந்துள்ள வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கீழ்க்கண்ட பொருள்களில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன :
1. Open source software and Localization
2. Tamil enabling in mobile phones
3. Machine Translation, OCR & Voice recognition
4. Tools for Tamil Computing
5. Tamil Internet & Social Networking
6. E-Learning
7. Databases for Digital libraries
8. Digital archiving of Tamil heritage materials
9. Standards for Tamil Computing
மாநாட்டுக்கான இணையதள முகவரி :
http://www.infitt.org/ti2009/
2 days ago